வாழையடி, வாழையாக வாழ்ந்து வளர்ந்து வருகின்ற நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் வாழ்வுக்கூறுகளையும் படம் பிடித்துக் காட்டும் இயல் நாட்டுப்புறவியல். ஏட்டிலே வராத, எழுத்திலே காணமுடியாத ஆனால் உள்ளத்திலே ஊறிக்கிடக்கும் எத்தனையோ எண்ணங்களையும், நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், தத்துவக் கருத்துகளையும் படம் பிடித்துக் காட்டுவது நாட்டுப்புறவியலே, மக்களிடையே புதைந்து கிடக்கும் பல தத்துவச்சாரங்களை நாட்டுப்புற இயலில் காணலாம்.
நிலையாமைத் தத்துவம்:-
உடம்பு ஒரு குச்சு வீடாகும். ஆசைகள் கதவுகளாகும். வாழ நினைப்பவர்கள் அந்த ஆசைகளை அடக்குதல் வேண்டும். இவ்வுடம்பு ஆகிய வீடு எவ்வளவு கனத்திருந்தாலும் காலதேவன் வந்து விட்டால் கணப்பொழுதும் நில்லாது மறைந்துவிடும். இவ்வாறு நிலையாமைத் தத்துவம்,
''குச்சு வீடு கட்டலாம்
குறுங்கதவு சாத்தலாம்
வாழவேண்டுமென்று சொன்னால்
வாய் மதங்கள் சாத்தலாம்
காலனுட ஓலை வந்தால்
கனத்தவீடும் தாங்குமோ?''
இப்பாடலில் நயம்படக் கூறப்படுகிறது.
சித்தர் பாடல்கள்:-
சித்தர் பாடல்களும் நாட்டுப்புற இலக்கியமெனச் சான்றோர்களால் ஏற்கப்பட்டுள்ளது.
''நந்தவனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி''
நந்தவனம் என்பது உடல். உலக உயிர்கள் இறைவனை வேண்டி பெறுவதற்கரிய இவ்வுடலைப் பெறுகின்றன. இந்த யாக்கை நிலையற்றது என உணர்ந்து வாழ்கின்ற சில நாட்களையும் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். பூத உடல் அழிந்த பின்பும் புகழ் உடம்பு நிலைத்து நிற்கும்படியாக அண்ணல் காந்தியடிகளைப் போல செயற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும். இதனையே திருவள்ளுவர்,
''வசையொழிய வாழ்வாரே வாழ்வார்; இசையொழிய
வாழ்வாரே வாழாதவர்''
என்ற குறளின் மூலம் விளக்குகிறார். இக்கருத்தையே மற்றொரு சித்தர் பாடலும் கூறுகிறது.
''காயமே இது பொய்யடா
காற்றடைத்த பையடா
மாயனா நாம் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடா மூங்கில்
உப்பு மண்ணும் ஓட்டை மூங்கில்
ஒட்டி வைத்த கூடடா
உளுத்த நரம்பும் வெளுத்த தோளும்
இழுத்துக் கட்டின கூடடா''
இச்சதைப் பிண்டத்தை நச்சிப்பெறும் சிற்றின்பத்தை நாடி மனித வாழ்வை வீணாக்க வேண்டாம் என்பது இப்பாடலில் காணப்படும் தத்துவமாகும்.
பட்டினத்தார் பாடல்:-
சிற்றின்பக் கேடு குறித்து பட்டினத்தார்,
''சீயும் குருதிச் செழுநீர் வழும்புஞ் செறிந்தெழுந்து
பாயும் புடவையொன் றில்லாதபோது பகலிரவாய்
ஈயுமெறும்பும் புகுகின்ற யோனிக் கிரவுபகன்
மாயுமனிதரை மாயாமல் வைக்க மருந்தில்லையே''
என்கிறார். ''சீயும், இரத்தமாகக் கொழுநீர் சுரக்கும் நிணமும் மலிந்து வெளிவந்து பாய்கின்ற, புடவையொன்று இல்லாத காலத்தில் பகலிலும் இரவிலுமாக ஈயும் எறும்பும் நுழைகின்ற பெண் குறிக்காக, இரவும் பகலும் கெடும் மனிதர்களைக் கெடாமல் வைத்திருக்க ஒரு மருந்தில்லையே!'' என்பது இப்பாடலின் பொருள். இது ஆழ்ந்து சிந்தித்தற்குரியதாகும்.
தாலாட்டு:-
நாட்டுப்புறத் தாலாட்டுப் பாடல்களிலும் தத்துவங்கள் மிளிர்கின்றன.
''ஆராரோ ஆரிவரோ ஆரிராரோ''
என்று தொடங்கி தாய் தாலாட்டுகிறாள். அதில் உள்ள தத்துவம்.
1. ஆர் + ஆரோ ....... இவ்வுலகில் நீண்டநாள் இருப்பது யார் யாரோ? (உன் அப்பா யாரோ? நான் யாரோ?) எப்படியோ நாங்கள் ஒன்று சேர்ந்தோம். நீ பிறந்தாய் என்றும் பொருள் கொள்ளலாம்.
2. ஆரீ+ இவரோ ....... வந்து பிறந்த நீ யாரோ?
3. ஆர்+ இராரோ ....... இவ்வுலகிலேயே இன்று யார் இருப்பார்களோ? இருக்க மாட்டார்களோ? யார் அறிவர்?
என்ற தத்துவக் கருத்துக்கள் தாலாட்டுப் பாடல்களில் காணலாம்.
மனிதப் பிறவி துணையைத் தேடுவது இயற்கை. உடனடித் தேவைகள் நிறைவேறிய பின்னாலே, தனிமனிதம் பாதுகாப்புத் தேடும். மக்களுக்கு வலிய உதவுதலும், மதச் சார்பாய் ஒன்றுபடுதலும், பிற கழகங்கள் அமைத்தலும் இவற்றின்பாற்படும் என்ற தத்துவக் கருத்தை,
''அழகர் திருப்பணிக்கு
ஆயிரங்கால் மண்டபமும்
பெருமாள் திருப்பணிக்கு
பேர்விளங்க வந்தவனோ''
தாய் தன் தாலாட்டின் மூலம் வெளிப்படுத்துகிறாள். இத்தகைய தாலாட்டுப் பாடல்கள் தூண்டல் உணர்வை ஏற்படுத்துகின்றன. அதற்கேற்ப வாழ்வு தரமும் அமைகிறது.
பழமொழிகள்:-
யாக்கை நிலையற்றது. இவ்வுடம்பு பொய்யுடம்பு, புகழுடம்பே, மெய்யுடம்பு, ஆசை அழிவுக்கு அடையாளம். அந்த ஆசையை ஒழிக்கவேண்டும். பற்றற்ற நிலையில் தான் வீடுபேறு உண்டாகும் வாழ்வு நிலையற்றது. சாவு தவிர்க்க முடியாதது. பொய், பாவம் செய்தவன் அதன் விளைவை அனுபவித்தே தீரவேண்டும். பொய்யாமையே நல்லறம். இது போன்ற தத்துவக் கருத்துக்கள் மக்களிடையே போற்றப்பட்டு வந்துள்ளன. இதனை,
1. ஆசை அண்டினால் அழுகையும் அண்டும்.
2. அற்றது பற்றெனில் உற்றது வீடு.
3. எட்டாப் பழத்துக்குக் கொட்டாவி விடாதே
4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
5. தினை விதைப்பவன் தினை அறுப்பான்
இப்பழமொழிகள் மூலம் அறியலாம்.
விடுகதைகள்:-
மக்கள் சமுதாயம் என்னும் விளைநிலத்திலிருந்து அறுவடையான கதிர்களே விடுகதையாகும்.
''தன்னைத்தான் பலி கொடுப்பான்
மற்றவர்க்கு ஒளி கொடுப்பான்'' (மெழுகுவர்த்தி)
மனித சமுதாயம் எப்படி வாழவேண்டும் என்பதை இவ்விடுகதை உணர்த்துகிறது. தன்னையே அழித்துக் கொண்டு உலகிற்கு ஒளி கொடுப்பது மெழுகுவர்த்தி. தியாகமும் தன்னலமற்ற சேவையுமே உயர்ந்த நிலையில் வைத்து எண்ணத்தக்க பெருமையை மனிதனுக்களிக்கும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. மேலும்,
1. போய் வருபவை இரண்டு
போனால் வராதவை இரண்டு
எப்போதும் இருப்பவை இரண்டு.
(இரவு, பகல் - நாள், கிழமை - சூரியன், சந்திரன்)
2. காலையில் நான்கு காலோடே
பகலில் இரண்டு காலோடே
மாலையில் மூன்று காலோடே
முடிவில் எட்டுக் காலோடே (உடல்)
இவ்விடுகதைகள் நிலையாமைத் தத்துவத்தை உணர்த்துகின்றன)
நம்பிக்கைகள்:-
முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைப் பயனாக இப்பிறப்பில் இன்ப, துன்பங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இறந்தவரின் உடலின்று பிரியும் உயிர் மறுமையில் சந்தித்துக் கொள்ளும் என்றும், உயிர் சிவலோகம், வைகுண்டம், கைலாசம், எமலோகம் செல்கின்றது என்றும் மக்கள் நம்புகின்றனர். மேலும் இவ்வினைகள் தலைமுறையையும் தாண்டி வரும் என்றும் நம்பிக்கை.
''தாமரையும் ஊரணியும் - என்னைப்பெத்த ஆத்தா
தளிச்ச கெடித்தலமும் - நீங்க
தருமங்க செய்திருந்தா - நான் பெத்த மகனுக்கு ஒரு
தத்து வந்து நீங்கலியே''
இப்பாடல் மூலம் அறியமுடிகிறது. இங்கு பாட்டி செய்த நல்வினை பேரன் உயிரைக் காக்கக்கூடும் என்ற நம்பிக்கையைக் காண்கிறோம். எனவே, நல்வினை செய்தல் தனக்கு மட்டுமின்றித் தன் பரம்பரையினர்க்கும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை நம் நாட்டு மக்களின் குடும்ப அமைப்பையும், குடிப்பற்றையும் காட்டுகிறது.
கதைப்பாடல்:-
வணிகர்கள் நேர்மையாக வணிகம் செய்ய வேண்டும் என்பதை ''அல்லி அரசாணி மாலை'' என்னும் கதைப்பாடல் வலியுறுத்துகிறது. இதனை,
''கூலி குறையார்கள் குறை மரக்கால் அளக்கார்கள்
அங்காடிக்கடை அதிர விலை கூறார்கள்''
இப்பாடல் மூலம் அறியலாம்.
பிறப்பும் - இறப்பும்:-
எல்லாரும் ஒரு நாள் இறந்துதான் தீரவேண்டும். இளமையும், அழகும், யாக்கையும் நிலையற்றது. குழந்தையாகப் பிறந்து பின் வளர்ந்து முதுமை அடைந்து பாடை மீது ஏறும் மனித வாழ்வை நாட்டுப்புறப்பாடல்,
''தத்தக்கா புத்தக்கா நாலுகாலு
தானே நடக்கையிலே ரெண்டுகாலு
உச்சி வெளுக்கையிலே மூணுகாலு
ஊருக்குப் போகையிலே எட்டுகாலு''
நயமாக எடுத்துக்காட்டுகிறது.
காவடிப்பாடல்:-
பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடக்க வேண்டி இறையருளை நாடி நின்றனர் சான்றோர். எண்சாண் உடம்பினைக் கொண்ட மானிடராய்ப் பிறப்பெடுத்து, பாசச்சூழலில் சிக்கித் துயருறும் உயிர்கள் பிறப்பு, இறப்பில்லாப் பேரின்ப நிலையை இறைவனிடத்தே வேண்டுகின்றனர். இது ''வீடுபேறு'' எனப்படும்.
''எட்டடிக் குச்சுக்குள்ளே - முருகா
எப்படி நானிருப்பேன் - ஒரு
மச்சுவீடு கட்டித்தாரும் - திருத்தணி
மலையின் வேலவனே!''
இப்பாடலில் குச்சுவீடு என்பது மானிட உடலையும், மச்சுவீடு என்பது பேரின்ப நிலையையும் குறிக்கும்.
நாட்டுப்புறவியல் இன்று தனியொரு துறையாக - அறிவியல் துறையாக வளர்ந்து வருகிறது. இத்துறையில் தத்துவமும் ஒரு இணைப்பு, ஆய்வாக மலர்ந்துள்ளது. ''தமிழ்மக்களின் எண்ணம், உணர்ச்சி, வாழ்க்கை நெறிமுறைகள்'' முதலிய அனைத்துக் கூறுகளையும் ''உள்ளங்கை நெல்லிக்கனி போல்'' தத்துவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அத்தத்துவங்கள் சிந்தனைக்கு விருந்தாகின்றன. செயலுக்கு மருந்தாகின்றன.
நன்றி: வேர்களைத் தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக