15/02/2011

கண்ணாமூச்சி - ஜெயகாந்தன்

அவள்தான் அவனைப் படத்துக்குக் கூப்பிட்டாள். இதொன்றும் முதல் தடவையல்ல; தேவகி, நடராஜனை எத்தனையோ தடவை சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கிறாள். நடராஜனை மட்டுமா? அவனை அழைத்துக் கொண்டு போனது பிறர் கண்களை உறுத்துமோ என்கிற அச்சத்தில், தனது டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் கண்ணப்பனோடும், ரங்கசாமியோடும் தனித்தனியாகவும் சில சமயங்களில் கும்பலாகப் பலரோடு சேர்ந்தும் அவள் சினிமாவுக்குப் போவதுண்டு.
ஆனால் அதெல்லாம் வேறு. நடராஜனோடு சினிமாவுக்குப் போகும் அனுபவம் வேறு என்பது அவள் மனசுக்குத் தெரியும்; நடராஜனுக்கும் தெரியும். அதனை வெளிப்படையாக நடராஜனிடம் ஒப்புக்கொள்ள அவளுக்குத் தைரியமில்லை. இதற்கு என்ன தைரியம் வேண்டும்? என்னவோ ஒன்று அவளை உள்ளூரத் தடுக்கிறது. அவனும் அவள் மனத்தைத் திறந்து பார்த்துவிட என்னென்னவோ முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறான். எல்லாம் பரஸ்பர, சமத்காரப் பேச்சாகவும், வார்த்தைகளில் மூடி மறைத்துத் தேடிப் பிடிக்க, ஓடி ஒளியும் விளையாட்டுக்களாய் வியர்த்தமானது தவிர, உண்மையான உணர்ச்சிகளை வார்த்தை மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ள ஒரு தைரியம் வேண்டுமே அது அவளுக்குப் பிறந்ததே இல்லை.
நடராஜன் இன்று கூட நினைத்தான். 'ஒருவேளை பெண்களே இப்படித்தானோ? இதிலேயே அவர்கள் சுகம் கண்டு விடுகிறார்களோ! ஒருவேளை என்னை தேவகி நம்பவில்லையோ? நம்பா விட்டால் என்னோடு ஏன் பழக வேண்டும்? இந்த அளவு ஏன் நெருக்கம் கொள்ள வேண்டும்? இப்படி ஓர் ஆணை ஏங்க வைப்பதில் பல பெண்கள் தங்கள் பெண்மைக்கு அர்த்தம் காண்கிறார்களோ? இதற்கு நான் தானா கிடைத்தேன்? என்னைத்தான் சரியான அசடு; கைக்கேற்ற விளையாட்டுப் பொம்மை என்று நினைத்தாளோ?... இன்றைக்கு நான் அவளை நேரிடையாகவே கேட்டு விடட்டுமா? கேட்டால் மட்டும் என்ன? அதே கண்ணாமூச்சி விளையாட்டுப் பேச்சுதான்! உதடு கடிப்புத்தான்; முகச் சிவப்புத்தான்! - இன்னும் குழந்தைன்னு நினைப்புப் போல இருக்கு! முப்பது வயசாகுது... தலையிலே நரை கூட ஆரம்பிச்சுடுத்து... எப்படியும் போறா... எனக்கென்ன? இவளுக்காக நான் ஏன் காத்துக் கிடக்கணும்? ஊருக்குப் போயி - அம்மா அழுது அழுது, மோவாயைப் புடிச்சிக்கிட்டுக் கெஞ்சினாங்களே, ஒவ்வொரு தடவையும்... அவங்க மனசாவது திருப்தியாகட்டுமே - அவளை, வத்சலாவோ வள்ளியம்மாவோ? எவளையாவது கட்டிக்கிட்டு வந்துட்டா இவள் சள்ளையாவது விடும்! இன்னிக்கு என்கிட்டே ஏதாவது பேச வரட்டும்... ஆபீஸ் விஷயம் இருந்தா பேசுங்க, இல்லாட்டி வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்கன்னு சொல்லிட வேண்டியதுதான்' என்று ரொம்ப ரோசமாக முடிவு செய்து கொண்டுதான் நடராஜன் ஆபிசுக்கு வந்திருந்தான்.
அந்த முடிவு, ரோசம் எல்லாம் அவளைப் பார்த்தபோது மேலும் கொஞ்சம் உறுதிப்பட்டு, அவள் அவனிடம் 'என்ன மிஸ்டர்! உங்களோட போகணும்னுதான் காத்துக் கிட்டிருக்கேன். ஒரு வாரமா, டைமே கிடைக்கலை.... 'அனுபமா' பார்க்கலாம் வர்றீங்களா?' என்று அவள் அழைக்கும்போது, அவனது முடிவுகள் எல்லாம் உடைபட்டுப் போயின.
அவர்கள் இருவரும் சினிமாவுக்குப் போகிறார்கள் என்றால், படம் எதுவானாலும் முக்கியமில்லை; இருவரில் யாருமே படம் பார்க்கப் போவதில்லை என்று இருவருக்குமே தெரியும்.
அந்த மங்கிய வெளிச்சத்தில் இருவரும் பளபளக்கும் விழிகளை அடிக்கடி சந்தித்துக் கொள்வர். சில சமயங்களில் வெள்ளைப் பல் வரிசை பளீரிடும். அப்போதுகூட அவள் தன் கீழுதட்டை ஓரமாய் லேசாகக் கடித்துக் கொள்வது அவனுக்குத் தெரியும். அவன் பெருமூச்செறிவான்.
எவ்வளவு நாட்களுக்கு இந்த விளையாட்டு? எவ்வளவு நாட்களுக்கு இந்த ஏமாற்று?
ஒரு நாள் நடராஜன் "நீ என்னை காதலிக்கவில்லையா?" என்று அவளிடம் கேட்டான். "டோண்ட் யூ லவ் மீ?"
அவள் ஏன் அதற்கு அப்படிச் சிரித்தாள்? அவனுக்கு அழுகை வருகிற மாதிரி அவள் சிரித்தாள்!
"இதெல்லாம் என்ன? சினிமாவிலே, டிராமாவிலே கேட்கிற மாதிரி கேட்டுக்கிட்டு... வெக்கமா இல்லே?... ஐ லைக் யூ! அவ்வளவுதான் எனக்குச் சொல்லத் தெரியும்."
அதன் பிறகு நடராஜன் மனசுக்குள்ளே ரொம்ப வெட்கப்பட்டு விட்டான்? 'என்ன அசட்டுத்தனமாய் நான் அவளிடம் கேட்டேன்? ஹைஸ்கூல் மாணவன் மாதிரி நடந்து கொண்டேனே!' இரண்டு நாட்கள் அவள் கண்ணில் பட்டாலும் அவளிடம் சிக்கிக் கொள்ளாமல் நழுவி ஓடினான்.
ஒருமுறை ஊர் சென்று வந்தபோது கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று தன் தாய் ரொம்பவும் தன்னை வற்புறுத்துவதாகத் தேவகியிடம் வந்து அலுத்துக் கொண்டான் நடராஜன்.
"பாவம், வயசான காலத்திலே பெத்தவங்களுக்கு இருக்காதா ஆசை!" என்று ரொம்பச் சாதாரணமாக அவள் கூறினாள்.
நடராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தானாக ஏதோ கற்பனை செய்து கொண்டு தவிக்கிறோம் என்று நினைத்து ஒதுங்கி விடும்படியாகவும் இல்லை அவளுடைய பழக்கம்!
ஏழு வருஷமாக இதே விதமான ஒளிந்து பிடிக்கும் விளையாட்டு அவனுக்கு அலுத்துப் போய் விட்டது. அவளுக்கு அதுவே வாழ்க்கை என்றாகி விட்டது போலும்!
மணிக்கணக்கில் தனித்திருந்து இவனோடு அவள் பேசுவாள். சினிமாவுக்கு, கடற்கரைக்கு, ஹோட்டலுக்கு எங்கும் எவருடனும் போவாள். அவளைத் தடுக்கவோ, அவள் போக்கில் குறுக்கிடவோ, அவளுக்கு யாருமில்லை. அவளுடைய தாய் மகளுக்கு மூன்று வேளை சமைத்துப் போடவும், எப்போதாவது வருஷத்துக்கு ஒரு மாசம் திருநெல்வேலியில் இருக்கும் மகன் வீட்டில் போய் இருந்து விட்டு வரவுமே உரிமை பெற்றிருந்தாள்.
தேவகி கலியானமே செய்து கொள்ள மாட்டாள் என்று திருநெல்வேலியில் இருக்கும் அவளது அண்ணன் - கல்யாணம் செய்து கொண்டு, ஒரு டஜன் குழந்தைகளைப் பெற்று, ஏழு குழந்தைகளைப் பறிகொடுத்த பின் காச நோயோடு அவதியுறும் மனைவியுடன் - தாம்பத்திய வாழ்க்கையின் கோர முகங்களையே தரிசித்து மனம் கோணிப் போன அவளது அண்ணன் - மகிழ்ச்சியோடு முடிவு செய்து கொண்டான்.
எனவே, தேவகி அவர்கள் கண்களில், அன்புள்ளம் கொண்ட அவர்களின் எண்ணத்தில், மிகவும் கொடுத்து வைத்த பாக்கியசாலியாக, மிகவும் மகிழ்ச்சியும் சுதந்திரமும் கொண்ட வாழ்க்கை நடத்துகிறவளாகவே உருவகம் கொண்டாள்.
அவளுக்கென்ன, பட்டதாரி! மாதம் அறுநூறு ரூபாய் சம்பாதிக்கிறவள். பிக்கலா, பிடுங்கலா? நம்முடையா வாழ்க்கைதான் இப்படி ஆயிற்று. அவளாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று எண்ணிய போக்கினால், அவளுக்குத் திருமணம் என்கிற நினைப்பே, அவளைத் துன்புறுத்தக்கூடிய சாத்தானின் வேலை என்று, அது பற்றிய பேச்சையே எவரும் எடுப்பதில்லை.
மேலும் கலியாணம் செய்து கொள்ளாமல் கன்னி வாழ்க்கை நடத்துவது அவளது மதத்தில் ரொம்பவும் அங்கீகரிக்கப்பட்ட, அதிகப் பரிச்சயமுள்ள ஒரு பழக்கம்.
ஆம், தேவகி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள். அவளது முழுப்பெயர் தேவ இரக்கம்! கூப்பிட வசதியாக இருக்கவும், கொஞ்சம் லௌகிகமாக விளங்கவும், தேவகி என்று அவளே மாற்றிக் கொண்டாள்.
அப்படி அவளே ஒருவனை விரும்பினாலும், தான் அவனை மணந்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லுகின்ற அளவுக்கு அவளது குடும்பத்தில் அவளுக்குச் சுதந்திரம் இருப்பதால் தேவகியின் அண்ணனோ தாயோ அந்த முயற்சியில் இறங்கவில்லை.
அந்த அளவுக்குச் சுதந்திரமே அவளுக்குப் பெரிய தடையாகி நிற்கிறதோ?
அந்தச் சுதந்திரத்தை தேவகியால் இவ்வளவு தூரம்தான் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அதற்காக அவ்வளவுதான் அவளுக்குத் தேவையாயும் இருந்தது என்று முடிவு கட்டி விடலாமா?
அவள் இவ்வளவு தூரத்துக்குச் சுதந்திரமான, தன்னிச்சையான, பழக்க வழக்கங்கள் கொண்டிருந்த ஒரு காரணத்தினாலேயே அவளோடு பழக நேர்ந்த ஆண்கள் இதற்கு மேல் அதிகமான உரிமை எடுத்துக் கொண்டு அவளைத் தம் வழியில் இழுக்க அஞ்சினர். 'அவளிடமிருந்தே முதல் சமிக்ஞை வரட்டும். இவளுடைய தன்மைக்கு வரவேண்டுமே' என்று காத்திருந்து, அது வராமல் போகவே, அது இல்லை என்பதாக மனம் மாறி அவர்கள் விலகினர். தேவகியின் முப்பது வயதில், நான்கு வருஷக் கல்லூரி வாழ்க்கையின் போதும், இந்த எட்டு வருஷ உத்தியோக வாழ்க்கையின் போதும் இந்த மாதிரி அவளை நெருங்கி வந்து, பின்னர் நீங்கிப் பிரிந்த நல்ல நண்பர்கள் எத்தனையோ பேர்.
அந்த நட்பே அவளுக்கு நிறைவாகவும் மகிழ்வாகவும் இருந்தது. எனினும், அந்தப் பிரிவுகள் எல்லாமே பெரும் சோகங்கள் தான். அந்தச் சோகங்களை மனம் எண்ணாத அளவு வேகத்தோடு புதிய நட்புகள் முளைத்து விடுகின்றன.
வாழ்க்கை ரொம்பவும் உல்லாசமான பிரயாணமாகவும், சில சமயங்களில் ஓடி மறைந்து விளையாடும் பொழுதுபோக்காவும் போய்க் கொண்டிருந்தது.
அவள் சந்தித்த எத்தனையோ பேரில் இந்த நடராஜன் தான் - அவளுக்கு ஒத்த வயதோ அல்லது சிறிதே இளையவனாகவோ இருக்கலாம். இந்த ஒருவன்தான் ஏழு வருஷமாக இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் இதுவரை சலிப்பின்றி இவளோடு தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.
முதலில் தேவகி இவனை இங்கே, தான் வேலைக்கு வந்த ஓராண்டுக்குப் பிறகே சந்தித்தாள். இவனுக்கு இந்த செக்ஷனில் வேலை சொல்லிக் கொடுத்தவளே தேவகிதான். முதலில் நடராஜன் அவளிடம் நடுங்குவான். ஒரு வார்த்தை பேசுமுன், வேர்த்து வேர்த்து நனைந்து போவான்.
அப்போது அவனுக்குச் சரியாக மீசைகூட முளைக்கவில்லை.
ஏழு வருஷங்களுக்குப் பிறகு இவனைப் போலவே இவர்களில் ஒருவனாகப் பழகி, இவன் அளவுக்குத் தன்னிடம் மோகம் கொண்டு, பின்னர் பின்வாங்கி வேறு யாரையோ கலியாணம் செய்து கொண்டு இப்பவும் கூட மூங்கைத்தனமான அந்த மோகத்தை எப்போதாவது அசிங்கமாக உளறிக் கொண்டு, தன்னோடு பணியாற்றும் கண்ணப்பனையும் கந்தசாமியையும் எண்ணிப் பார்த்த ஏளனத்தில்தான் அன்று நடராஜன் 'டோண்ட் யூ லவ் மீ?' என்று கேட்டபோது, அவ்வளவு அர்த்தத்தோடு ஆண்களின் உருவில் தெரியும் இந்த ஆன்ம நபும்சகர்களை எண்ணி அவள் சிரித்தாள்.
அவள் முதன்முதலாக இந்த ஆபீசில் வந்து வேலை ஏற்றுக் கொண்டபோது அவளோடு மிக நெருக்கம் கொண்டு அவள் மனசைக் கவர்ந்திருந்தவன் கண்ணப்பன் தான்.
அதன் பின்னர் தேவகியிடம் தானும் மனத்தைப் பறி கொடுத்து, அதற்குமேல் வரத் தைரியம் இல்லாமல் நின்றவன் கந்தசாமி.
இப்போது இந்த நடராஜன்!
மனசைக் கவர ஒருவன், மனசைக் கவர்ந்ததும் தன்னிடம் மனம் பறி கொடுக்க ஒருவன், மனம் கவர்ந்து மனம் பறிகொடுத்து, 'நீ என்னைக் காதலிக்கவில்லையா?' என்று மனம் விட்டு, அதுவும் எதிர்மறையாகக் கேட்க ஒருவன்!
'இப்படியே ஒவ்வொருவனும் ஒவ்வொரு அங்குலமாக முன் வந்து முன் வந்து... என்னை எவனோ ஒருவன் முழுமையாக அடைவதற்குள் நானே முழுமை கண்டு முடிந்து போய் விட மாட்டேனா?' என்ற நினைப்பில்தான் அவள் சிரித்தாள்.
'என்ன காதல் வேண்டியிருக்கிறது, காதல்! எதைக் காதல் என்று நானே நம்பிச் சொல்ல முடியும்?' என்று புதிர் புரியாத குழப்பத்தினாலும் அவளால் சிரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.
முதன் முதலாகக் காதல் வசப்படுகின்ற எல்லோரும் நினைத்துக் கொள்கின்ற மாதிரி இதுவேதான் வாழ்க்கை என்ற நம்பிக்கையும், இனிமையான கனவுகள் பலவும் அவள் கன்னி மனத்தில் செழிக்கக் காரணமாயிருந்த அந்தக் கண்ணப்பனின் தொடர்பைக் காதல் என்பதா? அல்லது மனசின் கன்னித்தன்மை ஒருமுறை கண்ணப்பனுக்குப் பறிபோனதால் கெட்டுப்போய், 'நட்பு' என்ற வசதியான சொற்றொடரில் விருப்பத்தோடு தன்னை ஏமாற்றிக் கொண்டு அது காதலாகவே கனியுமென்று காத்திருந்து, அது கனியாமலே வெம்பிப் போய், இப்போதும் அந்த வசதியான சொற்றொடரான 'நட்பு' என்கிற முடிவு பெறாத நாடகமாகவே நிலைபெற்றிருக்கிறதே அந்த ரங்கசாமியின் தொடர்பு. அதைக் காதல் என்பதா?
ஒரே ஒரு அம்சத்தில் மட்டும் - அதாவது இந்த உறவில் சலிப்புற்று இன்னொருத்தியைக் கலியாணம் செய்து கொள்ள முடிவு செய்து, அவளுக்கு ஓர் அழைப்பிதழைக் கொண்டு வந்து நீட்டுகின்ற அந்த ஒரு விஷயத்தில் மட்டும் இந்த நிமிஷம் வரை வேறுபட்டு இருக்கின்ற இந்த நடராஜன், 'நீ என்னைக் காதலிக்கவில்லையா?' என்று கேட்டும், அந்த எதிர்மறைக் கேள்விகூட ஒருநாள் 'மிஸ் தேவகிக்கு' என்று எழுதிக் கொண்டு வந்து நீட்டப் போகும் அந்தக் கலியாண அழைப்பிதழ் எங்கோ தயாராகிக் கொண்டு இருக்கிறது என்று உணர்த்துவதற்கான சமிக்ஞையோ என்று எண்ணியே அவள் சிரித்தாள்.
'ஐ லவ் யூ' என்று தன் காதலைத் தைரியமாகத் தான் காதலிக்கும் ஒருத்தியிடம் சொல்வதே அவளுக்குத் தான் செய்யும் மரியாதை என்பதே இந்த ஆண்களுக்கு ஏன் தெரியவில்லை?
அவள் அதற்குச் சம்மதிக்காவிட்டால் தங்களுக்கு அது ஒரு அவமானமென்று ஆண்கள் கருதுவதே சரியென்றால் அவ்விதமே ஓர் 'அவள்' கருதுவது எவ்விதம் தவறாகும்? அந்த 'அவமான'த்திற்குத் தயாராகாத காதல் என்ன காதல்? அந்த அவமானத்திற்கு ஓர் அவனே தயாராகாவிட்டால் ஓர் அவள் எப்படித் தயாராக முடியும்?
உண்மையான காதல் சம்பந்தப்பட்ட இன்னொருவரின் சம்மதத்திற்குக் காத்திருக்காது. ஏனெனில் சம்பந்தப்பட்ட இன்னொருவரின் சம்மதம் பெறப்பட்ட பிறகே அது பிறக்கிறது. என் சம்மதத்தைத் தந்த பிறகும் அதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எதிலேயோ உணர்ச்சிகள் இருண்டுபோன இவர்களுக்கு அதைச் சொல்லுவதன் மூலமாகவா வெளிச்சம் பிறந்துவிடப் போகிறது என்ற முடிவிலேயே எல்லா சந்தர்ப்பங்களிலும் தன் சம்மதத்தைத் தருவதற்கு அவள் மறுத்திருக்கிறாள். அது கூடச் சரியில்லை; ஏற்கனவே தந்திருந்த தன் சம்மதத்தை 'இல்லை' என்று மறுக்கிற மாதிரி அவள் திரும்பப் பெற்றிருக்கிறாள்.
ஆனால் நடராஜன் விஷயத்தில் அவள் இன்னும் அவ்விதம் செய்யவில்லை.
ஏனெனில் இவன் ஒருவன்தான் "நீ என்னைக் காதலிக்கவில்லையா?" என்று எதிர்மறையாகக் கேட்கும் அளவுக்காவது நெருக்கமுற்றவன். அவன் அவ்விதம் கேட்கின்ற அளவுக்கு அவன் சந்தேகமும் கொண்டிருக்கிறானே என்பதனால்தான் தனது சந்தேகத்தையும், தனது சம்மதத்தை, சந்தேகிக்கின்ற முறையிலேயே ஒரு சிரிப்புடன் 'நான் உன்னை விரும்புகின்றேன்' என்று தன் விளையாட்டை வார்த்தையோடு நிறுத்திக் கொண்டு விட்டாள் தேவகி.
ஆனால் அந்த வார்த்தை விளையாட்டிலேயே வடுப்பட்டு அவன் தன்னிடமிருந்து விலக முயலும் போக்கினைத் தடுப்பதற்காகவே அவனை அவளே இன்று வலிய அழைத்திருந்தாள் சினிமாவுக்கு.
திடீரெனத் திரையில் தோன்றிய தேசியக் கொடியைக் கண்டு படம் முடிந்துவிட்டதை உணர்ந்தார்கள் இருவரும்.
இரண்டு மணி நேரமாய்ப் படம் பார்க்கிறோம் என்ற பேரில் இருளில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதிலும், ஒருவரைப் பற்றி ஒருவர் எண்ணமிடுவதிலும் படம் தொடர்பற்றுத் துண்டு துண்டாக மனசில் பதியாமல் பார்வையில் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.
தியேட்டரிலிருந்து வெளியில் வரிசையாக நகர்ந்து கொண்டிருந்த கும்பலில் தேவகி முன் செல்ல, அவள் பின்னால் ஒட்டி வந்து கொண்டிருந்த நடராஜன், உயர்த்தி முடிந்த கொண்டைக்குக் கீழே மிருதுவான ரோமம் நிறைந்த வெண்மையான அவளது அழகிய கழுத்தில் முகம் புதைத்துக் கொள்வதாய்க் கற்பனை செய்து உடல் சிலிர்த்தான்.
அவளிடமிருந்து மிதந்த மணம் அவன் மனசைக் கிறுக்கிற்று.
தியேட்டரை விட்டு வெளியில் வரும்போது லேசான மழைத் தூறல்கள் விழுந்து கொண்டிருந்தன. சில்லென்று வீசிய காற்றில் பறந்த தேவகியின் பட்டுப் புடவையின் தலைப்பு நடராஜனின் முகத்தில் விழுந்து மறைத்த போது...
"ஓ! ஸாரி!" என்று தேவகி சிரித்து உடம்பைப் போர்த்திக் கொண்ட போது -
"எஸ், ஸாரிதான்!" என்றான் நடராஜன்.
"போதும், பெரிய 'விட்' தான்!" என்று அவனைக் கேலி செய்தாள் தேவகி.
"என்ன அசட்டுத்தனமாய் நடந்து கொண்டேன்?" என்று நாக்கைக் கடித்துக் கொண்டான் நடராஜன்.
வெளியில் வந்து டாக்சி பிடித்துக் கொண்டு புறப்பட்ட போது மணி ஒன்பதரை ஆகியிருந்ததைப் பார்த்தாள் தேவகி.
"ஹவ் வாஸ் தி பிலிம்?" என்று தேவகி தலை சாய்த்து அவனைக் கேட்டபோது -
"எஸ், குட்!" என்றூ சம்பிரதாயமாகச் சொன்னான்.
"நான் படத்தையே பார்க்க முடியலே!" என்று கொஞ்சலாக, முகத்தில் ஒரு வாட்டத்துடன் சொன்னாள் தேவகி.
"ஏன்?"
அவள் அவன் செவியருகே நெருங்கி வந்தாள்:
"ஏனா! கேள்வியைப் பார்க்கலே? படம் பார்க்க விட்டாத்தானே? - என்னையே நீங்க பார்த்துக்கிட்டிருந்தீங்க!... நான் மட்டும் எப்படிப் படம் பார்க்கிறது?" என்று அவள் டாக்சி டிரைவர் காதில் விழாமல் கூறினாள்.
நடராஜனுக்கு உடம்பெல்லாம் ஒரு நடுக்கம் பரவி மனம் தவிக்க ஆரம்பித்தது.
"நோ நோ, நீங்க என்னவோ தப்பா நெனச்சி... நான் சாதாரணாமா நீங்க படத்தை எப்படி ரசிக்கிறீங்கன்னு பார்த்தேன்!" என்று முகம் சிவந்து கூறினான் நடராஜன்.
சற்று முன் தன் செவியருகே குனிந்து அவனது கன்னத்தைத் தொடவேண்டுமென்று துடித்த அவளது விரல்கள் இப்போது நடுங்கித் தளர்ந்தன.
"திருவல்லிக்கேணியில் என்னை விட்டுட்டு நீங்க போகணும்... ஆமா, இந்நேரத்துக்கு உங்க மெஸ்ஸிலே மீல்ஸ் இருக்குமா? ஏன் எங்க வீட்டிலேயே சாப்பிட்டுட்டுப் போயிடலாமே!... மணி ஒன்பதரை தானே ஆச்சு?... அப்புறம் பஸ்கூடக் கிடைக்கும் உங்களுக்கு அங்கே இருந்து!" என்று மிகுந்த பரிவுடன் கூறினாள் தேவகி.
"அதனால் என்ன, பரவாயில்லை. உங்க மதர் உங்களை மட்டும்தானே எதிர்பார்த்துச் சமைச்சி இருப்பாங்க?... நான் எப்படியும் மானேஜ் பண்ணிக்குவேன்."
"எங்க மதர் எல்லாம் ரெடியா எடுத்து வந்து டைனிங் டேபிளில் வெச்சுட்டு இந்நேரம் தூங்கியிருப்பாங்க.... என்ன இருக்கோ அதை ரெண்டு பேரும் 'ஷேர்' பண்ணிக்குவோம்... என்ன?" என்று அவள் மிகுந்த சொந்தத்தோடு சொன்னபோது அவனுக்கு மறுக்கத் தோன்றவில்லை. மனசுக்கு இதமாக இருந்தது அந்த அழைப்பு.
திடீரென அவன் உள்ளூறப் பயந்தான். 'இவள் சாதாரணமாக, இயல்பாக, பெருந்தன்மையாக சமத்துவமாகப் பழகுவதை நான் தவறாகப் புரிந்து கொள்கிறேனோ?" என்ற அச்சம் வரும்போது -
நடராஜனும் தேவகியும் நெருங்கிப் பழகுவதைக் கண்ட கண்ணப்பனும் ரங்கசாமியும், "போகப் போகத் தெரியும், அசட்டு பிசட்டுன்னு உளறி வைக்காதே!" என்று இவனை ஜாடை மாடையாக எச்சரித்ததும் அவன் நினைவுக்கு வந்தன.
ஆபீசில் தன் டிபார்ட்மெண்டுக்கு சூப்பிரண்டெண்டான அவளை, அந்தப் பதவிக்குரிய நாற்காலியில் உட்கார வைத்து, மனசால் கண்டான் நடராஜன். அவளுக்கு ஆபிசிலிருக்கின்ற மரியாதைகளும், அந்தஸ்தும், அவளை நெருங்க முடியாமல் நீங்கி வந்த கண்ணப்பன், ரங்கசாமி அனுபவங்களூம் ஒன்றன்பின் ஒன்றாய் நடராஜன் நினைவில் கவிந்து, அவளை நெருங்க விடாமல் பின்னுக்கு இழுத்தன.
'அவர்களுக்கெல்லாம் இல்லாத தனிச் சிறப்பு எனக்கென்ன இருக்கிறது?' என்று எண்ணியபோது, டாக்சியில் இரண்டு முழங்கால்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு குறுகி உட்கார்ந்து, தன்னையறியாமல் ஓர் ஓரமாய் அவன் உடம்பு நகர்ந்தது.
"சௌகரியமாக உட்காருங்கள், மிஸ்டர் நடராஜன்!" என்று அவனுக்குத் தள்ளி நகர்ந்து, தன் அருகே வர வசதியாக இடம் தந்த தேவகி கனிவாக அவனைப் பார்த்துச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவனுக்கு ஒரு தைரியத்தைத் தந்தது. இருந்தாலும் உள்ளூரப் பயமும் இருந்தது.
"அதோ... அந்த லைட் போஸ்ட் கிட்டே!" என்று டாக்சி டிரைவருக்கு வீட்டை அடையாளம் காட்டுவதற்காக அவள் ஒரு பக்கமாகச் சாய்ந்தபோது, அவளது மிருதுவான தோள் அவன்மேல் உரசிற்று. அப்போது மிக நெருக்கமாக அவன் முகத்தை அவள் பார்த்தாள்.
அவன் அந்த ஸ்பரிசத்தை உணராதவன் மாதிரி பாவனை புரிந்தான்.
கீழே இறங்கியதும் டாக்சிக்கு அவன் பணம் கொடுக்கப் போனபோது, "நோ" என்று அவள் அவன் கரத்தைப் பிடித்தாள். பிடித்தபின் சற்று அழுத்திக் கூறினாள். "நான் தான் தருவேன்!"
நடராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. 'இது சோஷலாகப் பழகுவதா? அல்லது காதலா? இந்தப் பெண்கள் திடீரென்று எப்படி வேண்டுமானாலும் மாறுவார்களே! அதனால் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டான்.
டாக்சிக்காரனை அனுப்பிவிட்டு நடராஜனின் பக்கம் திரும்பிக் கண்களைச் சிமிட்டியவாறே தேவகி சொன்னாள்: "அந்த டாக்சிக்காரன் நம்பளைப்பத்தி ஏதோ ஃபிஷ்ஷியாக நினைச்சிட்டுப் போறான்!" அதற்கு என்ன விதமாய்ப் பதில் கூறுவது என்று தெரியாமல் தூரத்தில் போகும் டாக்சியைப் பார்த்து ஒரு பொய்யான கோபத்துடன் முனகிக் கொண்டான் நடராஜன்: "ராஸ்கல்!"
தேவகி வீட்டின் கதவைத் தட்டியபின் பத்து வயதுள்ள அந்த வேலைக்காரச் சிறுமி கதவைத் திறந்தாள்.
"ஏண்டி, நீ இன்னிக்கி வீட்டுக்குப் போகலியா?"
"மழையா இருந்திச்சம்மா!... பெரியம்மா இங்கேயே படுத்துக்கச் சொன்னாங்க."
"சரி சரி, கடைக்குப் போய் நாலு மழைப்பழம் வாங்கிட்டு வா?" என்று கைப்பையிலிருந்த சில்லறையை எடுத்துச் சிறுமியிடம் தந்தாள் தேவகி.
அந்தத் தெருவில் எதிர்வரிசையில் உள்ள அந்த வெற்றிலை பாக்குக் கடையை நோக்கிச் சிறுமி நகர்ந்தாள்.
"உள்ளே வாங்க!" என்று நடராஜன் பின்தொடர விளக்கில்லாத ஹாலுக்குள் இருவரும் நுழைந்தனர். அந்த நிமிஷம் -
நடராஜனுக்கு மின்னலடித்தது மாதிரி மனசில் ஒரு தைரியம் பிறந்தது. அந்தத் தைரியத்திற்குச் சாதகமாக இப்போது அவர்கள் பிரவேசித்திருக்கும் ஹாலின் இருட்டு, அந்தச் சிறுமியை அவள் வாழைப்பழம் வாங்க அனுப்பியது, அந்த டாக்சிக்காரனைப் பற்றிக் கூறியது என்று ஒரு நூறு காரணங்கள் ஒரே சமயத்தில் சரசரவென வண்டியிலிருந்து மணல் சரிவது மாதிரி அவன் உள்ளே குவிந்த சுமையோடு அவனுக்கு மிக நெருக்கமாய்ச் சுவரருகே நின்று விளக்கின் சுவிட்சைத் தேடிக் கொண்டிருந்த தேவகியின் தோளைப் பின்னாலிருந்து இறுகப் பற்றினான் அவன்.
அந்த ஹாலின் மங்கிய இருளில் உயர்த்தி முடிந்த கொண்டைக்குக் கீழே மிருதுவான ரோமம் நிறைந்த வெண்மையான அவளது கழுத்து பளீரெனத் தெரிந்தது.
அதிலே முகம் புதைத்துக் கொள்கிற கற்பனை, நடைமுறை அனுபவமாக....
அவளால் அந்த விநாடிகளைக்கூட எண்ணிக் கணக்கிட முடிந்தது. அவள் மனசும் நெஞ்சமும் அந்தத் திடீர் ஸ்பரிசத்தில் விம்மி விம்மிக் கனத்தபோது, அவளது ஹிருதயத்தின் தாள கதியில் அலை அலையாக எழுந்த துடிப்பையே தன்னையறியாமல் தன்னுள் அவள் கணக்கிடலானாள். ஒன்... டூ... திரீ - எப்போதோ ஒருமுறை சிறுவயதில் அவளுக்கு நடந்த டான்ஸில்ஸ் ஆபரேஷனுக்கு முன் மயங்க வைப்பதற்காக 'ஈதர்' கொடுக்கும்போது ஒன்... டூ... திரீ என்று எண்ணிக் கொண்டே தன்னை இழந்தாளே, அது மாதிரி...
அந்த மயக்கத்தில் என்னமோ குழறினாள். தன்னை இழந்த அந்தத் தவிப்பில் எப்படியோ திமிறினாள். அந்த உணர்ச்சியின் நெருப்புத் தீண்டிய சுகத்தில் அவள் எப்படியோ துடித்துப் போனாள்! அவளிடம் ஏற்பட்ட இந்த சலனங்களினால் பயந்து, தீப்பிடித்த ஆடையை உதறுவது மாதிரி, "ஐ யாம் ஸாரி" என்று விலகி நின்று உடல் நடுங்கினான் நடராஜன்.
கண்களை மூடிய இமைகள் பனிக்க, விளக்கின் சுவிட்சைப் பொருத்தி, உயர்ந்த கரம் தாழ்த்தாமல், விரல்களைக் கூட நீக்காத நிலையில் சுவரில் சாய்ந்து, உடல் முழுதும் வியர்க்க, உயர்த்தி முடிந்த கொண்டை அவிழ்ந்து கழுத்தில் சரிய உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றிருந்த அவளது கோலத்தைக் கண்டதும் நடராஜனுக்கு அழுகையே வந்து விட்டது.
அவன் இரண்டாவது முறையாக "ஐ யாம் ஸாரி... என்னை மன்னிச்சிடுங்க!" என்று குரல் நடுங்கக் கூறிய போதுதான் ஏதோ சம்பந்தமில்லாத உலகத்தின், அர்த்தமில்லாத பாஷையைக் கேட்ட மாதிரி அவள் இமை திறந்து அவனைப் பார்த்தாள். வெளிச்சத்தில் அவனைப் பார்க்கும் பொழுது தனது முழுச் சம்மதத்தையும் வெளிப்படுத்த அவளது இதழ்களில் பிறந்த புன்னகை அவனது கோலத்தைக் கண்டதும் அரைகுறையாக வதங்கிச் செத்தது.
அந்த ஏழு விநாடியில் பெருகிய மயக்கம் ஒரே விநாடியில் தௌ¤ந்தது. சரிந்த கூந்தலைச் சட்டென உயர்த்தி முடிந்து கொண்டாள்.
கையில் நாலு வாழைப் பழங்களுடன் வேலைக்காரச் சிறுமி உள்ளே வந்ததால் இருவருக்கும் வசதியாகப் போயிற்று.
ஒன்றுமே நடக்காதது மாதிரி "வாங்க, உள்ளே வாங்க! உட்காருங்க!" என்று அவனை அழைத்தபின் தனது அறைக்குள் போனாள் தேவகி.
உள்ளேயிருந்து அவள் விம்முகிற மாதிரி நடராஜனுக்குத் தோன்றிற்று. அது உண்மைதானோ?
'அவள் வெளியே வருவதற்குள் பேசாமல் எழுந்து போய் விடலாமா?' என்று ஒரு விநாடி யோசித்தான் நடராஜன். 'இல்லை, நான் செய்த தவறுக்கு என்ன தண்டனையோ, அதை அவளிடம் பெற்றுக் கொண்டு போவதுதான் அதற்குப் பிராயச்சித்தம். சீ! நான் எவ்வளவு மட்டமான மனிதன்! இப்போது பேசாமல் இருந்து விட்டு, நாளைக்கு ஆபீசிலே என் மானத்தை வாங்கி விடுவாளோ?' என்று நினைக்க நினைக்க அவனுக்கு அழுகை நெஞ்சை அடைத்தது. 'எவ்வளவு ஆனந்தமான மாலை நேரத்தை அவள் எனக்குத் தந்தாள்! அதற்குத் தகுதியில்லாத நான், தரமில்லாத நான், எவ்வளவு அசிங்கமான இரவாக முறித்துவிட்டேன்?' என்று அவன் தன்னைத் தானே மனத்தில் சபித்துக் கொண்டிருக்கும்போது அவள் வெளியே வந்தாள்.
மௌனமாக இருவரும் சாப்பிட அமர்ந்தனர். முதல் கவளத்தை வாயருகே கொண்டு போகும் போது அவளை ஒரு முறை கலங்கிய கண்களோடு ஏறிட்டு நோக்கினான் நடராஜன். "ஐ யாம் ஸாரி!"
"ஷட் அப்!" என்று அடைத்த குரலில் அமைதியாகச் சொன்னாள் தேவகி. அவனது தவிப்பையும், இதற்காக அவன் வருந்துவதையும் பார்க்கும் போது அவளுக்கு வேதனையாக இருந்தது. அந்த ஏழு விநாடிகளில், எப்படிப்பட்ட ஒருவனுக்காக அவள் காத்திருந்தாளோ அவன் இவன் தானென்று திடம் கொண்டது எவ்வளவு பேதைமை என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்க்க பார்க்க அவளுக்கு எரிச்சலாய் வந்தது.
'எனக்குச் சம்மதம்' என்று ஒருத்தி எழுந்து ஆடவா முடியும்? அப்படி ஒருத்தி ஆடினால் அதைத் தாங்கிக் கொள்ள எத்தனை ஆண் பிள்ளைகள் இருப்பார்கள்?' என்று எண்ணும் போது அவளுக்குச் சிரிப்பு வந்தது.
அந்தச் சிரிப்பு, 'ஏ, அசடே! உனக்கு லவ் ஒரு கேடா?' என்று அவள் தன்னைப் பார்த்து இளிப்பது மாதிரி இருந்தது நடராஜனுக்கு.
அவள் ஒரு விநாடி யோசித்தாள். 'என் மனசைத் திறந்து காட்டி இதற்காக அவன் வருந்துவது எவ்வளவு அறிவீனம் என்று அவனுக்கு உணர்த்தித் தனக்கு இது இவ்வளவு மகிழ்ச்சி அளித்த அனுபவம் என்பதனை விளக்கி, இது இப்படியே நீடிக்க வேண்டும் என்று தனது ஆசையைப் பரசியமாகப் போட்டு உடைத்தால்தான் என்ன? ம்... அப்போது மட்டும் அவன் அதைச் சரியாக விளங்கிக் கொள்வானாக்கும்! இதுமாதிரி எத்தனை அனுபவமோ இவளுக்கு? அதனால்தான் இவளால் இதை இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது என்று நினைப்பான். ஐயோ, எனது இந்த முதல் அனுபவத்தை இவன் அவ்விதம் நினைப்பது எவ்வளவு பெரிய கொடுமை! இவ்விதம் இவனை நான் நினைக்க விடுவது எவ்வளவு பெரிய மடமை. மனசின் பாஷைகளை வாய் வார்த்தைகளா மொழி பெயர்த்துவிட முடியும்? அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களிடமே என் மனசு போய்ப் போய்ப் பேசிப் பேசித் தோற்கிறதே!' என்ற கசப்பையே உண்ணுகின்ற உணவோடு சேர்த்து விழுங்கினாள் தேவகி.
அவள் அவனிடம் சாப்பிட்டு முடியும் வரை எதுவுமே பேசவில்லை. அவனுக்கு அவளிடம் பேச இனி எதுவுமே இல்லை. அவன் விடைபெறும் பொழுது மட்டும் தெரு வாசற்படியில் நின்று சற்றுத் தயங்கிய பின்னர் அவளிடம் எதையோ யாசிப்பது மாதிரிச் சொன்னான்:
"நான் செய்த தப்பை மறந்திடுங்க!"
"ஓ, என்னால் அது முடியாது!" என்று தேவகி சொல்லும்போது அவளது மனசின் பாஷை அவனுக்கு இப்பொழுதும் புரியாததால், தன் தவற்றை இவள் மன்னிக்கவில்லை என்பதாக எண்ணி வருத்தம் தீராமலே விடைபெற்றுப் போனான்.
அவன் போகும் வரை அமைதியாகத் தெரு வாசலில் நின்றிருந்த தேவகி, புயல் மாதிரி உள்ளே போனாள். தெருக் கதவை அறைந்து தாழிட்டு விட்டு ஓடிப் படுக்கையில் குப்புற விழுந்தாள்; அழுதாள்.
தன்னைத் தனது ஆளுமையால் சொந்தத்தோடு ஆளுகின்ற ஆண் மகன் வரவே மாட்டானோ என்ற ஏக்கத்தில் அவள் விழிகள் பரிதாபமாக, வறட்சியோடு வெகு நேரம் உறக்கமின்றிக் கூரை முகட்டை வெறித்தவாறிருந்தன.
அடுத்த இரண்டு நாட்கள் நடராஜன் ஆபீசுக்கு வரவில்லை. அவன் வர மாட்டான் என்பதைத் தேவகி எதிர்பார்த்தே இருந்தாள். இதைக் கூட எதிர்பார்க்கவில்லையென்றால் தேவகியின் அனுபவங்களுக்குத்தான் என்ன அர்த்தம்?
மூன்றாம் நாள் தேவகி சற்றுத் தாமதமாக ஆபீசுக்கு வந்தாள். அவளது டிபார்மெண்டுக்குள் அவள் நுழைந்த போது, அவள் வருவதைக் கண்ட நடராஜன் தலையைக் குனிந்தவாறு தனது இருக்கையில் அமர்ந்திருந்தான். இருமருங்கிலும் வரிசையாகப் போடப்பட்டிருந்த மேஜைகளின் நடுவே நடந்து வந்த தேவகியின் பாதரட்சைகளின் சத்தத்தை நடராஜனின் செவிகள் துல்லியாகக் கேட்டன. அந்தக் காலடியோசை தன்னை நெருங்கி நெருங்கி வருவதை அறிந்து, அது தன்னைக் கடந்து போகிற வரைக்கும் தலை நிமிரக் கூடாது என்ற தீர்மானத்துடன் ஒரு பெரிய லெட்ஜரில் அவன் முகம் கவிந்திருந்தான். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி அவள் காலடி ஓசை அவனைக் கடந்து போய்த் தேய்ந்து மடியாமல் அவன் அருகே வந்து உறுதியாக நின்றது.
"குட்மார்னிங், மிஸ்டர் நடராஜன்!"
"குட்மார்னிங், மேடம்!" என்று எழுந்தான் நடராஜன்.
"சி.எல். ரிப்போர்ட் பண்ணியிருந்தேனே?" என்று ரொம்ப உத்தியோகத் தோரணையில் பதில் சொன்னான் நடராஜன்.
தேவகி சிரித்தாள்: "ஸிட் டவுன்!"
பாதரட்சைகள் சப்திக்கத் தனது இருக்கையை நோக்கி நடந்த தேவகி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்:
'மிஸ் தேவகிக்கு - என்று விலாசம் எழுதிக்கொண்டு வந்து என்னிடம் இந்த நடராஜன் மிக விரைவிலேயே நீட்டப் போகின்ற அந்தக் கலியாண அழைப்பிதழ் எங்கேயோ தயாராகிக் கொண்டிருக்கிறது!
(எழுதப்பட்ட காலம்: 1967க்கும் 1969 பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக