விடுதிகளில் தங்கும்போது கீழ்த்தளத்தில் அறை ஒதுக்கப்படாமல் இருப்பது ஹில்டாவிற்கு எப்போதும் ஆறுதலாக இருந்திருக்கிறது. முதல் தளத்திலோ, இரண்டாம் தளத்திலோ அறை அமைந்துவிடுவது ஆறுதல். ஜன்னல் திரையை விலக்கிவிட்டு வீதிகளை, தூரத்துக் கட்டிடங்களை வேடிக்கை பார்க்கலாம். மனிதர்கள் சிறுத்து நடமாடுவதைப் பார்க்கலாம். விரையும் வாகனங்கள் தீப்பெட்டிகள் போல் செல்வது சுவாரஸ்யமளிக்கும். தூரத்திலிருக்கும் கட்டிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டத் தீப்பெட்டிகளைப் போல இருக்கும். ஜன்னலின் வழியே மேல் தளங்களிலிருந்து பார்ப்பது அவளுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகவே இருந்திருக்கிறது.
அந்த விடுதியின் இரண்டாம் தளத்து அறையின் இரு பக்கங்களிலும் ஜன்னல் இருப்பது ஆறுதல் தந்தது ஹில்டாவிற்கு. பெரும்பாலும் ஒரு திசையில் மட்டும் ஜன்னல்கள் இருக்கும். வலது பக்க ஜன்னலை மூடிய திரைச் சீலையின் அழுக்கு அதைப் பார்ப்பதைத் தவிர்க்கச் செய்தது. பூ போட்ட திரைச்சீலை. இது என்ன பூவாக இருக்கும். மல்லிகை, முல்லை, சம்பங்கி, குழல்மல்லி போன்ற பூக்களையெல்லாம்கூட இப்போது திரைச்சீலைகளில் பார்க்க முடிவதில்லை. ரோஜாகூட தென்படுவதில்லை. கலப்பினப் பூக்கள் போல ஏதாவது தென்படுகிறது. என்ன பெயர் என்று தெரியாத பூ. அந்தப் பூவைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், திரைச்சீலையின் பூக்களையும் அழுக்காக்கிவிட்டன. அதைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது என்பது போல் திரைச்சீலையை ஒதுக்கியிருந்தாள்.
இரவுகளில் மேல்தளத்திலிருந்து வேடிக்கை பார்ப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். மினுக்கும் விளக்குகள். ராட்சத உருவங்கள் சிறுத்து வெளிச்சமாய் நகர்ந்து கொண்டிருக்கும். ஒளிப்புள்ளிகள் விரைசலாய் நகர்ந்துபோவது போலிருக்கும். மின்விளக்கொளியில் கட்டிடங்கள் எலும்புக் கூடுகளாய் நின்றுகொண்டிருக்கும். இப்போதைய காலைப் பொழுதில் அதெல்லாமில்லை. வெளிச்சம் எங்குமாய் பரவிவிட்டது. அழுக்கு வெளுப்பைப் பரப்பிவிட்டது போல வெளிச்சம் பரவி நின்றது.
சின்ன ஊர்தான். வாகனங்கள் விரைசலாய் ஓடுவது தென்படவில்லை. இன்னும் நேரமாகலாம். ஊரின் பெயரில் கோட்டை என்றிருக்கிறது. ஆனால், கோட்டை என்று எதுவும் தென்படவில்லை. நேற்று இரவு உணவு கொண்டு வந்த பையனிடம் கேட்டுவிட்டாள். ``ஊரு பேருதா கோட்டை. பழைய கோட்டைன்னு எதுவும் தெரியலே. இருந்த கோட்டையெல்லா முனிசிபல் ஆபீஸ், கரண்ட் ஆபீஸ், கோர்ட்டுன்னு ஆயிப்போச்சு. இந்த ஆபீசுலெல்லா பாத்தீங்கன்னா கோட்டைன்னு தெரியறமாதிரி பெரிய பெரிய காம்பவுண்ட் சுவர்க தென்படும். அவ்வளவுதா.''
சில விடுதிகளில் தங்கும்போது அறைக்கு உணவு கொண்டு வருவது இல்லாமலிருக்கும். பணம் கொடுத்து வெளியில் இருந்துதான் வாங்கி வரவேண்டியிருக்கும். அப்போதெல்லாம் கையிலிருந்து காசு செலவழியும். நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் அத்தொகையைக் கேட்கமுடியாது. தனக்குக் கிடைக்கும் சொற்பப்பணம் இப்படி கழிந்துவிடுவது அவளுக்கு வருத்தமாகவே உணர வைத்திருக்கிறது.
இடது பக்க மூலையில் ஒரு கட்டிடத்தின் முன்பு கியூ ஒன்று தென்பட்டது. கொஞ்ச நேரம் முன்பு, அந்தக் கட்டிட முகப்பு எழுத்து பூச்சியாய் நெளிந்தது. என்னவாயிற்று. பார்வைக் குறைபாடா. கண்ணாடி மாட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லையா. தூரத்தில் இருப்பது தெரியாமலிருப்பதற்கு கிட்டப்பார்வை என்ற பெயரா? அல்லது தூரப் பார்வை என்ற பெயரா? எந்தப் பார்வையாக இருந்தாலும் காசு செலவாகும். கண் பரிசோதனைக்கென்று ஒரு தொகை. கண்ணாடி விலை குறைவாக இருந்தாலும் ஃபிரேம் விலை அதிகமாக இருக்கும். வாசந்தி போன தரம் கண்ணாடி மாற்றியபோது ஏகதேசம் அழுதுவிட்டாள். கண்ணாடி இருநூறு ரூபாய்தான். ஆனால் ஃபிரேம் இருநூறிலிருந்து ஐநூறு, அறுநூறு என்று வளர்ந்துகொண்டே போனது. பரிசோதனைகளுக்கென்று நூற்றைம்பது ரூபாய். எண்ணூறு ரூபாய்க்குக் குறைந்து கண்ணாடி போட முடியாது போலத் தென்பட்டது. ``ரோட்ல சாளேசுவரக் கண்ணாடி ஐம்பது அறுபதுன்னுகூட விக்கறாங்களே'' என்று வாசந்தி கேட்டுவிட்டாள். ``அது போட்டா கெழவி ஆயிர்லாம். தயார்ன்னா கௌம்புங்கம்மா...'' வேறு வழியில்லாமல் வாங்கினாள். கீதாவிற்கு வந்த சோதனை வேறு வகையானதாக இருந்தது. அவள் பயன்படுத்தி வந்த கண்ணாடி பயனற்றுப்போய்விட்டது போலிருந்தது. எழுத்துக்கள் தெளிவாகத் தெரியவில்லை. படிக்க இன்னும் கொஞ்சம் வெளிச்சம் தேவையாக இருந்தது. மின்விளக்கின் அருகில் சென்று படிக்க வேண்டியிருந்தது. டார்ச்லைட்டை எழுத்தின் மேல் அடித்தால் பிரகாசித்து படிக்க ஏதுவானது. அப்படியானால் கண்ணாடிக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. கண்ணிற்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. மாற்றவேண்டும் என்று ஐ பவுண்டேசர் கேர் சென்டருக்குச் சென்றபோது ஹில்டாவும் சென்றிருந்தாள். ஃபிரேம் அறுநூறு ரூபாய் ஆகிவிட்டது. சின்னக் கண்ணாடி. படிப்பிற்கு மட்டுமானது. மாற்றும்போது அதுவே போதுமென்று சொல்லிவிட்டாள். அறைக்கு வந்து பார்த்தால் படிக்க மட்டுமே பயன்படுவது தெரிந்தது. தொலைக்காட்சியில் ஓடும் எழுத்துக்களோ, தூரக் காட்சிகளோ மங்கலாகத் தெரிந்தன. மருத்துவரை குறை சொல்லி மீண்டும் சென்றாள் வாசந்தி. ``படிக்க மட்டும் போதுமுன்னு சொல்லிட்டு எங்களைக் குறை சொன்னா எப்பிடி? தூரத்தில இருக்கறதையும் பாக்கணும். பக்கமிருந்து படிக்கவும் செய்யணும்ன்னா கீழே ஒரு மாதிரி கண்ணாடியும், மேல ஒரு மாதிரியும்ன்னு இருக்கற மாதிரி போடணும்...'' தூரத்திலிருப்பவற்றையெல்லாம் பூச்சி பூச்சியாய் பார்த்துக்கொண்டிருப்பது இம்சையாகப் பட்டது அவளுக்கு. சரி என்று ஒப்புக்கொண்டாள். அதே ஃபிரேமை மாட்டிக்கொள்ளலாம் என்பதுதான் ஆறுதலாக இருந்தது அவளுக்கு. அந்த மாதத்தில் வீட்டிற்குப் பணம் அனுப்ப முடியாமற் போனது பற்றி வாசந்தி மாதம் முழுக்கப் புலம்பிக் கொண்டிருந்தா. ஹில்டாவிற்கும் ஐந்நூறு, அறுநூறு என்று திடீர் செலவு வந்துவிடுகிறபோது பயந்துவிடுவாள். வீட்டிற்குப் பணம் அனுப்பமுடியாமற் போய்விடுவதுண்டு.
இன்றைய நிகழ்ச்சி போல ஏதாவது கிடைத்தால் ஆறுதலாக இருக்கும். உள்ளூரில் பட்டிமன்றம் நிகழ்ச்சி ஒன்றிருந்தது. அது ஏகதேசம் பாட்டு மன்றம்தான். ஹில்டா பாடுபவளாக இருந்ததால் இடை இடையே திரைப்படப் பாடல்களைப் பாடி நேரத்தை ஓட்டிவிடுவாள். அன்றைய நிகழ்ச்சியில் இரு அணியினரும் உள்ளூர்க்காரர்கள் அவளைத் தவிர. நடுவர் நவரசத்திலகம் அப்பையா அவளை சிபாரிசு செய்திருந்தார். அவர் சிபாரிசு செய்யும் நான்காவது நிகழ்ச்சி இது. போன நிகழ்ச்சி ஒன்றரை மாதங்களுக்கு மேலாகிவிட்டது. மாதத்திற்கு இரண்டு நிகழ்ச்சி என்றால் ஆயிரம் மிஞ்சும். ஆறுதலாக இருக்கும் கடனை கொஞ்ச கொஞ்சமாய் அடைக்க உதவியாக இருக்கும். அப்பையாவிடம் கேட்கும்போது ஏகதேசம் குரல் கம்மிவிடும் அவளுக்கு. வேறு வழியில்லை கேட்டுவிடத்தான் வேண்டும். சென்ற நிகழ்ச்சி முக்கிய தொலைக்காட்சி வரிசை சந்திரன் ஒளிபரப்பியது அவளைச் சந்தோஷப்படுத்தியிருந்தது.
அப்பையாவிற்கு தொலைபேசி செய்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தாள். ``சந்தோஷம் சார்.''
``சந்தோஷம் உனக்கு மட்டுந்தானா.'' இந்த வார்த்தைகள் அவளைக் குப்புறத் தள்ளியது. ஏதாவது எதிர்பார்ப்பில் வந்த வார்த்தைகளா? அல்லது சாதாரணமாகத்தான் சொன்னாரா? நல்ல வாய்ப்பு. தொலைக்காட்சியில் ஒளிபரப்பு என்றாகிவிட்ட பின்பு, புதியவர்களும் நிகழ்ச்சிக்கு அழைக்கலாம். அதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் சில நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் நல்லது. வாய்ப்புகள் தேடிவரும். புதிது புதிதாய் ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பு அமைகிறது. புதியவர்கள் அறிமுகமாகிறார்கள். ``ஏதாவது புத்தகம் போட்டிருக்கீங்களா?'' என்று கேட்கிறவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ``ஏகப்பட்ட கவிதைகள் இருக்கும். புத்தகமாப் போடலாம். நேரம் இல்லை. கருவறை தவம்ன்னு பேர்கூட ரெடியா இருக்கு'' டிடிபி செய்து வைத்தால் யாரிடமாவது நீட்டி போடுங்கள் என்று கேட்கலாம். நூறு பக்கங்களுக்கும் ஆயிரம் ரூபாய்க்கு மேலாகிவிடும். அவளின் அடுத்த லட்சியம் கவிதைத் தொகுப்பு வெளிக்கொணர்வதாக இருந்தது. அப்பையாவிற்கு இருக்கும் செல்வாக்கிற்கு யாரிடமாவது சுலபமாகச் சிபாரிசு செய்துவிடுவார். கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டியிருக்கிறது. கவிதைத் தொகுப்பு அட்டைப்படத்திற்கு பூக்களைத்தான் போடவேண்டும் என்று தீர்மானித்திருந்தாள். திரைச்சீலையின் அழுக்குப் பூவாக இருக்கக்கூடாது. பிரகாசமான பூக்களாக இருக்கவேண்டும். கருவறை தவம் என்ற தலைப்பிற்கு பூக்கள் பொருத்தமாக இருக்குமா? அட்டையை வடிவமைப்பவரிடம் சொல்லி ஏற்றாற்போல் வடிவமைத்துக் கொள்ளலாம். பூக்கள் இருக்கட்டும். தாய், குழந்தை, வயிறு, கர்ப்பம் என்று தொனிக்கிற விதமாய் சிறுசிறு பிம்பங்களையும் பூக்களோடு அட்டையில் சேர்த்துவிடுவது அவளின் கற்பனையிலிருந்தது.
அறைக்கதவு தட்டப்பட்டது. யாராக இருக்கக்கூடும். உள்ளூர் அமைப்பாளர்களில் யாராவது? இரு அணிகளின் பேச்சாளர்களில் யாராவது? அப்பையாவாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் என்றால் கைபேசியில் தகவல் தந்திருப்பார். கதவைத் திறக்கலாமா வேண்டாமா என்றிருந்தது ஹில்டாவிற்கு.
நேற்றிரவு மெல்லிதாக கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்ததாக பிரமை அவளுக்கிருந்தது. அல்லது நிஜமாகவே யாராவது தட்டுகிறார்களா? கதவைத் திறக்கவில்லை. என்னவானாலும் கதவைத் திறப்பதில்லை என்று முடிவெடுத்தவள் போல கண்களை இறுக்கிக்கொண்டு படுக்கையில் கிடந்தாள். கதவைத் திறந்தால் விபரீதமாகிவிட்டால் என்ன செய்வது? கூக்குரலிட வேண்டியிருக்குமா? அமைப்பாளர்களென்றால் இணக்கமாகத்தான் பேச வேண்டியிருக்குமா? யாராவது எதை எதிர்பார்த்துக் கதவைத் தட்டுவார்கள்? தன் மீதான ஆக்கிரமிப்பு எந்த வகையாக இருக்கும். இதுவெல்லாம் தனது வளர்ச்சிக்கு உதவுமா? அல்லது உயர்த்திக் கொள்ளத்தான் வேண்டுமா? கதவு தட்டப்படும்போதோ, கைபேசி மணி அடிக்கும்போதோ உள்ளுக்குள் கிளம்பும் அலறலைத் தவிர்க்க முடியவில்லை அவளால்.
இப்போது கதவைத் திறக்கலாமா? அல்லது ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கலாமா? உள்ளூர் நிகழ்ச்சி அமைப்பாளர்களென்றால் தவறாக எடுத்துக்கொள்வர். கதவைத் திறந்தாள்.
விடுதிப்பையன் நின்றுகொண்டிருந்தான். ஐம்பது வயதைக் கடந்தவராக இருந்தான். இவரை பையன் என்று சொல்வதா? தன்னைப் போல இரு மடங்கு வயது அவருக்கு.
``அம்மா ஏதாச்சும் வேணுங்களா...?''
``ஒண்ணும் வேணாம். டிபன்தா சாப்பிட்டாச்சே...''
``காபி, டீ, கூல்டிரிங்க்ஸ் ஏதாவது வேணும்ன்னாலும் சொல்லுங்கம்மா...''``தேவைன்னா சொல்றேன். ஆமா எதிர்த்த கட்டடத்தில் நிறைய பேர் கியூவில நின்னுகிட்டிருந்தாங்க. திடீர்ன்னு போலீஸ் வந்து எல்லார்த்தையும் கலச்சாங்களே. அவங்க யாரு...'' ``எதுத்ததா.... மார்வாடி வூடம்மா. ரெண்டாவது சனிக்கிழமை காலையில வர்றவங்களுக்கெல்லா கால் படி அரிசின்னு தருவார். ரொம்ப காலமா அது நடந்திட்டிருக்கு. இன்னிக்கு என்னாச்சுன்னா அரிசிக்கு பதிலா சாதம் பொட்டலம் கொடுத்தாங்க. பலரும் எங்களுக்கு சாதம் பொட்டலம் வேண்டாம். பழையபடி அரிசிதா வேணும்ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. ஏதோ ஒண்ணு ரெண்டு பேர் தாறுமாறா பேச ஆரம்பிச்சுட்டாங்க போல. அதுதா போலீஸ் வந்து கலஞ்சு போகச் சொன்னாங்க. வெலவாசி ஏறிப்போச்சில்ல.''
உடம்பு பரபரத்துக் கொண்டிருப்பதாகப் பட்டது ஹில்டாவுக்கு. இதென்ன வகை பரபரப்பு? யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பரபரப்பு. நிகழ்ச்சிகளுக்கென்று வெவ்வேறு ஊர் விடுதிகளில் சென்று தங்குகிறபோதெல்லாம் இந்தப் பரபரப்பை அவள் உடம்பை ஆட்டிப் படைக்கும் யாரோ அவளை ஆக்கிரமிப்பு செய்யத் தயாராக இருப்பதுபோல தோன்றும். இதுவரை எதுவும் நடக்காததற்கு கர்த்தருக்கு நன்றி சொல்லிக் கொண்டாள். அல்லேலுயா என்று அலறிப் பார்க்கலாமா என்று தோன்றும். வாய்விட்டு அலறவேண்டும் என்ற கட்டாயத்தை கர்த்தர் உருவாக்க மாட்டார். எல்லோருக்கும் மேய்ப்பவனாகவும், ரட்சகனாகவும் இருந்துகொண்டு காப்பவன் தன்னையும் இந்தப் பரபரப்பிலிருந்து காப்பாற்றுவார் என்று எப்போதும் நம்புவாள். தன்னை ஆக்கிரமிப்பவர்களால் தனக்கு நன்மை விளையும் என்று நம்புவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது. சாத்தானே திரும்பிப்போ என்று ஓட விரட்டவேண்டும் போல இருந்திருக்கிறது.
உடம்பை படுக்கையில் சாய்க்கவேண்டும் என்று பட்டது. நின்றுகொண்டே வீதிகளைப் பார்த்தாயிற்று. வெயில் முகத்தில் அறைந்து சோர்வையும் உண்டுபண்ணிவிட்டது. இனி கொஞ்சம் நேரம் ஓய்வு கொடு என்று கால்கள் கெஞ்சுவது போலிருந்தது. உட்கார்ந்த நிலையில் உடம்பை சற்றே வளைக்கத் தொடங்கினாள். உடம்பு மெல்ல நிலைகுலைந்து படுக்கையில் சாய்வதாக இருந்தது. கதவு தட்டப்படக்கூடாது. நட்சத்திர விடுதிகளின் அறைகளில் அட்டைகள் போல் ``தொந்தரவு செய்யாதீர்'' என்ற அட்டை இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. கதவைச் சாத்திவிட்டு நன்கு தூங்கவேண்டும் என்று பட்டது. கண்கள் சுருங்க ஆரம்பித்து அவளின் உடம்பு குறுகத் தொடங்கியது.
கைகளையும், கால்களையும் அகல விரித்து உடம்பைச் சீராக்கிக் கொள்வது போல கிடந்தாள். படுக்கை கசங்கியிருந்தது. புடவை தாறுமாறாகக் கலைந்து தொடையைக் காட்டியபடி கலைந்து கிடந்தது.
திடுமென எழுந்து கதவைப் பார்த்தாள். தூங்கும்போது தாழிட்டபின் தூங்குனேனா என்று யோசித்துப் பார்த்தாள். அறைப்பையன் சென்ற பின்பு கதவருகில் சென்ற ஞாபகம் இல்லை. கதவு தாழிடப்படாமலேயே தூங்கியிருக்கிறேனா என்று யோசிக்க ஆரம்பித்தாள். என்னவாகியிருக்கும். குளியலறைக்குச் சென்று தொடையிடுக்கில் தண்ணீர் ஊற்றிக் கழுவினாள்.
நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் விடுதிகளில் தங்கும்போதுகூட யாரையாவது அழைத்துவரலாம் என நினைப்பாள். அறைத் தோழிகள் என்றால் அவர்களுக்கான செலவையும் ஏற்க வேண்டியிருக்கும். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று கவனிப்பது ஒரு வேலையாகிவிடும். அதனால் தவிர்த்தே வந்திருக்கிறாள். அவள் தனியே விடுதியில் தங்குவது பற்றி வீட்டிற்குத் தெரிந்தால் களேபரமாகிவிடும். நிகழ்ச்சிக் குழுவினருடனே தங்குவதாகச் சொல்லியிருக்கிறாள். ஒவ்வொரு விடுதியிலும் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டிருக்கிறது. தன்மீது ஆக்கிரமிப்புச் செய்யப்போவது யாராக இருக்கும் என்ற கற்பனை எழுந்து உடம்பைக் குலுங்கச் செய்திருக்கிறது. இந்தப் பரபரப்பே வேண்டாம், நிகழ்ச்சிகளே வேண்டாம் என்ற தீர்மானத்திற்கும் அவள் பலதரம் வந்திருக்கிறாள். ஆனால், போன தடவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோது அவளுக்கு வந்த தொலைபேசிகளும், எதிர்ப்பட்டவர்களின் உபசரிப்பும் அவளை மிதக்கச் செய்திருக்கிறது.
அறையின் சுவர்களில் ஏதாவது கர்த்தர் படம் இருக்கிறதா என்று அவளின் கண்கள் அலைந்தன. எதுவுமில்லை. புலியொன்று பச்சைப் புல்வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இங்கிருந்து கிளம்புகிற வரைக்குமாவது இந்தப் படம் கண்ணில் படக்கூடாது. அதை அகற்ற அனுமதி எதுவும் கிடைக்காது. அதன் பார்வையிலிருந்து தப்பித்துவிட முடியாது. படமில்லாத எதிர் சுவற்றைப் பார்க்க ஆரம்பித்தாள்.
குளியலறைக்குச் சென்றவள் உடைகளைக் களைந்தெறிந்தாள். கதவின் மேல்புறத்தில் அவை சரியாக விழுந்தன. குழாயைத் திருப்பியபோது தண்ணீர் கொட்டி வாளி நிரம்பியது. குளிர்நீரை கோப்பையில் அள்ளி தலையில் ஊற்றினாள். தலையிலிருந்து குளிர் உடம்பு முழுக்க நிறைப்பதாக இருந்தது. எப்போதும் வெந்நீரில் குளிப்பவள். இடதுபுறம் வெந்நீர் குழாய் இருப்பதை எதேச்சையாகப் பார்ப்பது போல் அப்போது பார்த்தாள் ஹில்டா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக