தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம் மணிமேகலை. இந்நூல் பவுத்தமத நீதிகளை எடுத்துச் சொல்கிறது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரக் கதையின் தொடர்ச்சியாக இந்நூல் அமைந்துள்ளது. இவ்வுண்மையை சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரை எடுத்துக் கூறுகிறது. அதனால் காப்பியங்களில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நூலுக்கு "மணிமேகலைத் துறவு' என்றொரு பெயரும் உண்டு. இக்காப்பியத்தின் கதாநாயகியே மணிமேகலை. சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவனான கோவலனுக்கும், ஆடலரசியான மாதவிக்கும் பிறந்த மகள் மணிமேகலை. கோவலனின் குலதெய்வமான மணிமேகலையின் பெயரை தன் மகளுக்கு சூட்டினான். தன் பாட்டி சித்ராபதியையும், தாய் மாதவியையும் போல கணிகையாக வாழ மணி@மகலைக்கு விருப்பமில்லை. கற்புக்கரசி கண்ணகியைப் போன்று அறவழியில் அவள் வாழ்ந்தாள்.
சக்கரவாளக்கோட்டம் என்னும் இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த மணிமேகலையை அவளுடைய குலதெய்வமான மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்தீவிற்குத் தூக்கிச் சென்றது. அங்குள்ள புத்தக்கோயிலை வணங்கி தன் பழம்பிறப்பைப் பற்றி அவள் தெரிந்து கொண்டாள். முற்பிறவியில் இலக்குமி என்னும் பெயரில் வாழ்ந்ததை அறிந்தாள். முழுமதி நாளான வைகாசி விசாகநாளில் அமுத சுரபி என்னும் அட்சய பாத்திரத்தைப் பெற்றாள். பசியின் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பதற்காக அந்த பாத்திரத்தைப் பயன்படுத்தினாள். அறவண
அடிகள் என்னும் துறவியிடம் அறிவுரை கேட்டு, ஆதிரை என்னும் கற்புக்கரசியிடம் முதன் முதலில் பிச்சை ஏற்றாள். அன்று முதல் அந்த பாத்திரத்தில் அள்ள அள்ள அன்னம் குறையாமல் வந்தது. இக்காப்பியம் 30 காதைகளைக் கொண்டதாகும். முதல் காதையான விழாவறை காதையில் கூறப்படும் இந்திர விழாவே, தற்கால பொங்கல் பண்டிகை எனக்கருதப்படுகிறது. இவ்விழா 28 நாட்கள் நடந்துள்ளது. சிறைச் சாலையை அறச் சாலையாக்கிய பெண்மணி மணிமேகலை. பசிக் கொடுமையைப் போக்கியவளின் புகழை, என் நாவால் உரைக்க முடியாது என்று சாத்தனார் மணிமேகலையின் பெருமையை இந்நூலில் புகழந்துள்ளார். ""உலக வாழ்வில் இளமையோ, செல்வமோ நிலையில்லாதவை. வீடுபேறு என்னும் மோட்சத்தை பிள்ளைகளாலும் பெற்றுத் தர முடியாது. அறம் என்னும் தர்மசிந்தனை ஒன்று மட்டுமே நமக்கு சிறந்த துணை'' என்பதே மணிமேகலை காப்பியத்தின் சாரமாகும்.
""உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' என்னும் வரி இந்நூலில் இடம் பெற்றுள்ள சிறப்பான பாடல் வரியாகும். தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் நூலாசிரியர் சாத்தனாரின் புலமையைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக