27/11/2016

ஆதியில் காட்டாறு ஓடியது - மு.குலசேகரன்

 இரவு வீட்டுக்குத் திரும்பியபோது சுந்தரமூர்த்தி துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்ததை உணர்ந்தார். ஊசிப்போன உணவு, அழுகிய மாமிசம், நாட்பட்ட மலம் போன்றவற்றின் கலவை; அது வீட்டை ஒட்டியிருக்கும் சாக்கடைக் கால்வாயிலிருந்து எழுந்துகொண்டிருக்கலாமென்று நினைத்தார்; அல்லது, செடிகொடிகள் மண்டிய முட்கம்பி வேலியிட்ட எதிரிலுள்ள காலிமனையிலிருந்தும் இருக்கலாம். அங்கு நீண்டகாலத்துக்கு முன்னால் ஒரு நாயின் உயிரில்லாத உடல் வீசப்பட்டிருந்தது. அது யாராலும் அகற்றப்படாமல் பல நாட்களாக அப்படியே கிடந்து நாற்றமடித்து மட்கி மண்ணானது. இப்போது அவருடைய இருசக்கர வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வீட்டுக்கு எதிரில் வட்டமாக நீர் தேங்கியிருந்தது தெரிந்தது. அவர் தன் வாகனத்தைச் சற்றுத் தொலைவிலேயே நிறுத்திவிட்டு இறங்கினார். நெருங்கிப் பார்க்கையில் நீர் கொஞ்சம் கறுப்பாகவும் கலங்கலாகவும் இருந்தது. அதிலிருந்துதான் கெட்டவாடை அடித்துக் கொண்டிருக்கிறது போலும். வீட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சித் தொடரிலிருந்து உரத்துப்பேசும் குரல்கள் கேட்டன. நீரைத் தாண்டிச் சென்று அவர் இரண்டு மூன்று தரம் அழைப்புமணியை அழுத்தினார். உள்ளே அதன் இன்னிசை பொருத்தமில்லாமல் ஒலித்தது. அவர் திரும்பிவந்து தேங்கியிருந்த நீரைச் சுற்றிப் பார்த்தார். சரியாக வீட்டு வாசல்படி முன்னால் தெருவில் கோலம்போடும் இடத்தில் பரவியிருந்தது. ஒருவேளை, மனைவி ஏதாவது புனிதநாளுக்காக வீட்டைக் கழுவித் தள்ளியதால் வெளிப்பட்டிருக்கும். தினமும் கடமையுணர்வுடன் அழுத்திப் பெருக்குவதால் வீட்டுக்கெதிரில் மட்டும் கொஞ்சம் பள்ளமாகியிருந்தது. சற்று விலகியிருந்து பார்த்தால், தெருவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில் பால்போல் பளபளத்தது நீர். அவருக்கு அதிலிருந்து தான் நாற்றம் வருகிறதாவென்ற சந்தேகமேற்பட்டது. கணவரின் வருகையை அறிந்து நடைவிளக்கைப் போட்டு வாகனத்தை ஏற்ற கதவை அகலத் திறந்தபடி அவருடைய மனைவி வெளியில் வந்தாள். தெரு நடுவில், கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு சுந்தரமூர்த்தி குனிந்து பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் வாகனம் அணைக்கப்பட்டு நின்றிருந்தது. கீழே குட்டை போல் கறுத்த நீர் தேங்கியிருந்தது.

சுந்தரமூர்த்தியின் மனைவி உடனே “ஐயோ சாக்கடை!” என்றவாறு புடவையின் அடியைச் சற்று உயர்த்தியபடி படிகளில் இறங்கினாள். அவர் பக்கத்திலிருந்த சாக்கடை போவதற்காகச் சிமெடால் கட்டப்பட்ட கால்வாயைப் பார்த்தார். அது வழக்கமாக பாலிதின் பைகளுடனும் குப்பைகளுடனும் நிலைத்த தோற்றத்தைக் கொடுக்கும். அடியில் கழிவுநீர் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும். எப்போதாவது துப்புரவுப் பணியாளர் அதன் மேற்புறத்திலிருப்பவற்றை மட்டும் வாரிப்போடுவார். அவர் வெளியிலெடுத்த குப்பை பல நாட்களுக்குத் தெருவெங்கும் இறைந்துகொண்டிருக்கும். அது புறப்பட்ட இடமான கால்வாய்க்கு மறுபடியும் வந்துசேரும். பிறகு குப்பைத் தள்ளுவண்டி வந்து கிடைத்ததை அள்ளிப்போட்டுக்கொண்டு போவதுண்டு. அந்தக் கால்வாய் இப்போது முழுமையாக நிறைந்திருந்தது. “யாராவது குழாயை ஒடைச்சிட்டாங்களா?” என்றபடி மனைவி, சுவருடன் பதித்திருந்த கழிவுநீர்க் குழாயை ஆராய்ந்தாள். அவளுக்கு அக்கம்பக்கத்தவர்களின்மீது எப்போதும் சந்தேகம் நிலவிக்கொண்டிருக்கும். அவர்கள் மந்திரிக்கப்பட்ட எலுமிச்சம்பழங்களையும் மிளகாய்களையும் நடுத்தெருவில் வைக்கிறார்கள். அந்தப் பக்கமாக அவ்வப்போது ஆட்டோக்களும் சிறிய டெம்போக்களும் புயல்களாகப் போய்வரும். அவையும்கூட கழிவுநீர்க்குழாயை இடித்துத் தள்ளிவிட்டிருக்கலாம். “ஒருவேளை செப்டிக் டேங்க் ரொம்பிட்டிருக்குமோ?” என்று மற்றொரு ஐயத்தை எழுப்பினாள் மனைவி. வீடு கட்டியதிலிருந்து இதுவரையிலும் மலத்தொட்டியைச் சுத்தம் செய்யாததால் அதற்கும் வாய்ப்பிருக்கிறது; அதை அறிந்துதான் மலம் சுத்திகரிக்கும் பையன்களும் அடிக்கடி முகவரி அட்டைகளை வீட்டுக்குள் வீசிவிட்டுப் போகிறார்கள். அடுத்த வீட்டுக்காரர் விளக்கைப் போட்டு எட்டிப் பார்த்துவிட்டுத் தனக்கேன் வம்பு என்பதைப்போல திரும்பவும் விளக்கை அணைத்துவிட்டு உள்ளே போனார். கொஞ்ச தூரம் தள்ளியிருந்த வீட்டுக்கெதிரில் இருட்டில் உட்கார்ந்து சில பெண்கள் கதைபேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதானிருப்பார்கள்.

கடைசியாக, சுந்தரமூர்த்தியின் மனைவி “சாக்கடைக் கால்வாய்தான் வழியுதுங்க...” என்றாள். தெருவோரம் நீண்டுசென்ற கால்வாயிலிருந்து கரைகளைக் கடந்து குப்பைகளுக்குக் கீழாக நீர் வெளியேறிக்கொண்டிருந்தது. மிகக் குட்டியான ஓர் அணை நிரம்பி வழிவது போலிருந்தது. அதிகமாகியிருந்தாலும் குறைவாயிருந்தாலும் நீர் ஒரே மாதிரியாகத்தான் நடந்துகொள்கிறது. உதாரணங்களாக, மேட்டிலிருந்து பள்ளத்துக்கு பாய்வது, அடியில் எவ்வளவு சேறும் சகதியுமாயிருந்தாலும் மேலே தெளிவாக கண்ணாடியைப்போல காட்சியளிப்பது, காற்றால் உந்தப்பட்டு அழகாக அலைகளை வீசுவது. எல்லா வீடுகளும் வெளியேற்றும் சாக்கடையைச் சுமந்துகொண்டு ஓயாமல் இயங்கும் கால்வாய் சுந்தரமூர்த்தியின் வீட்டுக்கெதிரில் அடைத்துக்கொண்டது அவருடைய துரதிருஷ்டம். சாக்கடை ஓடாமல் போனால் ஊரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயமிருக்கிறது. ஆனால் நல்லகாலமாக கழிவுநீர் மேற்கொண்டு நகரமுடியாமல் மேலேறித் தெருவுக்கு வந்து தேங்கிவிட்டது.

“சரி, உள்ள வண்டிய ஏத்திட்டு வாங்க...” என்று வீட்டுக்குள் திரும்பினாள் மனைவி. சுந்தரமூர்த்தி வேறு வழியில்லாமல் கழிவுநீரில் கால்களை வைத்து வாகனத்தைச் சிரமத்துடன் வீட்டுக்குள் தள்ளி ஏற்றினார். சுத்தமான தரையில் சக்கரங்களின் தடயமும் காலடிச்சுவடுகளும் உரமாகப் பதிந்தன. அவை சாதாரண நீரால் உண்டானவைபோல்தானிருந்தன. உள்ளே அவர்களுடைய மகள் ஏதும் நடக்காததுபோல் செல்பேசியில் மூழ்கியிருந்தாள். அவர் சோப்புப் போட்டு கைகால்களைத் தேய்த்துக் கழுவினார். சாப்பிட உட்கார்ந்தபோது நாற்றம் கூடுதலாக வீசுவதாகப்பட்டது. தொலைக்காட்சியைச் செய்திகளுக்கு மாற்றி வாடையை மறக்க முயற்சித்தபடி சாப்பிட்டார். அவர் மனைவி இன்னும் சாப்பிட்டு முடிக்காத தன் தட்டுடன் திடீரென எழுந்து சமையலறைக்குள் புகுந்தாள். அவள் உணவைக் கொட்டிவிட்டுத் தொட்டியில் தட்டை அலம்பும் சத்தம் கேட்டது. 

சுந்தரமூர்த்தி மனதைத் திடப்படுத்திக்கொண்டு உண்டு முடித்தார். கடைசியாக, படுக்கப் போகுமுன் வெளியில் வந்து பார்த்தார். கழிவுநீர் இன்னும் அதிகமாகத் தேங்கியிருந்தது. வீட்டுக்கெதிரிலிருந்த தார் போட்ட தெருவில் இளித்துக்கொண்டிருக்கும் சரளைக் கற்களும் மணலும் முழுவதுமாக அமிழ்ந்திருந்தன. அதைமேலும் காணப் பிடிக்காமல் கதவைச் சாத்திவிட்டு வந்து படுக்கையில் சாய்ந்தார். அவருடைய மனைவி வீட்டிலுள்ள ஜன்னல், அறைக் கதவுகளையெல்லாம் அழுத்தி மூடினாள்.

முதலில் அந்த இடத்தைப் பற்றி நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். சுந்தரமூர்த்தியின் வீடு ஊரின் மூலையிலிருக்கிறது. அதனால் எல்லா வீடுகளின் கழிவுநீரும் அந்த வழியாகத்தான் ஒன்றாகத் திரண்டு வரும். அங்கிருந்து சாலையைக் கடந்து கொஞ்சம் தூரம் போனதும் நகராட்சியால் கட்டப்பட்ட சிமென்ட் கால்வாய் முடிவடைகிறது. அத்துடன் அரசின் பொறுப்பும். பிறகு அது இருபுறமும் மண்ணாலான கரைகளுள்ள சுதந்திரமான ஓடையாகிறது. அப்புறம் அருகருகேயுள்ள ஊர்களின் சாக்கடைகளும் அங்கங்கே கிளை நதிகளைப் போல் வந்து கலக்கின்றன. எல்லாமும் கூடிப் பெரிதாகி ஒரு புறம்போக்கு நிலத்தில் சங்கமிக்கின்றன. அது முன்பொரு காலத்தில் ஏரியாக இருந்திருக்கக்கூடும். இப்போதும் அசப்பில் பார்த்தால் அப்படித்தான் தோன்றும். சுற்றிலும் பசுமையான செடிகொடிகளும் கருவேல மரங்களும் அடர்ந்திருக்கும். நடுவில் பரந்த நீர்ப்பரப்பு. அந்த நீர் கன்னங்கரேலென்று தென்படுவது மட்டும்தான் வித்தியாசம். மற்றபடி அந்த இடத்தை ஒற்றைக்கால் வெண்கொக்குகளும் பறவைகளும் பயமில்லாமல் ஏற்றுச் சரணாலயமாக்கியிருக்கின்றன. பன்றிகளும் முழுமையான மகிழ்ச்சியில் திளைக்கின்றன. அங்கு கரைகளில் மக்கள் குடிசைகட்டிப் பிள்ளைக் குட்டிகளுடன் வாழ்ந்துவருகிறார்கள்.

அவ்வப்போது கழிவுநீர்க் கால்வாயில் உள்ளவற்றைக் காக்கிச்சட்டை அணிந்த ஒருவர் நீண்ட கைப்பிடியுள்ள கருவியால் வாரி மேலே போட்டுக்கொண்டுதானிருக் கிறார். அவர் அந்தக் காலை வேளைகளிலும் மதுவருந்திவிட்டுத்தான் வேலை செய்வார். அவரால் மேலோட்டமாகத்தான் சுத்தம் செய்ய முடியும். ஏனென்றால், கால்வாய்க்குள் மக்கள் பல பொருட்களைக் கொட்டியிருப்பார்கள். நமக்கு மிக அந்தரங்கமான சிலவற்றைக் குப்பைத் தொட்டியில் போட முடியாது. பழைய உள்ளாடைகள், உபயோகித்த ஆணுறைகள், ரத்தம் தோய்ந்த நாப்கின்கள் போன்றவை. மேலும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளால் நிரம்பி வழியும் குப்பைத்தொட்டி எங்கோ தொலைதூரத்திலிருப்பது; அப்படியே அதில் போட்டாலும் பிச்சைக்காரர்களாலோ நாய்கள், காகங்களாலோ நிச்சயமாகக் கிளறப்படும். குறைந்தபட்சம் குப்பை பொறுக்குபவர்களாலாவது! அப்போது மறைவான பொருட்கள் வெளிப்பட்டு நடுத்தெருவில் கிடக்கும். நம்முடைய ரகசியம் எல்லோருக்கும் பகிரங்கமாகத் தெரிந்துவிட்டதைபோல் தோன்றும். அவையொன்றும் நம்மைக் காட்டிக்கொடுத்துவிடாதென்றாலும் உள்ளூர உறுத்தவே செய்யும். அதனால்தான் அவற்றைக் கண்ணில்படாதபடி கால்வாயில் தள்ளிவிடுகிறோம். அங்கு அந்தப் பொருட்கள் முதலில் கறுப்புச் சாயத்தைப் பூசிக்கொண்டு தத்தமது அடையாளங்களை இழக்கின்றன. பின்பு சாக்கடைக் குழியின் வரலாற்றுக்குள் புதைந்து காணாமலாகிவிடுகின்றன.

சுந்தரமூர்த்தியின் வீட்டுக்கு நேரெதிரில் எருக்கம் செடிகள் பூத்த காலிமனை. சற்றுத் தள்ளி தெருவின் நட்ட நடுவில், காரை உதிர்ந்த புராதன விநாயகர் கோயில். கோயிலுக்குமேல் தவறி வளர்ந்த அரசமரத்தின் நீண்ட கிளைகள் காற்றிலாடும். எல்லா இடத்துக்கும் தார் போடும் அரசாங்கத்தின் திட்டத்தால் தெரு உயர்ந்தும் கோயில் மட்டம் குறைந்தும்விட்டது. சுற்றிலும் கைப்பிடிச் சுவரெழுப்பிய கோவில் வாசல் தாழ்ந்தும், முன் மண்டபம் மேலும் பள்ளமாகவும், கடவுளுறையும் கருவறை பாதாளமாகவுமிருந்தது. கம்பிகளிட்ட மரத்தாலான இரட்டைக் கதவுகளின் வழியே வெள்ளை வேட்டித் துண்டுடன் பிள்ளையார் கறுத்த பாறாங்கல்லைப்போல் காணப்படுவார். பொருளாதார ரீதியான பலமில்லாததால் யாரும் உள்ளே வராமல் தினசரி பூசை கிடைக்காத அனாதை அவர். ஆனால் பிள்ளையார் மிகவும் சக்தி வாய்ந்தவரென்று பலரும் பேசிக்கொள்கிறார்கள். அதனால்தான் போக்குவரத்துக்கு இடைஞ்சலாயிருக்கும் கோயிலை அப்புறப்படுத்த யாவரும் பயந்தார்கள். சுந்தரமூர்த்தியின் வீடுகூட வீட்டுக்கடனுக்காக வங்கியால் ஏலம் விடப்பட்டும் விநாயகர் கோயில் தடங்கலாயிருக்கிறதென்று யாராலும் எடுக்கப்படாமல் தப்பித்துக்கொண்டிருக்கிறது. கோயில் எதிரில் சில பக்தர்கள் அவசரமாகச் செருப்பைக் கழற்றி ஓரடி முன்னால் வந்து தலையில் பட்டும்படாமல் முட்டிக்கொள்வார்கள். வேறு சிலர் கையைத் தூக்கி வணங்குவதைப்போல் சைகை செய்துவிட்டுக் கடந்துசெல்வார்கள். உள்ளே ஆனைமுகத்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருப்பார்.

சுந்தரமூர்த்தி அரைத் தூக்கத்தில் கண்ட கனவில் துளித்துளியாகக் கழிவுநீர் வழிந்து ஒன்றாகச் சேர்ந்துகொண்டிருந்தது. பிறகு தெரு முழுவதும் நிறைந்து பெரும் தேக்கமானது. அது மேன்மேலும் வளர்ந்து அவருடைய வீட்டுக்குள் புகுந்தது. பேனா மையைப் போன்ற கறுப்பு நீரால் படிகளை நனைத்து எதிரில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின்மேல் படர்ந்தது. மூடிய தெருக்கதவின் சந்துகளில் கசிந்து முற்றத்திலும் அறைகளிலும் பரவியது. வீட்டு உபயோகப் பொருட்களையும் பாத்திரங்களையும் நனைத்தது. அவற்றின் தாபமான இண்டுஇடுக்குகளையெல்லாம் நிறைத்தது. பாதி சாத்திய படுக்கையறைக்குள் நுழைந்து மெதுவாகக் கட்டில் கால்களின் மேலேறியது. அவர் புரண்டு படுக்கையில் குளிர்ச்சியாக முதுகில் பட்டது. முதலில் மனைவியின் கை என்று நினைத்து அனிச்சையாக வருடினார். அதுவே பல நெஞ்சடைக்கும் இரவுகளில் ஆறுதலுக்குப் பற்றிக்கொள்ளும் பிடிப்பாக அவருக்கு இருந்திருக்கிறது. பிறகு வழக்கத்திற்கு மாறான சில்லிடும் ஈரத்தை உணர்ந்து திடுக்கிட்டெழுந்து தட்டுத்தடுமாறி விளக்கைப் போட்டார். அறை, சாக்கடை நீர் எதுவுமில்லாமல் காலியாகத்தானிருந்தது. மனைவி தூக்கக் கலக்கத்துடன் முனகினாள். அவர் விளக்கை அணைத்துவிட்டுக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார். வீட்டுக்கெதிரில் சாக்கடை கறுப்பாக வட்டமாகத் தேங்கியிருந்தது. இன்னும் கொஞ்சம் விரிந்து வீட்டுப்படிக்கட்டையும் எதிரில் கோயில் சுவரையும் தொட்டுக்கொண்டிருந்தது. அது எவ்விதச் சலனமுமில்லாமல் கறுப்புப் பளிங்கைப் போலிருந்தது. அவர் சாக்கடையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஓயாமல் குமுறும் அலைகளோ அடங்காத ஆர்ப்பரிப்புகளோ அதில் இல்லை. அந்தச் சாக்கடையின் பூரண அமைதி அவருக்குள்ளும் பரவியது.

மீண்டும் வீட்டினுள் சென்று சுந்தரமூர்த்தி படுத்தார். எதுவும் நடக்காததைப் போல் உடனே தூக்கத்தில் ஆழ்ந்தும்விட்டார். அப்போது ஊரிலுள்ள கழிவுநீரெல்லாம் மொத்தமாகக்கூடிக் கால்வாயை உடைத்துக்கொண்டு பெருக்கெடுத்தது. தெருவெல்லாம் புதுவெள்ளமென உற்சாகமுடன் ஓடியது. அது முதலில் பிள்ளையார் கோயில் வாசலிலும் முன்னாலுள்ள மண்டபத்திலும் நிரம்பியது. பிறகு பள்ளமான கருவறைக்குள் வேகமுடன் பாய்ந்தது. பீடத்தைத் தொட்டு மேலேறிக் கொஞ்சம்கொஞ்சமாக விநாயகர் சிலையை மூழ்கடித்தது. கடவுளின் மகுடம் சூடிய தலையின் உச்சி மட்டும் வெளியில் தெரிந்துகொண்டிருந்தது. அடுத்ததாக நீண்ட தெருவில் எண்ணற்ற குண்டுகுழிகளையெல்லாம் நிறைத்து முன்னேறியது. வீடுகளுக்கு வெளியில் போர்த்தி நின்றிருந்த ஒன்றிரண்டு கார்கள், இருசக்கர வாகனங்கள், மரங்களின் அடிப்பகுதிகள் எல்லாவற்றையும் தழுவியது. கழிவுநீரில் கரும் சிற்றலைகள் எழுந்து வீட்டுப் படிகளில் தொடர்ந்து மோதிக்கொண்டிருந்தன. கீழிருந்து கிளம்பிய காற்றுக் கொப்புளங்கள் மேலே வந்து வெடித்தன. பிளாஸ்டிக் பைகளும் பொருட்களும் பல வகையான குப்பைகளும் மிதக்க முடியாமல் சாக்கடைக்குள் கனத்து அமிழ்ந்துகிடந்தன. கண்ணுக்கெட்டிய தூரம்வரை கருங்கடல்போல் தெரிந்தது. எல்லா இடங்களும் மேடு பள்ளங்கள் இல்லாத சமவெளியாகக் காட்சியளித்தன. அது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அழுக்கையும் மாசையும் அடித்துச் செல்லவந்த ஊழி வெள்ளம் போலிருந்தது. கடைசியில் வெறும் இருளாக மட்டும் நிரம்பிக்கிடப்பதாகத் தோன்றியது. அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அடிவானம் வெளுத்து மெல்ல வெளிச்சம் பரவியது. அப்போது சாக்கடை உறைந்த நிழல் போலிருந்தது.

சுந்தரமூர்த்தி காலையில் எழுந்து முகம் கழுவியதும் முதல் வேலையாக சாக்கடையருகில் சென்றார். அவர் வீட்டெதிரில் தெரு முழுவதுமாகக் கழிவுநீர் நிறைந்திருந்தது. அவருக்கும் முன்னால் தெருக்காரர்கள் சிலர் எவ்விதத் தொடர்புமில்லை என்பதுபோல எட்ட நின்று சாக்கடையைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். சுந்தரமூர்த்தியின் மனைவியும் பின்னால் வந்துநின்றாள். மூன்றாவது வீட்டுப் பெண்மணி கையில் துடைப்பத்தைத் தட்டியபடி “என்ன, சாக்டைக்குழாய் ஒடைஞ்சு போச்சா?” என்றாள். அவள் குரலில் தென்பட்ட சிறிதான மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. “தெரியலைக்கா...” என்றாள் சுந்தரமூர்த்தியின் மனைவி. அடுத்த வீட்டுக்காரர் ஊக்கமடைந்து அருகில் வந்தார். லுங்கி நனைந்துவிடும் என்று வெளுத்திருந்த முட்டிக்குமேல் அதை மடித்துக்கட்டிக்கொண்டார். “உங்க வீட்டெதிரில் மட்டுந்தான் சாக்கடை தேங்கிக்கிடக்குது” என்றார் சுந்தரமூர்த்தியின்மீது குற்றம்சாட்டுவதைப்போல். “அது... கால்வாயில் எங்காவது அடைச்சிட்டிருக்கும்” என்றார் சுந்தரமூர்த்தி. “முனிசிபாலிட்டி ஆபிசில புகார் எழுதி வைங்க. அவங்க வந்து சரி பண்ணிடுவாங்க” என்றார் பக்கத்து வீட்டுக்காரர். சுந்தரமூர்த்தி “ம்ம்...” என்றார்.

நகராட்சி அலுவலகத்திற்குப்போய்ப் புகார் எழுதி, அதிகாரிகள் படித்து, ஆட்களை அனுப்பி நடவடிக்கை எடுக்க நீண்ட காலமாகலாம். அதனுடைய ஊழியர்களால் எல்லா இடங்களையும் பல நாட்களுக்கு ஒரு முறை துப்புரவு செய்யவே முடியவில்லை. நகரத்தின் குடல்களைப்போல் ஓடும் ஆயிரக்கணக்கான சாக்கடைக் கால்வாய்களில் இதுவும் ஒன்று. இந்தக் கால்வாய் எல்லோருக்கும் பொதுவானது. அது அடைத்துக்கொள்வது என்பது தனிப்பட்ட பிரச்சினையாகாது; அதற்குத் தான் மட்டும் காரணமல்ல. மற்ற வீட்டுக்காரர்களால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்ல முடியாது. சாக்கடைக் கால்வாய் எங்கிருந்து தொடங்குகிறது என்பது தெரியாமல் ஊரைச் சுற்றி வலம் வருகிறது. அதில் என்ன கலக்கிறதென்று கண்டுபிடிப்பது கடினம். இப்போதெல்லாம் மக்கள் தேவையில்லாமல் கழிவுநீரை உண்டாக்குகிறார்கள். தாம் என்ன செய்கிறோமென்பதை அறியாமல் பலவகையான பிளாஸ்டிக் குப்பைகளையும் கொட்டுகிறார்கள். அதிகமான கழிவுநீர் வெளியேறுவதற்கு ஏற்ற வாய்க்கால்களுமில்லை. ஒரே மட்டத்திலுள்ள பெரிய கால்வாயிலிருந்து பின்வாங்கியும் கழிவுநீர் புகுந்திருக்கலாம். அது அவருடைய வீட்டெதிரில் தற்செயலாகத் தேங்கியிருக்கிறது. அதற்கு அந்த வீட்டார் பொறுப்பாக முடியாது. சுந்தரமூர்த்தி மற்றவர்கள் சொல்வதையெல்லாம் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தார்.

இன்னும் இரண்டு மூன்று வீட்டுக்காரர்கள் கூடிவிட்டார்கள். “சாக்கடை அதிகமாயிட்டே போவுது... இப்படியே விட்டா அவ்வளவுதான்” என்றார் ஒருவர். “நாத்தத்தைத் தாங்க முடியல, கதவுகளை சாத்தி வைச்சாக்கூட உள்ள அடிக்குது” என்றார் பக்கத்துவீட்டுக்காரர். “ராத்திரியெல்லாம் தூக்கமில்ல, சாப்பிட முடியல” என்றாள் அவருக்குத் துணையாக அவரது மனைவி. “தெருவுல போக வரகூட வழியில்ல...” என்றார் இன்னொருவர். “சாக்கடையில கொசுவுங்க உற்பத்தியாகி கடிச்சு அதனால ஏதேதோ நோய்ங்க வரலாம்னு சொல்றாங்க” என்று விளக்க முயன்றார் எதிர்ப்புற வீட்டுக்காரர். “இங்க மனுசங்க நிம்மதியா இருக்கறதா? இல்லையா?” என்று கொஞ்சம் குரலை உயர்த்தினார் பக்கத்துவீட்டுக்காரர். “உங்க வீட்டெதிரில் சாக்கடை தேங்கிக் கிடக்குறதால இதுக்கு நீங்கதான் ஒரு முடிவு கட்டணும்” என்றார் மற்றொருவர். கடைசி வீட்டுக்காரர் சமாதானக் குரலில் “நாம போயி கவுன்சிலர பார்ப்போம். அவரு சொன்னா உடனே வந்து சுத்தம் பண்ணுவாங்க” என்றார். “சரி, போகலாம் வாங்க...” என்று உடனடியாகக் கிளம்பினார் சுந்தரமூர்த்தி. அவர் நகரமன்ற உறுப்பினரைக் கடைசியாகப் பார்த்தது வாக்கு கேட்க வந்தபோதுதான். அப்போது, கூப்பிய கைகளுடன் மிரட்சியான பார்வையுடனிருந்தார் அந்தப் பெண் வேட்பாளர். அவரை வெள்ளையும்சொள்ளையுமான நிறைய ஆண்கள் சூழ்ந்திருந்தார்கள்.
நகரமன்ற உறுப்பினர் வீட்டுக்குப் போகும் வழியில் தத்தமது வீடு வந்ததும் நாலைந்துபேர் தயங்கி நின்றுவிட்டார்கள். ஆலோசனை கூறிய எதிர்வீட்டுக்காரரும் வேலைக்கு நேரமாகிறதென்று நழுவினார். சுந்தரமூர்த்தியும் மூலைவீட்டுக்காரரும் மட்டும் மிஞ்சினார்கள். அவர்கள் இரண்டுமூன்று தெருக்கள் தள்ளியிருந்த நகரமன்ற உறுப்பினர் வீட்டை அடைந்தார்கள். அழைப்பு மணியை அழுத்தியதும் அங்கங்கே ஈரமான நைட்டியுடனிருந்த கவுன்சிலரம்மா கதவுக்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்த்துவிட்டு “இருங்க...” என்று திரும்பிச் சென்றார். கொஞ்சநேரம் கழித்து மார்பைச் சொறிந்தபடி கவுன்சிலரின் கணவர் பனியனுடன் வெளிப்பட்டார். “என்ன விசயம்?” என்றார். சுந்தரமூர்த்தி தெருவில் சாக்கடை தேங்கியிருப்பதைத் தயக்கத்துடன் சொன்னார். துண்டைப் போர்த்திக்கொண்டு பின்னால் வந்துநின்ற கவுன்சிலரம்மா ‘இதுக்கெல்லாமா நாங்க பொறுப்பு?’ என்பதைப்போல் புன்னகை செய்தார். தான்தான் உண்மையான கவுன்சிலர் என்று காட்டுவதைப்போல் “சரி, ஆபிசு திறந்ததும் ஆளுங்களை அனுப்பி பாக்கச் சொல்றேன்” என்றார் சுருக்கமாக கவுன்சிலரம்மாவின் கணவர். திரும்பும் வழியில் “சுத்தம் பண்ண வர ஆளுகிட்ட பத்தோ இருபதோ கொடுத்தா எல்லாத்தையும் வாரிப் போட்டு போயிடுவாங்க” என்றார் மூலைவீட்டுக்காரர் ஆறுதலாக. பெரிய சுமையை இறக்கிவைத்ததுபோல் உணர்ந்தார் சுந்தரமூர்த்தி.

தெருமுனையிலிருந்தே வீட்டுக்கெதிரில் பட்டுத்துணி விரித்ததைப்போல் சாக்கடை பளபளப்பாகத் தெரிந்தது. காற்றில் நாற்றம் மிதந்துகொண்டிருந்தது. சுந்தரமூர்த்தி தன்னையுமறியாமல் மூக்கைப் பொத்திக்கொண்டார். பள்ளிப் பிள்ளைகளை அடைத்திருந்த ஓர் ஆட்டோ அவரைக் கடந்துசென்று சாக்கடையின் முன்னால் சட்டென ‘பிரேக்’கிட்டு நின்றது. பின்னர் அதிருப்தியுடன் அடிக்குரலில் கத்தியவாறு கனத்த மூட்டைமுடிச்சுகளுடன் திரும்பிச் சென்றது. வாய் மூடிக்கிடந்த பிள்ளைகளிடம் அந்தச் சிறிய மாற்றம் சலசலப்பையுண்டாக்கியது. கைகளையாட்டி ஏதேதோ பேசிக்கொண்டார்கள். இருசக்கர வாகனவோட்டி ஒருவர் சாகச மனோபாவத்துடன் கழிவுநீரைக் கிழித்துக்கொண்டு சென்றார். இருபுறமும் நீர் வெள்ளித்துளிகளாகச் சிதறியது. மற்றொரு வாகனமும் தைரியமாகப் பாய்ந்து சென்றது. சுந்தரமூர்த்தி தன்மேல் தெறித்த நீர்த்துளிகளைத் துடைக்க முயன்றார். அவர் மனைவி எங்கிருந்தோ இரவல் பெற்ற செங்கற்களால் வீட்டுக்கு முன்னால் தற்காலிகப் பாலத்தை அமைத்திருந்தாள். கற்களின்மேல் கால்களை ஊன்றிச் சமநிலை செய்து சுந்தரமூர்த்தி வீட்டுக்குள் நுழைந்தார். அவர் மகள் புத்தகப்பை, வெண்சீருடையுடன் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள். “பாத்தும்மா, மேல சாக்கடைத் தண்ணி பட்டுடப் போகுது” என்றார். அவள் தலையாட்டிவிட்டு நடனமாடுவதைப்போல் சர்வசாதாரணமாகச் செங்கற்களின்மீது கால்வைத்து சாக்கடையைத் தாண்டிச் சென்றாள். இறுதியாகத் திரும்பிப் பார்க்காமல் ஒரு கையசைப்பு.

சுந்தரமூர்த்தி தலையில் வெறுமனே நீரை ஊற்றிக் கொண்டிருந்தார். உடம்பில் தாரைகளாக நீர் வழிந்து குளியலறைக் குழிக்குள் இறங்கி மறைந்துகொண்டிருந்தது. அது நேராகத் தெருவுக்குப்போய்க் கழிவுநீராகத் தேங்கப் போகிறதென்று நினைத்துக்கொண்டார். அனைவரையும் தொந்தரவு செய்யும் சாக்கடையின் அளவு மேலும் கூடும். தன்னால் கொஞ்சம் மாசு அதிகமாகிறது. இருந்தாலும் உடலும் மனமும் குளிர்ந்துகொண்டிருந்தன. இதற்கு முன்பு குடியிருந்த வீட்டுக்கு அருகிலிருந்த சாக்கடைக் கால்வாயில், நீண்டகாலத்துக்கு முன்னால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது ஞாபகம் வந்தது. அப்போது தொடர்ந்து இரண்டுமூன்று நாட்களாக அடைமழை பெய்தது. சில பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் பரிதவித்தார்கள். அவர்களுக்கு இரண்டுமூன்று நாட்களுக்குப் பிறகுதான் உதவிகள் கிடைத்தன. அதுவும் அரசாங்கத்தால் அல்ல, தனிப்பட்ட சில நபர்களால். சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டால் அதிகப்படியான மழை உண்டானது என்று தொலைக்காட்சியில் நிபுணர்கள் சொன்னார்கள். அப்படி ஒரேயடியாகப் பெரிய மழையில்லையென்றும் வழக்கமான அளவுதான் பெய்தது, போதிய வடிகால்களில்லாததால் நமக்கு அப்படித் தெரிகிறது என்றும் வேறுசில அறிஞர்கள் கருத்து தெரிவித்தார்கள். ஊடகங்களில் பெரிய விவாதம் ஒன்று மூண்டது. உண்மைக் காரணம் என்னவென்று கடைசிவரை அறிய முடியவில்லை

அந்தக் கோடைகாலத்தில் கனத்த மழை பெய்தது. திடீரென்று வீட்டருகிலிருந்த சாக்கடைக் கால்வாயில் செம்மண் நிறத்தில் நீர் பாய்ந்து வந்தது. அது வீடுகளுக்குள் புகுந்துவிடுமோ என்ற பயம்கூட உண்டாகியது. இதுவரையில் யாரும் கால்வாயில் நீரோடிப் பார்த்ததில்லை. எப்போதும் சாக்கடைதான் கறுப்பாக ஆழ்ந்த மோனத்துடன் சென்றுகொண்டிருக்கும். இப்போது மழை நின்ற பிறகும்கூட அதில் கட்டுக்கடங்காமல் புதுவெள்ளம் புரண்டது. அங்கங்கே கடற்பஞ்சுத் துண்டுகளைப்போல் நுரைகள் பொங்கி மிதந்தன. எங்கோ தொலைதூரங்களிலுள்ள இன்னும் அழிபடாத காடுகளின் மடியில் காட்டாறு உற்பத்தியாகி இருக்கிறது. அங்கு பொழிந்த மழையெல்லாம் திரண்டு சரிவுகளில் வேகமாக இறங்கிவந்திருக்கிறது. அது பிளாஸ்டிக், காகிதம், துணி, மண் போன்ற அடைத்திருந்த குப்பைகளையெல்லாம் புரட்டித் தள்ளியது. எவ்வித தங்குதடைகளுமில்லாமல் கால்வாயை நிறைத்து ஓடியது. கொஞ்ச நேரம் கழித்து, யாரோ ஒப்பந்ததாரர் கணிசமாக லஞ்சம் கொடுத்து அற்பமான சிமென்டாலும் கற்களாலும் கட்டிய குட்டையான கரைகளைத் தாண்டியது. சாலையின் குறுக்காகப் புதைக்கப்பட்டிருந்த குறுகலான கான்கிரீட் குழாய் வழியாகப் பாய்ந்து மறுபுறம் போக முயன்றது. அது முடியாமல் சாலையின் மீதேறி பாதையைக் கிழித்துக்கொண்டு சென்றது. போகும்வரும் வாகனங்கள் வெள்ளத்தைக் கடக்கவியலாமல் திகைத்தன. ஒலிப்பான்கள் பலமுறை அலறிப்பார்த்தும் வழி கிட்டவில்லை. அவை வேறுவழியில்லாமல் மகத்தான இயற்கைக்கு மரியாதை செலுத்துவதைப்போல் இருபக்கமும் வரிசையாக நின்றன. தங்களின் அவசரப் பயணங்களைத் தற்காலிகமாக மறந்து அந்த அரிய காட்சியைக் கண்டுகளித்தன.

போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் நகரம் இரண்டு பிரிவுகளானது. மக்கள் திரண்டு வந்து அதிசயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எப்போதும் பழைய நினைவுகளில் வாழும் ஒரு கிழவர், “இது உண்மையில் காட்டாறு போற வழி. எல்லோரும் ஆக்கிரமிச்சதால சின்னக் கால்வாயா மாறிப்போயி சாக்கடையா ஓடுது...” என்றார். அவர் புளுகுகிறார் என்று எண்ணிச் சில இளைஞர்கள் கோணலாகச் சிரித்தார்கள். “அந்தக் காலத்துல எப்பவும் தண்ணி போகும். அப்படியே அள்ளிக் குடிக்கிற மாதிரி சுத்தமாயிருக்கும். நாங்க தினமும் இதுலதான் குளிப்போம்...” என்று கிழவர் சன்னதம் வந்தவரைப்போல் தாள முடியாமல் பிதற்றிக்கொண்டிருந்தார். அருகிலிருந்த சுந்தரமூர்த்தி வியப்புடன் கிழவரையும் கால்வாயையும் கவனித்துக்கொண்டிருந்தார். கிழவர் வேறொரு ஆற்றின் ஞாபகத்தில் உளறுகிறார் என்றும் தோன்றியது. இருந்தாலும் கால்வாயில் குதித்தோடும் நீரின் குதூகலத்தைக் காணும்போது கிழவனாரின் வார்த்தைகள் சத்தியமாகப்பட்டன. கானாறு கொஞ்ச நேரத்துக்கு தன் சுயரூபத்தைப் பெற்றுத் தனக்குச் சொந்தமான வழிகளைக் கண்டடைந்து பாய்ந்துகொண்டிருந்தது. பிறகு வடிந்து மெல்ல அடங்கி சிறிய ஓடை போலானது. அதுவும் சுருங்கிப் பழைய கால்வாயாக ஓடியது. பிறகு வழக்கம்போல் கறுப்பான சாக்கடையானது. வாகனங்கள் பெருமூச்சுகளுடன் பழையபடி விரைய ஆரம்பித்தன. சுந்தரமூர்த்தி வெகுநேரம் வீட்டுவாசற்படியில் நின்று சாலையின் பள்ளங்களில் தேங்கியிருந்த மிச்சம்மீதி நீரைப் பார்த்துக்கொண்டிருந்தார். இளம் வயதில் கிராமத்தில் வாழ்ந்து பழகிய அவரால் அந்த வெள்ளத்தை மறக்கவே முடியவில்லை.

சுந்தரமூர்த்தி குளித்துமுடித்ததும் வழக்கம்போல் மொட்டைமாடிக்குச் சென்று துவாலையைக் காயப்போட்டுவிட்டு சூரியனுக்கு எதிரில் கண்களை மூடி நின்றார். உள்ளே ரோஜா நிற ஒளி ஊடுருவிப் பரவியது. தான் வேலைக்குப் புறப்படுவதற்குள் சாக்கடையின் தேக்கத்தைப் போக்க நினைத்தார். ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றியுள்ள அழுக்கைக் களைய வேண்டும். அப்போதுதான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ள கசடுகள் நீங்கும். அவருக்குள் ஒரு தீர்மானமுண்டாகி மனநிறைவை அளித்தது. மிகுந்த உவகையுடன் சமையலறைக்குச் சென்றார். பரபரப்பாகச் சமையல் செய்துகொண்டிருந்த மனைவி ஒன்றும் புரியாமல் அவரை ஏறெடுத்துப் பார்த்தாள். அவர் எதுவும் சொல்லாமல் கதவின்மீது கால்களை வைத்துப் பரணுக்கு ஏறினார். சமையலறை மூலையின் மேற்புறத்தில் சிமென்ட் பலகைகளால் குகை போன்ற ஓரிடம் கட்டப்பட்டிருந்தது. பழைய தொட்டில், கரி படிந்த அண்டா, உடைந்த நாற்காலி, மண்வெட்டி, கடப்பாரை எல்லாம் தூசு படிந்து தாறுமாறாகக் கிடந்தன. அந்த மண்வெட்டி அப்பாவுக்குச் சொந்தமான கொஞ்சம் நிலத்தை விற்றபோது ஞாபகமாக எஞ்சியது. நீண்ட உபயோகத்தால் வழுவழுப்பான கைப்பிடியும் கூரிய கத்தியைப்போல் தகடும் இருந்தது. இரண்டுமூன்று வெட்டுக்கே அது துரு நீங்கி வெள்ளிபோல் பளபளக்கும். அதையெடுத்துக் கீழே நின்றிருந்த மனைவியிடம் கொடுத்தார். அவள் பத்திரமாக வாங்கிக்கொண்டாள். பரணிலிருந்து இறங்கி மண்வெட்டியை எடுத்துக்கொண்டு தெருவுக்கு வந்தார்.

வீட்டுக்கெதிரில் சாக்கடை கனத்த மௌனத்துடன் காத்திருந்தது. தெருவில் மேலும் கழிவுநீர் கூடிவிட்டதாகத் தோன்றியது. அது சுத்தமான தண்ணீரைப்போல் சூரியனையும் நீல வானையும் மாசுமருவில்லாமல் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் கூடையைச் சுமந்து செல்லும் காய்கறி விற்கும் கிழவியைத் தவிர தெருவில் வேறு யாருமில்லை. மனைவியும் வேலையாக உள்ளே நின்றுவிட்டாள். சுந்தரமூர்த்தி லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டார். மண்வெட்டியைக் கெட்டியாகப் பிடித்தார். கைப்பிடியைத் தொடுகையில் அவருக்குத் தம் மூதாதைகளைத் தீண்டியதைப்போல உணர்வேற்பட்டு மெய்சிலிர்த்தது. மெதுவாகக் கால்வாய்க்குள் இறங்கினார். சாக்கடையில் கால்கள் முட்டிவரை குளிர்ச்சியாகப் புதைந்தன. அவற்றை அசைக்க முடியவில்லை. அவர் குனிந்து கால்வாயில் அடைத்திருந்தவற்றை மண்வெட்டியால் வாரி மேலே கொட்டத்தொடங்கினார். வெப்பமான ஆவி எழுந்து முகத்தின்மேல் வீசியது. பல காலமாக மட்கிய நாற்றம் மூச்சை அடைக்கவைத்தது. அவர் காற்றை உள்ளே இழுத்துக் கொஞ்ச நேரம் அடக்கிக்கொண்டார். பிறகு திரும்பவும் நிதானமாகச் சுவாசிக்க ஆரம்பித்தார். படிப்படியாக நாற்றம் குறைந்துகொண்டிருந்தது. அவர் தொடர்ந்து சாக்கடையை வாரிப்போட்டுக்கொண்டிருந்தார். கறுப்பு நிறத்தில் தயாரிக்கப்பட்டவை போலிருந்த பிளாஸ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் துணிக்கந்தல்களும் அள்ளஅள்ளக் குறையாமல் பெருகிக்கொண்டிருந்தன. அவை மண்வெட்டியில் சுலபத்தில் சிக்காமல் மீன்களைப்போல் நழுவின. அவற்றுக்கிடையில் நசுங்கிய மினரல் தண்ணீர் பாட்டில் ஒன்று கால்வாயின் குறுக்காகச் சிக்கியிருந்தது. அதையும் எடுத்து வெளியில் போட்டார். மண்வெட்டியில் கருப்பு மெழுகைப்போல் ஒட்டிய கால்வாயின் கீழேயிருந்த சேற்றையும் அள்ளியெடுத்தார். தெருவில் தேங்கியிருந்த கழிவுநீர் மறுபடியும் கால்வாயில் இறங்கி வேகமாக நகர ஆரம்பித்தது. அவர் இன்னும் கொஞ்சதூரம் கால்வாய்க்குள் நடந்து நிறைந்திருந்தவற்றை வாரினார். மேலும் சிமென்ட் கால்வாய் முனைவரையிலும் போய் ஓரளவுக்குச் சுத்தம் செய்தார். அவரை வழியில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்படியே கவனித்திருந்தாலும் சீருடையற்ற துப்புரவுப் பணியாளர் ஒழுங்காக வேலை செய்கிறார் என்றுதான் எண்ணியிருப்பார்கள். எல்லாம் முடிந்ததும் மண்வெட்டியுடன் மேலே ஏறி வீட்டுக்குத் திரும்பினார். வெளியில் அங்கங்கே சிறிய குன்றுகளைப்போல் சேறு சகதியுடன் குப்பைகள் குவிந்திருந்தன. வீட்டெதிரிலிருந்த நீர் முழுவதுமாக வடிந்துவிட்டிருந்தது. கால்வாயில் அடியிலிருந்த மண்ணும் மணலும் தெளிவாகத் தெரிய கழிவுநீர் ஓடிக்கொண்டிருந்தது. சுந்தரமூர்த்திக்குப் பழைய கானாறு தன்னால் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுவிட்டதைப் போல் தோன்றியது.


நன்றி காலச்சுவடு அக்டோபர் 2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக