05/05/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 38 : சட்டத்தமிழும் நீதித்துறையும்!

 மா.சண்முக சுப்பிரமணியம்

கட்டுரை ஆசிரியர் பற்றிய குறிப்பு
நெல்லை மாவட்டம் - அம்பாசமுத்திரத்தில் 28.6.1921-இல் பிறந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றவர். வழக்குரைஞராக, மாவட்டத் துணை நடுவராக, தமிழக அரசின் சட்டப் பேரவைத்துறைத் துணைச் செயலராக, தமிழக அரசின் ஆட்சிமொழிச் சட்டத்துறைக் குழுவின் செயலுறுப்பினராக, எழுத்தாளராகப் பல்துறையில் பணியாற்றியவர். இவர், சட்ட நூல்கள், சிறுவர்களுக்கான நூல்கள் எனப் பல நூல்களை எழுதியவர். இவருடைய மூன்று நூல்கள் இந்திய, தமிழக அரசின் பரிசைப் பெற்றிருக்கின்றன.

ஒரு நாட்டு நாகரிகத்தின் வளர்ச்சியைக் காட்டும் சிறந்த சின்னமாக விளங்குவது அதன் மொழியேயாகும். அந்நாட்டு மக்களின் சிந்தனைச் சிறப்பினை, உள்ளத்து உயர்வினை அவர்களது மொழியே எடுத்துக்காட்டுகிறது. சிந்தனை சிறகடித்துப் பறப்பதும், உள்ளத்தின் உயர்வு உருவெடுத்து ஒளிர்வதும் சொற்களின் துணை கொண்டுதான். அறிவு மணங்கமழும் சொல்லோவியங்கள் "இலக்கியங்கள்' எனப் போற்றப்படுகின்றன.

இவ்விலக்கியங்களே நம் நாட்டின் பண்டைச் சிறப்பினை எடுத்துக்காட்டி நிற்கின்றன. பண்டைச்சிறப்பினைப் பகர்வதோடு இலக்கியங்கள் நின்றுவிடவில்லை. நாகரிக வளர்ச்சியின் அளவினைக் காட்டி அந்த அளவிலிருந்து வளர்ச்சி குன்றிவிடாமல் அதைப் பாதுகாத்து நிற்பவையும் இலக்கியங்களே. குறள் கூறும் அறமும் சிலம்பு இசைக்கும் செப்பமும் நம் முன்னோர்களின் உள்ளத்து உயர்வினைக் காட்டுவதோடு, இன்றும் நம் அறமும் செப்பமும் எந்நிலையில் இருக்க வேண்டும் என்பதை நமக்கு அவை உணர்த்துகின்றன; அந்நிலையில் இருந்து வழுவிவிடாது நம்மைத் தாங்கி நிற்கின்றன. இவ்வாறு, சென்ற காலச் சிறப்பின் சின்னமாகவும் இன்றைய சிறப்பிற்கு அரணாகவும் அமைகின்றது இலக்கியம்.

எந்த மக்கள் இனமும் தன் மொழியை மறப்பதில்லை; மறந்தால் அந்த இனம் வாழவோ வளரவோ முடியாது. எனவேதான், "தாய் மொழி' என்று அதைப் போற்றுகிறோம். உடலை வளர்ப்பவள் தாய் என்றால், உள்ளத்தை வளர்ப்பது தாய்மொழி.

பிறந்த குழந்தை முதலிலே வாயால் மடுப்பது தாய்ப்பால் என்றால், செவியால் மடுப்பது "தாய்மொழி'. தாயின் மடியிலே தவழ்ந்து குழந்தையின் உடல் வளர்வதுபோல தாய்மொழியின் மடியிலே தவழ்ந்து அதன் உள்ளம் வளருகிறது. தாய்ப்பாலின் ஊட்டம் இல்லாத குழந்தை சவலையாகிறது, தாய்மொழியில் நாட்டம் இல்லாதவனும் சவலையாகிவிடுகிறான்.
கடந்த இருநூறு ஆண்டுகளாக நாம் அரசியலில் அடிமைப்பட்டிருந்தோம்; நமது தாய்மொழியும் அடிமைப்பட்டது. நம்மை ஆண்டு வந்த அந்நியரின் மொழி ஆளும் மொழியாகவும், ஆளப்பட்டு வந்த நமது மொழி அடிமை மொழியாகவும் ஆயின. இந்த இருநூறு ஆண்டுகளில் அறிவியல் துறைகள் பல வழிகளிலும் வளர்ந்தன. வளர்ச்சியுற்ற அந்த அறிவியல் பற்றிய நூல்கள் நம் தாய்மொழியில் எழுதப்படவில்லை. ஆளும் மொழியான ஆங்கிலத்திலேயே அவை எழுதப்பட்டன, அம்மொழியிலேயே அவை கற்பிக்கப்பட்டன. அறிவியல் நூல்கள் அனைத்திற்கும் பயிற்று மொழியாக ஆங்கிலமே இருந்து வந்தது.

நம் நாடு அரசியலில் விடுதலை பெற்ற பின்னர், கல்வித்துறை வல்லுநர்கள் தாய்மொழியிலே கல்வி புகட்டுவதன் இன்றியமையாத தேவையைக் கண்டனர். அந்நிய மொழியிலே கல்வியைப் புகட்டுவது வளரும் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்குப் பதிலாகப் புட்டிப்பாலைப் புகட்டுவதை ஒக்கும் என்பதை உணர்ந்தனர். மேலை நாட்டுக் கல்வி முறைகளில் எல்லாம் அந்தந்த நாட்டின் தாய்மொழியே பயிற்சி மொழியாக விளங்குகிறது. எனவே, நம் நாட்டிலும் தாய்மொழியிலேயே கல்வி பயில்விக்கும் முறை மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை முழுதுமாக நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

அந்நியர்கள் ஆண்டு வந்த நாட்களில் நாட்டின் ஆட்சித்துறை அலுவல்கள் ஆங்கிலத்திலேயே நடைபெற்று வந்தன. மக்களாட்சி முறையிலே மக்களின் மொழியே ஆட்சி மொழியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
1956-ஆம் ஆண்டில் இதற்கெனத் தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. தமிழ் மொழியே தமிழ் நாட்டில் ஆட்சி மொழியாகும் என்று அச்சட்டம் விளம்பியது. பல்வேறு ஆட்சித்துறைகளிலும் தமிழ் படிப்படியாகக் கையாளப்பட்டு வருகிறது.

நீதித்துறைக்கு அடிப்படையாக அமைபவை சட்டங்கள். அச்சட்டங்களைத் தமிழிலே ஆக்கினால்தான் நீதி மன்றங்கள் தமிழில் பணியாற்ற முடியும். ஒவ்வொரு சட்டத்தையும் தமிழில் எழுதுவதற்கு முன், எல்லாச் சட்டங்களுக்கும் பொதுவாக உள்ள சட்டச் சொற்களையும், சொற்றொடர்களையும் தமிழிலே ஆக்க வேண்டியது அவசியமாகும். எனவே, சட்டச் சொல்லகராதியைத் தமிழில் எழுதும் வேலை முதலாவதாக மேற்கொள்ளப்பட்டது. 1969-ஆம் ஆண்டில் "சட்டச் சொல் அகராதி' என்ற நூல் வெளியிடப் பெற்றது. ஆங்கிலச் சட்டச் சொற்கள், சொற்றொடர்கள், அவற்றின் வரைவுரைகள், இவற்றின் தமிழாக்கம் இவைகளைக் கொண்டது அந்நூல்:

இவ்வாறு, ஒவ்வொரு சட்டச் சொல்லும், அதன் விளக்கமும் ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

சட்டக் கருத்துகளைக் கூறும் இலத்தீன் மொழிச் சூத்திரங்களுக்கு ஏற்றபடி அமையும் தமிழ்ச் சூத்திரங்களும் இந்நூலில் உள்ளன. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றலும் அழகும் தமிழ்மொழியின் தனிச்சிறப்பானதால், இச் சூத்திரங்கள் இசைவுறப் பொலிவதை நாம் கண்டு களிக்கின்றோம்:

1.  Executio est finis fructus legis -
  சட்டத்தாலுறு பயனும் பலனும் கிட்டும் தீர்ப்பின் நிறைவுறு நலன்.

2.  Generalia specialibus non derogant.
தனிவிதிக் கிசைந்தே பொதுவிதி இயங்கும்.

3. Generalibus specialia derogant.
பொதுவிதி தன்னைத் தனிவிதி மிஞ்சும்.

4. Executio juris non habit injuriam.
பாங்குறு சட்ட நிறைவுறுத்தம் தீங்கென என்றும் ஆவதில்லை.

இந்திய மொழிகள் எதிலும் இது போன்ற "சட்டச்சொல் அகராதி' இன்னும் வெளிவரவில்லை. சட்டங்கள் பலவற்றையும் தமிழாக்கம் செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. எல்லாச் சட்டங்களுக்கும் அடிப்படையாக அமைவது "அரசமைப்புச் சட்டம்' ஆகும். அதன் மொழியாக்க வேலை இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. இதற்குப் பின் "குற்ற இயல் சட்டம்', "குற்ற இயல் நடைமுறைச் சட்டம்', "சொத்து மாற்றுச் சட்டம்' போன்ற முக்கிய சட்டங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும்.

சட்ட விதிகளையும், சட்டக் கருத்துகளையும் கூறும் வாசகங்கள் தெளிவாக ஐயத்திற்கிடமின்றி இருத்தல் இன்றியமையாததாகும். பல நுட்பமான கருத்துக்களைத் திட்பமாகக் கூறுவதே சட்டமொழியின் திறனாகும். எனவே, சட்டக் கருத்துக்களை ஒரு மொழியில் கூறத் தலைப்படும்பொழுது அந்த உரைநடை நுட்பமாகவும் திட்பமாகவும் தெளிவாகவும் இருத்தல் வேண்டும்.

EXHIBIT:
Any document which, in the course of a judicial proceeding, is produced and put in court to form part of the record and to give information to arrive at a decision.
சான்றாவணம்:
நீதிமன்றத்தில் தீர்ப்புக்குதவும் பொருட்டு முன்னிலைப்படுத்தப்படும் ஆவணம்.

RIGHT:
A legally protected interest.
உரிமை:
சட்டம் காக்கும் நலன்.

SURETY:
A Surety is a person who binds himself to satisfy the obligation of another person if the latter fails to do so.
பிணையாள்:
கடப்பாடு நிறைவேற்ற வேண்டிய ஒருவர் அதைச் செய்யத் தவறினால் தாமே அதை நிறைவேற்றுவதாகச் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்.

TESTIMONY:
The evidence of a witness given VIVA VOICE in a Court of Justice or other Tribunal.
சான்றுரை:
நீதிமன்றத்திலோ வேறு மன்றத்திலோ வாய்மொழியாக அளிக்கப்படும் சான்று.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக