கட்டுரை
ஆசிரியர் பற்றிய குறிப்பு:
திருவள்ளூர்
கூற்றத்தைச் சார்ந்த கீழச்சேரி எனும்
ஊரில் 12.11.1899-இல் பிறந்தவர். துணைப்
பதிவாளராகவும், பங்கீட்டு அதிகாரியாகவும், பல மாவட்டங்களில் ஆணையராகவும்
பணியாற்றியவர். சிறிது காலம் தருமை
ஆதீனக் கீழ்க்கலைக் கல்லூரியின் முதல்வராகத் திகழ்ந்தவர். மதுரை மீனாட்சி ஆலையின்
நலத்துறை அலுவலராகவும், பத்து ஆண்டுகளுக்கு மேல்
தமிழக அரசின் ஆட்சிமொழித் தனி
அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் ஆட்சி மொழியாதல்
வேண்டும் என்று தொடக்க காலம்
முதல் அயராது உழைத்ததால் இவருக்கு
"ஆட்சிமொழிக் காவலர்' என்ற சிறப்புப்
பட்டம் வழங்கப்பட்டது. நகராட்சிகள் தமிழில் நடைபெற "நகராட்சி'
என்ற நூலும், தமிழகத்தின் பல்வேறு
துறைகளும் தமிழில் நடைபெற "ஆட்சித் துறைத்
தமிழ்' என்ற அரிய நூலையும்
எழுதியுள்ளார்.
தமிழ்
நாட்டில் ஆட்சி தமிழில் நடப்பதற்கு
எதிர்ப்பு! பாடங்களைத் தமிழில் படிப்பதற்கு எதிர்ப்பு!
தமிழைத் தமிழாகப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் எதிர்ப்பு! இது விந்தையாகத்தானிருக்கிறது. இங்ஙனம் எதிர்ப்பவர்
தென்னகத்தின் பிற மொழியாளரல்லர்; நம்
நாட்டின் பிற மாநிலத்தவரல்லர்; பிற
நாட்டவருமல்லர். காலில் முள் தைத்தால்,
"அப்பாடா! அம்மாடி! ஐயையோ!' என்று, தமிழில்
கதறும் சில தமிழர்களேயாவர். தங்கள்
தாய்மொழி "தமிழ்'தான் என
ஒப்புக் கொள்ளுகிற இச் சிலரே, இவ்வாறு
எதிர்க்கிறார்கள் என்று அறியவரும் பிறமொழியாளர்
எவரும், "இப்படியுமா?' என்று வியப்படையாமல் இரார்.
எதிர்ப்பு
ஏன்? என்று இத்தமிழர்களைக் கேட்டால்,
தமிழில் ஆட்சி நடந்தால், புரிந்துகொள்ள
முடியாது என்று சொல்வார்கள். தமிழில்
பாடங்களைப் பயிற்றுவித்தால் வாழ்க்கைக்கும் அப் படிப்புப் பயன்படாது;
பிற மாநிலங்களில் வேலைக்குப் போகமுடியாது; அறிவியல் நூல்களைத் தமிழில் படிப்பது இயலாது;
தமிழில் சொற்கள் ஆக்குவது கடினம்
- என்றெல்லாம் கூறுவார்கள். தமிழில் பேசும்போதும் எழுதும்போதும்
எந்த மொழிச் சொல்லையும் கலந்து
பேசுவதும் எழுதுவதுந்தான் தமிழ் மொழியினை வளர்ச்சியாக்கும்.
அங்ஙனம் பேசுவதும் எழுதுவதுமே எளிதில் விளங்கும் என்பார்கள்.
இவர்கள்
கூறும் காரணங்களை மேற்போக்காகப் பார்க்கும்போது, உண்மைபோலத் தோன்றலாம். ஆனால், அவை முழுதும்
உண்மையாகா. எங்ஙனம் ஆகா என்பதை
ஆராய்ந்து அறிவோம்.
இடையில்
சில நூற்றாண்டுகள் ஆட்சி ஆங்கிலத்தில் நடந்து
வந்தது. அதற்கு முன்பு தமிழிலேயே
நடந்திருக்கிறது. பல்லவர், நாயக்கர், முகமதியர் ஆண்டபோதும் தமிழையே பெரும்பாலும் பயன்படுத்தினர்.
சில வடசொற்களும், அரபுச் சொற்களும் ஆட்சியில்
கலந்திருக்கலாம். பழைய சேர, சோழ,
பாண்டியர் காலத்தில் ஆட்சி முழுக்க முழுக்கத்
தமிழிலேயே நடந்தது என்பதில் எவருக்கும்
ஐயந் தோன்றாது. எனவே, இப்போது தமிழில்
ஆட்சியை நடத்துவதென்பது புதிதன்று. இடையில் இருநூறு முந்நூறு
ஆண்டுகள் விட்டுப்போன நமது மொழியை இன்று
மீளவும் ஆட்சிக்குப் பயன்படுத்த முற்படுகிறோம், அவ்வளவே.
இன்றைக்கு
விரிந்து பரந்து இருக்கும் ஆட்சிக்குரிய
சொற்களை நாம் நமது நூல்
வழக்கு, உலக வழக்கிலிருந்து தெரிந்தெடுத்துக்கொள்ள
வேண்டியிருக்கிறது. அவ்வகையில் கிடைக்காத சொற்களை நாம் ஆக்கிக்கொள்ள
வேண்டும். இவ்வாறு தெரிந்தெடுத்தும், ஆக்கியும்
பயன்படுத்தப்பெறும் சொற்கள், பழக்கக் குறைவினாலும், பழக்கமின்மையினாலும்,
புதியனவாயும் புரியாதனவாயும் இருக்கத்தான் செய்யும். அயல் மொழிச் சொற்கள்
ஆட்சியில் பயன்படுத்தப்பெற்ற போதிலும், அவை புதியனவாகவே இருந்திருக்கும்.
அதனால் புரியாதனவாகவும் தோன்றியிருக்கும். நாளா வட்டத்தில் அச்சொற்களில்
பலவற்றை ஆங்கிலமே தெரியாதவர்களும் அவற்றின் பொருளைக் குறிப்பினால் புரிந்து கொண்டிருப்பதை அறிவோம்.
அயல்
சொற்களை இவ்வாறு புரிந்து கொள்ளுவதற்குப்
பிடித்த அவ்வளவு காலமா, புதுத்
தமிழ்ச் சொற்களைப் புரிந்து கொள்வதற்கு வேண்டியிருக்கப் போகிறது? "ஆபீசு, கலெக்டர், இன்ஸ்பெக்டர்,
ஆர்டர், முனிசிபாலிடி' என்பன போன்ற சொற்களை
மனப்பாடஞ் செய்து புரிந்து கொண்டார்கள்,
"அலுவலகம், ஆட்சியர், ஆய்நர், ஆணை, நகராட்சி'
என்னும் சொற்களை நினைவில் இருத்திக்கொண்டு
புரிந்துகொள்வது கடினமான செயலாகுமா? மாறுதல்
காலத்தில் இருப்பவர்கள் இரண்டு மொழிச் சொற்களையும்
கலந்து புழங்கிக் கொண்டாலும், இனி வரும் மக்கள்,
நல்ல தமிழ்ச் சொற்களை இனிது
பயன்படுத்தட்டுமே; இனிமேற் பிறக்கப்போகும் நம்
கால் வழியினரையும் ஏன் ஆங்கிலச் சொற்களையே
பயன்படுத்தும்படி வற்புறுத்த வேண்டும்? மாறுதல் காலத்தில் வாழும்
நாம் பொருத்தமான நல்ல தமிழ்ச் சொற்களைத்
தெரிந்தெடுத்தும் ஆக்கியும் வைப்பது நமது கடமையாகக்கொள்ள
வேண்டாமா? அக்கடமையை ஆற்றாமல் போனால் நம்முடைய கால்வழியினர்
நம்மைப் பழிக்க மாட்டார்களா?
தமிழில்
சொற்கள் இல்லை, ஆக்கவும் இயலாது,
என்னுமிடங்களில், பிறமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்திக்கொண்டால்
பெரும் குறை சொல்வதற்கு இராது.
எளிதில் கிடைக்கக்கூடிய சொற்களைத் தேடியமைக்கச் சோம்பிக்கொண்டும், அமைத்த சொற்கள் "புதியன',
"புரியாதன' என்று குறைகூறிக்கொண்டும் அவற்றைப்
புறக்கணித்துவிட்டு, அயல் மொழிச் சொற்களையே
ஆண்டுகொண்டு போகவேண்டும் என்பது நமது மொழியின்
ஆற்றலுக்கும் பெருமைக்கும் இழுக்காகும் அன்றோ? பிறமொழியினர் நமது
போக்கைக்கண்டு எள்ளி நகையாட மாட்டார்களா?
மேலும்,
தமிழில் ஆட்சி நடத்துவதை நாமாக
விரும்பிச் செய்ய வேண்டியது ஒரு
புறமிருக்க, நம்நாடு உரிமை பெற்றபின்,
1950-இல் இயற்றப்பெற்ற அரசியல் அமைப்புச் சட்டம்
345-ஆம் பிரிவில் அச்சட்டம் செலாவணிக்கு வந்தபின் 15 ஆண்டுக்குள் அந்தந்த மாநில மொழியை
ஆட்சிமொழியாக்கிக் கொள்ளாவிட்டால் இந்திமொழி, தானாகவே வேறு ஒரு
சட்டமோ, ஆணையோ இன்றி அம்மாநிலத்தின்
ஆட்சிமொழியாகிவிடும் என்று சொல்லியிருக்கும்போது, எந்த மாநிலந்தான்
தனது பெருவாரியான மொழியைச் சட்டப்படி ஆட்சிமொழியாக்கிக் கொள்ளாமல் இருந்துவிடும்?
1956-இல்
நமது மாநிலத்தின் ஆட்சிமொழி தமிழாக இருக்க வேண்டும்
என்று அரசு சட்டம் செய்தது.
1958 முதல் அலுவலகங்கள் படிப்படியாகத் தமிழைப் பயன்படுத்தி வருகிறது.
சட்டம் செய்து 14 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ஆட்சி
முழுக்க முழுக்கத் தமிழாக மாறவில்லையே என்று
வருந்துகிறவர்கள் ஒருபுறம் இருக்க, தமிழாக மாறிவிடுகிறதே
என்று கவலைப்பட்டுக் கொண்டும், எதிர்ப்புக் கூறிக்கொண்டும் இருக்கும் சில தமிழரைத் தமிழர்
என்று கருதவும், அயல்மொழியாரும் அருவருப்பர்.
தமிழ்
பயிற்றுமொழி ஆவதால், கற்கும் பொருள்களைத்
தமிழர்கள் உள்ளத்துணர்வுடன் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்பொருள்கள் பற்றி மேற்கொண்டு தாமாகச்
சிந்திக்கவும், புதுக் கருத்துக்களைக் காணவும்,
இயல்பாக அப்பொருள்கள் குறித்து மூல நூல்கள் எழுதவும்,
அவற்றில் உலகம் போற்றும் நுண்ணறிவாளர்களாகவும்,
நோபல் பரிசு போன்ற உலகப்
பரிசுகளைப் பெறவும், அறிஞர்கள், ஆற்றல் வளர்ந்தவர்கள் ஆவார்கள்.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக