உண்மை, வாய்மை, மெய்ம்மை
இம்மூன்றும் ஒன்று போலத் தோன்றும் சொற்கள். ஆனால் வேறுபாடு உண்டு. இம் மூன்றாலும் மனிதன் தவறின்றி வாழ வேண்டும். இதனை "மன, மொழி, மெய்களால் தவறாது நடப்பேன்' என்று உறுதி கொள்ள வேண்டும் எனச் சான்றோர் உரைத்தனர். (மனோ, வாக்கு, காயம் என்பது வடமொழி) உள்ளத்தில் பொய்யின்றி ஒழுகுதல் உண்மை, உள்ளத்தில் உள்ள உண்மை மாறாமல் வாய் வழியாக- சொல்லாக- பேச்சாக வெளிப்படுவது வாய்மை. வாய்மை மொழி மாறாமல் நடப்பது மெய்ம்மை (மெய்- உடம்பு- செயற்படுதல்)
உள்ளத்தில் இருப்பது உண்மை.
வாய்வழி வருவது வாய்மை.
மெய்யால் (உடலால்) செயற்படுவது மெய்ம்மை.
நடைவேறுபாடுகள்:
ஈண்டு நடை எனும் சொல் எழுத்து நடை, பேச்சு நடை இரண்டையும் குறிக்கும். தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் எழுத்து நடையும், சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையின் பேச்சு நடையும் அறிஞர் மு.வ.வின் எழுத்து நடையும் இலக்கணம் பிறழாத இலக்கியமாகத் திகழ்தலின் இவற்றையும், இவை போல்வன பிறவற்றையும் இலக்கிய நடை எனலாம்.
இப்போது நம் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒளி பரப்பப்படும் பல புராண, இதிகாச மொழிபெயர்ப்புத் தொடர்களில் அமைந்த உரையாடல்கள் இலக்கிய நடையாக இருப்பதைத் கேட்கலாம். தம் அறிமுகம்? (நீங்கள் யார் என்று பொருள்?) ""தாம் வந்துள்ள நோக்கத்தை நாமறிவோம். ஆயினும் அது நிறைவேறக் கூடுமா என்பது ஐயமே'' இப்படித் தொடர்வதைக் கேட்டுப் பாருங்கள். (இம்மொழிபெயர்ப்பு உரையாடல் சிற்சில இடங்களில் பொருத்தம் இன்றி இருப்பதும் உண்டு)
மராத்தி எழுத்தாளர் காண்டேகரின் பற்பல புதினங்களைத் தமிழில் தந்துள்ள கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் எழுத்து நடை இயல்பாக இருக்கும். கல்கியின் வரலாற்றுப் புதினங்களின் நடையும், தீபம் நா.பார்த்தசாரதியின் நடையும் இயல்பான இலக்கிய நடைத் தமிழே.
இந்நாளில் உரை வீச்சுகளும், குறும்பா எனும் ஒன்றும் மற்றும் பல எழுத்துகளும் இலக்கியம் என்றே பேசப்பட்டாலும் இலக்கியம் என்பது இலக்கினைக் (குறிக்கோள்) கொண்டது. வடிவம், கருப்பொருள், வெளிப்பாடு இவற்றில் சிறந்திருப்பதேயாம். மொழிநடைத் தன்மையும் சிதைவின்றிச் சீர்மையுடன் இருத்தல் வேண்டும். வட்டார வழக்கு, சாதிய வழக்குகளை மொழியில் தவிர்த்தல் ஆக்கம் தருவதாகும்.
மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது பேச்சு நடைத் தமிழாம். பேச்சு நடையிலேயே பற்பல பிரிவுகள் உள்ளன. மண்ணின் மணம் கமழ எழுதியுள்ள கி.ராஜநாராயணன் (கரிசல்), தி.ஜானகிராமன் (தஞ்சை) போன்றவர்கள் பேச்சு நடைத் தமிழையே இலக்கியமாக வடித்தவர்கள். புதுமைப்பித்தன், விந்தன் போன்றோரின் தமிழும் இப்பிரிவில் அடங்கும்.
மூன்றாவது ஒன்றுண்டு; அது கொச்சை நடை. பச்சையாகச் சில பல கொச்சைச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுவதும் பேசுவதுமாகும். அவையல் கிளவி (சபையில் சொல்லக் கூடாத சொற்கள்) கொச்சை வழக்கில் மிகுந்திருக்கும். இதற்கான எடுத்துக்காட்டுகள் வேண்டா என விடுத்திடுவோம்.
இவ்வளவு எதற்காகவெனில் இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு, கொச்சை வழக்கு எனும் மூவகையாலும் தமிழில் பேசவும், எழுதவும் இயலும். ஆயினும் எழுத்தாளர், பேச்சாளர் கடமையாதெனில், கொச்சை வழக்கை விட்டு, பேச்சு வழக்கைக் குறைத்து, இலக்கிய வழக்கில் பிழையின்றி எழுதுவதும், பேசுவதும் ஆகும். இது பிற்காலத் தமிழ் மக்களுக்கு, இளைய தலைமுறைக்கு என்றும் வழிகாட்டக் கூடியதாக அமைய வேண்டும்.
அவர்கள் வந்துவிட்டார்கள்.
காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனைக் கீழ்காணும் பேச்சு வழக்குகளிலும் கேட்டிருப்பீர்கள்.
அவுங்க வந்துட்டாங்க. காத்துக் கொண்டிருக்காங்க
அவொ வந்திட்டாவொ காத்திட்டிருக்காவொ
அவா வந்திட்டா காத்திண்டிருக்கா
ஒரே பொருள் தரும் எத்தனை வகையான பேச்சுமுறைகள் நம்மிடம் உள்ளன பார்த்தீர்களா?
அவ்விடத்தே அல்லது அங்கே என்பதை அங்கிட்டு, அந்தாண்டே, அங்ஙனே என்பதுவும், அதற்காக என்பதை அதுக்கொசரம் என்பதும் என்னென்று சொல்வது என்பதை என்னன்னு சொல்லறது?, என்னென்டு சொல்லறது? என்பது போன்ற பேச்சு நடைகள் பல உண்டெனினும் இயன்றவரை திரிபு இல்லாத சொற்களையே கொள்ளுவோமாக.
திரிபு என்றால் எப்படி? ஐயம் தோன்றலாம்.
ஒரு சொல் - ஒரே ஒரு சொல் காட்டுகிறோம். புரிந்து கொள்ளுங்கள்.
இருக்கிறது என்னும் சொல்லை இருக்குது என்பார் மதுரை மக்கள். இருக்கு என்பார் தஞ்சைக்காரர். கீது என்பார் சென்னை மக்கள் (சிலர்). இப்படிச் சொல் திரிபு அடைவது மொழிக்குத் தீங்கு என அறிக.
புத்தகம் தமிழ்ச்சொல்லே; புஸ்தகத்தின்று பெற்றதன்று என்று ஓர் அன்பர் மடல் விடுத்துள்ளார். தமிழ்ச் சொல்லை, வடசொல் என்று எழுதுவதில் எமக்கென்ன மகிழ்ச்சி? வடசொற்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னிருந்தே தமிழில் கலந்து விட்டன என்பதைத் தொல்காப்பியம் கொண்டே நாம் அறியலாம். இதுபற்றி விரிவாக முன்னரே எழுதியிருக்கிறோம். அன்பர் காட்டியுள்ள பொத்தகம் (பெருங்கதை- 9 ஆம் நூற்றாண்டு), புத்தகக் கவளி (பெரியபுராணம்- 12 ஆம் நூற்றாண்டு) எல்லாம் பிற்கால நூல்கள்.
நம் தமிழில், நற்றமிழில் நூல், ஏடு, சுவடி எனப் பல சொல் இருக்கப் புத்தகம் தமிழே என்பதில் என்ன தனிப்பெருமை? சங்க இலக்கியங்களுள், திருக்குறளில் - வேறு பழைய இலக்கிய இலக்கணத்துள் புத்தகம் உண்டா?
புதன்கிழமை எனும் பெயரை அறிவன் கிழமை என்கிறோம். புதன் - புத்தி - புத் வடசொல் என்பதால். புஸ்தகம் - தமிழ் ஒலி பெற்றுப் புத்தகம் ஆயிற்று என்றால் அன்பர் ஒருவர் மறுக்கிறார். போந்து, போத்து, ஒகரம் உகரமாதல் என்கிறார். போ -பொ எனக் குறுகவும் ஓ - உ ஆகவும் விதி (நூற்பா) என்ன?
விடுங்கள் ஐயா, புத்தகம் எனும் சொல்லை நாம் வேண்டாம் என்று சொல்லவில்லையே. புத்தகம் என்பது பொதுப்படையானது. நூல் என்பது இலக்கணம் பற்றியது என்று வேறுபடுத்திச் சொல்வாரும் உளர்.
"புஸ்தகம் ஹஸ்த பூஷணம்' - இது முற்றிலும் வட சொற்களால் ஆன தொடர் (பழமொழி). புத்தகம் கைக்கு அணி என்பது பொருள்.
நூலோர் மரபு என்றும், நூலோர் முடிவு என்றும், நூலிற்கு அழகு என்றும்
"நுண்ணிய நூல் பல கற்பினும் தத்தம்
உண்மை அறிவே மிகும்' என்பதும் போன்ற பழமையான சான்றுகள் தமிழில் புத்தகம் எனும் சொல்லுக்கு இல்லை என்பதே நம் முடிவு.
(தமிழ் வளரும்)
நன்றி – தினமணி கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக