15/02/2011

தாம்பத்யம் - ஜெயகாந்தன்

தலைச்சுமைக்கார மருதமுத்துவுக்கும் ரஞ்சிதத்துக்கும் அவர்கள் தலைவிதிப்படி அன்று மாலை கலியாணம் நடந்தேறியது. அதாவது அரையணா கதம்பம், ஓரணா மஞ்சள் கயிறு, காலணா மஞ்சள், மூணு ரூபாய்க்கு ஒரு புடவை, இரண்டணாவுக்கு வளையல் - ஆக ஐந்து ரூபாய் செலவில் ரிக்ஷாக்கார - கூலிக்கார ஏழைக் கடவுளின் சந்நிதானத்தில் ரஞ்சிதத்தை மருதமுத்து கண்ணாலம் கட்டிக் கொண்டான்.
அந்த ஐந்து ரூபாயைச் சேர்ப்பதற்கு அவன் ஒரு மாதம் முழுவதும் சிரமப்பட வேண்டியிருந்தது. தனக்குக் கிடைக்கும் கூலிக் காசில் தினந்தோறும் இரண்டணா மூன்றணாவாகச் சேர்த்தான். தன் கையிலிருந்தால் செலவாகி விடும் என்று பயந்து மூலைக்கடை சாயபுவிடம் கொடுத்துச் சேமித்தான். அதற்குள்தான் அந்த ரஞ்சிதத்துக்கு என்ன அவசரம்.
முதலில் மருதமுத்து கலியாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. அது அவசியம் இல்லையென்று கருதினான். அங்கு வாழ்ந்தவர்களின் வளமுறை - பூர்வீகமாகவே அல்ல - தற்காலிகமாக சந்தர்ப்பவசமாக அப்படித்தான்!
ஆனால் அதற்குப் பட்டிக்காட்டுப் பெண்ணான ரஞ்சிதம் ஒப்பவில்லை. "மேளதாளம் இல்லாட்டியும், கூறையும் தாலியுமாவது கட்டிக்க வேணாமா? சாமி முன்னாலே நின்று சத்தியம் செஞ்சுக்குவோம், இதுகூட இல்லாட்டி கட்டிக்கறத்துக்கும், 'சேத்து வெச்சிக்கிறதுக்கும்' என்னா மச்சான் வித்தியாசம்?" என்று தர்க்கம் புரிய ஆரம்பித்தாள். மருதமுத்துவுக்கும் அவள் சொல்வது சரியென்று படவே ஒப்புக் கொண்டான். ரஞ்சிதத்துக்குத் தன் மச்சான் ஒப்புக் கொண்டதில் பரம சந்தோஷம். பாவம், அவளும்தான் யாருமற்ற அனாதையாக எத்தனை காலம் இருப்பது?
அவள் பட்டணத்துக்கு அனாதையாகவா வந்தாள்? அவள் அப்பன் பட்டணத்தில் கை வண்டி இழுத்துப் பிழைத்துக் கொண்டிருந்தபொழுது அவள் திண்டிவனத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில் தன் தாயுடன் 'பயிர் வேலை' செய்து கொண்டிருந்தாள். அவள் தாய் இறந்த செய்தி கேட்டுப் பட்டணத்திலிருந்து ஒரு வாரத்துக்குப் பின் வந்த அவள் தகப்பன் திரும்பிப் போகும்போது ரஞ்சிதத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். பட்டணத்தில் தகப்பனும் மகளும் வாழ்க்கை நடத்த... இருக்கவே இருந்தது பிளாட்பாரம்... கந்தல் பாய், மண் சட்டிகள்! கை வண்டி ஓட ஓட வாழ்க்கையும் நகர்ந்தது... ஒருநாள் அவனால் நகர முடியவில்லை.
அவன் நகராவிட்டால் நகரம் நகராமலா இருந்து விடும்?... அது நகர்ந்தது!
பிளாட்பாரத்தில் கிடக்கும் கூலிக்காரனின் சவத்தைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அது நகர்ந்தது!...
நாகரிகம் நௌ¤ந்து நகர்ந்து கொண்டிருந்த அந்த வீதியில் நாலு பேர் தோள் மீது கடைசிப் பிரயாணத்தைத் தொடங்கி விட்ட அப்பனின் பிரிவைச் சகிக்க முடியாத அனாதை ரஞ்சிதம் புலம்பிப் புரண்டு கதறிக் கொண்டிருந்தாள்!
"நான் அனாதை ஆயிட்டேனே..." என்று கதறிக் கொண்டிருந்த ரஞ்சிதத்தின் செவிகளில் "அழாதே, நான் இருக்கிறேன்" என்ற கனிவுமிக்க ஒரு குரல் ஒலித்தது. ரஞ்சிதம் திகைத்தாள். திரும்பிப் பார்த்தபொழுது தன் மச்சான் மருதமுத்து நிற்பதைக் கண்டவுடன் 'கோ'வென்று கதறினாள்; அவன் அவளைத் தேற்றினான்.
வரவர அவள் தன் அப்பனை நினைத்து அழுவதையே நிறுத்தி விட்டாள். அதற்குத்தான் அவன் அவசியம் இல்லாதபடி செய்து விட்டானே. அப்படி என்ன செய்தான்? ஒரு வார்த்தைதான் சொன்னான்.
"நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் உன்னைக் கண்ணாலம் கட்டிக்கிறேன். வீணா அழாதே!" என்று அவன் ஆறுதல் சொன்னதும் அழுது கொண்டிருந்த அவள் அவனை ஏறிட்டு நோக்கினாள். கலங்கிய விழிகள் பரவசத்தால் படபடத்தன. " என் கண்ணான.... உன்னை நான் கண்ணாலம் கட்டிக்குவேன்" என்று கூறி அவன் லேசாகச் சிரித்தான். அவள் உதடுகளில் மகிழ்ச்சி துடிதுடிக்க நாணத்தால் தலை குனிந்தாள்.
அதன் பிறகு தினந்தோறும் அவள்தான் அவனுக்குச் சோறு பொங்கிப் பரிமாறினாள். அவளும் அவனும் கண்ணாலம் கட்டிக் கொள்ளப் போகிறார்கள் என்று அடுத்த 'அடுப்புக்காரி'களெல்லாம் (அடுத்த வீட்டுக்காரர்கள் என்று சொன்னால் சரி வராது... பிளாட்பார வாசிகளின் குடும்பங்களைப் பிரித்துக் காட்டுவது அடுப்புகள்தான்!) பேசிக் கொண்டார்கள்.
மருதமுத்து கொத்தவால் சாவடியில் தலைச்சுமைக் கூலி! தினசரி கிடைக்கும் ஆறணா எட்டணா வருமானத்தில் இரண்டணா ஓரணா எப்படியோ மீதம் பிடித்துக் கொண்டு மிகுதியை ரஞ்சிதத்திடம் கொடுத்து விடுவான். பகலெல்லாம் கூலி வேலை... மாலை நேரங்களில் அவளிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவதன் விளைவாய் இரவு நேரங்களில் அவன் மனம் அவளை எண்ணித் தவியாய்த் தவிக்கும்; எதிர்கால இன்பத்திற்காக நிகழ் காலத்திலேயே துடியாய்த் துடிக்கும். ஆனால் ரஞ்சிதம் அதற்கெல்லாம் மசிபவள் அல்ல; ஏனென்றால் அவள் பட்டணத்திற்கு வந்து அதிக நாளாகிவிடவில்லை; இன்னும் 'பட்டிக்காட்டுத்தனம்' இருந்தது.
"சாமி முன்னாடி நின்னு சத்தியம் பண்ணித் தாலி கட்டினாத்தான்..." என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.
கடைசியில் எப்படியோ காசு சேர்ந்து விட்டது.
சோறு விற்கும் கிழவி ஒருத்தி மருதமுத்துவையும் ரஞ்சிதத்தையும் பார்த்து "மவராசியா வாழணும்..." என்று ஆசிர்வதித்தாள்.
"என்ன மச்சான், கண்ணாலச் சாப்பாடு எப்போ?..." என்று பரிகாசம் பேசி மகிழ்ந்தான் அவன் சகாக்களில் ஒருவன்.
சிறுவர்கள் சிலர் அவனிடம் 'வெகுமானம்' கேட்டனர்.
அவனும் சிரித்துக் கொண்டே இரண்டு மூன்று காலணாக்களை 'வெகுமானம்' அளித்தான்.
லோன்ஸ்குயர் பார்க்கின் கம்பி வேலியின் ஓரமாக எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரின் புறாக் கூண்டு போன்ற மகா சன்னிதானத்தில் அவன் ஏற்றி வைத்த தரும விளக்கு ஜோதியாய், சுடராய், ஒளியாய், மஹா ஹோமமாய் எரிந்து கொண்டிருந்தது.
ஓரணா கடலை எண்ணெய் அல்லவா ஊற்றியிருக்கிறான்.
பார்க்குக்கு எதிரே, மாதா கோயில் சுவர் ஓரமாகக் கட்டை வண்டி, கை வண்டி, குப்பைத் தொட்டி முதலியவற்றின் இணைபிரியா ஒட்டுறவுடன் நிலைத்து விட்ட அடுப்பில் மீன் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. கஞ்சி மொடமொடக்கும் புதுப்புடவையின் விறைப்போடு கூடிய கொசுவத்தை மடக்கிக் கால்களுக்கிடையே செருகிக் கொண்டு குனிந்து நின்று குழம்பைத் துழாவிக் கொண்டிருந்த ரஞ்சிதத்தின் கைகளில் கலகலக்கும் கண்ணாடி வளையல்களிலும், கழுத்தில் தொங்கிய மஞ்சள் சரட்டிலும், மஞ்சள் பூசிய கன்னக் கதுப்பிலும், நெற்றியில் ஜொலித்த குங்குமப் பொட்டின் ஜிகினாத் தூளிலும் அடுப்பில் கனன்ற தீ ஜீவாலை - நாற்புறமும் சுழன்று நௌ¤ந்து குழம்புச் சட்டியின் அடிப்பாகத்தை நக்கி நிமிர்ந்த தீ நாக்குகளின் செவ்வொளி - படர்ந்து பட்டுப் பிரகாசித்தது.
அவள் அடுப்பை, கனன்று எரியும் கங்குகளைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தாள். அவள் கண்களில் கங்குகளின் பிம்பம் பிரதிபலித்தது. அவள் முகத்தில் புதிய, இதுவரை அவன் காணாத, அனுபவிக்காத ஒரு அழகு, ஒரு தேஜஸ், ஒரு மயக்கம், ஒரு லாகிரி... என்னவோ தோன்றியது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அவளருகே குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்தான் மருதை. அவன் இதழ்க்கடையில் சிரிப்பு சுழித்தது. கீழுதட்டை அமுக்கிப் பற்களால் கடித்தவாறு, புருவங்களை உயர்த்தி, முகத்தைச் சாய்த்து ஒரு கோணல் பார்வையோடு பெருமூச்செறிந்தான்.
"ஏ குட்டி, கொஞ்சம் நெருப்பு எடு." ஒரு பீடையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு கேட்டான்.
"ஐய... கூப்பிடறதைப் பாரு... குட்டியாமில்லே, குட்டி" என்று முனகிக் கொண்டே தீ பற்றிய சுள்ளி ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள். சுள்ளியை வாங்கும்போது அவள் கையையும் சேர்த்துப் பற்றிக் கொண்ட மருதமுத்து, அவள் கரங்களில் அடுக்கியிருந்த கண்ணாடி வளையல்களோடு விளையாடிக் கொண்டே கொஞ்சுகின்ற குரலில்,
"கண்ணாலம் கண்ணாலமின்னு கண்ணாலம் கட்டியாச்சு, இப்ப என்ன சொல்லுவியாம்..." என்று குரலைத் தாழ்த்தி அவள் காதருகே குனிந்து ரகசியமாக என்னவோ கூறினான். அதைத் தொடர்ந்து கண்ணாடி வளையல்களோடு அவள் சிரிப்பும் சேர்ந்து கலகலக்க, "கையை வுடு மச்சான்... அடுப்பிலே கொழம்பு கொதிக்குது" என்று சிணுங்கிக் கொண்டே அவன் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டே ரஞ்சிதம் முன்றானையால் முகத்தை மூடி உள்ளூரச் சிரித்துக் கொண்டாள். அப்படி அவன் என்னதான் கேட்டானோ? அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.
"ஊஹீம், சொன்னாத்தான்..."
"இனிமே என்னை என்னா கேக்கறது?..." என்று சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பி அடுப்பைக் கவனிக்க முனைந்தாள் ரஞ்சிதம். அவள் முதுகில் என்னமோ நமைத்தது, உடல் முழுவதும் சிலிர்த்தது.
சோறு சமைத்துக் குழம்பு காய்ச்சிப் புருஷனுக்கு விருந்து படைத்துவிட்டுத் தானும் சாப்பிட உட்கார்ந்தாள் - எல்லாம் நடுத்தெருவில்தான்!
"ரஞ்சி, நான் பார்க்கிலே அந்த மூலை பெஞ்சியிலே படுத்திருக்கேன்" என்று மற்றவர்கள் காதில் விழாதபடி சொல்லிவிட்டுச் சென்றான் மருதமுத்து.
சோறும் குழம்பும் நன்றாகத்தான் இருந்தது என்றாலும் ரஞ்சிதத்திற்கு சோறு கொள்ளவில்லை.
*****       *****      *****மணி பத்துக்கு மேலாகிவிட்டது. பார்க்கிலுள்ள மூலை பெஞ்சில் மருதமுத்து புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். பெஞ்சுக்குக் கீழே கிழிந்த பாயும் பழைய போர்வையும் கிடந்தன. அவன் விரல்களுக்கிடையே பீடி நெருப்புக் கனிந்து கொண்டிருந்தது. இன்னும் தெருவில் சந்தடி அடங்கவில்லை.
ரஞ்சிதம் தயங்கித் தயங்கி மௌ¢ள மௌ¢ள அசைந்து பார்க்குக்குள் நுழைந்தாள். அவனருகே தலைமாட்டில் அவனுக்குத் தெரியாமல் வந்து நின்றாள். தன் பின்னால் அவள் வந்து நிற்பதை அறிந்தும் அறியாதவன் போல் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான் மருதமுத்து. தான் தூங்கிவிட்டதாக அவள் எண்ணிக் கொள்ளட்டும் என்று லேசாகக் குறட்டை விட்டான். ஆனால் அவன் கையில் புகைந்து கொண்டிருந்த பீடித்துண்டு அவனை அவளுக்குக் காட்டிக் கொடுத்து விட்டது. அவளுக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு மௌனமாய் நின்றிருந்தாள். அவளுக்குக் கழுத்து நரம்புகளில் உள்ளூர என்னவோ உரசிக் கிளுகிளுத்து ஓடி உடல் முழுவதும் பரவுவது போல் இருந்தது. அவனுக்கும் அங்கு நிலவிய மௌனம் சிரிப்பை மூட்டியது; அவன் அடக்கிப் பார்த்தான்; அவன் முகத்தில் சிரிப்பின் ரேகைகள் ஓடிப் பாய்ந்து களுக்கென்று குரலும் வெடித்துவிட்டது. அவளும் சிரித்தாள். இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் காரணமின்றியோ காரணத்தோடோ விழுந்து விழுந்து சிரித்தனர். சிரித்து ஓய்ந்த பின் ரஞ்சிதம் பெஞ்சின் மறுகோடியில் நாணிக்கோணி உட்கார்ந்தாள். "ரஞ்சி, வெத்தலை பாக்கு வெச்சிருக்கியா? குடு!" அவள் வெற்றிலை மடித்துக் கொடுத்தாள். மருதமுத்து வெற்றிலையைச் சுவாரஸ்யமாக மென்று கொண்டே அவளருகில் உட்கார்ந்து கொண்டான்...
நல்ல நிலவு...
நிலா வெளிச்சம் அந்தக் காதலர்களுக்கு இன்பமளிக்க வில்லை; இடைஞ்சலாய் இருந்தது...
பெஞ்சின்மீது அமர்ந்திருந்த ரஞ்சிதத்தின் முகத்தில் ஓங்கி வளர்ந்த அரசமரக் கிளைகளின் ஊடே பாய்ந்து வந்த நிலவின் ஒளிக் கதிர்கள் விழுந்து கொண்டிருந்தன. அந்த ஒளியில் அவள் விழிகள் மின்னின. வெற்றிலைக் காவி படிந்த உதடுகளில் ஊறிப் படர்ந்த வெற்றிலைச் சாற்றின் மினுமினுப்பு மருதமுத்துவின் உதடுகளை என்னவோ செய்தது. அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு அவளையே பார்த்தான். அவள் கழுத்திலே கிடந்த கருவ மணியும் மஞ்சள் கயிறும் முறுக்கிக் கொண்டு மார்பின் நடுவே தடுமாறி நெகிழ்ந்து கிடந்தது. நழுவிப் போன மேலாக்கினூடே, ரவிக்கையில்லாத - கருங்காலிக் கடைசல் போன்ற தேகத்தின் வனப்பு மறைந்தும் மறையாமலும் மருதமுத்துவை மயக்கிற்று.
"ரஞ்சி!''
அவள் பெருமூச்சு விட்டாள்.
விம்மி மேலெழுந்து அவள் நெஞ்சம் புடைத்ததனால் நிலை குலைந்த மருதமுத்து அவளை - அவளுடைய வெற்றுடலை மார்புறத் தழுவிக் கொண்டான்.
"வுடு மச்சான்" என்று திமிறிக் கொண்டு தன்னைச் சரி செய்துகொண்டு நகர்ந்து உட்கார்ந்தாள் ரஞ்சி.
எதிரிலிருக்கும் 'முஸ்லிம் ரெஸ்டாரண்ட்' இன்னும் மூடப்படாததை அப்பொழுதுதான் கவனித்தான் மருதமுத்து.
"சீச்சீ... இந்தப் பார்க் ரொம்ப 'நாஸ்டி'யாப் போச்சு" என்று ஒரு வெள்ளை வேஷ்டிக்காரன் இவர்களைப் பார்த்தவாறே தம்மருகில் வந்தவரிடம் சொல்லிக் கொண்டே நடந்தான். மருதமுத்துவின் உடல் நாணிக் கூசியது - ரஞ்சிதம் பரிதாபகரமாக விழித்தாள்.
"நம்ம ஊரிலேயே கண்ணாலம் கட்டிக்கிட்டிருந்தா?" என்று சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் ரஞ்சியின் குரல் அடைத்தது.
அவனும் பெருமூச்சு விட்டான்.
"கஞ்சியில்லாட்டியும் நமக்குன்னு ஒரு குடிசையாச்சும் இருக்குமில்லே. பட்டினியோட ஒருத்தருக்கும் தெரியாம கவுரவமா படுத்துக் கெடக்கலாமில்லே... சீச்சீ! இது என்ன பொழைப்பு? தெருவிலே கண்ணாலம் கட்டிக்கிணு, தெருவிலே புள்ளை பெத்துக்கினு, தெருவிலே செத்தும் போறது" என்று சலிப்புடன், வெறுப்புடன், துயரத்துடன், ஏமாற்றத்துடன், ஏக்கத்துடன் முனகிக் கொண்டாள் ரஞ்சி. அவன் மௌனமாய் இருந்தான்.
சற்று நேரம் கழித்து ஒரு பெருமூச்சுடன் சொன்னான்:
"என்னா பண்றது ரஞ்சி?... அவுங்க அவுங்க தலையெழுத்துப்படிதா நடக்கும். ஊர்லே ஒலகத்திலே எவ்வளவோ பேரு கண்ணாலம் கட்டிக்கிறாங்க. பங்களா என்னா! காரு என்னா! அதிலாட்டிப் போனாலும் ஒரு சின்ன வீடு, ஒரு பஞ்சு மெத்தை - அதாவது இருக்கும். எல்லாத்துக்கும் குடுத்து வைக்கணும். நம்ம விதி இப்படி" என்று வருத்தத்தோடு புலம்பினான். "என்னா மச்சான், இதுக்கா நீ கவலைப்படறே? நீ இருக்கிற வரைக்கும் எனக்கு ஒரு குறையும் இல்லே; காரும் பங்களாவும் வெச்சிருக்கிறவங்க கதையெல்லாம் தெரியாது போலிருக்கு. ஆம்படையான் பெண்டாட்டி விசயம் கச்சேரி வரைக்கும் சிரிக்குதே... நம்ம மாதிரி அவுங்களுக்கு ஒருத்தர் மேலே ஒருத்தருக்கு ஆசையிருக்குமா...?"
'இனிக்கும் இன்ப இரவே நீ வா வா..." என்று ஹோட்டல் ரேடியோ விரகத்தால் உருகிக் கொண்டிருந்தது!
ஜன சந்தடி அடங்கிவிட்டது. ஹோட்டலில்கூட ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை.
மணி பன்னிரண்டு அடித்தது.
பிளாட்பாரத்தில் வாழும் மனிதர்களெல்லாம் உறங்கிக் கொண்டிருந்தனர். பனி மூட்டம் அவர்களின் மீது கவிந்து கொண்டிருந்தது. விறைக்கும் குளிரில் அழுக்குக் கந்தல்களினுள் அந்த ஜீவன்கள் முடங்கிக் கிடந்தன. பச்சைக் குழந்தைகள் தாயின் மார்பினுள்ளே மண்டிக் காந்தும் வெப்ப சுகத்தில் பம்மிக் கொண்டன. அவர்கள் தலைமாட்டில் சொறி நாய்களூம், கிழட்டு மாடுகளூம் அரைத் தூக்கத்துடன் காவல் காத்தன.
பார்க்கில் நிசப்தம் நிலவியது; மருதமுத்து பெஞ்சியிலிருந்து எழுந்து செடி மறைவில் விரித்திருந்த பழம்பாயில் படுத்துப் புரண்டு கொண்டிருந்த ரஞ்சிதத்தின் அருகே சென்று அமர்ந்தான்.
"ரஞ்சி... தூங்கிட்டியா?"
"இல்லே..."
"ஒனக்குக் குளிருதா?"
"உம்."
இருவரும் மொடமொடக்கும் அவளுடைய புதிய சிவப்புப் புடவையால் போர்த்திக் கொண்டார்கள்.
போர்த்தியிருந்த புடவை மௌ¢ள மௌ¢ள அசைந்தது.
"மச்... சான்..." அழுவதுபோல் திணறியவாறே முனகினாள் ரஞ்சிதம்.
திடீரென அந்தத் தெருவிலிருந்து ஒரே வெளிச்சம் அவர்கள்மீது பாய்ந்தது!
"ஐயோ!..." என்று பதறினாள் ரஞ்சி.
"காருதான்... போயிடும்..."
அவன் தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் ரஞ்சிதம்.
கார் சென்ற பிறகு, உலகத்தையே, தங்களையே, மறந்திருந்த அவர்களின் அருகே காலடி ஓசைகளூம் பேச்சுக் குரலும், சிரிப்பொலியும் கேட்டன.
மினர்வா தியேட்டரில் இரண்டாவது காட்சி முடிவடைந்து கும்பல் வீதியில் பெருகி வந்து கொண்டிருந்தது.
மருதமுத்து எழுந்து சென்று பெஞ்சின் மேல் படுத்துக் கொண்டான்.
ரஞ்சிதத்திற்கு அழுகையே வந்துவிட்டது!
மருதமுத்துவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. யார் மீது ஆத்திரப்படுவது?...
கும்பலில் ஒரு பகுதி முஸ்லிம் ரெஸ்டாரண்டிற்குள் படையெடுத்தது. வெகுநேரம் வரை சந்தடி அடங்கவில்லை.
*****       *****      *****மணி ஒன்று அடித்தது.
முஸ்லிம் ரெஸ்டாரெண்டில் ஆளரவமே இல்லை. பார்க் அருகே ஒரு ரிக்ஷாக்காரன் நின்றிருந்தான். அவனருகே ஒரு மஸ்லின் ஜிப்பாக்காரன்... "அப்புறம் என்ன சொல்றே?"
"வா சாமி... நல்ல ஸ்டூடன்ஸீங்கதான்; பிராமின்ஸ் சார்... வண்டியிலே ஏறு சார்... போவும்போது பேசிக்குவோம்."
மஸ்லின் ஜிப்பாக்காரனை ஏற்றிக் கொண்டு நகர்ந்து, பிராட்வேயிலிருந்து பிரியும் ஒரு சிறிய சந்தில் நுழைந்து விரைந்து மறைந்தது ரிக்ஷா.
"தூ... இதுவும் ஒரு பிழைப்பா? கஸ்டப்பட்டு வண்டி வலிக்கிற அந்தக் 'கயிதை'க்கு ஏன் இந்தப் பேமானிப் புத்தி?" என்று காறி உமிழ்ந்தான் மருதமுத்து.
"என்ன மச்சான் திட்டறே?"
"ஊரும் ஒலகமும் இருக்கறதைப் பார்த்தா திட்டாமெ எப்படி இருக்கிறது? இன்னம் ஒனக்குத் தூக்கம் வரல்லியா... உம்... எப்படி வரும்" என்று தனக்குத் தானே பேசிக் கொண்டான் மருதமுத்து.
நிலவு மேகத்தில் மறைந்தது.
ஒளி மிக்க அந்த பூர்ணிமை இரவும் இருண்டது. முஸ்லிம் ரெஸ்டாரெண்டும் மூடப்பட்டது. மனித சந்தடியே அற்றுப் போயிற்று.
ஒரே அமைதி!
பார்க்கினுள் நெடிது வளர்ந்திருந்த அரசமரக் கிளைகளில் காகங்கள் சலசலத்தன; விடிந்து விட்டது போன்ற பிரமை போலும்... சில காகங்கள் கரைந்தன. வெளிறிய இருளின் பிடிப்பில் ஊமைத்தனம் போல் நட்சத்திர ஒளி ஜாடை காட்டிற்று. நாய் ஒன்று எழுந்து நின்று உடலை வளைத்து முறித்துச் சடசடத்து உதறிக் கொண்டு அலுப்புத் தீர்ந்ததுபோல் எங்கோ நோக்கி வேகமாக ஓடியது. மணி இரண்டு அடித்தது.
"ரஞ்சி..."
"..."
"ரஞ்சி..."
"உம்..."
பெஞ்சு காலியாயிருந்தது.
செடி மறைவில் இலையோ இருளோ அசைந்தது.
"டக்... டக... டக்."
முதலில் அந்த ஓசையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
"டக் டக்... டக் டக்..." ஓசை அவர்களைச் சமீபிக்கவே அவர்கள் சலனமின்றி ஒன்றிக் கிடந்தனர்.
"ஏய், யாரது? எழுந்து வாம்மே" என்ற போலீஸ்காரனின் முரட்டுக் குரல், வலுக்கட்டாயமாக - மிருகத்தனமான - மனித உணர்ச்சிகளிலிருந்து, மனித நாகரிகத்தின் புதை குழிக்கு - அவளிடமிருந்து அவனைப் பிய்த்தெறிந்தது. அவன் உடல் பதை பதைக்க உதடுகள் துடிதுடிக்க எழுந்து வந்தான். அவள் செடி மறைவில் நின்று தனது புடவையைச் சுற்றிக் கொண்டாள்.
"வெளியே வாம்மே" என்று போலீஸ்காரன் அசூயையுடன் உறுமினான்.
"பயம்மா இருக்கே மச்சான்..." என்று அந்தப் பட்டிக்காட்டு யுவதி பரிதாபகரமாகத் தன் கை பிடித்த கணவனிடம் குழறினாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
"பயப்படாதே வா, ரஞ்சி" என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, பார்க்கின் இரும்புக் கிராதியைத் தாண்டிக் குதித்து வெளியே வந்தான் மருதமுத்து. விளக்குக் கம்பத்தடியில் போலீஸ்காரன் நின்றிருந்தான்.
"யார்ரா நீ?" என்று சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதிவிட்டான் போலீஸ்காரன்.
"வந்து வந்து கூடைக்காரன், சாமி..."
"ஏய், இப்படி வெளிச்சத்துக்கு வாம்மே" என்று அவளைக் கூப்பிட்டான் போலீஸ்காரன். அவள் பயந்து நடுங்கிய வண்ணம் விளக்கு வெளிச்சத்தில் வந்து நின்றாள். நெற்றித் திலகம் கலைந்து, கூந்தல் அவிழ்ந்து, சிகையில் சூடிய கதம்பம் சிதைந்து சிதறிக் கிடந்தது.
"ஏம்மே, இங்கதான் இடமா? ஒம் பேரு என்னாம்மே?" என்று பாக்கெட்டிலிருந்த சிறு நோட்டுப் புத்தகத்தையும், பென்சிலையும் கையிலெடுத்தான் போலீஸ்காரன். அவள் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன்,
"ரஞ்சிதம், சாமி" என்றாள்.
"சார்... சார்..." என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான் மருதமுத்து.
"நீ ஒண்ணும் பயப்படாதே! 'இவதான் என்னைக் கூப்பிட்டா'ன்னு ஸ்டேஷனுக்கு வந்து ரிப்போர்ட்டு குடுத்துடு. ஒன்னே விட்டுடுவோம்" என்றான் போலீஸ்காரன்.
ரஞ்சிதத்திற்கு விஷயம் விளங்கி விட்டது.
"நாங்க புருஷன், பெஞ்சாதி சாமி..." என்று பதறினாள் ரஞ்சிதம். போலீஸ்காரன் சிரித்தான். அவள் சொன்னதை அவன் நம்பவில்லை.
"சத்தியமாத்தான் சாமி... இந்தப் புள்ளையார் சாட்சியா நாங்க புருஷன் பெஞ்சாதிங்க சாமி. இதோ பாருங்க" என்று அவள் கழுத்தில் கிடந்த கயிற்றை வெளியே இழுத்துக் காண்பித்தான் மருதை.
சட்டத்தின் வேலிக்குள் நிற்கும் அந்தப் போலீஸ்காரனால் தலையை நிமிர்த்தி அந்த மஞ்சள் கயிற்றைக் காண முடியவில்லை.
அவன் சட்டம் 'இருட்டைத் துருவி திருட்டைக் கண்டுபிடி' என்றுதான் கற்றுக் கொடுத்திருக்கிறது. மனசைத் துருவி உணர்ச்சியைப் பார் என்று சொல்லிக் கொடுக்கவில்லை.
அவன் கண்டுபிடித்தது குற்றம். குற்றவாளியைக் கைது செய்ய வேண்டியது சட்டம். சட்டத்தின் வாரிசு போலீஸ்காரன்! அவன் ஒழுக்கத்தின் பிரதிநிதியோ உண்மையின் தூதுவனோ அல்ல.
"உம், நட நட... அதெல்லாம் ஸ்டேஷனிலே பேசிக்கலாம்" என்று அவளைத் தள்ளினான்.
"ஐயா... ஐயா..." என்ற அந்தக் காதல் 'குற்றவாளி' - ரஞ்சிதம் கெஞ்சினாள். தன் கணவனின் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள். அவன் தலையைக் குனிந்த வண்ணம் போலீஸ்காரனுடன் நடந்து கொண்டிருந்தான். அவளும் அவர்களைத் தொடர்ந்தாள்.
ஊரே அடங்கிய அந்த அமைதியான இரவில் அந்த நகரத்தின் பெரிய வீதியில் சட்டத்தின் ஹிருதயத் துடிப்பு போல் ஜீவனுடன் கம்பீரமாக போலீஸ்காரனின் பூட்ஸ்களின் சப்தம் டக் டக் என்று ஒலித்தது. ரஞ்சிதத்திற்குத் தன் ஹிருதயத்தில் யாரோ மிதிப்பதுபோல் 'பக் பக்' என்று நெஞ்சு துடித்தது.
எதன் மீதோ மிதித்து நசுக்கி நடந்து செல்லும் சட்டத்தின் காலடியோசை...
அதோ, 'டக்... டாக்... டாக்... டக்..."
(எழுதப்பட்ட காலம்: 1957)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக