28/03/2011

அய்யனார் கோவில்களில் குதிரை எடுப்பு - ம.இளையராஜா

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் வட்டம் செயங்கொண்டசோழபுரம் - தா. பழூர் சாலையின் மத்தியில் அமைந்திருப்பது அணைக்குடம் அய்யனார் கோவிலாகும். மேலும் உடையார் பாளையத்திற்கு கிழக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இடையார் வேம்பு அய்யனாரும் இக்கட்டுரையில் கள ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது.

கோவில் அமைவிடம்:-

அணைக்குடம் அய்யனார் கோவில் ஊருக்கு வடக்கே ஒரு குளத்தின் அருகில் அமைந்துள்ளது. அதனைச் சுற்றி கொன்றை மரங்கள், வேம்பு மரங்கள் என பல வகையான மரங்களும் நிறைந்து உள்ளன. இதற்கு நடுவில்தான் அய்யனார் கோவில் உள்ளது.

கட்டிட அமைப்பு:-

அணைக்குடம் அய்யனார் கோவிலின் முன்பு குதிரையின் சிலை (வெள்ளை நிறம்) வைக்கப்பட்டுள்ளது. அதை ஒரு வீரன் பிடித்துக் கொண்டு நிற்கிறான். அருகில் நாயின் சிலை ஒன்றும் உள்ளது. இதற்கு நேராய் அய்யனார் கோவிலின் மூலக்கரகம் உள்ளது. சிறிய கட்டிடம் அதன் கூரையில் அய்யனார் சாட்டை (இக்காலத்தில் குதிரைவண்டி வைத்திருப்போரும், மாட்டு வண்டி வைத்திருப்போரும் பயன்படுத்துகிறார்கள்) யுடன் அமர்ந்து இரு ஊர்களிலும் காவல் தெய்வம் ஆக இருக்கிறார். இரு ஊர்களிலும் கருப்புகளுக்கான பூசையாக ஆடு, கோழி பலியிடப்படுகிறது. அப்பொழுது அய்யனாரின் கண்ணை கட்டி விடுகிறார்கள். கறுப்புகளுக்கு கறி (மாமிசம்) படையல் படைக்கப்படுகிறது.

அணைக்குடம் அய்யனார் திருமணம் ஆகாதவராக உள்ளார். தனியாக, கையில் சாட்டையுடன் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் இடையார் அய்யனார் மணமானவராக உள்ளார். அதுவும் இரண்டு மனைவிகள், பெயர் பூரணகலை, பூஷ்பகலை எனும் இருவர். இங்கும் கையில் சாட்டையுடன் தான் அய்யனார் உள்ளார்.

நேர்த்திக்கடன்:-

நினைத்த காரியங்கள் நடந்து விட்டால் அதற்காக அய்யனாருக்கு பூசையும், அய்யனாருக்கு விருப்பமான சிலைகளும் வைக்கப்படுகின்றன. அவ்வகையில் அணைக்குடம் அய்யனார் கோவிலில் நாற்பதுக்கும் மேற்பட்ட குதிரைகள், 20க்கும் மேற்பட்ட யானைகள் என சிலைகளாய் உள்ளன. இடையார் அய்யனார் கோவிலில் முப்பத்தாறு குதிரைகளும் இருபத்தொரு யானைகளும் நேர்த்திக் கடனுக்காக சிலைகளாய் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பானைகளும் செய்து வைத்துள்ளனர்.

திருவிழாக்கள்:-

திருவிழாக்கள் ''பங்குனி'' உத்திரத்தன்று நடைபெறுகிறது. கறுப்புகளுக்கு அப்பொழுது மாமிச உணவு படைக்கப்பட்டாலும், அய்யனாருக்கு பொங்கலே படைக்கப்படுகிறது. திருவிழாவின்போது குதிரை வாகனத்தில் அய்யனார் அமர்ந்து வலம் வருவார். ஊரை பாதுகாப்பதில் அக்கறை உள்ளவர் என்கிறார்கள். கோவில் பூசாரிகளான கோவிந்தராசு (இடையார்), கலியபெருமாள் (அணைக்குடம்) இருவரும் வன்னிய இனத்தைச் சார்ந்தவர்கள். இடையார் கிராமத்தில் பூசாரியாக (அய்யனாருக்கு) இருந்தவர் குயவர் இனத்தைச் சார்ந்தவர். இந்நிலையில் அய்யனார் யார் என விடை காண வேண்டும். இடையார் அய்யனார் கோவிலில் முதலில் குதிரை (வெள்ளை நிறம்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது (சிலையாக). குதிரையின் கீழ் ஆடிக்கொண்டிருக்கும் ஒருவரையும் காண முடிகிறது. இக்கோவில் ஓடுகளால் கூரை வேயப்பட்டுள்ளது. கோவிலின் முன் ''மின்னடையான்'' என்னும் கல் தரையில் பதிக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே அய்யனார் வீற்றிருக்கிறார்.

கருப்புகள்:-

அய்யனாரின் நண்பர்களாக, பாதுகாவலர்களாக உள்ளவர்களே கருப்புகள் என்று அழைக்கப்படுகின்றனர். அணைக்குடம் அய்யனார் கோவிலில் தெற்கு பகுதியில் (குதிரைக்கு 15 அடி சதுரத்தில்) சப்த கன்னியர்கள் எனும் எழுவர் இருக்கின்றனர் (நின்று கொண்டு). அதற்கு முன்பும் மின்னடையான் கல் உள்ளது. ''வீரன்'' என்னும் சிலை அதற்கு அருகில் உள்ளது. அய்யனார் இருக்கும் இடத்திலிருந்து உட்புறத்தில் நொண்டி வீரன் இருக்கிறார். கையில் அரிவாள் வைத்திருக்கிறார். மேலும் இவர் அய்யனாருக்கு பாதுகாவலராக உள்ளவர். இவர் கோபக்காரர். கோவிலுக்கு சுத்தமாக வர வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏழுபெண்கள் அய்யனாருக்கு துணை என்று கள ஆய்வில் வழக்காறுகளை பற்றி விளக்குகிறார்கள்.

இடையார் அய்யனார் கோவிலில் அய்யனார் இருக்குமிடத்திலிருந்து கிழக்கே 20 அடி சதுரத்தில் பெரம்பனார் கையில் அரிவாளுடன் உள்ளார். இவர் அய்யனாரின் பாதுகாவலர். இவருக்கு அருகில் உள்ள இரு பெண்களை ''பாப்பாத்தியாயி, தங்கமாயி'' என்று அழைக்கின்றனர். இவர்கள் அய்யனாரின் பக்தைகள் என கள ஆய்வில் தெரிகிறது. அய்யனாருக்கு மேற்குபுறமாக ''ஆகாசக் கருப்பு'' எனும் கருப்பு உள்ளது. இக்கருப்பிற்கு கருப்பு ஆடையே உடுத்தப்படுகிறது. கையில் அரிவாளுடன் உள்ளார். அய்யனாரின் எல்லைக் காவலாளி என்று கள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அய்யனார் யார்?

அய்யனார் வழிபாடு பழங்காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. கானாத்திறம் உரைத்த காதையிலே இளங்கோவடிகள் இவ் அய்யனாரை தெரியப்படுத்துவார். அப்பொழுது,

''அமரர் தரு கோட்டம் வெள்யானைக் கோட்டம்

புகர் வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல் வாயில்

உச்சிக் கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்

வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்

நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்குந்

தேவிர் காளெம் முறுநோய் தீர்மென்று மேவியோர்''

இதனை விளக்குமிடத்து குறிப்பாக ''புறம்பணையான் வாழ்கோட்டம்'' என்பது சாதவாகனம் மேவிய கோயில். அஃதாவது அய்யனார் என்பர் நா.மு. வேங்கடசாமி நாட்டார். மேலும் அய்யனார் யார் என்பதை விளக்கும் பேராசிரியர் க. நெடுஞ்செழியன்.

''கி.மு. 6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புரட்சி நடந்தது. வேத மரபு ஒரு புறமும் வேத எதிர்ப்பு அணி ஒரு புறமுமாய் நின்று அறிவுப் போர் புரிந்த காலமும் அதுவாகும். வேத வைதீக எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகள் மக்கள் நடுவே செல்வாக்குப் பெற்றன. இக்கோட்பாடுகளை வளர்த்துப் பரப்பிய அறிஞர்கள் ஏறத்தாழ 62 பேருக்கு மேலே இருந்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களுள் புத்தர், மகாவீரர், பக்குடக்கை நன்கணியார், பூரணர், மற்கலிகோசாலர், நரி வெரூஉத்தளையார், முதலானோர் பெரிய சங்கங்களின் தலைவர்களாகவும் திகழ்ந்தவர்கள். இவ்வாறு அறிஞர்களுள் நால்வர் சங்கத்தமிழ் புலவர்களாகவும் இருந்தவர்கள். அவர்களுள் பக்குடக்கை நன்கணியாரின் சங்கமே பெரிதாம். ஆயினும் பக்குடக்கையார், பூரனர், மற்கலி கோவலர் ஆகியோர் ஒன்றினைந்து ஒரு புதியக் கோட்பாட்டை ஊழியல் எனும் கோட்பாட்டை நிறுவினர். இதனை பாலிமொழியில் ஆசிவகம் என்றனர்.''

மேலும் இதற்கு விளக்கம் தரும் பொழுது ஆசிவகத் தோற்றுநர்களின் வரலாற்றை விவரிக்கின்றார் அவ்வரலாறு.

''ஆசிவகம் எனும் சொல்லிற்கு வாழ்க்கை முறை என்பது பொருளாகும். இந்தச் சமயத்தில் மிக உயர்ந்த நிலை கழிவெண் பிறப்பு நிலையாகும். இக்கழிவெண் பிறப்பு நிலையை அடைந்தவர்கள் நல்வெள்ளையார் எனப் பாராட்டினர். இதற்கு முந்தைய நிலை பெண் பிறப்பு நிலை ஆகும். இச்சமய வரலாற்றில் நல்வெள்ளையார் எனும் சிறப்பினை அடைந்தவர்கள் மூவர் மட்டுமே. அவர்கள் பூரணர், மற்கலி, கணி நந்தவாசான் இயக்கன் எனும் மூவரேயாவர். இம் மூவருள் பூரணரும் - மற்கியும் சமகாலத்தவர்கள். கணி நந்தவாசன் இயக்கன் அவர்களை அடுத்து வந்தவர். இவர் ஆசிவகச் சமயத்தில் ஈடுபாடு கொள்வதற்கு முன்பு பாண்டிய வேந்தனும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் தந்தையுமாகிய பூதப் பாண்டியனின் கண்போல் நண்பர்களுள் ஒருவராக இருந்தார்.

மேலும், குதிரை எடுப்பை விவரிக்கும் போது பூதப்பாண்டியன் இவரை வெஞ்சின இயக்கன் எனக் குறிப்பதால் இவரின் வீரமும் விளங்கும். பூதப் பாண்டியனின் படைத்தளபதிகளுள் ஒருவராகவும் இவர் விளங்குகிறார். பூதப்பாண்டியன் போரில் இறந்துவிட அதனால் துயர் தாங்காது அவன் மனைவி பெருங்கோப்பெண்டும் தீப்பாய்ந்து மாய, இத்துன்பியல் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட ''வெஞ்சின விபக்கன்'' ஆசிவகச் சமயத்தைத் தழுவி அதன் ஒப்புயர்வற்ற தலைவராகவும் உயர்ந்தார். தம் தந்தையின் உயிர்த்தோழராக இருந்தவர். சூழலின் காரணமாகவே (குடும்பச் சூழல்) துறவியாகிப் பொருந்தலைவராகத் திகழும் கனிநந்தவாசன் இயக்கன் என்பாருக்கு நெடுஞ்செழியன் அமைத்த கற்படுக்கைகளே மதுரை மாவட்டம் மாங்குளம் கல்வெட்டும் கற்படுக்கைகளும் ஆகும்.

தமிழில் நல்வெள்ளையார் எனப் பாராட்டப்படும் இவர்களைப் பாலிமொழியில் பரமச்சுக்க நிலையை அடைந்தவர்கள் எனக் குறிக்கின்றனர். கனி நந்தாசிரியன் இயக்கன் பரமச்சுக்க என்னும் நிலையை அடைந்தவர் என்பதாலும் இவர் படைத்தலைவராக இருந்து போர் செய்தவர் என்பதாலுமே தென்மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோவில்களில் ''புரவி எடுப்பு'' என்னும் குதிரை எடுப்பு நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடந்து வருகின்றன. மேலும் அய்யனாரைப் பற்றி கள ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அதனை விளக்குமிடத்து,

''தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அருஞ்சுனை காத்த ஐயனார் கோவில் அப்பகுதியில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். அவ் ஐயனார் பாண்டியரின் படைத்தளபதியாக இருந்தவர். அப்பகுதி மக்களிடையே உள்ள செவி வழிச் செய்தி இன்றும் நிலவி வருகின்றது. இக்கருத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வரகூர் வயல் வெளியில் ஐயனார் கோவில் உள்ளது. வெஞ்சின இயக்கனாக இருந்து அவர் மேற்கொண்ட போர்க்கோலத்தை நினைவூட்டியும் சமய வாழ்வில் அவர்பெற்ற உயர்வைப் பாராட்டியும் அமைந்த அச்சிலை ஒரு போர் வீரன் வாளேந்திப் போர் புரியும் தோற்றத்தில் அமைந்துள்ளதாகும். அந்த ஐயனார் பரம ஐயனார் என்று அழைக்கப்படுகிறார். பரம என்பது பாலி மொழியில் ''பரமசுக்க'' என்பதின் மருவு ஆகும். அந்தச் சிலையில் உள்ள மற்றொரு தனிச்சிறப்பு ஐயனார் தோளில் காணப்படும் விழுப்புண்ணாகும். இப்பரம ஐயனார் கோவில் இருப்பதனாலேயே இப்பகுதியைப் பரமன் பேட்டை என அழைக்கின்றனர். இந்த ஐயனாருக்கும் வரகூர் ஊர் நடுவே உள்ள ஐயனாருக்கும் உள்ள உறவு குறிக்கத் தக்கதாகும்''.

என்று அய்யனாரைப் பற்றி மேலும் தெளிவுபடுத்துகிறார். மேலும் இதுவரை சித்தன்னவாசல் ஒவியங்கள் சமணர்களுக்கு உரியது என்பதை தற்பொழுது மறுக்கக் கூடிய சூழல் உருவாகி உள்ளது. அதற்குத் துணையாகப் பேராசிரியர் நெடுஞ்செழியன் சொல்லுமிடத்து, சித்தன்னவாசல் ஓவியத்தில் உள்ள தாமரை பொய்கை சமயக் கோட்பாட்டின் குறியீடாக அமைந்தது. இவ்ஒவியத்தை வரையச் செய்தவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் செழியனாவான். இவ்ஓவியத்தின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டு ஆகும். மேலும் கருப்புகளைப் பற்றி விளக்குமிடத்து,

சித்தன்னவாசல் ஓவியங்களை பழுது நீக்கிப் புதுப்பித்தவர் மதுரை ஆசான் இளங்கௌதமன் ஆவார். அப்பாண்டியனை ஆதிவேந்தர் எனக் குறிக்கும் கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. ஐயனார் வரலாற்றின் மூல ஊற்றே சித்தன்ன வாயில் ஓவியங்களும் அங்குள்ள மூவர் சிற்பங்களும் என்பதை மறந்துவிட்டு அவற்றையெல்லாம் சமணர்களுக்கு உரியவை எனத் தாரைவார்த்த கொடுமையை மாற்றியாக வேண்டும்'' என்று கருத்து தெரிவிக்கின்றார்.

ஐயனார் பழங்காலத்தில் பல்வேறு பெயர்களுடன் பேசப்பட்டு வந்திருக்கிறார். குதிரை வாகனன் எனும் பொருளில் சாத்தன் என்று வழங்கப்பட்டு வந்திருக்கிறார். இதற்கு ஆதாரம் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சிலப்பதிகார பாடல் ஆகும். இதனை தெளிவுப்படுத்த வரும் பேராசிரியர் க. நெடுஞ்செழியன்,

''ஐயனாரைச் சாத்தன் என்று வழங்கும் மரபும் உண்டு. குதிரை வாகனன் என்னும் பொருளில் சாத்தன் என்னும் பெயர் உருவாயிற்று. ஐயனார் வழிபாட்டில் கனி நந்தாசிரியனுக்கு ஏற்பட்டிருந்த ஏற்றத்தைக் குறிக்கும் வகையில் கூடச் சாத்தன் என்னும் பெயர் தோன்றியிருக்கலாம்'' என்கிறார். மேலும் இதனை விளக்குமிடத்து ''சாத்தனாகிய ஐயனார் 96 வகை தருக்க சாத்திரங்களிலே வல்லவர் எனத் தமிழ் இலக்கியங்கள் குறிக்கின்றன. தருக்கவியலும் தருக்கவியல் நூல்களும் வைதிகர்களால் தடைசெய்யப்பட்ட பொழுது தருக்க நூல்களில் வல்ல ஐயனார் வழிபாடும் தடைக்கு உள்ளானது. ஊருக்கு நடுவே இருந்த ஐயனார் கோவில்கள் ஊருக்குப் புறம்பே காவல் தெய்வங்களாக ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் இக்கோவில்கள் புறம்பனையான் கோட்டங்களாயின.

மேலும் கருப்புகளைப் பற்றி விளக்குமிடத்து, இன்றைய தமிழகத்தில் ஐயனார் வழிபாடு தன் வரலாற்றுச் சிறப்பை இழந்து நின்றாலுங்கூட, அறிவு - வளமை - வீரம் ஆகிய மூன்று வழிபாடுகளின் ஒட்டுமொத்தக் குறியீடாகத் திகழ்ந்து கொண்டிருப்பது ஐயனார் கோவில்கள் தாம். அங்குள்ள ஏழு கன்னியர் சிலைகள் வளமை வழிபாட்டின் குறியீடாகும். அவற்றைப் போலவே அங்கு இருக்கும் கருப்புகள் யாவும் படைத்தலைவர்களாகவும், போர் வீரர்களாகவும் இருந்து தம் மண்ணை மீட்கும் போரில் விதையாய் வீழ்ந்தவர்கள் ஆவர். அவர்களைப் பாலடிக் கருப்பு, பெரியண்ணசாமி, நம்பியப்பன், சப்பாணிக்கருப்பு, ஒண்டிக்கருப்பு என வணங்கி மகிழ்வர்''.

என்று அய்யனார் கோவில் முழு வழிபாட்டுக் காரணங்களையும் தெளிவுப்படுத்துகிறார். ஆசிவகம் உரு வழிபாட்டை மறுத்தது. அதன் பின்னர் உருவவழிபாட்டை ஏற்றுக் கொண்டதற்குப் பௌத்த சமயத்தின் செல்வாக்கு காரணமாயிருக்கலாம் என்பர்.

ஆசிவகம் என்னும் சமயத்தோடு தொடர்பு உடையர் ஐயனார். பேராசிரியர் நெடுஞ்செழியன் சொல்வதைப் போல் ''தமிழரின் வாழ்வோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்து நின்ற ஆசிவக மெய்யலின் விடுபட்டுள்ள பகுதிகளை நிரப்ப, ஐயனார் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்ளுதல் - மிகமிக இன்றியமையாததாகும் என்பதை உணர்ந்து தமிழக அறிவு சீவிகள் வட்டம் அய்யனார் கோவில்களின் பக்கம் பார்வைகளை திருப்பி, ஆய்வுகளை மேற்கொண்டால் அது இந்திய மெய்யில் வரலாற்றில் பல பரிணாமங்களை உருவாக்கும் என்பது உறுதி.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக