கல்கியின் பாத்திரங்களில் மிகச்சிறந்த படைப்பு நாகநந்தி. நாவல் இலக்கிய உலகில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார் இவர். சிவகாமியின் சபதம் நாவலின் எதிரன் இவரே. இப்பாத்திரத்தின் படைப்பில் கல்கியின் பாத்திரங்களைப் படைக்கும் திறன் வெளிப்படுகிறது. கற்பனைக் கதை மாந்தரானாலும் நாகநந்தி கல்கியால் புதுமுறையில் படைக்கப்பட்டுள்ளார். இவரும் புலிகேசியும் ஒத்த உருவமுடையவர்கள். பல அற்புதச் செயல்களை இவரைக் கொண்டு செய்விக்கிறார் கல்கி. மூலிகைகளின் துணையால் உடலை நஞ்சாக்கி, கலைகளை இரசிப்பதில் சிறந்த கலைஞராகி, துறவி உடை அணிந்து திரியும் இந்த புத்தபிட்சு பல இடங்களில் நம்மை பிரமிக்க வைத்திருக்கிறார்.
தம்பியிடம் கொண்ட அன்பு:
புலிகேசியின் அண்ணன் நாகநந்தி, அவரது இயற்பெயர் நீலகேசி. இருவரையும் இரட்டைக்குழந்தைகளாகப் படைத்துள்ளார் கல்கி. நாகநந்தி தன் தம்பியிடம் அளவற்ற பாசமும் கொண்டிருந்தார். தங்களது நாட்டைச் சிற்றப்பன் மங்களேசனிடமிருந்து மீட்டு அரசைத் தன் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டுப் புத்தபிட்சுவானார். பல்லவ நாட்டைத் தன் தம்பிக்கு அடிபணிய வைக்கத் துறவறம் பூண்டு நாகநந்தி என்ற புனைபெயருடன் ஒற்றனாகக் காஞ்சிக்கு வந்தார். வரும் வழியில் பரஞ்சோதியைப் பாம்பிடமிருந்து காப்பாற்றினார். இன்னொரு தருவாயில் அவனையே பல்லவர் சிறையிலிருந்து காப்பாற்றினார். அவர் தன் தம்பி மீது கொண்ட பாசமும் அவரின் மனித நேயமுமே அவரின் இச்செயல்களுக்குக் காரணம். இம்மனித நேயச் செயல்கள் வாசகர்களிடம் அவரைக் குறித்து நல்ல எண்ணத்தையும் மதிப்பையும் தேடித்தந்து விடுகிறது.
உடலிலும் நஞ்சு செயலிலும் நஞ்சு:
நாவலின் கதை வளர வளரத்தான் நாகநந்தி எப்படிப்பட்டவர் என்பது விளக்கம் பெறுகிறது. ''ஒட்டி உலர்ந்த தோற்றம், கொடிய விஷப்பாம்புகளும் அஞ்சி ஓடும் நஞ்சு உடல், பாம்பின் சீற்றம் என மூச்சுவிடும் இயல்பு, அன்பையோ பக்தியையோ உண்டாக்காத படமெடுத்தாடும் பாம்பினைப் போன்ற முகம்'' என்று நாகநந்தியின் தோற்றத்தை வர்ணிக்கிறார் கல்கி.
ஆயனர் படைத்த சிற்பங்களைக் கண்டு நாகநந்தி அவரிடம் நட்புக் கொண்டார். ஆயனாரின் மனதில் அஜந்தாவின் வர்ண ஆசையை ஊட்டி அவரைத் தன்வயப்படுத்த முயலுகிறார். புலிகேசியின் வெற்றிக்கு முதல் தடையாக இருப்பது மகேந்திரரே என்பதை உணர்ந்த நாகநந்தி பல்லவ நாட்டை வெல்லப் பல சூழ்ச்சி வலைகளைப் பின்னுகிறார். ஆனால் அவரின் சூழ்ச்சி மகேந்திரரிடம் பலிக்கவில்லை. நாகநந்தி செய்கின்ற சூழ்ச்சிகளுக்கெல்லாம் எதிர் சூழ்ச்சி செய்து அவரது முயற்சியை முறியடிக்கிறார் மகேந்திரவர்மர். அவர் மட்டும் நாகநந்தி புலிகேசிக்குக் கொடுத்தனுப்பிய ஓலையை மாற்றியிராவிட்டால் பல்லவ நாடே சாளுக்கியர்களுக்கு அடிபணிந்திருக்கும். ''ஆகா! நான் நினைத்ததைக் காட்டிலும் மகேந்திரவர்மர் கெட்டிக்காரன். நெடுகிலும் நம்மை ஏமாற்றி வந்திருக்கிறான்.'' என்று கூறுகிறார். ஆனால் இந்த ஏமாற்றங்களால் நாகநந்தி சிறிதும் அசையவில்லை. பல்லவ நாட்டைச் சாளுக்கியரின் ஆட்சிக்கு கீழ்க் கொண்டுவர அரும்பாடுபட்டார். ஆனால் அவரின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியுறும் வண்ணம் மகேந்திரர் மலைபோல் இருந்தார். அவர் செய்த ஒவ்வொரு சூழ்ச்சியும் பல்லவ மன்னனின் முன் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறாமல் போயின. நாகநந்தி பேராற்றல் படைத்தவர். ''புகை புகா வாயிலும் புகும் பேராற்றல் அவருக்கு இருக்கிறது'' மகேந்திரவர்மரின் அரசியல் தந்திரங்களுக்குமுன் அவரின் திட்டங்களெல்லாம் தவிடு பொடியாயின. அதையுணர்த்தும் நாகநந்தி மகேந்திரவர்மரை ஏமாற்ற முனைகிறார். சிவகாமியிடம் மகேந்திரவர்மர் கொடுத்த சிங்க இலச்சினையை அபகரித்துக் கொண்டு காஞ்சி சென்று பல்லவ அரசவைக்குள்ளே நுழைந்து தன்னைத் தூதுவனாக அறிமுகப்படுத்தி, புலிகேசி மகேந்திரவர்மரைக் கைது செய்துவிட்டார். மாமல்லர் உடனே படையெடுத்து வந்துத் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று மகேந்திரர் கூறியதாகச் சொல்லுகிறார். அவரின் சூழ்ச்சியும் துணிவும் நம்மை வயப்பில் ஆழ்த்துகிறது. மாமல்லர் படையெடுத்துச் சென்றால் வாதாபியின் பெரும்படையிடம் தோற்றுவிடுவார் என்பதை நன்கறிந்தவர் நாகநந்தி, அவர் திட்டப்படியே மாமல்லரும் போருக்கு எழுகிறார். ஆனால் மகேந்திரவர்மரின் தந்திரத்தை அறியாதவர் நாகநந்தி. சிவகாமியிடம் அவர் எதற்காகச் சிங்க இலட்சினையைக் கொடுத்தார் என்பதைப் புரியாதவர். அவரைப்பின் தொடர்ந்து வந்த மகேந்திரவர்மர் அவரைக் கைது செய்கிறார். வாதாபியின் திறமைசாலி ஒற்றன் கைது செய்யப்பட்டபோது மகேந்திரரே ''சேனாபதி, வாதாபியின் மிகவும் கெட்டிக்காரனான ஒற்றனை சிறைப்படுத்தியாகிவிட்டது. பாதி யுத்தத்தை நாம் ஜெயித்தது போலத்தான்'' என்று கூறுகிறபோது நாகநந்தியின் திறமை வெளிப்படுகிறது.
கலையும் காதலும்:
அஜந்தா விவகாரங்களில் வளர்ந்த தனது இருபது வயதுவரையும் பெண்களைக் காணாத நாகநந்தி அடிகள் அஜந்தா ஓவியங்களில் இருந்த மாதர்களைக் கண்டு மௌன மொழிப் பேசி அவைகளோடு ஒன்றி மகிழ்கிறார். அவ் ஓவியங்களில் நாட்டியமாடும் ஒரு பெண்ணின் ஓவியத்தைக் கண்டுத் தம்மை இழக்கிறார். அவரின் உள்ளம் அந்த ஓவியக் கன்னியைத் தேடியது. ஆயனச் சிற்பியின் சித்திரகூடத்தில் அந்தச் சித்திரப் பாவையைக் கண்டுதம்மை இழக்கிறார். அவரைக் கவர்ந்த அஜந்தா ஓவியம் உயிர்பெற்று வந்ததைப் போன்று திகழும் சிவகாமியைக் காண்கிறார். காதல் கொள்கிறார். புலிகேசிக்கு எழுதிய ஓலையில் காஞ்சி சுந்தரியை நீ எடுத்துக் கொள், சிவகாமி சுந்தரியை எனக்குக் கொடுத்துவிடு என்று எழுதுகிறார்.
சிவகாமியிடம் அவர் கொண்ட காதல் அவளின் உடலழகைக் கண்டல்ல. அவளின் கலையழகைக் கண்டுதான். ''காதல், பிரேமை, மோகம் என்னும் வார்த்தைகளை இந்த உலகம் தோன்றிய நாள் முதல், கோடானு கோடி மக்கள் எத்தனையோ கோடி தடவை உபயோகித்திருக்கிறார்கள். ஆனால் அந்த வார்த்தைகளின் மூலம் நான் குறிப்பிடும் உணர்ச்சியை அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். என்னுடைய காதலில் தேகதத்துவம் என்பது சிறிதும் கிடையாது'' என்று அவரே புலிகேசியிடம் கூறுகிறார். சிவகாமியிடம் காதல் கொண்ட பின் அவரின் ஒவ்வொரு செயலும் நடனமங்கையை அடையும் நோக்கத்தையே நடுநிலையாகக் கொண்டு இயங்குகிறது. சிவகாமியை வாதாபிக்குக் கொண்டு செல்வதற்காகவே ஒரு போரினை உண்டாக்குகிறார் புத்தபிட்சு. ஆனால் சிவகாமி தற்செயலாக சிறைப்பட, அவளை வாதாபிக்குக் கொண்டு செல்கிறார். புலிகேசி சிவகாமியை நாற்சந்தியில் நடனமாட வைக்கிறான். அதைக்கண்ட புத்தபிட்சுவின் கண்கள் கோபக்கனலில் திளைக்கின்றன. ''கலையுணர்ச்சியில்லாத நீர் மூடப்புலிகேசி'' என்று தன் தம்பியைச் சாடுகிறார். சிவகாமியிடம் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோருகிறார்.
மாமல்லரிடமிருந்து காப்பதற்காகவே சிவகாமியை வாதாபிக்குக் கொண்டு வந்ததாகக் கூறும் நாகநந்தி, அவளை ஆயனச் சிற்பியிடம் அப்போதே சேர்த்துவிடுவதாகக் கூறுகிறார். புலிகேசி இறந்து, வாதாபி அழியும் வரை இங்கிருந்து போகமாட்டேன் என்று சபதம் செய்கிறார். இந்த பயங்கரமான சபதத்தைக் கேட்ட நாகநந்தியின் முகத்திலே புன்னகை தோன்றியது. ''தம்முடைய சூழ்ச்சி மீண்டும் பலித்துவிட்டது என்று எண்ணி அந்தப் பொல்லாத பிட்சு உள்ளுக்குள் உவகையடைந்தார் போலும்'' என்கிறார் கல்கி. சிவகாமி இப்படி ஒரு சபதம் செய்ய வேண்டும் என்று நினைத்தே மாமல்லரை அவர் இழிவாகப் பேசினார் என்று கல்கியின் கூற்று உணர்த்துகிறது.
சிவகாமி புலிகேசியின் காலில் விழுந்து மன்னிப்புக் கோருவதாக அஜந்தா குகைச்சுவரில் தீட்டச் செய்த ஓவியம் நாகநந்தியின் கோபத்தை அதிகரிக்கச் செய்தது. அவர் சிவகாமியின் கலையின் மீது கொண்ட அளவற்ற மோகம் சாபமாக உருவெடுக்கிறது. ''அவளை அவமானப்படுத்திய நீயும் உன் சக்திகளும் சர்வ நாசமடையப் போகிறீர்கள்'' என்று எந்த தம்பியின் வளர்ச்சிக்காக பாடுபட்டாரோ அந்தத் தம்பியைத் தூற்றுகிறார். அந்த ஓவியம் தீட்டியவரையும் கொன்று பழிதீர்க்கிறார். கலைக்காதலில் மூழ்கியதால் பல்லவ மன்னன் படையெடுத்து வருவதைக்கூட புலிகேசியிடம் சொல்லவில்லை. ''நன்றியில்லாத பாதகனாகிய உனக்குத் தண்டனை கிடைக்கும் பொருட்டே உன்னிடம் சொல்லவில்லை'' என்று புலிகேசியிடம் கூறும் நாகநந்தியைப் பார்க்கிறோம். நாகநந்தி சிவகாமிக்காகச் சாளுக்கிய நாட்டின் அழிவுக்கே வழி செய்கிறார். புத்த சங்கத்திலிருந்து விலக்கப்படுகிறார். வாதாபி தீக்கிரையாகவும் புலிகேசி இறக்கவும் அவரே காரணம். தன் காதலியின் சபதம் ''சிவகாமியின் சபதம்'' நிறைவேற வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அனைத்தையும் அதற்காகவே செய்கிறார். இந்நாவலின் இயக்குநர் நாகநந்தியே. அவரே இந்நாவலின் கதையைத் தமதாக்கி நிறுத்தும் ஆற்றல் மிக்க தூணாக விளங்குகிறார். ''இந்நூலின் ஆரம்பம் தொடங்கி இறுதிமட்டும் இருபெண்களையும் (ஒருத்தி அவர் காதல் கொண்ட சிவகாமி மற்றொருத்தி அவர்மீது காதல் கொண்ட ரஞ்சினி) இரு நகர்களையும் (வாதாபி, காஞ்சி) இருப்பேரரசுகளையும் (சாளுக்கியப் பேரரசு, பல்லவப் பேரரசு) அஜந்தா மாமல்லபுரம் ஆகிய இரு கட்டிடங்களையும் அவற்றின் கலைகளையும் இணைத்துக் கதையை இயக்கும் கருவி நாகநந்திதான்'' என்கிறார் தனிநாயக அடிகள். நாவலின் இறுதியில் சிவகாமியோடு தப்பி ஓட முயன்ற நாகநந்தி அடிகள் பல்லவ சேனாதிபதி பரஞ்சோதியின் பிடியில் சிக்குகிறார். அவ்வேளையில் அவர் விஷக்கத்தியை எறிந்து சிவகாமியைக் கொல்லத் துணிகிறார். பரஞ்சோதியின் வாள் அவரின் கையை வெட்டி எறிந்து நஞ்சுக் கத்தியை எறிந்தது. சிவகாமியைக் கொல்லத்துணிந்தது அவள் பேரில் அவர் கொண்ட காதலின் கடைசிப் பரிசு என்கிறார் நாகநந்தி அடிகள்.
கொடிய அரக்கர்:
நாகநந்தி திருப்பாற்கடல் ஏரியை உடைத்து பெருவெள்ளம் உண்டாக்கும் கொடுமைக்காரர். காஞ்சி மாநகரின் குடீதண்ரில் நஞ்சுக்கலந்து அந்நகர மக்களைக் கொல்லத் திட்டமிட்டக் கொடிய அரக்கர். ''நாகநந்தி மனிதனேயல்ல. மனித உருவத்திலுள்ள அரக்கன், விஷம் ஏற்றிய கத்தியை உபயோகிக்கும் பாதகன்'' என்று மகேந்திரவர்மரே குறிப்பிடுகிறார். நாவலின் தொடக்கத்தில் பரஞ்சோதியைக் காப்பாற்றிய நாகநந்தியின் கை பரஞ்சோதியாலே வெட்டப்படுகிறது. அப்போதும் தன் கையை வெட்டிய பரஞ்சோதியை நோக்கி, ''அப்பனே பரஞ்சோதி நீ நன்றாயிரு நீ மிக்க குணசாலி மிக்க நன்றியுள்ளவன் உன்னை ஒரு சமயம் நாகப்பாம்புத் தீண்டாமல் இந்தக் கை காப்பாற்றியது. உன்னைப் பல்லவன் சிறையிலிருந்து இந்தக் கை விடுதலை செய்தது. நீ ஆசானாகக் கொணட ஆயன சிற்பியரின் உயிரை இந்தக் கை இரட்சித்தது. அப்படிப்பட்ட வலக்கையை நீ வெட்டிவிட்டாய் அடியோடு துண்டித்துவிட்டாய். ஆ ரொம்ப நன்றியுள்ள பிள்ளை நீ என்று சொல்லும் போது அவரின் அற்புதப் படைப்பு இலக்கிய உலகில் நீங்காத இடத்தைப்பெற்று விட்ட காரணத்தை உணரமுடிகிறது. ஒற்றைக் கையோடு தப்பிய நாகநந்தி அடிகளை ''பார்த்திபன் கனவில்'' நீலகேசியாக சந்திக்கிறோம்.
நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக