""இரயிலில் பிரயாணம் செய்யும் போதும், ஆகாய விமானத்தில் பறக்கும்போதும் மேலே சொன்ன ஆசிரியர்களின் (வெற்றிவேற்கை, திருக்குறள், பட்டினத்தார், கலிங்கத்துப்பரணி, நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், குற்றாலக் குறவஞ்சி) ஒரு பாடலோ, இரண்டு பாடலோ, பத்தோ இருபதோ பாடி அனுபவித்துக் கொண்டிருக்கலாம். ஆனாலும், ஓர் ஆசிரியரை ரயிலில் போகும்போது முக்கியமாக சமீப தூரத்துக்குப் போகும்போது கையில் எடுக்கவே கூடாது. ஓர் ஆபத்தான நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன் கேளுங்கள்!
திருநெல்வேலியிலிருந்து சீவைகுண்டத்துக்கு (20 மைல்) ஒரு கலியாணத்துக்குப் போகவேண்டியிருந்தது. காலை எட்டு மணிக்கு ரயில் புறப்பட்டது. நான் இருந்த இரண்டாவது கிளாஸ் கம்பார்ட்மெண்டில் வேறு யாரும் இல்லை. ஆகவே, பேச்சுத் துணைக்கு யாரும் இல்லை. தோல் பையைத் திறந்து அயோத்தியா காண்டப் புத்தகத்தை எடுத்தேன். அது பழைய காலப் பதிப்பு. தற்காலத்து இளைஞர்கள் அதைக் கையாலேயே தொடமாட்டார்கள். கடுதாசி அவ்வளவு கேவலம், மார்பிள் அட்டை அதைவிடக் கேவலம், அச்சு கொஞ்சம் தலையெழுத்து மாதிரி இருக்கும். அந்தப் புத்தகத்தை எடுத்தேன். கைகேயி சூழ்வினைப்படலம் வந்தது. சுமார் அறுபது பாடல்களைப் பென்சிலால் "மார்க்' பண்ணி இருந்தேன். அவைகளை முதலிலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன். சாவகாசமாய் பதட்டம் இல்லாமல், குறிப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டுமே என்ற உணர்ச்சி ஒன்றும் இல்லாமல் வாசித்துக்கொண்டு வந்தேன். தசரதன், கைகேயி, நான் மூன்று பேர் மாத்திரம் ஓர் உலகத்தில் இருந்ததான ஓர் எண்ணம். எஸ்.ஐ.ஆர். ஆச்சே, கம்பார்ட்மெண்ட் ஆச்சே என்கிற நினைவே இல்லை.
ஸ்டேஷன் ஸ்டேஷனாக நின்று நின்று போய்க் கொண்டிருந்தது ரயில். கடைசியில் ஒரு ஸ்டேஷன் வந்தது. நானோ வாசித்துக்கொண்டே இருந்தேன். கார்டினுடைய விசில் கேட்டது. ரயில் நகர்ந்தது. வெளியே எட்டிப் பார்த்தேன். ஆ! சீவைகுண்டம் ஸ்டேஷன்தான்! ஆபத்தாய்ப் போய்விட்டது. புஸ்தகங்களையும் பையையும் கையில் எடுத்துக்கொண்டு தடபுடல் கூட்டிக்கொண்டு நகருகிற வண்டியிலிருந்து பிளாட்பாரத்தில் குதித்தேன். ஏதோ குட்டிக்கரணம் போடாமல் தத்திப் பித்தி நின்று கொண்டேன்.
அன்று முதல் இரண்டு ஸ்டேஷனுக்கு முன்னமேயே கம்பராமாயணத்தை எந்தப் பாகமானாலும் சரி அப்படியே மூடி வைத்துவிடுவேன். கம்பராமாயணம் எவ்வளவு பிடித்தமான புஸ்தகமாய் இருந்தாலும், ரயில் பிரயாணத்துக்கு எவ்வளவு வாய்ப்பாய் இருந்தாலும் இரண்டு ஸ்டேஷன் முன்னதாகவே கம்பரிடம் விடைபெற்றுக் கொள்ள வேண்டியதுதான். அப்படிப் பொல்லாதவர் கம்பர்''
இப்படிக் கூறியவர் "ரசிகமணி டி.கே.சி.'யைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் !
("ரசிகமணி' டி.கே.சி.யின் "என்னைக் கவர்ந்த புஸ்தகங்கள்' நூலிலிருந்து)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக