மனிதனுக்குரிய குணங்களில் சிறந்தது பெறுமை என்பர். ''உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கும் சினத்தைக் காத்துக் கொள்ளும் குணமே குணம்'' என்கிறார் ஒரு கவிஞர். வெம்மை விளைவிப்பது கோபம்; செம்மை விளைவிப்பது பொறுமை. இத்தகைய பொறுமை மன உறுதியாலே அமையுமாம். இப் ''பொறுமை'' பற்றித் தேவாரம் கூறும் கருத்து விளக்கங்கள் இக்கட்டுரையில் ஆராயப் பெறுகின்றன.
பொறுமை பிறக்குமிடம்:-
மெய்யறிவினால் மனிதன் பெறுகின்ற நல்லியல்புகள் பலவாகும். அந்நல்லியல்புகள் அனைத்தையும் திரட்டிப் பார்த்தால், அவையனைத்தும் பொறுமை என்னும் ஒன்றில் அடங்குமாம். வாய்மையைத் தந்தையாகவும், மெய்யறிவை அன்னையாகவும் வைத்துக் கொள்வோமெனில் இவ்விரண்டும் கூடி ஈன்றெடுக்கின்ற குழந்தை பொறுமை என்று கூறலாம். (வாய்மை + மெய்யறிவு = பொறுமை). மெய்யறிவு ஊற்றினால் தோன்றுவதே பொறுமையாகும். மெய்யறிவு விளக்கம் பெறாத இடத்தில் துலங்குகின்ற பொறுமை பொறுமையாகாது என்பர்.
அஞ்சாமையும் வீரமும் பொறுமை:-
மற்றவரின் வலிமையைக் கண்டு அச்சத்தால் வருகின்ற பொறுமை, பொறுமையாகாததாகும். அஃது அச்சம், கோழைத்தனமாகும். சிலரின் உள்ளத்தில் சினம் எரியூட்டப்பட்டது போல் கனன்று கொண்டிருக்குமாம். அதனை, அவர் நடுக்கத்தால் வெளிப்படுத்தாது உள்ளே அடக்கிக் காலங்கழிப்பர். அவரைப் பொறுமையாளர் என்று கூறலாகாது என்பர். ஏனெனில் அவருக்கு ஏற்ற துணை வலிமை கிடைத்தால், உடனே அவர் பொறுமை இழந்து பொறாமை கொண்டு, பிறரைத் தன்புறுத்த எழுவர்.
மெய்யறிவு ஈனுகின்ற பொறுமை, எத்தகைய வலிமையைத் தருமெனில் நடுக்கம் ஏற்படாத அஞ்சாமையையும், எத்தகைய துன்பம் வந்தாலும், பிறர் எவ்வகையான கொடுமை செய்தாலும், அவர்களுக்கு மறந்தும் கனவில் கூடத் தீங்கு நினைக்காமல் அவர் கொடுமைகளை அன்புடன் ஏற்று வெல்கின்ற வீரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
பொறுமையும், இறைநிலையும்:-
மெய்யறிவில் விளங்குகின்ற பொறுமையே பொறுமையாகும். அதன் சிறப்பை எங்ஙனம் கூறுவதெனில், மனிதன் அனைத்து இயல்புகளையும் தன்னின் முயற்சியால் பயிற்சி செய்தல் இயலுமாம். ஆனால், பொறுமையைப் பயிற்சி செய்து பெற எண்ணுவது அருமையிலும் அருமையாகுமாம். பொறுமை என்பது எளிய பொருளல்ல. பொறுமையைப் பெற்றவன் இறைநிலையைப் பெற்றவனாவான்.
பொறுமை வேறு, கடவுள் வேறல்ல என்பர். வேதம், இறைவனைச் ''சாந்தம் சாந்தம்'' என்று அழைக்குமாம் அச்சாந்தமே பொறுமை என்பதாகும். மனிதன் தன் வாழ்வில் முடிவாகப் பெற வேண்டிய செம்பொருள் பொறுமையாம். கல்வி பயில்தலும்; மனைவி, மக்களோடு வாழ்தலும்; பிறருக்கு உழைத்தலும், வாய்மை காத்தலும்; மெய்யறிவு பெறுதலும் எதற்கெனில், பொறுமையெனும் பொன் போன்ற பொருளினைப் பெறுவதற்காம். பொறையுடையவர் எல்லாமும் உடையார் ஆவர். பொறையின் பெருமையைத் திருவள்ளுவர்,
''அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை''
என்றும்,
''ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்''
என்றும் எடுத்தியம்புகின்றார். தேவாரம் பாடிய அடியவர்களும் தங்களுடைய பாடல்களில் எடுத்துக் கூறுகின்றனர்.
பூரணனாய், நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவன் சிவபெருமான், எமது பொறுமையையே மலராக ஏற்றுக் கொள்பவன் என்பதனை ஞானசம்பந்தர்,
''மறையி னானொலி மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர் புன்சடையனெம்
பொறையி னானுறை யும்பு கலியை
நி€யி னாற்றொழ நேசமாகுமே'' (225-6)
என்று எடுத்துப் பகர்கிறார்.
சிவபோகமாகிய விளைவைப் பெற வேண்டித் தவமாகிய உழவுத் தொழிலைச் செய்கின்ற அருளாளராகிய உழவர்கள், வாய்மையாகிய உழுதலைச் செய்து ''அன்பு'' என்னும் விதையை விதைத்து, வாய்மைக்கு எதிரான ''பொய்மை'' என்னும் களையைக் களைந்தெறிய வேண்டுமாம் என அருளிச் செய்கின்ற திருநாவுக்கரசர் அன்பென்னும் விதை முளைத்துப் பயிராகி வளர்ந்து பயன் தருவதற்குப் ''பொறை'' என்னும் நீரை வற்றாது பாய்ச்ச வேண்டும் என்பதை,
''பொய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக்கண்டு தகவெனும்
வேலியிட்டுச்
செம்மையுள் நிற்பராகிற் சிவகதி
விளையுமன்றே'' (4.76.2)
என்று கூறகிறார்.
பொய்மையுடையவனாகிய நான் தவறு செய்தாலும், பொறுத்தலையுடைய நீ பொறுத்துக் கொள்ள வேண்டாமோ? என்பதைச் சுந்தரர்,
''செய்வினை ஒன்று அறியாதேன்
திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திட நீ வேண்டாவோ.....''
என்று கூறுகிறார்.
நெஞ்சமே! உயிரானது உடலை விட்டுப் பிரியும் காலத்தில் சிறிதும் பொறுமையில்லாது சென்றுவிடும். இத்தகைய உடலைப் பொருளாகக் கொண்டு, எல்லாம் பெறலாம் என்னும் தன்முனைப்பினைத் தவிர்ப்பாயாக என்று தன் நெஞ்சிற்கு அறிவுறுத்தும் வகையில்,
''தினைத்தனையோர் பொறையிலா யுயிர்போங் கூட்டைப்
பொருளென்று மிகவுன்னி மதியா லிந்தா
அனைத்துலகும் ஆளலா மென்று பேசும்
ஆங்காரந் தவிர் நெஞ்சே...'' (6.42.5)
என்று திருநாவுக்கரசர் எடுத்தியம்புகின்றார்.
இதனையே மாணிக்கவாசகர், தலைவனான சிவபெருமானிடம் தன்னுடைய பிழைகளைப் பொறுத்தருள வேண்டும் என்பதனை,
''பிழைத்தவை பொறுக்கை யெல்லாம்
பெரியவர் கடமை போற்றி'' (திருச்சதகம் - 66)
என்றும்,
''தேனே அமுதே சிந்தைக் கினியாய்
சிறியேன் பிழை பொறுக்கும் கோனே'' (திருச்சதகம் - 85)
என்றும் கூறுகிறார்.
பொறுமையாளனின் குணங்கள்:-
பொறுமையுடையவரிடத்தில் அனைத்து நற்குணங்களும் வந்தமையுமாம். நற்குணங்களில் மிகச் சிறந்தவை நான்காகும் என்பர். வேறு சில நற்குணங்கள் அவரவரின் வாழ்க்கை நிலையினை ஒத்து விளங்குமாம். அச்சிறந்த நான்கு குணங்கள் யாதெனில், அடக்கம், உள்ளநிறை, உண்மை, அன்பு என்பனவாகும். இக்குணங்கள் இல்லாமல் ஒருவன் பொறையுடையவனாக ஆதலரிது என்பர்.
அடக்கம்:-
அடக்கம் மனிதனிடத்தில் இருக்கின்ற முனைப்பை அழிப்பதாகும் என்பர். மனிதனைச் சிறுமைக் குழியில் வீழ்த்தித் துன்பப்படுத்துவது முனைப்பாகுமாம். முனைப்பின் வழியினால் தற்பெருமை எழுகின்றது என்பர். தற்பெருமைக்கு முதலாக உள்ள முனைப்பை அழிப்பது அடக்கமாம். இதனையே வள்ளுவர்,
''அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்''
என்று கூறுகிறார்.
இதனையே நாலடியார், அறிய வேண்டியவை எல்லாம் அறிந்து, பொறுமைக் குணம் உடையவராய், அஞ்சத்தக்க பழிபாவங்களுக்குப் பயந்து நடக்க வேண்டும் என்பதனை,
''அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகு உவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது'' (நாலடியார் - 74)
என்று கூறுகிறார்.
உள்ள நிறை:-
அடக்கம் உள்ளே எழும் ஆசையை ஒடுக்கி, ஒடுக்கி முடிவில் அவ்வாசை தோன்றுகின்ற இடத்தையே தகர்க்குமாம். அடக்கம் உடையவர் கிடைத்ததை வைத்து நிறைவான வாழ்க்கையை வாழ்வர். நிறைவடையாத வாழ்வினை மேற்கொள்பவர் துன்பநிலையினை எய்துவர். மனிதனைப் பேயாகவும், அரக்கனாகவும், விலங்காகவும் மாற்றமுறச் செய்வது ஆசையாம். ஆசையுடையவனிடத்தில் அனைத்தும் இருப்பினும் அவன் உள்ளம் அமைதி பெறவில்லையாம். ஆதலால், ஆசையுடையவன் என்றும் தன்னலம் மிக்கவனாகவே இருப்பான். ஆசையின்றிக் கிடைத்தப் பொருட்களை வைத்துக் கொண்டு நிறைவாக வாழ்கின்றவனிடம் வறுமை அணுகாது என்பர். ஆக்கமும், வறுமையும் மனிதனிடத்தில் இருக்கின்ற பொருள் பெருக்கத்தையும், சுருக்கத்தையும் பொறுத்து நிற்பனவல்ல என்பர். அவை அவரவர் உள்ள நிலையைப் பொறுத்து நிற்பனவாகுமாம். ''நிறை நெஞ்சு உடையவரைக் கண்டால் நல்குரவு அஞ்சும்'' என்பர் சான்றோர் நிறை நெஞ்சம் கொண்டவனிடத்தில் சிறியப் பொருளிருந்தாலும் அவன் செல்வந்தனாவான். நிறை நெஞ்சம் பெறாது பெரும் பொருள் வைத்திருந்தாலும் அவன் வறியவனாவான். நிறை நெஞ்சம் ஆசையை அழிக்குமாம். ஆதலால் பொறுமைக்கு ''உள்ள நிறை'' அவசியமாம். இல்லையெனில், ஆசை என்னும் பேய்க்கு இரையாகிப் பொறாமை என்னும் வெம்மைத் தீயால் வீழ்ந்து துன்பம் நேரலாம் என்பதனை வள்ளுவர்,
''அவாஇல்லார்க்கு இல்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்''
என்று பகர்கிறார்.
உண்மை அடக்கத்தால் ஆசை அற்று உள்ளம் நிறைவெய்துமாம். ஆசை அற்றவரிடத்தில் உண்மை ஒளிருமாம். உண்மை அஞ்சாமையை அளிக்குமாம். பொறுமைக்கு உயிர் போன்றது அஞ்சாமையாம். அஞ்சாமையை ஈன்றெடுப்பது உண்மையாம். உண்மை இல்லாத உள்ளம் என்றும் அச்சத்‘ல் பீடிக்குமாம்.
1. இறைவனாகிய சிவபெருமான் பொறுமையையே மலராக ஏற்றுக் கொள்பவனாவான்.
2. அன்பென்னும் விதை முளைத்துப் பயிராகி வளர்வதற்குப் பொறை என்னும் நீரை வற்றாது பாய்ச்ச வேண்டும்.
3. பொறுமையாக இருக்கின்ற இறைவன் நம்மின் தவறுகளைப் பொறுத்துக் கொள்பவன்.
4. உடலிலிருந்து நீங்கிப் பிரிகின்ற காலத்தில் சிறிதும் பொறுமையில்லாமல் சென்றுவிடும்.
5. பொறுமையே வைராக்கியத்தை தந்துதவும் என்பதனை நாவுக்கரசரின் வரலாறு எடுத்துரைக்கின்றது.
நன்றி: ஆய்வுக்கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக