05/10/2024

அகத்தியர் தொடங்கிய சங்கம் - கி. வா. ஜகந்நாதன்

"பெருமானே, நான் தென்னாடு போக வேண்டுமாயின், அங்கே நாலு பேரோடு பேசிப் பழக வேண்டாமா? சிறப்பான நிலையில் இருக்க வேண்டாமா? அங்கே வழங்கும் தமிழ் மொழியில் எனக்குப் பழக்கம் இல்லையே!" என்று அகத்திய முனிவர் சிவபெருமானிடம் விண்ணப்பித்துக் கொண்டார்.

தேவரும் மக்களும் கூடியதால் கைலாசம் என்றும் இல்லாத பெருஞ்சிறப்போடு விளங்கியது. உலக முழுவதுமே காலியாகிவிட்டதோ என்று கூடத் தோன்றியது. தென்னாட்டிலிருந்து பார்வதி கல்யாணத்தைத் தரிசிக்கும் பொருட்டு ஜனங்களெல்லாம் வடக்கே வந்துவிட்டார்கள். வந்தவர்களை மறுபடியும் போய்த் தென்னாட்டில் வாழ்க்கை நடத்தும்படி சொல்ல முடியவில்லை. தென்னாட்டில் அரக்கர்கள் தங்கள் ஆட்சியை விரித்து, மலைகளிலும் ஆற்றங்கரைகளிலும் வாழ்ந்து வந்த நல்லோரை நலிவு செய்தார்கள். ஆதலின், அந்த நாட்டில் நல்லோர் வாழ்வு அமைதியாக இருக்கவில்லை; சிவபெருமானுடைய கல்யாணத்தை வியாஜமாக வைத்துக்கொண்டு அறிவும் தவமும் மிக்க பல பெரியோர்கள் கைலாசத்துக்கே வந்து விட்டார்கள்.


தென்னாட்டில் அரக்கர் கொடுங்கோன்மை பரவுமானால், அங்கே வாழும் குடிமக்கள் என்னாவது! பெரிய வர்களே அஞ்சி ஓடி வந்துவிட்டால், தென்னாடு முழுவதும் அரக்கருக்கு அடங்கி, தெய்வநினைவின்றிக் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் ஆகிவிடுமே! என் செய்வது?


இவற்றையெல்லாம் சிவபெருமான் திருவுள்ளத்தில் நினைத்துப்பார்த்தார். யாரேனும் வலியவர் ஒருவரையோ, சிலரையோ தமிழ் நாட்டில் நிறுவினாலன்றி, இத்தீமை போகாது என்று எண்ணினார். திருமண நிகழ்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாடு வாழ வேண்டுமென்ற நினைவு பெருமானுக்குப் பெரிதாயிற்று. தவத் திறமையும் அறிவுப் பெருமையும் உடையவராக ஒருவரைத் தலைவராகக்கொண்ட ஒரு கூட்டத்தைத் தென்னாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார் சிவபெருமான்.


அகத்தியரே அவரது திருவுள்ளத்துக்கு உவப்பானவராகத் தோற்றினார். உடனே அவரை அழைத்து, "நீ தென்னாட்டுக்குச் சென்று அங்கேயே தங்கி நல்லோரைப் பாதுகாத்து அற நெறியைப் பரப்பவேண்டும்" என்று கட்டளையிட்டார்.


அப்பொழுதுதான் அகத்தியர், ஒரு நாட்டுக்குச் சென்று வாழவேண்டுமானால் அந்நாட்டு மொழியில் தக்க திறமை வேண்டுமே எந்ற கருத்தை வெளியிட்டார். உண்மைதானே? உடனே சிவபெருமான் அகத்திய முனிவருக்குத் தமிழ் இலக்கணத்தை உபதேசித்தருளினார். கூரிய மதிபடைத்த முனிவர் தமிழ் நெறியை உணர்ந்து கொண்டார். திருவருளும் தவமும் துணையாகத் தென்னாட்டுக்கு வந்தார்.


வரும் வழியில் அவருக்கு எத்தனையோ இடையூறுகள் நேர்ந்தன. எல்லாவற்றையும் வென்று நேரே தென்னாட்டுக்கு வந்து சேர்ந்தார்.


அந்த நாடு காடு அடர்ந்து, மலைவளம் கெழுமி இயற்கையெழில் பொங்கும் நாடாக இருந்தது. முன்பு அங்கங்கே முனிவர்கள் தங்கியிருந்தார்கள். இப்போது எல்லாம் சூன்யமாக இருந்தன. நேரே தென்றமிழ் நாட்டில் ஒரு மலைச்சாரலை வந்து அடைந்தார்.


அக் காலத்தில் அந்தப் பகுதிகளை இராவணன் ஆண்டுவந்தான். அவனுடைய உறவினர்களும் ஏவலர்களும் ஆகிய பல அரக்கர்கள் அங்கங்கே இருந்து சுகபோக வாழ்க்கை நடத்தி வந்தனர். யாவருக்கும் தலைவனாகிய இராவணனை அவ்விடத்திலிருந்து முதலில் போகச்செய்தால் அப்பால் ஏனையவர்களைப் போக்குவது அரிதன்று. தவமுனிவராகிய அகத்தியர் சில மாணாக்கரோடு வந்தார். அவருக்குப் படைப்பலம் இல்லை. இராவணனோ பலவகையிலும் பலசாலி. அவனை எப்படி ஓட்டுவது?


அகத்தியருக்கு ஒரு தந்திரம் தோன்றியது. இராவணன் யாழ் வாசிப்பதில் வல்லவன். சிவபெருமானையே யாழிசையால் குழைவித்து வரம் பெற்றவன். அகத்தியரும் யாழ் வாசிப்பதில் வல்லவர். படைத்திறமை இல்லாத அகத்தியர் இந்த யாழ்த்திறமையில்பொருது இராவணனை வெல்லலாமென்று எண்ணினார். இராவணனுக்கு ஆள்போக்கி, யாழிசைப் போருக்கு அழைத்தார்.


போருக்கு ஆளின்றித் தினவு கொண்ட தோளோடு, யாழிசையிலே ஒன்றியிருந்த இராவணன் அகத்தியருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டான். அகத்தியர் தென்னாட்டில் வந்து குடி புகுந்ததை விரும்பாதவன் அவன். அவரை மீண்டும் வந்த வழியே அனுப்பிவிடவேண்டுமென்னும் உள்ளக் கருத்துடையவன். அதற்கு இந்த யாழிசைப்போர் துணை செய்யும் என்ற எண்ணத்தால். அவன் இதனை ஆவலுடன் ஏற்றுக்கொண்டான். தனக்கு மிஞ்சி யாழ் வாசிப்பவர் இல்லையென்பது அவன் உறுதியான நினைப்பு.


அகத்தியரும், இராவணனும் யாழிசைப்போர் செய்வதென்று தீர்மானமாயிற்று. இந்த வாதத்தில் நடு நின்று கவனித்து, இன்னாரே வென்றார் என்று சொல்ல ஒருவர் வேண்டுமே! இராவணனது கொடுமைக்கு அஞ்சி யாரும் வரவில்லை. அகத்தியர் ஒரு யோசனை சொன்னார்; "சிறந்த சங்கீதத்தின் அலை மோதினால் கல் உருகும் என்று சாஸ்திரம் சொல்கிறது. நாம் இருவரும் யாழ் வாசிப்போம். இந்த மலையை நமக்கு நடுநின்று கவனிக்கும் மத்தியஸ்தராக இருக்கட்டும். யாருடைய பாட்டுக்கு மலை உருகிறதோ அவரே வெற்றிக்கு உரியவர்" என்றார். இராவணன் உடன்பட்டான் தோல்வியுறுபவர் அந்த நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை இருவரும் ஒப்புக்கொண்டனர். இராவணன் நிச்சயமாக அகத்தியரை வடக்கே அனுப்பி விடலாமென்று நம்பினான்.


யாழிசைப் போர் ஆரம்பமாயிற்று. முதலில் அகத்தியர் தம் யாழால் இசை பரப்பத் தொடங்கினார். திருவருட் பலமும் தவத் திறமையும் அவர் கரங்களுக்கு ஆற்றலைக் கொடுத்தன. விலங்கினங்களும் மெய்ம்மறந்து கேட்கும்படி யாழை இயக்கினர். இராவணனே தன்னை மறந்து நின்றான். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவேண்டுமா?


அகத்தியர் மேலும் மேலும் வாசித்துக் கொண்டுபோனார். மரங்கள் அசைதலை ஒழிந்தன. காற்றுக் கூட வீசாமல் நின்றது. வேறு ஒலி ஏதும் இல்லை. அந்த அகண்ட மெளனப் பரப்பிலே குருமுனிவராகிய அகத்தியர் தம்முடைய யாழை மீட்டிக் கொண்டிருந்தார். அதிலிருந்து பிறந்த இன்னிசை அலை அலையாகப் பரந்து சென்று பிரபஞ்ச முழுவதுமே கான மயமாக்கி விட்டது. நிற்பனவும் அசைவனவுமாகிய பொருள்கள் யாவும் தம்முடைய இயற்கையை மறந்தன.


இத்தகைய பரவச நிலையில் அருகில் நின்ற மலையும் நெகிழ்ச்சி பெற்றது; உருகத் தொடங்கியது. இனி மேலே வாசித்தால் உலகு கொள்ளாது என்று கருதி முனிவர் தம் இசையை நிறுத்தினார்.


மெய்ம்மறந்து நின்ற இராவணன் தன் நினைவு பெற்றான். சிவபெருமானது கருணைத் திருவுள்ளத்தைத் தன் யாழிசையால் உருக்கிய அந்த அரக்கனுக்கே பிரமிப்புத் தட்டியது. 'மலையாவது உருகுவதாவது!' என்று எண்ணிய எண்ணம் நெகிழ்சியுற்றது. அகத்தியர் இசை அவன் உள்ளத்தையே கரையச் செய்தது. அவர் காலில் விழுந்து வணங்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால் மானம் என்ற ஒன்று இருக்கிறதே, அது தடுத்தது.


முதலில் பேசியபடியே இப்போது இராவணன் தன் திறமையைக்காட்ட ஆரம்பித்தான். கைலாசத்தின் கீழே நசுங்கினபோது அவன் உண்மையிலேயே மனங்குழைந்து பாடி யாழ் வாசிதான். இப்போது அந்தக் குழைவு இல்லை. கர்வமும் கலக்கமுமே அவன் உள்ளத்தில் மீதுர்ந்து நின்றன. கலை தோன்ற நெகிழ்ச்சியான உள்ளமல்லவா வேண்டும்? அது அவனிடத்தில் அப்போது இல்லை, அவனுடைய விரல்கள் விளையாடின; வீணை நரம்புகள் பேசின; பாட்டு எழும்பியது. காதுக்கு இனிதாக இருந்தது; கருத்திலும் இனிமையைப் புகுத்தியது. ஆனால், கருத்தை ஓடாமல் தடைப்படுத்தி உடம்பை மறக்கச் செய்யவில்லை. அவன் தன்னை மறந்து, ஆணவம் கழன்று, இசை மயமாக நின்று வாசித்திருந்தால் ஒரு கால் அந்த இசை வென்றிருக்கலாம். 'நாம் தோல்வியுறக் கூடாதே' என்ற நினைவுதான் அவன் உள்ளத்தில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது. அவன் வேறு, இசை வேறாக நின்றான். ஆதலின் இசையில் இனிமை இருந்தது; சமற்காரம் இருந்தது. ஆனால் மயக்கும் மாயம் இல்லை; அசைவின்றிச் செய்யும் அற்புதம் இல்லை.


இருபது கைகளாலும் மாறி மாறி வாசித்தான். அவன் பேரரக்கன். அவனக்கு ஏற்ற ராட்சச வீணை அது. அதனுடைய நரம்புக் கட்டுகள் அவன் இருபது கைகளாலும் வாசிப்பதற்காகவே அமைக்கப்பட்டன. இவ்வளவு இருந்தும் யாழிசை புறத்தில்தான் தவழ்ந்தது. அகத்தே சென்று உருக்கவில்லை.


எவ்வளவு நாழிகை அதனேடு மன்றாட முடியும்? ஒரு கலைஞனுக்குத் தோற்றி நிற்பது அவமானமாகாது என்ற இராவணன் சமாதானம் செய்து கொண்டான் தான் தோற்றதாக ஒப்புக்கொண்டான். செய்து கொண்ட நிபந்தனைப்படியே தென்னாட்டு ஆட்சியைக் கைவிட்டு இலங்கைக்குச் சென்று வாழலானான்.


அகத்திய முனிவர் வெற்றி பெற்றார். அவர் செய்யவேண்டிய காரியம் ஒரு பகுதி ஆயிற்று. தென்னாட்டைத் தமதாக ஆக்கிக்கொண்டார். இனி, அதை வளம்படுத்தி அறிஞர் கூட்டங்களை அங்கங்கே அமைக்க வேண்டும். வடக்கே சென்றவர்களை மீண்டும் தமிழ் நாட்டுக்கு வரும்படி செய்ய வேண்டும்.


ஓரிடத்தில் நிலையாக இருந்துகொண்டு இந்த ஆக்க வேலைகளைச் செய்ய நினைத்தார். தமக்கு இசைப் போரில் வெற்றியைக் கொடுத்த அந்த மலையையே தம்முடைய இருப்பிடமாகக் கொள்ள எண்ணினார். அவ்வாறே அங்கே ஆசிரமம் அமைத்துக்கொண்டார்.


தமிழ் நாட்டு மக்களை அழைத்துக் கூட்டி அவர்களோடு பழக வேண்டுமென்று விரும்பினார். அங்கங்கே சில அரசர்கள் இருந்தனர். அவருள் பாண்டியன் பெரியவனாக இருந்தான். அவனையும் பிறரையும் வருவிக்க ஆசிரமத்தில் ஏதேனும் ஒரு காரியத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லவா? தமிழ்மொழியாராய்ச்சி செய்வதைக் கருத்தாகக் கொண்டு அந்த மலையில் யாவரையும் கூட்ட முயன்றார். அவர் முயற்சி பயன் பெற்றது. அடிக்கடி பாண்டிய மன்னனும் பிறரும் வந்து வந்து முனிவரோடு பேசிச் சென்றனர். தமிழ் மொழியைப் பற்றிய ஆராய்ச்சியும் நடைபெற்றது. முனிவரும் தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக்குச் சென்று மக்கள் வழங்கும் பேச்சையும், பெரியோர் வழங்கும் மரபையும், வேறு நூல்களையும் உணர்ந்தார்.


வேதத்திலும் வட மொழியிலும் வன்மை பெற்றுப் பேரறிவுடையவராக விளங்கிய அகத்தியர் விரைவிலே தமிழில் தமக்கு இணையில்லாத பெரும்புலவராகி விட்டார். சிவபெருமான் உபதேசித்த இலக்கணமும், தமிழ் நாட்டில் பிரயாணம் செய்து தெரிந்து கொண்ட வழக்கும் அவருடைய அறிவை வளப்படுத்தின.


அவர் இருந்த மலையில் அடிக்கடி புலவர்கள் கூடலானார்கள். அனைவரும் கூடும் பொதுவான இடமாக ஆயிற்று அம்மலை. அதனால் அந்த மலைக்கே பொது இடம் அல்லது சபை என்ற பொருளையுடைய பெயர் ஏற்பட்டது. பொது இல் என்று முதலில் வழங்கி, அப்பால் பொதியில் என்று வழங்கலாயிற்று. பொதிய மலை, பொதியில், பொதியம், பொதிகை என்றெல்லாம் உச்சரிப்பு வேறுபாடுகளால் அந்தப் பெயரே வெவ்வேறு உருவத்தை எடுத்தது. பொதியில் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பலரும் கூடும் சபை என்ற பொருள் இருக்கிறது. புலவர்கள் கூடும் சபைக்கும் பொதியில் என்று பெயர். சபை கூடும் சிறப்பான நிகழ்ச்சி அடிக்கடி நடந்த காரணத்தினால் அந்த மலைக்குப் பொதியில் என்றே பெயர் வழங்கத் தொடங்கியது.


தமிழ்ச் சபை அல்லது சங்கம் அகத்தியருடைய தலைமையில் பொதியில் மலையில் நடந்து வந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவியது. வரவர அந்தச் சங்கத்தின் பெருமை அதிகமாயிற்று. அகத்தியருடன் எப்போதும் இருந்து தமிழ்ப் பாடம் கேட்கும் மாணாக்கர்கள் சிலர் ஏற்பட்டனர். பாண்டிய மன்னனும் அவரிடம் தமிழிலக்கணம் கற்றுக்கொண்டான்.


அகத்தியர் நிறுவிய சங்கம் மேலும் மேலும் வளர்ந்து வந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக