தமிழ்ச் சிறுகதை இலக்கியப் பரப்பை ஆழ்ந்து நோக்கும் போது ''மணிக்கொடி''க்கால எழுத்தாளரான புதுமைப்பித்தன், வலிவும், பொலிவும் மிக்க சிறுகதைகளைப் படைத்திருக்கின்றார். புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்றவுடன் படிப்பவர் மனதில் பளிச்செனத் தோன்றுவது அவரது நடைச்சிறப்புதான். அவருடைய கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்பு ஏற்படாமைக்குக் காரணம் அவருடைய நடையாளுமையே எனலாம். நடை ஓர் ஆசிரியனின் தனித்தன்மையை வெளிப்படுத்தவல்லது. படைப்பாளனை இனம் கண்டுகொள்ளும் வகையில் தெளிவுபடுத்துவது. இது, காலத்திற்குக் காலம் மாறுபடக்கூடியது. ''நடை என்பது, கதை சொல்லப்படும் முறையும் கருத்து வெளியீட்டிற்குப் பயன்படுத்தும் சொல் - தொடர் அமைப்புகளும் ஆகும். முன்னதில் சுருக்கம் வேண்டும்; பின்னதில் பொருத்தம், தெளிவு, குறிப்பு ஆகியன வேண்டும்.'' என்று மீனாட்சி முருகரத்தினம் கூறியுள்ளது இதற்குச் சான்றாக அமைகிறது. இவ்வகையில், புதுமைப்பித்தன் தமது ''சிறுகதைகளில்'' பயன்படுத்தியுள்ள நடை ஆளுமையை ஆய்வதே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.
கதைசொல்லும் முறை: கதை சொல்லும் முறை என்பது தொடக்க காலம் முதல் இன்றைய காலம் வரை ஒரு மரபாகப் பின்பற்றக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்போக்கினைப் புதுமைப்பித்தன் மேற்கொண்டுள்ளார் என்பதை அவரது படைப்புகள் உணர்த்துகின்றன. இவரது கதைகளைப் படிப்போர், கதைகளை விடக் கதை சொல்லும் முறையிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள். நடை வேறுபாடுகளில் பல்வேறு சோதனைகளைச் செய்து பார்த்தவர் புதுமைப்பித்தன். ''கருத்தின் வேகத்தையே பிரதானமாக்கிக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு பாதை அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது''. என்று புதுமைப்பித்தன் கூறியுள்ளார். தன் மூலம் ஒரு நடையே உருவாக்கிப் பின்பற்றியுள்ளார் என்பது சிந்திக்கத்தக்கது.
தவளைப் பாய்ச்சல் நடை: இந்நடையானது துண்டு துண்டாக நின்று பொருள் தரும். இந்நடையை இக்காலப் படைப்பாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நடையை அனைத்து படைப்பாளர்களும் பின்பற்றியுள்ளார்கள். இந்நடையினைப் புதுமைப்பித்தனும் கையாண்டுள்ளார். ஒரு நேர்கோட்டில் ஒரு தொடரிலிருந்து மற்றொரு தொடருக்குச் சொற்கள் தாவிச் சென்று, நின்று பொருளைத் தருவது தவளைப் பாய்ச்சல் நடையாகும். ''வாக்கியம் என்பது எழுவாயும் பயனிலையும் வேற்றுமையேற்ற சொற்களும் அடங்கியது. நடையில் (வழி கதை நடை) ஒன்று எழுவாய் இருக்கும்; பயனிலை இருக்காது. எழுவாயால் பயனிலை உய்த்துரைப்படும். ஒன்று ஒன்று இல்லாமையால் நடை தாவிச் தாவிச் செல்லுவது போன்றிருக்கிறது; அது நடையல்ல ''ஓட்டம்'' இந்த நடையில் புதுமைப் பித்தனின் சிந்தனை வேகம்தான் புலப்படுகிறது அவர் கருத்துக்களைக் கொட்டுவது தெரிகிறது''. என்று தி.முருகரத்தினம் தவளைப் பாய்ச்சல் நடைக்கு விளக்கம் கூறியிருப்பது ஈண்டு எண்ணத்தக்கதாகும்.
''கானப்பிரியன் உள்ளே வருகிறான். இயற்கையின் நிமிர்ந்த நடை, நேர் நோக்கு - கண்களிலே ஏதோ தோன்றி மறைந்த ஒரு கனவு. சபையைப் பார்க்கிறான். செயற்கையின் திறன், பெருமிதம் இறுமாப்பு - எல்லாம் சற்று மலைப்பு உண்டு பண்ணுகின்றன.'' என்ற அடிகள் துண்டு துண்டாக நின்று பொருளைத் தருகின்றன.
செந்நடை: தொடக்கக் காலத்தில் செந்நடை சிறப்பாகப் பேசப்பட்டது. அக்கால கட்டத்தில் பேச்சு வழக்கில், இந்நடையை மக்கள் மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை இவரது படைப்புகள் பறை சாற்றுகின்றன. அக்காலகட்ட மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளை இக்கால மக்களோடு பொருந்துவதாகப் புதுமைப்பித்தனின் நடை அமைந்திருப்பது நோக்கத்தக்கது. ''தமிழ்ச் சிறுகதையுலகில் தன்னேரில்லாத் தலைவனாகத் தனது படைப்பால் உயர்ந்துள்ளவர்''. என்று ஜெயகாந்தன் ''சோதனைக் கதைகள்'' என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது இதற்குச் சான்றாக அமைகிறது. இவரது ''அன்று இரவு'' கதையில் செந்நடையைப் பயன்படுத்தியுள்ளார்.
''நான்மாடக் கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை, அதில் ஒருவன் சொக்கேசன். மனிதனுடன் மனிதனாக நடமாடி, அவர்களுடைய சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு வளையல் விற்று, சாட்சி சொல்லி சங்கப் புலவர்கள் கருவமடக்கி, வாழையடி வாழையாக ஆண்டு வரும் பாண்டியர்களுக்கு மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய்க் கைகொடுத்து வரும் சொக்கேசன் - அழகன் உறங்கவில்லை. பிறவா நெறி காட்டுவோனுக்கு உறக்கம் ஏது? ஊன்ஏது? அடுத்த ஆள் ஓர் அரசன்; பாண்டியன் அரிமர்த்தன பாண்டியன். இமையா நாட்டம் பெற்றவன் போல, சயனக்ருஹத்தில் மஞ்சத்தில் அமர்ந்து நினைவுக் கோயிலில் நடமாடி வந்தான். அறிவை அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை வாலுடன் தலையிணைத்துக் காட்டி நகரின் வரம்பமைத்த பாம்பு மாதிரி அறிவு சக்ர வியூகம் போட்டது'' என்ற அடிகளில் செந்நடையைக் காண முடிகிறது.
உணர்ச்சி நடை: படைப்பாளன் தன் மனதில் உருவாக்கும் உள்ளத்து. வெளிப்பாட்டைக் கதைப் பாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்திப் படிப்பவர் மனதில் பதிய வைக்கும் ஒரு வகை மொழிப் பாங்கு உணர்ச்சி நடை எனலாம். இந்நடையினைப் பல கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் புதுமைப்பித்தன். ''எடுத்துக் கொண்ட ஒரு விஷயத்தை உயிரோடு, உணர்ச்சியோடு பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்த நடை, கையாளும் நடையின் பெருமிதத்துக்கு ஏற்ப மிக ஆழ்ந்த விஷயம்; கதையின் உருவமும் பூரணத்துவம் பெற்றது; உருவமும் கதைப் போக்கும் தனித்தன்மை பெற்றவை''. என்று கு.அழகிரிசாமி புதுமைப்பித்தனின் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ''பொன்னகரம்'' என்னும் கதையில்,
''ஐந்து மணிக்கு அப்புறந்தான் ஊர் கலகலவென்று உயிர்பெற்று இருக்கும். அப்பொழுதிலிருந்து தான் அவ்வூர்ப் பெண்கள் தங்கள் வேலையை செய்வார்கள், சாராய வண்டிகள், தண்ர் எடுக்க வரும் பெண்கள்! அங்குத் தண்ர் எடுப்பது என்றால் ஒரு பாரதப் போர்.
என்ற பகுதியில் உணர்ச்சி நடையினைக் காண முடிகிறது''.
வடமொழி, ஆங்கில, அங்கத நடை: புதுமைப்பித்தன் நடையானது, தனிச்சிறப்பு பெற்ற நடையாகும். இவரது அனைத்துக் கதைகளிலுமே மேற்கூறப்பட்ட மூன்று நடைகளும் மிகுதியாக அமைந்துள்ளன. இருப்பினும், இவரது நடையில் எவ்வகை நடையானாலும் செயற்கைத் தன்மையே தோன்றுவதில்லை. இவர் தேவையின்றி வேற்று மொழிச் சொற்களையும் கலப்பதில்லை. சில இடங்களில் அவற்றை விதிவிலக்காகப் பயன்படுத்தியுள்ளார். கதையின் போக்கினை அறிந்தே பயன்படுத்தியுள்ளார். ''புதுமைப்பித்தன் வடசொற்களையும் பிறசொற்களையும் ரொப்பி வைத்தவரும் அல்ல; அவற்றை அறவே புறக்கணித்தவரும் அல்ல. இவ்வகையில் அவருக்கு ''மொழித் தேசியம்'' இல்லை. மொழி அவருக்கு ஒரு கருவியே''. என்று முருகரத்தினம் கருதுகிறார்.
''காளிக்கோவில்'' என்னும் சிறுகதையில் ''இருள், நட்சத்திரங்களும் அற்ற மேக இருள், வானத்திருளை வெட்டி மடிக்கும் மின்னல்கள், இருளுடன் இருளாக நகரும் நதி. படிகளில் மோதி எழுப்பும் அலைகளினால் அன்றித் தெரியாது''. என வரும் அடிகளில் அங்கத நடையினைக் காண முடிகிறது. ''கட்டில் பேசுகிறது'' கதையில் வரும், ''கவர்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழுநீள லத்தின் பெயர் கொடுத்து என்னைக் கொண்டு போய்க் கிடத்தினார்கள்''. என்ற பகுதியில் புதுமைப்பித்தன் ஆங்கில சொற்கலப்பு நடையினைக் கையாண்டிருப்பதை உணர முடிகிறது.
இவரது ''ராமனாதனின் கடிதம்'' என்னும் கதையில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். ''யாருக்கு எழுத.... எல்லோருக்கும் தான்..... நாளைக்கு இந்நேரம்.....''சற்றுப் புத்தி சுவாதீனமில்லாத பொழுது பிராணத்யாகம் செய்து கொண்டான்'' என்ற தீர்ப்புக் கூறியாகி விடும். எனவரும் பகுதியில் வடமொழி நடையினைக் காண முடிகிறது.
இவ்வாறு புதுமைப்பித்தன், தமது சிறுகதைகளில் வெவ்வேறு நடை வகைகளைக் கையாண்டு தமது சமுதாய நோக்கினையும், சீர்திருத்தக் கோட்பாட்டினையும் உணர்த்தியுள்ளார்.
முடிவுகள்:
1. புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்பது நடைச்சிறப்பாகும்.
2. இவரது நடை கேலியும் கிண்டலும், குத்தலும் குமுறலும் நிறைந்தது.
3. புதுமைப்பித்தன் நடையாளுமையை மொழியியல் மூலம் தெளிவுப்படுத்தமுடியும்.
4. பொருள் புணரும் வகையில் இடத்திற்கேற்றாற் போல் நடை ஆளுமையை வெளிப்படுத்திக்காட்டியுள்ளார்.
நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக