திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்த பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி திருவரம்பில் குடியிருந்தோம். அப்பாவின்அம்மாவும் தங்கையும் திருவட்டாரிலேயே கோயில் அரசமரத்தருகே மூதாதையர் வீட்டிலேயே இருந்தனர். நாங்கள் பரம்பரையாக திருவட்டார் கேசவப்பெருமாள் கோயில் ஊழியர்கள். அந்தக்காலத்தில் யானைக்கொட்டில் பொறுப்பில் இருந்ததாகச் சொல்வார்கள். விடுமுறை நாட்களில் அனேகமாக வாரம் மூன்றுமுறை திருவட்டார் போய் பாட்டியைப்பார்த்து பழங்கதைகள் பேசிவிட்டு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துவருவேன். இதெல்லாம் எழுபதுகளில். நான் அப்போது ஒல்லியான உடலும் பெரிய தலையும் கொண்ட பையன்.
ஒருநாள் அக்குளில் புத்தகங்களுடன், அதில் ஒன்றை வாசித்தபடியே திரும்பி நடந்தபோது ஒரு வாடகைக் கார் கோயில் வாசலில் கதகளிப்புரை முன் அரசமரத்தடியில் வந்து நின்றதைக் கண்டேன். திருவனந்தபுரம் டூரிஸ்டுகள் என்று நினைத்தேன். அன்றெல்லாம் ஆதிகேசவன் கோயிலுக்கு பக்தர்கள் வருவது மிக மிக அபூர்வம். சமீபத்தில் கோயில் தர்மகர்த்தாவும் பூசாரியும் சேர்ந்து ஆதிகேசவனின் நகைகளைக் கொள்ளையடித்தது செய்தியான பிறகுதான் தமிழ் நாட்டு வைணவர்கள் மத்தியில் கோயில் பிரபலமாகி பக்தர் வருகை அதிகரித்தது. ஒரு வைணவக்கோயிலருகே வாழ்ந்த எனக்கு எண்பதுகளில்தான் ஸ்ரீசூர்ணம் நாமம் அணிந்த நெற்றியை பார்க்க வாய்த்தது என்றால் புரிந்துகொள்ளமுடியும்தானே? எங்கள் கோயிலில் சந்தனம்தான் தருவார்கள். குட்டிப்போத்தி வியர்த்துவழிய சந்தனத்தை உரசி உரசி அரைப்பார்.
திருவனந்தபுரம் கார்தான். கரிய அம்பாசிடர். பின் கதவைத்திறந்து ஒரு கன்னங்கரியமனிதர் இறங்கி நின்றார். சோம்பல் முறித்து கைகளை விரித்து இடுப்பை ஒருமாதிரி சுழற்றி எதையோ ஓங்கி வீசுவது போல பாவனைசெய்தார். அவரைப்போன்ற நீளமான மனிதர்கள் அத்தகைய கார்களில் கால்களை மடக்கி வெகுநேரம் அமர்வது கஷ்டம்தான். பார்க்க எங்களூர் சாயலுடன் நல்ல ஆப்ரிக்கச் சாயலும் கலந்தவராகத் தெரிந்தார்.
அரசமரத்தையும் கோயிலின் முகப்பையும் அண்ணாந்து பார்த்தார். கோயிலுக்கு தமிழ்நாட்டுப்பாணி கல்கோபுரம் இல்லை. ஓடுவேய்ந்த உயரமான கேரளபாணி நாலம்பலம்தான். அங்கேபோல நிறைய படிகள். பக்கத்தில் இரட்டை ஆறுகள் ஓடுவதனால் கோயில் அடித்தளத்தை குன்றுபோல உயர்த்திக் கட்டியிருந்தனர்.
அவர் என்னைப்பார்த்து புன்னகைத்து கைகாட்டி அருகே அழைத்த்தார்.
ஆங்கிலத்தில் '' இது 'டிர்வாட்டர் டெம்பிள்' தானே ? '' என்றார்.
நான் ''ஆமாம்'' என்றேன். ''இதுதான் இந்தப்பகுதியின் முக்கியமான கோயில். '' என்றேன்.
நான் ஆங்கிலம்பேசியது அவருக்கு சற்று வியப்பளித்திருக்கக் கூடும். '' கோயிலுக்குள் நான் போய்ப் பார்க்க முடியுமா?'' என்று கேட்டார்
''ஏன் பார்க்கலாமே'' என்றேன் புரியாமல் . '' பதினொருமணிக்குத்தான் நடை சாத்துவது...''
''இல்லை என்னை 'ட்ரிவேன்ட்ரம்' கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை''
'' ஏன்?' என்றேன் .
'' நான் வெளிநாட்டுக்காரன் '' என்றார். '' நீ போய் கேட்டுவா...பணம் ஏதாவது தேவை என்றால்கூட கொடுத்துவிடலாம்....''
நான் குழப்பத்துடன் கோயிலுக்குள் போய் வாட்ச்மேன் சங்கு அண்ணாவிடம் செய்தியைச் சொன்னேன்.
''அந்தாள் ஹிந்துவாலே? '' என்றார் வெற்றிலையை அதக்கியபடி.
"வெளிநாட்டுக்காரன்...''
'' அங்க பாத்தியாலே? '' என்று சுட்டிக்காட்டினார் ' அஹிந்துக்களுக்கு ப்ரவேசனமில்லா ' என்ற மலையாள பலகை. '' ஹிந்துக்க மட்டும்தாம்ல உள்ளே போவமுடியும்....''
"ஹிந்துக்க இங்கே எங்க வாறாங்க? ''
"நாசமாப் போறானுக...நீ அந்த கறுப்பசாமிட்ட போய்ச் சொல்லுல..போல "
திரும்பவந்து கரிய மனிதரிடம் செய்தியைச்சொன்னேன். அவர் சற்று யோசித்தார்.
டிரைவர் மலையாள ஆங்கிலத்தில் " திரும்பிப்போகலாம். நான் சொன்னேன் இல்லையா? . தமிழ்நாட்டிலும் இதேதான் சட்டம்'' என்றார். அவர் மீண்டும் காரில் ஏறிக் கொண்டார். முகத்தில் பெரிய அளவில் உணர்ச்சிகள் ஏதும் இல்லை. கார் மீண்டும் ஸ்டார்ட் ஆனது
என்னிடம் அவர் " உள்ளே இருப்பது என்ன தெய்வம் ? '' என்றார்
"ஆதி கேசவன். '' என்றேன்
"விஷ்ணுவா ? படுத்திருக்கும் கடவுள் ? ''
"ஆமாம். மல்லாந்து படுத்திருக்கிறார். பெரிய சிலை. '' நான் கைகளை விரித்து சொல்ல முயன்று சரியாக விளக்க ஆங்கில அறிவு கைகொடுக்காததனால் சிறிது தூரம் ஓடி நீளத்தை தரையில் வரைந்து காட்டி '' பெரிய சிலை..ரொம்ப நீளம்..'' என்றேன்.
"கறுப்பா?''
"ரொம்ப"
''நிறையபேர் சொன்னார்கள் ''என்றார் அவர் ''பார்க்க மிகவும் ஆசைப்பட்டேன். திருவனந்தபுரத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னார்கள். இங்கே சிலசமயம் வாய்ப்பு கிடைக்கும் என்றார்கள். அதனால்தான் வந்தேன். பரவாயில்லை '' என்று பெருமூச்சுவிட்டார்.
''உங்கள்பேர் என்ன ? எந்த ஊர்?'' என்றேன் மிகth தாமதமாக, கார் அதற்குள் நகர ஆரம்பித்திருந்தது.
''என்னைத்தெரியாதா? '' என்று அவர் ஆச்சரியத்துடன் கேட்டார்.
"இல்லையே. ஏன்" என்றேன் ஆச்சரியத்துடன்.
அவர் டிரைவரை பார்த்தார். பிறகு ''என் பெயர் காளிச்சரண்.'' என்றார். சொன்னபின் என் முகத்தை கூர்ந்து பார்த்தார்.
''அப்படியா ?'' என்றேன் சாதாரணமாக. '' வெளிநாட்டுக்காரர் என்றீர்கள் ? வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள்தானே? ''
"நான் வெஸ்ட் இண்டீஸிலிருந்து வருகிறேன் . நீ என் படத்தைப் பார்த்ததே இல்லையா? ''
''இல்லை'' என் மூளை மின்னியது. '' உங்கள் பாஸ்போர்ட்டைத்தாருங்கள் '' என்று கேட்டு வாங்கிப்போய் அண்ணாவிடம் காட்டினேன்.
''அத எதுக்குடே நான் பாக்கணும்...? பர்மிசன் இல்லைண்ணாக்க இல்ல. நான்தான்ல இங்க ராஜா. நம்பி இல்ல. அவரு மூலஸ்தானத்துக்கு ராஜா... நான் கோபுரவாசலுக்கு ராஜா... ''
''அண்ணா, இவர் மேற்கு இந்தியாக்காரராக்கும்... . ஹிந்துதான். பேரைப்பாருங்க ''
அண்ணா எழுத்தெழுத்தாகப் படித்தார். ஆமாம் காளி சரணேதான். '' ஹிந்துண்ணாக்க வந்து பெருமாளை சேவிக்கலாம். தப்பில்லை. ஆனால் காளிபக்தனுங்க எல்லாம் ஏன் பெருமாள் கோயிலுக்குவரணும் ? கொல்லங்கோட்டுக்கோ கூட்டாலுமூட்டுக்கோ போய் ஒழியவேண்டியதுதானே ? '' குரல் மாற, '' காசுதருவானாலே? " என்றார்
"காசுபற்றி கவலையே இல்லைன்றான்''
''செரி அப்ப அவன உள்ளவிடு மக்கா..நம்பி கேட்டா நான் சொல்லுகேன் '' என்றார் அண்ணா.
நான் மூச்சுவாங்க ஓடிவந்து அவரிடம் அனுமதி கிடைத்துவிட்டது என்று சொன்னேன். காளிச்சரண் பரவசமடைந்து விட்டார். ''சட்டை போடக்கூடாது இல்லை? செருப்பையும் கழற்றவேண்டும் இல்லையா ? ''
"தொப்பியும் போடக்கூடாது"
"சரி சரி''
சட்டையைக் கழற்றியபோது அவர் உடல் அலங்காரமண்டபத்தில் நிற்கும் கன்னங்கரிய வீரபத்ரர் சிலைகளைப்போன்றே இருந்தது.
படிகளை வேகமாக ஏறினார். நான் பின்னால் ஓடினேன். உள்ளே போய் பயபக்தியுடன் கோயிலை ஏறிட்டுப்பார்த்தார்.
"இது என்ன?''
"அகல்விளக்குகள். திரி போட்டு தீபம் ஏற்றுவோம். ''
"எப்போது''
"வைகுண்ட ஏகாதசிக்கு.. அன்றைக்குதான் சொற்கவாசல் திறக்கும் "
பிராகாரம் வழியாக சுற்றிப் பார்த்தார். பலநூறு தீபபாலிகை சிலைகளில் ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு கூந்தல் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதை நான் காட்டினேன். ''ஆச்சரியம்தான்'' என்றார்
'' நகைகள் கூட .... ஒருநகை மீண்டும் வராது...''
"அப்படியா?''
ரிஷி ஒருவரின் ஆண்குறியை அவரே வாயில்வைத்திருக்கும் காட்சியை காளிச்சரண் பார்க்கக்கூடாது என விழைந்து நான் முன்னால் சென்றேன். அவர் வேறு மனநிலையில் இருந்தார்.
அலங்கார மண்டபத்தில் கண்விழித்து நடனநிலையில் ஓங்கி நின்ற கரிய சிலைகள் முன் மெய்மறந்து நின்றார் அவர் . நான் உற்சாகமாக '' இது வீரபத்ரன். இது பிட்சாடனர். இது கோபால கிருஷ்ணன். குழலூதுவதைப்பார்த்தீர்களா? பசு இல்லை. ஆனால் இருப்பதுபோல பாவனை...இது ரதி.. எதிரே இதுதான் மன்மதன்...'' என்று எனக்குத்தெரிந்தவரை விளக்கினேன்
'' கடவுளே என்ன ஒரு கருமை ! '' என்று வியந்தார். '' கரியசாயம் அடித்திருக்கிறார்களா?''என்று தடவிப்பார்த்தார்.
"கருங்கல்சிலை. அதுதான்'' என்றேன் '' இதுதான் ரதி. தேவலோகத்திலேயே இவள்தான் அழகு ! நகத்தைப் பார்த்தீர்களா? ''
"என்ன ஒரு கருமை...'' என்றார்.
" உள்ளே பெருமாள் இதைவிட கருமை. நல்ல மைநிறம். ''
''உள்ளே போகலாமா? ''
" அதுதான் போகச்சொல்லிவிட்டார்களே . அது சங்கு அண்ணா. எனக்கு அவர் அண்ணாதான். சொந்தத்தில் "
"இந்தக் கோயில் எத்தனைவருடம் பழமை உடையது?"
"இதை நம்மாழ்வார் பாடியிருக்கிறார்"
"யார் அவர்?"
"நம்மாழ்வார். ரொம்பப் பழைய காலம். ஐந்தாம் நூற்றாண்டு... "
"அப்படியென்றால் ?"
''ஆயிரத்து ஐந்நூறு வருடம் முன்பு...''
அவர் நின்று என்னை நோக்கினார். '' இதற்கு ஆதாரம் இருக்கிறதா? ''
" நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. உண்மையில் அதற்கு முன்பே இந்தக் கோயில் இருக்கிறது... ரொம்பச் சின்ன கோயிலாக இருந்திருக்கிறது. ஓலைக்கூரை போட்டிருந்தார்களாம். அதற்கு முன்னால் கூரையே இல்லாமல்..... ''
அதற்குள் மாதவன்நாயர் நொண்டிக்கால்களுடன் விரைந்துவந்தார். காளிச்சரணைப் பார்த்ததும் என்னிடம் '' அமெரிக்காக்காரன்னு சொன்னப்ப வெள்ளைக்காரனா இருப்பான்னு நினைச்சேன்...இவன்கிட்ட பணமிருக்காடே ? '' என்றார். நான் அவர் வரவை விரும்பாததை முகத்தில் காட்டினேன்.
''துரை, இதாக்கும் ஆதிகேசவப்பெருமாள் கோயில். திருவிதாங்கூர் ராஜாக்களுக்க குலதெய்வம் இதுதான். திருவனந்தபுரம்கோயிலுக்கு இதுதான் ஒரிஜினல் பாத்துக்கிடுங்க. '' என்றபடி பின்னால் வந்தார்
''அவருக்கு தமிழ் தெரியாது'' என்றேன் கடுப்புடன்
''நீ இங்க்லீஷ்லே சொல்லுடே , எளவு, மெட்றிக் பாஸ் ஆனவன் தானே? ''
''என்ன சொல்கிறார்?''
நான் அதை குத்துமதிப்பாக ஆங்கிலத்தில் சொன்னேன். அவர் அப்படியா என தலையை ஆட்டினார்
"துரை, கேட்டேளா, இங்கேயுள்ள மூர்த்தி மலந்து கைவிரிச்சு படுத்திருக்கு. இதுக்கு சாஸ்திரத்திலே மகாயோக நிலைண்ணாக்கும் பேரு.... மகாயோகநிலைண்ணாக்க வேற ஒண்ணுமே இல்லாத பெருநிலைண்ணு அர்த்தம் கேட்டுக்கிடுங்க. அப்ப தெய்வங்கள் பொறக்கேல்ல. பிரபஞ்சமும் பொறக்கல்ல. காலம்கூட உண்டாகல்லண்ணாக்க வேற என்ன? விஷ்ணுமட்டும்தான் இருந்தாரு. வேறு ஒண்ணுமே இல்ல ''
நான் சொல்லிமுடிக்க நேரமாயிற்று. அவர் என்னையே கூர்ந்து நோக்கி நின்றது எனக்கு சஞ்சலம் அளிக்கவே கண்களை திருப்பிக் கொண்டேன்.
'' பாஷை இல்ல. சித்தம் இல்ல. சித்தத்துக்கு அப்பால் உள்ள துரியம் இல்ல. துரியாதீதமும் இல்ல. விஷ்ணுஇல்லாம வேற ஒண்ணுமே இல்ல. அப்படிண்ணாக்க விஷ்ணுவ ஆரு காணுயது? அவரு எப்டி இருந்தாரு? அதுனால அவரும் சூனியவடிவமாக இருந்தார்..''
''சூனியம் என்றால்? '' என்றார் அவர்
"இல்லாமை . இருட்டு '' என்று நான் சொன்னேன். ''இருப்பது போலத்தெரியும் . கைகளை நீட்டிப்பார்த்தால் தொட முடியாது..''
"என்னடே சொல்லுதே துரைக்கிட்டே? "
நான் பதில் சொல்லவில்லை. உள்ளே சென்றோம். எண்ணைமணம் அடிக்கும் உள்மண்டபம். கரிய வழவழப்புடன் சுவர்கள் தூண்கள். அடுக்குவிளக்கும் தூக்குவிளக்கும் செவ்விதழ்கள் மலர்ந்து அசைவின்றி நின்றன.
''இதாக்கும் கருவறை. அறுபதடி நீளம். மூணுவாசல்.... '' என்றபடி நாயர் உள்ளே அழைத்துச்சென்றார். '' காலம் இல்லேண்ணா எல்லாமே சூனியம்தானே? சூனியத்திலே காலம் பிறந்துவருது. காலத்துக்க பீஜம். கருத்துளி . அதையாக்கும் பெருமாள் கைவிரலில முத்திரையாக் காட்டுதாரு.... நம்பி தூக்கு வெளக்க ஏத்துங்க...துரை வந்திருக்கான்லே"
"இவனா தொர? மாட்டுக்காரன்போலல்லாவே இருக்கான்...?''
"காசிருக்கவன் துரை. உமக்கென்னவே ? தொறவும்''
" வெளக்குக்கு எண்ண எவன் குடுப்பான்? ஆழாக்கு எண்ண . அதில அம்பது மூர்த்திக்கு வெளக்குவைக்கணும். வெளக்கு அணைஞ்சா என்மேல வந்து கேறுவானுக டிரஸ்டிமாருக....''
"எங்கிட்ட ஏம்வே சலம்புதீரு? சாமிட்டே சொல்லும்?''
"சாமிட்டயா? நல்ல சாமி. கண்ணமூடி அவரு பாட்டுக்கு ஒறங்குதாரு...''
விளக்கொளியில் ஆதிகேசவன் முன் இருந்த ஐம்பொன்சிலைகள் ஒளிவிட்டன.
"எங்கே ஆடிகேசவ்? ''
"பின்னால்....சிலைக்குப் பின்னால்''
"எங்கே?''
"இதோ சிலைக்குப்பின்னால்.இருட்டில்.கருப்பாக...பாருங்கள்...''
"எனக்குத்தெரியவில்லை"
"இதோ-''
அதற்குள் அவர் கண்டு விட்டிருந்தார். வாய் திறந்தபடி நின்றுவிட்டது. இருளை உருக்கி வார்த்து வடித்தது போல நான்கடி உயரத்தில் அறை நிறைத்து படுத்திருந்த மாபெரும் திருமேனி.
''பைசாக்கு பிரச்சினையே இல்லெண்ணு சங்குகிட்ட சொல்லியிருக்கான்வே நம்பி. மூணுவாசலையும் தெறந்து காட்டும். பாத்து அவனாவது சொற்கத்துக்கு போட்டும்...''
"காசுள்ளவன் எப்பவுமே அங்கதானேவே இருக்கான் ? ''
கருவறை முன் அவர் கைகூப்பி நின்றார். போத்திநம்பி மூன்றுவாசல்களையும் திறந்தார். மல்லாந்த நாற்பதடி நீளமுள்ள சிலை. சாலிக்கிராமங்களை அரைத்து பாஷாணமாக்கிச் செய்யப்பட்டது. முதல் வாசலில் மிகப்பெரிய கழலணிந்த பெரும்பாதங்கள். இரண்டாவது வாசலில் கௌஸ்துபம் ஒளிர்ந்த மார்பும் வயிறும். மூன்றாவது வாசலில் ஒளிர்ந்த பொற்கிரீடம் சூடிய கன்னங்கரிய பெருமுகம் மூடிய கண்களுடன் . போத்தி தலைக்குமேல் சிற்றகலைத் தூக்கி காட்டினார். ஒளி கரிய கன்னங்கரிய கன்னங்களில் கரிய திரவம்போல வழிந்தது.
அப்படியே பிரமைபிடித்து போய் நின்றார். கனவுக்குள் விரியும் மாபெரும் புன்னகை போலிருந்தது ஆதிகேசவனின் இதழ்விரிவு. பயங்கரமும் சாந்தியும் ஒன்றாய்கூடிய அறிநகை.
அவர் சொல்லிழந்து போனார். குழம்பியவர் போல, அல்லது அஞ்சியவர் போல சும்மாவே நின்றிருந்தார். நம்பி வெளியே வந்ததும் நூறு ரூபாயை தட்டில் வைத்துவிட்டு ஒருசொல்கூடப் பேசாமல் திரும்பி நடந்தார். அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்து நான் கூடவே ஓடினேன். அவர் நேராக கோயிலைவிட்டு வெளியே வந்துவிட்டார்.
மாதவன்நாயர் விந்தியபடி பின்னால் ஓடி " விஷ்ணுதான் பிரபஞ்சம். அவன் பிரபஞ்ச ரூபன் '' என்றார்.
''துரியம் என்றால் என்ன?''
" நினைப்பு. நினைத்து நினைத்து போய் ஒன்றுமே இல்லாமல் ஆகுமே அது... ''
நான் தட்டுத்தடுமாறி மொழிபெயர்த்தேன்.
''கையில காசிலேண்ணாக்க அது நல்லாத்தெரியும்ணு சொல்லுடே ''
அவர் பெருமூச்சுடன் படிகளை இறங்கி மீண்டும் முற்றத்துக்குவந்தார். அரசமரம் இலைகளை சிலுசிலுத்தபடி நின்றது. அதை ஏறிட்டுப்பார்த்தார்.
எங்கள் கோயிலைப் பாராட்டி ஏதாவது சொல்வார் என்று எண்ணினேன். டிரைவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்து எல்லாருக்கும் கொடுக்கச்சொல்லிவிட்டு காரில் ஏறினார். எனக்கு பணம் தரக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ளுமளவு நுட்பமான மனிதராக இருந்தார்.
நான் சற்று ஆற்றாமையுடன் கார்க்கதவைப்பற்றியபடி '' எங்கள் கடவுளைப்பற்றி என்ன சொல்கிறீர்கள் ? " என்று கேட்டேன்.
'' இதுதான் கடவுள். மனிதர்களின் கடவுள். '' என்றார் அவர். முகத்தை கைகளால் மீண்டும் மீண்டும் தேய்த்தார். டிரைவர் வந்து ஏறிக் கொண்டார். அவர் கையசைக்க கார் கிளம்பியது. '' என்ன ஒரு நிறம் ! எத்தனை கருமை ! '' வண்டி சற்று நகர்ந்தது .
அவர் எட்டிப்பார்த்து ''என்னை உண்மையிலேயே உனக்குத் தெரியாதா? ''என்றார்
''இல்லையே... '' என்றேன். அவர் விளையாடுகிறார் என்றுதான் எண்ணினேன்.
''உனக்கு கிரிக்கெட் தெரியுமா?''
"தெரியாது"
'அதுசரி '' . புன்னகையுடன் கார் விலகிச் சென்றது.
அவர் அன்று கண்டதை பத்துவருடம் கழித்துதான் நான் கண்டேன்.
-------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக