03/02/2011

அப்பர் காட்டும் தொன்மக் கதைகள் - சு. சிவசங்கர்

தமிழ் இலக்கிய உலகிற்குச் சமயங்களின் கொடை மிகுதியானதாகும். பக்தி இலக்கியங்களை விடுத்துப் பார்த்தால் தமிழ் இலக்கிய வரலாறு முழுமையுறாது. ஏறத்தாழ கி.பி. 600 முதல் கி.பி 900 வரையிலான முன்னூறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் முழுவீச்சில் நிலைகொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் பெருக்கெடுத்த தேவார வெள்ளத்தில் சைவ சமயமும் திவ்வியப்பிரபந்த வெள்ளத்தில் வைணவ சமயமும் புதுப்பொலிவு பெற்றுச் சிறந்து விளங்கின. இப்பெருமைமிகு பணியினைத் துவக்கி வைத்தவர் ''அப்பரடிகள்'' எனப்படும் திருநாவுக்கரசர் ஆவார். அவரது திருவாக்கில் தோன்றிய தேவாரப் பதிகங்களாக இன்று கிடைப்பவை 312 ஆகும். ஆயிரக் கணக்கான மைல்கள் நடந்து சென்று, பல்வேறு சிவாலயங்களை வணங்கி, அவற்றின் சிறப்புகளையும், அங்கு உறையும் சிவபெருமானின் அருள்திறத்தையும் அடிகள் பாடியுள்ளார். அவரது பதிகங்களுள் ஒன்றான திருவாரூர்ப் போற்றித் திருத்தாண்டகத்தில் அவர் காட்டும் தொன்மச் செய்திகளை இக்கட்டுரை பேசுகின்றது.

தொன்மம்:-

தொன்மம் பழமையைக் குறிப்பது சமயம் சார்ந்த செய்திகளில் தொன்மம் மிகுதியும் காணப்படுவது இயல்பானதேயாகும். சான்று காட்ட இயலாத பழமையான செய்திகள் தொன்மம் ஆகின்றன. இறைத்தன்மையை மிகுத்துக்காட்ட, தொன்மச் செய்திகள் துணைபுரிகின்றன. முதலில் சமண சமய கருத்துகளிலும், பின்னர், சைவ சமயக் கருத்துக்களிலும் நிறையறிவு பெற்றிருந்த அப்பரடிகள், தாம் கேட்ட தொன்மக் கதைகள் பலவற்றையும் தமது தேவாரப் பாடல்களில் பதிவு செய்துள்ளார். இறைவனாகிய சிவபெருமானின் சிறப்புகளை விதந்தோதுவதற்கு, இத்தொன்மக் கதைகள், அடிகளுக்கு மிகவும் பயன்பட்டுள்ளன. பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, திருவாரூர்ப் போற்றித் திருத்தாண்டகம் மட்டும் இங்கே எடுத்தாளப் பெறுகின்றது.

திருவாரூர்ப் போற்றித் திருத்தாண்டகம்:-

தாண்டக வேந்தராம் திருநாவுக்கரசர், திருவாரூர்த் திருமுலட்டானனைப் போற்றிப் பாடிய தாண்டகப் பாடல்கள் இப்பதிகத்தில் இடம்பெறுகின்றன. ''இத்திருத்தாண்டகத்தில் சிவபெருமானை நூற்றெட்டு முறை போற்றிப் பாடியுள்ளதால் இது சிவனை அருச்சித்தற்காம் தகுதி வாய்ந்த திருமந்திரமாயிற்று'' என்பர் அறிஞர். இப்பதிகத்திலேயே பதினைந்து தொன்மக் கதைகளையும், அவை கூறும் பல்வேறு செய்திகளையும், அப்பரடிகள் எடுத்துக்காட்டியுள்ளார். அச்செய்திகள் தகைமையையும், வீரச் செயல்களையும் தெள்ளிதின் உணர்த்துவன.

அருட்சிறப்பு:-

''நீலமணி மிடற்றொருவன்'' என்று சங்கப் பாடலில் குறிப்பிடப்படும் சிவபெருமானின் ''நஞ்சுண்ட அருள்திறம்'' பல அடியவர்களாலும் போற்றிப் பாடப்பெறுவதாகும். சாவா மருந்தாம் அமிழ்தினைப் பெறும் பொருட்டுத் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய முற்பட்டனர். திருமாலின் உதவியுடன் மந்தர மலையை மத்தாகவும் வாசுகியெனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது, வருத்தம் பொறாது வாசுகிப் பாம்பு நஞ்சினைக் கக்க, அந்நஞ்சு உலக முழுவதும் பரவி வருத்தியது. சிவபெருமானிடம் வந்து அனைவரும் முறையிட, அடியவர் வருத்தம் போக்கும் பெரியவனாகிய இறைவன், அந்நஞ்சினைப் பெற்று உட்கொண்டு, தமது திருமிடற்றில் நிறுத்தினார். அதன் காரணமாய் நீல கண்டன், காலிகண்டன் என்று அழைக்கப்பட்டார்.

''வங்கமலி கடல் நஞ்சமுண்டாய் போற்றி'' (பாடல் - 2)

''நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி'' (பாடல் - 5)

என்னும் அப்பரடிகளின் பாடல் வரிகள் சிவபெருமானின் கருணைப் பெருந்திறத்தை விளக்க வருபவையாகும்.

அதனோடொத்த மற்றோர் அருள்திறம் மார்க்கண்டேயனுக்கு வாழ்வளித்த கருணையாகும். மிருகண்டு முனிவரின் தவப்புதல்வனாகிய மார்க்கண்டேயனுக்கு ஆயுள் பதினாறே ஆண்டுகளாய் விதிக்கப்பட்டிருந்தது. ஆயுளின் எல்லை நெருங்கும் நேரத்தில் அவன் இடைவிடாது சிவவழிபாடு செய்து கொண்டிருந்தான். அவனைத் தேடி வந்த கூற்றுவனின் பாசத்தில் இருந்து மீள, தான் வழிபட்டுக் கொண்டிருந்த சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டான். கூற்றுவன் வீசிய பாசம் மார்க்கண்டேயன் மீது மட்டுமின்றி, சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. உடனே, அடியாரது அல்லலை அறுத்து அருள்புரியும் அரனார், இலிங்கத்தினின்றும் ஆர்த்தெழுந்து இடப்பாதத்தினால் கூற்றுவனை உதைத்து வீழ்த்தினார். மார்க்கண்டேயனுக்கு முடிவில்லா ஆயுளைத் தந்தார். அடியவரின் அழுகைக்குச் செவிசாய்க்கும் சிவபெருமானின் இவ்வருட்செயலை,

''குரைகழலாற் கூற்றுதைத்கோவே போற்றி'' (பாடல் - 7) என்னும் வரியால் எடுத்துக் காட்டுகின்றார் அப்பரடிகள். துன்பங்களடைந்து, அழுவார்க்கு மட்டுமின்றி, தன்னை அண்டும் அனைவர்க்கும் அருட் பொழிவைத் தருவான் சிவபெருமான் என்னும் கருத்தை, வேறு பல தொன்மச் செய்திகள் மூலமும் காட்டுகின்றார் அப்பரடிகள். பிரம்மனின் மானத புத்திரர்களாகிய சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்னும் நால்வரும், தந்தை தந்த படைப்புத் தொழிலை ஏற்றுக் கொள்ளாமல், மறைமுடிவுப் பொருளை அறிய ஆர்வம் மிகுந்து தவம் மேற்கொண்டனர். அதன் பயனாய் எழுந்தருளிய சிவபெருமானிடம் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். இறைவன் கயிலைமலைச் சிகரத்தின் தென்திசையில் இருக்கும் கல்லால மரநிழலில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்து, அவர்களுக்கு உபதேசித்தருளினார்.

''ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி'' (பாடல் - 2) என்னும் பாடல் அடி வழி இதனைத் தெரிவிக்கின்றார் அடிகள், பிரளய காலத்தில், தருமதேவதை, விடை வடிவெடுத்து வேண்டியதற்கொப்ப, அவ்விடையைத் தம் வாகனமாகவும், இடபக் கொடியாகவும் ஏற்றுக்கொண்ட இறைவனின் பெருங்கருணைச் செய்திக் குறிப்பையும் அப்பரடிகள் காட்டியுள்ளார்.

''மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி'' (பாடல் - 3)

''வெள்ளை ஏறேறும் விகிர்தா போற்றி'' (பாடல் - 8)

''சே ஆர்ந்த வெல்கொடியாய்ப் போற்றி போற்றி'' (பாடல் - 9)

என்னும் பாடல் வரிகள் மேற்குறித்த செய்தியினைக் காட்டுவன.

பகீரதனுடைய தவப்பயனாய்ப் பூமிக்கு வந்த கங்கையின் வேகமான வெள்ளப்பெருக்கினைப் பூமி தாங்காது என மனம் இரங்கி, அக்கங்கையைத் தம் சடைமுடியில் தாங்கிய கங்காதரக் கடவுளின் அருட்செயலையும் அடிகள்,

''தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய்ப் போற்றி'' (பாடல் - 8)

எனும் பாடலடியிற் குறிக்கின்றார்.

உலகத்தோர்க்கெல்லாம் அருள்புரியும் ஆலவாய் அண்ணல், தமது உடனுறையும் உமாதேவிக்கும் அருள்புரிந்த பான்மையை அப்பரடிகள் ஆங்காங்கே சொல்லிச் செல்கின்றார். தாட்சாயணி என்னும் பெயரோடு வாழ்ந்திருந்த உமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மறுபிறவியாய் இமயமலையரையனிடத்தில் குழந்தையாய்ச் சேர்ப்பித்து, பின்னர் மணந்த செய்தியினைக் கூறுமுகத்தான்,

''மலையான் மடந்தை மணாளா போற்றி'' (பாடல் - 3)

எனப் போற்றுகின்றனர்.

சந்திரன் பெற்ற சாபத்தின் வலிமையை மாற்றும்விதமாக, அவனது நிலைக்கு இரங்கித் தம் திருமுடியில் ஒற்றைக் கலையினைச் சூடிக் கொண்ட குறிப்பையும் அப்பர் சுட்டுகின்றார்.

''சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி'' (பாடல் - 4)

''வெண்மதியங்க கண்ணி விகிர்தா போற்றி'' (பாடல் - 5)

''வான்பிறையும் வாரைவும் வைத்தாய் போற்றி'' (பாடல் - 7)

தன்னேரில்லாத் தகைமை:-

எல்லாச் சமயங்களும் தங்களின் தலைமைத் தெய்வத்தை, பிற தெய்வங்களை விட, வலிமிகுந்ததாய் காட்டுவது இயல்பு. சைவ சமயக் குரவருள் ஒருவரான அப்பரடிகள், பிரம்மனையும், திருமாலையும் விட சிவபெருமானே தன்னேரில்லாத் தன்மையுடையவன் என்பதைப பலவிடங்களில் சுட்டுகின்றார். ''யார் பெரியவர்'' என்று தமக்குள்ளே பூசலிட்ட அயனையும், அரியையும் கண்டு, அவர்களின் இறுமாப்பினை அடக்கிட, ஆங்கே அனல் சுடராய்த் தோன்றிய சிவபிரான், தமது ''அடி முடிகளிலொன்றை முதலில் கண்டு வருபவரே பெரியவராவார்'' என்று கூற அவர்களும் சென்றனர். அடிதேடிச் சென்ற திருமால் தோல்வி கண்டு, அதனை ஒப்புக்கொண்டு சிவனை வணங்கினார். பிரம்மனோ முடிதேடிச் சென்று, அதனைக் காண முடியாதபோதும், கண்டதாகக் கூற, வயிரவரால் உச்சி சிரசை இழந்தார். இக்கதைக் குறிப்பை உணர்த்த விரும்பும் அடிகளார்,

''அங்கமலத்தயனோடு மாலுங் காணா

அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி'' (பாடல் - 6)

''பிரமன் சிரமரிந்த பெரியோய் போற்றி'' (பாடல் - 10)

என்று குறிக்கின்றார். ஆயிரம் மலர்களால் சிவபிரானை அருச்சிக்க நினைத்த திருமால், ஒரு பூக்குறையவும், தமது கண்களிலொன்றைப் பறித்து அருச்சித்தார். அதனால் மகிழ்ந்த இறைவன் தமது கையிலிருந்த சக்கராயுதத்தைத் திருமாலுக்கு வழங்கினார். திருமாலுக்கு அருள்புரிந்த இச்செய்தியினை,

''திருமாலுக்கு ஆழி யளித்தாய் போற்றி'' (பாடல் - 9)

என்னும் பாடலடியால் அடிகள் காட்டுகின்றார்.

வீரச்சிறப்பு:-

ஐந்தொழில்களுக்கும் தலைவனாக விளங்கும் சிவபெருமான், அபித செயல்கள் செய்யுமிடத்து, அவ்வாறு செய்பவரை வென்று அருளும் செய்திகளும் அப்பரடிகளால் உரைக்கப்படுகின்றன. தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அரக்கர்கள் முப்புரங்களில் வாழ்ந்து கொண்டு தீமைகள் புரிந்து வந்தனர். அவர்களை ஒடுக்க, பல்வேறு கடவுளரும் பலவிதத்தில் உதவ நிற்க, தமது சிரிப்பினாலேயே திரிபுரமெரித்த திறததினை அப்பரடிகள் எடுத்துரைக்கின்றார்.

''செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி'' (பாடல் - 1)

''சிலையால் அன்று எயிலெரித்த சிவனே போற்றி'' (பாடல் - 3)

என்னும் வரிகள் மேற்குறித்த செய்தியினைக் கூறுகின்றன.

கயாசுரனைக் கொன்று, மதயானையின் தோல் போத்தலும், தக்கன் யாகமழிக்கும்போது சூரியனின் பற்களை உதிர்த்ததும், இந்திரன் தோள் துணிதலும் சிவனது வீரச் சிறப்புகளாக அடிகளால் காட்டப்பெறுகின்றன. தாருகாவன முனிவர்களும் அவர்களது மனைவியரும் கொண்டிருந்த செருக்கடக்க முற்பட்ட சிவபெருமானைக் கொல்ல அவர்கள் யாகம் செய்தனர். அவ்வேள்வித் தீயினின்றும் தோன்றிய புலியைக் கொன்று சிவபெருமான் ஆடையாக அணிந்தார். மேலும் அதில் தோன்றிய சூலம், மான், வெண்டலை, அரவங்கள், உடுக்கை முதலானவற்றைத் தமது மேனியில் ஏற்றுக்கொண்டார். பூதங்களைச் சேனையாக்கி, முயலகனின் முதுகில் காலூன்றி நடனமாடினார். இச்செய்திகளைப் பலவிடங்களில் அப்பரடிகள் தந்தாலும்,

''கொல்புலித் தோலாடைக் குழகா போற்றி'' (பாடல் - 2)

என்னும் பாடல் வரி ஓர் எடுத்துக்காட்டாகும்.

தொன்மக் கதைகள் சமயத்தின் பழமையைக் கூறுவன. தோன்றிய காலந்தொட்டு, பல்வேறு வடிவ மாற்றங்களும், புதிய செய்தியடைவுகளும் பெற்று அவை கிளைத்து நிற்பன. சமய நம்பிக்கைகளுக்கு அடிப்படையாய் அமைவன. அப்பரடிகள் தமது தேவாரப் பாடல்கள் நெடுக இக்கதைகளை விதைத்துச் சென்றுள்ளார். கற்பவர்க்கும் சிந்திப்பவர்க்கும் அவை இன்பம் தருவனவாகும்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக