கடந்த ஆறு வாரமாக நடக்கும் சொல் வேட்டை, பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று, எங்கெங்கோ தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் குடத்தில் இட்ட விளக்கு போல், முகவரி தெரியாமல் தங்களை ஒடுக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே. சொல் வேட்டையின் மூலம் புதுச்சொற்களைப் போலவே, அவ்வறிஞர்களும் வெளிக்கொணரப் பட்டால், அது நமக்கு மிகப் பெரிய மகிழ்வைத் தரும். எனவே, சொல் வேட்டையை வாரந்தோறும் படித்து மகிழ்ந்த அல்லது படித்த பின் மாற்றுக் கருத்து கொண்ட அனைவரும், தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய ஒரு மேடையாகவோ, மன்றமாகவோ இத்தொடரைப் பயன்படுத்திக் கொண்டால், அது அவர்கள் செய்யும் மிகப் பெரிய தொண்டாக அமையும். ஆகவே, வாரந்தோறும் தொடர்ந்து நம்மோடு களத்தில் இறங்கும் வாசகர்களைப் போலவே, இன்னும் பலரும் நம்மோடு பயணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு, இந்தவார வேட்டைக்கு வருவோம்.
ஆங்கிலச்சொல் அகராதிகளின் படி, "இன்புட்' என்ற சொல் இரு சொற்களின் கூட்டுச் சேர்க்கை ஆகும். எனவே, அச்சொல் உள்ளே செலுத்தப்படும் அல்லது கொடுக்கப்படும் பொருளையும் குறிக்கலாம் அல்லது கொடுப்பதான செய்கையையும் குறிக்கலாம். இவை தவிர, ஒருவர் மற்றவர்க்கு வழங்கும் கருத்துகளையும், ஆலோசனைகளையும், செய்திகளையும் கூட அச்சொல்லால் குறிக்கலாம். அதேபோல் "அவுட்புட்' என்ற சொல்லும் இரு சொற்களின் சேர்க்கையே. அச்சொல்லும் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் பொருளையோ, அதன் அளவையோ குறிக்கலாம், வெளியேற்றுவதான செய்கையையும் குறிக்கலாம். கணினி மயமாகிவிட்ட இவ்வுலகில், அச்சொல் செய்தித் தொகுப்புகளின் பரிமாற்றத்தையும் குறிக்கலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.
தாராபுரத்திலிருந்து பல் மருத்துவர் கந்தவேள், "உட்படுதல் - வெளிப்படுத்துதல் அல்லது உள்ளாக்குதல் - வெளியிடுதல்' என்னும் சொற்களை எழுதியிருக்கிறார். காஞ்சிபுரத்திலிருந்து டி.சிவா, இன்புட்-அவுட்புட் சொற்களை மருத்துவத்தோடு பொருத்திப் பார்த்து "இன்புட்' என்பதற்கு "அகஞ்சேரல்' அல்லது "உள்வாங்கல்' என்றும், "அவுட்புட்' என்பதற்கு "புறந்தள்ளல்' அல்லது "வெளியேற்றல்' என்றும் குறிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.
சென்னை உள்ளகரத்திலிருந்து வி.ந.ஸ்ரீதரன், "உள்ளீர்ப்பு, வெளிக்கொணர்வு' என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார். புலவர் அடியன் மணிவாசகன், "இன்புட்' என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படும் காரணத்தால், "அகநிகழ்வு' என்று கூறலாம் என்றும், அதே போல் "அவுட்புட்' என்பதை "புறநிகழ்வு' என்று குறிப்பிடலாம் என்றும் சொல்கிறார்.
வேலூரிலிருந்து புலவர் அரு.சுந்தரேசன், பொருளியல் மற்றும் வணிகத்தின் அடிப்படையில் "முதலீடு-வருவாய்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தலாம் என்கிறார். பேராசிரியர் க.பாஸ்கரன், "அகபங்களிப்பு-புறவிளைவு' என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.
ஆலந்தூர் புலவர் இரா.இராமமூர்த்தி, இன்புட், அவுட்புட் என்னும் சொற்கள் அறிவியல், மின்சாரம், கணினி சார்ந்த சொற்களாக இருப்பதால், இவற்றிற்கு "ஆகாறு - போகாறு, உள்ளீடு - வெளியீடு, உள்ளிறக்கம் - வெளியேற்றம், பெறுதல் - வழங்குதல், தரவு - விளைவு' என்னும் பல்வேறு சொற்களைக் காட்டுகிறார்.
அண்ணா நகரிலிருந்து திரு.ஆனந்தகிருஷ்ணன், உள்ளீடு மற்றும் வெளியீடு என்பவை எல்லோராலும் அறியப்பட்ட சொற்களாக இருப்பதாலும், கருவிகள் மற்றும் இயந்திரங்களின் உற்பத்தியிலும், தொழில்துறையிலும், புழக்கத்தில் இருப்பதாலும் இச்சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.
திருச்சி தி.அன்பழகன், தொழில்துறை சார்ந்தும், கணினி சார்ந்தும் இச்சொற்களுக்கு இணைச்சொற்களைக் காண வேண்டுமென்றும், அதனால் இன்புட்-அவுட்புட் என்பதை "உள்ளுட்டம்-வெளிவாட்டம்' என்று அழைக்கலாம் என்றும் கூறுகிறார்.
புதுச்சேரி தே.முருகசாமி, சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லன் சிலம்பை ஆய்ந்த நிலையைக் கருதி இன்புட்-அவுட்புட் ஆகிய சொற்களுக்கு "அகவேலைப்பாடு, புறவேலைப்பாடு' என்பவை பொருத்தமாகும் என்கிறார். கடலூர் என்.ஆர்.சத்தியமூர்த்தி, "இடுவன-தருவன' என்ற சொற்களைத் தந்திருக்கிறார்.
அச்சொற்களுள் "இடுவன-தருவன' என்ற சொற்கள் பொருள் நயமும், ஓசை நயமும் மிக்கவையாக அமைந்திருந்தாலும், அவை "இடுகின்ற-தருகின்ற' பொருளைக் குறிக்குமேயன்றி, "இடுகின்ற-தருகின்ற' செயல்களைக் குறிக்குமா என்பது ஐயமாக இருக்கிறது. தரவு, விளைவு என்ற சொற்கள் கற்றோர் மனதைக் கவரும் வகையில் இருந்தாலும், உள்ளீடு-வெளியீடு என்ற சொற்கள் புழக்கத்தில் வருவதற்கு எளிமையாக இருக்கும் என்ற காரணத்தால் அச்சொற்களைப் பயன்படுத்துவதே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
சொல் வேட்டை தொடரும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக