மகாகவி பாரதியை இன்று பெரும்பாலும் மறந்துவிட்டனர். பாரதி பற்றிப் பேசுவது எழுதுவது ஆகியன வெகுவாகக் குறைந்துவிட்டது. பின் நவீனத்துவத்தின் வருகையானது செவ்வியல் இலக்கியங்களை அறவே பின்னுக்குத் தள்ளிவிட்டது. இதனடிப்படையில் நிகழும் ஆய்வுகளில் ‘வாசிப்பு' என்ற பெயரால் பல அகவயமான விளக்கங்கள் இடம் பெறுகின்றன. மூல நூல் புறக்கணிக்கப்படுகிறது, படைப்பாளி பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், பாரதியார் எழுதியவற்றில் ஆங்கிலத்தில் அந்தக் காலத்தில் வெளியான ஒரு சிறு நூலைப் பற்றிப் பேசுவது சற்று மிகையாகக் கூடப் படலாம்.
பாரதியின் ஆங்கில எழுத்துகள் பற்றி அநேகமாகப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அவற்றில் ஒன்று "THE FOX WITH THE GOLDEN TAIL'' என்பது. இது ஒரு உருவகக் கதை. இதன் உட்பொருள் அன்னிபெசன்ட் அம்மையாரின் செயல்கள் ஆகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் பங்கெடுத்துக் கொண்டது எல்லோருக்கும் தெரியும். அத்துடன் நில்லாமல், அவர் பிரம்மஞான இயக்கத்திலும் தீவிரமாகச் செயல் புரிந்தார். இதனைத்தான் பாரதி இங்கு கேலி செய்கிறார். மேற்பார்வைக்கு இது கதை போன்று இருந்தாலும், இது பாரதி காலத்தில் இருந்த மேல்தட்டு வர்க்கத்தினரைப் பற்றிய விமர்சனமாகவும் அமைந்துள்ளது. இந்தக் கதையில் "பொன்வால் உள்ள நரி' என்பது அன்னிபெசன்ட் அம்மையாரைக் குறிக்கும். நரிகளின் நாடு என்பது இங்கிலாந்தைக் குறிக்கும். கழுதைகள், மனிதக் குரங்குகள் ஆகியவற்றின் நாடு என்பது இந்தியாவைக் குறிக்கும். இந்தக் குறிப்புகளை மனதில் வைத்துக்கொண்டு இந்தக் கதையைக் காணவேண்டும்.
நரிகளின் நாட்டில் ஒரு கிழட்டுப் பெண் நரி இருந்தது. அந்த நாட்டு சக நரிகள் அதனை வெறுத்தன. ஏனென்றால் அந்த நரி கர்வம் மிகுந்தது. எனவே, அந்த நரியின் வாலை வெட்டிவிட்டன. அந்தப் பெண் நரி தங்க முலாம் பூசப்பட்ட ஒரு செயற்கை வாலை வாங்கிப் பொருத்திக் கொண்டது. தாய் நாட்டிலிருந்து கழுதைகள், குரங்குகள் ஆகியவற்றின் நாட்டிற்குச் (இந்தியா) சென்றது.
அந்தப் புதிய நாட்டுக் கழுதைகளிடம் தன் தாய்நாட்டு (இங்கிலாந்து) நரிகள் புத்தி குறைந்தவை என்றும், கழுதைகளுக்குத்தான் ஞானம் அதிகம் என்றும் கூறியது. இதைக் கேட்ட கழுதைகள் மகிழ்ச்சியடைந்தன. இதைக் கண்ட குரங்குகளும் மகிழ்ச்சியடைந்தன. ஒரு சில குரங்குகள் மட்டும் தங்கள் நாட்டின் பெருமை என்னவாகும் என்று கேள்வி எழுப்பின. ஆனால், பொன்வால் நரி (அன்னிபெசன்ட்)யின் தலைமையிலான சுயாட்சி இயக்கம் பிரபலமடைந்தது. பொன்வால் நரியானது எல்லாக் கழுதைகளுக்கும் பொன்வால் உருவாக்குவதாக வாக்களித்தது. இது கேட்ட கழுதைகளும், குரங்குகளும் மகிழ்ச்சியடைந்தன. ஆனால், இதற்காக இரு இளம் கழுதைகளை தனது வசம் ஒப்படைக்கும்படி பொன்வால் நரி கேட்டுக்கொண்டது. இந்த இளம் கழுதைகளுக்கு புதிய மார்க்கத்தில் பயிற்சியளிக்க வேண்டும் என்று கூறியது. இரு இளம் கழுதைகள் பொன்வால் நரியிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த இளம் கழுதைகளின் வாலை பொன்வால் நரி வெட்டியது. இவற்றை நரிகள் நாட்டிற்கு அழைத்துச் சென்றது. அங்கு நரிகள் நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தது. இதுகண்ட சநாதனக் கழுதைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த எதிர்ப்பை பொன்வால் நரி எதிர்பார்க்கவில்லை. அதேசமயத்தில், பொன்வால் நரியின் வாலை ஒரு வேலையாள் திருடிச் சென்றுவிட்டான். பொன்வால் நரி நரிகள் நாட்டிற்குச் சென்றது. அங்கு ஒருவாறு சமரசம் ஏற்பட்டு கழுதைகள் நாட்டிற்கு மறுபடியும் வந்தது. கழுதைகள் நாட்டில் உள்ள குரங்குகளை சமாதானப்படுத்த முயன்றது. ஆனால் குரங்குகள் அதனை நம்பவில்லை. இதற்கிடையில் இளம் கழுதைகளை நரிகள் நாட்டிலிருந்து கொண்டு வரவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதனை நிறைவேற்ற முடியாமல் பொன்வால் நரி தேனீக்கள், எறும்புகள் ஆகியவற்றின் குடியரசுக்குத் தப்பிச் சென்றது. அங்கு தனது பிரசாரத்தைத் தொடங்கியது.
இந்தச் சிறு உருவகக் கதையில் பாரதியார் அவரது சமகாலப் பிரச்னைகள் சிலவற்றை விமர்சனத்திற்குள்ளாக்குகிறார். இதில் முதலாவது இந்திய விடுதலைப் போராட்டம். அவர் ஒரு தீவிரவாதி. அவர் காலத்தில் மிதவாதிகள் வலுப்பெறத் தொடங்கினர். இவர்கள் பக்கத்தில் வேலை செய்யும் ஓர் அந்நியப் பெண்மணியாக அன்னிபெசன்ட் அம்மையார் வந்தார். அவர் சுயாட்சி இயக்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். இது குழப்பமான ஒன்றாக இருந்தது. இது தீவிரவாதியான பாரதிக்குப் பிடிக்கவில்லை. எனவே, பெசன்ட் அம்மையாரை அவர் வெள்ளை உளவாளி என்றே சந்தேகப்பட்டார். எனவேதான் அவரது கவனம் அன்னிபெசன்ட் மீது திரும்பியது. அன்னிபெசன்ட்டை தாய்நாட்டில் மதிப்பிழந்த பொன்வால் நரியாக உருவகப்படுத்துகிறார். இங்கிலாந்தை நரிகள் நாடாகக் கற்பனை செய்கிறார். இது வெள்ளையர்களது தந்திரமான நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகிறது.
அன்னிபெசன்ட் அரசியலோடு நிற்கவில்லை. பிரம்மஞான சபையின் முக்கியஸ்தராகவும் விளங்கினார். இதன்மூலம் அவர் இந்திய ஆன்மிகத்திலும் கால் பதித்தார். பிரம்மஞான சபையில் இன்றும் ஈடுபாடு உள்ளவர்கள் சநாதனவாதிகளே ஆவர். இங்கு இருக்கிற தத்துவங்கள் போதாது என்று பிரம்மஞான சபை மூலம் ஆன்மிக வாதம் பேசப்பட்டது. இதில் பாரதிக்கு உடன்பாடு இல்லை. இதில்தான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ற பிராமண இளைஞனை அன்னிபெசன்ட் சுவீகாரம் எடுத்து இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்ற நிகழ்ச்சி இடம் பெற்றது. இது அந்தக் காலத்தில் பிராமணர்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கியது.
கிருஷ்ணமூர்த்தியின் தந்தை அன்னிபெசன்ட் மேல் வழக்குத் தொடர்ந்தது வரலாற்று நிகழ்ச்சியாகும். இதையும் பாரதி இங்கு கேலி செய்கிறார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இளம் கழுதையாக வர்ணிக்கப்படுகிறார்.
இதுபற்றி சம காலத்து விமர்சனங்களும் உண்டு. இதனை அரவிந்தரிடம் பாரதி படித்துக் காட்டினாராம். அரவிந்தருக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை. அவர் கூறினாராம் "பாரதியார் எவ்வளவு அருமையான இங்கிலீஷில் ஒரு அதிசயமான கட்டுக்கதை எழுதியிருக்கிறார். அதை அவரே படித்துக் காட்டும்பொழுது நீங்கள் கவனிக்காமலும் கேட்காமலும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறீர்கள்'' என்று அங்குள்ளவர்களைப் பார்த்துக் கூறினாராம்.
இதனைப் பாராட்டி ஆங்கிலப் பட்டம் பெற்றவர்கள் பலர் பாரதிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், பாரதிக்கு இப் பாராட்டு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இது ஓர் அரசியல் அங்கதம் அவ்வளவே. எனவே, அந்தக் கடிதங்கள் பற்றி குவளைக் கண்ணனிடம் பின் வருமாறு கூறினாராம்.
"போகச்சொல்லு விதவைப் பசங்களை! நான் என்னுடைய சொந்த பாஷையில் என் முழு மூளையையும் கசக்கிப் பிழிந்து ‘பாஞ்சாலி சபதம்' என்னும் புஸ்தகம் எழுதியிருக்கிறேன். அது நன்றாக இருக்கிறதென்று ஒருவனும் எனக்குக் கடிதம் எழுதவில்லை’'.
பாரதியின் உள்ளக் குமுறல் இதில் வெளிப்பட்டாலும், "பொன்வால் நரி'' என்ற இந்த உருவகக் கதை பாரதியின் ஆங்கிலப் புலமைக்கு ஒரு சான்றாக உள்ளது. இதில் மொழி நடையானது அக்காலத்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கு இணையாகவே உள்ளது. இதில் சார்ல்ஸ் டிக்கன்ஸ், பெர்னாட்ஷா, ஜான் கால்ஸ்வொர்தி
ஆகியோரின் சாயலைக் காண முடியும். தமிழ் மொழியில் புகுந்து விளையாடிய அந்த மகாகவி ஆங்கிலத்திலும் திறம்படவே இங்கு செயல்பட்டுள்ளதைக் காண முடியும்.
மகாகவி சுப்ரமணிய பாரதியின் இந்த உருவகக்கதையை இந்த சுட்டியில் படிக்கலாம்
நல்லதொரு பகிர்வு , நன்றி பாரதியின் முகம் காட்டியமைக்கு
பதிலளிநீக்கு