கச்சை, கச்சு என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். "கச்சை வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டான்' என்று பேசுகிறோம். இடை (இடுப்பு) ஆடைதான் கச்சை. "நீலக்கச்சை பூவார் ஆடை' என்பது சங்க வரி. கச்சு பெண்கள் மார்பில் கட்டுவது. இக்காலத்து "பிரா' போன்றது. பழைய புராண வரலாற்றுப் படங்களில் இப்படியொரு ஆடையைக் காணலாகும். "கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சமில்லை அச்சமில்லை' என்று பாடினார் பாரதியார். "நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதினும் அச்சமில்லை அச்சமில்லை' என்று கச்சைக்கு நச்சை (நஞ்சு - விடம்) எதுகையாக்கிப் பாடினார் மகாகவி.
மீண்டும் ஒருமை பன்மை மயக்கம்
"வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன' என்று செய்தியாளர் தொலைக்காட்சியொன்றில் படித்தார். எண்ணிக்கை, நடைபெறவுள்ளது என்று ஒருமை முடிவுதான் சரியானது. பல தொகுதிகள் என்பதால் உள்ளன என்று பன்மையில் முடித்தாரா? அப்படிக் கருதினால் தவறு.
மற்றொரு செய்தி அறிக்கையில்,"அவற்றுக்கு இறுதி முடிவு ஏற்படமாட்டா' என்று செய்தியாளர் படித்தார். முடிவு என்னும் சொல்லுக்கு ஏற்ப, மாட்டாது என்றே முடித்திட வேண்டும். அவற்றுக்கு எனும் பன்மை கருதி மாட்டா என்று பன்மை முடிவு கொடுத்தார் என்று கருதுகிறோம்; இதுவும் பிழையே.
வினை முற்று (முடிக்கும் சொல்) பொருளுக்கு ஏற்ப அமைத்தல் வேண்டும்.
"திருத்தேர் இன்று நிலைக்கு வாராது (வராது)' - இஃது ஒருமை.
"பூனைகள் இங்கு வாரா (வர மாட்டா)' } பன்மை
"ஒவ்வொரு கருத்தும் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியதாகும்' (ஒருமை)
"கருத்துகள் எல்லாம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியன' (பன்மை)
"வழுக்கு மரம் முதலிய வீர விளையாட்டுகள் பயிற்சி முகாமில் நடைபெற்றது'
இங்கு விளையாட்டுகள் நடைபெற்றன என்று பன்மையில் முடித்தல் வேண்டும்.
"தமிழகத்தின் பல பாகங்களில் வெப்பநிலை கூடியே காணப்பட்டன'
வெப்பநிலை கூடியே காணப்பட்டது என்பதே சரி. பல பாகங்களில் என்பதை மனதில் நினைத்து இப்படி முடித்தார் போலும்.
இந்தக் குழப்பம் எல்லாம் சற்றே நினைத்துப் பார்க்க அகன்று போகும். சரியாக இருக்க வேண்டும் என்னும் அக்கறையை மனத்தில் கொள்ள வேண்டும். இது நம் பரிந்துரை. "ஆமாம் ஐயா, எல்லாம் என்று தொடங்கி போகும் என முடித்துள்ளீர்கள். சரியா?' சரியே. அது போகும் } அவை போகும் } ஒரே சொல்தான்.
சொற்றொடர் (வாக்கிய) வகைகள்
வாக்கிய அமைப்பில் கருத்தைப் பொறுத்து ஒருவகையாகவும், அமைப்பைப் பொறுத்து ஒருவகையாகவும் இரண்டு கூறுகளைக் காண்போம். முதலில் கருத்து வாக்கியம் என்பதுள் அடங்கும் பிரிவுகள் பற்றி அறிவோம்.
1. ஒரு செய்தியை உணர்த்துவது செய்தி வாக்கியம்.
(எ-டு) உழைத்தால் வாழ்வில் உயரலாம்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டால் ஆட்சி நிலைக்காது. ஈண்டு செய்தி - நியூஸ் - அன்று; ஒரு கருத்து எனக் கொள்க.
2. எதுபற்றியேனும் யாரிடமேனும் வினவுகின்ற வகையில் அமைவது வினா வாக்கியம்.
(எ-டு) மாநாட்டுக்கு நீ போய் வந்தாயா?
நாளை கல்லூரிக்கு அவர் வருவாரா?
நமது விருப்பத்தை - விழைவை - வெளிப்படுத்தும் தன்மை கொண்டது விழைவு வாக்கியம்.
(எ-டு) வாழிய பாரதத் திருநாடு
வாழிய செந்தமிழ்- (வாழ்த்து)
நாளை எமதில்லம் வருக - (வேண்டுகோள்)
உனது சான்றிதழ்களைக் கொண்டு வா - (கட்டளை)
கயவன் அழிக - (ஆற்றாமை } சபித்தல்)
4. நமது உணர்ச்சியைப் புலப்படுத்தும் வண்ணம் அமைவது உணர்ச்சி வாக்கியம்.
(எ-டு) நீயே போன பின் நான் மட்டும் இருந்தென்ன!
முத்தமிழ்த்துறையில் முறைபோகிய வித்தக வருக!
! இப்படி ஒரு குறியிட்டால், இதனை ஆச்சரியக்குறி என்பார்கள். ஆச்சர்யம் (வியப்பு). வியப்பு மட்டுமன்று; எத்தகைய உணர்ச்சியை வெளிப்படுத்தினாலும் ! இக்குறி இடப்படுதலின் இதை உணர்ச்சிக்குறி எனல் தக்கது.
(தமிழ் வளரும்)
நன்றி – தினமணி கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக