03/02/2011

சுமதி நாவல்களில் சமுதாயம் - இரா. தணிகைச் செல்வி

தனி மனிதர்கள் ஓர் ஒழுங்கின் அடிப்படையில் சேர்ந்துள்ள அமைப்பே சமுதாயம், நாவல் இலக்கியக் கர்த்தாக்களுக்குத் தாம் கண்ட, கேட்ட, துய்த்த நிகழ்ச்சிகளும் காட்சிகளுமே படைப்பிலக்கியங்களாகின்றன. அவ்வக்காலச் சமுதாய மாற்ற நிகழ்வுகளை நாவல்கள் வெளிப்படுத்துகின்றன. சமுதாயத்தை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். மனிதர்களைச் சமுதாயம் உருவாக்குகிறது. சமுதாயம் என்பது சமுதாய உறவு முறைகளால் பின்னப்பட்ட ஒரு வலை. சுமதி நாவல்களில் இடம்பெறும் சமுதாயம் பற்றிய செய்திகளை முன் வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

சமுதாய விளக்கம்:-

மனிதர்களின் கூட்டமைப்பே சமுதாயம், சமுதாயத்தைப் பாதிக்கின்ற அனைத்துச் சிக்கல்களும் சமுதாயச் சிக்கல்களாகும்.

மனிதன் தன்னைச் சமுதாயத்திலிருந்து அப்புறப்படுத்திக்கொண்டு ஒதுங்கிவிடாமல் தனது கால சமுதாயத்தின் பழக்க வழக்கங்களையும், நடை, உடை, பாவங்களையும் உணர்ந்து அறிந்து ஏற்று வாழ்தலே சமூக வழக்கமாதல் என்பர் மறைமலை.

சுமதி நாவல்களில் சமுதாயம்:-

காதல்:

''காதல்'' எண்ணங்கள் மதிக்கப்படும்போதும், கருத்துக்கள் வரவேற்கப்படும்போதும், சுயமரியாதையில் தலையிடாதபோதும் பிறப்பது. காதல் வாழ்க்கை, ரோஜா மலர்ப்பாதையில் மெத்தென்று செல்வதன்று ரோஜா முட்கள் பரப்பிய பாதையில் செல்வது.

சுமதி நாவலான ''புனித மலரில்'' விமான விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் காதலனை, அவன் பொருள் மூலமே அடையாளம் கண்ட காதலி புனிதா யாரும் செய்யாத காரியத்தைச் செய்யத் துணிகிறாள்.

மருத்துவரிடம், ''நானும் அவரும் உடலால் கணவன் மனைவியாய் வாழலையே தவிர மனதளவில் வாழ்ந்துவிட்டோம். உயிருக்குயிராய்க் காதலிச்ச எங்களால் ஒருத்தரைப் பிரிஞ்சு இன்னொருத்தரால் வாழ முடியாது. இப்ப அவர் பிரியப் போறார். என்னைவிட்டு நிரந்தரமா. இந்த உலகத்துல அவர் இல்லாம என்னால வாழமுடியாது. நானும் செத்துப் போகனுமின்னுதான் தோணுது. ஆனால் நான் என் பரணிதரனை இழக்க விரும்பலை, பரணிதரனை அழியவிடாம அவன் குழந்தை மூலமா வாழவிடப் போறேன். இதுக்கு அவரோட உயிரணுக்களை எடுத்து என் கர்ப்பப்பையில் பொறுத்தணும் முடியுமா டாக்டர்'' (ப.8) என்று கேட்கிறாள். மருத்துவர் உதவியுடன் அப்படியே செய்கிறாள். காதலன் இறக்கிறான்.

குழந்தை பிறக்கிறது. திடீரென ஒருநாள் கண்முன்னே பரணிதரனைப் பார்க்கிறாள். தனக்குப் பதிலாக நண்பன் பாரதி மும்பை சென்றதையும் தனக்குக் கார் விபத்து ஏற்பட்டதையும் தெரிவிக்கிறான். புனிதா நடந்ததைக் கூறுகிறாள்.

அதைக் கேட்ட பரணிதரன், ''காதலன் சாகக்கிடக்கிற நிலைமையில் கூடத் தைரியமா எந்தப் பொண்ணும் செய்யாத காரியத்தை நீ செஞ்சிருக்கேன்னா உன்னோட காதலைப் பத்திப் பேச வார்த்தையே இல்லை. நான் இல்லாட்டியும் என் புள்ளையோட வாழணும்கற எண்ணத்தை வைராக்கியமாக வைச்சிக்கிட்டு எத்தனை அவமானங்களைச் சந்திச்சிருக்கே இப்படியும் காதலுக்காக வாழ்ந்த உன்னைக் கையெடுத்துக் கும்பிடணும் போலத் தோணுது'' (ப.81) என்று கூறி அவளை ஏற்றுக்கொள்கிறான்.

நட்பின் மதிப்பையும் காதலின் புனிதத்தையும் மதித்து உணரலாம். புனிதா காதல் மீது கொண்ட உறுதி போற்றுதற்குரியது. காதல் புனிதமானது என்பதை உணரலாம்.

வரதட்சணை:-

பெண்களைப் பாதிக்கும் மிகப்பெரிய சிக்கலாக இருப்பது வரதட்சணை. வரதட்சணைக் கொடுமையால் பல பெண்கள் தங்கள் வாழ்க்கையையும் உயிரையும் இழகின்றனர்.

சுமதி நாவலான ''நிறம் மாறும் பூக்களில்'' அழகம்மா தன் மகன் சக்கரவர்த்திக்குத் திருமண ஏற்பாடு செய்கிறாள். வரதட்சணை கேட்காத தாய் மீது கோபம் கொள்கிறான்.

அம்மா, அவனவன் பத்தாவது படிச்சிருந்தாலே பத்து பவுன் வேணும், இருபது பவுன் வேணும் ரொக்கமா கையில பணம் வேணும்னு கேட்கிறான். நான் நல்ல வேலையில இருக்கேன். கை நிறைய சம்பாதிக்கிறேன். ஆனா நீங்க பெண் வீட்ல எதுவுமே கேட்கலை. நானா கேட்கமுடியும்? நீங்கதான் கேட்கணும். நீங்க கேட்பீங்கன்னு நான் சும்மா இருந்தேன். ஆனா நீங்க என்னடான்னா எதுவுமே கேட்காம செய்யறதைச் செய்ங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கீங்க'' (ப.21-22)

ஒரு முப்பது பவுன் போடுங்க கையில் முப்பதாயிரம் பணம் கொடுங்க ஒரு வண்டி வாங்கித் தாங்கன்னு கேட்கத் தெரியலையே உங்களுக்கு அவனவன் பணமும் காசுமா வாங்கி கல்யாணம் பண்ணிக்கும் போது நான் மட்டும் போடுறதைப் போடுங்கன்னு கல்யாணம் பண்ணிக்கணுமா? நான் என்ன இளிச்சவாயனா? (ப.22) எனக் கேட்கிறான்.

பக்கத்து வீட்டுப் பெண் பாக்யலட்சுமியும் அழகம்மாவிடம் ''அவன் பேசுறதைச் செய்ங்கன்னு சொன்னதுமே தூக்கிவாரிப்போட்டுட்டு எப்பவும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பேசற நீயா இப்படிப் பேசினேன்னு ஆச்சர்யமா இருந்தது. எம் புள்ளைக்குப் பொண்ணு பார்க்கப் போன எடத்துல நான் எவ்வளவு கறாரா பேசினேன் தெரியுமா? அதுவும் நாங்க பார்க்கப் போன இடம் அத்தனை வசதி இல்லை இருந்தாலும் நான் பேசின பேச்சுல பெண்ணைப் பெற்றவர் ஒத்துக்கிட்டாருல்ல. நீ என்னடான்னா பொழைக்கத் தெரியாதவனாயிருக்கியே'' (ப.22) என்கிறாள்.

சில தினங்களில் சக்ரவர்த்தி எதிர்பார்த்ததைவிடப் பெண்வீட்டார் அதிகமாகச் செய்வதைக் கண்டு தனக்குள்ளேயே நொந்து போகிறான். திருமணம் முடிகிறது. மனைவி குழலியின் வீட்டை அவன் பெயருக்கு எழுதச் சொல்லி தொந்தரவு செய்கிறான். குழலியின் பெற்றோர் இறக்கின்றனர் அதன் பின் திருந்துகிறான்.

வரதட்சணை என்ற பேய் மனிதனை ஆட்டுவிக்கிறது. அதனால் வாழ்க்கையை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

திருமணம்:-

திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தமாகும். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. இருமண இணைவு திருமணம்.

சுமதியின் ''நிலவுக்குள் களங்கமில்லை'' என்ற நாவலில், மதனும் சுகந்தியும் காதலர்கள். தாயின் பேச்சைக் கேட்டு சுகந்தியை விடுத்து அர்ச்சனாவை மணக்கிறான். அர்ச்சனா கிரிதரனால் ஏமாற்றப்பட்டவள். மதனிடம் ''மதன், எங்க அப்பா கோடீசுவரர் மதிப்பும் மரியாதையும் வெளி உலகத்துல அவருக்கு அதிகம். தன் பொண்ணு எவன்கிட்டயோ கற்பிழந்துவிட்டாள்ங்கிற கேவலத்தை அவரால் தாங்கிக்க முடியாது. இந்த உலகத்துல உண்மை தெரிஞ்சா எங்க அப்பாவோட கவுரவம் பாழாகும். அவரோட கௌரவத்தைச் சிதைக்க எனக்கு மனம் வரலை. அதனால்தான் நான் அவர் விருப்பப்படி கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன்'' (ப.35) என்று கூறுகிறாள்.

அர்ச்சனாவை ஏற்க மறுக்கிறான். குழந்தை பிறக்கிறது அர்ச்சனா மனம் மாறி மதனை ஏற்றுக் கொள்கிறாள். மதனிடம், ''மனசளவில் இந்தத் தாலி எப்படிப்பட்ட பெண்ணையும் புருஷனுக்கு அடிமைப்படுத்தும் அன்புக்கயிறு இனிமே என் மனசு கடந்த காலத்தையோ அந்த கிரியையோ நினைக்காது'' (ப.83) என்று கூறுகிறாள். மதன் அவளைப் பூஜைக்கு உதவாத பூ என்கிறான். சுகந்தி அறிவுரை கூறுகிறாள். அதன்பின் ஏற்றுக்கொள்கிறான்.

இருவருக்கிடையே மன ஒற்றுமை இல்லையென்றால் மண வாழ்க்கை கசக்க ஆரம்பித்துவிடுகிறது. கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைத்தாலும் அது திருமணமாகாது. திருமண வாழ்க்கையில் சிக்கலே எழும்.

விதவை:-

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கெல்லாம் கொடுமுடியாய் இருப்பது விதவை நிலை. கணவன் உயிரோடு இருப்பது வரை உயர்வாக மதித்தவர்கள் அவன் இறப்புக்குபின் இழிவாக நடத்துகின்ற சூழ்நிலை சமுதாயத்தில் இருக்கிறது.

''வேரினை வெறுக்கும் விழுதுகள்'' என்ற சுமதி நாவலில், கிருஷ்ணனின் மனைவி கோகிலா. ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன் கோகிலாவிடம், ''நீ என்னை இழந்து இந்த சமுதாயத்துல ஏக்கப்பட்டு பயந்து உன் உணர்வுகளை மறைச்சு வாழ்ந்து சாகக்கூடாது கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழணும்'' (ப.20) என்று கூறுகிறார்.

முதலில் மறுத்துப் பின் சம்மதிக்கிறாள். கிருஷ்ணனின் இறப்புக்குப் பின் நண்பனின் வேண்டுகோளை மதித்த கிருஷ்ணனின் நண்பன் சுந்தரமூர்த்தி கோகிலாவிடம், ''உன் மனநிலை எப்படி இருக்குமின்னு எனக்குப் புரியும். நான் உடனடியா கல்யாணத்துக்கு உன்னை வற்புறுத்தலை. உனக்கு எப்ப என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுதோ அப்ப சொல்லு அதுவரைக்கும் நான் உனக்காகக் காத்திருப்பேன்'' (ப.21) என்கிறான்.

வயிற்றில் குழந்தையுடன் சுந்தரமூர்த்தியை மணக்கிறாள். அண்ணன் மகாலிங்கம் எதிர்க்கிறார். சிலகாலம் கழித்து தவறை உணர்ந்த மகாலிங்கம், ''ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கர ஒரே காரணத்துக்காக வீட்டை விட்டுத் துரத்திட்டேன். அவருக்கு அண்ணங்கற ஸ்தானத்திலேர்ந்து நானே இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சிருக்கணும் ஆனா இப்ப எல்லாத்தையும் நினைச்சு வருத்தப்படறேன்'' என்று வருந்துகிறார்.

கோகிலாவின் மகள் ராதா சுந்தரமூர்த்தியை வெறுக்கிறாள். அவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதை அறிந்து தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறாள்.

வேரினை விழுது வெறுத்தாலும் அந்த வெறுப்பு நிரந்தரமில்லை. விழுதும் தரையில் விழுந்தால் வேரினைப் புரிந்து கொள்ளும் அதன் பலத்தை, சக்தியை உணரும்.

பெண்ணியம்:-

பெண் என்றால் பொறுமையின் வடிவம் என்பர். ஆனால் அப்படிப்பட்ட பெண்ணுக்கே சோதனை ஏற்படும்போது குடும்பத்தை எதிர்த்துப் போராடி வெளியேறும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனைப் பெண்ணியம் என்கிறோம்.

''உனக்காகக் காத்திருப்பேன்'' என்ற சுமதி நாவலில் படித்துக் கொண்டிருக்கும் அகல்யாவை ஆதவன் மணக்கிறான். அவளை விடுத்துத் துபாய் செல்கிறான். அகல்யாவை ஆதவனின் சகோதரிகளும், தாயும் துன்புறுத்துகின்றனர். அவர்களை மீறிப் படிக்கிறாள். ஆத்திரமடைந்த மாமியார் அவதூறான பழியை மருமகள் மீது சுமத்தி மகனுக்குக் கடிதம் எழுதுகிறாள். அவன் விசாரிக்காமல் அவளை வீட்டைவிட்டு அனுப்பும்படி கடிதம் எழுதுகிறான். கடிதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அகல்யா பிறந்த வீட்டிற்கு வருகிறாள். வழக்கம் போல் கல்லூரிக்குச் செல்கிறாள்.

ஆதவனுக்கு ஆதரவாகத் தந்தை பேசுகிறார். அவரிடம், ''அப்பா.... உங்க மக மேல நம்பிக்கை வைங்க, ஒளிமயமான எதிர்காலத்தைத் தங்கச்சிகளுக்கும் தம்பிக்கும் நான் காட்டறேன். பெத்தமகளைவிட எங்கிருந்தோ வர்றவன் தனக்கு நன்மை செய்வான்னு எப்படிப்பா சுலபத்துல நம்பிடறீங்க? அவன் என்னோட வாழ்க்கையை இருட்டாக்கிட்டான். அவனா ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டப்போறான்'' (ப.90) என்கிறாள்.

சுமதி நாவல்களில், காதலில் நட்பிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை காணப்படுகின்றது. நட்பின் புனிதத்தன்மை காதலையும் தோற்கடித்துவிடுகின்ற தன்மையை இங்குக் காண முடிகின்றது.

பெற்றோருக்கு அஞ்சி தன் மனதை மாற்றிக் கொள்ளும் காதலனின் மனமாற்றம் காதலுக்குத் தடையாக இருக்கிறது.

மாப்பிள்ளையே தன் தாயிடம் தன் படிப்புக்கு ஏற்றபடி தட்சணை கேட்கவில்லை என்று சாடும் நிலையினைக் காட்டுகின்றார். தன் மகனுக்கு வரதட்சணை கேட்பதைப் பெருமையாகப் பேசும் தாயினையும் சுட்டிக் காட்டுகின்றார்.

பிறருக்காக வாழும் வாழ்வு சுகம் தராது. தாம்பத்திய உறவின் சின்னமான ''தாலி'' அடிமைத்தாலியாக அமையாமல் அன்புத் தாலியாக அமைய வேண்டும்.

ஆண்களைப் போலப் பெண்களும் துணையை இழந்தபின்பு மறுமணம் செய்து கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறார். ஆடவர்கள் பெருந்தன்மையுடன் விதவைகளை மறுமணம் செய்ய முன்வரவேண்டும்.

நன்றி: ஆய்வுக்கோவை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக