26/06/2010

வடிவ அமைதி - காஞ்சனா தாமோதரன்

அந்தப் பெண் கண்ணாடி முன் நின்றாள். திறந்த 'ப ' வடிவிலான கண்ணாடியில் வெவ்வேறு கோணங்களில் மூன்று பிம்பங்கள் நிறைந்தன. உடம்பைக் கவ்விப் பிடிக்கும் 'ஸ்பான்டெக்ஸ் ' துணியினாலான மேல் சட்டையை இன்னும் கொஞ்சம் கீழே இழுத்து விட்டாள். முன்னும் பின்னுமாய்த் திரும்பித் திரும்பித் தன்னைப் பார்த்துக் கொண்டாள். தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கினாள். முகத்தில் அதிருப்தி. மீண்டும் உடை மாற்றும் அறைகளுள் திரும்பிச் சென்றாள். அவள் அந்தச் சட்டையை வாங்கப் போவதில்லை என்று தோன்றியது.



மஞ்சு இன்னும் உள்ளேதான் இருக்கிறாள். அந்தத் துணிக்கடையையே வாங்கி விடுபவள் போல் இரண்டு கைகளாலும் துணிகளை அள்ளிக் கொண்டு, இந்த அறைகளில் நுழைந்தவள்தான். இன்னும் வெளியே வரக் காணோம். அறைக்குள்ளேயும் கண்ணாடிகள் உண்டு. ஒவ்வொன்றாய்ப் போட்டுப் பார்த்துப் பிடிக்கிறது என்று தீர்மானிக்க நேரமாகும்தான். அல்லது அதிருப்தியுடன் ஒதுக்கவும்.

என்னையும் அறியாமல் ஒரு பெருமூச்சு. இந்த இளம் பதின்ம வயதுப் பெண்களுக்கு எப்போதும் அதிருப்தி. எரிச்சல். கோபம். என்ன வயதோ. உடலில் 'ஹார்மோன் ' மாற்றங்கள்தான் காரணம் என்கிறார்கள். இயல்பு என்கிறார்கள். எனக்கும் இந்த வயது வந்து போனதாய் ஞாபகம் இருக்கிறது. இந்த அளவு கோப தாபங்கள் இருந்ததாய் நினைவில்லை. 'ஹார்மோன் ' இல்லாமலேயே நான் வளர்ந்து விட்டேனா. மஞ்சு இதற்கு வேறு காரணம் கொடுப்பாள். நான் வளர்ந்த காலமும் நாடும் வேறு என்பாள். நான் ஒடுக்கப்பட்டு வளர்ந்தவள் என்பாள். உணர்வுகளை அங்கீகரிக்காத கோழை என்பாள். அல்லது உணர்வுகளே இல்லாத மரப்பாச்சியாய் இருந்திருக்கலாம் என்று சிரிப்பாள்.

அவள் சிரித்துப் பார்த்து நீண்ட காலமாயிற்று. அதாவது, என்னிடமும் அவரிடமும் அவள் சிரித்துப் பார்த்து நீண்ட காலமாயிற்று. சினேகிதிகளோடு இருக்கையில் நடப்பதே வேறு. நேற்று சாயந்தரம் மாதிரி. பள்ளிப்பிள்ளைகள் எல்லாம் வழக்கம் போல் தங்கள் கார்களுக்காகக் காத்து நிற்கிறார்கள். கார்களின் வரிசையில் நானும் மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கிறேன். மஞ்சுவும் அவள் இரண்டு சினேகிதிகளும் சற்றுத் தொலைவில் தெரிகிறார்கள். என் மஞ்சுவா அது. பெரிய வெள்ளிக் காது வளையங்களில் சூரியனின் தங்கம் பட்டுத் தெறிக்கும் படி தலைமுடியை அள்ளிப் பின்னால் வீசியவாறு சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டு. அவளும் அவள் சினேகிதிகளும் ஏதோ 'பாப் ' இசைக்குழுவினர் போல்.... உயரம், தலை அலங்காரம், கறுப்பு லெதர் கோட், காது வளையங்கள், அதிக சாயப்பூச்சு இல்லாத ரசனையுள்ள ஒப்பனை, இத்யாதி. காருக்குள் ஏறியதும் சட்டென்று மெளனமாய் உறைந்து போனாள் மஞ்சு.

என்னால் இந்த மெளனத்தைத்தான் தாங்க முடியவில்லை. இல்லை. மெளனத்தை மட்டும் இல்லை. சில சமயங்களில் அவள் சொல்லும் கடுமையான சொற்களும்தான். புண்படுத்துகிறாள். எவ்வளவு நுணுக்கத்துடன். என் மெல்லுணர்வுகளை முழுதுமாய் அறிந்ததால் வரும் நுணுக்கத்துடன். வலிக்கிறது. 'என்னுள்ளிருந்த போதும் உதைத்தவள் நீ '. பழங்கால வசனம் என்று ஒதுக்கித் தள்ளுகிறேன்.

தாயிடமிருந்து மகள் விலகித் தன்னைத் தனிப்படுத்திக் கொள்ளுதல். என் சினேகிதி சொல்கிறாள். ஏன் விலக வேண்டும். சுய அடையாளம் தேடும் வயது என்கிறாள் சினேகிதி. சுய அடையாளம். தனித்துவம். விலை கொடுப்பது நான் மட்டும்தானே. இல்லை, நீ புண்படும்போது அவளும் வலியை உணர்கிறாள், ஆனால் காண்பிக்க மாட்டாள் என்கிறாள் சினேகிதி. மனோதத்துவத்தில் பி.ஹெச்டி. வாங்கிய இவளுக்கு என் உணர்ச்சிகளை இனம் காட்டத் தெரிகிறது. உணரத் தெரியுமா. என் இயலாமை இவள் மேல் ஏன் எரிச்சலாக மாறுகிறது. தப்பு. அடக்கிக் கொள்கிறேன்.

மஞ்சு உடைமாற்றும் அறைகளிலிருந்து வெளியே வருகிறாள். வெறுங்கையுடன்.

--உள்ளே கொண்டு போனதில் ஒன்றுமே பிடிக்கவில்லையா, மஞ்சு ?

--வீட்டுக்குப் போகலாம். கறுப்பும் வெள்ளையுமான பளிங்குத் தரையைப் பார்த்துப் பல்லைக் கடித்துக் கொண்டே, உதடுகள் கொஞ்சம் கூட அசையாமல், மஞ்சு சொல்கிறாள்.

காருக்குள் இறுக்கம். மஞ்சுவுக்குப் பிடித்த 'ன்ஸின்க் ஸி.டி.யைப் போடலாமா. வேண்டாம். என்ன நடந்தது இவளுக்கு. போக்குவரத்து விளக்கின் சிவப்பில், பின் ஸீட்டில் இருந்தவளைப் பார்க்கிறேன். 'திக் 'கென்கிறது. கண்ணில் நீர். மெளனமாய்.

--மஞ்சு.... குழந்தையென்ற தொனியில் பேசினால் அவளுக்குப் பிடிக்காது. என்னுள் உருகி வழிந்த உணர்வுகள் குரலில் தெரியாமல் பேசத் தொடங்குகிறேன்.

--மஞ்சு, என்ன ஆயிற்று ?

--என்னிடம் யாரும் பேச வேண்டாம். ரோட்டைப் பார்த்து ஒழுங்காய்க் காரை ஓட்டினால் போதும்.

இவளுடைய சுயமரியாதையைக் கெடுக்கவோ, விபத்துக்குள்ளாகவோ எனக்கும் விருப்பமில்லைதான். ஆனாலும், தாரை தாரையாய்க் கண்ணீர் வடிப்பவளிடம் ஏனென்று கேட்கக் கூட உரிமையில்லாமல் போயிற்றா. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொள்கிறேன்.

--மஞ்சு, சொல்வதும் சொல்லாததும் உன் விருப்பம். சரி....

சாலை மேல் கார்ச் சக்கரங்கள் தேயும் சப்தம் மட்டும் கேட்பது வித்தியாசமாய்த் தெரிகிறது, எப்போதுமிருக்கும் இசை இல்லாததால். என் பதற்றம் சிறிது அடங்கியிருக்கிறது. ஏதோ ஓர் அமைதி என்னுள் கவிய ஆரம்பிக்கிறது. மனம் வினோதமானது. வலியை முதலில் மரக்கச் செய்கிறது. பின் அதைக் குணப்படுத்துவது எப்படியென்று யோசிக்கிறது. 'அறுவைச் சிகிச்சை கூட இப்படித்தான் ' என்கிறது என்னுள் ஒரு சின்னக் குரல்.

--மாம்....

மஞ்சு அழுததே மறந்ததாய்த் தெரியும் தருணத்தில் அவள் ஆரம்பிக்கிறாள். பிறகு நிறுத்துகிறாள்.

சரி, பேச்சு வார்த்தை தொடங்குகிறது. அளவுக்கதிகமான ஆர்வமோ, அவசரமோ, அரவணைப்போ காட்டினால் பேச்சு நின்று போகும் சாத்தியமிருக்கிறது. நிதானம் தேவை. மூச்சை ஆழ உள்ளிழுத்து நிதானமாய் வெளியே விடுகிறேன். என் தொழில் நிமித்தமாய் எத்தனையோ சங்கடங்களைச் சுளுவாகச் சமாளிக்கிறேன், ஒவ்வொரு நாளும்; இந்தப் பதினான்கு வயது நண்டைச் சமாளிக்க முடியவில்லை. அவளாகவே பேச்சைத் தொடரட்டும் என்று காத்திருக்கிறேன்.

--மாம், இன்றைக்கு ஒன்றுமே வாங்கவில்லை.

தெரியும், கண்மணி. ஏனென்றுதானே கேட்டேன். நீயாகவே சொல். நான் ஒன்றும் பேசப் போவதில்லை. நீதான் பேச வேண்டாமென்று ஆணை போட்டிருக்கிறாயே.

--ஏன் ஒன்றுமே வாங்கவில்லை என்று தெரியுமா, மாம் ? குரல் விளிம்பில் அழுகை துளிர்க்கிறது.

தெரியாது. ஆனால் பொறுமையுடன் காத்திருக்கிறேன். சொல்.

--சரியான அளவு இல்லை. குரலில் துளிர்த்த அழுகை விரிந்து பரவ ஆரம்பிக்கிறது.

பூ, இவ்வளவுதானா. இதற்கா இந்தக் கோபம், இந்த அழுகை. பிரச்சினை சரியாகப் புரிந்தால் தீர்வு எவ்வளவு சுலபம்.

--மஞ்சு, இந்தக் கடையில் உன் அளவு உடைகள் விற்றுப் போயிருக்கலாம். இதே கடையின் கிளை வடக்குத் தெருவில் இருக்கிறதே, அங்கே போகலாமா ?

--என்றைக்குத்தான் நான் சொல்வது உனக்குப் புரிந்திருக்கிறது, மாம் ?

அடக்கி வைத்திருந்த அழுகை பெருங்குரலில் பொங்கி வெடிக்கிறது. வார்த்தைகள் ஒன்றின் மேலொன்றாய்ப் புரளுகின்றன. எனக்கும் இவள் வயதாயிருந்தாலென்ன. என்னுள் பொங்கி வரும் துக்கத்தை நான் இப்படி அடக்க வேண்டியிருக்காது. தேவையில்லாமல் கார் வைப்பர்களை இயக்குகிறேன். என் கவனத்தைத் திருப்பத்தான்.

--மாம், என்ன செய்கிறாய் ? சும்மா வைப்பரைப் போட்டால் உன்னை எல்லாரும் பைத்தியம் என்று நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்.

காரணத்தைச் சொல்லாமல், அநேக நேரங்களில் காரணமே இல்லாமல், பல்லைக் கடித்துக் கொண்டு, அழுகையும் கோபமுமாய்த் தாயிடம் வார்த்தைகளை விசிறியடிக்கும் நீ. எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கும் நான். நம் இருவரில் யார் பைத்தியம், கண்மணி.

மீண்டும் மெளனம்.

பேசத் தொடங்கியவளை நான்தான் மெளனியாக்கி விட்டேனோ. இன்னும் கொஞ்சம் பொறுமையாய் இருந்திருக்கலாம். இப்போது அந்த வைப்பரைப் போடுவதற்கு அவசியமென்ன. அவள் சொன்னது சரியாக இருக்கலாம். நான்தான் பைத்தியம்.

பின் சீட்டிலிருந்து விம்மல்கள். பாவமாயிருக்கிறது. மனம் இன்னும் கொஞ்சம் குழைகிறது.

--மஞ்சு, தயவு செய்து என்னிடம் பேசுகிறாயா ?

--ஏன் ஒரு அளவும் சரியில்லை தெரியுமா, மாம் ? என் உடம்பு அப்படி. உப்பிப் போய். கோரமாய். அழகில்லாமல். பார்க்கச் சகிக்காமல். எனக்கே சகிக்க முடியவில்லையே, மற்றவர்களுக்கு......உயிரை விடலாம் போலிருக்கிறது....

விம்மல்களும் வார்த்தைகளும் பெரிது பெரிதாய் வெடிக்கின்றன.

உன்னை நீயே ஏன் இப்படி வார்த்தைகளால் குத்திக், கிழித்து, வதைத்துக் கொள்கிறாய், கண்மணி. கூடவே என் இதயத்தையும்.

--மஞ்சு, உன் உடல் நீ நினைப்பது போல் இல்லை.

--மாம், என் உடல் நான் விரும்புவது மாதிரி இல்லை.

--என் கண்ணுக்கு நீ அழகாய்த் தெரிகிறாய். சொன்ன பிறகு நினைத்துக் கொள்கிறேன், அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. வெற்று ஆறுதல் வார்த்தையாகத் தெரியும்.

--மாம், என் ஆறுதலுக்காகச் சும்மா பொய் சொல்லாதே. அலிஸ்ஸாவைப் பார்த்தாயா ? எவ்வளவு ஒல்லியாய், அழகாய்.... என்னை மாதிரியா..... அழுகை பலக்கிறது.

--அலிஸ்ஸாவை மாதிரிதான் நீயும் இருப்பதாய்த் தெரிகிறது எனக்கு.

--மாம், உனக்கு ஒன்றும் தெரியாது. அலிஸ்ஸாவும் நானும் ஒரே மாதிரியா ? இடுப்பிலும், தொடையிலும், பின்புறத்திலும் பிதுங்கிப் பிதுங்கி வழியும் வளைவுகள் அவளுக்கு உண்டா ? நேர்கோடு மாதிரி எப்படி இருக்கிறாள் பார். உனக்கு என்னதான் தெரியும் ?

அழுகை குறைந்திருக்கிறது. எனக்கு ஒன்றும் தெரியாததாய்ச் சொல்வதும், உன் துயரத்தை என் மீது கோபமாய் மாற்றுவதும் உனக்கு ஓரளவேனும் அமைதி தருகிறதா. சரி, கோபப்பட்டுக் கொள்.

உன் காயத்தின் ஆழம் புரிகிறது. என் வலி உனக்குப் புரியாது. ஏதோ ஓர் இலட்சிய உடலுடன் உன் உடலை ஒப்பிட்டு, உன் சுயபிம்பத்தைத் தப்பாகக் கணிக்கிறாய். சுயமரியாதையைக் குறைத்துக் கொள்கிறாய். இலட்சிய உடல் பிம்பத்தை உன் தலைக்குள் திணிப்பது யார், எப்படி, எதனால் என்பது உனக்கு முழுதாய்ப் புரிகிறதா. நான் சொன்னாலும் நீ காது கொடுத்துக் கேட்பாயா, கண்மணி.

--வனில்லா மில்க்ஷேக் இரண்டு. கார்ச் சன்னல் கண்ணாடியை இறக்கி விட்டு மேக்டானல்ட்ஸ்-காரியின் நட்பான புன்னகையுடன் வாங்கிக் கொள்கிறேன். உள்ளே ஏதோ குமுறுவதை அடுத்தவளிடம் காட்டி ஆகப் போவதென்ன.

--மாம், நான் சொன்னபடி நேராய் வீட்டுக்குப் போகாமல் மில்க்ஷேக் வாங்கிக் கொண்டிருக்கிறாய். அந்த இரண்டாவது மில்க்ஷேக் யாருக்காம் ?

--மாம், அந்த மில்க்ஷேக்கை நான் தொடப் போவதில்லை.

ஒன்றும் பேசாமல் காரை ஓட்டுகிறேன். இவளால் மட்டும்தான் மெளன விளையாட்டு ஆட முடியுமா என்ன. ஏரிக்கரையில் நிறுத்துகிறேன். ஏரியைப் பார்த்துக் கொண்டே நிதானமாய் என் மில்க்ஷேக்கை ருசி பார்க்கிறேன்.

இளவசந்தத்தின் இதமான வெயில் காருக்குள் கதகதக்கிறது. டாக்வுட் மரங்கள் பெரிய வெள்ளைப் பூங்கொத்துக்களாய்ச் சுற்றிலும் நிற்கின்றன. இடையே, செந்தாமரை போன்ற மக்னோலியா பூத்த மரங்கள். பூக்களின் அடியே தம் பிறப்பை எதிர்நோக்கிக் சுருண்டிருக்கும் இலை மொட்டுகள். ஏரிச் சருமத்தின் ஒளிச்சுருக்கங்கள் மினுங்கி நெளிகின்றன. தங்க நிற நாய்க்குட்டி ஒன்று நீருக்கருகே ஓடுகிறது. பின்னாலேயே அதன் சொந்தக்காரி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடுகிறாள்.

கார்க் கதவு அறைந்து சார்த்தும் சப்தம் இந்த உலகத்துக்கு என்னை மீட்கிறது. மஞ்சுதான். முன்சீட்டில் என்னருகே வந்து உட்கார்ந்து கொள்கிறாள். ஏரியையே பார்க்கிறாள். இருவருக்குமிடையே 'கப் ஹோல்டரில் ' உருகிக் கொண்டிருக்கும் இரண்டாவது மில்க் ஷேக்கை எடுத்து ஸ்ட்ரா வழியே உறிஞ்ச ஆரம்பிக்கிறாள்.

--மாம், என்னைக் குழந்தை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். மஞ்சுவின் தன்மானம் காக்கும் முயற்சி ஆரம்பமாகிறது.

--மஞ்சு, நீ குழந்தையாகவே இருந்தாலென்ன என்றுதான் நினைக்கிறேன்.

--இல்லை, அழுகிணிக் குழந்தையென்று நினைத்துக் கொள்ளாதே. உன்னிடம் ஒன்று கேட்கலாமா ?

--ம்ம்ம்.

--நீ மட்டும் எப்படி இவ்வளவு அழகாய் இருக்கிறாய், மாம் ?

என் மகள் கண்ணுக்கு நான் அழகாய்த் தெரிகிறேனா. அல்ப சந்தோஷம். ஆனால், இவள் எந்த அர்த்தத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறாள். எனக்குப் புகழ்மாலை போடும் மனநிலையில் இவள் இல்லையே.

--மஞ்சு, ஏன் இப்படிக் கேட்கிறாய் ?

--அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் மேரியின் அம்மாவுடன் நீ பேசிக் கொண்டிருந்தாயே. தன் அம்மா உன்னை மாதிரி 'கூல் ' ஆக இல்லையென்று மேரி சொன்னாள்.

இந்தப் பெண்கள் தங்களை ஒப்பிடுவது போதாதென்று, தங்கள் அம்மாமாரையும் ஒப்பிடுகிறார்களா.

-- 'கூல் ' என்றால் அழகும், நாகரீகத் தோற்றமும் மட்டுமில்லையே, மஞ்சு.

--நீ பார்க்க அழகாய் இருப்பதாக பல சினேகிதிகள் சொல்கிறார்கள், மாம்.

--உண்மையைச் சொல்லட்டுமா ? நான் அழகில்லை, மஞ்சு. பழகுவதற்கு நல்ல சுபாவமென்று உன் அப்பாவிலிருந்து பலரும் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் முக்கியம், இல்லையா ?

நான் அழகில்லை. உனக்குப் போட்டியில்லை, கண்மணி. இந்தக் கோணத்தில் ஏன் என்னை நீ பார்க்கிறாய் ?

--உனக்கு ஞாபமிருக்கிறதா, மாம் ? போன வருடம் நியூ யார்க் போனோமே. டாடிக்கு வேலை நெருக்கடி. நீயும் நானும் மட்டும் ப்ராட்வேயில் 'ஃபான்டம் ஆஃப் தி ஆப்பரா ' பார்க்கப் போனோம். நாடக இடைவேளை போது உன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் உன்னிடம் எவ்வளவு நட்பாக நடந்து கொண்டான். கடைசியில் தன் 'பிஸினஸ் கார்ட் ' எல்லாம் கூடக் கொடுத்தானே.

இவள் தொனி நெருடியது. சாபத்தால் கல்லாய்ச் சமைவது போலவும், வானத்து நட்சத்திரப் பதவி பறிபோனது போலவும், தீக்குள் புகுந்து நடப்பது போலவும், இன்னும் பலவற்றையும் அந்த ஒரு கணத்தில் உணர்ந்தேன். பின் உலுக்கி விழித்துக் கொண்டேன். சிறு வயதுத் திணிப்புகளும் பயமுறுத்தல்களும் ஆழ்மன மூலைகளில் பதுங்கிக் கிடக்கத்தான் செய்யும் போல. எவ்வளவுதான் அறிந்து தெளிந்து உடைத்து எறிந்தாலும். அது கிடக்கட்டும். இந்த நண்டு என்னைச் சீண்டிப் பார்க்கிறது. மகளைத் தோழி போல் நடத்தி, வெளிப்படையாய்ப் பேசச் சுதந்திரம் கொடுத்ததால் வந்த வினை. 'மனதுக்குள்ளேயே வெந்து வெறுப்பதற்குப் பதில் இப்படிப் பேசுவதே தேவலை. தோழியாகவே இருக்கட்டும் '-- உள்மனது. நிதானமாகவே தொடர்கிறேன்.

--மஞ்சு, பல இடங்களில், பல பேருடனும் நட்பாகப் பழகுகிறோம். அதற்கென்ன ?

--ஒன்றுமில்லை, மாம். அவன் உன்னிடம் பேசிய போது அவன் கண்ணில் தேவைக்கு அதிகமான ஒளி. நீ இதையெல்லாம் கவனிப்பதே இல்லை. ஆனால், எனக்குத் தெரியும். எல்லாரையும் உன்னால் கவர்ந்து இழுக்க முடிகிறது. இயல்பாகவே. உனக்கு எப்படி என் உணர்வுகள் புரிய முடியும் ?

எந்த உணர்வுகள். தன் உடலமைப்பை வெறுப்பதா. தாயை விட்டு விலகித் தனிக்கொடி நாட்டும் அதே சமயத்தில், அந்தத் தாயைப் போல் ஏன் தானில்லை என்று ஏங்குவதா.

--மஞ்சு, நானும் ஒரு காலத்தில் உன் வயதுக்காரியாய் இருந்தேன், உன் உணர்வுகள் ஓரளவாவது எனக்கும் புரியும் என்பதை நம்புவாயா ?

--மாம், நீ வளர்ந்த விதம் வேறு. நாடு வேறு. காலம் வேறு.

வழக்கம் போல் மந்திரம் பாடுகிறாள். என் பொறுமைக்கும் எல்லை உண்டு.

--ஆமாம், மஞ்சு. நான் வளர்ந்த விதமும், நாடும், காலமும் வேறுதான். பன்னிரண்டு வயதில், இரத்தப் போக்கைப் பார்த்ததும் ஒன்றும் புரியாமல் நான் இறந்து கொண்டிருப்பதாய்ப் பயந்தவள் நான்; நீ இதைக் கேட்டு எப்படிச் சிரித்தாய்! உன் வயதில், என் உடலின் புது வளைவுகளைப் பற்றி நானும் கூசிக், கூனி, குறுகியிருக்கிறேன். ஆனால், வேறு காரணத்திற்காக. வக்கிரப் பார்வைகள் என் உடலை எனக்கே அந்நியமாக்கி, ஓர் அவமானச் சின்னமாய்க் காட்டின. என் அம்மா உன் அம்மாவைப் போல் இல்லை. என்னால் இந்த மாதிரி உணர்வுகளை அவளிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. இதைப் பற்றிப் பேசினால், என்னை விட அவள்தான் அதிகம் கூச்சப் பட்டிருப்பாள் என்பது என் உள்ளுணர்வுக்குத் தெரியும். இந்த மாதிரி எவ்வளவோ விஷயங்கள். நீ சொல்வது சரிதான். நான் வளர்க்கப்பட்ட விதமும் காலமும் இடமும் வேறுதான். உன் உடல் வளர்ச்சியை நீ ஆரோக்கியமாய் ஏற்றுக் கொள்கிறாய். சந்தோஷம். உன் உடல் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இல்லையே என்கிறது தொடங்கி, 'ன்ஸின்க் பாட்டுக்காரன் ஜஸ்டினைப் பிடிக்கும் என்பது வரை, என்னிடம் உள்ள ஏதோவொன்று உன்னிடம் இல்லையே என்று நினைப்பது வரை, உன் அம்மாவிடம் உன்னால் மனம் திறந்து சொல்ல முடிகிறது. இன்னமும் சந்தோஷம். ஆனால், ஒரே ஒரு கேள்வி. என் இளமைக்காலத்தின் ஒடுக்கப்பட்ட சூழலை மீறிய பரந்த பார்வை எனக்கு இன்று இருக்கிறது, மஞ்சு. சுதந்திரமாய் வளரும் நீ உன் சுதந்திரத்தை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறாய், எப்படிப் பயன்படுத்துகிறாய் ?

மூச்சு வாங்குகிறது. மஞ்சுவின் முகத்தில் ஒரு விதமான திருப்தி. கண்களில் புன்னகையின் நிழல். தாயை நிதானமிழக்கச் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றதினாலா. குரூரமான திருப்தியோ. அப்படி இருக்காது. மனதில் அடக்கி வைத்திருப்பதைத் தாயிடம் பகிர்ந்ததால் வரும் நிம்மதியாய் இருக்கலாமோ. நான் பேசுவதைக் கவனமாய்க் கேட்கிறாள். அதுதானே முக்கியம். என்னுள் புகைந்த எரிச்சல் அடங்குகிறது. குரல் தானாய்த் தணிந்து கனிகிறது.

--மஞ்சு, சத்தான உணவும் உடற்பயிற்சியும் தொடரட்டும். இந்த வயதில் கொஞ்சம் சதை போடுவது இயல்புதான். இந்தச் சதை போன பிறகு கூட, உன் இயற்கையான உடல்வாகு நேர்கோடாக இல்லாமல், வளைவுகள் கொண்டதாகவே இருக்கலாம். அப்படி இருப்பதில் என்ன குறை ? தனித்துவம் பேசுகிறாய். ஆனால், நடை, உடை, பாவனைகள் மட்டுமில்லை, உடலும் கூடப் பிறர் போலிருக்க வேண்டும் என்கிறாய்.....

--மாம், நீ என் வருத்தத்தை வேறு மாதிரி அர்த்தப் படுத்துகிறாய்....

--மஞ்சு, பிரச்சினையை எல்லாக் கோணத்திலிருந்தும் உன்னைப் பார்க்க வைப்பது மட்டுமே என்னால் சாத்தியமானது. இறுதித் தீர்வுகள் உன்னுடையவை. ஒன்றை மட்டும் தெளிவாய்ப் புரிந்து கொள்--உன் இலட்சிய உடல் ஒரு மீடியா மாயை. தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் ஆதரிக்கிறோம் என்கிற விளம்பரத்துடன், உன் போன்றவர்களின் சுயபிம்பத்தைக் கலைத்து, அடிமைப்படுத்திச் சிறையிடும் மாயை....உன் சினேகிதிகளில் சிலரை புலிமியா, அனோரெக்ஸியா நெர்வோஸா என்று சீக்காளிகளாக்கிக் கொல்லும் மாயை.....பல கல்லாப் பெட்டிகளை நிரம்பி வழியச் செய்கிற பெரும் மாயை.

நிறுத்தினேன். இதற்கு மேலும் பேசுவது மஞ்சுவின் அறிவை அவமதிப்பதாகும்.

கோடைவாசத்துக்கு வடக்கு திரும்பும் கனேடிய வாத்துக்கள் சப்தமிட்டுக் கொண்டே மேலே பறக்கின்றன. தாயும் மகளும் உருகிப் போன மில்க்ஷேக்குகளுடன் ஏரிக்கரையில் உட்கார்ந்திருக்கிறோம். மெளனமாய். அந்தக் கணத்தில் இருவருக்கும் இடையேயுள்ள கதவு திறந்து, ஒரு பசும் சமவெளி விரிவதாய்த் தோன்றுகிறது. இவள் தன்னை உணர்ந்து, அதன் வழியே என்னையும் அறிந்த பின் வரவிருக்கும் மனநெருக்கத்தின் மெல்லிய விளிம்புக்கோடு தொலைவில் மினுங்கித் தெரிகிறது.

இப்போதைக்கு அந்தக் கதவு மீண்டும் மூடிக் கொள்ளும். ஏதாவது ஓர் அடிப்படையில், இவள் தன்னை என்னிலிருந்து மாறுபட்டவளாகவும், என்னால் புரிந்து கொள்ளப்படாதவளாகவும் காண்பித்துக் கொள்வது தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக