29/03/2011

தாலாட்டுப் பாடல்களில் தமிழர் பண்பாடு - கோவி.கருணாகரன்

தாலாட்டு உறங்கவைக்கும் பாட்டு என்றாலும் கிறங்கவைக்கும் பாட்டும் ஆகும். தாயின் இசையில் குழந்தை அடம்பிடிக்காமல் கண்ணயரும். இத்தகைய வல்லமை கொண்ட பாடல்களில் இலக்கண இலக்கிய அமைதி அறியாத ஒரு கிராமத்துத் தாயின் சிந்தனையில், தமிழரின் பண்பாடு எவ்வாறெல்லாம் உறைந்து கிடக்கின்றது என்பதனைப் பார்ப்போம். தமிழ் மண்ணுக்கென்று தனிக் கலாச்சாரம் உண்டு. உறவுமுறை கொண்டாடுவதில், பல்லுயிர் காத்தலில், விருந்தோம்பலில், மண்ணைப் போற்றலில், ஆடையில், வாழ்க்கையில் எனத் தமிழரின் பண்பாடு விரிந்துகொண்டே செல்லும் இவையெல்லாம் தாலாட்டுப் பாடல்கள்வழி வெளிப்படுவதனைக் கண்டறிவதே இவ்ஆய்வின் நோக்கமாகும்.

தாலாட்டு தமிழ்ப் பண்பாட்டின் முதற்பாட்டு. தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். இத்தகைய தாலாட்டில் தமிழர் பண்பாட்டினைக் காண்போம்.

இயற்கை வளம்:-

தமிழன் வாழ்ந்த இடம் நிலவளமும், நீர்வளமும் நிறைந்தது. இதனை ஒரு தாய், புதிதாய்ப் பிறந்த தன் குழந்தைக்குப் பாட்டாகச் சொல்லிப் பூரிக்கின்றாள்.

''மாடுகட்டிச் சூடடித்தால் என்னரசே மாளாது கதிர்களென்று

குதிரைகட்டிச் சூடடித்து என்னரசே கூளம் புரளுமென்று

ஆணைகட்டிச் சூடடித்து என்னரசே உங்க ஐயா அம்பாரி நெல்சேர்த்து''

என்றும்,

''கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெல்காணும்

விட்டுப் பொழிதூத்த மீண்டும் கலங்காணும்

அடித்துப் பொலிதூத்த அதுவும் கலங்காணும்''

என்றும் வரும் பாடல்கள் மூலம் நம் நாட்டின் செல்வச் செழிப்பினை உணரலாம்.

''வடகடலில் மாணிக்கம் வாரி உமிபரப்பி

தென்கடலில் மாணிக்கம் திரட்டி அடுப்பு வைத்து''

என்ற தாலாட்டுப்பாட்டு,

''வடமலை பிறந்த மணியும் பொன்னும்''

என்ற பட்டினப்பாலை அடியினை நினைவூட்டுகின்றது.

உறவுப் பிணைப்பு:-

தமிழர் ஒவ்வொருவரும் உறவுகளால் பிணிக்கப்பட்டவர்; அன்பினால் அடிமைப்பட்டவர். தமிழ்ப் பெண்கள் பிறந்த வீட்டின் பெருமை பேசுவதிலும் புகுந்த வீட்டுக் குணங்களைக் குத்தலாய்ச் சாடை பேசுவதிலும் வல்லவர்கள்.

''அத்தை அடிச்சாளோ அரளிப்பூச் செண்டாலே

மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூச் செண்டாலே

பாட்டி அடிச்சாளோ பால்வார்க்கும் சங்காலே''

என்ற தாலாட்டுப் பாடலில், கணவனின் சகோதரிக்குத் தீங்கு விளைவிக்கும் அரளிப்பூவையும், தன்பிறந்த சகோதரனைக் கூறும்போது மணங்கமழும் மல்லிகைப்பூவைக் கூறுவதன் மூலம் இப்பாடலில் தாயின் உள்மனதை நாம் அறியலாம். அத்தை என்று கூறிய அடுத்த அடியில் மாமா என்று கூறுவதில் இவர்கள் இருவருக்கும் ஒரு சங்கிலித் தொடர்பை ஏற்படுத்திக் காட்டுகிறாள் என்றே உணரலாம். தாலாட்டும் தாய் உடன்பிறந்த சகோதரனை, கணவனின் சகோதரியைப் பாடுகிறாள்; ஆனால், தன்னுடன் பிறந்த அக்காள், தங்கையைப் பாடுவதில்லை. இது ஆராய்தற்குரியது.

பல்லுயிர் ஓம்பல்:-

தமிழன் பல உயிர்கள் மீது அலாதி அன்பு வைத்துள்ளான். இதனை வள்ளுவர்,

''பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்''

என்பர். இதனைத் தாலாட்டு மூலம் ஒரு தாய்,

''காட்டில் கிணறுவெட்டி கல்லால் தொட்டிகட்டி

மாடுபசி தீர்த்துவைக்கும் மகராசா உங்க அம்மான்''

என்றும்,

''மாடப் புறாவேநீ மழைக்கெல்லாம் எங்கிருந்தாய்''

என்றும் பாடுகின்ற பாடல் வரிகள் பல்லுயிர் ஓம்புதலை உணர்த்தித் தமிழன் பண்பாட்டைப் பறைசாற்றும்.

விருந்தோம்பல்:-

வரும் விருந்தினர்களை வரவழைத்து உபசரிப்பதில் தமிழனுக்கு நிகர் வேறு எவரும் இலர் எனலாம். ஒரு நாள் என்ன, இரண்டு நாள் என்ன பல நாள் பலரோடு வந்தாலும் தலைநாள் போல் உபசரிக்கும் பண்பு பண்டைத் தமிழனுக்கும் உண்டு என்பார் ஒளவையார். வள்ளுவரும்,

''செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்''

என்பர். இங்கு ஒரு தாய் தன் தாலாட்டில் எப்படி உபசரிக்கிறாள் தெரியுமா?

''வாழையிலை நறுக்கி வந்தாரை கையமர்த்தி

தேடி விருந்தழைக்கும் திசையுள்ளோர் நாம''

என்பதன் வழி விருந்தோம்பல் பண்பாட்டினை உணரலாம்.

பிள்ளைவரம்:-

குழந்தையில்லாத் தாய்மார்கள் குழந்தை வேண்டித் தங்கள் குலதெய்வத்தை வணங்குவதுண்டு. இன்றும் இந்த வழக்காறு நாட்டுப்புறத்தில் உண்டு. கோயில்களுக்குச் சென்று துணியில் கல்லைக்கட்டித் தொங்கவிடுதல், வளையல், பொம்மைகள், விளக்கெரித்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்துவர்.

''எட்டாத கோயிலுக்கோ

ஏணிவைத்தோ தீபமிட்டேன்''

''பிள்ளை பிள்ளை என்னு தில்லை தெக்கே போகையிலே

தில்லைவனம் கண்துறந்து தில்லைச் சிவகாமி

புள்ளைவரம் தந்தாளோ''

என்ற பாடல்களால் அறியலாம். இந்த இரண்டாவது பாடலில் நந்தனை நெருப்பில் இறக்கிய தில்லையம்பதிக்குப் பிள்ளை வரம் கேட்டு ஒரு கிராமத்துத் தாய் போனதாக வரும் செய்தி வியப்பாக உள்ளது. பெரும்பாலும் கிராமத்துத் தாலாட்டுப் பாடல்கள் நந்தனைப் போன்ற ஒடுக்கப்பட்ட சாதியரின் குரல்களாகவே இருக்கும். இப்பாடல் தோன்றிய காலத்தில் ஒடுக்கப்பட்டோர் தில்லையில் நுழையும் பண்பாடு உருவாகிவிட்டதோ? இது மேலும் ஆராய்வதற்குரிய ஒரு தாலாட்டாகும்.

ஒரு பிள்ளை பெற்றெடுத்த தாய் அடுத்த பிள்ளைக்கு ஆசைப்பட்டு அடித்தளம் போடும் நிலையைப் பாருங்கள்.

''ஆரும் அடிக்கவில்லை ஐவிரலும் தீண்டவில்லை

தானா அழுகின்றான் தம்பிதுணை வேணுமின்னு''

இப்பாடலே அத்தாயின் அடுத்த பிள்ளை வேண்டும் என்ற அவாவினைக் காட்டுகிறது.

ஒருவனுக்கு ஒருத்தியா?

ஆண்கள் முறைப்படி ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டு முறையற்றுப் பல பெண்களை வைப்பாட்டியாக வைத்துள்ளனர். இவ்வழக்கு அக்காலத்தில் பரத்தைமையாக இருந்தது. தலைவன் பரத்தையிடம் சென்றதனை வெறுத்த தலைவி புதல்வனையும் அவ்வழியே செல்க என கடிந்துரைக்கிறாள்.

''தாயார் கண்ணிய நல்லணிப் புதல்வனை

மாயப் பரத்தை உள்ளிய வழியும்''

என்பது தொல்காப்பியம். இக்கருத்தினைத் தாலாட்டுப் பாடல் வெளிப்படையாக,

''வேசிக்குக் கொடுத்தபணம், உங்களப்பா

ஒரு வெள்ளிமடம் கட்டலாமே

தாசிக்குக் கொடுத்தபணம், உங்களப்பா

ஒரு தங்கமடம் கட்டலாமே''

என்று தலைவன் தன் குடும்பத்தை விடுத்துக் கூத்திக்குச் செலவுசெய்த மனக்குமுறலை இப்பாடல் காட்டுகிறது. இந்நிலைகளை ஆராயுங்கால், தமிழ்ப்பண்பாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது வெறும் புரட்டாகத் தெரிகிறது.

வறுமை:-

''ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே'' என்ற சங்கப் பாடலின் கருத்தை ஏற்க முடியாது. பெற்றுக் கொடுப்பதுடன் ஒரு தாயின் கடமை நின்றுவிடவில்லை. ஒரு குழந்தையைப் பெற்றவுடன்தான் பெரிதும் துன்பப்படுகிறாள். வறுமை அவளையும் அக்குழந்தையையும் வாட்டுகிறது.

''கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை''

என்பாள் ஒளவை. குடும்பத்தில் வறுமை இருக்கலாம் ஆனால் குழந்தைக்கு இருக்கக்கூடாது. பெற்றெடுத்த குழந்தைக்குப் பாலூட்ட நினைக்கிறாள் தாய். ஆனால் பால் ஊறவில்லை. உண்ண உனவு தாய்க்குக் கிடைத்தாலல்லவா அவளுக்கும் பாலூரும்? தன்னிடமில்லாத பாலை ஆடுமாடுகளிடம் பெறலாம் என்றால் அவையும் பட்டினியால் வாடிகின்றனவாம்!

''பசும்பால் கொடுத்துந்தான் பசிதீர்க்கப் பார்த்தாலும்

பருத்திவிதை இல்லையடா பசுபாலு தரலையடா

ஆட்டுப்பால் ஊட்டியுனை ஆதரிக்கப் பார்த்தாலும்

ஆடு கடிக்கும் மரம் அத்தனையும் மொட்டையடா!''

என்று வறுமை நிலையினைப் பாடுகிறாள்.

''பளிங்குக்கால் அரண்மனையும் பவளத்தூண் மாளிகையும்

பணக்காரன் வீடிருக்கப் பஞ்சனிடம் வந்ததுமேன்?''

என்று வினா தொடுத்தே வெறுத்துப் போகிறாள். இப்பாடலின் தாக்கம்தான்,

''ஏன்பிறந்தாய் மகனே ஏன்பிறந்தாயோ?''

என்ற திரைப்பாடல் எனக் கருதலாம்.

தாலாட்டுப் பாடல்கள் காட்டும் பண்பாடுகள் ஏராளம். தெய்வ நம்பிக்கை, நாட்டுவளம், வீட்டுவளம், உறவு, விருந்தோம்பல், பரத்தைமையின் கேடு, வறுமை எனப் பல தாலாட்டின் பாடுபொருள்களாக உள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் பெண்கள் கூற்றான பாடல்களே என்பது கருதத்தக்கது. ஆனால், பெண்கள் மட்டுமே பாடும் இப்பாடல்கள் பெண்குழந்தைகளைப் பாடுகின்ற பாடல்களாக இல்லை ஆண்குழந்தைகளைப் பாடும் பாடல்களாகவே உள்ளன. பெண்ணாகப் பிறந்து பல இன்னல்களை அனுபவித்த ஒரு தாய் தன்போல் பிறந்த பெண் குழந்தையைப் பாடாமல் விட்டிருப்பாளோ என்று கருத முடிகிறது. எல்லா உறவுகளையும் சுட்டும் தாலாட்டில் ஒரு தாய் தன் உடன்பிறந்த சகோதரிகளைப் பாடாத நிலையும் புரியாத புதிராக உள்ளது. இது மேலும் ஆராய்தற்குரியதாகும்.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக