30/01/2011

பாரதிதாசன் கவிதைகளில் யாப்பு - ம. தேவகி

முன்னுரை:

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சிறந்த கவிஞர் பாரதிதாசன். நல்ல ஆசிரியராக சமுதாயச் சீர்திருத்தவாதியாக சிறந்த இதழாசிரியராக விளங்கியவர். பன்முகப் பாங்குக்கொண்ட பாவேந்தர் தொட்ட துறைகளிலெல்லாம் புகழ் நாட்டியவர். இத்தகைய சிறப்புடைய பாவேந்தரின் கவிதைத் தொகுப்புகளிலுள்ள கவிதைகளின் யாப்பு வடிவங்களைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பாவேந்தர் கவிதைகளில் யாப்பு:

பாவேந்தர் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்குக் கற்றறிந்தவர். இவர்

''இலக்கணமும் இலக்கியமும்

தெரியாதான் ஏடெழுதல்

கேடு நல்கும்''

என்கிறார். ஆகவே பாவேந்தர் தன்னுடைய கவிதைத் தொகுப்புகளில் யாப்பு வடிவங்களைக் கையாண்டு இருப்பார் என்று ஆராய்ந்தபொழுது

1. பாக்கள், 2. பாவினங்கள், 3. இசைப்பாடல்கள், பாக்கள், பாவினங்கள், இசைப்பாடல்கள் ஆகிய இம்மூன்றும் கலந்த படைப்புகள் என்று அவருடைய கவிதை வடிவங்களை வகைப்படுத்த முடிகிறது.

பாக்கள்:

பாவேந்தர் நால்வகைப் பாக்களுள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா ஆகிய மூன்றுபாக்களை மட்டும் கையாள்கிறார்.

வெண்பா:

பாரதிதாசனின் நான்கு கவிதைத் தொகுதியிலுள்ள மொத்தப்பாடல்கள் 561. அவற்றுள் 11 கவிதைகள் மட்டுமே வெண்பாயாப்பினால் அமைந்துள்ளன. இக்கவிதைகளும் முற்றிலுமாக வெண்பாயாப்பில் அமைந்துள்ளன என்று கூறவியலாது. ''வகையுளி'' அதிகமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. தளைவேறுபாடு உள்ள இடங்களில் குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஆய்தம் அலகு பெறாது. இக்கருத்தும் இவரது கவிதைகளில் பயன்படுகிறது. மேலும் பின்னால் வந்த புலவர். குழந்தை, அ.கி.பரந்தாமனார் தளைதட்டக்கூடிய இடத்து ''ஒற்று நீக்கி'' அலகிடலாம் என்கிறார்கள். மெல்லின இடையின ஒற்றுக்கள் மட்டுமே நீக்கப்படும். இருப்பினும்

''பின்னும் மலைதூக்கும் மனிதன் பிறப்பதில்லை''

''அச்சோ மழைதான் மழையேதான் அத்தான் அச்சேதி''

''தோலும் எரியும் தோய்கலவை மேலும்''

''என்றாள் எதிர்வந்தாள் எடுத்துக்கொள் கத்தி என்றாள்''

என்ற அடிகளிலுள்ள சீர்கள் வெண்பாவிற்குரியனவாக அமையினும் தளைவேறுபாடு காணப்படுகின்றன. மேலும் வெண்பாவின் இறுதியடியானது சிந்தடியாக அமையவேண்டும். ஆனால் ''இன்றைக்கு ஒத்திகை'' என்ற கவிதையில்

''ஒத்திகை இன்றைக்கு நாளைக்குக் கூத்து''

என்று அளவடியாக அமைந்துள்ளது. மேலும் 7 கவிதைகள் 12 அடிக்குமேல் 49 அடி வரை வேறுபட்ட அடிவரையறைகளைக் கொண்டுள்ளன. கதவுபேசுமா -12, தேன்கவிகள் தேவை-65, செந்தமிழ்நாடு-17, சஞ்சீவி பர்வதத்தின் சாரல்-419, சிரிப்போ குத்தகைச் சீட்டு-27, பள்ளிக்குப்போகும் புள்ளிமான்-28, இன்றைக்கு ஒத்திகை-24, பச்சைக்கிளி-72

12 அடிக்கு மேற்பட்ட அடிகளையுடைய கவிதைகளைப் பஃறொடை வெண்பா என்கிறார் அமிர்தசாகரர். வீரசோழியத்தாரும், புலவர் குழந்தையும் இதனைக் ''கலிவெண்பா'' என்கிறார்கள். மூன்று கவிதைகள் நேரிசை வெண்பாவினால் ஆனது. ஒரு கவிதை சவலை வெண்பாவினால் ஆனது(வீரசோழிய இலக்கணப்படி)

ஆசிரியப்பா:

பாரதிதாசன் கவிதைகளில் 42 கவிதைகள் ஆசிரியப்பாவினால் ஆனது. இக்கவிதைகளில் சில இடங்களில் வகையுளியும், ஜகாரத்தைக் குறுக்கமாக்கியும் தளைதட்டக்கூடிய இடங்களில் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆசிரியப்பாவானது ஏ,ஓ,ஈ,ஆய்,என்,ஐ, ஆகிய எழுத்துக்களை ஈற்றடியின் இறுதிச் சீராகக் கொண்டு முடியும். ''அகத்தியன் விட்ட புதுக்கரடி'' என்ற கவிதையில்

''அகத்தியம் பிறந்ததே அருந்தமி ழகத்தில்''

என்று மாறியமைந்துள்ளது. நேரிசையாசிரியப்பாவின் இலக்கணப்படி 30 கவிதைகளும், இணைக்குறள் ஆசிரியப்பாவின் இலக்கணப்படி 9 கவிதைகளும், நிலைமண்டில ஆசிரியப்பாவின் இலக்கணப்படி 3 கவிதைகளும் அமைந்துள்ளன.

கலிப்பா:

பாரதிதாசன், கவிதைத் தொகுதியில் 2 கவிதைகள் மட்டுமே கலிப்பாவிற்குரியனவாக அமைந்துள்ளன. இக்கவிதைகளிலும் தளைதட்டக்கூடிய இடத்து, வகையுளியும், ஐகாரத்தைக் குறுக்கமாக்கியும் பயன்படுத்த வேண்டியுள்ளது. கலிப்பாவில் மாச்சீர்கள் மற்றும் விளங்கனிச்சீர்கள் இடம்பெறக்கூடாது. ஆனால்

''அருகு மடவார் அடைகாய் தரவும்''

''இறப்போம் உறுதி இதுவாகும் என்பீர்''

''சேற்றில் முளைத்திட்ட செந்தா மரைபோலும்''

''சாற்றுதல் கேனீர் தமிழை வடநாட்டார்''

''ஒழுக்கம் கெடுக்கும் உணர்வை ஒடுக்கும்''

என்ற அடிகளில் இவ்வாறு மாச்சீர்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு கவிதைகளும் வெண்டளையால் அமைந்த இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பாவினால் ஆனது.

பாவினங்கள்:

பாரதிதாசன் ஆசிரியப்பாவிற்குரிய இனமான ஆசிரிய விருத்தத்தையும் கலிப்பாவிற்குரிய இனமான கலிவிருத்தத்தையும் கட்டளைக் கலித்துறையையும் பயன்படுத்தியுள்ளார்.

ஆசிரியவிருத்தம்:

பாரதிதாசன் 28 கவிதைகளை எண்சீர்விருத்தத்தாலும், 7 கவிதைகளை அறுசீர் விருத்தத்தாலும், 1.கவிதையைப் பதினான்குசீர் விருத்தத்தாலும் ஆக்கியுள்ளார். இப்பாவினங்களுக்குச் சீர் தளை வரையறை இல்லை. ஆனால் கழிநெடிலடியாக அமையுமென்ற அடிவரையறை உள்ளது. இம்முறையிலிருந்து ஒரு கவிதையானது மாற்றமடைந்துள்ளது.

எ.கா.: ''எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே

பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றே நீ

செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய

கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே''

இவ்வாறு அளவடியாக அமைந்துள்ளன. கலிவிருத்தம் என்றுரைக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

கலிவிருத்தம்:

நாற்சீரடி நான்காய் வருவது கலிவிருத்தமாகும். ஒரு கவிதையானது இவ்வாறு அமைந்துள்ளது. இப்பாவினத்திற்கும் சீர், தளை வரையறை கிடையாது. (எ.கா)

''மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின்றார்கள்

செய்வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின்றாய் நீ

பொய்வண்ண பூசணிக்காய் கறியுனைச் செய்துண்டேன் உன்

கைவண்ணம் அங்குக்கண்டேன் கறிவண்ணம் இங்குக்கண்டேன்''

என்ற பாடலில் ''முடிக்கின்றாய் நீ'' ''இங்குக் கண்டேன்'' என்று வகையுளியாக்கினால் இக்கவிதை கலிவிருத்தமாகும்.

கட்டளைக்கலித்துறை:

அடிதோறும் வெண்டளை பிறழாது ஐந்து சீர்களைக்கொண்டு முடியும். ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராக வரும். மேலும் நேர் எனற அசையில் தொடங்கும் அடியானது ஒற்று நீங்கலாக 16 எழுத்துக்களைக் கொண்டும், நிரை என்ற அசையில் தொடங்கும் அடியானது ஒற்றுநீங்கலாக 17 எழுத்துக்களைக் கொண்டும் முடியும். பாரதிதாசன் கவிதைகளில் 2 கவிதைகள் கட்டளைக் கலித்துறையினால் ஆனது. ''வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்'' என்ற கவிதையில் ஒரடி மட்டும் இவ்விலக்கணத்திலிருந்து பிறழ்ந்துள்ளது. எ.கா,

''தொன்னூற் படியில்லை

திராவிடர் தூய கலைஒழுக்கம்''

வெண்டளையானது பிறழ்ந்து கலித்தளை இடம் பெற்றள்ளது. நேர் என்ற அசையில் ஆரம்பிக்கக்கூடிய இவ்வடியானது 17 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.

இசைப்பாடல்கள்:

பாவேந்தர் தம்முடைய கருத்துக்களை வெளியிட மரபுவழிப்பட்ட யாப்பு வடிவங்கள் போதுமானவை அல்ல என்று கருதிப் பாமரர்க்கும் புரியும்படியான இசைப்பாடல்களைக் கையாண்டார். இவர் 1.சிந்து 2.கும்மி 3.கண்ணி 4.கீர்த்தனை ஆகியவற்றைக் கையாண்டுள்ளார்.

சிந்து:

பாரதிதாசன் கவிதைகளில் 13 கவிதைகள் சிந்து என்று குறிக்கப்பட்டிருந்தாலும் அம்முறைப்படி அமையாத கவிதைகளே மிகுதி. இச்சிந்துப்பாக்கள் இடம்பெறும் சீர்களின் அடிப்படையில் வியனிலைச்சிந்து, சமனிலைச்சிந்து என்று பிரிக்கப்பட்டுள்ளது. 5 கவிதைகள் சமனிலைச்சிந்தாக உள்ளன. 2 கவிதைகள் இருசீரிரட்டையாகவும், 2 கவிதைகள் முச்சீரிரட்டையாகவும் 1கவிதை நாற்சீரிரட்டையாகவும் அமைந்துள்ளன. 2 கவிதைகள் வியனிலைச்சிந்தாக அமைந்துள்ளன. 1 கவிதை நாலிருசீரிரட்டையாகவும், மற்றொரு கவிதை சநாலுச்சீரிரட்டையாகவும் அமைந்துள்ளன. ஏனைய 6 கவிதைகள் இவ்விலக்கண முறையிலிருந்து சிறிது வேறுபட்டுள்ளது. இவற்றை வியனிலைச்சிந்து என்ற இசைப்பாடலில் சேர்க்கலாம் என்ற எண்ணமானது தோன்றுகிறது.

கும்மி:

பாரதிதாசன் கவிதைகளில் 3 கவிதைகள் கும்மி என்றுக் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை கும்மிக்குரிய இலக்கணப்படி அமையவில்லை. எழுசீர்களைக் கொண்டுள்ளன. ஆனால் வெண்டளையானது பிறழ்ந்துள்ளது. (எ.கா)

''தோட்டத்து வாசல் திறக்கும் தினம்

சொர்ணம் வந்தால் கொஞ்ச நேரம்மட்டும்''

கண்ணி:

கண்ணியானது 1.நூலின் உறுப்பாக வரும் கண்ணி 2. தனிச்செய்யுளாக வரும் கண்ணி 3. இசைப்பாட்டாக வரும் கண்ணி என்று பிரிக்கப்பட்டுள்ளது. முதல்வகையினைப் பயன்படுத்தி 2 கவிதைகளையும், இரண்டாவது வகையினைப் பயன்படுத்தி 1 கவிதையினையும், மூன்றாவது வகையினைப் பயன்படுத்தி 17 கவிதைகளையும் படைத்துள்ளார்.

கீர்த்தனை:

பாரதிதாசன் கவிதைகளில் 2 கவிதைகள் கீர்த்தனையின் இலக்கணப்படி அமைந்துள்ளன.

பாக்கள், பாவினங்கள், இசைப்பாட்டுகள் கலந்து வரல்:

பாரதிதாசன் ''புரட்சிக்கவி'' ''கடற்மேற் குமிழிகள்'' என்ற 2 காவியங்களிலும் இம்முறையைப் பயன்படுத்தியுள்ளார். ''வீரத்தாய்'' என்ற காவியத்திலும் ''புரட்சித்திருமணத்திட்டம் நடத்தும் முறை'' என்ற கவிதையிலும் பாக்களும் பாவினங்களும் விரவிவந்துள்ளன. சிலப்பதிகார காவியத்தில் சிறிது விருத்தப்பாக்களும், சிறிது இசைப்பாடல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாரதியார் தன்னுடைய ''குயில் பாட்டு'' என்ற படைப்பிலும் இம்முறையைப் பயன்படுத்தியுள்ளார்.

இம்முறையினைப் பின்பற்றியே பாரதிதாசன் இப்படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

முடிவுரை:

பாரதிதாசன் தன்னுடைய தொடக்கக் கால கவிதைகள் மரபிற்குட்பட்டுப் படைத்துள்ளார். கவிஞன் என்பவன் சமகாலப் பிரச்சனைகளைப் பாமர மக்களுக்கும் புரியக் கூடிய வகையில் கூறவேண்டும் என்பதற்காக இசைப்பாடலான புதிய யாப்பு வடிவங்களைக் கையாணடார். கவிதையின் கருத்து வெளியீட்டிற்கு இந்த யாப்பு வடிவங்கள் தடையாக இருந்தபொழுது அவற்றினை மீறவும் அவர் தயங்கவில்லை என்பதனை இக்கட்டுரையின் வழி அறிய முடிகிறது.

நன்றி: தமிழ்ப்புத்திலக்கியம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக