04/09/2011

மொழிப் பயிற்சி – 42 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் ஊர் திருவெறும்பூர் ஒரு சிவத்தலம். "பெல்' புகழ்மிகு ஆலை அருகில் அமைந்திருப்பதால் மேலும் பெருமை பெற்றது இவ்வூர். ஆயினும் இவ்வூரின் பெயரை திருவரம்பூர் என்று எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். வரம்பு என்றால் எல்லை, இஃதென்ன எல்லை அறுக்கப்பட்ட ஊரா? திரு எனும் மங்கலச் சொல் எதனைக் குறிக்கிறது?

இது திருவரம்பூர் அன்று; திருவெறும்பூர் (திரு+எறும்பு+ஊர்) எறும்பு ஒன்று சிவனை வழிபட்டு முத்தி பெற்ற தலம் இது. திரு என்னும் மங்கலச்சொல் தலப் பெயரில் இணையும் என்பதை அறிவீர்கள். ஆதலின் எறும்பூர், திருவெறும்பூர் ஆயிற்று.

தஞ்சை மாவட்டத்தில் மறவர்க்காடு என்ற ஊர் உள்ளது. இதனை இந்நாளில் மரவக்காடு என்று பிழையாகச் சொல்கிறார்கள். வீர மறவர்கள் வாழ்ந்த (ஊர்) வெறும் மரங்களின் காடாக மாறிவிட்டதா?

அபிராமபுரம் சென்னையில் உள்ளது என அறிவோம். அபிராமம் எனும் ஊர் இராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு அருகில் இருக்கிறது. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த பசும்பொன் எனும் சிற்றூர் அபிராமத்திற்கு மிக அருகில் இருக்கிறது. இங்கிருந்து அபிராமம் செல்ல வேண்டிய மடல்தனை கவனக் குறைவால், அபிராமபுரம் என்று எழுதிவிட்டால் மடல் சென்னைக்கே வந்துவிடும். அபிராமம் எனில் மிக அழகு என்று பொருள். (ராம - ராமன் - ரம்மியமாக இருப்பவன்) அபிராமத்தில் இறுதியில் "அம்' விகுதி உள்ளது. அபிராமபுரத்தில் புரம் எனும் ஒட்டுச் சொல் இணைந்துள்ளது.

ஒரு புதிய சொல்

வணிக நிலையங்களின் பெயர்களைத் தமிழில் எழுத வேண்டும் என்ற கட்டாயம் சென்னையில் சில திங்கள் முன்னர் நிகழ்த்தப்பட்டது. அதன் விளைவாகப் பல விளம்பரப் பலகைகளில் தமிழ் விளையாடுகிறது. மிட் நைட் மசாலா என்றொரு உணவு விடுதியின் தமிழ்ப் பெயர் நள்ளிரவுக் கதம்பம். நள்ளிரவு சரி, கதம்பம் எப்படி? பல மலர்களின் சேர்க்கையைக் கதம்பம் என்போம். பல்வகை உணவுகளையும் கதம்பம் என்றாக்கியுள்ளனர்.

என்றாலும் மசாலாவின் காரசாரம் இதில் இல்லை.

அழகாக ஒரு சொல். அறைகலன் என்று ஓரிடத்தில் பார்த்தோம். அணிகலன்கள் நமக்குத் தெரியும். உடம்பில் அணிந்து கொள்ளும் ஆபரணங்களே அவை. (ஆபரணம் - நல்ல தமிழில், அணிகலன்) அறைகலன் என்பது என்ன? அறையை - கூடத்தை அழகு செய்வது அறைகலன். அஃதாவது ஃபர்னிச்சர் என்ற ஆங்கிலச் சொல்லை அறைகலன் என்றாக்கியது நன்று.

பழமுதிர் சோலை - பழமுதிர்ச்சோலை?

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஓரிடம் பழமுதிர் சோலை. மதுரை அருகில் அழகர்கோவில் மலையில் இருக்கிறது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பழச்சாறு விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றுக்குப் பெயராகப் பழமுதிர் சோலை என்றும் பழமுதிர்ச்சோலை என்றும் பெயரிட்டுள்ளார்கள். உதிர்த்த (பறித்த) பழங்களைக் கொண்டு சாறு பிழியும் இடங்கள் பழமுதிர் சோலைகளா? பழம் + உதிர்+ சோலை என்றால் பழங்கள் உதிர்கின்ற (கொட்டுகின்ற) சோலை என்று பொருள். பழம் + முதிர்+ சோலை என்றால் பழங்கள் முற்றிய (முதிர்ந்த) சோலை என்று பொருள். முற்றினால்தானே பழம்?

இரு தொடர்களில் உள்ள வேறுபாடு எழுத்தில் ஒரு "ச்' மட்டுமே. பழமுதிர்ச்சோலை என்று வல்லொற்று மிக்கு வந்தால் முதிர்ந்த சோலை. பழமுதிர்சோலை என்று (ஒற்று மிகாமல்) இயல்பாக வந்தால் பழம் உதிரும் சோலை என்று பொருள். இரண்டும் பெரிதும் வேறுபாடு இல்லாத ஒரு பொருளையே சுட்டுகின்றன. ஆனால் பழச்சாறு நிலையங்களுக்கு இந்தப் பெயர் எப்படிப் பொருந்தும்? எல்லாம் ஓர் அழகு (ஈர்ப்புக்காக) என்று கொள்வோமே.

சொல்லருமை:

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது நூற்பா. தமிழ்ச் சொற்கள் பலவும் அவற்றின் பொருளை உணர்த்தும் அழகு வியக்க வைப்பது. தறி என்பது நெசவு செய்யப் பயன்படும் கருவி. இந்தத் தறியில் நீளமாக நெய்து வேண்டிய அளவில் வெட்டி எடுக்கப்பட்டதே வேட்டி என்பது. வேட்டியிலும் சிறிதாகத் துண்டு செய்யப்பட்டது துண்டு ஆகும். ஆக வேட்டி, துண்டு என்பவை காரணப்பெயர்களாய் அமைதல் காண்க. சில தமிழ்ச் சொற்கள் வடமொழியிலிருந்து வந்தவைபோல் தோற்றம் தருவதுண்டு. வேட்டி எனும் சொல்லைச் சிலர் வேஷ்டி என்றனர். இதைப் பார்த்து நுட்பம் தெரியாமல் வேஷ்டிதான் வேட்டியாயிற்று என்றுரைத்தல் பிழை.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக