பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டு என்னும் தொகுதியில் ஒன்பதாவது செய்யுள். இதன் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாற் பெருவளத்தான். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இது 301 அடிகளாலாயது. இந்நூலின் பெருமையைப் பாட்டுடைத் தலைவனாகிய கரிகாலன் உணர்ந்து 16-கோடிப்பொன் கண்ணனாருக்கு அளித்தான் என்று சொல்லப்படுகிறது.
தத்து நீர்வரால் குருமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும் (இராச-21)
என்று கலிங்கத்துப் பரணி கூறும். சங்கர சோழன் உலாவிலும்,
பாடிய பாக்கொண்டு பண்டு பதினாறு
கோடி பசும்பொன் கொடுதோனும் (10)
என இச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்ததாகிய தமிழ்விடு தூதும்,
பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டால் பதினாறு
கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே
என்று கூறுகிறது. இவ்வொரு செய்தியே இதுவரை அறியப்பட்டது. இப்பொழுது புதுச் செய்தி ஒன்று ஒரு சாசனத்தால் வெளியாகின்றது. பட்டினப்பாலையை அரங்கேற்றுவதற்குப் பதினாறு தூண்கள் அமைந்த பெரிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது என ஓர் சாசனச் செய்யுள் தெரிவிக்கிறது. அச்செய்யுள் வருமாறு:
வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே.
இச்சாசனம் திருச்சி ஜில்லாவிலுள்ள திருவெள்ளறையில் செதுக்கப்பட்டுள்ளது. இன்றுகாறும் இது வெளியிடப்படாதது. இதில் சுந்தர பாண்டியனுக்கும் மூன்றாம் ராஜராஜனுக்கும் நிகழ்ந்த போர் ஒன்று கூறப்பட்டுள்ளது என்பது சரித ஆராய்ச்சியாளர் கருத்து.
இச்செய்யுளில் கண்ணன் என்றது கடியலூர் உருத்திரங் கண்ணனாரை. அரமியம் என்றது அரண்மனை முற்றத்தை. இங்குக் குறித்த போர் நிகழ்ச்சியால் அரண்மனைப் பகுதிகளில் பதினாறு கால் மண்டபம் ஒன்று தவிர ஏனைய அனைத்தும் அழிவுற்றன. மிகப் பூர்வகாலத்தே பட்டினப்பாலை அரங்கேறிய மண்டபம் ஆதலாலும், அதற்கு அழிவு செய்யின் தமிழிலக்கிய ஞாபகச் சின்னமொன்றினை அழித்ததாக முடியும் ஆதலாலும், அது அழியாது பாதுகாக்கப் பட்டது போலும்! இதனால் தமிழிலக்கியச் சின்னங்களை நம் மூதாதையர் எவ்வாறு போற்றி வந்தனர் என்பது விளங்கும்.
இனி, பட்டினப்பாலைக்கும் பதினாறு என்ற தொகைக்கும் ஓர் இயைபு இருத்தல் நோக்கத்தக்கது. பதினாறு கோடிப் பொன் இந்நூற்குப் பரிசிலாக வழங்கப்பட்டதென்பது வரலாறு. பதினாறு தூண்களுள்ள ஒரு மண்டபத்தின்கண் இந்நூல் அரங்கேற்றப்பட்டதென்பது இச்சாசனத்தால் புதுவதாக அறியப்படும் வரலாறு. ஒருகால் பதினாறு கோணங்களிலும் தூண்கள் நிறுவி, ஒவ்வொரு தூணிலும் சில பொற்காசுகளைத் தூக்கியிட்டு, பதினாறு கோடிப் பொன் என அவற்றை வழங்கினர் என்று நாம் கொள்ளலாம். இங்கு, பதினாறு கோடிப்பொன் என வந்துள்ளதும், பதிற்றுப்பத்தில் காப்பியாற்றுக் காப்பியனாருக்கு 40-நூறாயிரம் பொன்னும், காக்கைபாடினியார் நச்செள்ளையாருக்கு 9-துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும், கபிலருக்கு நூறாயிரம் பொற்காசும், அரிசில் கிழாருக்கு ஒன்பது நூறாயிரம் பொற்காசும், பெருங்குன்றூர்கிழாருக்கு 32-ஆயிரம் பொற்காசும் பரிசிலாக அளிக்கப்பட்டன என வந்துள்ளனவும் உயர்வு நவிற்சி என்றே நாம் கொள்ளுதல் வேண்டும். இராசராஜன் உலாவின் கண்ணிதோறும் ஆயிரம் பொன் சொரிந்ததாகக் கூறுவதும் உயர்வு நவிற்சியாகவே கொள்ளத்தக்கது.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயந்தெரி வார் (குறள், 104)
என்ற திருக்குறளைப் பின்பற்றி இவ்வாறு புனைந்து கூறினார்கள்போலும்! அன்றியும் ஒவ்வொரு சிற்றரசனும் தன் நாட்டிலுள்ள யானை முதலியவற்றை முற்காலத்தில் பரிசிலாக வழங்கி வந்தனன். இதற்கு மாறாக பொன்னை வழங்கத் தொடங்கியது புலவர்களுக்கு எத்தனையோ அருமையாகத் தோன்றியிருத்தல் வேண்டும். இவ்வருமைப் பாட்டினைத் தெரிவித்ததற்கு இவ்வுயர்வு நவிற்சி ஆளப்பட்டது எனக் கொள்ளுதலும் தகும்.
இது எவ்வாறாயினும், மேற் குறித்த சாசனச் செய்யுள் ஓர் அரிய இலக்கிய வரலாற்றை உணர்த்துகின்றது என்பதற்கு ஐயமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக