கலைமாமணி அறிவானந்தம் அவர்கள் தமழ் இலக்கியத்திலும், புராண இதிகாசங்களிலும் ஆழங்கால் பட்டவர். அவருடைய தக்கயாகப் பரணி என்ற கட்டுரை அதனை நிரூபிக்கும் படைப்பாகும்.
தக்க யாகம் என்பதால், தகாத யாகம் என்ற ஒன்று இருப்பதாக வாசகர்கள் யாரும் கருதிவிடக் கூடாது. தக்கதார், தகாதார் சம்பந்தப்பட்டதல்ல இந்த யாகம்.
தக்க என்ற இந்தச் சொல் தக்கன் என்ற தட்சன். இவன் தேவர்களில் ஒருவன். கட்டுரையில் இவனைப் பற்றிய விரிவான விளக்கம் வருகிறது. இந்த தட்சனை நிர்மூலமாக்கும் நிகரற்ற சக்தியாக எழுந்து வந்தவர்தான் வீரபத்திரர். அந்தச் சுவையான கதையைப் பரணியாகப் படைத்திருக்கிறார் திரு. அறிவானந்தம். படித்துச் சுவையுங்கள்.
- (பொ.ஆர். - ஓம் சக்தி)
தமிழில் பாடப்பட்ட பரணி நூல் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டால், கலிங்கத்துப் பரணி என்று பலரும் சொல்லிவிடுவார்கள். அதற்கடுத்து ஒன்றைச் சொல்லுங்கள் என்றால் தக்கயாகப் பரணி என்று சிலர்தான் சொல்வார்கள்.
வரலாற்றுத் தொடர்புடையது என்பதால், கலிங்கத்துப்பரணி பெற்ற இடத்தை, புராணத் தொடர்புடையது என்பதால் தக்கயாகப் பரணி பெறவில்லையோ என்று தோன்றுகிறது.
ஆனால், தக்கயாகப் பரணியைப் பாடிய ஒட்டக்கூத்தரும் வரலாற்றுச் செய்திகளை அள்ளி வழங்கியவர்தான். மூன்று சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது அவைப் புலவராகவிருந்து உலா பாடியவர்தான். விக்கிரம சோழன் உலா (1118 – 1135), குலோத்துங்க சோழன் உலா (1135 – 1150), இராசராச சோழன் உலா (1146 – 1173) ஆகிய மூன்று உலாக்களும் தமிழிலக்கியச் சிறப்பிற்கும், வரலாற்றுச் செய்திகளுக்கும் களமாக இருந்து உலா வந்து கொண்டிருக்கின்றன.
இவற்றுக்கும் மேலாக குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் என்று பாடி, பிள்ளைத் தமிழ் என்ற பிரபந்த வகைக்கு வித்திட்டவரே ஒட்டக்கூத்தர்தான். இப்படியெல்லாம் முடிமன்னர்களைப் பற்றிப் பாடிய அவர் தமது முதுமைக் காலத்தில் வாழ்நாளெல்லாம் நரஸ்துதியே பாடிக் கொண்டிருந்து விட்டோமே என்று வருந்தி சிவஸ்துதி பாட முனைந்தார். அதுவே தக்கயாகப் பரணி.
கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், காளக்கவி, சருவஞ்ஞகவி, கௌடப்புலவர் என்றெல்லாம் புகழ்பெற்ற ஒட்டக்கூத்தரின் கவிதைகளின் பொருளை ஒருமுறை படித்தவுடனேயே புரிந்துகொள்ள முடியாது. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதற்கு, அவரது பாடலை ஒருமுறைக்கு இரு முறையாகப் படித்துத் தாழைத் திறந்தால்தான் பொருள் விளங்கும் என்பதுதான் பொருள்.
இனி நூலுக்குள் செல்வோம். பரணி என்பது என்ன? ஆயிரம் யானைகளைப் போரில் வென்ற மாவீரன் ஒருவனைப் புகழ்ந்து பாடுவதே பரணி.
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது பரணி
என்று இலக்கண விளக்கப் பாட்டியல் பாடுகிறது. போர் பகைவனின் நாட்டில் நடந்து வெற்றி காண்பதால், தோற்றவன் பெயரால் நூலின் பெயர் அமைவது பரணியின் தனிச் சிறப்பாகும். கலிங்க மன்னன் சோழனிடம் தோற்ற வரலாறு என்பதால் அது கலிங்கத்துப் பரணி எனப்பட்டது. சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரரால் தட்சனின் யாகம் அழிக்கப்பட்டது என்பதால் இது தக்கயாகப் பரணி எனப்பட்டது.
வீரத்திற்குரிய தெய்வம் கொற்றவையான காளி என்பதாலும், பரணி நட்சத்திரத்திற்குரிய அதிதேவதை அவளே என்பதாலும் பரணி என்ற பெயர் ஏற்பட்டதென்றும் கூறப்படுகிறது.
தக்கயாகப் பரணி, பரணி நூலுக்குரிய மரபு மாறாமல், கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது. கலிங்கத்துப் பரணி எல்லாத் தெய்வங்களையும் பாடுகிறதென்றால், தக்கயாகப் பரணியோ உமைபாகர், விநாயகர், முருகர், ஞானசம்பந்தர் என நால்வரை மட்டுமே பாடுகிறது.
உமைபாகர் என சிவபெருமானின் புகழ் பாடுகிறார் ஒட்டக்கூத்தர்.
புயல்வாழ நெடுதூழி புவிவாழ
முதலீறு புகல்வேதநூல்
இயல்வாழ உமைவாழ்வ தொருபாகர்
இருதாளின் இசைபாடுவாம்
இதில் புயல்வாழ என்று மழையை வாழ்த்தும் கவிஞர் அதன்மூலம் நெடுங்காலம் புவிவாழும் வேத நூல்களின் இயல் வாழும் என்கிறார். இவ்விதம் இவையெல்லாம் வாழ்வதற்காகத்தான் இறைவனின் ஒரு பாகத்தில் உமை வாழ்கிறாளாம். அதனால் அம்மை அப்பராக விளங்கும் அந்த இரு தாளினையும் போற்றுவோம் என்கிறார்.
முருகப் பெருமானின் பெருமையைப் பாட வந்த ஒட்டக்கூத்தர்,
ஒருதோகை மிசையேறி உழல்சூரும்
மலைமார்பும் உடனூடுறப்
பொருதோகை சுரராச புரமேற
விடுகாளை புகழ்பாடுவாம்
என்கிறார். இந்திரன் தனது நாடாகிய சுரராசபுரம் எனும் அமராவதியின் சிம்மாசனத்தில் ஏற வேண்டும் என்பதற்காக, முருகன் ஒரு மயில்மேல் ஏறி சூரபத்மனின் மார்பில் மட்டுமின்றி, கிரௌஞ்சகன் எனும் அசுரன் மலையாக மாறி நின்றானே. அவன் மார்பிலும் ஊடுற வேலெறிந்தான் என்கிறது பாடல்.
இவ்விதம் கடவுளரைப் பாடும்போது அந்தத் தெய்வங்கள் பாட்டுடைத் தலைவனுக்கு நன்மை உண்டாகும்படி அருள்புரிய வேண்டும் என்று பாடுவது மரபு. ஆனால், ஒட்டக்கூத்தர் தன்னை வாழ்வித்த சோழ மன்னனுக்குத் தெய்வங்கள் அருள்புரிய வேண்டும் என்று பாடுகிறார்.
கடவுள் வாழ்த்திற்குப் பிறகு கடைதிறப்பு எனும் பகுதி தொடங்குகிறது. போரில் வென்ற வீரர்கள் தங்கள் காதல் மனைவியரை அழைக்கக் கதவைத் தட்டித் திறக்கச் சொல்லுவதுதான் கடைதிறப்பு. இதில் பெண்களின் அழகும், மற்றுமுள்ள சிறப்புகளும் விரிவாகப் பாடப்படும்.
கலிங்கத்துப் பரணியில் இந்தப் பகுதி மிகவும் சுவையாக, அளவாக இருக்கும். ஆனால், ஒட்டக்கூத்தர் நினைத்துப் பார்க்க முடியாத அதீத கற்பனைகளைப் பாடுபவர் என்பதால் கௌடப்புலவர் என்று பெயர் பெற்றவராயிற்றே! அதனால் இப்படியெல்லாம் இருக்கவே முடியாது என்று சொல்லுமளவிற்கு மிகையாகப் பாடுகிறார். அதனால் கடைதிறப்பில் இயல்பாக அமைந்த இரு கவிதைகளை மட்டும் பார்த்துவிட்டு மேலே செல்வோம்.
நீராடி விட்டு வரும் தேவமங்கையர் நீரில் நனைந்த தங்கள் கூந்தலெனும் குழல்களை முறுக்கிப் பிழிந்து முடிந்து கொள்கின்றனர். அதைக் காணும் சுரர் எனும் தேவர்களுக்கோ, அவர்கள் தங்கள் உயிர்களையும், உணர்வுகளையும் அந்தக் குழலோடு சேர்த்துத் திருகுவது போல் இருக்கிறது. இத்தகைய செயல்புரியும் தேவ மங்கையரே கதவைத் திறவுங்கள் என்கிறது இந்தப் பாடல்.
உருகும்சுரர் உயிருண்டன
உணர்வுண்டன ஒழுகத்
திருகுங்குழல் அரமங்கையர்
திறமின்கடை திறமின்
இதோ ஒட்டக்கூத்தரின் உவமை நயத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு பாடல். ஏற்கனவே வள்ளுவர் பெருமானால், ஒரு நோக்கு நோய் நோக்கு மற்றொன்று அதற்கு மருந்து என்று சொல்லப்பட்டதுதான் என்றாலும், இது அதை மேலும் அழகுபடுத்தி உவமை நயத்தோடு பாடுகிறது.
இந்தத் தெய்வமாதிரின் கண்களில் அமுதமும் இருக்கிறது. நஞ்சும் இருக்கிறது. அவை இரண்டும் தாங்கள் இருக்க வேண்டிய சமுத்திரத்தை விட்டுவிட்டு இந்த மாதரின் கண்களுக்குள் வந்துவிட்டன. அவை இவ்விதம் வர வேண்டிய அவசியமென்ன? அதற்கு ஓர் அருமையான காரணத்தைக் கூறுகிறார் ஒட்டக்கூத்தர்.
நஞ்சு சமுத்திரத்தில் தோன்றி வந்தால் அரன் - சிவபெருமான் அதை விழுங்கிவிடுவார். அமுதம் தோன்றி வந்தால் இமையவர் - தேவர்கள் அதைப் பங்கு போட்டுக் கொண்டு உண்டு விடுவார்கள். இவற்றுக்கெல்லாம் பயந்துதான் அமுதமும், நஞ்சும் அந்தத் தெய்வமாதர் கண்களில் புகுந்து கொண்டன என்கிறார்.
அரனும் ஏனைஇமை யவரும்உண்பரென
அஞ்சி நஞ்சும்அமு தமுமுடன்
திரைமகோததியை விடவிருந்தனைய
தெய்வமாதர்கடை திறமினோ
இவற்றுக்குப் பிறகுதான் பரணியின் பிரதானப் பகுதி தொடங்குகிறது. பரணியின் தலைவி மகாகாளியல்லவா? அதனால் அவளைப் பாடத் தொடங்கும் கவிஞர் அவள் இருக்கும் காடு எழுந்தருளியுள்ள கோயில் இவற்றின் தன்மைகளைக் கூறிவிட்டுத் தேவியைப் பாடுகிறார்.
அன்னை தன் திருவடிகளில் நூபுரம் எனும் சிலம்புகளை அணிந்திருக்கிறாள். ஆரணம் எனும் வேதங்களுக்கு ஆதாரமாகவிருக்கிறாள். இளம் நிலவைத் தரித்திருக்கும் சடைமுடியைக் கொண்டவளாகவிருக்கிறாள். இத்தகைய மகாகாளி எத்தகைய சிறப்புக்குரியவள் தெரியுமா? முன்னொரு காலத்தில் துன்பத்திற்காளான தேவர்கள் வாழ்வு, மீண்டும் அவர்களுக்குரிய வாழ்வாகவும், அவுணர் எனும் அசுரரின் வாழ்வு பாழாகவும் அருள்புரிந்தவள். மோகினி வடிவில் அமரர்க்கு அமுதம் ஈந்தவள்.
திருமால்தான் மோகினி வடிவில் அமுதமீந்தவர் என்பது அனைவரும் அறிந்த கதைதான். இருப்பினும் எல்லா தெய்வங்களுக்குள்ளும் இருப்பவள் மகாசக்தி என்பதால் அதை அவள்மீது ஏற்றிப் பாடுகிறார் ஒட்டக்கூத்தர். தனதான தானான தனனனான தானான எனும் சந்தம் நம் சிந்தை இனிக்க ஒலிக்கிறது.
தமரநூபு ராதார சரணியார ணாகாரி
தருணவாணி லாவீசு சடிலமோலி மாகாளி
அமரர்வாழ்வு வாழ்வாக அவுணர்வாழ்வு பாழாக
அருளுமோகி னீயாகி அமுதபானம் ஈவாளே
இத்தகைய தேவியைத் துதிப்பவை யாவை? அதற்கென அமைந்த யாமள நூல்கள் மட்டுந்தானா? பதினெட்டுப் புராணங்களும் அவளைத்தான் துதிக்கின்றன. தேவியின் திருவடிகளை வணங்குபவை பூதகணங்கள் மட்டுந்தானா? பஞ்ச பூதங்களுமே அவளைத்தான் பணிகின்றன.
பரவுவன யாமளமோ பதினெட்டுப் புராணமுமே
விரவுவன பூதமோ விண்முதலைம் பூதமே
அன்னைக்கு மலரிட்டு வணங்க வேண்டும் அல்லவா? அவை பூவுலகில் வனத்திலிருந்து கொண்டு வரப்படும் வனமலர்கள் மட்டுந்தானா?
வானுலகிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்பக மலர்களும் பூமாரியாகப் பொழிகின்றன. தேவிக்குத் திருமஞ்சனமாக அபிடேகம் செய்யக் கொண்டு வரப்படுபவை பூமியில் உள்ள ஏதேனும் நீர் நிலைகளிலிருந்துதானா? சர்வேசுவரனின் திருமுடியிலிருக்கும் வானத்து கங்கையும் வந்து நீரைப் பொழிகின்றது.
வனமலரோ பூமாரி வானக்கற் பகமலரே
கனசலமோ அபிடேகம் கடவுட்கங் காசலமே
பூசைகள் ஏற்றுக் கொலுவிருக்கும் அன்னை தன் கரங்களில் தண்டாயுதம், கட்காயுதம், வில், சங்கு, சக்கரம் எனும் பஞ்சாயுதங்களை ஏந்தியிருக்கிறாள். அவளது பச்சை வண்ணமான மரகதத் திருமேனி திசையெங்கும் ஒளி வீசுகிறது. பாம்புப் படுக்கையில் அவள் வீற்றிருக்கும் காட்சி பிரமிக்கச் செய்கிறது.
அவளருகே மகோதரன், குண்டோதரன் மற்றுமுள்ள பூதகணங்கள் சூழ்ந்து நிற்கின்றனர். பிரம்மாதி தேவர்கள் வந்து வணங்கி நிற்கின்றனர். அகத்தியன் முதலான முனிவர்கள் துதிக்கின்றனர். அவளுக்கு இருபுறமும் திருமகளும், கலைமகளும் அமர்ந்திருக்கிறனர்.
இவ்விதமெல்லாம் தேவியின் சிறப்புகளைக் கூறிக் கொண்டு வரும் ஒட்டக்கூத்தர் இதற்கடுத்து ஒரு சுவையான நிகழ்ச்சியை இணைத்துப் பாடுகிறார்.
ஞானசம்பந்தர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் ஒட்டக்கூத்தர். அதனால் அன்னை காளி தன் அருகே அமர்ந்திருக்கும் கலைமகளை நோக்கி என் மைந்தனும் முருகனின் அம்சமுமான ஞானசம்பந்தன் மதுரையில் சமணரை வென்று பாண்டியனை சைவத்திற்கு மாற்றிய வரலாற்றைச் சொல் என்று கேட்கிறாள். கலைமகள் மகிழ்ச்சியடைந்து அதை விரிவாகக் கூறுகிறாள்.
இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். தட்சயக்ஞம் என்ற புராண நிகழ்ச்சி கிரேதாயுகத்தில் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. ஞானசம்பந்தர் வரலாறோ கலியுகத்தில் நடந்ததாகும். எந்த வகையிலும் இந்த இரண்டிற்கும் காலக் கணக்குப் பொருந்தாது.
இருப்பினும் தமது மானசீகக் குருவான ஞானசம்பந்தரைப் பற்றிப் பாடிவிட வேண்டும் என்ற விருப்பத்தினால் இங்கு அதை இணைக்கிறார் ஒட்டக்கூத்தர். அத்தோடு ஞானசம்பந்தர் முருகனின் அவதாரம் என்ற கருத்தையும் முதன் முதலாக இவரே முன்வைக்கிறார்.
இனி அன்னை அவ்விதம் கேட்கும் கருத்துமிக்க அருமையான பாடலைக் காண்போம்.
வெண்மையொளி செவ்விய முறையில் எங்கும் பரவும் வெண்டாமரை மலரில் வீற்றிருப்பதால், அதனருகே இருக்கும் அல்லியும் மணம் கமழும்படிச் செய்யும் வல்லி போன்றவளே! தெய்வ மகளாக - எனது மருமகளாக விளங்கும் வள்ளியை மணம் புரிந்து மனம் மகிழும் என் பிள்ளை முருகன், மதுரையில் அமணரை வென்ற கதையைச் சொல்லு!
“வருகதை தெய்வமகளென் மருமகள் வள்ளிவதுவை
மனமகிழ் பிள்ளைமுருகன் மதுரையில் வெல்லுமினிய
ஒருகதை சொல்லுதவள வொளிவிரி செவ்விமுளரி
ஒளிதிகழ் அல்லிகமழும் ஒருமனை வல்லியெனவே”
அன்னையிடம் அவள் மைந்தனின் வரலாற்றைச் சொல்லும் மகிழ்ச்சியோடு கலைமகள் சொல்லத் தொடங்குகிறாள். ஆளுடைப் பிள்ளையார் மதுரையை நெருங்கும் போதே ஆலவாய்ச் சொக்கனின் ஆலயத்தைக் கண்டு வணங்கி, அங்கிருந்த ஒரு மடத்தில் தங்கினார். அமணர்கள் அதற்குத் தீயிட, ஞானசம்பந்தர் அந்தத் தீ பாண்டியனைப் பற்றுக என்றார். “பையவே சென்று பாண்டியர்க்காகவே” என்பது சம்பந்தர் தேவாரம்.
அந்தத் தீ வெப்புநோயாக மன்னனைப் பற்றிக்கொள்ள சமணர் தாங்களறிந்த யந்திரங்களை வரைந்து மந்திரங்களைச் சொல்லி மயிற்பீலி கொண்டு வருடினர். ஆனால் என்னவாயிற்று?
அவர்கள் கையிலிருந்த ஆலி என்ற குண்டிகை நீர் வெந்தது. மந்திரம் வெந்தது. யந்திரம் வெந்தது. பீலியும் வெந்தது. அவர்களது பாயும் வெந்தது. அருகிலிருந்த பிண்டி எனப்படும் அவர்களது அசோக விருட்சமும் வெந்தது.
“ஆலிவெந்து மந்திரம்வெந்து
யந்திரம்வெந் தமைந்ததோர்
பீலிவெந்து பாயும்வெந்து
பிண்டியேற மண்டவே”
இவ்வளவு கடுமையாக மன்னனை எரித்த வெப்புத் தீ ஞானசம்பந்தர் வந்து “திருநீறிவன் நெற்றியில் இட்டலுமே, வெப்புத்தடைபட்டது” இது திருநீற்றின் மகிமையால் தீர்ந்தது. அதைப் பற்றி மன்னன் அமணரிடம் சொல்வது மிகவும் சுவையாக அமைகிறது. உவமை நயம் உள்ளத்தைக் குளிர்விக்கிறது.
“நீங்கள் வந்து தொடத் தொட கோடைக் காலத்துத் தீ காட்டை எரிக்க வெந்தது போல் நானும் வெந்துருகினேன். ஆனால், இந்த ஞானசம்பந்தர் வந்து தொடத்தொட நான் நலமடைந்து கார்காலத்து மழையில் காடு மீண்டும் செழிப்புற்றது போல ஆனேன்.”
“நீர்வந்து தொடத்தொட வெந்துருகா
நெடுவேனில் சுடச்சுட நின்றுலறிக்
கார்வந்து தொடத்தொட உய்ந்திளகும்
காடொத்தனன் யானிவர் கைப்படவே”
அதற்குப் பின் அனல்வாதம் – புனல்வாதம் நடைபெறுகிறது. அமணர் தோற்றுத் தாங்கள் சொன்னபடி கழுவிலேறுகின்றனர். பிள்ளையார் கூன்பாண்டியனை நிமிரவைத்து நின்ற சீர் நெடுமாறனாக்குகிறார்.
இந்த வரலாறெல்லாம் விரிவாக ஐம்பது பாடல்களில் இடம்பெறுகிறது. நாம் அதற்குள்ளே சென்றுவிட்டால் பிரதானக் கதையைப் போதுமான அளவிற்குப் பார்க்க முடியாது.
இதுவரை நாம் கண்டதெல்லாம் இனிய, பக்திமயமான காட்சிகளாகும். இனிக் காண இருப்பவை இவற்றுக்கு நேர்மாறான, மனதை நடுங்க வைக்கும் கடுமையான காட்சிகளாகும்!
கலைமகள் அன்னை மகாகாளியிடம் ஆளுடைப் பிள்ளையின் பெருமைகளைச் சொல்ல, அதைக் கேட்டு மகிழ்ந்த அன்னை கலைமகளைத் தனக்கு அருகாமையில் அமர்த்திக் கொள்கிறாள். அவள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் இந்த நேரம்தான் நாம் நமது கோரிக்கையைச் சொல்வதற்குப் பொருத்தமான நேரம் என்று அவள் அருகே வந்து பணிந்து நின்றன சில பேய்கள்.
அந்தப் பேய்கள் எப்பயிடிருந்தன என்பதையும் பேய்களின் வடிவங்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ஒட்டக்கூத்தர்.
எலும்புக் கூடுகளாகயிருக்கும் அந்தப் பேய்கள் சிவந்த சடைகளைக் கொண்டவையாக விளங்குகின்றன. அவை ஏன் அப்படியிருக்கின்றன? அந்தப் பேய்களுக்குக் கடுமையான பசி. அதன் காரணமாக அவற்றின் வயிற்றில் எழுந்த உதராக்கினி என்ற நெருப்பு மேலெழுந்து வாயின் வழியே வெளிப்படுகின்றன. அதனால் ஏற்படும் புகையில் அவற்றின் தலைமுடி நெருப்பில் கொளுத்தினாற் போல் தோன்ற செஞ்சடைகளாக விளங்குகின்றன. அதனால் அவற்றின் சிரங்கள் வெம்மையாகவே இருக்கின்றன.
“வாயெழப் புகைந்துகீழ்
வயிற்றெரிந்து மண்டுசெந்
தீயெழக் கொளுந்தியன்ன
குஞ்சிவெஞ் சிரத்தவே”
பசையில்லாமல் உலர்ந்த எலும்புகளும், ஒசிந்த நரம்புகளும் கொண்ட பேய்களின் உடம்புகளைக் கிணற்றுக்குள் கட்டிவிட்ட குடலையாக நினைத்துக் கொண்டு சிலந்திகள் வந்துவிட்டன. அவை தம் வாய் நூலால் வயிற்றெலும்புகளின் இடைவெளி தெரியாதபடி வலை பின்னின.
“உலரெலும்பொடு ஒசிநரம்பும்
உடலில்நின்ற குடலைபோன்று
அலர்சிலம்பின் இழைசுழன்று
வெளியடங்க அணிவவே”
இவ்விதம் விகாரமாகவும், பயங்கரமாகவும் காட்சி தந்த பேய்கள் யாவும் ஒன்றுகூடி அன்னையின் சந்நிதியில் வந்து வணங்கி நின்றன. தங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டன. அன்னையும் அவற்றின் கோரிக்கையைக் கேட்டு அருளினாள்.
“தாயே! தங்கள் கணவரான சிவபெருமான் ஒரு காலத்தில் பல அசுரவதங்கள் புரிந்தார். அதன் காரணமாக அங்கு விழுந்த பிணங்களைப் புசித்துப் பசியாறினோம். இப்போது அவருக்கு என்ன நேர்ந்ததென்றே தெரியவில்லையே! அதற்கான வாய்ப்புகள் வந்தும் அவை எமக்குக் கிடைக்காமல் செய்து விடுகிறாரே!” என்றன பேய்கள்.
ஏன் இவை இப்படிச் சொல்கின்றன என்று அன்னை குழப்பமடைந்தபோது அவை இவ்விதம் கூறின :
“சிவபெருமான் முப்புரங்களை அழிக்கப் போகிறார் என்று நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். எண்ணற்ற அசுரரின் உடல்கள் சடலங்களாக விழும் என்று காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவரோ அவற்றையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கிவிட்டாரே! எங்களுக்கு எதுவுமே கிடைக்காமல் செய்துவிட்டாரே! ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அவரிடம் அந்த அசுரரைக் கூறுகூறாக்குவதற்கு வாளில்லையா? குத்தித் தூக்கி எறிய வேலில்லையா? ஏன் அந்த அசுரரை நீறாக்கினார்?
“கூறாக்கு தற்கு வாளிலரோ?
குத்தித் தூக்க வேலிலரோ?
நீறாக் குவதென் முப்புரத்தில்
உள்ள வெள்ள நிருதரையே!”
“அதுதான் போகட்டும். பத்துத் தலைகளைக் கொண்ட இராவணன் எனும் அரக்கன் ஈசன் வீற்றிருக்கும் கைலாய மலையையே தூக்க முனைந்தபோது, அவனைத் தமது திருப்பாத விரலால் ஊன்றினாரே அப்படியே அவனது பெருத்த சரீரம் நெரிந்துபோகச் செய்திருந்தால் பெருகி வரும் உதிரக் குழம்பை யாவது பருகியிருப்போமே! ஆனால் அவரோ, அவன் பாடிய பாடலைக் கேட்டுக் கருணை காட்டி, அவனைப் பிழைக்கச் செய்துவிட்டாரே! அந்த தசமுகனின் பாட்டில் அப்படி என்னதான் இருக்கிறதோ தெரியவில்லையே…!”
“குழம்படியேம் புகவிழுந்து
பொருப்படியிற் கொள்ளாமே
பழம்படியே தசமுகனை
விட்டார்தம் பாட்டறிவே”
இப்படியெல்லாம் அந்தப் பேய்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் வெகு தூரத்திலிருந்து ஓடி வந்த ஒரு பேய் “தட்ச யாகத்தை வீரபத்திரர் அழிக்கிறார். அவரோடு வந்த பூதகணங்களிடம் அடிபட்டு தட்சனின் சேனைகள் மடிவதோடு, அந்த யாகத்தில் கலந்து கொண்ட வானவர்களும் அங்கங்கள் சிதைக்கப்பட்டு விழுகிறார்கள். அங்கு சென்றால் நம் பசி தீரும்” என்கிறது.
அதைக் கேட்ட மகாகாளி மகிழ்ந்து பேயைப் பார்த்து அந்த வரலாற்றை விரிவாகச் சொல் என்று ஆணையிடுகிறாள். பேய் மிகுந்த உற்சாகத்தோடு அதைச் சொல்கிறது.
இந்த நேரத்தில் அந்த வரலாற்றை நாமும் தெரிந்து கொள்வது அவசியமாகும். அப்போதுதான் அதற்குரிய பாடல்களின் சுவையை அனுபவிக்க முடியும்.
தட்சன் என்பதுதான் தக்கன் என மருவி வருகிறது. அந்த தட்சன் பிரம்மதேவரின் மைந்தன். தனது தவத்தால் பெரும் ஆற்றல் படைத்தவனாக விளங்கும் அவன், பராசக்தியே தனக்கு மகளாகத் தோன்ற வேண்டும் என்று வேண்டினான். அதற்கேற்ப அம்பிகை தட்சனுக்கு மகளாக வந்து அதற்கு அடையாளமாக தாட்சாயினி என்றே பெயர் கொண்டாள்.
அவளுக்குத் திருமண வயது வந்தபோது தட்சன் தன் மகளான தாட்சாயினியை மணக்கச் சிவபெருமானே தன்னிடம் வந்து பெண் கேட்டாக வேண்டும். மருமகன் என்ற முறையில் மாமனாரான தன் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்தான். அதனால் ஆணவம் கொண்டான். அதையுணர்ந்த எம்பெருமான் தாட்சாயினியைக் கவர்ந்து சென்று மணம் செய்து கொண்டார்.
அதனால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல்தான் சிவபெருமானை அவமதிக்க வேண்டுமென்றே, யாகங்களுக்கெல்லாம் தலைவரான அவரைப் புறக்கணித்துவிட்டு, மற்ற தேவர்களையெல்லாம் அழைத்து வந்து யாகம் செய்தான். அதுவே தக்க யாகம். ஈசன் இல்லாத யாகத்திற்கு நாங்கள் வரமாட்டோம் என்றுதான் தேவர்கள் யாவரும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர்களும் ஈசனை அலட்சியம் செய்துவிட்டு அந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள்.
தேவர்கள் யாகத்திற்கு வருவதிலிருந்துதான் பேய் சொல்லும் கதை தொடங்குகிறது. இது காளிக்குக் கூளி கூறியது என்ற தலைப்பில் இடம்பெறுகிறது. கூளி என்பது பேயைக் குறிக்கும்.
தேவர்கள் யாவரும் வந்துவிட்டார்கள். சில முனிவர்கள் புறக்கணித்தாலும் பல முனிவர்கள் வந்து கலந்து கொண்டார்கள். தாட்சாயினியான அம்பிகை, ஈசனிடம் அனுமதி பெற்றுச் சென்று ஈசனை விலக்கி யாகம் செய்வது முறையல்ல; யாகத்திற்குரிய பலன் கிடைக்காது என்று அறிவுரை கூறினாள். தட்சன் அதை ஏற்க மறுத்ததோடு அவளைக் கடுமையாக அவமதித்தான்.
கோபம் கொண்ட அம்பிகை கயிலைக்குத் திரும்பி வந்து தட்சனுக்குப் பாடம் புகட்ட வேண்டுமென்று ஈசனை வேண்டினாள். நடந்ததை அறிந்த ஈசனும் ஆவேசம் கொண்டவராகத் தன்னிலிருந்தே வீரபத்திரரைத் தோற்றுவித்தார்.
வீரபத்திரர் தோன்றியதைப் பாட வந்த ஒட்டக்கூத்தர் சிவபெருமான் உண்ட ஆலகாலமே வடிவெடுத்தது போல் அவர் வந்தார் – அகிலத்தைச் சுடும் சூரிய வெப்பமும் மங்கியது என சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்தார் என்று இரு கவிதைகளில் அவரது வருகையை விவரிக்கிறார்.
“அன்றுவானவர் உய்யஅய்யர்
மிடற்றடக்கிய ஆலமே
சென்றுவானவர் உயிர்கொளத்திரு
உள்ளம்வைத்தமை தெரியவே
காலைநெற்றியின் அகிலமுஞ்சுடு
கனலிகுறைபட இறைவர்தம்
மேலைநெற்றி விழிக்கவந்து
பணிந்துநின்றனன் வீரனே”
இவ்விதம் தோன்றி இறைவனின் ஆணை பெற்று வீரபத்திரர் புறப்பட்டபோது, எண்ணற்ற பூதகணங்கள் அவருக்குத் துணையாகப் புறப்பட்டன.
ஈசனின் அம்சமான வீரபத்திரர் போருக்கு வருகிறார் என்று தெரிந்தும் தட்சனும், தேவர்களும் அவரை எதிர்க்கத் துணிந்தார்கள்.
யுத்தம் தொடங்கியது. அது எப்படி இருந்தது என்பதை ஒட்டக்கூத்தர் சிறுசிறு சொற்களில் மூன்று மூன்று சீர்கொண்ட சிந்தடியில் பாடுகிறார். விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் களக் காட்சியைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன அந்த வரிகள்.
“சிரமும் சிரமும் செறிந்தன
சரமும் சரமும் தறிப்பவே
தாருந் தாருந் தழைத்தன
தேருந் தேருந் திளைப்பவே
கிரியுங் கிரியுங் கிடைத்தன
கரியுங் கரியுங் கடுப்பவே
குடையுங் குடையுங் கொழித்தன
படையும் படையும் பகைப்பவே”
இப்படி நடந்த யுத்தத்தில் தட்சன் படையும் தேவர் படையும் மடிந்து விழ, மிஞ்சி நின்றவர்கள் இந்திரனிடம் போய் முறையிடுகின்றனர். இந்திரன் கோபத்தோடு யுத்தத்திற்குப் புறப்படுகிறான். அப்போது இந்திரன் பேசும் வீரவாதம் ஆணவம் வந்துவிட்டால் ஒருவன் எப்படியெல்லாம் பேசுவான் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது. இறைவனின் அருளால்தான் தனக்கு எல்லாமே கிடைத்தது என்பதை மறந்து, அவரோடு தன்னை ஒப்பிட்டுப் பேசி நானே உயர்ந்தவன் என்று பறைசாற்றிக் கொள்கிறான் இந்திரன்.
நான் இருக்கும் இடம் எப்படிப்பட்டது தெரியுமா? சகல செல்வங்களும் நிறைந்த அமராவதிப் பட்டணம். ஆனால் அந்த ஈசனுக்கு இருப்பிடம் எது? சுடுகாடு! அதுமட்டுமா? அட்டதிக்குப் பர்வதங்கள் எனும் குலகிரிகள் எனக்குக் கட்டுப்பட்டவை. ஆனால், அந்த ஈசனுக்கு வெறும் கயிலாயம் எனும் கல்தான்!
“யானாள்பதி அமராபதி
ஈமம்தன தெனதேழ்
கானாள்குல கிரிதன்மலை
கயிலைச்சிறு குவடே”
அட்ட நாகங்கள் எனும் குலவெண் பணியான எட்டுத் திசை நாகங்களும் எனக்குரியவை. ஆனால், அந்த ஈசனுக்கு ஆபரணமாகயிருப்பவை வெறும் பாம்புகள்தான். அதிலும் அவை தாருகாவனத்து முனிவர்கள் தங்கள் வேள்வியில் உருவாக்கி அவர்மீது ஏவிவிட்டவை. அதாவது அந்தப் பாம்புகள் அவருக்குச் சொந்தமில்லாதவை. (இந்தக் கவிதையில் பணி என்பது பாம்பைக் குறிக்கும்).
“குலவெண்பணி யானேபணி
கொள்வேனணி கொள்ளும்
பலவெண்பணி அவையும்சிலர்
விடுதந்தனர் பண்டே”
நான் வீற்றிருப்பதும் விளையாடி மகிழ்வதும் கற்பகத் தருவின் நிழலிலல்லவா? ஆனால் அந்த ஈசன் ஆலமர நிழலில்தானே வசித்துக் கொண்டிருக்கிறார்?
“கோலந்தரு தருவின்குளிர்
குழைநீழல் விடேயான்
ஆலந்தரு வறுநீழலின்
இடைவைகுவ தவனே”
என்னிடமிருப்பதோ இடியின் வடிவமென அமைந்த வச்சிராயுதம். ஆனால் ஈசனிடம் இருப்பதோ சின்னஞ்சிறு மழுவாயுதம். (சிவத்துக்கே உரிய சூலாயுதத்தை மறந்துவிட்டுப் பேசுகிறான்) எனக்கு வாகனமாகயிருப்பதோ ஐராவதம் என்ற யானை. ஈசனுக்கு வாகனமோ வெறும் எருதுகள்.
“வானேறுரு எனதாயுதம்
அவனாயுதம் மழுவாள்
யானேறுவது அயிராவதம்
அவனேறுவது எருதே”
இப்படியெல்லாம் பேசிக் கொண்டு மிஞ்சி நின்ற தேவர்களோடு போருக்கு வந்தானே இந்திரன் – அவனது ஆயுதங்களெல்லாம் வீரபத்திரருக்கு முன்னால் பயனற்றவையாகின. இறுதியாகத் தனது ஒரே நம்பிக்கையாகவிருந்த வச்சிராயுதத்தை வீசினான் இந்திரன். அது என்னவாயிற்று?
“வச்சிரப் படையும் இந்திரன் படையில்
வந்த தாலதனை வல்லவன்
முச்சிரப் படையும் வேறுசெய் திலது
நீறு செய்ததெதிர் முட்டியே”
தனக்கே உரித்தான வச்சிரப்படையை இந்திரன் ஏவ, முச்சிரப் படையான சூலாயுதத்தை வீரபத்திரர் ஏவினார். அது வேறு ஒன்றும் செய்யவில்லை யாம். அந்த வச்சிராயுதத்தை நீறு செய்துவிட்டது. அதாவது பொடிப் பொடியாக்கிவிட்டது.
மறுகணம் வீரபத்திரர் ஏவிய குலிசாயுதத்தால் இந்திரன் அடிபட்டு விழு கிறான். அதைக் கண்ட திருமால் ஆவேசத்தோடு களத்தில் புகுந்து பாஞ்சஜன்யம் என்ற தமது சங்கத்தை முழங்கி யுத்தத்தைத் தொடங்கு கிறார்.
சாரங்கம் என்ற வில்லை ஏந்தியதால், சாரங்கபாணி என்று பெயர் பெற்றவரல்லவா திருமால்? அந்த சாரங்கம் சரங்களைப் பொழிய, வீரபத்திரரின் வில்லும் அம்புகளைப் பொழிகிறது. அப்போது என்ன நேர்ந்தது?
மாயோன் விடக்கூடிய பகழி எனும் அம்புகளெல்லாம் வீரபத்திரர் மேல் வந்து விழுந்தவுடனே வெந்து பொடியாய்ப் போயின. சேயோன் விடக்கூடிய அம்புகளெல்லாம் மாயனின் உடம்பில் புகுந்து செருகின.
“மாயோன் விடும்விடும் பகழிசெய்ய எரிமேல்
வந்து வந்தடைய வெந்துபொடியாய் மடியவே
சேயோன் விடும்விடும் பகழிமாய னுதகத்
திருவு டம்புபுக மூழ்கியுருவச் செருகவே”
அந்த நிலையில் தளர்வடைந்து நின்றார் திருமால். அதைக் கண்ட வீரபத்திரர் திருமாலின் பஞ்சாயுதங்களான வில், வாள், கதை, சங்கு, சக்கரம் ஆகியவற்றைப் பற்றிக் கேலியாகப் பேசுகிறார் :
திருமாலே! நீர் உமது பஞ்சாயுதங்களையும் இந்த வடிவத்தில் ஏன் கொண்டு வந்தீர்? இந்தப் படைக்கலன்கள் என்ன செய்துவிடும்? இதைவிட, முன்பு நீர் தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மோகினி வடிவத்தில் வந்தீரே… அப்போது உமது தோள் கதை போலவும், கழுத்து சங்கு போலவும், நெற்றி வில்லைப் போலவும், விழி வாளைப் போலவும், முகம் சக்கரம் போலவும் காட்சியளித்ததே! அந்த வடிவத்தில் வந்திருக்கலாமே…
“தண்டுதோள் வளைகழுத்து நுதல்சாபம் விழிவாள்
சக்ரம் ஆனனம் எனத்தேவர் தானவர்களை
பண்டுநீர் அமுதருந்தும் உருவத்தில் இவையே
பஞ்ச ஆயுதமும் அல்லதிவை என்னபடையே!”
மொத்தத்தில் நீர் ஒரு பெண்ணாக வந்திருக்கலாமே என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் வீரபத்திரர். அதற்கு மேலும் திருமாலால் பொறுத்துக் கொள்ள முடியுமா? மிகுந்த ஆங்காரத்தோடு மீண்டும் போரைத் தொடங்கினார். தமது அவதாரங்களான மச்ச, கூர்ம, வராக வடிவங் களிலும் வந்து யுத்தம் புரிந்தார். எந்த வகையிலும் வெற்றிபெற முடியாமல், தோல்வியுற்ற அவமானத்தோடு திரும்பிச் சென்றார்.
இவ்விதம் கடுமையாக நடந்த போரில் எவரெவர்க்கும் என்னென்ன நேர்ந்தது என்று பட்டியலிடுகிறது தக்கயாகப்பரணி.
எண்திசைக் காவலர்கள் அடிபட்டனர். தட்சனின் கழுத்து அறுபட்டது. ஆதித்யரில் ஒருவனான் பகன் கண்கள் பறிக்கப்பட்டன. சந்திரனின் விலா எலும்பு முறிந்தது. அக்கினி தேவனின் கரங்கள் ஒடிக்கப்பட்டன. எமனது ஆயுதம் உடைபட்டது. இத்தனைக்கும் மேலாக குயிலாகிப் பறந்து செல்ல முயன்ற இந்திரனின் சிறகுகள் முறிந்தன.
இவ்விதம் சொல்லிக் கொண்டே வரும் ஒட்டக்கூத்தர், புலத்திய முனிவனைத் துடிக்கத் துடிக்க அடித்து இழுத்துச் சென்ற பூதகணங்கள், அகத்தியரை மட்டும் போரின்போது, அவருக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அவரைக் கொண்டு போய் குகைக்குள் அடைத்து வைத்தன என்கிறார்.
“இகத்தியெனப் புலத்தியனைத்
துடிக்கவடித் திழுத்தே
அகத்தியனைத் தமிழ்ப்பொதியில்
குகைப்புகவிட் டடைத்தே”
அதுவும் எந்தக் குகை? தமிழ்ப் பொதிகையில் உள்ள குகைதானாம். தமிழ் தந்த அகத்தியர் மீது ஒட்டக்கூத்தருக்கு இருந்த ஈடுபாட்டை இது காட்டுகிறது.
இத்தனைக்கும் மேலாக, இந்த இடத்தில் நாம் காண வேண்டிய அரிய செய்தி ஒன்று இருக்கிறது. சிவபுராணம், கந்தப் புராணம் முதலான நூல்களில் தட்சயக்ஞத்தின் போது பிரம்ம தேவரோடு அங்கு வந்திருந்த கலைமகளின் நாசி அறுக்கப்பட்டது என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஒட்டக்கூத்தர் அதைப் பாடாமல் விட்டுவிடுகிறார்.
ஒட்டக்கூத்தர் கலைவாணியிடம் மிகுந்த பக்தி கொண்டவர். சோழ மன்னன் அவருக்கென ஓர் ஊரைப் பரிசாகத் தந்தபோது, அதில் கலைமகளுக்கென ஒரு தனிக் கோயில் கட்டியவர். இன்றும் அவர் பெயராலேயே கூத்தனூர் என்று வழங்கப்படும் ஊருக்குச் சென்றால், அந்தத் திருக்கோயிலைத் தரிசிக்கலாம். இத்தகைய பக்தி கொண்டவர் அதைப் பாடாமல் விட்டதில் வியப்பென்ன இருக்கிறது?
இதற்கு மேல் தக்கயாகப் பரணியில் கூழடுதல் என்ற பகுதி இடம்பெறுகிறது. தக்கயாகத்தின் போது நடந்த யுத்தத்தைப் பற்றிப் பேயிடம் கேட்ட காளி, அந்த யாகசாலைக்குச் சென்று கூழடும்படி பேய்களுக்குக் கட்டளையிடுகிறாள்.
அதன்படி அங்கு சென்ற பேய்கள் களத்தில் இறந்து கிடப்பவர்களின் தசை முதலானவற்றைக் கொண்டு கூழ் சமைத்துக் காளிக்கும் படைக்கின்றன. பிற பேய்களுக்கும் இட்டுத் தாமும் உண்கின்றன.
இதன்பின் களங்காட்டல் என்ற பகுதியில் சிவபெருமான் அம்பிகையோடு எழுந்தருளி, களத்தில் மடிந்து கிடப்பவர்களைச் சுட்டிக் காட்ட, அன்னையின் மனம் கனிகிறது. அனைவரையும் உயிர்ப்பிக்க வேண்டுமெனச் சிவபெருமானை வேண்டுகிறாள். அவர் மனமிரங்கித் தம்மை இகழ்நத தக்கனுக்கு ஆட்டுக்கிடாய்த் தலையைத் தந்து உயிர்ப்பித்து, மற்ற வானவரையும் எழுப்புகிறார். அனைவரும் அவரைப் பணிந்து தங்களை மன்னிக்கும்படி வேண்டி, அவரவர் இருப்பிடம் செல்கின்றனர்.
தக்கயாகப் பரணியில் நாம் இங்கு கண்டது சிறு துளிதான். உ.வே.சா. தேடித் தந்த இந்த நூலின் எண்ணூற்றுப் பதினான்கு கவிதைகளில் ஒரு சிலவற்றையே நாம் கண்டோம். ஒட்டக்கூத்தரின் இந்த நூலை அவரைப் பற்றிய வாழ்த்தோடு நிறைவு செய்வோம்.
“ஆக்கம் பெருக்கு மடந்தை வாழியே
ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே
கோக்குந் தமிழ்க்கொத் தனைத்தும் வாழியே
கூத்தன் கவிச்சக்ர வர்த்தி வாழியே”
நன்றி - ஓம் சக்தி ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 2012