21/09/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 6

சொல் விளையாட்டு ஒரு சுவையான விளையாட்டே. ஒரே சொல்லுக்கு பல்வேறு பொருள்களும் ஒரே பொருளைக் குறிக்கும் பல்வேறு சொற்களும் நமது அன்னைத் தமிழில் இருப்பது போலவே ஆங்கிலத்திலும் உண்டு. "ஆப்ஜக்ட்' என்ற சொல் ஒரு பொருளையும் குறிக்கலாம். ஒரு இலக்கையும் குறிக்கலாம். அதே போல் "சப்ஜக்ட்' என்பது ஒரு பொருளை அறியும் அல்லது உணரும் ஒன்றையும் குறிக்கலாம். அதே சமயம் ஒரு கூட்டத்திலோ, ஓர் அவையிலோ, விவாதிக்கப்படும் பொருளையும் குறிக்கலாம். எனவே சில சமயங்களில் இவ்விரு சொற்களுமே ஒரே பொருளில் பயன்படுத்தப்படலாம். சில நேரங்களில் ஒன்றுக்கொன்று அப்பாற்பட்ட (எதிர்மறையாகக் கூட) பயன்படுத்தப்படலாம்.

ஆனால் இவ்விரு சொற்களும் அப்ஜக்டிவ்-சப்ஜக்டிவ் என்ற குறிப்பிட்ட வரையறையில் பயன்படுத்தப்படும் போது, இலக்கு, பொருள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மனம்சார்ந்த குறியீடுகளாக இச்சொற்கள் மாறிவிடுகின்றன. இந்த நுணுக்கத்தின் அடிப்படையில் இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

புலவர் அடியன் மணிவாசகன் சப்ஜக்டிவ் என்பதை வினைமுதல் என்றும், அப்ஜக்டிவ் என்பதை "எதிர்மறை பொருள்' என்றும் சென்னை பல்கலைகழக அகரமுதலியை அடிப்படையாக வைத்தும், ஆனால் அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டும் எழுதியிருக்கிறார்.

வேலூரிலிருந்து புலவர் அரு.சுந்தரேசன், சப்ஜக்டிவ் என்பது "மனதில் தூண்டுதல் இல்லாமல் எழுகிற எண்ணம்' என்றும், அப்ஜக்டிவ்  என்பது "நோக்கம், இலக்கு' என்கிற பொருளிலேயும் குறிக்கப்படுவதால் இவ்விரு சொற்களையும் எண்ணம், கருத்து, நோக்கம், இலக்கு என்ற சொற்களால் குறிப்பிடலாம் என்கிறார்.

கோவையிலிருந்து வழக்குரைஞர் நந்திவர்மன், அப்ஜக்டிவ் என்ற சொல்லுக்கு அகரமுதலியில் "புறவயமான குறிக்கோள்' மற்றும் "நோக்கம்' என்ற சொற்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், "நோக்கம்' என்ற சொல் சரியாக இருக்கலாம் என்று சிவபுராணத்திலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார். சப்ஜக்டிவ் என்ற சொல்லுக்கு "அக எண்ணம் சார்ந்த' என்ற பொருளை எடுத்தியம்பியுள்ளார்.

கடலூர் சத்தியமூர்த்தி, அப்ஜக்டிவ் என்ற சொல்லை "குறிக்கோள்' என்று சொல்லலாம் என்றும், தனிமனித விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிலையில் அச்சொல்லை பயன்படுத்தும் போது முனிவு, கனிவு இன்றி, என்று கூறலாம் என்று சொல்லிவிட்டு அதே போல் சப்ஜக்டிவ் என்பது தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு ஏற்படும் காரணத்தால் அதை  "விழைவு வழி' என்று குறிப்பிடலாம் என்றும் எழுதியுள்ளார்.

கோவை கோவில்பாளையத்திலிருந்து முனைவர் வே.குழந்தைசாமி, அப்ஜக்டிவ் என்பதை "ஒருதலையன்மை' அல்லது "கோடாத சிந்தை' என்றும், சப்ஜக்டிவ் என்பதை "ஒருதலைச்சிந்தை' அல்லது "மனக்கோட்டம்' என்றும் அழைக்கலாம் என்கிறார்.

ஆலந்தூர் புலவர் இரா.ராமமூர்த்தி, அகம், புறம் இந்த இரண்டின் வெளிப்பாடே அனைத்தும் என்பதனால்      சப்ஜக்டிவ் என்பதை "அகவயம்' என்றும், அப்ஜக்டிவ் என்பதை "புறவயம்' என்றும் குறிக்கலாம் என்றும் இது அறிவியலுக்கும், அருளியலுக்கும், காதலுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடுகிறார்.

திருச்சியிலிருந்து தீ.அன்பழகன், சப்ஜக்டிவ் என்பதை "தன்முனைப்பு' என்றும், அப்ஜக்டிவ் என்பதை "தன்மிதப்பு' என்றும் கூறலாம் என்கிறார்.

திருப்பத்தூர் புலவர் ச.மு.விமலாநந்தன், அப்ஜக்டிவ்  என்பதை "பயனுறு நோக்கம்' என்றும், சப்ஜக்டிவ்  என்பதை "தானாக மனதில் எழுகிற' என்றும் குறிப்பிடலாம் என்கிறார்.   ஆனால், இவை அனைத்தும் மிகச் சரியான சொற்களாகத் தெரியவில்லை.

ஆங்கில அகரமுதலிகள் அப்ஜக்டிவ் என்ற சொல்லை சாதாரண எண்ணங்கள், உணர்வுகளிலிருந்து மாறுபட்டு புறப்பொருள்களை ஒரு சரியான துலாக்கோலில் இட்டு எடைபோடுவது என்று குறிப்பிடுகின்றன. சப்ஜக்டிவ் என்ற சொல்லை ஆங்கில அகரமுதலிகள் மனதில் உதிக்கின்ற அல்லது எண்ணுபவரின் எண்ண ஓட்டத்தைச் சார்ந்த ஒன்றாகக் குறிக்கின்றன. ஆக, தான் என்ன நினைக்கிறோம் என்பதை ஒதுக்கிவிட்டு, அறிவியலின்பாற்பட்டு ஒரு செய்தியையோ, ஒரு நிகழ்வையோ, ஒரு நபரையோ எடை போடுவதை அப்ஜக்டிவ் என்றும்; தான் கொண்ட கொள்கை அல்லது முடிவு அல்லது கருத்துகளின் அடிப்படையிலோ அல்லது அறிவியல் சார்பில்லாமலோ எடைபோடும் முயற்சியை சப்ஜக்டிவ் என்றோ சொல்லலாம்.

அந்த வகையில் பார்க்கும் போது வழக்குரைஞர் சேலம் அ.அருள்மொழி தொலைபேசியில் என்னிடம் "அகக்காரணிகளைக் கொண்டு ஒன்றை ஆராய அல்லது எடைபோடப் புகுங்கால், அதை "சப்ஜக்டிவ்' என்று சொல்லலாம் என்றும், புறக்காரணிகளைக் கொண்டு ஆராயும் அல்லது எடைபோடும் முயற்சியை "அப்ஜக்டிவ்' என்றும் சொல்லாமே' என்றார். அந்த வகையில் பார்க்கும்போது, "அப்ஜக்டிவ் - சப்ஜக்டிவ்' என்ற சொற்களுக்கு "புறத்தாய்வு - அகத்தாய்வு' என்றும் சொல்லலாம் என்று கருதுகிறேன்.

"அப்ஜக்டிவ் - சப்ஜக்டிவ்'  என்ற சொற்களுக்கான வாசகர்களின் தேர்ந்த முடிவு  புறத்தாய்வு - அகத்தாய்வு

அடுத்த சொல் வேட்டை

அடுத்த வார சொல் வேட்டைக்கான சொல் - “இன்புட்-அவுட்புட்'

சொல் வேட்டை தொடரும்…

நன்றி - தமிழ்மணி 16 12 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக