தமிழ்
இசை இயக்கம் ஒரு தலைசிறந்த
குறிக்கோளோடு தொடங்கப்பெற்றது. அந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகத்
தேர்ந்தெடுக்கப்பெற்ற ஒவ்வொருவர் மீதும் குறிக்கோள் பெருமையின்
நிழல் வீசுகின்றது. அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற
முயன்ற பல பெரியார்களில் சுப்பிரமணிய
பாரதியாரும் ஒருவர். அறுபது, எழுபது
ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் பாரதியார். அவர் மகாகவி சுப்பிரமணிய
பாரதியார். தமிழ் இசைக்கு ஓர்
ஆபத்து ஏற்படப் போகின்றது என்பதனை
அப்பொழுதே சொன்னார். என்ன சொன்னார்?
"தமிழ்ச்
சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில்
பழம் பாட்டுக்களை மீண்டும் மீண்டும் சொல்லுதல் நியாயம் இல்லை (பாரதியார்
வார்த்தை; வேதவாக்கு. அயல் மொழிப் பாடல்களைத்
தமிழ்ச் சபைகளில் மீண்டும் மீண்டும் பாடுதல் நியாயம் இல்லை
என்பது அவர் கருத்து) அதனால்
நமது ஜாதி சங்கீத ஞானத்தை
இழந்து போகும்படி நேரிடும்.'' (நம் தமிழ்ச் சாதி
இழந்து போகும்படி நேரிடும்) என்று சொன்னார். நம்
கண் முன்னால், நமது ஜாதி, சங்கீத
ஞானத்தை இப்போது இழந்து கொண்டிருப்பதைப்
பார்க்கிறோம்.
தமிழ்
நாட்டிலுள்ள இளம் தலைமுறையினர் மெல்லிசை
என்ற வல்லிசை வெள்ளத்தில் பயங்கரச்
சுழிகளிலே அகப்பட்டு, அமைதியைக் குலைக்கும் உணர்ச்சிச் சூறாவளியிலே சுழன்று, கர்நாடக சங்கீதம் என்ற
தமிழிசையின் ஞானத்தையும் இழந்து வருகின்றார்கள். நமது
இசைவாணர்கள், தமிழர்களுக்குப் புரியாத மொழிகளிலேயே பாடிப்
பாடி, மரபு வழிவந்த நமது
இசையின் மீதே தமிழர் சமுதாயத்திற்கு
- தமிழ்ச் சாதிக்கு வெறுப்பு ஊட்டி விட்டார்கள். இன்று
நடந்து கொண்டிருப்பதை ஞான திருஷ்டியால் அன்றே
கண்டுவிட்டார் பாரதியார். தாம் கண்டதைப் பொருத்தில்
(பொட்டில்) அடித்த மாதிரி அல்லவா
அவர் சொல்லிவிட்டார்.
ஒவ்வொரு தமிழனும் அவர்
கூறியதை மனத்தில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால்,
மெல்லிசைக் கச்சேரிகளுக்கும் நாட்டியக் கச்சேரிகளுக்கும் நாடகங்களுக்குமே பெரும் கூட்டம் வருகிறது
என்று சென்னையிலுள்ள சங்கீத சபா நிர்வாகிகள்
பலரும் ஒருமனதாகச் சொல்கிறார்கள். அப்படியானால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவழியாகத் தமிழர்கள் அனுபவித்து வந்த இசையைத் தமிழர்களே
இப்போது புறக்கணிக்கிறார்கள் என்றுதானே பொருள்? புறக்கணிப்பதற்குப் பல
காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றிலெல்லாம் முக்கியமான
காரணம், தமிழர்களுக்குப் புரியாத மொழியிலே உள்ள
இசைப் பாடல்களைப் பாகவதர்கள் மாறி மாறிப் பாடி
அவர்களுக்குக் கசப்பை ஊட்டி விட்டார்கள்.
இசை
ஞானத்தை மாத்திரம் நாம் இழந்துகொண்டிருக்கவில்லை. இதயக் கல்லைப்
பிசைந்து கனியாக்கி, அருள் வெள்ளத்தில் அமிழ்த்தும்
இசையின் பயனாகிய பக்தியையும் நாம்
இழந்து வருகிறோம். இதை உணர்ந்த சில
இசை மேதைகள், ""சங்கீதத்துக்குப் பாஷை அவசியமில்லையே. அதற்குத்
தனித்து இயங்கும் ஆற்றல் இருக்கிறதே'' என்று
சொல்லி, தந்திரமாக நம்மை திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.
தந்திரிகளுக்கெல்லாம்
மேலான தந்திரி, ராஜாஜி; திசை திருப்பிகளுடைய
வாதத்துக்கு ராஜாஜி அருமையாகப் பதில்
சொன்னார். ராஜா சர் அண்ணாமலை
செட்டியார் இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது
டி.கே.சி., ராஜா
சர்ரிடம் ""நீங்கள் ராஜாஜியிடம் போகவேண்டும்.
அவர் பலம் கொடுப்பார்'' என்று
சொன்னார். நம் ராஜா.சர்.,
அவ்வாறே சென்று வந்தார். அதற்கு
ஒரு மணி நேரம் கழித்து
நம் மீ.ப.சோமசுந்தரம்,
ராஜாஜியிடம் சென்றார். ""அடடா ஒரு மணி
நேரத்திற்கு முன் நீ வரவில்லையே!
நான் தமிழ் இசையைப் பற்றி
என்ன சொன்னேன் தெரியுமா? அதனை இப்போது சொல்கிறேன்;
எழுதிக்கொள்'' என்று சொன்னார். இது
நடந்தது 24-5-1943, என் நண்பர் மீ.ப.சோமசுந்தரம், ராஜாஜி
கூறிய வாசகங்களை அப்படியே எழுதி வைத்திருக்கிறார்கள் அதனைக்
கூறுகின்றேன்.
"தமிழ்
இசை சம்பந்தமாக, சங்கீதத்துக்கு மொழி வேண்டுமா, வேண்டாமா
என்கிற வாதம் பிரமாதமாக இந்த
இசை இயக்கத்தில் அடிபடுகிறது. மொழி பற்றி வித்தியாசம்
ஏற்பட்டபடியால், மொழியே வேண்டாம் என்ற
வாதம் போட்டால், நம் கட்சி பலமாகப்
போய்விடுகிறது என்ற உத்தேசத்தின் மேல்
சங்கீதத்துக்கு மொழியே வேண்டாம் என்று
சிலர் சொல்கிறார்கள். இது எப்படி இருக்கிறது
என்றால் தென்கலை வேண்டுமா, வடகலை
வேண்டுமா என்று கேட்டால், இந்து
மதமே வேண்டாம் என்பது போலவும், சிவன்
கோயில் வேண்டுமா, விஷ்ணு கோயில் வேண்டுமா
என்று கேட்டால், கோயிலே வேண்டாம் என்பது
போலவும் இருக்கிறது. தியாகையர் தமிழில் பாடுவதற்குப் பதில்
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தெலுங்கில் பாடினார். அது ஒன்றே போதும்,
தமிழிசை இயக்கத்துக்கு ஆதரவு''.
"அவர்
(தியாகையர்) தமிழ் நாட்டில் வளர்ந்து,
தமிழ் தேசத்தில் புகழ் பெற்றவர். ஆயினும்
அவர் ஏன் தெலுங்கில் பாடினார்?
தெலுங்கு நல்லது என்று அதில்
அவர் பாடவில்லை. தெலுங்கு அவருக்குத் தாய் பாஷை ஆகியதால்,
அவர் அதில் பாடினார். நாமும்
நம் தாய் பாஷையில் பாடினால்தான்
நம் ஆத்மாவுக்குத் திருப்தி கிடைக்கும், கடவுளுக்கும் காது கேட்கும்''
ராஜாஜியின்
இந்த வாசகத்தைப் படித்த சிலர், ""இது
என்ன, ராஜாஜி ஒரு கட்சிக்கு
வக்காலத்து வாங்கிப் பேசுவதுபோல் இருக்கிறதே? தெலுங்கில் பாடினால் கடவுளுக்குக் காது கேட்காதா, தமிழில்
பாடினால்தான் காது கேட்குமா?'' என்று
கேட்கலாம். இப்படிக் கேட்பவர்கள், ராஜாஜியைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
எஸ்கிமோ
மொழியிலே பேசினாலும், சர்வஞ்ஞனான இறைவனுக்குக் காது கேட்கும். மொழிகளையெல்லாம்
படைத்த முழுமுதல் அல்லவா அந்த இறைவன்!
அவனுக்கா காது கேட்காது! ஆனால்,
ஒன்றை மறந்துவிடக்கூடாது. எஸ்கிமோ பாஷை தெரியாத
நாம், எஸ்கிமோ பாஷையில் எழுதிய
சாகித்யத்தை எப்படி அழகாகப் பாடினாலும்,
நமக்கு உருக்கம் ஏற்படாது; எஸ்கிமோ தெரியாத தமிழ்
மக்களும் உருக மாட்டார்கள். உருகினால்
அல்லவா இறைவனோடு ஒட்டலாம்! இரண்டும் ஒன்றுமாகக் கலக்கலாம்! அப்படி ஒன்றி உறவாட
நம்மால் முடியவில்லையென்றால், நாம் பாடிய எஸ்கிமோ
பாட்டு, விருதா பாட்டு (வீண்பாட்டு)
தானே. நம் விண்ணப்பத்தை இறைவன்
ஏற்றுக்கொள்ளும்படியாக நாம் சொல்லவில்லை என்றுதானே
பொருள்! அப்படியானால் இறைவனுக்குக் காது கேட்கும் படியாக
நாம் பாடவில்லை. இதைத்தான் ராஜாஜி சொன்னார்.
ஆகவே,
பிற மொழிகளிலே பாடுவதால், பாரதியார் சொல்வதுபோல், நம்முடைய இசை ஞானம் மறைந்துபோகும்;
அதன் விளைவாக, ராஜாஜி சொல்வதுபோல, நமக்கே
உரிய பக்தியும் மறைந்து போகும்; இதற்கெல்லாம்
மேலாக, பாகவதர்களுடைய பிழைப்பும் கெட்டுப்போகும். மெல்லிசையை வல்லிசை கபளீகரம் பண்ணிவிடும்
என்பதைப் பாகவதர்கள் இப்போதாவது உணர்ந்தால், அவர்களுக்கும் நல்லது; நம்முடைய இசை
ஞானத்துக்கும் நல்லது; நமது பக்திக்கும்
நல்லது.
ரசிகமணி
டி.கே.சிதம்பரநாத முதலியார்
சொன்னதுபோல, ""கடலை மாவுக்கும் சர்க்கரைக்கும்
நமக்கு வேற்றுமை தெரியத்தான் செய்யும். கடலை மாவையே தின்றுகொண்டு
இருக்கவும் முடியாது. சர்க்கரையையே தின்றுகொண்டு இருக்கவும் முடியாது; இரண்டையும் சேர்த்து "லட்டு' செய்து கொடுத்தால்,
நன்றாகவே சாப்பிடலாம். அதுபோலத்தான் இசையும் மொழியும் சேர்ந்தால்
நன்றாக அனுபவிக்கலாம். ஆகவே, தமிழிலுள்ள ஏராளமான,
ஆனால் துருப்பிடித்துப்போன சாகித்தியங்களை இசைவாணர்கள் துலக்கி, கச்சேரிகளில் பாடித் தமிழ் மக்களை
மகிழ்விக்க வேண்டும்.
(1978-இல்
சென்னை தமிழ் இசைச் சங்கத்தில்
பேசிய வரவேற்புரை)
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக