26/06/2010

சுல்தான், நீ எங்கே இருக்கிறாய்? - சுஜாதா

அந்த நாள் என் சந்தோஷ நாள். எனக்கு வேலை கிடைத்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்திருந்தது. அதை மாலதியிடம் காண்பிக்கச் சென்றபோது, அவள் ஊருக்குக் கிளம்பத் தயாராக நான்கு அவசர சாரிகளைப் பெட்டிக்குள் அடைத்துக்கொண்டு இருந்தாள்.

''மாலதி! எனக்கு வேலை கிடைத்துவிட்டது!''

மாலதி மற்றொரு சாரியைக் கசக்கி அடைத்தாள். அவள் முகம் என்னவோ போல் இருந்தது. ''ஏன் மாலதி என்னவோ போல் இருக்கிறாய்?''

மாலதி என்னை வெறித்துப் பார்த்தாள். ''நான் இனி இந்த வீட்டில் ஒரு கணம் தாமதிக்கப்போவதில்லை. சொந்த அப்பாவாக இருந்தால் என்ன, திஸ் இஸ் தி லிமிட்! நான் போகிறேன்!''

ஒரே ஒரு மாலை - சுஜாதா

இந்தக் கதை எழுதுகிற எனக்கு, இதைப் படிக்கிற உங்களைவிட அதிகமாக ஆத்மாவையும் இந்துமதியையும் தெரியும். அவர்களைப் பற்றி என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது என்று பாகுபடுத்தும் உரிமை என்னிடம் இருக்கிறது. இந்த 'கேஸி'ல் கொஞ்சம் சங்கடமான நிலைமையாக இருக்கிறது.

பாருங்கள், இருவரும் புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள். புதிதாக என்றால், மிகப் புதிதாக. கையில் கட்டிய கயிறும், சங்கிலியில் தெரியும் மஞ்சளும், ஒருவரைப் பற்றி ஒருவர் அதிகம் தெரியாத ஆர்வமும், பயமும், ஒருவரை ஒருவர் தொடும்போது ஏற்படும் பிரத்யேகத் துடிப்பும் கலையாத சமயம். இந்தச் சமயத்தில் நடப்பது முழுவதும் சொல்வது கடினமான காரியம். மேலும், சில வேளை அநாகரிகமான காரியம்... அவர்கள் நடந்துகொண்ட புது நிலையை வர்ணிக்கப் புதிதாய்க் கல்யாணம் ஆன ஒருவனால்தான் முழுவதும் இயலும். என் கல்யாணம் முடிந்துவிட்டது. அந்த நாட்கள் என் ஞாபகத்தில் ஆறு வருஷம் பின்னால் இருக்கின்றன.

நிபந்தனை - சுஜாதா

ஒன்பது மணிக்கே வெயில் கொளுத்திற்று. கசகசவென்று வியர்வை முதுகுக்குள், மார்பில் எல்லாம் சின்னச் சின்ன ஊசிகளாகக் குத்தியது. ஈஸ்வரிக்குப் பட்டுப்புடவை ஏன் உடுத்திக்கொண்டு வந்தோம் என்றிருந்தது.

பெரிய யானை ஒன்று முனிசிபாலிட்டி குழாயில் சமர்த்தாகத் தண்ணீர் பிடித்து முதுகில் ஆரவாரமாக வாரி இறைத்துக்கொண்டு இருந்தது. யானைப்பாகன் பீடி குடித்துக்கொண்டு இருந்தான். எதிரே கட்டை குட்டையாகக் கோபுரம் தெரிந்தது. அருகே தெப்பக்குளம். அதற்கு எதிர்ப்புறத்தில் பழங்காலத்து மரக் கட்டடத்தின் உச்சாணியில் இருந்த விநோத கடிகாரத்தையே பார்த்துக்கொண்டு பத்துப் பதினைந்து பேர் ஒன்பது அடிக்கக் காத்திருந்தார்கள். மணியடிக்கும்போது இரண்டு பொம்மை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளுமாம். மஹாராஜா செயலாக இருந்தபோது வாங்கிப் போட்ட கடிகாரம். இப்போது மஹாராஜாவே அந்தப் பதினைந்து பேரில் ஒருவராக இருந்தால் ஆச்சர்யப்படக் கூடாது என்று சோமசுந்தரம் எண்ணினான்.

தேனிலவு - சுஜாதா

கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல வாசனை கலந்திருந்தது. போலீஸ்காரர்கள் கறுப்பாகக் கோட்டு அணிந்திருந்தார்கள். தொப்பி வைத்துக்கொண்டு மைசூர்த்தனத்துடன் சிற்சிலர் கூடைகளில் சிவப்பு சிவப்பாகப் பழம் விற்றார்கள்.

சோபனாவுக்கு நிறுத்தி வாங்க வேண்டும் போலிருந்தது. நிறுத்திப் பூப்பறிக்க வேண்டும் போலிருந்தது. அந்தத் துல்லியமான காற்றை நெஞ்சு பூரா நிரப்பிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

வழி தெரியவில்லை! - சுஜாதா

ஒரு சினிமா பார்ப்பதற்காக சபர்பன் ரயில் மார்க்கத்தில், பெயர் தெரிவிக்க முடியாத அந்த ஸ்டேஷனில் நான் இறங்கினேன். படம், நான் சென்னையில் தப்பவிட்ட படம். ஊரெல்லாம் சளைக்காமல் ஓடி ஓய்ந்துவிட்டு மொபஸலில் ஓடிக்கொண்டு இருந்தது. நல்ல படம் என்று நண்பர்கள் வற்புறுத்திப் பார்க்கச் சொன்னார்கள்.

அதைத் துரத்திக்கொண்டு அந்த ரயில் நிலையத்தில் மாலை இறங்கினேன். பெயர் சொல்ல மாட்டேன். நண்பர்கள் வழி சொல்லியிருந்தார்கள். 'லைனோடு நட, லெவல் கிராஸிங்கில் சாக்கடையைத் தாண்டு, பஞ்சாயத்து அலுவலகத்தில் திரும்பி நேராக நட, கடைத் தெருவெல்லாம் தாண்டினால் ஒரு சென்ட் கம்பெனி வரும். வாசனை அடிக்கும். அங்கே இடது பக்கம் திரும்பி, கல்லெறிகிற தூரம் நடந்தால் நெல் வயல் வரும். அதற்கு முன் கொட்டகை தென்பட்டுவிடும்' என்று.

நிதர்சனம் - சுஜாதா

திரும்பி வந்துகொண்டு இருந்தபோது, ஆபீஸர்ஸ் கிளப்பை அடுத்து இருந்த ஹாஸ்டல் வாசலில் கூட்டமாக இருந்தது. கம்பெனி லாரி நின்றிருந்தது. செக்யூரிட்டி ஆசாமிகள் சிகரெட் புகைத்தபடி அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பேசாமல் வீட்டுக்குப் போயிருக்கலாம்.

ஏதாவது திருட்டாக இருக்கலாம் என்று அருகே சென்று விசாரித்தேன்.

''மேலே போய்ப் பாருங்க! மாடில வலது பக்கம் கடைசி ரூம்.''

தயக்கத்துடன் மாடி ஏறினேன். எதிர்பார்த்ததை மனசு விரும்பவில்லை. உடம்பு பூரா ஒரு தரிசனத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்க, படிப்படியாக இஷ்டமின்றி ஒருவிதமான குரூர ஆர்வத்துடன் மேலே சென்றேன். காரிடாரில் மௌனமாகச் சிலர் நின்றிருந்தார்கள். ஓரிரண்டு பரிச்சய முகங்கள். எதையோ யாரோ செய்வதற்கு எல்லாரும் காத்திருந்தார்கள் போலத் தோன்றினார்கள்.

எப்படியும் வாழலாம்! - சுஜாதா

''உங்களுக்கு வயசு எத்தனை?''

''செரியாச் சொல்ல முடியாதுய்யா!''

''உங்க அப்பாஅம்மா?''

''அவங்கதான் இல்லியே... பூட்டாங்களே... இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு சொல்லலாம்.''

''உங்க சொந்த ஊரு?''

''கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்.''

''தொழில்?''

'' '....'ன்னு சொன்னா பத்திரிகைல போடுவாங்களா, போட மாட்டாங்களா?''

''போட மாட்டாங்க!''

நகரம் - சுஜாதா

''பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் 'மட்ரா' என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் 'மதுரா' என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் 'மெதோரா' என்று குறிப்பிடுவதும் இத்தமிழ் மதுரையே யாம்!''

-கால்டுவெல் ஒப்பிலக்கணம்

சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் வித விதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை ஆர்.கே.கட்பாடிகள்எச்சரிக்கை! புரட்சித் தீ! சுவிசேஷக் கூட்டங்கள் ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல்)30.09.73 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்.

நயாகரா - சுஜாதா

எனக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப்போவதில்லை. பாண தீர்த்தத்தில் ஒரு முறை தடுக்கி விழுந்து, தாமிரபரணியில் சேர்ந்துகொள்ள இருந்தேன். அதே போல், ஒகனேக்கலில் பாசி வழுக்கி காவிரியில் கலக்க இருந்தேன். அப்புறம் அகஸ்தியர் ஃபால்ஸில்... எதற்கு விவரம்? நீ.வீக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்கிற சினே ரியோ புரிந்தால் சரி. வீழ்ச்சியைக் கண்டாலே எனக்கு ஞமஙம என்று மூக்கில் உறுத்தும். அடுத்த பஸ்ஸைப் பிடிப்பதற்குள் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிடும்.

இருந்தாலும் அமெரிக்காவுக்குப் போய் நயாகராவைப் பார்க்காமல் வந்தால்,

1. ஜன்மம் சாபல்யம் அடையாது.

2. திரும்பி வந்ததும் ஜனங்கள் வெறுப்பேற்றும் (''என்ன சார் அவ்வளவு தூரம் போயிட்டு நயாகரா பார்க்கலை... உச்... உச்... உச்'' எக்ஸெட்ரா).

எனவே, நயாகரா பார்க்கச் சென்றோம்.

பேப்பரில் பேர் - சுஜாதா

படிப்பு முடிந்து வேலை கிடைப்பதற்கு முன் கொஞ்ச காலம் சும்மா இருந்தேன். வேலை கிடைப்பதைப் பற்றி அப்போது சந்தேகங்களோ கவலையோ இல்லை. எப்படியாவது யாராவது ஏமாந்து வேலை கொடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததால் இப்போதைய இளைஞர்களைப் போல கோபமும் கம்யூனிசமும் இல்லாமல் ஹாய்யாக ஸ்ரீரங்கத்தில் சில மாதங்கள் இருந்தேன். அம்மா காலையில் காட்டமாகக் காப்பி கொடுப்பாள். குடித்துவிட்டுச் செய்தித்தாளை வரி விடாமல் படிப்பேன். காவேரிக்குப் போய்க் குளிப்பேன். பத்து மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு பிற்பகல் காப்பி வரை அரட்டை அடிக்க ரங்கு கடைக்குப் போய்விடுவேன்.

இரு கலைஞர்கள் - ஜெயமோகன்

ஜெ.கருணாகர் காலையில் தூங்கி எழ தாமதமாகும். இரவு வெகுநேரம்வரை , சிலநாட்களில் விடிகாலை நான்குமணிவரைக்கூட, அவரது 'மன்ற'த்தில் பேச்சு நீள்வதுண்டு. மாடிமீது தாழ்வாகக் கட்டப்பட்ட கூரைப்பந்தல் அது. நீளவாட்டில் பெஞ்சுகள் நடுவே நீளமான மேஜை. எல்லாம் காயமும் கறையும் பட்ட பழைய உருப்படிகள். வலதுபக்கம் முனையில் தன் நாற்காலியில் அவர் பின்மதியம் மூன்று மூன்றரை வாக்கில் வந்து அமர்வார். சாதாரணமாக லுங்கி கட்டிக் கொண்டு மேலே சட்டையில்லாமல் நீளமான வெண்தலைமயிர் சிலும்பிப் பறக்க தூங்கிக் களைத்த கண்களுடன் வந்து அமர்வதும் உண்டு.குளிர்ந்த நீரில் குளித்து தலைசீவி மடிப்பு கலையாத ஜிப்பாவும் காற்சட்டையுமாக வருவதும் உண்டு. எல்லாம் அவரது மனநிலையைப் பொறுத்ததே ஒழிய வருபவர்களின் தகுதியைச் சார்ந்தது அல்ல. அவரது மன்றத்தில் எப்போதும் கிடைக்கும் கஞ்சாப்புகைக்காக வந்து அமரும் குடிசைவாசிகள் முதல் அவரது நீண்ட தன்னுரையாடல்களையும் ஊடாகக் பொழியும் வசைகளையும் நக்கல்களையும் கேட்பதற்கென்றே வரும் ரசிகர்கள் வரை அங்கே எப்போதும் ஆளிருக்கும். பலசமயம் அவருக்காக சிலும்பியும் இலைப்பொட்டலங்களும் ஆட்களும் காத்திருப்பார்கள். அபூர்வமாக அவர் மட்டும் வந்து தன்னந்தனிமையில் தன்மீசையை ஆழ்ந்து கோதியபடி கூரையை வெறித்து அமர்ந்திருப்பார். மன்றம் நெரியநெரிய ஆள் நிரம்பி சமகாலப்பிரச்சினைகள் மிக உக்கிரமாக விவாதிக்கப்படும்போதும்கூட சட்டென்று அவர் தன் முழுத்தனிமைக்குள் சென்றுவிடுவதுண்டு. அவரை நெருங்கியறிந்தவர்கள் அவர் மிகமிகத் தனிமையான மனிதர் என்பதை அறிவார்கள். அது தினம் ஆயிரம்பேர் புழங்கும் பேராலயத்தில் கருவறை இருளில் நிற்கும் மூலச்சிலையின் தனிமை. அங்கே வருபவர்கள்கூட அத்தனிமையால் ஈர்க்கப்பட்டவர்கள் போலும். அவரது நெருக்கமான நண்பரும் வாசகருமான கெ.எஸ்.ராவ் ஒருமுறை கூறியதுபோல அவர் தன் வாழ்நாள் முழுக்க எப்போதும் பிறரிடம் பேசியதேயில்லை, எழுதியதுமில்லை.

திருமுகப்பில்..... - ஜெயமோகன்

திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்த பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி திருவரம்பில் குடியிருந்தோம். அப்பாவின்அம்மாவும் தங்கையும் திருவட்டாரிலேயே கோயில் அரசமரத்தருகே மூதாதையர் வீட்டிலேயே இருந்தனர். நாங்கள் பரம்பரையாக திருவட்டார் கேசவப்பெருமாள் கோயில் ஊழியர்கள். அந்தக்காலத்தில் யானைக்கொட்டில் பொறுப்பில் இருந்ததாகச் சொல்வார்கள். விடுமுறை நாட்களில் அனேகமாக வாரம் மூன்றுமுறை திருவட்டார் போய் பாட்டியைப்பார்த்து பழங்கதைகள் பேசிவிட்டு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துவருவேன். இதெல்லாம் எழுபதுகளில். நான் அப்போது ஒல்லியான உடலும் பெரிய தலையும் கொண்ட பையன்.

சேதி வந்தது - வாஸந்தி

பூஜாரி விட்டல் ராவின் வீடு தெருக்கோடியில் இருந்தது. ஐந்து மணிக்கு அவரைப் பிடிக்கணும் என்று கனகம்மா தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.இப்பொழுது மணி நான்கு தான். விட்டல்ராவ் சரியாக நாலரை மணிக்குக் கோவிலுக்குக் கிளம்பிவிடுவார். கிளம்பும் சமயத்தில் போய் நின்றால் ஏகமாய் பிகு செய்துக் கொள்வார்.ஆபீஸுக்குக் கிளம்பும் சமயத்தில் ஏதாவது விவரம் கேட்க எதிரில் சென்றால் ரமணாவின் அப்பாவுக்குக் கோபம் வருமே அதுபோல.வெங்கடாசலபதிதான் விட்டல்ராவின் எஜமானர். தேமேனென்று நிற்கும் கற்சிலை.வாயைத் திறந்து ஏன் தாமதமாக வந்தீர் என்று கேட்கப்போவதில்லை. இந்தமட்டும் என்னை கவனிக்க நீர் இருக்கிறீரோ நான் பிழைத்தேனோ என்று வெங்கடாசலபதிக்குத் தோன்றவேண்டும்.விட்டல் ராவ் சூட்டும் கோட்டும் அணியவில்லையே தவிர பூஜாரி வேலையையும் ஏதோ ஆபீசர் வேலை போலத்தான் நினைப்பதாகத் தோன்றும்.தனுர் மாசக்குளிரானாலும் டாணென்று காலை ஐந்தரை மணிக்குக் கோவில் வாசலைத் திறக்கப் போய்விடுவார். பன்னிரெண்டு மணிக்குக் கோவில் வாசல் மூடப்படும் எந்தக் கொம்பன் வந்தாலும் திறக்காது. ஒரு மந்திரி அந்த ஊர் பக்கம் 12 அடித்து பத்து நிமிஷம் கழிந்து வந்தார். அவருடன் வந்தவர்கள் அரக்கப் பரக்க விட்டல் ராவிடம் வந்து திறக்கச் சொன்னார்கள்.கோவில் விதியை வெங்கடாசலபதியே வந்தாலும் மாற்ற முடியாது என்றுவிட்டார் விட்டல்ராவ்.மாலை ஐந்து மணிக்கு

ஒரு விநாடி பிசகாமல் கோவில் திறக்கும்.அதற்குமுன்பு சாமியை தரிசனத்துக்குத் தயார் செய்யவேண்டும்.

விட்டல்ராவ் தனது கடமைகளைப் பட்டியலிடும்போது சொர்கவாசல் சாவி அவரிடம்தான் இருப்பதாகத்

தோன்றும்.

வேகமாக நடை போடும்போது கனகம்மாவுக்கு லேசாக மூச்சிறைத்தது.மத்தியான்னம் சாப்பிட்டுப் படுத்ததும் கண் அசந்தது தப்பு.இத்தனைக்கும் இன்று காலை காபி போட்டுக் குடிக்கும் போது விட்டல் ராவைப் பார்க்கவேண்டும் என்று நினைவு வந்தது.மூன்றரை மணிக்கு அவர் வீட்டுக்குச் செல்வது என்ற முடிவையும் அப்போதே எடுத்தாகிவிட்டது.இன்று மதியம் படுக்கக்கூடாது என்ற எண்ணத்தை மீறி வந்த தூக்கத்தினால் கண்விழிக்கும் போது மணி மூன்றரை ஆகி விட்டிருந்தது. முகத்தைக் கழுவி வாய் கொப்புளித்துக் கிளம்பத்தான் நேரம் இருந்தது.

பூஜாரியின் மனை வாசலை மிதிக்கும் போது விட்டல்ராவ் கோவிலுக்குக் கிளம்ப ஆயத்தமாகியிருந்தார்.

'கனகம்மாவா, வா ' என்றார் சுமுகமாக. ' நானே நினைச்சேன் நீ வருவேன்னு. '

கனகம்மா தலைப்பால் முகத்தைத் துடைத்தபடி திண்ணையில் அமர்ந்தாள். 'ஞாபகம் இருக்கா உங்களுக்கு ? ' என்றாள் மெல்லப் புன்னகைத்து.

'தனுர் மாசம் பிறந்ததுமே உன் ஞாபகம்தான் ' என்று விட்டல் ராவ் சிரித்தார். 'நாலு நாள் முந்தியே பஞ்சாங்கத்தைப் பார்த்து வெச்சுட்டேன். வர்ற எட்டாம் தேதி ரேவதி நட்சத்திரம். அதாவது அடுத்த செவ்வாய்க் கிழமை. '

'செவ்வாய் கிழமையா ? ரொம்ப சரி .கோவில்லெ ஒரு அர்ச்சனைக்கு ஏற்பாடு பண்ணணும் ரமணா பேரிலே. '

'அதையும் குறிச்சு வெச்சுண்டாச்சு.பண்டிகைப் பாரணைன்னு வராமெ போனாலும் அன்னிக்குதானே நீ கோவில் பக்கம் வருவே ? '

கனகம்மா எழுந்தாள். 'அப்படி வந்தாத்தான் சாமிக்கும் ஞாபகம் இருக்கும் '.

விட்டல் ராவ் யோசனையுடன் அவளைப் பார்த்தார்.

'அவனுக்கு இப்ப என்ன வயசு இருக்கும் ? '

'யாருக்கு ? ரமணாவுக்கா ? இருக்கும் நாற்பது நாற்பத்திரெண்டு- இருக்காது ? '

'இருக்கும் அவன் பிறந்து ஆறுமாசம் கழிச்சு லக்ஷ்மிக்குத் துளசி பிறந்தா. '

கனகம்மாவுக்கு முகமெல்லாம் மலர்ந்து போயிற்று.

'துளசியை என்ன வம்பு செய்வான் ரமணா! '

அவளது நினைவுகளைக் கலைக்க சங்கடப் படுபவர்போல் விட்டல் ராவ் நின்றார்.

'ரமணா எப்ப வர்றான், சேதி உண்டா ? '

' யாருக்குத் தெரியும் ? வருவான், வருவான்.வராமெ எங்கெ போவான் ? '

கனகம்மா அவரைப் பார்த்துச் சிரித்தாள். ' பிறந்த நாள் அன்னிக்கு வந்து நின்னாலும் நிப்பான். யார் கண்டது ? '

பிறகு நினைவு வந்தவள்போல் தொடர்ந்தாள். 'துளசி பேரன் பேத்தி எடுத்தாச்சுன்னா நம்பக்கூடமாட்டான்! '

கனகம்மா அது ஏதோ பெரிய ஹாஸ்யம் போல் சிரித்தாள். உள்ளேயிருந்து எட்டிப்பார்த்த விட்டல் ராவின் மனைவி லக்ஷ்மி, 'ரமணா வரானா ? ' என்றாள்.

'வந்தாலும் வருவான் ',என்றாள் கனகம்மா, சொல்லும்போதே அதை நம்புபவள்போல.

'வந்ததும் அவன் போகவிடாமெ, ஒரு நல்ல பெண்ணாய்ப் பார்த்துக் கல்யாணத்தைச் செய் ', என்றாள் லக்ஷ்மி.

' ஆமாமாம். செஞ்சுட வேண்டியதுதான்.ஏதாவது நல்ல பெண் இருந்தா நீங்கதான் பார்த்துச் சொல்லணும். '

' ஆகா,கண்டிப்பா ', என்றாள் லக்ஷ்மி.

' அதை நீ சொல்லணுமா ? '

கனகம்மாவுக்குக் காரணம் புரியாமல் மனசு நெகிழ்ந்தது.

விட்டல்ராவின் முகம் திடாரென்று இறுகிற்று.

'சரி கனகம்மா.எனக்கு நேரமாச்சு.கிளம்பணும். அர்ச்சனைக்கு ஏற்பாடு பண்ணறேன்.நைவேத்தியம், வழக்கம் போலேயா ? '

'ஆமாம் '.

' பிஸிபேளா ஹுளி அன்னா, சேமிகே பாயஸா ? ' என்றாள் லக்ஷ்மி.

கனகம்மா சிரித்தாள்.

'ஆமாம்! ரமணாவுக்கு அதுதான் பிடிக்கும். '

' ருசி மாறியிருக்கும்டா இப்ப! '

' மாறாது. என் பிள்ளையைப் பத்தி எனக்குத் தெரியாதா ? '

விட்டல்ராவ் எந்த அபிபிராயத்தையும் சொல்லாமல் செருப்பைமாட்டிக் கொண்டு லக்ஷ்மியைப் பார்த்து, 'மழை வரும் போலிருக்கு. முற்றத்திலே ஏதோ உலர்த்தியிருக்கே போலிருக்கு ? ' என்றார்.

'ஓ ஆமாம் ' என்று லக்ஷ்மி உள்ளே சென்றாள்.

கனகம்மா அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள்.மேகம் ஏதும் காணப்படாவிட்டாலும், விட்டல்ராவ் சொன்னதால் மழை வந்தாலும் வரலாம் என்ற யோசனையுடன் வீட்டை நோக்கிக் கிளம்பினாள்.போகும் வழியில்

மளிகைக் கடைக்காரர் நாகப்பாவிடம் கால் கிலோ சர்க்கரை, 50 கிராம் முந்திரிப்பருப்பு திராட்சை, 10 கிராம் கிராம்பு என்று பட்டியல் கொடுத்து கணக்கில் சாமான் வாங்கிக் கொண்டாள்.

'என்ன கனகம்மா விசேஷம் ? ' என்றார் நாகப்பா.

'என் பிள்ளை ரமணாவுக்குப் பிறந்த நாள் வர்ற செவ்வாய் கிழமை! '

'ஓ, சரிதான். ரமணா வரானா ? '

'வருவான் '.

தராசில் முந்திருப்பருப்பை போட்டுக்கொண்டிருந்த அதை நிறுத்தி அவளைப் பார்த்தார்.

'சேதி வந்திருக்கா ? '

கனகம்மா இல்லை என்று தலையசைத்தாள்.

'சேதி அனுப்பற வழக்கமே அவனுக்கு இல்லே.திடார்னு வந்தாலும் வரும். சொல்லமுடியாது. '

'சரிதான். வந்தா தெரியப் படுத்துங்க. '

சின்னச் சின்னக் காகிதப் பொட்டிலங்களக் கப்பாணிக்கயிற்றால் கட்டி அவள் கைகளில் நாகப்பா வைத்ததை சேலைத் தலைப்பில் சேர்த்து இடுப்பில் செறுகி வீட்டை நோக்கி நடக்கும்போது கனகம்மாவுக்கு திடாரென்று சோர்ந்தது.

ரமணா வரானா ? சேதி வந்திருக்கா ? இதென்ன கேள்வி கேட்கிறார்கள் எல்லாரும் ? சேதி அனுப்பிதான் பெத்தவளைப் பார்க்க ஒருத்தன் வரணுமா என்ன ? மழை வருமோ என்று வானத்தை அடிக்கடி பார்த்தபடி

அவள் வீட்டுக்குச் சென்றபோது பக்கத்து வீட்டு ராஜம்மாவின் மகள் சரோஜா துளசி மாடத்தில் விளக்கேற்றி ஏதோ பாட்டை முணுமுணுத்தபடி நின்றிருந்தாள். நல்ல பெண். இந்த மாதிரி ஒரு பெண் ரமணாவுக்கு வாய்த்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் சரோஜாவுக்கு பதினெட்டு வயதுகூட ஆகவில்லை. ரமணாவின் வயதுக்கு யார் இப்போது பெண் கொடுக்க சம்மதிப்பார்கள் என்று அவளுக்கு யோசனை ஏற்பட்டது. முதலில் அவன் வரட்டும் . அவன் மனசில் என்ன இருக்கிறதோ ? அவன் பெரிய படிப்பு படித்தவன்.படித்த பெண்தான் அவனுக்கு சரிப்படும். ' நானே பார்த்துண்டாச்சு. இவளைத்தான் நான் கட்டிக்கப் போறேன் என்று சொல்லி அவள் முன் நிறுத்தினால் அவள்தான் என்ன செய்யமுடியும் ?மகாராஜனாய் இரு என்று ஆசீர்வதிப்பதைத்தவிர ? அவள் கோபப்படுவாள் என்று பயந்துதான்

அந்த அசட்டுப் பிள்ளை ஏதும் தெரிவிக்காமல் இருக்கிறானோ ?

அவளது யோசனை அந்தப் புதிய கோணத்தைத் தொட்டதும், அதுதான் காரணமாக இருக்கவேண்டும் என்று அவளுக்கு ஊர்ஜிதமாயிற்று. அட பைத்தியமே என்று சிரித்துக் கொண்டாள். நேரிலே வா அவளையும் அழைச்சிண்டு உன் பவிசை உன் பெண்டாட்டிக்குச் சொல்றேன். வந்தால், உனக்குப் பிடிச்சதை செய்து போட அவளுக்குக் கத்துக்குடுப்பேன் . பிஸிபேளா ஹுளி அன்னா செய்யத் தெரியுமா ?

அடுப்பில் அரிசியும் பருப்பும் சேர்ந்து வெந்ததும் கனகம்மா தயாராக இருந்த புளிக்குழம்பை அதில் ஊற்றி நன்றாகக் கலக்கினாள். கொப்பரையுடன் கூடிய மசாலாக் குழம்பின் வாசனை மிகச் சரியான பதத்தில் இருப்பதைக் கண்டு திருப்தி ஏற்பட்டது. எல்லாம் சேர்ந்து கொதித்து சுருளும்போது இறக்கி நெய்யில் கடுகையும் முந்திரிப்பருப்பையும் ஒரு பிடி கருவேப்பிலையும் தாளித்துப் மேலாகப் பரப்பியபோது ரமணா இதைச் சாப்பிட வந்தே ஆகவேண்டும் என்று தோன்றிற்று. அவனுக்குப் பிடித்த சேமியா பாயசம் தயாராகியிருந்தது.சேமியாவுடன் நான்கு கிராம்பையும் நெய்யில் வறுத்து பாலில் வேகவிடவேண்டும் அவனுக்கு.சாப்பாட்டில் அத்தனை வக்கணைப் பேசும் பிள்ளை. இதையெல்லாம் மறந்திருக்கமுடியாதுமைன்று காலை எழுந்திருக்கும்போது கனகம்மாவுக்குக் காரணம் புரியாமல் மனசு பரபரத்தது. நேற்று பின்னிரவிலோ இல்லை இன்று விடியலிலோ கண்ட கனவின் நினைவு ரம்யமாக மனசில் அமர்ந்திருந்தது.கனவு வீட்டில் கல்யாணக்களைக் கட்டியிருந்தது.தோரணமும் விளக்குகளுமாக.ரமணா கழுத்தில் மாலையுடன் நின்றான்.கனவு கலைந்த பிறகும் அந்தக் கனவுக் காட்சியில் அவள் மீண்டும் மீண்டும் திளைக்க முயன்றாள்.

வெங்கடாசலபதிக்கு அன்று விசேஷ அலங்காரம் செய்திருந்த விட்டல்ராவ், தனது கணீரென்ற குரலில் அர்ச்சனையை ஆரம்பித்ததும், ரமணாவின் கல்யாணத்தை உன் சன்னிதியிலே நடத்தறேன் என்று வெங்கடாசலபதியிடம் அவள் வாக்கு கொடுத்தாள். அர்ச்சனை முடிந்து தீபாராதனை எடுத்து அவளிடம் கற்பூரத் தட்டை விட்டல்ராவ் நீட்டியபோது கமலம்மா மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

'லக்ஷ்மி அன்னிக்கு ரமணாவுக்குக் கல்யாணத்தை பண்ணிடுன்னாளே,பலிக்கும்னு நினைக்கறேன். இன்னிக்கு விடியக்காலம் அவனை செவந்தி மாலையும் கழுத்துமா சொப்பனத்திலே பார்த்தேன். '

'பலிக்கட்டும் ' என்றார் விட்டல்ராவ் உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரத்தை நிறுத்தி.

வீட்டுக்குச் செல்வதற்குள் ரமணா நிச்சயம் வருவான் என்று நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.ராஜம்மா

வீட்டைத் தட்டி பிரசாதம் கொடுத்து 'ரமணாவுடைய பிறந்த நாள் இன்னிக்கு,அவன் வந்தாலும் வருவான் ' என்றாள். 'அப்படியா ? ' என்றாள் ராஜம்மா வியப்புடன். 'கடுதாசு வந்திருக்கா ? '

'கனா வந்தது ' என்று கனகம்மா சிரித்தாள்.

மதியமே ரமணா வரலாமோ என்று அவள் காத்திருந்து பிறகு பசி பொறுக்காமல் சாப்பிட்டு மிகுந்த பிஸிபேளாவையும் பாயசத்தையும் அவனுக்கு என்று மூடிவைத்தாள்.மதியம் போய் மாலை வந்து,தோட்டத்து மாமரத்துப் பட்சிகளின் குரல் ஓய்ந்து, வீட்டு முற்றத்தில் அடர்த்தியான கரும் போர்வை படர்ந்தது. துளசி மாடத்து விளக்கின் எண்ணையும் தீர்ந்து அணைந்த தருணத்தில் அன்று செய்த அதிகப்படியான வேலையினால் கனகம்மாவுக்குக் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தது.

இரவுச் சாப்பாடு முடிந்து பாத்திரங்களைக் கழுவி வைத்து அவள் விளக்கை அணைத்துப் படுக்கச் செல்லும்போது ரமணா வந்தான்--எப்போதும் போல, மெல்ல சப்தமில்லாமல், பூனை போல. அவன் வந்தது தெரியாததால் பின்னாலிருந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டதும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.மெல்லிய நிம்மதியும் ஏற்பட்டது.

'என்னடா ரமணா, ஆளையே காணும் ? ' என்றாள் மனத்தாங்கலுடன்.

அவன் சிரித்தான். 'குறை பட்டுக்காதே. உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் ' என்றான் ரகசியக் குரலில்.

அவளுக்கு திடாரென்று நினைவு வந்தது. ' சாப்பிட்டியோ ? எப்பவும் சாப்பாடு முடிஞ்சப்புறம் வந்து நிப்பே திருடன் மாதிரி!ரெண்டு அரிசி ரொட்டி பண்ணித் தரட்டுமா ? '

'வேண்டாம் ,வேண்டாம் ,நா சாப்பிட்டாச்சு. ' என்றான் அவன் அவசரமாக.

'அம்மா சமையல் கூட உனக்கு சாப்பிடணும்னு இப்ப தோணறதில்லே ' என்றாள் அவள் துக்கத்துடன். 'எங்கேடா போயிட்டே சொல்லாமெ கொள்ளாமெ ? '

'உஷ், மெள்ளப் பேசும்மா. ' என்று அவள் வாயைப் பொத்தினான். உள்ளங்கையில் பூண்டு வாசனை வந்தது.

'எந்த தப்புக் காரியமும் நா பண்ணல்லே அப்பா நினைக்கிறமாதிரி ' என்றான் மெல்ல.

' நீ ஒரே பிள்ளை. உன்னைப் பத்தி அவருக்குக் கவலையிருக்காதா ? உனக்கு என்ன குறை வெச்சார் ?

படிக்கவெக்கல்லியா ? '

'நீ இந்த மாதிரி அழுதியானா நா கிளம்பிப் போறேன். நா எந்தத் தப்பும் பண்ணல்லேன்னா நீ என்னை நம்பணும்! '

'நா நம்பறேண்டா! ' அவள் மீண்டும் அழுதாள்.

'நா வந்தது தப்பு ' என்று எழுந்தவனை அவள் பதற்றத்துடன் அமரச் செய்தாள். தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு நிதானமாகச் சொன்னாள். 'எல்லா பெரிய படிப்பையும் ஃபஸ்டுலே பாஸ் பண்ணிட்டு இப்படி

அலையறையே, எங்களைப் பாத்துக்கறது உன் கடமைன்னு நினைக்கலியா நீ ? '

'இல்லே! ' என்றான் அவன் அவளுக்குப் புரியாத உத்வேகத்துடன். அவன் கண்களில் இருந்த பளபளப்பு அவளை அச்சுறுத்திற்று.

' 'உங்களுக்குப் போதுமான காசு இருக்கு.செளகர்யமா வாழ வசதி இருக்கு. என் உதவி தேவை இல்லே. '

'காசு இருந்தா போதும்னு நினைக்கிறியா ? '

' அது இல்லாததாலெ நரகத்திலே இருக்கிறவங்களை எனக்குத் தெரியும். அவங்களுக்கு உதவ யாருமில்லே! அவங்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதிக்காகப் போராடறதுக்கு ஆள் தேவை. '

' நீதான் அவதரிச்சிருக்கியா அதுக்கு ? '

' அப்படித்தான் வெச்சுக்கயேன்! '

இவனுக்கு புத்தி சொல்ல தனக்குத் திராணி இல்லை என்ற பலவீனம் அவளை ஆட்கொண்டது.

'ஊர் உலகத்திலே யாரும் காணாத பிள்ளையாட்டம் இருக்கே '.

' ஆமாம். நா மத்த வீட்டுப் பிள்ளைகள் மாதிரி இருக்கமுடியாது. அதைப் புரிஞ்சுக்கோ. '

'அதுதான் ஏன்னு கேக்கறேன். நாலைஞ்சு பிள்ளைகள் இருந்தா, சரி ஒருத்தன் ஊருக்கு தத்தம்னு இருப்பேன். '

அவன் அவளது தாடையைத் தடவினான் செல்லமாக.

'இந்த பிரமையெல்லாம் உனக்குக் கூடாது. பகவத் கீதையிலே என்ன சொல்லியிருக்குன்னு

அப்பாவைக் கேளு. அம்மா-பிள்ளை, அப்பா-பிள்ளை என்கிற உறவெல்லாம் எதேச்சையானது. உனக்கு நான் சொந்தம்னு நீ உரிமை கொண்டாட முடியாது. '

'இதைச் சொல்லத்தான் வந்தியா ? ' அவளையறியாமல் குரல் உயர்ந்தது.

'உஷ்! ' என்றான் அவன். 'ஒரு உதவி கேட்க வந்தேன்.அவசரமா காசு வேணும். மூவாயிரம் ரூபாய். '

'மூவாயிரமா ? எங்கிட்ட ஏது அத்தனைப் பணம் ? '

'பணமா இருக்காது தெரியும்.பண்டமாத்தான் குடேன்! '

அவள் தலைக் குனிந்தபடி மெளனமானாள். இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்பு இருந்தன.

ஒன்றைக் கழற்றி அவனிடம் கொடுக்கும்போது, விளக்கு எரிந்தது. அவளுக்கு விரல்கள் லேசாக நடுங்கின. மார்பு படபடத்தது.

நிமிர்ந்தபோது பக்கத்துவீட்டு ராஜம்மா நின்றிருந்தாள்.

எதிரில் நிற்பது ராஜம்மா என்று புரிந்து கொள்ளவே கனகம்மாவுக்குச் சில விநாடிகள் பிடித்தன.

ராஜம்மாவின் முகம் பேயறைந்ததுபோல் இருந்தது.

'கனகம்மா! ' என்றாள் ராஜம்மா பிசுபிசுத்த குரலில்.ஏற்கனவே அகன்ற கண்கள் இன்னும் அகண்டுபோனதுபோல் இருந்தன.

'உங்க மகன் பேரு ரமணா தானே ? ரமணா ஸ்ரீநிவாச ராவ் ? '

'ஆமாம் ராஜம்மா, உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்! '

ராஜம்மாவுக்கு மூச்சு வாங்கியது.

'இப்பத்தான் டி.வி. செய்தியிலே சொல்றாங்க அவனைப்பத்தி. '

கனகம்மா விருட்டென்று எழுந்தாள்.

'என்ன சொல்றாங்க ? '

ராஜம்மா தயங்கினாள்.

கனகம்மா அவள் தோளை இறுக பற்றினாள். 'என்னடி சொல்றாங்க ? '

'போலீஸ் ரமணாவை சுட்டுடுத்தாம். '

கனகம்மா உறைந்து போனாள்.

' என்னது ? என்னடி சொல்றே ? '

'ரமணா ஒரு தீவிரவாதி.ரொம்ப நாளா போலீஸ் தேடிக்கிட்டிருந்திருக்கு '.

ராஜம்மாவுக்குப் பின்னால் நின்றிருந்த சரோஜாதான் அதைச் சொன்னாள்.ராஜம்மா அதைச் சொல்லியிருந்தால் கனகம்மா அவள் கழுத்தை நெரித்திருப்பாள்.

'பொய்! ' என்றாள் கனகம்மா கோபத்துடன். 'போலீஸ் வேணும்னே அப்படிக் கதைக் கட்டிவிட்டிருக்கு.ரமணா நல்ல பிள்ளை. ஒரு தப்பும் அவன் செய்யல்லே '.

'ரெண்டு வருஷத்துக்கு முந்தி ரமணா ஒரு வங்கியைக் கொள்ளையடிச்சிருக்கான். 12 லட்சம்

திருடினான்னு சொல்றாங்க. பல கொலைகள்ளையும்... '

'சரோஜா, நீ உள்ளே போடா! '

திமு திமுவென்று தெருவே கூடிவிட்டது திண்ணையில்.கனகம்மாவுக்கு அவர்கள் எல்லாம் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று விளங்கவில்லை. யார் அவள் எதிரில் நின்றாலும் 'அவன் நல்லவன் ' என்றாள்.

இடையில் ராஜம்மா வந்து அருகில் அமர்ந்தாள். 'போலீஸ் ஸ்டேஷன்லேந்து போன் வந்திருக்கு.சடலத்தை ஏத்துக்கிறிங்களான்னு கேக்கறாங்க. '

அவள் பேசவில்லை.குண்டு துளைத்த உடம்பையா ? எதுக்கு, எதுக்கு இனிமே ?

'ஏத்துக்காமெ ? ' என்றார் விட்டல்ராவ். 'ரமணா அநாதையில்லே. பெத்தவ பார்க்க வேண்டாமா ? '

'வேண்டாம் ' என்று அவள் சொல்லிக்கொண்டாள்.யாருக்கும் காதில் விழவில்லை.

நா ஒரு தப்பும் பண்ணல்லே நீ என்னை நம்பணும் என்றான் ரமணா காதருகில். நம்பறேன்

நம்பறேன் என்று அவள் தலை அசைத்தபடி அமர்ந்திருந்தாள்.

போலீஸ் வந்திருக்கு,போலீஸ் வந்திருக்கு என்றார்கள்.அவளுக்குப் புதிதாக அடிவயிற்றை கலக்கிற்று. ஒரு போலீஸ்காரர் வாசலில் ஜோடுகளைகழற்றி வைத்து உள்ளே வந்தார்.அவள் எதிரில் யாரோ கொண்டுவந்து போட்ட ஸ்டூலில் அமர்ந்தார்.சுபாவமான கூச்சமும் பயமுமாக அவள் சுவரில் ஒண்டிக்கொண்டாள்.

'உங்களைத் தொந்திரவு செய்யமாட்டேன் பயப்படாதீங்க ' என்றது போலீஸ். 'உங்க மகன் தானே

ரமணா என்கிறது ? '

'ஆமாம் '.

'அவனை நீங்க பார்த்து எத்தனை வருஷமாச்சு ? '

அவள் ஒரு பெருமூச்சுடன் சொன்னாள். 'இருபது வருஷமாச்சு. '

' இருபது வருஷமா அவன் இங்கே வரவேயில்லையா ? ' போலீஸ் நம்பாதமாதிரி இருந்தது.

'இல்லே. ' என்றார் அங்கு நின்றிருந்த விட்டல் ராவ். 'பத்து வருஷம் முந்தி அவங்க அப்பா செத்துப்போனபோது பேப்பர்லே போட்டோம் அவன் வருவானோன்னு. அப்பவும் வரல்லே. '

'கடைசியா பார்த்து அப்ப இருபது வருஷமாச்சுங்கறீங்க. அப்ப ஏதானும் பேசினானா ? ' என்றது போலீஸ் கனகம்மாவிடம்.

'கடைசியா அவன் வந்தப்ப பணம் வேணும்னான். என் கை வளையைக் கழட்டிக்கொடுக்க இருந்தப்ப, அவனுடைய அப்பா வந்து சத்தம் போட்டார். அவனைத்திட்டி விரட்டிட்டார். அதுக்கப்புறம் அவன் வரவேயில்லே. '

போலீஸ் எழுந்தது. 'இந்தப் பக்கத்திலே பயங்கர தீவிரவாதத்தைப் பரப்பினவன் அவன். வங்கிக் கொள்ளை கொலை எல்லாத்திலேயும் ஈடுபட்டவன். தேடிக்கிட்டிருந்தோம்.கையிலே ஏ.கே 47 வெச்சுக்கிட்டு திறிஞ்சவன். பிடிபட்டப்ப எங்களைக் கொல்லப் பார்த்தான். அதனாலெதான் அவனைச் சுடவேண்டிவந்தது. '

'நீ சொல்றது அண்டப் புளுகு ' என்று சொல்ல நினைத்து கனகம்மா எல்லாரிடமும் சொல்வது

போல போலீஸைப் பார்த்து 'ரமணா நல்லவன் ' என்றாள்.

போலீஸ் ஒரு விநாடி அவளை நிதானமாகப் பார்த்தது.பிறகு குனிந்து அவள் தோளைத் தட்டிவிட்டுச் சென்றது.

நடுக்கூடத்தில் ரமணா படுத்திருந்தான். அவள் வியப்புடன் கூர்ந்து பார்த்தாள்.கழுத்தில் மாலை

இருந்தது. செவந்தி மாலை. இது கனவுதான் என்று அவளுக்கு உறுதியாகத் தோன்றிற்று.

----

விடுதலை - வாஸந்தி

அந்தக்கரிய உருவங்கள் அங்குதான் நிழலாடிக்கொண்டிருந்தன. அது அவனுக்கு தெரிந்த விஷயந்தான். அவற்றை அவனால் துரத்த முடியாது. அவை அவனது வாழ்வின் அங்கமாகிப்போனதிலிருந்து அவற்றைத் துரத்துவது என்பது ஒரு அசாத்தியமான விஷயம் என்று அவன் புரிந்துக்கொண்டிருந்தான்.அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்கிற யத்தனத்திலேயே தனது வாழ்வின் இறுதிக் காலம் கழிய நேறும் என்று அவனுக்குப் பீதி எற்பட்டது.

பஞ்சாமியை மிதமிஞ்சிய சோர்வு ஆட்கொண்டது. அவனுடைய நாவிலிருந்து வரவிருந்த வார்தைகளுக்காக ஆயுள் முழுவதும் காத்திருக்க தயாரானவன் போல் எதிரில் அமர்திருந்த சடகோபனிடம் கெஞ்ச வேண்டும் போல் இருந்தது. 'என்னை விட்டுடுங்கோ, ப்ளீஸ். '

உடம்பு பூராவும் ஜ்வாலையா தகிக்கிறது.மூச்சு முட்டறது.

எப்படி சொல்லட்டும் இதை ?

நா சாமனியன். இந்த பிசாசுகள் வந்ததிலேர்ந்து அவஸ்தை படஇற்ன்.உஙகளுக்குப் புரியாது.இல்லே.இது எனக்கு வரப்பிரசாதமில்லே.பாரம்.

நரக வேதனை. ஓய், நா சொல்றது எது சத்யமோ இல்லையோ இது சத்தியம்.

நிழலாடிக்கொண்டிருந்தவை இப்பொழுது நிஜமாக ஆர்பரித்தன. அவனது இயலாமயைக் கண்டு கை கொட்டிச் சிரித்தன.அவனுக்கு மண்டைப் பிளந்துவிடும்போல் பயமேற்பட்டது.என்னை விட்டுடுங்கோ! எனக்கு வேண்டாம் இந்தப் பவிசு. இந்த மரியாதை. இந்தப் பேர். இந்தப் புகழ்.

அட! நிஜம்மாவா ? அடே, யோசிச்சுச் சொல்லு. இதெல்லாம் இல்லென்னா செத்துரமாட்டே ? பூதங்கள் கெக்கிலி பிக்கிலி என்று

கைக்கொட்டிச் சிரித்தன.

பஞசாமி சுய நினைவுக்கு வந்தான். எதிரே உட்கார்ந்திருந்த சடகோபனைக்கண்டு மெல்லிய பரிதாபம் எற்பட்டது.

உன்னைவிட பாவப்பட்ட ஜன்மம் நான்னு இவன்கிட்ட சொல்லமுடியாது.

'சொல்லுங்கோ பஞ்சாமி, எனக்கு புத்ர பாக்கியம் உண்டா ? '

பஞ்சாமி ஒரு வினாடி கன்களை மூடினான்.கரிய உருவஙகள் மண்டையை ஆட்டின.அவனை ஆட்கொண்டன.கன்களைத் திறக்காமல் பஞ்சாமி விசை முடுக்கப்பட்டவன் போல் சொன்னான்:

' உண்டு.அடுத்த பங்குனியிலே தூளி கட்டுவே. மீனாட்சி சுந்தரேசுவரன்னு பேர் வை.தீர்காயுசா இருப்பான். '

ஏதோ ஸ்பர்சத்தை உனர்ந்து அவன் கண் திறந்த போது சடகோபன் நெடுன்சாண்கிடையாக அவனது பாதத்தை ஒட்டி நிலத்தில் படர்ந்திருந்தான்.

'போறும். இது போறும். இந்த வார்தைக்காகத்தான் காத்திண்டிருந்தேன். '

கிளம்புவதற்குமுன் ஒரு தாம்பாளத்தில் பழம் புஷ்பம் வெற்றிலை பாக்குடன் ஐம்பது ரூபாய் வைத்து விட்டுப் போனான்.

ஐம்பது ரூபய்க்கு ஏற்பட்ட ஆயாசம் அடங்க அவகாசம் தேவைப்பட்டது. அறையில் இன்னும் நான்கு பேர்களாவது இருக்க

வேண்டும்.அவர்கள் காத்திருப்பார்கள் யாசிக்க வந்தவர்கள் போல.ஒரு வியாபாரி,ஒரு கம்பெனி முதலாளி,சினிமா டைரெக்டர். அவர்களது அந்தப் பொறுமை அவனை அத்துறுத்துவது. ஈச்வரா...

ஒருயுகாந்தர மெளனத்துக்குப் பிறகு அவன் கன்ணைத் திறக்காமலே சைகை காட்டியதில் அடுத்தவர் வந்து அமர ,

பஞ்சாமி ஆயத்தமானான்.

'சாமி, பொண்ணுக்குக் கல்யாணமாகுமா ? '

'சாமி, வேலை எப்ப கெடைக்கும் ? '

' என் தீராத தலை வலி எப்ப தீரும் ? '

'எனக்கு வீரியம் குறைஞ்சுண்டே வருது .என்ன வழி ? '

மருத்தவரிடம் கூச்சமில்லாதமாதிரி இங்கு யாருக்கும் கூச்சம் கிடையாது.இது உடனடியாக பதிலை,நிவர்த்தியைச் சொல்லும் சாமி.வெளிப்படையாக இருக்கவேண்டியது அவசியம்.தான் ஒரு பால் இன அடையாளமில்லாத ஸ்தூலமாகிப்போனது போல அவனுக்கே பிரமை ஏற்பட்டு வெகு காலமாயிற்று.

எல்லார் கையிலும் ஒரு சிட்டிகை வீபூதி . அது அவர்களது பிணியை தீர்க்குமா என்று அவனுக்குத் தெரியாது.

ஒரு நாள் அவனை அறியாமல் என் வலிகளை போக்க யார் விபூதி கொடுப்பா ? என்று அவன் கேட்டதை விளக்கமுடியாத தத்துவ

வாக்காகக் கொள்ளப்பட்டது.

அறையில் ஆள் குறைந்து வந்தது மெல்ல மெல்ல படர்ந்து வரும் நிசப்தத்தில் தெரிந்தது. நிதானமான ஒரு சுகந்த நிசப்தம். அவன் ஆழமாக மூச்சிழுத்துக்கொண்டான். நாடி நரம்பையெல்லம் ஊடுறுவி ஒரு மெய்யான ஆசுவாசத்தை அளித்தது.யாரோ ஏற்றிவிட்டுப்போன ஊதுபத்தியாக இருக்கவேண்டும்.தாம்பாளங்களில் ஆப்பிளிலிருந்து, எளிய பூவன் பழம் வரை நிரம்பியிருந்தன.வெற்ற்றிலை மடிப்புக்கிடையே ரூபாய் நோட்டுக்கள்.அவற்றை எடுத்து எண்ணாமலே அலமாரியில் வைத்தான். அலமாரியை பூட்டும் வழக்கம் இல்லை.யாரு வரப்போறா ? வேலைக்காரப் பெண்ணுக்கு அவன் புழங்கும் பூஜை அறையும் சமையல்கட்டும் அனுமதிக்கப்படாத இடங்கள்.அலமாரியில் இருக்கும் பனம் எவ்வளவு என்று தெரியாது. அதில் பனம் இருக்கிறது என்ற உணர்வு தெம்பைத் தருவது.ஆனால் அவனுக்குத் தேவை என்பதே இல்லாமல் போனது விந்தை.கட்ட வேஷ்டியும் துண்டும் சம்பாவனையாகவே வந்து கொடியில் இடம் கொள்ளாமல் கோயில் குருக்களுக்குக் கொடுத்துவிட வேண்டிவருகிறது.மதியத்துக்கு ஒரு கவளம் சாதமும் ஏதாவது காயைப் போட்டுக் குழம்புமே அவனுக்குத் தேவை.சமயலை காலைக் குளித்த உடனேயே செய்துவிடுவான். இரவு அனேகமாக பாலும் பழமும் எதேஷ்டம்.சாப்பிடுவது எதுவுமே உடம்பில் ஒட்டுவதில்லை என்பது வேறு விஷயம்.இந்த இரு அறைகள் கொண்ட வீட்டை அவனுக்குகிட்டத்தட்ட இலவசமாகக்கொடுத்திருப்பவரும் ஒரு அபிமானி.

அபிமானிகள்.பக்தர்கள் என்று சொல்வது அவனுக்குக் கூச்சத்தை ஏற்படுத்துவது. உண்மையில் திகிலை ஏற்படுத்துவது. எனக்கு என்ன அருகதை இருக்கிறது ? ஆனால் இந்தக் கேள்வியை அவனுள் சதா கேட்க வைப்பது அந்தக் கரிய உருவஙகள் என்று தோன்றிற்று.அவனுக்கு வருத்தமேற்பட்டது. இந்த அபிமானிகளால் அவனுக்குக் கொம்பு முளைத்துவிடும் என்று அவை நினைக்கின்றன.உண்மையிலிந்தச் சுமையை எப்படிக் களைவது ,விடுபட்டு ஓடுவது என்பதிலேயே தூங்கவேண்டிய நேரமெல்லம் கழிந்துவிடுகிறது. இது ஒரு உடலுருக்கி.பால்யத்தில் இருந்த திடத்தில் இருபது சதவிகிதம் கூட இப்போது இல்லை.ஐம்பது

வயது கூட நிரம்பாத நிலையில் வயதுக்குப் பொருந்தாத மூப்பும் சோர்வுமேற்படும் என்று நிச்சயம் நினைத்திருக்கவில்லை.இது சாபம் என்று நினைப்பது பாவம் என்று அவன் உணர்வான். அவனுக்கு விதிக்கப்பட்ட தெய்வீகக் கட்டளையாக இருக்கவேண்டும். தினம் தினம் அவனிடம் நீட்டப்படும் வேண்டுதல்கள், அவற்றுள் மறைந்திருந்த ஏக்கங்கள், தாபங்கள், வெறுப்புக்கள், கோபங்கள்,பேராசைகள் அனைத்துக்கும் அவனே சுமைதாங்கி அல்லது வடிகால் என்பது மிகப்பெரிய பொறுப்பு என்று அவன் உணர்ந்தான். இல்லாவிட்டால் இத்தனைப் பெரிய மனிதர்கள் வேலைமெனக்கெட்டு இங்கு வந்து அவன் சொல்லுக்காகக் காத்திருக்க மாட்டார்கள்.

' நீங்க ஒண்ணுமே சொல்லவேண்டாம் - உங்க பூஜை அறையிலே பத்து நிமிஷம் உட்கார்ந்தாலே நிம்மதி வந்துடறது சாமீ '

அது எப்படி என்று அவனுக்குப் புரியாத மர்மமாக இருந்தது. தன் மனசு மட்டும் ஏன் இப்படி பிசாசு மாதிரி அலையறது ?

' என்னை விட்டுடுங்கோ ' என்று சொல்ல முயன்ற போது அவன் ஏதோ அவர்களை ஏமாற்றி விட்டுக் கம்பிநீட்டத் துணிந்த மாதிரி அர்த்தம் கொள்ளப்பட்டதை அவன் பிறகு பலமுறை ஞாபகப்படுத்திக் கொண்டு அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

சூப்பர் சிமெண்ட் அதிபர் ராமகிருஷ்ணனுக்கு கம்பெனியில் என்ன விஷயமானாலும் இங்கே ஓடி வருவது வழக்கமாகி

விட்டது. கோப்புக்களையெல்லாம் காட்டி அவன் அபிப்பிராயம் கேட்பார். சதாசர்வ நேரமும் அந்தக் கரிய பிசாசுகளுடன் மாரடிக்க வேண்டியதாகிப்போனதில் ஆயாசம் தாளமுடியாமல் அவன் சொன்னான்.

'ராமு சார், என்னை விட்டுடுங்கோ. நா சாமான்யன். எங்கிட்டே எந்த சக்தியும் இல்லே நம்புங்கோ! '

ராமுவின் தாடை விழுந்தது.

' என்ன சொல்றேள் நீங்க ? நீங்க சொல்றது எதுக்குமே அர்த்தமில்லேன்னு என்னை நினைக்கச்சொல்றேளா ? '

ராமுவின் குரலிலிருந்த உத்வேகம் நிலைகுலையச்செய்தது.

' என்ன சொல்ல வரேன்னா, எல்லாம் ஈசனுடைய செயல் - நா வெறும் கருவி. '

' இதப் பாருங்கோ பஞ்சாமி. நீங்க சாதாரண கருவி இல்லே. ஈசனுடைய ஏஜெண்ட். நீங்க சொன்ன தெல்லாம்

பலிச்சிருக்கு - உம்மைத்தான் நா மலை போல நம்பியிருக்கேன். திடார்னு பின் வாங்கிட முடியாது நீங்க. '

தனக்கு ஏதொ கையெழுத்திட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மீறத்துணிந்தது போல ராமு பேசுவதில் கொஞ்சமும் நியாயமில்லை என்று தோன்றினாலும் வசமாக மாட்டிக்கொண்டது போல தனக்குள் ஏன் ஒரு பலவீனம் படர்கிறது என்று பஞ்சாமிக்குப் புரியவில்லை.

தாம்பாளத்தில் ராமகிருஷ்னன் ஆயிரம் ரூபாய் வைத்தார். சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.

அன்று இரவு அப்பா கனவில் வந்தார்.

' உனக்கே நன்னாயிருக்காடா நீ பண்றது ' என்று அதட்டினார். நா எழுதித்தரேன். நீ உருப்படமாட்டே..

அவன் சிலிர்த்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். பானையிலிருந்த நீரைக்குடித்து எல்லாருக்கும் கொடுக்கும் வீபூதியை

ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டு, நெற்றியில் இட்டுக்கொண்டு படுக்கையில் படுத்தபோது கண்களிலிருந்து அப்பா நகர மறுத்தார்.

கரிய உருவங்களைப் பின்னுக்கு நகர்த்தி நின்று ஏளனமாகச் சிரித்தார். அவனுக்கு துக்கம் குமுறிக்கொண்டு வந்தது.

பக பக வென்று கேவல் எழுந்தது. இது நிஜ அழுகையா, கனவில் அழுகிறோமா என்று தெரியவில்லை. இடையில் அம்மா

சொன்னாள். 'கல்யாணமானா சரியாயிடுவன். '

' ஏண்டி, உனக்கு புத்தி இருக்கா ? இவனுக்கு என்ன யோக்யதை இருக்கு கல்யாணம் பண்ணிக்க ? ப்யூன் வேலை கூடக்

கிடைக்காது, எழுதித்தரேன் '

அப்பாவின் வார்த்தைகளைக் கேட்கும் போதெல்லாம் ஏற்படும் ஆத்திரம் இப்பவும் ஏற்பட்டது.

அந்த ராமகிருஷ்னன் என்ன சொன்னார் ?

' உங்களுக்கே உங்க சக்தி புரியல்லே சுவாமி. உங்களால அருள் கிடைச்சிருக்குப்பாருங்கோ, நாங்க புரிஞ்சுண்டுட்டோம் உங்க பெருமையை. '

பஞ்சாமி சம்புடத்திருந்து ஒரு பிடி வீபூதியை எடுத்து ா பூ ா என்று அப்பாவைப் பார்த்து ஊதினான்.அப்பா மறைந்து

போனார்.

விடியும் போதே இன்று வெள்ளிக்கிழமை என்று ஞாபகம் வந்தது. 9 மணியிலிருந்தே கூட்டம் வரத்துவங்கி விடும். மதியம் ஒன்றிலிருந்து நான்கு வரை அவனாக விதித்துக்கொண்ட் கட்டாய ஓய்வு. எழுந்து கொல்லையிலிருந்த கிணற்றடிக்குச் செல்லும் போது உடம்பை ஒரேயடியாய் அசத்திற்று. ஈசுவரா என்று வாய் அரற்றிற்று.பல்துலக்கி முகம் கழுவி காபிப் போட்டுக் குடித்து குளித்துவிட்டு வந்து,பகல் உணவைத் தயாரித்து இடையே பூஜையை முடிப்பதற்குள் ஆட்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள்.ஜன சந்தடியைக் கண்டால்,கரிய உருவங்களுக்கு அதிகக் கொண்டாட்டம்.பூஜையில் மனசு லயிக்காமல் நழுவி நழுவி ஓடிற்று.கனவில் வரும் அப்பா மறித்து நின்றார்.பின்னால் அம்மா.ாகோபமாயிருக்கார்டாா என்று எச்சரிப்பதுபோல.கோபமில்லாத அப்பாவை அவனுக்கு நினைவில்லை.அவனை அவரிடமிருந்து விடுவிக்கும் வகையில்தான் அந்தக் கரிய பிசாசுகள் வளைத்துக் கொண்டதாக,அவனுக்குத் தோன்றிற்று.இப்போது அவற்றிலிருந்து விடுபட அப்பாவை நாட முடியாது.அவன் அவரிடமிருந்து விலகி வெகுதூரம் பயணித்தாகிவிட்டது.

பூதங்கள் அவனைத் தம் வசமாக்கிக்கொண்டது எப்போது என்று அவனுக்குத் தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை.பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆனதும் அப்பா போட்ட சத்தத்தில் மனசு வெறுத்து ஊர் கோடியில் பாழ் மண்டபத்தில் அமர்ந்திருந்த ஒரு சாமியாரிடம் போய் ஒட்டிக்கொண்டது,வாழ்வின் மகத்தான திருப்பம்,தியானம் கற்றது அவரிடம்தான்.ஆனால் பாதிப் பயிற்சியிலேயே சாமியார் திடாரென்றுகாணாமற் போய்விடவே அவன் மனசுடைந்துகோவில்ப்ராகாரத்தில் தூணில் சாய்ந்தபடி ஒரு நாள் தியானத்தில் அமர்ந்திருந்தபோது தான் அது நடந்தது. அவனுடன் படித்த மார்த்தாண்டம் வந்து சேர்ந்தான்.ாதம்பிக்கு ரொம்பநாளா காச்சல்.செத்துருவான் போல இருக்குா என்று அழுதான்.

பஞ்சாமி கண்களை மூடிக்கொண்டான்.இமைகளுக்குள் கரிய உருவங்கள் தெரிந்தன.உதடுகள் தன்னிச்சையாக மந்திரங்களை

உச்சரித்தன.தன் எதிரில் ஒரு தாளில் வைத்திருந்த விபூதியை எடுத்து மார்தாண்டத்திடம் கொடுத்தான்.ாஉன் தம்பி நெத்தியிலே இதைப் பூசு.ஜ 'ரம் இறங்கிடும்ா என்றான்.மறு நாள் காலை மார்த்தாண்டம் அவனைக் காண ஓடோடி வந்தான்.ாதம்பிக்கு குணமாயிடுத்து.ஜ 'ரம் வந்த சுவடு கூட இல்லோ என்றான். செய்தி காட்டுத் தீயைப்போல பரவிற்று.கரிய பூதங்கள் அவனுடன் நிரந்தரமாக வாசம் செய்ய வந்தன என்று உணராமலேஅவன் ஆற்றில் மிதக்கும் சருகாய் மிதந்தான்.உருப்பட மாட்டே என்று தொடர்து சொன்ன அப்பாவின் நிழல் படாத ஜாகைக்கு மாறினான்.அப்பாவுக்கு உடம்பு சரியயில்லை என்று அம்மா வந்து அழுதபோது அவன் அனுப்பிய மந்திரித்த விபூதியை ஏற்க அவர் மறுத்து விட்டர் என்று பின்னால் வந்து அம்மா சொன்னள். 'ஊரெல்லாம் உன் புகழ் பாடறது.அவர் கடைசிவரைக்கும் உன்னை ஏத்துக்கல்லே ' என்று கண்ணீர் விட்டாள்.அதற்கு ஈடு செய்வது போல தன் காலம் முடியும்வரை அவனுக்குசமைத்துப்போட்டுத் தேவைகளை கவனித்துக்கொண்டாள். 'கல்யாணம் பண்ணிக்கோ ' என்று சொல்வதை நிறுத்தினாள்.,அவன் சாமன்ய வாழ்வு வாழப் பிறந்தவனில்லை என்று நினத்தவள் போல.

'ஈச்வரா! ' என்றான் பஞ்சாமி வாய் விட்டு.உடம்பு இன்று பூட்டுக்குப் பூட்டு வலித்தது..அப்பா சபித்த அந்த பியூன் வேலை செய்வதுகூட அதிக நிம்மதியை கொடுத்திருக்கும் என்று தோன்றிற்று. இரண்டு வாழைப் பழங்களையும் ஒரு டம்ப்ளர் பாலையும் குடித்துவிட்டு அவன் மீண்டும் பூஜை அறைக்குச்சென்றுஅமர்ந்தபோது பஞ்சாமி என்ற சாமான்ய மனிதன் காணாமல் போயிருந்தான். ஏதோ ஒரு அன்னிய சக்தியின் ஆட்டுவித்தலுக்குக் கட்டுப்பட்டு சுயத்தை இழந்தவன் போல.உடம்பு சிலிர்து மின்னும் பின்னும் ஆட, வந்தவர்களின் ஏக்கங்கள் பிரலாபஙள், துக்கங்கள்,ஆசைகள்,எதிர்பார்ப்புகள், அத்தனையும் ஒட்டுமொத்த பாரமாய் அவனது முதுகில் அமர ,அதை இழுத்து இழுத்து முன்னேறுகையில் மூச்சு திணறிற்று. மதிய இடைவேளையில் படுத்து களைப்பு விலகுவதற்குள் மாலைக்கூட்டம் ஆரம்பித்துவிட்டது. இரவுவரை நீண்டு ஒருவழியாக எல்லாரும் கிளம்பிப்போனதும், அப்பாடா என்று காலை நீட்டி உட்கார்ந்தான்.

'மாமா! '

அவன் திடுக்கிட்டுத் திரும்பினான்.

ராஜ கோபாலனுடைய பெண். நான்கு வீடு தள்ளி இருப்பவள். லட்சணமான பெண்..

காரணம் புரியாமல் ஒரு சந்தொஷம் ஏற்பட்டது. இளைஞர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் சந்தோஷம்.

சாதாரணமாக சிறுசுகள் பரீட்சைக் காலங்களில் மட்டுமே தலைக் காட்டுவது வழக்கம்.

'ஓ, வாம்மா சுதா. என்ன விஷயம், இந்த வேளயிலே ? '

இரவு ஒன்பதுக்குமேலெ ஆகல்லியோ ?

'இப்பத்தான் வர்ற முடியும். டிவியிலெ சீரியல் பார்த்துண்டிருக்கா எல்லாரும். '

' சொல்லும்மா '

' மாமா எனக்கு நீஙக ஒரு ஹெல்ப் பண்ணணும் . '

' ெ ?ல்ப் பண்ணத்தானேம்மா நா இருக்கேன் ?

சுதா சற்று நேரம் எதுவும் பேசாமல் சாமி படஙகள் நிறைந்த சுவர்களைப் பார்த்தபடி இருந்தாள்.

பிறகு காணிக்கை வைக்கப்பட்ட தட்டுக்களை ஆராய்ந்தாள்.

'என்ன விஷயம் சொல்லு சுதா, தயங்காமெ சொல்லு '

சுதா அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.

'மாமா, உஙளை ஒரு ஃபிரண்டு மாதிரி நினெச்சுண்டு உதவி கேக்க வந்திருக்கேன். எஙக அப்பா நாளைக்கு ஒரு ஜாதகத்தைத் தூக்கிண்டு வரலாம். பொருந்தல்லேன்னு சொல்லிடுங்கோ '

'ஏம்மா ? '

'எனக்கு கல்யாணம் இப்ப வேண்டாம். எனக்குப் படிக்கணும். '

'அப்பாவண்டெ சொல்லிடவேண்டியதுதானே ? '

'அப்பா ஒரு முசுடு. கேக்க மாட்டார் '

'சேசே,அவர் மஹா சாதுன்னா ? '

'எல்லாரும் உங்ககிட்டெ காட்டற மூஞ்சிதான் உண்மையின்னு நினைக்கிறேளா ? '

யாரோ முகத்தில் அறைந்தது போல் இருந்தது.அதாவது,இதுகூடத் தெரியல்லேன்னா எதுக்குக் கூட்டம் போடறேள் என்கிறா.

பதுஙகி விட்டன என்று நினைத்திருந்த கரிய உருவஙகள் மீண்டும் எதிரில் நின்றன.

'கல்யாண ஏற்பாடு பண்ணார்னா நா தூக்கு போட்டுக்கணும் '

பஞ்சாமிக்கு லேசாகத் தடுமாறிற்று. 'சேச்சே,என்னம்மா இது ?சினிமா டயலாக் மாதிரி! '

'சினிமா இது இல்லே வாழ்கை எங்கிறதுனாலேதான் சொல்றேன். ஹெல்ப் பண்ணுங்கோ மாமா! '

திடாரென்று பஞ்சாமிக்கு மிகச் சோர்வாக இருந்தது.

நா சொல்ற வார்தைஎல்லாம் என் வசத்திலெ இல்லேன்னு சொன்னா இந்தப்பெண்ணுக்குப் புரியாது.

'சரிம்மா நீ போ நாழியாச்சு பாரு '

சுதா விருக்கென்றூ எழுந்தாள். ாதாங்க்ஸ் மாமாா என்றூ பளீரென்று சிரித்து விட்டு வெளியேறினாள்.

இரவு அப்பாவுக்கு பதில் கனவில் சுதா வந்தாள்.மிருதுவாய், பூவாய் மென்மையாய்..காலையில் கண்விழித்த போது படுக்கை ஈரமாகியிருந்தது.இதுவும் அந்த பூதங்களின் வேலையாகத்தான் இருக்கமுடியும் என்று அவன் சோர்ந்தான். அவமானத்துடன் எல்லாவற்றையும் நனைத்து நீரை இறைத்து குளித்தான். ஆனாலும் இன்று உடம்பும் மனசும் தன் வசத்தில் இல்லாததுபோல் அவனுக்கு பீதி ஏற்பட்டது.யார் வந்தார்கள் என்று புரியவில்லை.என்ன சொன்னோம் என்று பதியவில்லை,.அவனுக்கும் பேசும் அந்த வாய்க்கும் சம்பந்தமில்லததுபோல் இருந்தது.கரிய பிசாசுகளின் ஆக்கிரமப்பில் அவன் பூரனமாய் சரணடைந்து விட்டதாகத் தோன்றிற்று.

எதிரில் உட்கார்ந்திருந்தவரின் முகமே தெரியவில்லை. எங்கும் புகை மூட்டம்.

'இந்த ஜாதகத்தைப் பாரு பஞ்சாமி. சுதா ஜாதகதோடெ பொருந்தறதா பாரு. '

அந்தப் பெயர் காரணம்புரியாத சந்தோசத்தைக் கொடுத்தது.

அவன் அந்த் தாள்களில் இருந்த கட்டஙகளை மாறி மாறி பார்த்தான்.

மெல்லிய புன்னகையுடன், 'பேஷாப் பொருந்தறது ' என்றான்.

பிறகு யார் வந்தார்கள் யார் போனார்கள் என்று சுத்தமாகத் தெரியாது. கடைசியில் அவன் பதிலே சொல்லாமல் வெறிக்க ஆரம்பித்ததும்

'சாமிக்கு இன்னிக்கு சொல்ல விருப்பமில்லே ,நாளைக்கு வருவோம் ' என்று கதவை சத்தமில்லாமல் சாத்திவிட்டு காத்திருந்தவர்கள் போனார்கள்.

மறு நாள் வேலைக்காரி தகவல் தெரிவித்து வந்து பார்த்த டாக்டர் , சர்க்கரை குறைந்து ஏற்பட்ட மயக்கம் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.இரண்டுநாள் நினைவில்லாமல் இருந்த சமயத்தில் 'சாமி என்னன்னவோ பினாத்து ' வதாக நர்ஸ் தனம் சொன்னாள். தினமும் ஒரு சிறிய கூட்டம் அவனைப் பார்க்க வந்தது. நான்காம் நாள் நினைவு தெளிந்ததும் மண்டை ஒரேயடியாய் கனத்தது.

'நீங்களே படுத்துண்டா அப்புறம் நாங்க என்ன பண்ணுவோம் ' என்று படுக்கை அருகில் இருந்த சடகோபன் விம்மினான்.

ஈசுவரா என்று அவன் கண்ணை மூடிக்கொண்டான்.

'என்னாலே முடியல்லே சடகோபன்.எல்லார் பாரமும் எம்மேலே உக்காந்துக்கறது.எல்லாத்தையும் நிறுத்திட்டு நிம்மதியா இருக்கணும் இனிமே. '

'எனக்குப் பிள்ளை பிறக்கும்னேள்.நீங்கதான் நாமகரணம் செய்யணும். '

பக்கென்று புதிதாய் பீதி கவ்வியது. 'எனக்குத் தோணினதை சொல்றேன்.நடக்கல்லேன்னா அதுக்கு நா பொறுப்பில்லே '.

'நீங்க சொன்னா போறும் பஞ்சாமி.நடந்துடும். ' என்றான் சடகோபன்.ாகேக்காததை நீங்க சொல்லமுடியாது. இப்ப žதா பண்ணினத்துக்கு நீங்க பொறுப்பாக முடியுமா ? '

'என்ன பண்ணா சுதா ? '

'கண்றாவி போங்கோ.ராஜகோபாலன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணாரோல்லியோ ,இது தூக்குப் போட்டுண்டுடுத்து.! '

பஞ்சாமி சற்று நேரம் அசையாமல் சடகோபனைப் பார்த்தான்.பிறகு மெல்ல மெல்ல விழிப்பவன் போல விழிகள்விரியப் பார்த்தான்.

'ஐய்யோ, ஐயய்யோ! 'என்று பெரிய குரலில் அலற ஆரம்பிதான். தன் தலையை இரு கைகளாலும் விடாமல் மடேர் மடேர் என்று அரைந்து கொண்ட அவனை தடுக்கமுடியாமல் டாக்டரைக் கூப்பிட சடகோபன் விரைந்தான்.

ஆஸ்பத்ரியிலிருந்து திரும்பிய பஞ்சாமி பழைய பஞ்சாமி இல்லை என்றார்கள்.சித்தம் கலங்கிவிட்டது பாவம் என்றார்கள்.குறி கேட்க வந்தவர்களையெல்லாம் அடித்து விரட்டாத குறையாக அவன் திருப்பியதில் அவனது அபிமானிகள் அரண்டுபோனார்கள். 'என்னை விட்டுடுங்கோ ' என்று அவன் எப்பவும் பிரலாபிப்பதாக வேலைக்காரி சொன்னாள்.பஞ்சாமிக்கு எந்த வகையில் உதவுவது என்று அபிமானிகள் யோசனையில் ஆழ்ந்தபோது, மிகத் தீவிர த்துடன் கடலை வெறித்தபடி பஞ்சாமி நின்றிருந்தான். 'உங்கிட்டேந்து விடுபட இதுதான் வழி ' என்றான் ஒரு நல்ல முடிவு கிடைத்த த்ருப்தியுடன். 'சே,இது முன்னாலேயே தோணாமெ போச்சே 'என்று வருத்தப்பட்டான்.உதடுகளில் மெல்லிய புன்னகை விரிய, 'ஓ 'வென்று ஆர்ப்பரித்தக் கடலுக்குள் அவன் நிதானமாக முன்னேறி அதன் மையத்துச் சுழலில் இழுபட்டு மூழ்கும்போது அந்தக் கரிய உருவங்களும் அவனுடன் சேர்ந்து மூழ்குவதைக்கண்டு ஏற்பட்ட அதிர்ச்சி மட்டுமே அவனது கடைசி உணர்வாக இருந்தது.

முற்றும்.

வாக்குமூலம் - வாஸந்தி

கதவைப் பூட்ட அம்மா வெகு நேரம் எடுத்துக்கொண்டாள்.இத்தனை நேரம் அதற்கு ஆவானேன் என்ற யோசனை எழாமல் ஒரு வித ஜடத்தனத்துடன் அவள் நின்றாள்.கைப்பயைத் திறந்து மீண்டும் ஒரு முறை கையால் துழாவினாள்.பழுப்பு நிறக்காகிதம் இருந்தது.அவளது துப்பட்டாவை யாரோ இழுத்தார்கள்.தூக்கிவாரிப்போட்டு அவள் திரும்பினாள்.சின்னத்தம்பி அவளைபீதியுடன் பார்த்தான்.

'நா வரல்லே, நீங்க போங்க. '

'ஏண்டா இப்படிப் படுத்தறே ? ' என்றாள் அவள் லேசான அலுப்புடன். 'பொறுப்பா நடந்துக்க.வீட்டுக்கு இருக்கற ஒரே ஆண்பிள்ளை நீ. 'எலும்பு துருத்திக்கொண்டிருந்த அவனது சின்னதோளை அவள் லேசாகத் தட்டினாள்.

'என்ன சொல்றான் தம்பி ? ' என்றாள் அம்மா.

அவளுக்குக் காரணம் புரியாமல் கோபம் வந்தது.

'ஒண்ணுமில்லே.நேரமச்சும்மா!கதவைப் பூட்ட ஏன் இத்தனை நேரம் எடுத்துக்கிறீங்க ? '

'பூட்டவே வரல்லேடா! '

அம்மாவின் விரல்கள் நடுங்கின நடுக்கத்தில் சாவித் துவாரத்தில் சாவி நுழையாமல் நழுவிற்று.

'கொடுங்க, நா பூட்டறேன், ' என்று அவள் பூட்டையும் சாவியெயும் வாங்கிக்கொண்டாள்.

பூட்டு ஓசை கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து சில தலைகள் எட்டிப் பார்த்தன. சிலர் வெளியே வந்தார்கள்.அம்மா சேலைத் தலைப்பைத் தலை மேல் இட்டு முகத்தைக் கிட்டத்தட்ட மறைத்துக் கொண்டாள்.

அவள் சின்னத் தம்பியின் சில்லிட்டக் கைகளைப் பிடித்தபடி தெருவில் இறங்கினாள்.

திடாரென்று தெரு அமானுஷ்ய நிசப்தத்தில் ஆழ்ந்து போனது போல் இருந்தது.தெரு ஓர நாய்கள் நிமிர்ந்து பார்த்து குரைக்காமல் மீண்டும் முகம் கவிழ்ந்தன.பறவைகள் சத்தமில்லாமல் பறந்தன.வாகன ஓசை கூட இல்லை.அவர்கள் மீது பதிந்த வெறித்த மவுனப் பார்வைகள் அவளுள் கலவரத்தை ஏற்படுத்தியது.கால்கள் வலுவிழந்து தொய்ந்தன.அம்மாவின் சேலைத் தலைப்பைத் தொட்டு,ாநா வரல்லே நீங்க போங்கா என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.

கால்கள் பின்னிக்கொள்ள அவர்கள் தயங்கியபடி தெருவில் முன்னேறுவதைப் பார்ப்பவர்கள் எல்லாம் , நாய்கள் உள்பட, உறைந்து போனதுபோல் தோன்றிற்று. 'நீங்க போக வேணாம் , நாங்க பார்த்துக்கறம் ' என்று தைரியம் சொல்ல சினிமாவில் வருவது போல யாராவது வரலாம் என்று அவள் எதிர்பார்த்தாள்.

'கிளம்பியாச்சா ? ' என்றாள் பக்கத்து வீட்டு மாமி, 'பிணத்தை எடுத்தாச்சா ? ' என்கிற தொனியில்.சற்று அருகில் வந்து, 'கவனமா பேசணும்கிறாங்க ' என்றாள்.

அவள் திரும்பினாள். திறந்த ஜன்னல் வழியாக மாமியின் புருஷன் தென்பட்டார்.

அவரது ஆழமான ஆயிரம் எச்சரிக்கைகளை வீசும் பார்வையில் தான் புதையுண்டு போவது போல்

இருந்தது.மாமியின் உதவி யில்லாமலே அவளைப் பார்க்கும்போதெல்லாம் அதே வார்தைகளை அவர் சொல்லியிருக்கிறார்.

'கவனமா பேசணும்கறாங்க '.

'யாரு ? 'என்று அவள் கேட்கவில்லை.

இந்தத் தெருவிலும் அடுத்தடுத்தத் தெருவிலும் உறைந்து நிற்கும் எல்லாரது குரலும் அவளுக்கு அத்துப்படி. ஏடா, வாடா என்று அவளைச் செல்லமாக அழைத்தவர்கள் இன்று தங்களது வாழ்வு அவளது நாவில் நிற்பதாக நம்புகிறார்கள்.எல்லாற் பார்வைகளும் எல்லார் பயங்களும் ஒட்டுமொத்தமாக அவளது முதுகின்மேல் சரசரவென்று ஊர்ந்து ஊர்ந்து ஏறியதில் அவளுக்கு மூச்சு முட்டிற்று.அம்மாவும் சின்னத்தம்பியும் கூட ஏறிக்கொண்டார்கள்.முதுகு ஒடிந்தது போல் அவளுக்கு ஆயாசம் ஏற்பட்டது.

அம்மா எதற்கோ தயங்கி நின்றாள்.

'அம்மா, நகருங்க.யாராவது பேச்சுக் குடுத்தா பேசக்கூடாது இப்ப! '

அம்மா வாயை மூடிக்கொண்டு அவளைத் தொடர்ந்தாள்.சின்னத்தம்பி அவள் கையை இறுகப் பற்றியபடி நடந்தான்.தெருத்திருப்பத்தில் இருந்த பெட்டிக்கடை வாசலில் பீடி புகைத்தபடி கோடி வீட்டு தாத்தா உட்கார்ந்திருந்தார்.இவரிடமிருந்து தப்புவது கடினம் என்று அவள் நினைத்தாள்.கடந்த பத்து நாட்களாக வீட்டுக்கு வந்து உபதேசம் செய்துவிட்டுப் போகிறார்.நேற்று இரவு கூட.

'போனவங்க போயாச்சு.இனிமே அவங்களைக் கொண்டுவரமுடியுமா ?இப்ப இருக்கற வங்களைப் பத்தி நீ யோசிக்கணும். '

கரிந்து போன அந்த நான்கு சுவர்களுக்கு நடுவில் அமர்ந்திருக்கும் தங்களைப் பார்த்து அவரால் எப்படி அப்படிப் பேச முடிகிறது என்று அவள் யோசித்தாள். அம்மா ஏதும் பேசாமல் சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். பிறகு முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவள் விசும்புவது முதுகு குலுங்குவதில் தெரிந்தது.

' சுத்தமும் பந்தமும் உன் சனமும் நல்லா இருக்கணும்னு நீ நினைச்சியானா யோசிப்பே '.

அந்தப் பெரியவருக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை யென்று அவள் பொங்கிப் பொங்கி எழுந்த உணர்வலைகளை அடக்கும் முயற்ச்சியில் இருந்தாள்.

'என்ன, நா பேசிக்கிட்டே நிக்கிறேன், பதில் பேசாமே இருந்தா எப்படி ? '

அவள் சட்டென்று வெடித்தாள்.

'தாத்தா, எங்களுக்கு நடந்தது உங்களுக்கு நடந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க ?என்ன மாதிரி யோசிச்சிருப்பீங்க ? போனது போச்சுன்னு விட்டிருப்பீங்களா ? '

கண்கள் விரிய முகம் பளபளத்து நெஞ்சு விம்மியபடி அவரைக் கேள்வி கேட்கும் அந்த இளம் பெண்ணை அவர் பார்த்து மெலிதாக அதிர்ந்தார்.அடி வயிற்றை பயம் கவ்வ தலையை மீண்டும் மீண்டும் அசைத்தார்.உடம்பு லேசாக நடுங்கிற்று .வாயை மூடிக்கொண்டு கிளம்பினார்.கிளம்புவதற்குமுன் தமக்குள் முணுமுணுப்பவர்போல் சொன்னார்.அவரது கண்களில் பீதியும், இயலாமையும், கோபமும் இருந்தது நினைவிருக்கிறது.

'நியாயம் கேட்கப்போய் மறுபடி மொத்த சனத்துக்கும் ஆபத்தா போகலாம். உனக்கும் மிஞ்சியிருக்கற உன் குடும்பத்துக்கும் ஆபத்து வரலாம். '

அவள் பேசாமல் நின்றதில் தாத்தா தெம்பாகப் பேசினார்.

'இவங்கதான் அவங்கன்னு நீ சொன்னா அவங்க கை என்ன பூ பறிச்சுகிட்டா இருக்கும் ? '

'தாத்தா போங்க '.

அசட்டு தாத்தா மீண்டும் வாயைத் திறக்க ஆரம்பிக்கையில் அவள் கத்தினாள், 'போங்க! '

அவர் அகன்றதும்,ாதூ!ா என்று காறித் துப்பினாள்.வெகு நேரத்துக்குக் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டினாள்.தாத்தாவின் கண்களின் பீதியும் இயலாமையும் நினைவுக்கு வந்ததும் சோர்ந்து அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்து ஓவென்று அழுதாள்.

இப்பவும் தத்தாவின் கண்களில் சாம்பல் வெளுப்பாய் பீதி தெரிந்தது.அத்துடன் ஒரு பதைப்பும் தெரிந்தது.அவள் தலையைக் குனிந்தபடி நடந்தாள்.அவர் பேச வருவாரோ என்று பயமாக இருந்தது.வீட்டில் நேற்று வீறாப்பாகப் பேச முடிந்தது.தெருவில் பலவீனம் ஆட்கொண்டது.புல் தடுக்கினாலும் விழுந்துவிடுவோம் என்று தோன்றிற்று. போலீஸ் தலையைக் கண்டால் வெலவெலத்துப் போகிறது. அவர்கள் கேள்வி கேட்டால் நா குழறுகிறது, குழப்பத்தில்.கோர்ட்டு கச்சேரி என்றால் என்னவென்று தெரியாது. அதன் வாசலை இதுவரை மிதித்ததில்லை.அவளுக்காக வக்காலத்து யார் பேசுவார்கள் என்று தெரியாது.

'உனக்கு சர்காரி வக்கீல் இருப்பாங்களே வக்காலத்துக்கு ? ' என்று அடுத்த வீட்டு மாமி கேட்ட போது ஏதும் புரியாததால் பகீர் என்றது.ாநானேதான் பேசணும்ாஎன்று சொன்னபோது மாமியின் பார்வை வினோதமாக இருந்தது.

'நீ சின்னப் பொண்ணு,தனியா என்ன செய்வே ? '

அவளுக்குக் கோபம் வந்தது.

'துணைக்கு மாமாவை அனுப்புங்களேன்! '

மாமி பேசுவதை நிறுத்திக்கொண்டாள். ஆனால் கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று அவளுக்கு சம்மன் வந்த சேதி காட்டுத்தீயாய் பரவி எல்லோரயும் வீட்டுக்கு வரவழைத்தது. ஏற்கனவே அந்தப் பழுப்பு நிறக் காகிதத்தைப் பார்த்ததும் அவளுக்கு வெல வெலத்துப் போயிருந்தது. அவர்களது வருகை எந்த வகையிலும் உதவவில்லை. ஆள் ஆளுக்குப் பேசினார்கள். உபதேசித்தார்கள். எச்சரித்தார்கள். போலீசு கிட்டப்பேசினதே தப்பு என்று குற்றம் சாட்டினார்கள். வஞ்சிக்கப்பட்டவர்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்று தீர்மானமாகச் சொன்னார்கள். காகங்களின் இரைச்சலாய் கூவித்திதீர்த்துவிட்டுச் சென்றார்கள். அந்தப்பழுப்பு நிறக்காகிதத்தைவிட அவர்களது பேச்சு அதிகக் கலவரத்தை ஏற்படுத்திற்று.

யாரோ கூடவே வருவது உணர்ந்து அவள் திரும்பினாள். அவள் எங்கே தப்பி விடுவாளோ என்று பயந்தவர் போல தாத்தா அவசரமாகச் சொன்னார்.

' அந்தப்போக்கிரி ஏதொ பெரிய திட்டம் போட்டிருக்கானாம். நீ ஏதாவது

ஏடாகூடமாச் சொன்னா எல்லாரையும் தொலைச்சுடுவேன்னு சொல்லிக்கிட்டிருக்கானாம்.

போலீசும் அரசும் அவன் பக்கம் இருக்கு. யோசிச்சு முடிவுக்கு வா! '

அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் தாத்தா மீண்டும் பெஞ்சில் போய் அமர்ந்தார். அவர் நின்றிந்தால் சாட்டையாய் அவள் பதில் சொல்லியிருக்கலாம்.

' நீங்கள்ளாம் எக்கேடும் கெட்டுப்போங்க. என் துக்கத்தைப் புரிஞ்சுக்காத நீங்க இருந்தா என்ன இல்லாட்டி என்ன ? எனக்கு நியாயம் வேணும்-தப்புச் செஞ்சவனை இனம் காட்டல்லேன்னா நா மனுக்ஷா இல்லே. கோர்ட்டுக் கச்சேரி பின்னே எதுக்கு இருக்கு ? '

பிரவாகமாகப் பொங்கிய ஆத்திரத்தை அடக்க முடியாமல் தவித்தபடி அவள் மேல் மூச்சு வாங்க நடந்தாள். கண்களில் நீர் படர்ந்து முகம் சிவந்து போயிற்று. தாத்தாவின் பேச்சைக் கேட்டபிறகு அம்மாவும் சின்னத்தம்பியும் அதிகம் துவண்டு போனது தெரிந்தது.

' அம்மா வாங்க. அந்த்க் கிழம் அப்படித்தான் பேசும் - பேடிங்க! உங்களுக்கும் மறந்து போச்சா, கண்ணால பார்த்ததெல்லாம் ? ஆத்திரம் அவிஞ்சு போச்சா ? '

அம்மா பதில் பேசக்கூட அஞ்சி நடக்கலானாள்.ஊரடங்கு சட்டத்தினால் ஆட்டோவும் பஸ்ஸ 'ம் இல்லாத நிலையில் நீதி மன்ற வளாகத்தை அடைய நான்கு கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டும். பாதி தூரம் கடப்பதற்குள் மூவருக்கும் உடம்பெல்லாம் வியர்த்து முகம் கன்றிப் போய்விட்டது.நாஷ்டா சப்பிட முடியவில்லை இன்று. சின்னத்தம்பிக்குக் கூட உள்ளே இறங்க வில்லை.ஒரு க்ளாஸ் சாயா குடித்ததோடு சரி.சின்னத்தம்பி அவளது விரல்களை இறுக்கிப் பிடித்தான். அவள் உஷாரானாள்.யாரோ பின் தொடர்கிறார்கள்.அவள் மெல்லத் திரும்பினாள்.பத்து பதினைந்து பேர் .நடு வயது ஆண்கள். ஏதோ சண்டைக்குக் கிளம்பியது போல் வேட்டியைக் கச்சமாகச் செருகியிருக்கிரார்கள்.அன்று அந்தக் கும்பலில் இவர்கள் இருந்திருக்கலாம் என்று அவள் நினைத்தாள்.ஏன் தொடருகிறீர்கள் என்று கேட்க நினைத்து பிறகு மவுனமாகத் திரும்பி நடந்தாள்.நாக்கு எங்கோசுருண்டிருந்தது.கோபம் வருவதற்கு பதில் தன்னை பயம் ஏன் கவ்வுகிரது என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள்.

'ஏ தம்பீ! 'என்று சின்னத்தம்பியிடம் சொல்வதுபோல் ஒருத்தன் சொன்னான்.

'உன் அக்கா கிட்ட சொல்லு.இனிமேஇருக்கறவங்க நிம்மதியா வாழணும்னா,விரோதிங்களை அதிகரிச்சுக்கக்கூடாதுன்னு. '

சின்னத்தம்பி அவள் முகத்தைப் பார்த்தான்.அவள் முகம் சிவக்க தெருவைப் பார்த்தபடி விடு விடுவென்று நடந்தாள்.

'யோசிச்சுப் பேசச்சொல்லு. 'என்றான் இன்னொருத்தன். 'இல்லேன்னா நடக்கற விஷயமே வேற. 'அவர்கள் எல்லாருடைய கழுத்தையும் நெறிக்கவேண்டும்போல் இருந்தது. பாவிகளா,பாவிகளா என்று சாட்டையால் விளாச வேண்டும்போல் இருந்தது.சின்னத்தம்பி மெலிதாக அழ ஆரம்பித்தான்.

'žச்சி, கண்ணை துடச்சிக்க 'என்று அவள் அடிக்குரலில் அதட்டினாள்.

கும்பல் ஏசிக்கொண்டே தொடர்ந்தது. கோர்ட்டு வளாகத்தை அடைவதற்குள் கால்கள் துவண்டன. நெஞ்சு பாறையாய் கனத்தது.அதில் சம்மட்டி ஓசை பலமாகக் கேட்டது.தொண்டைக் காய்ந்திருந்தது.சின்னத்தம்பியும் அம்மாவும் உறைந்து போனதற்கு காரணம் வேறு என்று அவளுக்குப் புரிந்தது.அவள் எதிரில் கிஷோரிலால் நின்றிருந்தான்.வானத்துக்கும் பூமிக்குமாய், அவனைத் தாண்டி அவள் நகர முடியாதபடி.

'என்ன பேசணும்னு யோசிச்சு வெச்சிருக்கெ இல்லே ? 'என்றான்,அடிக்குரலில். 'எங்களுக்கு எதிரா பேசினே , அப்புறம் என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க நீ இருக்கமாட்டே. போலீசு ' வெல போயிட்டது.சாட்சிகளையெல்லாம் எங்க பக்கம் வளைச்சுப் போட்டாச்சு.உன் வக்கீல் கூட எங்க சைடு வந்தாச்சு. '

இவனை எப்படி ஏசுவது என்று உள்ளூக்குள் பொங்கிய வெறுப்பையெல்லாம் உமிழ அவள் வார்த்தைகளைத் தேடினாள்.

கிஷோரிலால் கண்களை இடுக்கிகொண்டு சின்னத்தம்பியையும் அம்மாவையும் பர்த்துவிட்டுச் சொன்னான்.ா இவங்களாவது இருக்கணும்னு வேண்டிக்க.ா

நீதி மன்றத்தின் வாயிலில் ஏகக் கருப்பு அங்கிகள் நின்றன.பதினோரு மணிக்கு ஆஜராக வேண்டும் என்றிருந்தது பழுப்புக் காகிதத்தில்.

'கோர்ட்டுக்கு நேரமாச்சு வழியை விடு ' என்றாள் அவள்.

கிஷோரிலால் நகர்ந்தான். 'நினைவு இருக்கட்டும். '

ஒரு கருப்புக் கோட்டு அவளை நோக்கி வந்தது. 'வா,வா, உனக்காகத்தான் காத்துக்கிட்டிருக்காங்க ', என்றது.

அம்மாவையும் சின்னத்தம்பியையும் ஒரு ஓரமாக நிற்கச் சொன்னார்கள். நீதிமன்றத்துள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவள் தனக்குத்தெரிந்தவர்கள், உறவுக்காரர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தாள். ஒருத்தர் கூட இல்லை.

' சர்க்காரி வக்கீல் யாரு ? ' என்றாள் அவள் தயக்கத்துடன்.

' நாந்தான் அது ' என்றது அவளுடன் நின்ற கருப்புக்கோட்டு.

தன்னிடம் இதுவரை ஏதும் பேசாத இந்த வக்கீல் தனக்காக எப்படி வாதாடுவார் என்று அவளுக்குக் கவலையேற்பட்டது. உன் வக்கீல் எங்க பக்கம் என்று கிஷோரிலால் சொன்னது நினைவிற்கு வந்தது.

' நம்ப கேஸ் ஜெயிக்குமா ? ' என்றாள் அவள்.

வக்கீல் எங்கோ பார்த்து ' ரொம்பக் கஷ்டம் ' என்று தலையசைத்து உதட்டைப்பிதுக்கினார்.

அவளுக்குக் கோபம் வந்தது.

'எப்படி ? எப்படி நீதி கிடைக்காமல் போகும் ? அத்தனை அநியாயம் செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்காம போயிடுமா ? சட்டம்னு ஒன்னு இருக்கில்லே ? '

வக்கீல் அவள் காதுகளுக்கு அருகில் சொன்னார்.

' என்ன செய்யறது ? போலீசும் நிர்வாகமும் அவங்க பக்கம். '

நீயும் அவங்க பக்கமாமே என்று அவள் கேட்க நினைத்துப் பேசாமல் இருந்தாள்.

' நீதிபதியாலெ என்ன செய்ய முடியும் பாவம் ? 'என்றார் வக்கீல். அவளைவிட நீதிபதியைக்கண்டு அவர் அதிகம் அநுதாபப்படுவதுபோல் இருந்தது.

நீதி மன்றத்துள் கூட்டம் அலைமோதிற்று. சினேகமற்ற பார்வை பார்த்தது. சிறைக்குச் செல்லவேண்டியவள் அவள் தான் என்று அது நினைப்பதாகத் தோன்றிற்று. நீதிபதியின் நாற்காலிக்குப் பின்னால் மகாத்மா காந்தி பொக்கைவாய் சிரிப்புச் சிரித்தார்.

விசாரணை ஆரம்பித்தது. வரிசையாக சாட்சிகள், சம்பவத்தை நேரில் பார்த்த தெருக்காரர்கள், கூண்டில் வந்து நின்றார்கள். வரவேண்டிய 73 பேரில் 44 பேர் தான் வந்திருப்பதாக வக்கீல் சொன்னார்.

சம்பவம் நடந்த அன்று பலர் தாங்கள் ஊரிலேயே இருக்கவில்லை என்றார்கள்.மிகுதிப் பேர் கேள்விப்பட்டோம், ஆனால் நேரில் பார்க்கவில்லை என்றார்கள்.அவள் குழப்பத்துடன் சுற்றிலும் பார்த்தாள்.குற்றம் சாட்டப்பட்ட கிஷோரிலால், அவனுடய சகாக்களுடன் நூற்றுக்கணக்கான கிஷோரிலால்கள் நின்றிருந்தார்கள்.நீதிபதி,அவர் பின்னால் இருந்த காந்தி, எல்லாருமே கிஷோரிலால்களாக மாறிப்போயிருந்தார்கள்.அவளை சாட்சிக் கூண்டிற்கு யாரோ அழைத்தார்கள்.

உடல் மட்டுமே நகர்ந்தது. உயிர் எங்கோ அந்தரத்தில் நின்றது.

பெயர் கேட்டார்கள்.ஊர் கேட்டார்கள்.அப்பன் பெயர்.அம்மா பெயர்.உயிர் வாழ்பவர் பெயர்.இறந்தவர் பெயர் பட்டியல். மொத்தம் பதினாலு பேர். பெயர் சொல்லும்போது நாக்கு இடறிற்று.பெயர் மயக்கம் ஏற்பட்டது.மன்றம் சிரித்தது.இத்தனை பேரா ? ஒரே வீட்டிலா ? ஆமாம். கூட்டுக்குடும்பம். குடும்ப வியாபாரம். புருஷன், பெஞ்சாதி, மக்க, பதினாலு அதிகமா ? கூட்டத்தில் யாரோ ஒருத்தன் ஏதோ அசிங்கமாகச் சொன்னான்.கூட்டம் கெக்கிலி பிக்கிலி என்று சிரித்தது. அவள் குழப்பத்துடன் நீதிபதியைப் பார்த்தாள்.அந்த நாற்காலியில் கிஷோரிலால் அமர்ந்திருந்தான்.

' சம்பவம் நடந்த அன்று நடந்ததை நீ பார்த்தாயா ? '

சம்பவம். நினைக்கும்போதே தலைச் சுற்றிற்று.எல்லாவற்றையும் நினைவு படுத்தி வார்த்தைகளால் கோக்க வேண்டும்...கொலைகாரக் கும்பல் இரவு வீட்டுக்குள் நுழைந்தது..பண்டங்களை உடைத்தது..வீட்டிற்குத் தீ வைத்தது..அப்பாவையும் அண்ணனையும் தெருவுக்கு இழுத்துத் தீ வைத்துக் கொளுத்தியது..அவளும் அம்மாவும் சின்னத்தம்பியும் பயந்து தப்பித்து மொட்டை மாடிக்கு ஓடியது..மாடியிலிருந்து பதைத்தபடி,அழுதபடி அவள் கண்டது..தெரு சனம் வேடிக்கை பார்த்தது.. விடியும் வரை அவளும் அம்மாவும் தம்பியும் பயந்து பதுங்கியிருந்தது.பிறகு கீழே வந்து 14 கருகின உடலைக் கண்டு அலறியது...

நீதிபதி கேட்டார்.

'பதில் சொல்லல்லேன்னா எப்படிம்மா ? இதுக்காவது பதில் சொல்லு. இப்ப மிஞ்சி இருக்கறது அம்மாவும் தம்பியும் மட்டுந்தானா ? '

அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.சரியாக பதில் சொல்ல வேண்டுமே என்று கவலை ஏற்பட்டது.

'ஆமாங்கய்யா '.

'வன்முறை சம்பவம் நடந்தபோது நீ எங்கேயிருந்தே ? '

'மொட்டை மாடியிலே. '

'அங்கேயிருந்து கீழே நடந்ததைப் பார்த்தியா ? '

நீதிமன்றத்தின் அசையாத நிசப்தத்தில் அடிவயிறு துவண்டது.பகபகவென்று ஏதோ ஒன்று எழும்பி அவளுடைய குரல் வளையை அமுக்கிற்று. ஆத்திரமும் துயரமும் இயலாமையுமாக சூறாவளியாய் மூர்க்கத்தனத்துடன் எழும்பி அவளது நாடி நரம்பையெல்லாம் அமுக்கிற்று.வாயைத் திறக்க முயன்றபோது காற்றுதான் வந்தது.

'சொல்லு ! கீழே நடந்ததைப் பார்த்தியா ? '

அவள் தலயைக் குனிந்துக்கொண்டாள்.வாயைத் திறந்தாள்.அது தன்னிச்சையாக பேசிற்று.

'பார்க்கல்லே. '

சுற்றிலும் விக்கித்து நின்ற நிச்ச்சப்தத்தைக் கண்டு திகைத்தாள்.ஆச்சரியமாக அவர்களுள் தானும் வேடிக்கைப் பார்க்க வந்த ஒருத்தி போலத் தோன்றிற்று.

'பார்த்ததா நீ போலீஸ 'க்குப் புகார் கொடுத்திருக்கே.குற்றவாளிகள் இவங்கன்னு அடையாளம் காட்டியிருக்கே. '

'பொய் சொன்னேன்.மன்னிச்சுக்குங்க ,மன்னிச்சுக்குங்க. '

நீதிமன்றத்துள் எழும்பிய ஆரவாரம் அவள் மூச்சை அடக்கிவிடும்போல் நிலைகுலய வைத்தது. அதிலிருந்து மீண்டு அவள் வெளியே வந்தாள் கூட்டத்தில் ஒருத்தியைப்போல்.சர்காரி வக்கீல் காணாமற் போயிருந்தார்.

அம்மாவும் சின்னத்தம்பியும் அவளுக்காகக் காத்திருந்தார்கள்.இவர்களுக்கு என்ன பதில் சொல்வேன் என்று துக்கமேற்பட்டது.தலை நிமிராமல் நிற்கும் அவளிடம் 'வீட்டுக்குப் போகலாம் வா ' என்றாள் அம்மா.தம்பி கையைப் பிடித்துக்கொண்டான்.

அம்மாவின் குரலில், தம்பியின் ஸ்பர்சத்தில் நிம்மதி வெளிப்பட்டதாகத்தோன்றிற்று.தெரு என்பதை மறந்து

மார்பில் அடித்துக்கொண்டு அழவேண்டும்போல் இருந்தது அவளுக்கு.

[முற்றும்]

பலகை - இரா முருகன்

கேசவப் பணிக்கர். அவரைப் பார்க்க வேண்டும். தோளில் மாட்டியிருக்கிற பிளாஸ்க்கின் வார் நழுவி முழங்கைக்கு வராமல் அவ்வப்போது அதை மேல் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் நடந்து போக வேண்டும்.

மாதவனுக்கு இதுதவிர உலகில் வேலையேதும் இல்லை. என்றாலும், உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது. தூசி தட்டிய பூகோள உருண்டையை அவ்வப்போது கையால் சுழற்றிக்கொண்டு, மேலே எச்சில் தெறிக்க அய்யங்கார் பாடம் நடத்தியபோது சொன்னபடிக்கு. இட வலமாகவோ, வல இடமாகவோ.

வடக்குமுகம் ( நாடகம் ) - ஜெயமோகன்

அரங்கு

=====

வெண்திரைப் பின்னணியும் அமர்வதற்கான ஓரிரு வெண்ணிறத் திண்டுகளும் கொண்ட மேடை .திண்டுகள் நகர்த்தக் கூடியவையாகவும் கனமற்றவையாகவும் இருக்கவேண்டும். . வேறு எவ்விதமான பின்னணியும் அரங்கப் பொருட்களும் இல்லை.

மேடையில் எப்போதுமிருப்பவர்கள் பத்து பின்னணிப் பொது நடிகர்கள். நடனம் போன்ற அசைவுகள் கொண்டவர்கள். ஒரே போல இறுக்கமான, தனித்தன்மை ஏதும் இல்லாத உடையணிந்தவர்கள் இவர்கள். [தேவையென்றால் எண்ணிக்கை அதிகம் இருக்கலாம்.] அரங்கின் அனைத்து தேவைகளையும் இவர்கள் தங்கள் உடல்மூலம் நிரப்ப வேண்டும். போர்களத்துப் பிணங்கள், ஓநாய்கள், புரவிகள், யானைகள், திடாரெனத் தோன்றும் தெய்வங்கள், நினைவுகளில் ஓடும் பிம்பங்கள், கோட்டைச் சுவர்கள் வாசல்கள், அரண்மனைத் தூண்கள் திரைச்சீலைகள் அனைத்துமே இவர்களுடைய அசைவுகள் மூலம் உருவாகி வருபவை. அசைவுகள் நடனத்தன்மை கொண்டவை. இதில் முடிந்தவரை கற்பனைக்கு இடமுண்டு. இவர்களுடைய நிழல்களும் இந்நாடகத்தில் பங்கு வகிக்கலாம். உதிரிக் கதாபாத்திரங்களும் இவர்களே. அக்கதாபாத்திரங்களின் தேவைக்கு ஏற்ப இவர்கள் சில ஆடைகள் , அணிகளை பயன்படுத்தலாம். அவற்றை மேடையிலேயே அணிந்துகொண்டு அக்கதாபாத்திரங்களாக மாறியும் , கழற்றி திரும்பிவந்தும் , நடிக்கலாம். தெய்வங்கள் மிருகங்கள் போன்றவற்றின் வேடங்களுக்கு மெல்லிய முகமூடிகளையும் இவ்விதம் பயன்படுத்தலாம்.

படுகை - ஜெயமோகன்

வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன் இடையிடையே துப்பியும் கனைத்தும் பிசிறடிக்கும் கட்டைக் குரலில் அவர் பாடுவது இப்போதுகூட தனித்த இரவுகளில் நினைவில் ஒலிப்பதுண்டு. தோற்சிற்பம் போல உடம்பு அவருக்கு. எண்பதிலும் முறுக்கம் தளராமைக்குக் காரணம் கள்ளே என்பார். பனை ஓலைகள் உரசும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும் இரவுகளில், இலை நிழல்கள் நிலவொளிமீது விரிந்து அசையும் களத்து மேட்டில், அவர் பெயருடனேயே நினைவில் உதிக்கும் அந்த வினோத பாணியில் கால் மடக்கி அமர்ந்து, முன்னும் பின்னும் அசைந்தாடி, உடும்புத்தோல் உடுகை மூன்று விரல்களால் மீட்டி, எங்களூரின் எழுபது வருடக் கதையைப் பாடுவார். கீழ்வானில் பனைமர மண்டைகளின் ஊடே ஒற்றை வெள்ளி மினுங்க ஆரம்பித்துவிட்ட பிறகும் அவர் குரல் கேட்டுக் கொண்டிருக்கும். வைக்கோற் படுக்கையில் சாய்ந்தபடி தூக்க மயக்கத்துடன் கேட்போம். அப்படியே கனவில் பிரவேசித்து, சிங்கியின் குரல் பின்னணியில் ஒலிக்கும் விசித்திரப் பிரமைகளில் அலைவோம். சட்டென்று விழித்துக்கொள்ளும்போது, உலகுடன் பிணைக்கும் நிஜம் போல அவர் குரல் இருட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவர் கண்களில் மினுக்கம் தெரியும். விடிவதற்கு சற்ற முன்புதான் அவர் தலை சரியும். குரல் உடைந்து இழுபட்டு ஒடுங்கும். அவர் கதை ஒரு போதும் முடிவடைந்ததில்லை. தரையில் அப்படியே சரிந்து விடுவார். விடிந்து வெயிலேறிய பிறகே அவரில் உயிர்க்களை வரும். அவரைச் சுற்றி எச்சில் சிதறிக் கிடக்கும். வாரியலும் கையுமாய் நின்று முத்தம்மா சத்தம் போடுவாள். “சீராத்தேன் இருக்கு, பறப்பயலுக்க ஒப்பரம் சேந்துக்கிட்டு ஏமான்மாரும் தலையெங்க காலெங்க எண்ணு கெடக்கியது. ஏமான், கொச்சேமான் . . .” என்று உசுப்புவாள். “வல்ல காரியம் உண்டுமா, இஞ்ச வந்து கெடக்கியதுக்கு ? பனியோ தீனமோ வந்தெங்கி ஆருக்கு நட்டம் ? இனி நான் காணட்டு. பிலேய் சிங்கி, பறப்பயலுக்க ஒறக்கத்தைப் பாரு. பிலேய் . . .” என்று கத்துவாள். வெறுந்தரையில் விசிறப்பட்டது போல சிங்கி கிடப்பார். அவர் அருகே இரவெல்லாம் எழுப்பிய ஒலியைத் தலைக்குள் ரீங்காரமாய் நினைவுறுத்தும் அந்த உடுக்கு. இரவின் நினைவுகள் பகல் ஒளியில் வெகுதூரமாய், கனவாய் மாறிவிட்டிருக்கும். அதற்கு சம்பந்தமேயற்றவராகச் சிங்கி அப்போது தென்படுவார். பனியும் புழுதியும் படிந்த கரிய வற்றி உடம்பு மூச்சில் மெல்ல அசையும். அவருக்கு வெயில் மழை பொருட்டல்ல, களத்து மூலைப் பனைமரம் போல.

பதுமை (நாடகம்) - ஜெயமோகன்

[அரங்கில் இருள் பரவியிருக்கிறது. ஓசையின்றி வெளிச்ச வட்டம் ஒன்று அரங்கின் சுவர்கள்மீது விழுந்து, நிதானமாக நகர்கிறது. பளபளக்கும் வாட்களும், பட்டாக்கத்திகளும், வேல்களும் சுவர் முழுக்க மாட்டப்பட்டிருக்கின்றன. போர்க்கள ஒலிகள் கேட்க ஆரம்பித்து, மெல்ல வலுக்கின்றன. கதறல்கள், வெறிச் சிரிப்புகள், மரண ஓலங்கள், ஓலம் உச்சத்தை அடையும்போது, ஒளி அரங்கின் நடுவில் நிற்கும் ஆளுயர இரும்புப் பதுமையின் முகத்தில் நிலைக்கிறது. வெறியுடன் சிரிக்கும் இரும்பு முகம். ஒளி பரவ, அரங்கு தெளிவடைகிறது. மூங்கிலால் ஆன சுவர்கள் கொண்ட பாடிவீட்டின் முகப்பறை. பதுமை முழுக்க இரும்பாலானது. அதை ஒருவன் துடைத்துக் கொண்டிருக்கிறான்.

சைக்கிள் முனி - இரா.முருகன்

'எனக்கு ஒரு பாடை அனுப்பவும் '

பாலன் சொல்லிப் பார்த்துக் கொண்டான். ஏனோ சிரிப்பு வந்தது. அதையே பாட்டாகப் திரும்பத் திரும்பப் பாடியபடி திரெளபதி அம்மன் கோயில் பொட்டலுக்கு டயர் வண்டியோடு அவன் போய்ச் சேர்ந்தபோது உச்சி வெய்யில் மணடையைப் பிளந்து கொண்டிருந்தது.

மூன்று குருட்டு எலி - அ.முத்துலிங்கம்

இரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களை பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். ஓர் இரவு தொலைபேசி வந்தது. நண்பர் தமிழ் மழலைப் பாடல்கள் (nursery rhymes) புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை. மனைவியைக் கேட்டேன். எல்லாம் தெரிந்த அவளுக்கும் தெரியவில்லை. அடுத்த நாள் நாங்கள் மூவரும் கனடாவின் கடைகளில் ஏறி இறங்கினோம். ஆங்கிலத்தில் nursery rhymes இருந்தன. ஆனால் தமிழில் அப்படி ஒன்றும் இல்லை என்று கையை விரித்துவிட்டார்கள்.

முகம் - ஜெயமோகன்

.......சரி, நான் இக்கடிதத்தை எழுத வந்த விஷயத்தை சொல்கிறேன். சென்றவாரம் அனந்தன் தம்பி ஒரு கத்தை சுவடிகளை அனுப்பியிருந்தான் . எல்லாம் கொல்லம் -- கோட்டயம் சாலையில் உள்ள துளசிமங்கலம் என்ற புராதன நம்பூதிரி மடத்தில் கிடைத்தவை . இந்த மடத்தைப்பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாயோ என்னவோ ? தெற்கு கேரளத்தில் அதர்வ வேத அதிகாரம் உள்ள இரண்டு மனைகளில் ஒன்று இது . நான்கு நூற்றாண்டுக்காலம் இந்த மனையின் நம்பூதிரிகள் முக்கியமான மந்திரவாதிகளாக விளங்கிவந்திருக்கிறார்கள். திவான் தளவாய் கேசவதாசன் மீது சில நாயர் மாடம்பிகள் ஒரு மகாமாந்திரீகனை வரவழைத்து ஏவல் செய்ததாக அச்சு கணியாரின் 'கேரள சரித்திர வைபவம் ' சொல்கிறதே, அந்த மந்திரவாதி இந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்தான். திவான் கேசவதாசன் பிழைத்துக் கொண்டார் ,ஆனால் அதன் பிறகு இந்தமனைக்கு கெட்ட காலம் ஆரம்பித்தது .மனையின் சொத்துக்கள் முழுக்க பிடுங்கப்பட்டன . கோயிலதிகாரங்கள் நிறுத்தலாக்கப்பட்டன. படிப்படியாக அக்குடும்பத்தின் செல்வாக்கும் முக்கியத்துவமும் இல்லமலாயிற்று .இந்த வம்சத்தில் இப்போது இருப்பவர் சங்கரநாராயணன் நம்பூதிரி . இவர் கோட்டயம் பாரில் வக்கீலாக இருக்கிறார் .

தேவதை - ஜெயமோகன்

நாளிதழ்களின் வாரமலர்களில் கூட இந்த நூலை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் , ஐரோப்பிய மரபிசையில் ஆப்ரிக்கஇசையின் பங்களிப்பு ' .இசையாராய்ச்சி நூல்களில் கடந்த ஐம்பதுவருடங்களில்வந்த பெரும்படைப்புகளில் ஒன்று இது என்று டைம் இதழ் மதிப்பிட்டிருக்கிறது. எந்த முதல்த்தர ஆய்வுநூலையும் போலவே இதுவும் தன் துறையிலிருந்து மேலே சென்று ஒட்டுமொத்த மானுடக் கலாச்சாரம் பற்றி பேசுவதனால்தான் அந்த முக்கியத்துவத்தை பெற்றது என்பது என் கணிப்பு . 'இசை என்னை ஒரு வெறும் புழுவென உணரச்செய்கிறது ' என்ற இந்நூலின் வரியொன்றை 'ஸ்பை கேர்ல்ஸ் ' பாட்டாக பாடி பிரபலப் படுத்தியிருக்கிறார்கள் .

மேரி பென்சாம் ப்ளூவுட்ஸ் இதை எழுதும்போது நான்தான் தட்டச்சு செய்து கொடுத்தேன்.என் பெயரை நீங்கள் நன்றிகள் பகுதியில் காணலாம். இது இருபது வருடகால உழைப்பு ,நான் ஐந்து வருடம் தட்டச்சு பணி செய்தேன். அம்மா நைஜீரியாவிலிருந்து ஓடிவந்து ,மறுமணம் செய்துகொண்டு, புதுக்கணவனுடன் சேர்ந்து சலவை நிலையம் ஆரம்பித்து ,நான்கு குழந்தைகளும் பெற்றுக் கொண்டபோது நான் அன்னியமானேன். பள்ளியை முடித்தபிறகு வீட்டை விட்டு ஓடி தோழியுடன் தங்கி பகுதிநேர வேலை செய்துகொண்டு படித்துக் கொண்டிருந்தேன். தட்டச்சு வேலை மிக கவுரவமாக இருந்தது என்பதோடு எனக்கு எப்போதுமே மொழியில் மோகம் அதிகம்.

கொழுத்தாடு பிடிப்பேன் - அ.முத்துலிங்கம்

ஓம் கணபதி துணை

The Immigration Officer 94/11/ 22

200, St Catherene Street

Ottawa, Ont

K2P2K9

( Please translet Sri Lankan Tamil Language )

ஸ்டவ் - இரா.முருகன்

ஆறுமுகம் வாத்தியார் வீட்டில்தான் இது ஆரம்பித்தது.

அவங்க வீட்டம்மா மீன் கழுவிய தண்ணீரையும் செதிலையும் கொட்டக் கொல்லைக் கதவைத் திறந்தபோது கழுநீர் எடுக்கத் தகரக் குடத்தோடு பங்காரம்மா உள்ளே நுழைந்தாள்.

உங்க எருமைக் கன்னுக்குட்டி இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்திடும்.

வாத்தியார் வீட்டம்மா சொன்னாள்.

ஓட்டைக் காலணாக்கள் - காஞ்சனா தாமோதரன்

நம்பிக்கனி அத்தை நல்ல உயரம். அவளுக்குத் தலைவலி அடிக்கடி வரும். வெள்ளைத் துணியை நெற்றியில் இறுகக் கட்டியவாறு சோஃபாவில் படுத்துக் கண்களை மூடிக் கொள்வாள்; சோஃபாவுக்கு வெளியே நீளும் பாதங்கள் புடவை கொஞ்சமும் விலகாமல் எப்படியோ சுவற்றில் மெல்ல ஏறும். அப்படிப் பாதங்களை ஓட்டிக் கொண்டே கதைகள் நிறையச் சொல்லுவாள்.

குப்ஜாவின் பாட்டு (தமிழில்) - அசோகமித்திரன்

சலனமற்ற கருணையற்ற மேகமற்ற

வெற்று வானத்தடியில்

எவ்வளவோ ஆண்டுகளாக

இந்த ராஜபாட்டையில் காத்துக் கிடந்தேன்.

கண்ணாடிக்குண்டுகளை போன்ற கண்களுடன்

எலும்பையும் நடுங்க வைக்கும்

கொடூரக் குளிரையும்

உதிரும் இலைகளின் துயர கீதம் ஒலிக்கும்

நீரான இலையுதிர் காலத்தையும்

ஈரமான வானத்தின் மந்த முகத்தையும்

புழுதியடிலிருந்து எழும்

வசந்தகால பகுள மலர் வாசனையும்

உணர்ந்து காத்திருந்தேன்.

அர்த்தமில்லாக் காலத்தின் கொந்தளிப்பில்

மனச் சாளரத்தோடு மட்டுமே முடிந்துவிடும்

வயோதிகத்தில் நோயுற்று

உள்ளத்தின் அடி வானத்தில்

மழையால் பளுவுற்ற மேகங்கள் எழ

கொடும் கோடைக் கடுமையை

தீவிர விசிறியாட்டலால் கடந்தபடி

ஆண்டுகளையும் மாதங்களையும் நாழிகைகளையும்

நிமிடங்களையும் எண்ணியபடி காத்திருந்தேன்.

நான் கொண்டு தரும் சந்தனத்தின்

நறுமணத்தால் மகிழ்ச்சியடைந்த கம்சராஜன்

நிறையப் பொன்னும் பொருளும் மூன்று

காணி நிலமும் நான் ஆண்டு வர

அளித்திருந்தான். அரச சபையில் சமர்ப்பிக்க

நாள்தோறும் அரைத்த சந்தனம் நிரப்பிய

பேழைகளைச் சுமந்தவண்ணம்

மதுராபுரியின் ராஜபாட்டையில்

நான் நடந்து செல்வேன்.

அரசனின் தேகம் மணம் வீச

ஆயிரம் நறுமணப் பொருள்கள் உருவாக்கும்

பரம்பரைப் பணிமகள் நான்.

எவ்வளவோ ஜன்மங்களாகக் கன்னியாக

இருந்தவள்

எனக்குக் கணவன் கிடையாது.

என் மடி என்றும்

நிறைந்ததில்லை.

வறண்ட என் இதயத் தடாகத்தில்

அலை வீசுவதில்லை.

ஒரு சலசலப்புக் கிடையாது.

என் அவலட்சண முகத்தைப் பார்த்து

யார் என்னை மணந்து கொள்வார் ?

என் பயனற்ற வாழ்வு

பாலைவனத்தில் பதியும் பாதச் சுவடு.

நான் கம்சனின் தனி அடிமை.

எனக்கு நறுமணம் கிடையாது. வண்ணவடிவம்

கிடையாது. குரலும் கிடையாது.

அழகும் கிடையாது.

எனக்கு எங்குமே அதே வண்ணமற்ற

மணமற்ற குரலற்ற மெளனத்தின் நிழல்தான்.

காலம் காலமாக

பிரளயமெடுத்துப் பிரளயமாக

நான் தீய அசுரனுக்கே பணிபுரிந்திருக்கிறேன்.

அவனுடைய கடைக் கட்டளைக்கு

அடி பணிந்திருக்கிறேன்.

அந்தப் பாழும் பாலைவனத்தில் ஒரு

எதிர்பார்ப்பும் இல்லை. ஒரு புல் அசையாது.

துளி மேகமும் காணாது.

உடல் மனம் ஆவி அனைத்திலும்

பற்றியெறியும் வெக்கை.

மனவறட்சியும் துயரமும் வேதனையும் ஒருவர்

சுமக்கவிருப்பதில்

மதுராவெனும் இந்நகரத்தில்

புனிதம் நாறுகிறது.

இந்த வறட்சி மீதுள்ள மயக்கத்தில்

உலகமே குழம்பிக் கிடக்கிறது.

கடல் சூழ்ந்து இந்த பூமி பதறுகிறது.

மதுராவில் ஜீவனில்லை.

எண்ணற்ற இறந்த உள்ளங்கள்தான்.

உள்ளன. ஒன்று இரண்டு மூன்று

கோணலுடையவள்--

இந்த மனம், அவல உடல், நெஞ்சம்--

உடலும் ஆன்மாவும் ஒருசேர மடிந்து

சாவின் குளிருணர்வில்

பாழாய்ப் போன இந்நாட்டு மக்கள்

காமத்தின் மயக்க வாசனையில்

மெய் மறந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு துளியிலும்

தூசுச் சிதறிலும்

நரம்பிலும் துடிப்பிலும்

யாழின் குழல்

தொடர்ந்து அலை அலையாகப்

பாய்கிறது.

கோடிக்கணக்கான பிறப்புகளில், கனவுகளில்,

எல்லா ரணங்களும் உடைந்த

தாங்கொணாத் தாபங்களும்

காலந்தாழ்த்திய வசந்தத்தின் துன்ப மூலையில்

சதையின் விஷக் குறிகள்

செத்து மடிந்து ஆசைக்கனவுகள் நிரம்பிய

மனத்தில் என் பல கோடி ஜன்மங்களின்

மகவுகளும்

பேரன் பேத்திகளும், கொள்ளுப் பேரக்

குழந்தைகளும் அதற்கும் முந்திய

பேரப் பிறவிகளும் பிணங்களாக

வரிசை வரிசையாகக்

கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எல்லாக் கணக்கும் இப்போது

தீர்ந்துவிட்டது

மாய்ந்த மேகங்கள், மாய்ந்த புழுதி

மாய்ந்த பூமி மகவுகள்.

எல்லோருடைய உள்ளக்கிடக்குகளையும் அறிந்த

நீயோ என்னைக் கேட்டதெல்லாம் சிறிதளவு

அரைத்த சந்தனம்தான்.

என்ன ஆச்சரியம் '

அதே வாசம்

வாசத்துக்குரியவளுக்கு அதன் தொடக்கத்துக்கே

திரும்புகிறது இன்று '

என்ன பேராசையப்பா உனக்கு '

அந்தப் பூச்சு சகோதரர் இருவருக்கும்

பாக்கியில்லை போலும்.

இப் பிற்பகலின் பாலையில்

கரிய நீலமேகத்தின் ஆன்மத் தீண்டல் நிழலில்

தீயும் எப்படிக் குளிர்ந்துவிட்டது '

குப்ஜாவாகிய நான் ஜன்ம ஜன்மாந்திரமாக

அடிமை வம்சத்தை சார்ந்தவள்

இன்று முக்தி பெற்ற மகிழ்ச்சியில்

பேரானந்தத்தில்

என் மனம் கடம்ப மலர்களுக்கும்

அப்பால் மிதந்து செல்கிறது.

இடுகாட்டின் சிதறிய எலும்புகள் மத்தியில்

இசைத் துடிப்புகள்.

உன் மாய ஸ்பரிசத்தில்

காலம் காலமாயிருந்த பிணி மறைந்தது.

உடைந்த கனவுகள் புத்துருப் பெறுகின்றன.

கிழிந்து கந்தலான ஓட்டை மனம்

மீண்டும் புதிதாகிறது.

மேகமிடை மின்னலில் மழை,

கடல் சூழ பூமி மறுபிறவி.

என் சந்தனப் பசையால்

உன் நெற்றியில் புனிதத் திலகமிட்டேன்.

ஆழ் நீல மேக சியாமளன்

அளவிடவியலா முத்தான நெஞ்சமுடையவன்--

தலையிலிருந்து உனது நாபி வரை

மதுராபுரியின் ராஜபாட்டையில்

வேத கோஷம் ஒலிக்க

வாசமுள்ள சந்தனத்தை அப்பினேன்.

உன் பாத துளியால் என் முகவாயை

உயர்த்தினாய்

புத்துரு புதுப்பிறவி புது இளமை பெற்றேன்.

ஆதியும் அந்தமுமானவனே '

கட்டுண்ட பாவிகளான

மதுராபுரிவாசிகளை

மீட்டுக் காக்க உன்னை வேண்டுகிறேன்

உன் பாத துளிபட்டு

பயனற்ற இந்தப் பிறவிச் சகதி

தொலையட்டும்.

இருண்மை நிறைந்த இறப்புக்கும்

துண்டு துகளான காலத்துக்கும்

முடிவு வரட்டும்.

தீய அசுர மன்னனைத் தோத்திரம்

புரிவது முடியட்டும்.

வறண்ட வானில் மீண்டும் மேகச் சங்கிலி

எழட்டும். அக்கரியத் தொடர்

தவழ்ந்து வரட்டும்.

குங்கும வண்ணனே, பீதாம்பரதாரி,

வளை கடகம் தரித்து

மார்பெல்லாம் சந்தனம் பூசி

மாலையும் தாம்பூலம் தவழும் வாயும்

இனிய நறுமணமும் ஒளியும் கொண்டவனே,

முத்தே, பவழமே,

பொன் வைர வைடூரியம் அணிந்தவனே--

ஒருகணம் உனக்கு ஓர் யுகம்

இதெல்லாம் ஆதியும் ஆரம்பமும்தான்

சியாமளனே, உனக்கு அந்தமேது ?

உடல் மனம் ஆவியின் கோடையிறுதியில்

கட்டுண்டு நிறைவுறாத கொடுந்தீயான

காலப் பயணத்தின் முடிவில்

பிணியும் உடற்கோணலும் கொண்ட

இந்த பாழ்வாழ்வின் கடைசியில்

குப்ஜாவாகிய நான்

மகிழ்ச்சி லாகிரியில்

செளந்தர்யமான உடல் உள்ளம்

நெஞ்சத்துடன்

உனக்காக

இன்று காத்திருப்பேன்.

******************************

பாகவதத்தின் எண்ணற்ற சிறு பாத்திரங்களில் ஒருத்தி கம்சனின் அரண்மனைப் பூக்காரியான குப்ஜா. மிகுந்த அவலட்சணம் பொருந்தியவள். ஆனால் மதுரா விஜயத்தின் போது கண்ணன் அவள் மீது மிகுந்த அன்பு காட்டுகிறார். அவலட்சணமான உணர்விலிருந்து அவள் விடுதலை அடைகிறாள்.

போதி - ஜெயமோகன்

அவிசுவாசி என்று ஆனபிறகு மீண்டும் இங்கு திரும்பிவந்திருக்கிறேன். விசுவாசத்தைப்ப்ற்றி அதிகமாக பேசவிரும்பவில்லை. பத்து வருடங்கள் ஒரு இளைஞனின் வாழ்வில் அத்தனை சிறிதல்லபாருங்கள். என்றுமே நான் அவிசுவாசிதான் போலிருக்கிறது .ஆனால் அதுதான் இயல்பான நிலை என்று தெரிந்துகொள்ள ரத்தமும் கண்ணீரும் சிந்தியிருக்கிறேன்.

அன்று இப்படி இல்லை . முகப்பில் சிமிட்டி வளைவும் 'திருவதிகை ஆதீனம் ' என்ற எழுத்துக்களும் இல்லை. ஆலமரம் அப்படித்தான் இருக்கிறது . ஆனால் அன்று வந்து நுழைந்தபோது இது அளித்த பிரமிப்பை இப்போது தரவில்லை . ஜடையை அவிழ்த்துப்போட்ட கிழ ராட்சசி போல பயமுறுத்தும் கம்பீரம். ஆனால் பாத்திகள் எல்லைவகுத்த முற்றமும் விழுதுகளினூடே அமைக்கப்பட்ட சாய்வு பெஞ்சுகளும் சூழலையே மாற்றியமைத்துவிட்டன. அன்று மடத்தின் முன் நிச்சிந்தையாக பசுக்கள்படுத்து மென்று கொண்டிருக்கும், இப்போது ஒரு கார் நிற்கிறது .

ஒருத்தருக்கு ஒருத்தர் - வண்ணதாசன்

குஞ்சம்மா என்கூட அஞ்சாவது வகுப்பு வரைக்கும் படித்தாள். அப்போதே அவள் குண்டுதான். எங்கள் வகுப்பில் குஞ்சம்மாவும் பானு என்கிற பானுமதியும் குண்டு. பானுமதி நல்ல சிகப்பு. இவள் கருப்பு. அவ்வளவுதான். ஒல்லியாக இருந்ததால் மறந்துவிட முடியுமா என்ன. முத்துலட்சுமியும், சுந்தரியும் ஒல்லி. சுந்தரியின் அண்ணன் மேல் காலெல்லாம் பாலுண்ணியாக இருக்கும். மிஞ்சியது ஒயர்மேன் சின்னையாவுடைய பெண் தங்கம்மாதான். சின்னையா என்பது அவருடைய பெயரல்ல. எல்லோரும் சின்னையா சின்னையா என்று கூப்பிட்டதால் அப்படி.

ரொம்ப நாட்களுக்குப் பின் எங்கள் வீட்டில் மச்சு எல்லாம் எடுத்து, லைட் போட்டபோது, வயரிங் பண்ண வந்தது சின்னையாதான். சின்னையா 'வி ' கழுத்து மல்பனியன் போட்டிருப்பார். அம்மன் தழும்பு முகம். ஆக்கர் வைத்த பம்பரம் மாதிரி இருக்கும். குரல் எம்.ஆர்.ராதா மாதிரி. எனக்கு எம்.ஆர். ராதா குரல் சின்னையா குரல் மாதிரியிருந்தது. எது முதலில் கேட்டதோ, அதைத்தானே பிந்திக் கேட்டது ஞாபகப்படுத்தவேண்டும்.

கூறாமல் - நீல.பத்மநாபன்

இனியும் தாமதிக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக உணர்ந்தார். சென்ற சில மாதங்களாய், ஆண்டுகளாய் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளில் உறைந்த சங்கதிதான். இருந்தும், தவிர்த்து தவிர்த்து, உள்ளத்தையும் ஐம்புலன்களையும் சிறுகச் சிறுக பக்குவப்படுத்திக் கொண்டிருந்ததெல்லாம் இனி முழு மூச்சாய் செயலுக்குக் கொண்டு வந்து விடவேண்டியதுதான்.

சோவென்று தகர்த்துப் பெய்யும் அடைமழை... இந்த மத்தியானப் பொழுதை மூவந்திக் கருக்கலாய்க் காட்டும் மழை மேகங்கள்.

ஒட்டுதல் - வண்ணதாசன்

குளியலறையை விட்டு வெளியே மஹேஸ்வரி வரும்போது செஞ்சு லட்சுமியும் அவள் கணவரும் ஹாலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

அம்மா குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள். செஞ்சுதான் பக்கத்தில் நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். 'எங்கே போகப் போகிறாள். ஏற்கனவே பார்த்த ஆபீஸ். ஏற்கனவே பார்த்த வேலை ' என்று என்னென்னவோ சொல்வது கேட்டது.

துவைத்த உடைகளையும் வாளியையும் வைத்த கையோடு எப்போதும்போல அடுக்களையின் ஒரு பகுதியாக இருக்கிற பூஜை அலமாரியின் பக்கம் வந்து நின்றாள்.

எல்லாச் சாமி படங்களையும்விட ராம்பிரசாத்தின் படம் பெரியதாக இருந்தது. இன்றைக்கு மாலை ஒன்றும் போட்டிருக்கவில்லை. ஆனால் கண்ணாடிக்கு மேல் வைத்திருந்த குங்குமப் பொட்டு அளவுக்கு அதிகமாக நெற்றியை மறைத்துக் கொண்டிருந்தது.

மண்ணின் மகன் - நீல.பத்மநாபன்

வெறிச்சோடிய விரிந்து பரந்த இந்த வானும் கரையில் வந்து மோதி திரும்பிச் செல்லும் அலைகள் எழுப்பும் ஓசையும் இதற்கு முன்பே பழக்கப்பட்டிருப்பதைப்போன்ற ஒரு பிரமை...

வேலை மாற்றலாகி, முதல் முறையாய் வந்திருக்கும் இந்த இடம் இதற்கு முன்பே பரிச்சயமானதாய் தோன்றும் இந்த விசித்திர மனமயக்கம்... ?

பஸ்ஸிலிருந்து இந்தக் கடற்கரையில் இறங்கி, ஆபீஸ்உம், குவார்ட்டர்ஸ்உம் ஒன்றாய் இயங்கும் அதோ தெரியும் சிறு கட்டிடத்தில் போய் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டு இங்கே வந்து இப்படி உட்கார்ந்திருக்கையில்...

மனதில் வந்து கவியும் இன்னதென்று தெரியாத அந்நியமான உணர்வுகள்.

கிருஷ்ணன் வைத்த வீடு - வண்ணதாசன்

கிருஷ்ணன் வைத்த வீடு, தனுஷ்கோடி அழகருக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரே ஒரு முறைதான் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு.

அவன் ஹாஸ்டலில் இருந்தான். நான் வீட்டிலிருந்து மூன்றாம் நம்பர் பஸ் பிடித்துக் காலேஜ்உக்குப் போய்க் கொண்டிருந்தேன்.

பாப்புலர் டாக்கீஸில் 'தாமரை நெஞ்சம் ' படம் பார்த்துவிட்டு வெளி வருகிற கூட்டத்தில், என் தோளை வந்து அவன்தான் பிடித்தான். சிகரெட் குடித்து, மிட்டாய் சாப்பிட்டிருந்த வாசனையுடன் சிரிப்பு இருந்தது.

'நீ எங்கேடாஇருக்கே ? ' என்றான்.

23 சதம் - அ முத்துலிங்கம்

கனடிய டொலர் .23 சதம். இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் 15.00, இந்திய ரூபாயில் 8.00. இத்தாலிய லீராவில் 333, யப்பானிய யென்னில் 20. அது அல்ல முக்கியம். கனடிய அரசாங்கம் இந்த .23 சதத்தை எனக்கு தரவேண்டும். பல வருடங்களாக. அதை எப்படித் தருவது என்று அரசாங்கத்துக்கு குழப்பமாக இருக்கிறது. எனக்கும் எப்படி வாங்குவது என்பது தொியவில்லை. G8 என்று சொல்லப்படும் உலகத்து முக்கிய நாடுகளில் ஒன்றான கனடா நாடு இப்படி கேவலம் .23 சதத்துக்கு என்னை ஏமாற்றிக்கொண்டு வந்தது.

காற்றின் அனுமதி - வண்ணதாசன்

'அப்பா, நானும் வாக்கிங் வரட்டுமா ' - என்று தினகரி கேட்கவும் 'ஓ. எஸ் ' என்று கூட்டிக்கொண்டு புறப்பட்டாயிற்று. நடக்கிறதுக்கு என்ன காசா, பணமா. அதே சட்டை, அதே வேட்டி, அதே செருப்பு என்று புறப்பட வேண்டியதுதான். மனது மாத்திரம் கொஞ்சம் புதிது. தாத்தா கோலப்பொடி போட்டு, துணியில் வடிகட்டின விபூதிபோட்டுத் துடைத்து வைத்த அரிக்கேன்லைட் சிமினி மாதிரி, நேற்றையப் புகை, நேற்றையக் கருப்பு, நேற்றைய எண்ணெய்க் கசடு, ஒன்றிரண்டு நுனிவிரல் ரேகையை எல்லாம் துடைத்துப் புதிதாக வைத்துக் கொள்கிற காரியம்தான் நடை.

இப்படி விடியற்காலம் எழுந்திருந்து நடந்து கொண்டிருப்பவனுக்கு, வேறு என்ன சாதுரியம் இருக்கப்போகிறது. மலை, காற்று, சூரியன் என்று எல்லாம் வேறு உலகத்து விஷயங்களாகிவிட்ட அலுவலக நடப்புகளில் மூன்று வருடங்களுக்கு ஒரு ஊர் என்பது நிச்சயம். மற்றவர்களுக்கும் ஆர்டர் வருகிறது. அவர்கள் கேட்ட ஊர், முயற்சி பண்ணின இடம் கிடைக்காவிட்டால், டக்கென்று லீவு போடுகிறார்கள். லீவு முடிந்த பிறகு மந்திரம் போட்ட மாதிரிக் கேட்ட ஊர் அல்லது அதற்குப் பக்கத்தில் கிடைத்துவிடுகிறது. மரங்கொத்திகளுக்கு மரங்கள் இருக்கிறபடியும், மீன் கொத்திகளுக்கு மீன்கள் இருக்கும்படியான நியதியை இயற்கை இன்னும் அனுசரித்துத்தான் வருகிறது.

மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள் - அ முத்துலிங்கம்

அந்த வெள்ளைச் சுவரில் கறுப்பு அம்புக்குறிகள் நிறைய இருந்தன. அந்த அம்புக்குறிகளை தீட்டியவன் அதிலேயே லயித்திருந்தவனாக இருக்கவேண்டும். அளவுக்கு அதிகமாகவே வரைந்திருந்தான். அவற்றை பார்த்தபடியே அவள் நடந்தாள். இப்படியே பக்கவாட்டாக வழி காட்டிக்கொண்டு வந்த அம்புக்குறி திடாரென்று ஓர் இடத்தில் வளைந்து நேர்குத்தாக மேலுக்கு போனது. இவள் முகட்டை பார்த்தாள். அங்கே ஒரு வார்டோ, போவதற்கு வசதியோ இருக்கவில்லை. பின்பு வளைவில் திரும்பவேண்டும் என்ற கரிசனையில் இந்த அம்புக்குறிக்காரன் இதை கீறியிருக்கவேண்டும் என்று ஊகித்து அப்படியே திரும்பினாள்.

வடிவ அமைதி - காஞ்சனா தாமோதரன்

அந்தப் பெண் கண்ணாடி முன் நின்றாள். திறந்த 'ப ' வடிவிலான கண்ணாடியில் வெவ்வேறு கோணங்களில் மூன்று பிம்பங்கள் நிறைந்தன. உடம்பைக் கவ்விப் பிடிக்கும் 'ஸ்பான்டெக்ஸ் ' துணியினாலான மேல் சட்டையை இன்னும் கொஞ்சம் கீழே இழுத்து விட்டாள். முன்னும் பின்னுமாய்த் திரும்பித் திரும்பித் தன்னைப் பார்த்துக் கொண்டாள். தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கினாள். முகத்தில் அதிருப்தி. மீண்டும் உடை மாற்றும் அறைகளுள் திரும்பிச் சென்றாள். அவள் அந்தச் சட்டையை வாங்கப் போவதில்லை என்று தோன்றியது.

வேறு வேறு அணில்கள் - வண்ணதாசன்

சிலம்பாயி இப்படி பூப்போல வந்து நிற்கிறாள்.

போகன்விலாச் செடியின் அடித்தூர் காட்டுக் கொடிகளைப் போலத் திருகி வளர்ந்து, அதன் நிழலிலேயே பதுங்கியிருக்க ஒரு நெளிந்த தாறுமாறான வட்டத்தில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த மூன்று வண்ணத்துப் பூச்சிகளை மட்டும் நெடு நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பேச்சுத் துணைக்கு ஒருத்து அதுவும் 'இந்த வீட்டுக்குள் எவள் வந்து பெருக்குமாரை எடுத்துக் கூட்டுகிறாண்ணு பார்க்கேன் ' என்கிறமாதிரி ஒரு வருஷத்துக்கு முன்னால் சொல்லி விட்டுப் போன சிலம்பாயி வந்திருப்பது, இன்றைக்கு முழுவதும் புஸ்தகத்தைப் படித்துக் கொண்டு நாற்காலியோடு தைத்துப் போட்டது மாதிரி கிடக்க வேண்டியவனுக்குப் பெரிய மாறுதல் தான்.

அந்த ஆச்சரியம் தெரியும்படியான குரலிலேயே 'உள்ளே வா சிலம்பாயி ' என்று சப்தம் கொடுத்தேன்.

மாபெரும் பயணம் - ஜெயமோகன்

பொள்ளாச்சி தேசிய நெடும் பாதையருகே ஒரு பழைய லாட்ஜில் தங்கியிருந்தான். கீழே பலசரக்கு மணம் வீசிய கடைகள் மூடிவிட்டாலும் ஒரு லாரிப்பட்டறை தூங்காமல் விழித்து தட் தட் தடால் என்று ஓசையிட்டுக் கொண்டிருந்தது. கொசுக்கடியும் உண்டு .தூக்கம் வராமல் பிசுக்கு படிந்த மெத்தை மீது படுத்து என்னவோ யோசித்துக் கொண்டிருந்தான். தூக்கம் வராத ந்டு இரவுகளில் சிந்தனைகள் மிகவும் பயமுறுத்துகின்றன .வழக்கமாக நாம் தூங்கிய பிறகு உடலில் இருந்து கிளம்பி இரவில் உலாவும் நாமறியாத ஏதோ பேய் ஒன்றை விழித்திருப்பதனால் கண்டுவிட நேர்வது போல . அரை மயக்கம் கூடிவந்த போது திடாரென்று ராணுவம் நடந்துசெல்லும் ஒலி கேட்டது.இரும்பு அடிப்பாகமுள்ள எண்ணற்ற பூட்ஸுகள் ம்ண்ணை மிதித்து மிதித்துச் சென்றன . அவன் தன் உடம்பு உதறி உதறி நடுங்குவதை உணர்ந்தான் .மூச்சுதிணறியது.என்னென்னவோ அபத்த சிந்தனைகள் ,அபத்தம் என்று நன்கு அறிந்திருந்தபோதும் கூட அவனை பதற அடித்தபடி கடந்து சென்றன.எந்த ராணுவம் அது ?இந்திய ராணுவமா ?இலங்கை ராணுவமா ? ...களநடையொலி நெருங்கி வந்தது.பிறகு அது அவன் மீது ஏறியது , பூட்ஸ்கால்கள் மார்பில் நடந்து நடந்து சென்றன .அவ்வளவு கனமாக , நிதானமான தாளத்துடன் ' ' சார் !சார்! சார்! ' ' என்று குழறிய குரலில் கெஞ்சியபடி விழித்துக் கொண்டான் . வாயிலிருந்து வழிந்த எச்சிலைத் துடைத்துக் கொண்டு, அறையை ஒன்றும் புரியாமல் பார்ந்தான். மெல்ல நினைவு வந்ததும் அந்த ஒலி வேறுபட்டது.வெட்கத்துடன் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான், ஒரு மணியாகியிருந்தது.இந்த நேரத்தில் என்ன ஓசை ?

கொடுக்காப்புளி மரம் - புதுமைப்பித்தன்


நாலுநாயக்கன் பட்டியில் ஆரோக்கிய மாதா தெரு என்றால் ஊருக்குப் புதிதாக வந்தவர்களுக்குத் தெரியாது.

நகரசபையின் திருத்தொண்டினால் அவ்விடத்தில் அந்த மாதா அஞ்ஞாதவாசம் – உருவத்தையும் மாற்றிக் கொண்டு – செய்து கொண்டு இருப்பதாகத் தெரியும். தேக ஆரோக்கியத்திற்காக அங்கு சென்று வசிக்க வேண்டாம். அதற்கு வேறு இடம் இருக்கிறது. ராமனுடைய பெயரை வைத்துக் கொண்டால் ராமன்போல் வீரனாக இருக்க வேண்டும் என்று எங்காவது சட்டம் இருக்கிறதா? இதில் ஒன்றும் அவசியமில்லை.

அங்கு வசிப்பவர்கள் எல்லோரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அதாவது அங்கு வசிப்பவர்கள் என்றால், அவர்களுடைய வீடு என்ற ஹோதாவில் ஒரு குடிசை; சில இடத்தில் ஓட்டுக் கட்டிடம் கூட இருக்கும். முக்கால்வாசி சாமான் தட்டுமுட்டுகள் வெளியே. சமையல் அடுப்பும் வெளியே. எல்லாம் சூரிய பகவானின் – அவர்கள் கிறிஸ்தவர்கள் – நேர் கிருபையிலேயே இருக்கும்.

ஆண்கள், ஏகதேசமாக எல்லாரும், பட்லர்கள் அல்லது ‘பாய்கள். பெண்கள் சுருட்டுக் கிடங்கிலோ அல்லது பக்கத்திலிருக்கும் பஞ்சாலைகளிலோ தொழிலாளிகள். அங்கு அவர்கள் தொழிலைப் பற்றிக் கவனிக்க நமக்கு நேரமில்லை.

காளியக்காவும் இசக்கியம்மாளும் அங்கு குடியிருக்கவில்லை. செபஸ்தியம்மாளும் மேரியம்மாளும்தான் குடியிருந்தார்கள். உண்மையில் காளியக்காள்கள் புதிய பெயர்களில் இருந்தார்களே ஒழிய வேறில்லை. மாதா கோவிலுக்குப் போகும் அன்றுதான் ஆரோக்கியமாதாவின் கடாக்ஷம் இருப்பதாகக் காணலாம். பரிசுத்த ஆவி அவர்களுடைய ஆத்மாவைத் திருத்தியிருக்கலாம்; அதைப் பற்றி எனக்குத் தெரியாது. அந்த ஆத்மா சில வருஷங்கள் தங்கி இருப்பிடத்தைச் சுத்தப்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியும்.

ஆரோக்கிய மாதா தெருவில் ஒரு முனையில் அவற்றைச் சேராது தனித்து ஒரு பங்களா – அந்தத் தெருக்காரர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள் – இருக்கிறது. அது பென்ஷன் பெற்ற ஜான் டென்வர் சுவாமிதாஸ் ஐயர் அவர்கள் வீடு. அவர் ஒரு புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர். பெரிய பணக்காரர். “ஒட்டகங்கள் ஊசியின் காதில் நுழைந்தாலும் நுழைந்து விடலாம். ஆனால் செல்வந்தர்கள் மோட்ச சாம்ராஜ்யத்தின் வாசலைக் கடக்க முடியாது என்றார் கிறிஸ்து பகவான். சுவாமிதாஸ் ஐயரவர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்றோ என்னவோ, கர்த்தரின் திருப்பணியைத் தனது வாழ்க்கையின் ஜீவனாம்சமாகக் கொண்டார். உலகத்தின் சம்பிரதாயப்படி அவர் பக்திமான்தான். எத்தனையோ அஞ்ஞானிகளைக் குணப்படுத்தும்படியும், என்றும் அவியாத கந்தகக் குழியிலிருந்து தப்ப வைத்தும், மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு வழி தேடிக் கொடுத்திருக்கிறார். நல்லவர்; தர்மவான்; ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குச் செல்வார். புதிய ஏற்பாட்டில் மனுஷ குமாரனின் திருவாக்குகள் எல்லாம் மனப்பாடம்.

அவர் பங்களா முன்வாசலில் ஒரு கொடுக்காப்புளி மரம் பங்களா எல்லைக்குட்பட்டது. ஆனால் வெளியே அதன் கிளைகள் நீட்டிக்கொண்டு இருக்கும்.

வெறுங் கொடுக்காப்புளி மரமானாலும் அதன் உபயோகம் அதிகம் உண்டு. கொடுக்காப்புளிப் பழம் ஒரு கூறுக்கு ஒரு பைசா வீதம் விலையாகும்பொழுது அதை யாராவது விட்டு வைப்பார்களா? பள்ளிக்கூட வாசலிலும், மில் ஆலைப் பக்கங்களிலும் சவரியாயி காலையில் ஒரு கூடை எடுத்துக் கொண்டு சென்றால் ஒரு மணி நேரத்தில் கூடை காலி.

எவ்வளவு வருமானமிருந்தாலும் இந்தக் கொடுக்காப்புளி வியாபாரத்தில் சுவாமிதாஸ் ஐயரவர்களுக்கு ஒரு பிரேமை. ‘ஆண்டவன் மனித வர்க்கத்திற்காகவே சகல ஜீவராசிகளையும் மரம் செடி கொடிகளையும் சிருஷ்டித்தார். அதைப் புறக்கணிப்பது மனித தர்மமல்ல. மேலும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும், தாழ்தப்பட்டவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் இதை மலிவாகக் கிடைக்கும்படி செய்வதினால் கிறிஸ்துவின் பிரியத்தைச் சம்பாதிப்பதற்கு வழி என்பது அவர் நியாயம். அவர்கள் தான் மோஷ சாம்ராஜ்யத்திற்குப் பாத்திரமானவர்கள். அவர்கள் இதற்காகத் திருட ஆரம்பித்துப் பாப மூட்டையைக் கட்டிக் கொள்ளாதபடி இவர் இந்தக் கைங்கர்யம் செய்து வருகிறார்.

கொடுக்காப்புளியில் உதிர்ந்து விழும் பழங்கள் சவரியாயிக்குக் குத்தகை. நாளைக்குக் கால் ரூபாய். காலையிலும் மாலையிலும் வந்து எடுத்துக்கொண்டு போக வேண்டியது. பணம் அன்றன்று கொடுத்து விட வேண்டியது. இதுதான் ஒப்பந்தம்.

இதனால் ஒரு ஏழை விதவைக்கு ஒரு வழி ஏற்பட்டிருக்கவில்லையா? சுவாமிதாஸ் ஐயரவர்கள் இதைவிடத் தனது தர்ம சிந்தனையைக் காட்ட வேறு என்ன செய்ய முடியும்?

திங்கட்கிழமை காலை.

சவரியாயி வரக் கொஞ்சம் நேரமாகிவிட்டது.

அந்தத் தெருவின் மற்றொரு கோடியில் பெர்னாண்டஸ் என்ற பிச்சைக்காரன் – பிறப்பினால் அல்ல; விதியின் விசித்திர விளையாட்டுக்களினால்; அகண்ட அறிவின் ஒரு குருட்டுப் போக்கினால். எடுத்த காரியம் எல்லாம் தவறியது. மனைவியும் பெண் குழந்தையின் பொறுப்பைத் தலையில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.

இரண்டு உயிர்களுக்கு உணவு தேடுவதற்கு வழியும் இல்லை. இதனால் பிச்சைக்காரன் வீட்டின் முன்வந்து கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக்கொண்டு நிற்பான். அது ஹிந்து வீடானாலும் சரி, புரொட்டஸ்டண்ட் அல்லது முகமதிய, எந்த வீடானாலும் சரி. கிடைக்காவிட்டால் முனங்கலும் முணுமுணுப்பும் கிடையாது. இந்த விஷயத்தில் அவன் குழந்தையும் – அதற்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கும் – அதுவும் வரும். அதற்கென்ன? உத்ஸாகமான சிட்டுக்குருவி.

உலகத்தின், தகப்பனின் கவலைகள் ஏதாவது தெரியுமா? எப்பொழுதும் சிரிப்புத்தான். பெர்னாண்டஸின் வாழ்க்கை இருளை நீக்க முயலும் ரோகிணி.

அன்று சுவாமிதாஸ் ஐயர் அவர்களுடைய வீட்டையடைந்தான். வந்தபொழுதெல்லாம் இரண்டணா என்பது சுவாமிதாஸ் அவர்களின் கணக்கு. அது கிடைக்காத நாள் கிடையாது. அதிலே பெர்னாண்டஸ்ஸிற்கு ஐயரவர்களின் மீது பாசம். ஏமாற்றுக்கார உலகத்தில் தப்பிப் பிறந்த தயாளு என்ற எண்ணம்.

“தோஸ்தரம் அம்மா! தோஸ்தரம் வருது ஆண்டவனே! என்றான்.

‘ஸ்தோத்திரம் என்ற வார்த்தை வராது. அதற்கென்ன? உள்ளத்தைத் திறந்து அன்பை வெளியிடும்பொழுது தப்பிதமாக இருந்தால் அன்பில்லாமல் போய்விடுமா?

சுவாமிதாஸ் ஐயர் சில்லறை எடுக்க வீட்டிற்குள் சென்றார்.

கூட வந்த குழந்தை. கொடுக்காப்புளிப் பழம் செக்கச் செவேலென்று அவளை அழைத்தன. ஓடிச்சென்று கிழிந்த பாவாடையில் அள்ளி அள்ளி நிரப்புகிறது.

வெளியே வந்து கொண்டிருந்த சுவாமிதாஸ் ஐயர் கண்டுவிட்டார். வந்துவிட்டது கோபம்.

“போடு கீழே! போடு கீழே! என்று கத்திக் கொண்டு வெளியே வந்தார்.

குழந்தை சிரித்துக்கொண்டு ஒரு பழத்தை வாயில் வைத்தது. அவ்வளவுதான். சுவாமிதாஸ் கையிலிருந்த தடிக் கம்பை எறிந்தார்.

பழத்துடன் குழந்தையின் ஆவியையும் பறித்துக்கொண்டு சற்றுதூரத்தில் சென்று விழுந்தது.

திக்பிரமை கொண்டவன்போல் நின்ற பெர்னாண்டஸ் திடீரென்று வெறிபிடித்தவன் போல் ஓடினான்.

குழந்தையிடமல்ல.

கீழே கிடந்த தடியை எடுத்தான்.

“போ நரகத்திற்கு, சைத்தானே! என்று கிழவர் சுவாமிதாஸ் மண்டையில் அடித்தான். கிழவரும் குழந்தையைத் தொடர்ந்தார்.

பிறகு…?

கைது செய்தார்கள். கிழவர் அடித்தது எதிர்பாராத விபத்தாம். பெர்னாண்டஸ் கொலைகாரனாம்!

அவனும் நியாயத்தின் மெதுவான போக்கினால் குழந்தையைத் தொடர்ந்து செல்லக் கொஞ்ச நாளாற்று. வேறு இடத்திலிருந்துதான் பிரயாணம்.

மணிக்கொடி, 09-09-1934