23/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 16

அருகருகே வைத்துக் காட்டுவது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட "பாரடிக்மா' என்ற பழைய லத்தீன் சொல்லில் இருந்தும், "பாரடீக்மா' என்ற கிரேக்கச் சொல்லில் இருந்தும், 15-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட சொல் "பாரடைம்' ஆகும். இந்தச் சொல்லுக்கு மெரியம் வெப்ஸ்டர் அகர முதலி "உதாரணம்' மற்றும் 'முன் மாதிரி' என்ற பொருள்களைத் தருகிறது. ஆக்ஸ்ஃபோர்ட் அகர முதலியும் கிட்டதட்ட அதே பொருள்களைத் தருகிறது. அறிவியல் வளர்ச்சியின் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்றாசிரியர் "தாமஸ் குன்' தன்னுடைய "அறிவியல் புரட்சியின் வடிவங்கள்' என்ற நூலில் அறிவியல் சார்ந்த "பாரடைம்' என்ற சொல்லுக்கு "ஆய்வாளர்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் பிரச்னைகளையும், தீர்வுகளையும் வடித்துக் கொடுக்கும் அறிவியல் சாதனைகள்' என்று விளக்கம் அளித்துள்ளார். அறிவியல் உலகத்தில் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட படிமங்கள், புதுப்புது சோதனைகளால் அடியோடு மாறிவிடும் மாற்றத்தை, தாமஸ் குன் "பாரடைம் ஷிஃப்ட்' என்று குறிப்பிட்டார். ஒரே விஷயத்தை வேறோர் கோணத்தில் பார்க்க வைக்கும் "பாரடைம் ஷிஃப்ட்' என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கிய தாமஸ் குன், இதை விளக்க ஒரு தோற்ற மயக்கத்தை  உருவாக்கினார். அதனை உருவகப்படுத்தி வரையப்பட்ட படம், ஒரு புறம் பார்க்கும் போது முயலைப் போல் தோற்றமளிப்பதாகவும், இன்னொரு புறம் பார்க்கும் போது வாத்தைப் போலத் தோற்றமளிப்பதாகவும் அமைந்தது. அதற்கு அறிவியல் வரலாற்றாசிரியர் தாமஸ் குன், வாத்து-முயல் தோற்ற மயக்கம்  என்று பெயரிட்டார். இப்படித்தான் பாரடைம் ஷிஃப்ட் என்ற சொற்றொடர் முதன் முதலில் தாமஸ் குன் அவர்களால் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த முன்னுரையையோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், "பாரடைம்' என்ற சொல்லுக்கு மாதிரி, நிலை, படிநிலை அல்லது முறை என்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும், "பாரடைம் ஷிஃப்ட்' என்ற சொல்லுக்கு மாதிரி மாற்றம், நிலை மாற்றம், முறை மாற்றம், படிநிலை மாற்றம் என்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.

புலவர் உ.தேவதாசு, வழிமொழி, மேற்கோள் என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

சோலை.கருப்பையா, உவமை, ஒப்புமை, உதாரணம், முன்மாதிரி, இணையம், உவமானம். அசல், அதே மாதிரி, அதே போல போன்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

டி.வி.கிருஷ்ணசாமி, "நியமனப் பொருத்தம்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். ஆனந்த கிருஷ்ணன், தமிழ் இலக்கணப்படி "மேற்கோள் சொல்' என்பது பொருந்தும் என்றும், வாய்ப்பாடு, முன்மாதிரி, முன்னோடி, உதாரணம், எடுத்துக்காட்டு, மேற்கோள், உள்ளுறை உவமம், உவமேயம் போன்ற சொற்களையும் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.

"பாரடைம்' என்ற சொல்லைக் கருத்தியல், அடிப்படைக் கருத்து, கருத்துரு, வடிவம், அடிப்படை எண்ணம் மற்றும் மனவுரு என்றும், "பாரடைம் ஷிஃப்ட்' என்ற சொல்லை "அடிப்படை மாற்றம்' என்றும் கூறலாம் என்று டாக்டர் ஜி.ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி "பாரடைம்' என்ற சொல்லுக்குக் கட்டளைப்படிவ வாய்ப்பாடு, மேற்கோள் வாய்ப்பாடு என்ற பொருள்களைக் கூறுகிறது. அதே சமயம் மாடல் (Model) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு உருப்படிவம் என்ற பொருளையும், ஆர்ச்டைப் (Arch Type) என்ற சொல்லுக்கு மூலப்படிவம் என்ற பொருளையும் அதே அகரமுதலி அளிக்கிறது. ஆங்கில அகரமுதலிகள் அனைத்தும் "பாரடைம்' என்ற சொல்லுக்கு, "மாடல்' என்ற பொருளையும் அளிக்கின்றன.

மேற்கூறிய அடிப்படையில் வாசகர்களின் கருத்துகளை, பாரடைம் என்ற சொல்லும், பாரடைம் ஷிஃப்ட் என்ற சொல்லும் உருவான வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது, "பாரடைம்' என்ற சொல்லுக்குப் "படிவம்' என்பதும், "பாரடைம் ஷிஃப்ட்' என்ற சொல்லுக்குப் "படிவ மாற்றம்' என்ற சொல்லும் பொருந்தி வரும் என்று தோன்றுகிறது.

நன்றி - தமிழ்மணி 24 02 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக