"சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு, ஆக்ஸ்ஃபோர்ட் போன்ற அகரமுதலிகள், இரண்டு விதமான பொருள்களைத் தருகின்றன. ஒன்று உடற்கூறைச் சார்ந்தது; இன்னொன்று மனப்பாங்கைச் சார்ந்தது. ஒரே சமயத்தில் தொடர்ந்து வெளிப்படும் குறிப்பிட்ட அறிகுறிகளின் தொகுப்பு அல்லது கருத்துகள், உணர்ச்சிகள், நடத்தை போன்றவை ஒரு குறிப்பிட்ட தொடர்போடு கூட்டாகத் தோன்றும் தொகுப்பு என்பதே இவ்விரு பொருள்களாகும்.
மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி கிட்டத்தட்ட 48 வகையான சின்ட்ரோம்களை வரிசைப்படுத்தியுள்ளது. 1540-ஆம் ஆண்டுக்குப்பின், "அடையாளங்களின் ஒன்று சேர்ந்த வெளிப்பாடு' என்ற பொருளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான "சன்ட்ரோம்' என்ற சொல்லில் இருந்தும், ஒன்றாகத் தோன்றும் என்ற பொருளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான "சன்ட்ரோமோஸ்' என்ற சொல்லில் இருந்தும், ஆங்கிலச் சொல்லான "சின்ட்ரோம்' உருவாக்கப்பட்டது.
இந்திய மருத்துவ அகரமுதலி (மெட் இண்டியா) ஆங்கிலத்தில் ஏ முதல் இசட் வரை உள்ள 26 எழுத்துகளில் ஒவ்வொன்றையும் முதல் எழுத்துகளாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டு இன்று பெருமளவில் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் 124 சின்ட்ரோம்களை வரிசைப்படுத்தியிருக்கிறது. எய்ட்ஸ் நோய் என்பது "அக்வயர்ட் இம்யுனோ டெஃபிசியன்சி சின்ட்ரோம்' என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நம் அடி வயிற்றைக் கலக்கும் சில வித்தியாசமான சின்ட்ரோம்கள் பின் வருமாறு:
(1) 8 மில்லியன் குழந்தைகளில் ஒருவரைத் தாக்கும் "ப்ரோஜெரியா சின்ட்ரோம்' (progeria syndrome) மிக வேகமாக அக்குழந்தையை மூப்படையச் செய்து, 12-13 வயதிற்குள் அக்
குழந்தையை மரணமடையச் செய்துவிடும்.
(2) "வேர்வுல்ஃப் சின்ட்ரோம்' (Werewolf syndrome)உடல் முழுவதும் (உள்ளங்கை உள்பட) ஓநாயைப் போல் முடி வளரச் செய்யும் குறைபாடு.
(3) "லெஷ்-நைஹன் சின்ட்ரோம்' (Lesch-nyhan syndrom) என்பது ஒரு மனிதனைத் தனது உடலின் சில பாகங்களைத் தானே கடிக்க அல்லது சிதைக்கத் தூண்டும் மனநலக் குறைபாடு.
(4) "லாக்ட்-இன் சின்ட்ரோம்' (Locked-in syndrome) என்பது கண், செவி, மூக்கு போன்ற புலன் உணர்வுகள் அப்படியே இருக்கும்போதும், உடல் முழுவதும் மொத்தமாக செயல் இழந்து முடங்கிப் போகும் முடக்குவாதம் அல்லது பக்கவாதத்தைக் குறிப்பதாகும்.
(5) "லாசரஸ் சின்ட்ரோம்' (Lazarus syndrome) என்பது மருத்துவர்களால் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும், திடீரென்று உயிர்த்தெழும் நிலையைக் குறிப்பதாகும். அமெரிக்காவில் டெலவர் நகரத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் பிணவறை ஊழியரால் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 61 வயதுப் பெண்மணியின் கதை இந்த வகை சின்ட்ரோமை அறிமுகப்படுத்தக் காரணமாக அமைந்தது.
இத்தகைய சுவையானத் தகவல்களோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம். "சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு நோய்க்குறியம் அல்லது நிலைமை காட்டி என்ற சொற்களை ஆனந்த கிருஷ்ணன் பரிந்துரைக்கிறார். தெ.முருகசாமி ஒத்தறிதல், ஒழுகுதல் என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்படுவதால் "ஒத்துணர்வு' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.
வெவ்வேறு பொருள்களில் நிகழும் தொடர்புடைய செயல்களால் ஒரு பொதுமை எண்ணம் ஏற்படுவது சின்ட்ரோம் எனப்படுவதால் "ஒத்தமைவு' என்ற சொல் பொருந்தும் என்று புலவர் செ.சத்தியசீலன் எழுதியுள்ளார்.
சோலை.கருப்பையா, டவுன் சின்ட்ரோம் போன்ற பல சொற்களால் ஒரு வெளிக்காரியத்தின் உடன் விளைவாக ஏற்படும் நிகழ்வு குறிப்பிடப்படுவதால் உடன் விளைவு, உடன் குறைபாடு போன்ற சொற்கள் பொருந்தும் என்கிறார்.
முனைவர் ஜி.ரமேஷ், தொடர்புடைய பல சம்பவங்களைக் குறிக்கும் போது இணைப் போக்கு, ஒத்திசைந்திருத்தல் என்று குறிப்பிடலாம் என்றும், இவையன்றி ஒன்றுபடுத்து முறை, ஒத்த சம்பவங்கள் ஆகிய சொற்களாலும் குறிப்பிடலாம் என்றும் எழுதியுள்ளார்.
ஷா.கமால் அப்துல் நாசர், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மனதில் தோன்றும் சிந்தனை அப்படியே தொடர்ந்து நிலைத்து நிற்பது சின்ட்ரோம் ஆகும் என்றும், குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய பின் தாய்க்கு ஏற்படும் மனோ நிலை "எம்ப்டி நெஸ்ட் சின்ட்ரோம்' (empty nest syndrome) என்று அழைக்கப்படுவதால், மனப்போக்கு அல்லது சிந்தைப்போக்கு என்னும் சொற்களே பொருந்தும் என்கிறார். ஆனால், நாம் ஏற்கெனவே கண்டது போல், சின்ட்ரோம் என்பது, ஒருவரது உடற்கூறிலோ, அல்லது மனப்பாங்கிலோ ஏற்படும் நோய், மாறுபாடு, தனித்தன்மை அல்லது குறைபாடு ஆகியவற்றை, எளிதில் அடையாளம் காண உதவும் சில அறிகுறிகளின் கூட்டு வெளிப்பாடு அல்லது தோற்றம் ஆகும். எளிமையாகச் சொல்லப் போனால், சின்ட்ரோம் என்பதை "அடையாளங்களின் அணிவகுப்பு' என்று சொல்லலாம். ஆனால், அப்படிச் சொல்லுவது ஒரு குறைபாட்டோடு தொடர்புடையதாக இருந்தால்தான் அடையாளங்களின் அணிவகுப்பு என்பது சின்ட்ரோம் என்ற சொல்லுக்குப் பொருத்தமாக வரும்.
எனவே, "குறைபாட்டு அறிகுறிகள்' என்ற சொல் பொருத்தமாக அமையலாம்.
"சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "குறைபாட்டு அறிகுறிகள்'.
நன்றி - தமிழ்மணி 17 02 2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக