இக்கட்டுரையின் தலைப்பு சிலருக்கு வியப்பை அளிக்கலாம். சிலருக்கு எரிச்சலூட்டலாம். அய்ரோப்பாவிலிருந்து இங்குப் பரவிய ஒரு சமயம். பதினாறாம் நூற்றாண்டிலேயே நூல் அச்சாக்கத்தைத் தமிழ் மொழியில் தொடங்கி வைத்த சமயம். எந்த அளவு ஓலைச் சுவடிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் என்பது வியற்பிற்கான காரணமாகலாம். ஓலைச்சுவடிகளைக் கூட சமய அடிப்படையில், கிறித்தவம், இஸ்லாம் எனப் பாகுபடுத்துவது தேவைதானா? என்பது எரிச்சலுக்கான காரணமாக அமையலாம்.
ஓலைச்சுவடிகளின் உள்ளடக்கத்தின் அடிப்படையிலும், இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு அவை எவ்விதம் உதவும் என்று கண்டறிவதற்குத் துணைபுரியும் என்பதன் அடிப்படையிலும்தான் இவ்வாறு சமய அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டுள்ளது. மற்றப்படி சமயம் சார்ந்த சிந்தனையின் அடிப்படையில் கட்டுரையின் தலைப்பு அமையவில்லை. இத்தலைப்பிற்குள் நுழையும் முன்னர் தமிழ்நாட்டில் கிறித்தவத்தின் பரவல் குறித்த சில அடிப்படைச் செய்திகளைச் சுருக்கமாக அறிந்துகொள்வது அவசியமாகிறது.
தமிழ்நாட்டில் கிறித்தவம்
16-ஆம் நூற்றாண்டில் 1533 அல்லது 1536 வாக்கில் கத்தோலிக்கக் கிறித்தவம் போர்ச்சுகீசியர்களின் துணையுடன் முத்துக்குளித்துறை என்றழைக்கப்பட்ட தென்தமிழ் நாட்டின் கடற்கரைப் பகுதியில் பரவியது. 17-ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் தமிழ்நாட்டின் கடற்கரை நகரங்களாகிய பழவேற்காடு, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் சீர்திருத்தக் கிறித்துவம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆயினும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் இதன் தாக்கம் இருக்கவில்லை. 19-ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் சீர்திருத்தக் கிறித்துவம் தமிழ்நாடெங்கிலும் பரவலாக அறிமுகமாகத் தொடங்கியது. அதிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் பரவல் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இருந்தது.
1578 ஆம் ஆண்டில் 16 பக்கங்களைக் கொண்ட ‘தம்பிரான் வணக்கம்’ என்ற சிறு நூலும் 1579 ஆம் ஆண்டில் ‘கிரிசிதித்தியானி வணக்கம்’ என்ற 119 பக்கங்களைக் கொண்ட நூலும் முறையே கொல்லத்திலும், கொச்சியிலும் அச்சிடப்பட்டன. 1586ஆம் ஆண்டில் ‘அடியார் வரலாறு’ என்ற 600 பக்க அளவிலான நூல் புன்னைக்காயலில் அச்சிடப்பட்டது. தமிழ்நாட்டு எல்லைக்குள் அச்சாக்கப் பணி முதல் முறையாக புன்னைக் காயல் என்ற கடற்கரைச் சிற்றூரில்தான் தொடங்கியது. இத்தொடக்ககால முயற்சிகள் கத்தோலிக்கத் திருச் சபையால் தொடங்கப்பட்டன.
கத்தோலிக்கர்களையடுத்து வந்த சீர்திருத்தக் கிறித்தவ சபை தன் அச்சாக்க முயற்சியை 1715ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் தொடங்கியது. ‘அஞ்சுவேதப் பொத்தகம்’ என்ற பெயரில் விவிலியத்தின் சில பகுதிகள் அச்சிடப்பட்டன. சமய எல்லையைத் தாண்டி தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாட நூல்களும் இங்கு அச்சாயின.
அச்சாக்க முயற்சிக்கு முந்தைய நிலை
இவ்வாறு அச்சாக்கம் என்ற தொழில்நுட்பத்தைத் தமிழ்மொழியில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய கிறித்தவம், அதற்கு முன்னர் தன் சமயப் பரப்பல் முயற்சியில் ஓலைச்சுவடிகளையே பயன்படுத்தி வந்தது. இவ்வாறு அது பயன்படுத்திய ஓலைச்சுவடிகளை அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பின்வருமாறு பகுக்கலாம்:
1. சிற்றிலக்கியங்கள்
2. கதைப்பாடல்கள்
3. நாடகம்
4. விவிலிய மொழிபெயர்ப்பு
5. மறையுரை
6. மறைப்பணியாளர்கள் (மிஷனரிகள்) மற்றும் மிஷன்
பணியாளர்களின் அலுவல் தொடர்பான குறிப்புகள்.
7. மறைப்பணியாளர்கள் (மிஷனரிகள்) மற்றும் மிஷன்
பணியாளர்களின் தனிப்பட்ட குறிப்புகள்.
8. வழிபாட்டுப் பாடல்கள்.
இவை அய்ரோப்பிய மறைப் பணியாளர்களாலும் கிறித்தவத்தைத் தழுவிய தமிழ்க் கிறித்தவர்களாலும் அவ்வப்போது எழுதப்பட்டன. அச்சாக்கம் அறிமுகமான பின்னர் இவற்றுள் சில அச்சு வடிவம் பெறாது மறைந்து போயின. சில இன்றளவும் அய்ரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் இடம் பெற்றுள்ளன. கிறித்தவ தேவாலயங்களிலும், தனிப் பட்டோரிடமும் சில சுவடிகள் இன்றுவரை பாதுகாப் பாயுள்ளன. சிலர் தம்வசம் இருந்த ஓலைச் சுவடிகளைக் காகிதப் பனுவல்களாக மாற்றியுள்ளனர். இப்பனுவல்களின் இறுதியில் ஓலைச் சுவடியிலிருந்து எடுத்தெழுதியது என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சுவடிகளைப் பயன்பாட்டின் அடிப்படையில் பின்வருமாறு பகுக்கலாம்.
1. சமய ஆய்வுக்கு மட்டும் துணைபுரிபவை.
2. தமிழ்மொழியின் இலக்கியம் - இலக்கணம், உரைநடை,
அரங்கம் நாட்டார் வழக்காறு ஆகியன குறித்து
அறியவும், ஆராயவும் துணை நிற்பவை.
3. தமிழ்நாட்டின் சமூகவியல், வரலாறு ஆகியனவற்றை
எழுதத் துணை நிற்பவை.
இப்பயன்பாடுகளுக்குரிய சுவடிகள் குறித்து இனிக் காண்போம்.
சிற்றிலக்கியங்கள்
கிறித்தவச் சிற்றிலக்கியங்களைப் பொறுத்தளவில் மூவகையான உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவது யேசுவின் பிறப்பு, போதனைகள், மரணம், உயிர்த்தெழில் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு உருவானவை. இரண்டாவது கிறித்தவனான ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு உருப்பெற்றவை. கிறித்தவச் சமயம் சார்ந்த புனிதர்கள் வரலாற்றைக் கூறுவன.
இவற்றில் அவர்களின் கிறித்தவப்பற்று, அதன் அடிப்படையில் எதிர்கொண்ட இடையூறுகள், நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியன இடம்பெறும். இம்மூன்றாவது வகையிலான சிற்றிலக்கியங்கள் மிகப் பெரும்பாலும் கத்தோலிக்கம் சார்ந்தேயுள்ளன. கிறித்தவத்திற்காகத் தம் உயிரை நீத்தோர் வேதசாட்சிகள் (matyr) எனப்படுவர். இவர்களை மையமாகக் கொண்டும் சிற்றிலக்கியங்கள் உருவாகியுள்ளன. இவற்றையும் மூன்றாவது பிரிவில் அடக்கலாம்.
கதைப்பாடல்கள்
நிகழ்த்துக்கலைகளாக நிகழ்த்தப்படும் வில்லுப் பாட்டு, கணியான் ஆட்டம், உடுக்கைப் பாட்டு ஆகியனவற்றில் பயன்படுத்துவதற்காகக் கதைப்பாடல்கள் நாட்டார் கவிஞர்களால் உருவாக்கப்பட்டு வந்தன. இச்சூழலில் கிறித்தவம் பரவியபோது, கிறித்தவர்களும் இதுபோன்ற கதைப்பாடல்களை உருவாக்கியுள்ளனர். விவிலியச் செய்திகளையும், புனிதர், வேதசாட்சி ஆகி யோரை மையமாகக் கொண்டும் இக்கதைப் பாடல்கள் உருவாகியுள்ளன.
நாடகம்
தமிழ்நாடு தனக்கென ஓர் அரங்கக் கலையைக் கொண்டிருந்தது. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் அரங்கேற்றுக் காதைக்கு எழுதிய உரைச் செய்திகள் அரங்கம் தொடர்பான, பல நுட்பமான செய்திகளைக் கூறுகின்றன. தமிழ் அரங்கக் கலையானது பார்சி நாடகக் குழுவின் தாக்கத்தால் முற்றிலும் அழிந்துபோன நிலையில் தெருக்கூத்து மரபு தமிழ் அரங்கக் கூறுகளை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்டுள்ளது. தெருக்கூத்து மரபு மட்டு மின்றி கத்தோலிக்க அரங்கமும் தமிழ் அரங்கக் கூறுகளைப் பாதுகாத்து வந்துள்ளது. கூத்து அடவுகள் கத்தோலிக்க அரங்கக்கலையில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இவற்றில் பயிற்சி பெற்ற அண்ணாவிகள் மறைந்துபோனமையாலும் தொடக்கத்தில் தமிழ்க் கத்தோலிக்க அரங்கத்தை முதன் முதலாக உருவாக்கிய சேசு சபையினர் பின்னர் மட்டுமீறிய கட்டுப்பாடுகளை விதித்தும், சமயச் சடங்குகளுடன் ஒன்றியிருந்த அரங்கத்தைச் சடங்கிலிருந்து துண்டித்தும் கத்தோலிக்க அரங்கின் மறைவிற்குக் காரணமாயினர். ஆயினும் நாடகப் பனுவல்கள் ஓலைச் சுவடி வடிவில் இன்றும் கிட்டுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய அரங்கத்தை மீட்டுருவாக்கம் செய்ய இவை துணைபுரியும் தன்மையன.
மறையுரை
கிறித்தவத் தேவாலய வழிபாட்டில் ஒரு முக்கிய கூறாக அமைவது குருக்களும், போதகர்களும் நிகழ்த்தும் மறையுரையாகும். கிறித்தவம் தமிழ்நாட்டில் பரவிய தொடக்ககாலத்தில் அய்ரோப்பிய குருக்களே மறைப் பணியாற்றி வந்தனர். சரளமாகத் தமிழில் மறையுரையாற்ற முடியாத நிலையில் அதை உரைநடை வடிவில் ஓலையில் எழுதிப் படித்துள்ளனர். சின்னச் சவேரியார் என்றழைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு சேசு சபைத்துறவி, ஞாயிறு தொடங்கி சனி முடிய ஏழு நாட்களுக்கும் ‘ஞாயிற்றுக்கிழமைப் புதுமை’, ‘திங்கள் கிழமைப் புதுமை’ (புதுமை: அற்புதம்) என்ற தலைப்பிட்டு தனித்தனி ஓலைச்சுவடிகளை எழுதிவைத்துள்ளார். கத்தோலிக்கர்களின் அன்றாட சமய வாழ்வில் இச்சுவடிகள் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பின்னர் இச்சுவடிகள் அச்சு வடிவம் பெற்றன.
மறைத்தள ஆவணங்கள்
ஒரு நிறுவனச் சமயம் என்ற முறையில் கிறித்தவச் சமயம், தனக்கெனத் தனியான நிர்வாக அமைப்பைக் கொண்டிருந்தது. இந்நிறுவனப் பணியாளர்களும் மறைப் பணியாளர்களும் அன்றாட நிர்வாகம் தொடர்பான அலுவலகப் பதிவுகளையும், கடிதங்களையும் எழுத, தொடக்கத்தில் ஓலைச் சுவடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இவையெல்லாம் செய்யுள் வடிவிலின்றி உரைநடையில் எழுதப்பட்டன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
இத்தகைய ஆவணங்கள் அவை உருவான காலத்திய சமூக வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளன. புதிய கிறித்தவர்களுக்கும் மதத் தலைமைக்கும் இடையிலான உறவுநிலை, வழக்குகள் - தீர்ப்புகள் மறைப்பணியாளர்களின் பணிமுறை, பணியில் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள், உடன்படிக்கைகள், ஒரு குறிப்பிட்ட தேவாலயம் உருவான வரலாறு ஆகியனவற்றை மறைத்தள ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில், சமயம் சார்ந்து நிற்கும் இத்தகைய ஆவணங்கள் எவ்வகையில் தமிழ்ச் சமூக வரலாற்றிற்கு உதவும் என்ற வினா எழுவது இயற்கையே. சமயம் என்பது சமூக நிறுவனங்களுள் ஒன்று என்பதன் அடிப்படையில் சமய ஆவணங்களுக்குள் சமூகச் செய்திகள் புதைந்துள்ளன. இதற்குச் சான்றாக சில செய்திகளைக் குறிப்பிடலாம்.
கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் தம் பிறவி அடையாளங்களில் ஒன்றான மதத்தைத் துறந்தார்களே தவிர, சாதியைத் துறக்கவில்லை. இதனால் சாதியை மையமாகக் கொண்ட சிக்கல்கள் கிறித்தவத்தில் உருவாயின. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் நிகழ்ந்தன. வழக்குகளில் தம் தரப்புச் சான்றுகளாக சில போழ்து ஓலைச்சுவடிகளையும் தாக்கல் செய்துள்ளனர். இச்சுவடிகள் சாதிய மேலாண்மை தொடர்பான செய்தி களைப் பதிவு செய்துள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் சாதிகளுக்கிடையே நிலவிய உறவு நிலையை இவை வாயிலாக அறிய முடிகிறது.
தேவாலயத்தின் செலவுகளுக்காக வாங்கப்பட்ட வரி விவரங்கள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளும் இருந்துள்ளன. பணமாக மட்டுமின்றித் தானியமாகவும், காய்கனிகளாகவும் கூட வரி செலுத்தியுள்ளனர். இச்செய்திகளைக் கூறும் கோவில் கணக்கு ஓலைகள், அவை செலுத்தப்பட்ட காலத்தை, பொருளாதார நிலையை அறியத் துணை புரியும். சீர்திருத்தக் கிறித்தவத்தில் போதகர்களுக்கு உதவ ‘உபதேசியார்’ (catechist) என்ற பதவி உருவாக்கப்பட்டிருந்தது. குருக்களின் பணிப்பகுதி பரந்துபட்ட தாயிருந்ததுடன், போக்குவரத்து வசதிகள் சரியாக இல்லாமலும் இருந்தன. இத்தகைய சூழலில் குருக்கள் இல்லாத நேரங்களில் உபதேசியார்களின் பணியைக் குருக்களும் மக்களும் நம்பியிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு நடத்த குரு வரும்போது அவருக்கு வழிபாட்டில் உதவி செய்தல், மற்ற நாட்களில் தேவாலயங்களைத் திறந்து செபம் படித்தல், செபம் கற்றுக் கொடுத்தல், குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கல், திருமணம், இறப்பு போன்ற வாழ்க்கை வட்டச் சடங்குகள் கிறித்தவ நெறியில் நிகழ உதவுதல், கிறித்தவர் களின் வீடுகளுக்குச் சென்று வரல், குறிப்பாக நோய்வாய்ப்பட்டவர்கள் மரணப் படுக்கையில் இருப்பவர்கள், ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், சொற்பொழி வாற்றல், துண்டுப் பிரசுரங்களை விற்பனை செய்தல் என்பன உபதேசியார்களின் முக்கிய பணிகளாக இருந்தன.
இவை தவிர தங்களின் முந்தைய சமயப் பழக்க வழக்கங்களைப் புதிய கிறித்தவர்கள் பின்பற்றாதவாறு கண்காணித்தல், புதிதாகச் சிலரை மதம் மாற்றல், நன்கொடை வாங்குதல், தேவாலங்களுக்குத் தரவேண்டிய வரிகளைக் கிறித்தவர்களிடமிருந்து வாங்குதல், வழக்கு களைத் தீர்த்து வைத்தல், தேவாலயத்திற்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாத்தல் என்பனவும் இவர்களது பணியாகும். உபதேசியார்களை மேற்பார்வையிட ‘விசாரணை உபதேசியார்’ என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். உபதேசியார்கள் தமது அன்றாடப் பணிகளை எழுதி வைத்து அவற்றை விசாரணை உபதேசியாரிடம் தர வேண்டும்.
பொதுமக்களிடம் தொடர்புகொண்டிருந்த உபதேசியார்கள் தம் அன்றாடப் பணிகளை ஓலைச் சுவடியில் எழுதி வைத்துள்ளனர். உபதேசியார் குறிப்பு என்றழைக்கப்படும் இக்குறிப்புகள் அவை எழுதப்பட்ட காலத்தின் சமூக நிலையை விரிவாகப் பதிவு செய்துள்ளன. ஓலைச்சுவடிகளிலும், காகிதங்களிலும், உபதேசியார் சவரிராயபிள்ளை (1801-1874) என்பவர் எழுதி வந்த நாட்குறிப்புகளைத் தொகுத்து அவரது மகன் யோவான் தேவசகாயம் சவரிராயன் (1843 - 1904) என்பவர் ‘சவரிராய பிள்ளையவர்கள் சர்னலும் காகிதங்களும்’ என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டு கால திருநெல்வேலி மாவட்டத்தில் 1836 தொடங்கி 1874 வரையிலான சமூக நிலையை அறிய உதவும் இத்தொகுதிகள் குடும்ப உறுப்பினர்கள் தேவைக்காக 25 படிகளே அச்சிடப்பட்டுள்ளன.
இந்நூல் பல அரிய செய்திகளின் களஞ்சியமாக அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி யிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எழுதப்பட்ட உபதேசியார் நாட்குறிப்புகள் காகித வடிவிலும், ஓலைச் சுவடி வடிவிலும் ஜெர்மனியில் உள்ள ஹாலே என்ற இடத்திலுள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளன. இச்சுவடிகள் வாயிலாக சில வரலாற்றுச் செய்திகள் கிட்டும் வாய்ப்புள்ளது.
பயன்பாடு
கிறித்தவ ஓலைச்சுவடிகளில் ஒரு பகுதி உரை நடையில் அமைந்திருத்தல், அதன் தனிச்சிறப்பாக அமைகிறது. நமக்குக் கிடைக்கும் சோதிடம், மருத்துவம் தொடர்பான ஓலைச்சுவடிகள் கூட செய்யுள் வடிவில் அமைந்தவைதான். இலக்கியம், கதைப்பாடல் தொடர் பான சுவடிகள் செய்யுள் நடையில்தான் அமைந்திருக்கும் என்பதைக் கூற வேண்டிய அவசியமில்லை. தத்துவம், இலக்கிய இலக்கண உரைகள் ஆகியன மட்டுமே உரைநடையில் அமைந்திருந்தன. எனவே உரைநடை என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே வழங்கிவந்தது. கருத்துக்கள், அறவுரை ஆகியனவற்றைக் கூற, ஒருவரை விளித்துக் கூறும் வகையிலான அகவல் பா வடிவைப் பயன்படுத்தியுள்ளனர்.
அகவுதல் என்ற சொல்லுக்கு அழைத்தல் என்ற பொருளும் உண்டு. ‘அகவிக் கூறுதலின் அகவல் என்றாயிற்று’ என்பர். மனனம் செய்யவும், கூறும் செய்தியைக் கேட்போர் எளிதில் புரிந்துகொள்ளவும் அகவல்பா வடிவம் துணைபுரியும் தன்மையது. இக் காரணம் பற்றியே ‘கபிலரகவல்’, ‘விநாயகர் அகவல்’ என்பன மக்களிடையே எளிதில் சென்றடைந்தன. உரைநடை வளர்ச்சியடையாக் குறையை அகவல் வடிவிலான நூல்கள் தீர்த்து வைத்தன. யாப்பு விதிகளுக்கு உட்பட்டு எழுதப்பட்ட செய்யுள் வடிவிலான நூல்களைக் கற்றவர்கள் படித்து வந்தனர். உரைநடை என்ற வடிவம் தமிழில் வளர்ச்சியுறாமைக்கு இதுவே காரணமாகும்.
நவீனத்துவம் வளர்ச்சியுற்ற அய்ரோப்பிய சமூகத்தி லிருந்து வந்த கிறித்தவம், வரலாறு, பூகோளம், அறிவியல் போன்ற அறிவுத்துறைகளை, தான் நிறுவிய கல்விக் கூடங்கள் வாயிலாகக் கற்பிக்கத் தொடங்கிய போதும், புற உலகின் செயல்பாடுகளைப் பதிவு செய்யவேண்டிய போதும் உரைநடை அவர்களுக்குத் தேவைப்பட்டது. இத்தேவையை நடைமுறைப்படுத்த தொடக்கத்தில் ஓலைச் சுவடிகளை அவர்கள் பயன்படுத்தினர். இதுவரை நுழையாத புதிய தடங்களில் தமிழ் உரைநடை நுழைய இச்செயல் துணைபுரிந்துள்ளது. இதனால் உரைநடையின் பயன்பாடு மாற்றியமைக்கப் பட்டுள்ளது. சமூக நிகழ்வுகளையும், முரண்பாடுகளையும் ஆவணப்படுத்தத் தூண்டியுள்ளது. இதன் காரணமாக 18, 19 ஆம் நூற்றாண்டுக் காலத்திய தமிழ் உரைநடை வளர்ச்சியை ஆராயவும், சமூக நிகழ்வுகளைக் கண்டறியவும் கிறித்தவ ஓலைச்சுவடிகள் துணைபுரிகின்றன. இதுவே கிறித்தவ ஓலைச்சுவடிகளின் சிறப்பாக அமைகிறது.
செய்ய வேண்டுவன
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கிறித்தவ ஓலைச் சுவடிகள், தனி மனிதர்களிடமும், புராதனத் தேவாலயங் களிலும் கிறித்தவத் திருச்சபைகளின் ஆவணக் காப்பகங் களிலும் உள்ளன. செர்மனி, டென்மார்க், வாடிகன், பாரிஸ் ஆகிய நகரங்களில் உள்ள நூலகங்களிலும், ஆவணக் காப்பகங்களிலும் தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் உரைநடை வடிவிலான கிறித்தவம் தொடர்பான ஓலைச்சுவடிகளும் அடக்கம். அச்சுவடிகளில் பல அச்சு வடிவம் பெறத் தகுதி யானவை. தமிழ் வாசகர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இவை வாசிக்கக் கிட்டாதது குறைபாடாகும். இன்று ஓலைச்சுவடிகளைக் குறுந்தகடுகளில் பதிவு செய்ய முடியும். எனவே அயல்நாடுகளில் உள்ள ஓலைச் சுவடிகளைக் குறுந்தகடுகளில் பதிவு செய்து தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் படிக்கவும், பதிப்பிக்கவும் உதவ வேண்டியது அவசியம். அதிகப் பொருட் செலவில்லாத இப்பணியை அவர்கள் மேற்கொள்வது கடினமான ஒன்றல்ல.
(உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை) நடத்திய சுவடிப் பயிலரங்கில் ஆற்றிய உரையின் சுருக்கம்)
நன்றி - உங்கள் நூலகம் ஜூன் 2010
நன்றி - கீற்று
அழகான விளக்கம்
பதிலளிநீக்கு