23/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 10

இங்கிலத்தில் உள்ள பல சொற்கள் இலத்தீன் மொழியிலிருந்து உருவானவை என்பதை அறிவோம். 

"அல்யூசியோ' என்ற இலத்தீன் சொல்லுக்கு "சொல் விளையாட்டு' என்பது பொருள். "அல்யூசியோ' என்ற சொல்லை வேர்ச்சொல்லாகப் பயன்படுத்தி "அல்யூடியர்' என்ற சொல் இலத்தீன் மொழியிலேயே உருவானது. அச்சொல்லுக்கு "கிண்டலாகக் குறிப்பிடுவது' அல்லது "விளையாட்டாகக் குறிப்பிடுவது' என்ற பொருளுண்டு. அந்த இலத்தீன் சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான ஆங்கிலச் சொல்தான் "அல்யூஷன்'.

அச்சொல்லுக்குரிய பொருளை மிகச்சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், "ஒருவரை நேரில் பார்க்காமலேயே, அவரிடம் நேரிடையாகப் பாடம் படிக்காமலேயே அவரை மானசீக குருவாக எண்ணி, ஒருவன் கற்றுத்தேர்ந்தான் என்றால், அதனை நாம் "இவன் ஒரு ஏகலைவன்' என்கிறோம். அப்படி நாம் குறிப்பிடும் முறை அல்யூஷன்.

கண்ணெதிரே அக்கிரமம் நடப்பதைக் கண்டும் காணாதது போல் இருப்பவனை, "இவன் ஒரு திருதராட்டிரன்' என்கிறோம். இது ஓர் அல்யூஷன். ஒரு கட்சிக்குள் அல்லது ஒரு குழுவுக்குள் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர விரும்பும் உறுப்பினரை "இளம் துருக்கியர்' என்றழைப்பதும் அல்யூஷன் ஆகும். இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டு, இந்தவார சொல் வேட்டைக்கு வருவோம்.

"அல்யூஷன்' என்ற ஆங்கிலச் சொல் பொதுவாக எதிர்மறைப் பொருளிலேயே கையாளப்படும் காரணத்தால், அச்சொல்லுக்கு "உட்குறிப்பு' அல்லது "மறைகுறிப்பு' என்னும் சொற்கள் பொருத்தமாக இருக்கலாம் என்று ஷா.கமால் அப்துல் நாசர் எழுதி, திருக்குறள் 128ஆவது அதிகாரத்தின் தலைப்பு "குறிப்பு அறிவுறுத்தல்' என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலவர் இரா.இராமமூர்த்தி, தொல்.செய்யுளியல் 122ஆவது நூற்பாவை மேற்கோள்காட்டி, ""மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு'' ஆகும் என்பதனால், "கரப்பு மொழி' அல்லது "மொழி கரப்பு' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கலாம் என்றும், "பிறிது மொழிதல்' என்பதும் பொருத்தமாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புலவர் செ.சத்தியசீலன், மறைமுகமாக ஒருவரையோ, ஓரிடத்தையோ, ஒரு நிகழ்வையோ உணர்த்தும் சொற்கள் "குறிப்புச் சொற்கள்' என்று கூறப்படுவதாலும், சில சமயம் சில குழுக்களிலுள்ள மக்கள் அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய சொற்களைப் பயன்படுத்திக் கொள்வதை தமிழிலக்கணம் "குழூஉக்குறி' என்று குறிப்பதால், "அல்யூஷன்' என்ற சொல்லுக்கு "பொருள்மறை சொல்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

டி.வி.கிருஷ்ணசாமி, "மறைவாகக் குறித்தல்' அல்லது "குறிப்பால் உணர்த்துதல்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்குமென்கிறார். தி.அன்பழகன், "மறைபொருள்' அல்லது "தொகைசொல்' ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

புலவர் அடியன் மணிவாசகன், பண்டைத் தமிழில் "அல்யூஷன்' என்ற சொல்லுக்கு உள்ளுறைப்பொருள், இறைச்சிப்பொருள், குழூஉக்குறி ஆகிய சொற்கள் பொருந்தும் என்று கூறிவிட்டு, அதற்குச் சான்றாக தொல்.பொருள். 994ஆவது சூத்திரத்தைக் மேற்கோள் காட்டியுள்ளார். அதே சமயம், பொதுவாக ஒருவரிடம் மறைமுகமாகப் பேச நேரும்போது, அதைச் சான்றோர் "முன்னிலைப் புறமொழி' என்பர் என்றும், அது இறைச்சிப்பொருள் போன்றதே என்றும், இவற்றுள் "முன்னிலைப் புறமொழி' என்னும் சொல் எளிமையாகவும், பொருத்தமாகவும் இருக்குமென்கிறார்.

வழக்குரைஞர் அ.அருள்மொழி, ஒரு சொல் நேராகக் குறிக்கும் பொருள் ஒன்றாயினும், அது பயன்படுத்தப்படும் இடம், பொருள் ஆகியவற்றைப் பொறுத்து, அது வேறொன்றைக் குறிப்பதாக அமையலாம் என்றும், அதற்குத் தமிழ் மொழியில் பல சான்றுகள் (இடக்கரடக்கல், தற்குறிப்பேற்றல், வஞ்சப் புகழ்ச்சி, பிறிது மொழிதல்) உள்ளன என்பதை எடுத்துக்காட்டி "அல்யூஷன்' என்பதைப் "பிறிதொன்றுரைத்தல்' என்று சொல்லலாம் என்கிறார். தற்போது சாதாரணமாக "பிக் ப்ரதர் ஈஸ் வாட்சிங்' என்ற சொற்றொடர் அமெரிக்கக் கண்காணிப்பைக் குறிக்கப் பயன்படுத்துவதை எடுத்துக்காட்டி, "அல்யூஷன்' என்பது உருபும் பயனும் தொக்கி நிற்பதாலும், அதில் உட்பொருள் மறைந்து நிற்பதாலும் "மறைபொருள் உவமை' என்பது அதற்கு இணைச் சொல்லாகும் என்கிறார்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, பெருவாரியான வாசகர்கள் "பொருள் மறை' அல்லது "மறை பொருள்' என்பதை அதிகமாகச் சுட்டிக்காட்டி இருப்பதால், "மறை பொருள்' என்பதே பொருத்தமாக இருக்கும்.

நன்றி - தமிழ்மணி 13 01 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக