நமது சொல் வேட்டையின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லுக்கு இசைவான தமிழ்ச் சொல்லை, பழைய இலக்கியங்களிலிருந்தும், மொழி ஆராய்ச்சி நூல்களிலிருந்தும் தேடித் தெரிந்து கொள்வதா? அல்லது ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து அதைப் புழக்கத்தில் விடுவதா?' என்று ஷா.கமால் அப்துல்நாசர் என்பவர் ஓர் அடிப்படை கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து புழக்கத்தில் விடுவது என்றால், அதைத் தமிழர் மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு, அவ்வாசகர் ""தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்'' என்ற குறளை மேற்கோள் காட்டி, அக்குறளில் வரும் "கடிகொண்டார்' என்ற சொல்லை அடித்தளமாகப் பயன்படுத்தி, ஆங்கிலத்தில் சொல்லப்படும் "புரொஹிபிட்டரி ஆர்டர்' என்ற சொற்றொடருக்கு "கடிகொள்ளாணை' என்ற சொல் பொருத்தமாக இருப்பினும், புழக்கத்தில் "தடுப்பாணை' என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்பதைக் குறிப்பிட்டு, சொல் வேட்டையில் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்.
வாசகர்கள் பலருக்கும் இப்படிப்பட்ட கேள்விகளும், ஐயங்களும் எழுந்திருக்கலாம். எனவே, இதைத் தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமை.
இச்சொல் வேட்டையின் உண்மையான நோக்கம், புதுச் சூழ்நிலைகளுக்கும், புதுக் கருத்துகளுக்கும் பொருந்தும் புதுச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதே! ஆனால், இந்த சொல் வேட்டையைத் தொடங்கிய பிறகு, புழக்கத்திலிருக்கும் ஒருசில ஆங்கிலச் சொற்களுக்கே பெருவாரியான மக்கள் ஏற்றுக்கொள்ளும் அல்லது பழக்கத்தில் கொண்டு வந்திருக்கும் சொற்கள் தமிழில் இல்லையோ என்ற ஐயம் எழுந்தது. அதோடு, வாசகர்களும் இச்சொல் வேட்டைக்குப் பல்வேறு பரிமாணங்களை அளித்து, பல்வேறு கோணங்களில் இதை அணுகத் தொடங்கியதால், சொல் வேட்டையின் நோக்கமும், அது தொடங்கப்பட்ட தளமும், என்னையும் அறியாமலேயே விரிவுபடுத்தப்பட்டு, புதுச் சூழ்நிலைகளுக்கான புதுச்சொற்கள், புது அல்லது பழங்கருத்துகளுக்கான அருஞ்சொற்கள், அவ்வருஞ் சொற்களின் எளிமைப் படுத்தப்பட்ட வடிவங்கள், அவ் வடிவங்களில் எளிதில் புழக்கத்திற்கு வரக்கூடியவை என்றெல்லாம் சொல்வேட்டையின் தளம் விரிவு படுத்தப்பட்டுவிட்டது. எனவே, இதை இனியொரு சிறிய எல்லைக்குள் சிறைப்படுத்த முடியாது.
இனி இந்தவாரச் சொல் வேட்டைக்கு வருமுன், சுவையான சில செய்திகளை வாசகர்களுக்குச் சொல்ல விழைகிறேன். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், உலகின் தொன்மையான மொழிகளில் "பங்க்சுவேஷன் மார்க்ஸ்' எனப்படும் குறியீடுகளுக்கான தேவை பழங்காலத்தில் அமையவில்லை போல் தெரிகிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் சில குறியீடுகளை கிறிஸ்துவுக்கு முன்பே (கி.மு.) பயன்படுத்தியதாகத் தெரிந்தாலும், உலகம் முழுவதிலும் புனித விவிலியம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட காலத்தில்தான் இக் குறியீடுகளுக்கான தேவை அதிகரித்ததாகத் தெரிகிறது. பதினாறாம் நூற்றாண்டில் ஆல்டஸ் மேனுடியஸ் என்பவரால் இக்குறியீடுகள் முறைப்படுத்தப்பட்டதாக ஒரு குறிப்பும் உண்டு.
அதிகமாக நம்மிடம் புழக்கத்திலிருக்கும் பங்க்சுவேஷன் மார்க்ஸ், கமா, ஃபுல் ஸ்டாப், கோலன், பிராக்கட், எக்ஸ்க்ளமேஷன், அப்பாஸ்ட்ரஃபி, கொட்டேஷன், கொஸ்டின் மார்க் ஆகியவைதான். ஆனால், அவற்றைத் தாண்டி பல பங்க்சுவேஷன் மார்க்ஸ் இன்று ஆங்கிலத்தில் பெருவாரியாகப் பழக்கத்தில் வந்துவிட்டன. அவை: (1) டாகர் அல்லது ஓபிலிஸ்க் - கூறியது கூறும் குறையைக் களைவதற்கான குறியீடு (2) காரட் அல்லது வெட்ஜ் - சொன்ன கருத்தில் விட்டுப்போன ஒன்றைக் குறிக்கும் குறியீடு (3) சாலிடஸ் - நாணயத்தின் பல்வேறு மதிப்புகளை, அதாவது ரூபாய்க்கும், காசுக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்ட, தற்போதைய டெசிமல் முறை கொண்டுவரப்படுவதற்கு முன் பயன்படுத்தப்பட்ட குறியீடு, (4) ஆஸ்டரிக் - ஒரு சொல் அல்லது கருத்தின் விரிவாக்கத்தை வேறிடத்தில் விரித்துரைப்பதைக் காட்டும் குறியீடு, (5) கில்மெட்ஸ் - ஆங்கிலமல்லாத மொழிகளில் கொட்டேஷன் மார்க்காகப் பயன்படுத்தப்படும் குறியீடு, (6) ஷெப்ஃபர் ஸ்ட்ரோக் - கணிதத்தில் கால்குலஸ்ஸில் பயன்படுத்தப்படும் குறியீடு, (7) பிகாஸ் சைன் - காரணம் என்ற சொல்லைக் குறிக்கும் குறியீடு (இது "ஆகவே' என்ற சொல்லைக் குறிக்கும் குறியீட்டைத் தலைகீழாகப் போடும் குறியீடு), (8) செக்ன் சைன் - பொதுவாக வழக்குரைஞர்களால் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவை மாறுபடுத்திக்காட்டப் பயன்படுத்தப்படும் குறியீடு, (9) எக்ஸ்க்ளமேஷன் கமா - ஒரு வாக்கியம் முடியும் முன்பே ஏற்படும் ஆச்சர்யத்தைக் குறிக்கும் குறியீடு, (10) கொஸ்டின் கமா - ஒரு வாக்கியம் முடியும் முன்பே ஏற்படும் வினாவைக் குறிக்கும் குறியீடு, (11) இன்ட்டெர்ரோபாங்க் - வியப்பையும், வினாவையும் ஒருசேரக் குறிக்கும் குறியீடு, (12) ஹீடரா அல்லது பில்க்ரோ - ஒரு பத்திக்கும் இன்னொரு பத்திக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிக்கும் குறியீடு, (13) ஸ்னார்க் - சொன்ன சொல்லுக்குக் கிண்டலாக இன்னொரு பொருள் உண்டு என்பதைக் குறிக்கும் குறியீடு.
கணினியின் தாக்கம் அதிகரித்த பிறகு, இன்னும் பல குறியீடுகள் இளைய தலைமுறையிடம் வந்துவிட்டன. தங்களுடைய மகிழ்ச்சி, துயரம், அழுகை, வியப்பு போன்ற உணர்ச்சிகளைக் காட்டும் குறியீடுகள் இன்று கைபேசியிலும், கணினியிலும் வந்துவிட்டன. இனி இந்தவாரச் சொல்வேட்டைக்கு வருவோம்.
பங்க்சுவேஷன் மார்க்ஸ், மேலை நாட்டு மொழிகளின் வரவால் தமிழ் மொழியில் பயனாக்கம் பெற்றன என்றும், ஓலைச்சுவடிகளில் எழுத்தாணியைக் கொண்டு எழுதப்பட்ட காலங்களில், சுவடிகள் கிழிந்துவிடும் வாய்ப்பு இருந்தமையால் இக்குறியீடுகள் பயன் படுத்தப்படாமல் இருந்தன என்றும் குறிப்பிட்டுவிட்டு, புலவர் அரு.சுந்தரேசன், அச்சொல்லுக்கு "நிறுத்தற்குறிகள்' என்றச் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். மேலும் அனைத்து நிறுத்தற்குறிகளையும் வரிசைப்படுத்தியுள்ளார்.
வி.ந.ஸ்ரீதரன், "வாக்கியக்குறியீடு' என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார். பாபாராஜ் என்பவர், சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியத்தை மேற்கோள்காட்டி பங்க்சுவேஷன் மார்க்ஸ் என்றச் சொல்லுக்கு நிறுத்தக்குறியீடு, முத்திரைகள் என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார்.
செ.சத்தியசீலன், நிறுத்தற்குறிகள், எழுத்துக்கள் அன்று என்றும், அவை பொருள் தரும் அடையாளங்கள் என்றும் குறிப்பிட்டு, "பொருள்குறிகள்' என்பது கூடப் பொருத்தமாக இருக்கும் என்கிறார். டி.வி.கிருஷ்ணசாமி, "குறியீட்டியல்' என்றச் சொல்லைப் பரிந்துரைக்கிறார்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்குங்கால், "பங்க்சுவேஷன் மார்க்ஸ்' என்றச் சொல்லுக்கு "நிறுத்தற் குறிகள்' என்பதே புழக்கத்திற்கு வந்துவிட்ட காரணத்தினாலும், அச்சொல் அனைத்துக் குறியீடுகளையும் உள்ளடக்கிய காரணத்தினாலும், அதுவே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
நன்றி - தமிழ்மணி 06 01 2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக