நாட்டார் வழக்கியல் தமிழாய்வியலிற் பெறும் இடம் பற்றிய சில அவதானிப்புகள்
நன்றி - உங்கள் நூலகம் ஜூன் 2010
I
பல்துறைச் சங்கம ஆய்வுமுறைமையினை ஆதார சுருதியாகக் கொண்ட ஒரு தமிழியலாய்வாளன் என்னும் வகையில், நாட்டார் வழக்கியல் (Folk lore) என்னும் துறை நமது புலமைத் தேடுதல்களிற் பெறும் இடம் பற்றிய சில முக்கிய வினாக்களை இக்கட்டுரையிற் கிளப்பியுள்ளேன். 1980இல் யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையால் நடத்தப் பெற்ற கருத்தரங்கிலும் இவற்றினை எடுத்துக் கூறியுள்ளேனாயினும் (இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல் - 1980) 13 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இப்பொழுது (1993) அவற்றை, இக்கால இடைவெளியிற் பெற்ற புதிய அனுபவங்களுடனும் அனுபவவழியாக ஏற்பட்டுள்ள மேலதிக பரிச்சயத்துடனும் இக்கருத்துக் களை எடுத்துக் கூறுகின்றேன்.
ஆயினும், இந்தப் புலமைத் துணிபையும் கருத்து நிச்சயப்பாட்டினையும் வன்மையான வரன்முறையான ஆய்வுச் செப்பத்துடன், அதாவது வேண்டிய ஆவணத் தகவல்களையும் விவரமாக மேற்கோள்களையும் வரன் முறையாக எடுத்துத் தராது சிந்தனையின் ஓட்டத்தின் கட்டுரைக்கும் ஒரு வாதவிவரிப்பாகவே இதனை எழுதி யுள்ளேன். எனது பல்வேறு பணிகளின் நெருக்குவாரமும் காலச்சூழலும் இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், மேற்கோள்களின் குறைவும் அடிக்குறிப்புக் களின் இன்மையும், கட்டுரையின் அடிப்படை வாதத்தின் வலுவைக் குறைத்து எண்ண இடமளிக்கக்கூடாது என்பதற்காகவே இச்சிறு ‘கிளவி’ அவசியமாகின்றது.
சமகாலத் தமிழ்நாட்டார் வழக்கியலாற்றில் முக்கிய இடம்பெறும் சிலர் - என்பெருமதிப்புக்குரியவர்கள் - பங்குகொள்ளும் இக்கருத்தரங்கில், இந்த விடயங்கள் எடுத்துப் பேசப்படாது போகக்கூடாது என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இக்கட்டுரையை எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த நண்பர்கள் க.சண்முகலிங்கம், எஸ்.சிவலிங்கராசா ஆகியோருக்கு என் நன்றியுரித்து. இக்கருத்தரங்குக்கு டாக்டர் சு.சக்திவேல் அவர்கள் சமர்ப்பித்துள்ள ‘தமிழில் நாட்டுப்புறஇயல் ஆய்வின் வளர்ச்சியும் வரலாறும்” என்னும் கட்டுரை இக்கட்டுரையை எழுதுவதற்குப் பெரிதும் பயன்பட்டது. அவருக்கு எனது நன்றியுரித்து.
தமிழியல் “நாட்டார் வழக்கியல்” என்னும் பயில் துறையின் முக்கியத்துவத்தினையும் பயில்வுவட்டத் தினையும் ஐயம் திரிபுஅற அறிந்துகொள்வதற்கு இத்துறைப் பெயரில் வரும் “நாட்டார்’ என்பது யாரைக் குறிக்கின்றது என்பது பற்றிய திட்டவட்டமான அறிவுத்தெளிவு இருத்தல் அவசியம். “நாட்டார்’ என்பது இங்கு ஃவோக் (folk) என்பதற்கான மாற்றீடு (transference) ஆகும். அதாவது இது வெறும் மொழிபெயர்ப்பு (translation) அன்று. “நாட்டார்” என்பது இங்கு ஒரு கலைச்சொல் (glossary term) ஆக, மற்றைய மொழிகளில் குறிப்பாக ஆங்கில எழுத்துப் பாரம்பரியத்தில் வரும் “ஃவோக்” என்பதற்கான தமிழ் வடிவமாகும். அதாவது மூலமொழியில், இந்த “ஃவோக்” எவ்வெவற்றையெல்லாம் குறிக்கின்றதோ, அவற்றை “நாட்டார்” என்ற சொல்லுக்கு மாற்றி விடுகின்றோம் (Catford).
ஐரோப்பியப் பாரம்பரியத்தில், ஜெர்மனியர் நிலையிலேயே இப்பயில்துறை பற்றிய சிரத்தை ஆரம்பித்ததென்பர். அம்மொழியில் ‘volk’ (ஃவோல்க்) என்பது சாதாரண மக்கள் யாவரையும் கருதும் அத்துடன் அது ஒரு சமூகக் குழும நிலைப்பாட்டையும் (community) உணர்த்திநிற்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்மயபாடு காரணமாக (industrialisation) சமூகக் குழும நிலையில் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியபொழுது அந்த நிலைக்கு முன்னர் நிலவிய குழும வாழ்க்கை பற்றிய சற்று மனோரதியப்படுத்தப்பட்ட நிலையில் தரவுகளை மீட்டுக்கொள்வது இயல்பாயிற்று. மறைந்து சென்றுகொண்டிருந்த சனரஞ்சகமான, பழைமை களைக் (Popular antiquities) குறித்து வைக்கத் தொடங்கினர். ஜெர்மனியில் இப்பயில்வுபெற்ற இடமளவு இங்கிலாந்தில் ஆரம்பத்திற் பெறவில்லை என்பர். இங்கிலாந்தில் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றத்திற்கு முன்னர் நிலவிய பழக்கவழக்கங்கள், ஆற்றுகை வடிவங்கள் ஆகியன பற்றி இத்துறை சிரத்தை காட்டிற்று. ஐரோப்பாவை பொதுப்படையாக எடுத்துக்கொண்டால், அங்கு நாட்டார் வழக்கு (Folklore) என்பது கைத்தொழில் பழக்கத்துக்கும், நவீனயுகத்துக்கும் முற்பட்டதான (pre-industrial, pre-modern) சமூக வாழ்க்கையில் நிலவிய சமூக சமூகக்குழும விடயங்கள் பற்றியதாகவே இருந்தது.
அமெரிக்காவின் (ஐக்கிய அமெரிக்கா) சனவேற்று முறைமை (peopling) காரணமாக, அங்கு ஐரோப்பிய அனுபவத்தில் ஏற்பட்ட கருத்து உண்டாவதற்கு இடம் இருக்கவில்லை. அங்கு வந்தேறிய குடிகளினதும், ஐரோப்பியக் குழுமக்கள் வருவதற்கு முன்னர் அப்பிரதேசங்களில் வாழ்ந்து வந்த அமெரிந்தியக் குழு மக்களினதும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் நாட்டார் வழக்கியலின் பயில்பொருளாகின.
ஐரோப்பிய நாடுகளிடையே இன்று நாட்டார் வழக்கியலுக்குத் தமது சமூக ஆய்வுகளில் மிக முக்கியமான ஓரிடத்தை வழங்கும் நோர்டிக் புலமைமரபில் (இதில் ஃபின்லாந்தின் இடம் முக்கியமானதாகும். இவர்கள் folklore ஆய்வினை folkloristics, traditional science எனவும் குறிப்பிடுவர்) நாட்டார் வழக்கு தங்கள் மக்களிடையே, குறிப்பாகத் தங்களிடையேயுள்ள பழங்குடிகளிடையே (லாப்கன் - டயயீயீள) கிறிஸ்தவத்தின் வருகைக்கு முன்னர் நிலவிய பண்பாட்டையும், அப்பண்பாட்டின் தொடர்ச்சி களையும் ஆய்வதிலே சிரத்தை காட்டப்படுகின்றது. இதனால் ஃபின்னிஷ் நாட்டாரியல் ஆராய்ச்சியாளரிடையே ‘கலோலா’ (Kalevala) என்ற எழுத்து நிலைமைக்கு முற்பட்ட நெடும் பாடல் முக்கிய இடம் பெறுவதைக் காணலாம். ஐரோப்பாவின் கிறிஸ்தவம் ஒரு பொதுமையான பண்பாட்டை நிறுவியதன் பின்னர் அங்குள்ள நாடுகளிலே, குறிப்பாக மிகப் பிற்பட்ட காலத்திலேயே அபிவிருத்தி யடைந்த பகுதிகளிலே தமது தனித்துவத்தைக் கண்டறிந்து கொள்வதற்கு இப்பயில்துறை பெரிதும் உதவுகின்றது எனலாம். ஐரோப்பாவில் மதங்கள் பற்றிய ஒப்பியலாய்வு (comparative Religion) எனப் பிரித்தானிய மரபிலும், ழளைவடிசல டிக சுநடபைiடிn எனப் பிரெஞ்சு, ஸ்காத்திநேவிய மரபுகளிலும் வளர்க்கின்றமைக்கும் இதற்கும் தொடர்புண்டு. மேலும் இன்னொரு முக்கிய அம்சம். இதற்குள் தொக்கிநிற்கின்றது.
சாதாரண மக்களது நிலைமையைக் குறிப்பதான இந்த ஃவோக் எண்ணக்கருவினுள் ஓர் ஒருமைநிலை காணப்படும். அதாவது குறிப்பிட்ட அந்த மக்கள் யாவரும் தமது சாதாரணதன்மையிலே ஓர் ஒருமைப்பாடு உடையவர்கள். அவர்களது நடவடிக்கைகள் நம்பிக் கைகள் ஒற்றுமைகளுக்குள் அந்த ஒருமைப்பாட்டை வற்புறுத்தும் அம்சங்கள் இடம்பெறும். இந்த அம்சம் பற்றிச் சிறிது பின்னர் விரிவாக நோக்குவோம். இந்நிலையில் இந்த மக்களின் “சாதாரண தன்மையைச்” சற்று அழுத்தத்துடன் நோக்குவோம்.
இந்த நாட்டார் மக்களின் பண்பாடு என்பது எப்பொழுதும் அந்த மக்களின் தொல்சீர் செந்நெறி (classical) சாதனைகளிலிருந்து பிரித்துப் பார்க்கப்படக் கூடியதாகவிருக்கும். அதாவது, சில பண்பாடுகளைப் பொறுத்தவரையில் “ஃவோக்” என்னும் பொழுது, அந்த நிலையும், அந்தப் பண்பாடும் அவர்களது செந்நெறி (classical) நிலையினதும், பண்பாட்டினதும் மறுபுற மாகவே கருதப்படும். ஒரு நிலைமையுண்டு. செந்நெறிப் பண்பாடு நாட்டார் பண்பாட்டிலிருந்துதான் ஊட்டம் பெறுகின்றது என்பதும் செந்நெறிப்பண்பாட்டில் நாட்டார் தனிமங்கள் உண்டு என்பதும் உண்மையே எனினும் அது பற்றிய அறிவு அறிக்கையைப் பொறுத்தவரையில் செந்நெறி சார்ந்தவை, சாஸ்திரிய நிலைப்பட்டவை என்றும், நாட்டார் நெறி சார்ந்தவை, சாஸ்திரிய நிலைப்படாதவை என்றும் கருதப்படும். ஒருநிலை உண்டு.
குறிப்பாக, நாகரிக வளர்ச்சி நிலைப்பட்ட வரலாறுடைய மக்களது (people with civilisational past) பண்பாடுகளில், செந்நெறிப் பண்பாட்டையும் நாட்டார் பண்பாட்டையும் இருமுனைப்படுத்திப் பார்க்கும் பண்பு ஒன்று காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். ஆசிய, ஐரோப்பியச் செந்நெறிப் பண்பாடுகள் பற்றிய ஆய்வுகளில் இந்நிலைமை காணப்படுவதுண்டு. இவ்வாறாக வரலாற்றுப் பாரம்பரியமுள்ள சமூகங்களின் உயர்நிலைப்படாத மக்கள் குழுமத்தினை “நாட்டார் என்று கொள்வது போன்று “நாட்டார்” என்பதை ஒரே சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட மட்டத்து வாழ்க்கை முறையாகவும் கொள்ளலாம். அத்தகைய நிலை பின்வரும் முறையில் ஏற்படலாம்.
சமனற்ற வளர்ச்சி காரணமாக (uneven development) சில சமூகங்கள் ஒரு குறிப்பிட்ட கால வரையிலும் ஒரு குறிப்பிட்ட சமூக பொருளாதார மட்ட நிலையில் வாழ்ந்து வந்திருப்பர். ஆயினும் பின்னர் ஏற்பட்ட சில வரலாற்று நிகழ்ச்சிகள் காரணமாகத் ‘திடீரென’ அதாவது துரிதமான முன்னேற்றத்தைப் பெற்றிருப்பர். அவ்வாறு துரித முன்னேற்றம் பெறும்பொழுது அவர்கள் வாழ்க்கை முறையில் புதிதாக அவர்கள் பெற்றுக்கொண்ட அந்தஸ்தை எடுத்துக்காட்டும் நடைமுறைகள் காணப்படுமதே வேளையில் அவர்கள் அபிவிருத்தியடையாதிருந்த நிலையில் அவர்களிடத்தே காணப்பட்ட சில பண்பு களினது ‘எச்சசொச்சங்கள்’ காணப்படலாம். அந்த எச்சசொச்சங்களை நாம் இன்று “நாட்டார் கூறுகள்” (folktraits) எனக் கொள்ளலாம்.
இவ்வாறாக எந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும், எந்த வரலாற்று சமூகச் சூழலிலும் நாட்டார் என்னும் பொழுது எந்தக் குழுமத்தை அல்லது ஒரு குழுமத்தின் எந்த மட்டத்தினைக் குறிக்கின்றது என்பது திட்டவட்டமாகத் தெரியும். நேரடியாகவோ அன்றேல் உய்யதறி முறையினாலோ அது நமக்குப் புலப்படும். அவ்வாறாயின், தமிழில் “நாட்டார்” என்பது எவ்வெச் சமூகக் குழுமங்களை அன்றேல் எவ்வெச் சமூகங்களில் எந்த (வாழ்க்கை) மட்டத்தைக் குறிக்கின்றது என்பது பற்றிய ஒரு தெளிவு இருத்தல் அவசியம்.
தமிழின் “ஃவோக்” (folk) யார் என்பதை அறிந்து கொள்வதற்கு “ஃவோக்லோர்” (folklore) என்னும் சொல்லுக்கோ, அன்றேல் “ஃவோல்சொங்” (Folksong) “ஃவோக்டிராமா” (folkdrama) முதலாம் கூட்டுச்சொல் பிரயோகங்களில் வரும் ஃவோக் என்னும் சொல்லுக்கோ நாம் சாதாரண வழக்கிற் பயன்படுத்தும் தமிழ்ப்பதம் நமக்கு உதவுதல் வேண்டும். ஒரு விடயத்தைக் குறிக்க ஒரு பண்பாடு பயன்படுத்தும் சொல்லைக் கொண்டு அந்த விடயம் பற்றிய அந்தச் சமூக நோக்கை நாம் உய்த்துணர்ந்து கொள்ளலாம். (உ-ம் தமிழ், சிங்கள பண்பாடுகள் Train ஐத் தொடர்வண்டியாகக் காணாது புகைவண்டி (smoke cart) இது மாட்டுவண்டிக் கருத்து நிலையிலிருந்து வருவது).
வரலாற்று ரீதியாகப் பார்க்கும்பொழுது ‘folk’ என்னும் அடையைத் தாம் “நாடோடி” ‘கிராம’ ‘நாட்டு’ ‘நாட்டார்’ என்னும் பதங்கள் கொண்டு சுட்டி வருகின்றோம் (சக்திவேல் 1993). இவற்றுள் “நாடோடி” என்னும் சொல் முற்றிலும் பொருந்தாதது. மற்றையவற்றுள் “நாட்டார்” என்பது “folklore” என்பதற்கான மாற்றீட்டுப் பதமாக இலங்கையில் வழங்கிவருவது. இப்பதம் வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம் காலம் முதல் பயன்பாட்டிலிருப்பது. முதலில் அவரே அதனைப் பயன்படுத்தினார். 1980 இல் யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒழுங்கமைப்புச் செய்த கருத்தரங்கின் பொழுதுதான் floklore இலங்கையில் முதன்முதலாக நாட்டார் வழக்காற்றியல் என மொழி பெயர்த்தோம். இப்பதத்தினைத் தமிழகத்துத் திருநெல்வேலி அறிஞர்கள் பயன்படுத்துகின்றனர்.
“நாட்டார்” என்னும் பதம் தமிழகத்தில் பெரு வழக்கிற்கு வராதுள்ளமைக்கு ஒரு முக்கிய காரணம் அங்கு “நாட்டார்” என்பது ஒரு சாதிக் குழுமத்தைக் குறிப்பதற்கும் வழங்கும் பதமாகும். (உ-ம் ந.மு.வேங்கடசாமி நாட்டார்; “நாட்டார்” என்பது இங்கு “நாடார்” என்னும் சாதிக் குழுமத்தைக் குறித்தது). தமிழகத்தில் “நாட்டுப்புற” என்னும் தொடரே “folk”ஐக் குறிக்கப் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது என்பது கண்கூடு (சக்திவேல் 1992). “நாட்டுப்புற” “நாட்டுப்புறம்” என்பது ஆங்கிலத்தில் ‘country side’ என்னும் குறிப்பினைக் கொண்டதாகும். “புறம்” என்னும் ஈறு இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டியது.
இதில் “கிராமியம்” என்பது தொனிப் பொருளாக நிற்கின்றது. எனவே “நாட்டுப்புறவியல்” என்னும் பொழுது (அப்பதத்தினை நாம் ஆக்க அவிழ்ப்புச் deconstruct செய்தால்) “நகரத்துக்குரியதாகவிருக்க முடியாதது” என்ற ஒரு எதிர்மறைப் பொருள் அதற்குள் தொக்கு நிற்கின்றது உணரப்படும். ஆனால் “ஃவோக்” என்னும் பதத்தை கிராமிய நகர ஒருங்கிணைக்கப்பட்ட எண்ணக்கருவினுள் (concept of rural urban dichotomy) வைத்து நோக்குதல் பொருந்தாது. “ஃவோக்” (folk) என்னும் பதம் கிராம - நகர இருநிலைப் பாட்டுக்கு அப்பாலானது. ஆங்கில எழுத்து மரபில் நகரத்து நாட்டார் வழக்கு (urban folklore) என்பது இயல்பான ஒரு விடயமே. நகரங்களிலுள்ள பெரு விற்பனை நிலையங் களிலுள்ள விற்பனைப் பெண்களின் (sales girls) சில நம்பிக்கைகள், நடைமுறைகள் பற்றிய கட்டுரையொன்றினை வாசித்தது நினைவுக்கு வருகின்றது. அதனை அக்கட்டுரையாசிரியர் folklore among the sales girls என்றே சொல்கிறார்.
இதேபோன்று “நாட்டார்” என்ற சொல்லும் அது தமிழிற் சாதாரணமாகப் பயன்படுத்தும் முறைமையில் ஃவோக் (folk) என்னும் பதத்துடன் இணையாத கருத்துக்கள் தொனிப்பதை நாம் அவதானிக்கலாம். உ-ம் இப்பதம் கொண்டு “the tamil folks” என்னும் தொடரை மொழி பெயர்க்கும்பொழுது “தமிழ்நாட்டார்” என்று கூற வேண்டிவரும். தேசத்தை “நாடு” என்றும், தேசியத்தை “நாட்டினவாதம்” என்றும் கொள்ளும்பொழுது நாட்டார் என்பது ‘folk’ஐக் குறிக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுவது பொருத்தமற்றதேயாகும்.
இங்கு எனது முக்கிய நோக்கம் இந்த மொழி பெயர்ப்புக்களை விமர்சிப்பது அன்று. எனது பிரதான நோக்கு இந்தப் பயில்துறை பற்றிய சொற்பிரயோகத்தில் இன்னும் தான், குறிப்பாகத் தமிழ்மொழி மாத்திரம் தெரிந்தவர்கள் மத்தியில், இதன் பயில்வட்டம் யாது என்பதோ, இதன் பயில்வுக்கான இலக்குக்குழு (target group)யாது என்பதோ பற்றித் தெளிவு இல்லை என்பது தான்.
இந்த ஒரு நியாயம் காரணமாகவே நாட்டார் வழக்கியலைச் சமூக விஞ்ஞானிகள் (social scientists) அதிகம் கருதுவதில்லை. அவர்கள் இதே விடயங்களை அறிந்துகொள்வதற்கு அணுகுமுறைச் சுமையுடைய சமூக மானிடவியல்துறை (social Anthropology) பண்பாட்டு மானிடவியல் துறை (cultural Anthropology) களினை மேற்கொள்வர். நாட்டார் வழக்கியல் என்பது பெரும்பாலும் மனிதவியல் (Humanities) சார்ந்த அறிஞர்களின் ஈடுபாட்டினைக் குறிப்பதே. இந்த ஒரு விமர்சனம் காரணமாகவே பேராசிரியர் லோறி ஹொன்கோ (Laurie Honko) முதலாம் ஃபின்னிஷ் அறிஞர்கள் ‘folklore’ folkoristics என்றும், மரபு அறிவியல் என்னும் கருத்துப்படும் Traditional Science என்றும் குறிப்பிடுவர்.
“ஃவோக்” (folk) என்னும் பதம் பற்றியும் அதன் தமிழ் - மொழிபெயர்ப்புப் பற்றியும் நாம் இதுவரை பார்த்தவை ஒரு முக்கியமான சமூகவியல் வினாவை முன்வைக்கின்றன. எத்தகைய அமைப்பு நெறி கொண்ட சமூகங்களில் மக்கள் “ஃவோக்ஸ்” (folks) என அழைக்கப் பெறுவர் என்பதே அவ்வினாவாகும். “ஃவோக்ஸ்” (folks) என்னும்பொழுது ஓர் உள்ளார்ந்த சனநாயக நிலைப்பாடு உள்ளது. அது அதிகாரவரன்முறைப்பட்ட சமூகத்திற் காணப்படக்கூடிய ஒன்றா என்பது அடுத்து முக்கிய வினாவா கின்றது. தமிழ்ச்சமூகம் அதன் பெருவட்டமான இந்தியச் சமூகம் போன்று அதிகார வரன்முறையுடையதே (லூயி துமோன்ற் - 1977). பயில்துறைப்பெயரிற் காணப்படும் தெளிவு இன்மைக்குச் சமூக அமைப்புச் சார்ந்தது என்பதை மாத்திரம் இங்குக் குறித்துக்கொண்டு, அடுத்த அம்சத்திற்குச் செல்வோம்.
II
தமிழில் நாட்டார் வழக்கியல் பெறும், பெற வேண்டிய இடம் பற்றிய சிந்திப்பின்பொழுது மேலும் சில விடயங்கள் முனைப்புறுத்தல் அவசியமாகின்றது. முதலாவது தமிழில் நாட்டார் பண்பாட்டிற்கும் செந்நெறிப் பண்பாட்டிற்குமிடையே தெள்ளத்தெளிவான வேறுபாடு காட்ட முடியாத அளவுக்கு இரண்டுக்கு மிடையே ஊடாட்டம் காணப்படுவதாகும்.
நாட்டார் இலக்கியக் கூறுகளில் ஒன்றான பழமொழி நமது செந்நெறி இலக்கியப் பாரம்பரியத்திலும் முக்கியம் பெற்றுள்ளது. பதினெண்கீழ்க்கணக்கில் “பழமொழி நானூறு” என்று ஒரு நூல் உண்டு. தொல்காப்பியர் செய்யுளியலிற் கூறும் பண்ணத்தி, ‘பிசி’ என்பவை நாட்டார் வழக்குச் சார்ந்தவையாகவேயிருத்தல் வேண்டும். பள்ளு, குறவஞ்சி ஆகிய நாட்டார் நிலை இலக்கிய ஆற்றுகைப் பயிற்சிகள் இலக்கியத்தினதும் பரதநாட்டியத்தினதும் முக்கிய அம்சங்களாக அமைவதை நாம் மறந்துவிடுதல் கூடாது. இவை போன்றதே காவடிச்சிந்தும், காவடி நாட்டார் கலையாக விளங்க, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தோ செந்நெறித் தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியாகவே கொள்ளப்படுவதாகும்.
நாட்டார் பாடல் வகைகளைச் சேர்ந்ததெனக் கொள்ளப்படும் நாட்டார் கதைப்பாடல்களை (Ballads) எடுத்துக்கொண்டால் அவற்றை நியமமான நாட்டார் இலக்கிய வகையாகக் கொள்ளலாமா என்பது உண்மையிற் கேள்விக்குரிய ஒன்றேயாகும் (நாட்டார் கதைப்பாடல்கள் பற்றிச் சக்திவேல் கட்டுரையில் வரும் விவரங்களைக் காண்க). வையாபுரிப்பிள்ளை அவர்களின் “இராமப்பய்யன் அம்மானை”ப் பாடலையோ, சென்னை இந்திய ஆசிய நிலையம் வெளியிட்ட மூன்று கதைப்பாடல்களையோ சென்னைக் கீழ்த்திசை நூலக ஓலைச்சுவடிப் பதிப்புக் களையோ ஆராயும்பொழுது இவை யாவற்றுக்கும் எழுத்துப்படிகள் உண்டென்பதும் சிலவிடங்களில் இவற்றை இயற்றிய புலவர்கள் பெயர்கள் கூடத் தெரியும் என்பதும் புலப்படுகின்றது.
இத்தகைய பாடல்களை நியமமான இலக்கியங் களாகக் கொள்ளாமைக்கான காரணம், நமது செந்நெறிச் செய்யுளிலக்கியப் பகுதியில், இத்தகைய நூல்கள் இடம் பெறவில்லை என்பதேயாகும். இவற்றுட் பெரும்பாலான நூல்கள் தோன்றிய 17, 18, 19, ஆம் நூற்றாண்டுக்காலப் பகுதியில் கி.பி.1300 காலம் வரை திருப்புகழ் முதல் படைப்போர் வரை காணப்படாத இலக்கிய வகைகள் பயிலப்படுவதைக் காண்கிறோம். சித்தர் பாடல்கள் முதல் மருத்துவ நூல்கள் வரை, புராணம் முதல் பள்ளுவரை, கலம்பகம் முதல் காவடிச்சிந்து வரை பல இலக்கிய வகைகள் காணப் படுகின்றன. கி.பி.13 ஆம் நூற்றாண்டு வரை தமிழிற் காணப்படாத ஓர் இலக்கியப் பன்முகப்பாடு 14 ஆம் நூற்றாண்டு முதல் காணப் படுகின்றது. இத்தகைய இலக்கியப் பன்முகப்பாடு கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் நிலவியிருக்க முடியாது என்று கூறுவது சிரமமாகும். அத்தகைய இலக்கியங்கள் பேணப்படவில்லை என்பதே உண்மையாகும்.
சங்க இலக்கியம் முதல் பெரியபுராணம் வரை திருமுறைகள், திருப்பாசுரங்கள் உட்பட எல்லாமே பேணப்பட்ட இலக்கியங்கள்தான் என்பதும், அப் பேணுகை முயற்சி அரசர்களில் அல்லது (சமண, பௌத்த) பள்ளிகளால் அல்லது கோயில்களால் மேற்கொள்ளப் பட்டதென்பதும் இலக்கிய வரலாறு நமக்குப் புகட்டும் பாடமாகும். பேணப்பட்டவற்றினூடே தொடர்நிலைச் செய்யுள் மரபு மாற்றுருவம் எடுத்து காப்பியமாகப் போற்றப்பட்டதுண்மையே. ஆனால் அதனுள் கதைப் பாடல் மரபுவரமுடியாத அளவுக்கு அரசகட்டுப்பாடும் கோயிற்கட்டுப்பாடுமிருந்தது.
இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட பேணுகைமரபு விஜயநகர ஆட்சி வந்ததன் பின்னர் (1370) மாறுகின்றது. கோயில் எதிர்ப்பு (சித்தர்), பிரதேச வழிபாட்டு வளர்ச்சி (முருகன், அம்மன்), இந்திய மரபுக்கப்பாற்பட்டதான மதங்களின் வருகை (இஸ்லாம், கிறிஸ்தவம்), இவை யாவற்றுக்கும் மேலாக குறுநில ஆட்சிப் பெருக்கம் ஆகியன இலக்கிய வெளிப்பாட்டில் அது காலவரை காணப்படாத பன்முகப்பாட்டை ஏற்படுத்துகின்றது. இந்தக் கிளையில் சிற்றாட்சியாளரது வீரத்தையும் அவர்கள் மக்களிடையே பெற்றிருந்த நன்மதிப்பையும் காட்டுவனவாக இக்காலத்துக் கதைப்பாடல்கள் அமைந்தன. இவை புலவர்களால் எழுதப்பெற்று மக்களுக்குப் பாடிக் காண்பிக்கப்பட்டன என்பது இவற்றின் பாடக்கையளிப்பு (Textual transmission) மூலம் தெரியவருகிறது. இத்தகைய இலக்கியங்களை, அவற்றுக்குப் பாட்டியல் அங்கீகாரம் இல்லாததால் நாமும் நாட்டார் இலக்கியங்கள் என்று கொள்ள வேண்டுமா என்பது சிந்தனைக்குரிய விடயமேயாகும். ஏனெனில் இவை முற்றிலும் நாட்டார் நிலைப்பட்டனவல்ல என்பதற்கு பாடத்தோற்றம் (Origin of the text) பாடியவர் பெயர் பாடவேறுபாடுகளைக் கொண்ட ஏடுகள் (Manuscripts with textual
variation) ஆகியன சாட்சி பகருகின்றன.
இந்த விடயம் தனியே கதைப்பாடல்கள் பற்றியது மாத்திரமன்று. இந்தக் கதைப்பாடல்கள் அளவு முக்கியத் துவமுடையனவே. கதைப்பாடல் முறைமையில் எடுத்துக் கூறப்படும் ஐதீகங்களும் கட்டுக்கதைகளும் (Legends) மயிலிராவணன் கதை, மதனகாமராசன் கதை, தமிழறியும் பெருமாள் கதை ஆகியன அக்காலத்தில் மேலாண்மையுடையதாய் விளங்கிய சமஸ்கிருதப் பண்பாடு சாராத பிரதேச ஐதீகங்களாகும். இவற்றுட் சில சமஸ்கிருதப் பண்பாட்டுடன் இணைத்துக் கூறப்பட்டன (திருவிளையாடற்புராணம்). சில பிரதேசக் கதைகளாகவே விளங்கின. (மதனகாமராசன் கதை).
தமிழ்நாட்டின் ஐதீகங்கள் பற்றியும் மதமரபுகள் பற்றியும் ஆராய்ச்சி செய்பவர்களின் கவனத்தை இவை இப்பொழுது ஈர்த்துள்ளன. முந்திய அரசமரபினாலும், பிந்திய ஆகம மரபினாலும் இவை புறக்கணிக்கப்பட்டன என்பதற்காக இவற்றை நாட்டார் இலக்கியமாகவே கொள்ளும் மரபு தொடர்ந்து போற்றற்குரிய தொன்றன்று. தமிழின் நாட்டார் பாரம்பரியம்பற்றி ஆராயும் பொழுது நாம் தவறாது மனங்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம், வடமொழிமரபு மேலாண்மையுள்ள அனைத்திந்தியப் பண்பாட்டு மட்டத்திற் பேசப்பெறும் மார்க்க / தேசி (ஆயசபய / னுநளi) என்னும் வகைப்பாடாகும். “மார்க்க” என்பது உயர்பொது நியமத்தையும் “தேசி” என்பது பிரதேசங்களுக்குரிய வேறுபடு வடிவங்களையும் குறிக்கும். நாட்டிய சாஸ்திரம், இந்த மார்க்க / தேசி வேறுபாட்டைக் கூறி, தான் பேசுவது “மார்க்கமே” என்று கூறும். பிற்காலத்தில் அனைத்திந்தியப் பொதுமையான வற்றை “மார்க்கம்” என்றும், பிரதேச நிலைப்பட்டன வற்றைத் தேசி என்றும் கொள்ளும் மரபு இருந்தது. அதனாலேயே தெலுங்கு இலக்கியத்தில் “மார்க்க” என்பது அனைத்திந்தியப் பொதுமையானவற்றையும், தேசி என்பது பிரதேச இலக்கிய வடிவங்களையும் குறிப்பிடும் மரபு ஏற்பட்டது.
சிலப்பதிகாரம் அரங்கேற்று காதைக்கான அரும்பத உரையாசிரியர் மார்க்கம், தேசி என்ற வகைப்பாடுபற்றிக் குறிப்பிடுகின்றார். “மார்க்கம் என்பது வடுகின் பெயரே” என்று ஒரு மேற்கோள் அங்கு வருகிறது. அதனால் தமிழ் நாட்டில், ஏறத்தாழ 10, 11 ஆம் நூற்றாண்டின் பின்னர் வட இந்தியக் கலைச்செல்வாக்குகளை “மார்க்கம்” எனக் கொள்ளும் ஒரு வழக்கு இருந்ததுபோலும். இங்கு நாம் மனதிற்கொள்ளவேண்டுவது இந்த வகைப்பாட்டின் கீழ்த் தமிழின் இயல்பான கலை, இலக்கிய அம்சங்கள் “தேசி”யின் கீழேயே வைத்து நோக்கப்பெறும் என்பதாகும். இவ்வாறு நோக்கும்பொழுது நாட்டார் வழக்கியல் காரருக்கு இக்கட்டான நிலையொன்று ஏற்படலாம். அனைத்திந்திய மட்டத்தில் தமிழ் “தேசி”யாகவிருக்க, தமிழுக்குள் நாம் மீண்டும் செந்நெறி/நாட்டார் வழக்கு என ஒருவகைப்பாட்டை வைப்பதா என்ற வினா முக்கியமான ஒன்றே.
இக்கருத்தரங்கில் தமது ஆய்வுப் பங்களிப்பில், டாக்டர் சக்திவேல் “நாட்டுப்புறக்கலைகளும் கை வினைகளும்” என்ற உப-தலைப்பின்கீழ் வில்லுப்பாட்டு, கரகம், கணியன்கூத்து, தோற்பாவைக் கூத்து, வேளாக் கலை, தெருக்கூத்து, பாவைக்கூத்து, நடனங்கள் (பெயர் தரவில்லை), பகல்வேடம் ஆகியனவற்றை எடுத்துக் கூறுகின்றனர். இவற்றுள் வில்லுப்பாட்டு, கரகம் ஆகியன நிச்சயமாகத் தேசி வடிவங்களாகும். அதாவது தமிழ் நாட்டைத் தவிர்த்த மற்றைய பண்பாடுகளில் எடுத்துப் பேசப்படாதவை. நமது “தேசி” வடிவங்களை நாமே நாட்டார் வடிவங்கள் எனலாமா? இலக்கிய நிலைநின்று பார்க்கும்பொழுது உண்மையில் அகப்பொருள்மரபு தமிழின் “தேசி” வடிவமே. அதனாலேயே அகத் திணையைத் தமிழ் என்றே சுட்டும் ஒரு மரபு இருந்தது. இந்த இலக்கிய மரபு தமிழில் வளர்த்தெடுக்கப்பட்டது போன்று பிற இந்திய மொழிகளில் வளர்த்தெடுக்கப் படவில்லை. ஆனால் இப்பண்பு தென்னிந்திய நாட்டுப் பாடல் மரபைச் சார்ந்தது என்று ஏற்கனவே நிறுவப் பட்டுள்ளது. அகப்பொருளின் தனித்துவம் காரணமாகவே குறிஞ்சிப்பாட்டு “தமிழ் கற்பிப்பான் வேண்டி” பாடப் பட்டதென்று களவியலுரையில் இது (இந்நூல்) என்னுதலிற்று” என்றும் கூறப்பட்டது.
“கூத்து” இன்று உயர் வழக்கற்றதாக இல்லா திருப்பினும் அதுவே தமிழரின் தேசிய நாடக வடிவம் என வற்புறுத்தும் நாட்டார் வழக்கியலாளரே உளர். கலாநிதி இ. பாலசுந்தரம் கூத்தைத் தமிழரின் தேசியக்கலை வடிவம் என்பர். எனவே தமிழில் நாம் உண்மையான “நாட்டார் வழக்கியல்” என எவ்வெவற்றைக் கொள்ளப் போகின்றோ மென்பது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும். அனைந்திந்திய அமைப்பினுள் தமிழர் பண்பாடு என்று சுட்டப் பெறவேண்டிய யாவற்றையும் ஒருங்கு சேர வைத்து நோக்கவேண்டியது அவசியமாகின்றது. அந்தப் பண்பாட்டுருவாக்க அலகுகளை அனைத்திந்திய அடிப் படையில் நோக்கும்பொழுது எவ்வாறு நோக்குவது என்பதே நம் முன்னர் உள்ள வினாவாகும்.
III
இரண்டாவது பகுதியில் எடுத்தாராயப்பட்ட விடயங்களை நோக்கும்பொழுது “உயர் அங்கீகாரம்” பெறாதனவாகவும் அந்த உயர் பண்பாட்டின் மாற்றுப் பண்பாடாக விளங்கிய அமிசங்களையும் நாம் நாட்டார் வழக்கியலினுள் வைத்து நோக்கும் ஓர் ஆபத்தான நிலைக்கு ஆட்படுவதை அவதானித்தோம். தமிழ்நாட்டின் சமூக ஒழுங்கமைப்பினை நோக்கும் பொழுது குலம் / ஜாதி என்பது மிகமுக்கியமான ஓரிடத்தை வகிக்கின்றது என்பது தெரியவரும். இந்தக் குலங்கள் / சாதிகள் ஓர் அதிகார வரன்முறையில் (hierarchial order) ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என்பதும் முக்கியமான ஒரு மானிடவியல், சமூகவியல் உண்மையாகும். இந்த அதிகார வரன்முறை ஒழுங்கமைப்பில் ஒன்று மற்றொன்றிலும் உயர்ந்தது / தாழ்ந்தது என்ற ஒரு எடுகோளும் இந்தக் குலங்களின் ஊடாட்டத்தின்பொழுது தீட்டு (யீடிடடரவiடிn) உண்டு என்ற கருதுகோளும் முக்கியமானவையாகும்.
இந்த அமைப்பில், ஒவ்வொரு குலக்குழுமமும் தனது தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் வற்புறுத்தும் ஐதீகங்களை உடையனவாய் இருக்கும். கி.பி.600 - 1300 காலப் பகுதியில் மிக உயர்ந்த நிலையிலிருந்த பிராமணர்களினதும், வேளாள மக்களினதும் ஐதீகங்களும், அவர்களது உயர்வை எடுகோளாகக்கொண்ட ஆக்கங் களுமே செந்நெறி மரபில் முக்கியப்படுத்தப்பட்டன. மற்றையவை முக்கியமானவையாகக் கருதப்படவில்லை. முக்கியமாகக் கருதப்படாததனால் அவற்றை செந்நெறி சாராதனவாக நாட்டார் நிலைப்பட்டனவாக (அதாவது சாதாரண மக்கள் என்ற கருத்தில்) கொள்ள முடியுமா?
இந்தச் சமூக ஒழுங்கமைப்பு உண்மையை மனத் திருத்திக்கொண்டு தமிழ்நாட்டில் எடுத்துப் பேசப்பெறும் நாட்டார் கதைப்பாடல்களை எடுத்து நோக்குவோமேயானால் அவை சாதி ஐதீகங்கள் (caste myths) பற்றியனவாகவும் “குறைந்த” சாதியினர் எனக் கருதப்பட்டவர்கள் செய்த வீரச்செயல்களாகவும் ஆனால் “உண்மையில் அவர்கள் குறைந்த சாதியினர் அல்லர், ஏதோ ஒரு சாபம் தவறு, கைபிழைபாடு காரணமாக கீழ்நிலைப்படுத்தப் பட்டோர்” என்ற நியாயப்படுத்துகை உடையனவாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். இதனால் முன்னிலைச் சமூகத்தினரைத் தவிர்த்த (forward groups) மற்றையோரை நாட்டார் வழக்கியல் மரபினுட் கொண்டுவரும் ஒரு செந்நெறி காணப்படுவதை அவதானிக்காமலிருக்க முடியாது.
இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தில் அரசாங்கத் தேவைகளுக்காகவும், உத்தியோகத் தேவைகளுக்காகவும்
* முன்னிலைச் சாதிகள் (Forward castes)
* பின்தங்கிய சாதிகள் (Backward castes)
* அட்டவணைப்படுத்தப்பட்ட பாதுகாப்புக்குத் தேவைப்படும் சாதிகள் (scheduled castes)
* குலக்குழுக்கள் (Tribes)
எனச் சமூகத்தை வகைப்படுத்தி அந்த வகைப்பாட்டின் அடிப்படையிலேயே சனநாயகமயப்படுத்தலை நடத்த வேண்டும், முடியுமென்ற ஒரு சமூக - அரசியல் சூழலில் முன்னிலையற்றோர் “நாட்டாராக”க் கருதப்படுவது ஆச்சரியமில்லை. ஆனால் இந்த வகைப்பாடு நிரந்தர ஒதுக்கற்பாட்டுக்கு இடம் கொடுப்பதன்று. தனிக்குடும்ப அடிப்படையிலோ, அல்லது முழுக்குல / சாதி அடிப்படையிலோ மேனிலை நோக்கிய அசைவியக்கம் (upward social mobility) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தே வந்துள்ளன.
இந்தியாவில் மேற்கூறிய சமூக ஒழுங்கமைப்பையும் அதனுள்ளே காணப்படும் நெகிழ்ச்சிகளையும் ஊடாட்டங்களையும் விளங்கிக் கொள்வதற்கு சமூக மானிடவியலாளரும் சமூகவியலாளர் சிலரும் முறையே பெரும் பாரம்பரியம் / சிறு பாரம்பரியம் (little tradition) என்ற கருதுகோளையும் சமஸ்கிருத நெறிப்படுகை (Sankritization) என்ற சமூக விளக்கத்தையும் தந்துள்ளனர். முதலாவது றொபேற்றெட்ஃபீல்ட் என்பவரால் தென் அமெரிக்கா நாகரிகம் ஒன்றினை விளக்கிக் கொள்வதற்கு உருவாக்கிக் கொள்ளப்பட்ட தாகும். பின்னர் மில்ற்றன் சிங்கர் போன்றோர் இந்தியச் சமூக அமைப்பையும் மாற்றத்தையும் விளக்கிக் கொள்ள இக்கொள்கையைப் பிரயோகித்தனர். அக்கொள்கையில் எடுத்துப் பேசப்படும் சிறுபாரம்பரியம் என்பது (அதாவது பெரும்பாரம்பரியத்துக்குரியதான திருமறை எழுத்து Scriptual writings அங்கீகாரம் இல்லாதவை) நாம் இதுவரை ஆராய்ந்த நாட்டார் வழக்கியல் சார்ந்தனவேயாகும். அடிநிலை இந்தியச் சமூகங்களின் மேனிலை நோக்கிய சமூக அசைவியக்கம், உயர் மரபினதெனக் கருதப்படுவதாகிய சமஸ்கிருத முறைமைகளைக் கையேற்று அவற்றின்படி ஒழுகும் பொழுது நடைபெறுகின்றது எனவும் எம்.என்.ஸ்ரீநிவாஸ் கூறுவர். இந்த அசைவியக்கம் சமஸ்கிருத நெறிப்படுகை (Sankritisation) எனப்படும். நாட்டார் வழக்கியலில் நாம் பெரிதும் சமஸ்கிருத நெறிப்படாத சமூகங்களின் நடைமுறைகள் பற்றியே ஆராய்கின்றோம் எனலாம்.
பாரம்பரியமான “உயர்” கலை, இலக்கிய வடிவங் களால் புறக்கணிக்கப்பட்ட அல்லது தங்களது நியமங் களுக்கேற்ப எடுத்துக்கூறும் பாரம்பரிய “உயர்” இலக்கியங் களில் சித்திரிக்கப்படாத இந்த வாழ்க்கை மாற்றங்களை முற்றிலும் நவீன தொழினுட்பச் சூழலில் வளர்த்தெடுக்கப் பட்ட கலை வடிவங்கள் சித்திரிப்பது ஆச்சரியத்தைத் தருவது அன்று. நாவல், சினிமா ஆகிய இருவடிவங்களும் இப்பணியைச் செய்கின்றது. இந்த வடிவங்களைப் பொறுத்தமட்டில் “நாட்டார்” என்ற கலைநிலைப்பாடு கிடையாது. ஆனால் அதனையே அவர்கள் பயன்படுத்து கிறார்கள். சமுத்திரத்தின் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’, இளையராஜாவின் இசை, பாக்கியராஜின் படங்கள் ஆகியன இதற்கு நல்ல உதாரணங்கள்; தொழினுட்பம் மாறும்பொழுது நாட்டார் வழக்குகள் வேறு வடிவமெடுக்கின்றன.
IV
தமிழ்நாட்டு “நாட்டார் வழக்கியலை விளங்கிக் கொள்வதற்கு மானிடவியலிற் பயன்படுத்தப் பெறும் ஒரு கருதுகோளைக் கைக்கொள்ளல் பயன்தரும். சமூகத்தின் ஒட்டுமொத்தமான இயக்கத்துக்கு அச்சமூகத்தினரது சமூக ஒழுங்குகளும் நிறுவனங்களும், ஆற்றல்களும் தொழில் நுட்பங்களும் ஆற்றுகை வடிவங்களும் எவ்வாறு இணைந்து பயன்படுகின்றன என்பதை அறிய விரும்பும் மானுடவியல், தான் ஆயும் சமூகத்தினை அதன் எழுத்தறிவு நிலைகொண்டு வகைப்படுத்தும் ஒரு மரபு உண்டு. இதன்படிக்கு ஒரு சமூகம் எழுத்தறிவற்றதாக அல்லது எழுத்தறிவு நிலைக்கு முற்பட்டதாக அல்லது எழுத்தறிவு நிலைப்பட்டதாக இருக்கலாம். சமூக மானிடவியல் பெரும்பாலும் முதலாவது வகைச் சமூகங்களையே ஆராயும். இங்குப் பாடல்கள் ஆற்றுகைகள் ஆகியன வாய்மொழியாகவே இருக்கும். எழுத்தறிவுக்கு முந்தியநிலை
என்பது வரலாறு சம்பந்தப்பட்ட ஒன்றேயாகும்.
தமிழில் நாட்டார் நிலையில் சில வேளைகளில் நாம் உண்மையில் தமிழ்நாட்டிலுள்ள அல்லது தமிழர் களிடையே காணப்படும் எழுத்தறிவு நிலை சாராத மரபுகளையே ஆராய்கின்றோம் போலத் தெரிகின்றது. கதைப்பாடல் மரபு, எழுத்தறிவுடையோரால் எழுத்தறிவற்றவர்களுக்கு எழுதப்பட்ட இலக்கியத்தைக் கொண்டதாகும். நியம இலக்கியம் எழுத்தறிவுடையோரால் எழுத்தறிவுடையோருக்கு “எழுதப்” படுவதாகும். இந்த “எழுத்தறிவு” “எழுத்துப் பயில்வு” என்ற கருதுகோள்களை வைத்துக்கொண்டு நோக்கும்பொழுது தான் தமிழ்நாட்டார் வழக்கியலின் தொழிற்பாடு பற்றிய பேருண்மை வெளிப்படுகின்றது.
தமிழில் ஒரே நேரத்தில் சமசிரத்தையுடன்
1. எழுத்தறிவுடைய மக்கட்கூட்டத்தினரின் எழுத்து நிலைப்படாத வாய்மொழிப் பாரம்பரியங்களையும் (ஒப்பாரி, தாலாட்டு, சடங்குகள், மருத்துவம் ஐதீகங்கள் முதலியன)
2. எழுத்தறிவு வாய்ப்பற்றிருக்கின்ற சமூகத்தினரின் (குலங்களின் / ஜாதிகளின்) வாழ்க்கை மரபு களையும் நாட்டார் வழக்கியல் என்ற தலைப்பின் கீழ்ப் பயிலுகின்றோம், என்பது தெரிய வருகின்றது. இது சில கருத்துமயக்கங்களுக்கு இடமளிப்பது இயல்பே.
தமிழ்ப்பண்பாடு என்ற கருத்துநிலை வட்டத்தினுள்ளே (ideological orbit) நின்றுகொண்டு, அந்தக் கருத்துநிலை நிர்ணயிக்கும் உயர்வு / உயர்வின்மைக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு பார்க்கும்பொழுது, நாம் நமது செந்நெறி கலை, இலக்கிய மரபிற் பேசப் படாதனவற்றையெல்லாம் நாட்டார் வழக்குகளாகவே கொள்கின்றோம் என்பது தெரியவருகின்றது. இது ஒரு பண்பாட்டு வட்டத்தினுள்ளிருந்துகொண்டு எழுதும் பொழுது (wriging form within) ஏற்படும் தவிர்க்க முடியாத நிலையாகும். ஆனால் அனைத்திந்திய வட்டத்தினுள் வைத்துத் தமிழ்ப் பண்பாட்டுருவாக்கத்தைப் (Tamil cultural formation) பார்க்க முனையும் பொழுது இதுகாலவரை நமது செந்நெறிப் பாரம்பரியம் புறக்கணித்த, பார்க்க விரும்பாத பல விடயங்களை நாம் பார்க்க வேண்டிவரும். இதனாலேயே டேவிட் ஷுல்மன் Kings and clowns (மன்னர்களும் விதூஷகர்களும்) என்றும் Temple myths (கோயில் ஜதீகங்கள்) என்றும் செந்நெறி மரபிற் பெரிதுபடுத்தப்படாத விடயங்களை ஆராய்கின்றனர். அதேபோன்று அல்ஃப் வறய்ற்றல்பெல் திரௌபதி வழிபாடு பற்றியும்
காத்தவராயர் வழிபாடு முதலியன பற்றியும் கருதுகின்றனர்.
பண்பாட்டு வரலாறு பற்றிய இத்தெளிவு இல்லாது நாம் நாட்டார் வழக்கியல் பற்றிய ஆய்வுகளில் இறங்கக் கூடாது. அமெரிக்க, ரஷ்யா, ஜெர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளைப் பார்க்கும்பொழுது ஒவ்வொரு நாடும் தனது தேவைகளுக்கும் மரபுகளுக்குமேற்பவே நாட்டார் வழக்கியலை ஒழுங்கமைத்துக் கொண்டுள்ளன. அதனையே நாமும் செய்யலாம்.
பாரம்பரியத் தமிழாய்வில் புறக்கணித்த
1. எழுத்தறிவுடையோர் நிலையிலுள்ள வாய்மொழிப் பாரம்பரியங்களையும்,
2. சமஸ்கிருதமயப்படாத, சமஸ்கிருதமயப்படத் தானும் விடப்படாத குழுமக்களின் வாழ்க்கை முறை கலை இலக்கியங்கள் ஆகியனவற்றையும் நமது நாட்டார் வழக்கியற் பாரம்பரியத்தினுட் கொண்டு வரலாம். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டவை என்பது தெளிவாக உணரப்படல் வேண்டும். இந்த அணுகுமுறைத் தெளிவு மிக முக்கியமாகும். அந்த அணுகுமுறைத் தெளிவுதான் நாம் இவ்விடயங்களைச் சமூக விஞ்ஞானிகளாகப் பார்க்கின் றோமா இன்றேல் மனிதவியலாளராகப் பார்க்கின்றோமா என்பதைக் காட்டும். பல்துறைச் சங்கம ஆய்வுத்துறை இந்த அணுகுமுறைகளை இணைத்து நோக்க உதவும்.
நன்றி - கீற்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக