காலந்தோறும் புதிய புதிய கருத்துகள் உண்டாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. உருவானவற்றில் விழுமியவையும் மானுடத்தை மேம்படுத்துபவையும் எவ்வளவு காலமானாலும் நிலைத்து நிற்கின்றன. சில பிற்போக்காகவும் சுயநலத்தோடு தோன்றியவையாகவும் இருந்து மக்களில் ஒரு சாரார்க்கு மட்டுமே பயன்படுபவையாக அமைந்துவிடுதல் உண்டு. வலுவாகப் பரவிய பல கருத்துகளுக்கு வலுவான பின்னணியும் இருக்கும். ஆனால் கருத்துகளில் கவனம் செலுத்தும் மக்கள் அக்கருத்து தோன்றிய பின்னணியை மறந்துவிடுதல் இயற்கை.
இக்கட்டுரையில் சங்க காலத்தில் நடைமுறையில் இருந்த சில கருத்துகளையும் அவை தோன்றியதற்கான பின்னணியையும் பார்ப்போம்.
பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் தோன்றிய பழங்காலத்தில் பெண்கள் உரிமையற்ற இரண்டாம் தர மக்களாகவே நடத்தப்பட்டனர். ஆண்களுக்கு அடங்கியவராக இருந்தனர். சில விதிவிலக்குகளும்கூட இருந்தன. கணவனை இழந்த பெண்டிர் எத்துணை துயரங்களைத் தாங்கியிருந்தனர் என்பதற்குப் பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு (புறம் 246) பாடிய பாடலே சான்று.
பெண்கள் சமூகத்தால் மிகவும் தாழ்வாக நடத்தப்பட்ட போதிலும் ஒரு சில சமயங்களில் அவர்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டும் உள்ளார்கள். ஆண் மக்களைப் பெற்று வளர்த்து போருக்கு அனுப்பிய பெண்கள் "மூதின் மகளிர்' என வாயாரப் புகழப்பட்டு உள்ளனர்.
சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்.
கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன் ஐ
யானை எறிந்து களத்து ஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாலுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே. (புறம் 279)
இவளது எண்ணம் கெடுக. (வாழ்க எனப் பொருள்) இவள் பெண்களில் சிறந்தவள். முதல்நாள் போரில் இவள் தந்தை யானையைக் கொன்று மடிந்தான். அடுத்தநாள் இவள் கணவன் பசுக் கூட்டத்தை எதிரிகளிடமிருந்து காத்து மாண்டான். போர் தொடர்ந்தது. தன் ஒரே மகனை அழைத்து ஆடை உடுத்தித் தலைவாரி விட்டு கையிலே வேலைக் கொடுத்து வென்று வா என அனுப்பினாள் அத்தாய்.
இப்பெண் வாழும் நாட்டு மன்னனுக்கும் அடுத்த நாட்டு அரசனுக்கும் மண்ணாசை மீதுரப் பெற்றதால் போர் நடக்கிறது. அப்போருக்கு இவள் தன் ஒரே ஆண் மகனைப் போருக்கு அனுப்புகிறாள்.
இப்படி இப்பெண் தன்னைக் காப்பாற்ற இருக்கும் ஒரே மகனான சிறுவனையே தன்னைப் பற்றிய கவலையின்றி அரசனின் மண்ணாசைக்குப் பலி கொடுக்க அனுப்புகிறாள்.
இதனால் இவள் வாழ்க எனவும் மிகவும் துணிச்சல்காரி எனவும் மூதின் மகளிர் எனவும் அளவு கடந்து பாராட்டப்படுகிறாள்.
பெண்ணுக்குப் போதுமான உரிமை அளிக்காமலும் ஆண் செய்யும் அடாவடிச் செயலைத் தட்டிக் கேட்காமலும் அடக்கப்பட்ட பெண்கள் போருக்கு மகனை அனுப்பும்போதும் ஆண் மகனைப் பெற்றுத் தரும்போதும் (புறம் 312) பலபடப் பாராட்டப்படுவதும் புகழப்படுவதும் எதனால்?
அங்கேதான் அக்கால ஆண்கள் உண்டாக்கிய சூட்சுமமான கருத்து இருக்கிறது.
சங்கச் சமூகம் போரும் பூசலும் நிரம்பிய சமூகம். அரசர்கள் தமக்குள்ள மண் போதாதென்று தம் மக்களைப் பலிகொடுத்து அவர் பெண்டுகளை விதவை களாக்கியும் பிள்ளைகளை அனாதைகளாக்கியும் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்ட காலம் அது.
அதனால்தான் அக்காலத்திய புலவர் பெருமக்கள் "ஒருவரை ஒருவர் அடுதல் புதுவதன்றே' எனப் போரிடும் அரசர்கள் செயலை ஏற்றித் தாளம் போட்டனர்.
மன்னர்கள் தம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள பலம் வாய்ந்த வீரர்கள் தேவை; வீர மறவர்களைப் பெற்று மனம் கோணாமல் போருக்கு அனுப்பும் பெண்களும் தேவை.
வீரர்களை அனுப்பும் பெண்கள் பாராட்டப்படவும் மதிக்கப் படவும் வேண்டும். அத்தகைய கருத்தை சமுதாயத்தில் பரப்பிக் காத்தலும் வேண்டும். அப்போதுதான் நினைத்தபோதெல்லாம் பெண்கள் எவ்வளவு துன்ப துயரங்களை ஏற்றாலும் பாராட்டுக்கு மயங்கி கணவர்களையும் பிள்ளைகளை யும் போருக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.
அரச மரபினரின் ஆசைக்கு அவர்களின் விசுவாசி களால் உண்டாக்கிப் பரப்பப்பட்ட இக்கருத்து பெண்களை மயக்கிய கருத்துப் பரப்பல் என அறிதல் வேண்டும்.
அரசனுக்காக வீரர்கள் போரிட்டு மடிவர்; அப்படி மடிபவர்கள் மகிழ்ச்சியோடும் புகழ் போதை யோடும் மடிய வேண்டும் என்பதற்காகவே ஒரு கருத்து உண்டாக்கப்பட்டு நம்பிக்கையாக வளர்க்கப்பட்டிருந்தது அன்று; இன்றும் அக்கருத்து வேறு வடிவில் தொடர்கிறது.
ஓடல் செல்லா பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கை பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது? படினே
மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப.
(புறம் 287)
"போர்க்களத்தில் அஞ்சிப் புறம் கொடுக்காதவர் மறவர். மருத நிலத்து ஊர்களைக் கொடையாகப் பெறுவது அவர்களுக்குப் பெருமை அன்று. போரில் விழுப்புண்ணோடு மடிந்து மேலுலகம் புகுந்து தேவ மகளிரை மணந்து இன்புறுவதே அவர்களுக்குப் பெருமை' என்பது சாத்தந்தையார் எனும் புலவரின் கருத்து.
போரில் வீரர்கள் சாவது இயற்கை. செத்தவர்கள் சொர்க்கம் (மேலுலகம்) புகுவர் என்பதும் புகுந்தவர் தேவகுல மகளிரையே மணப்பர் என்பதும் உண்மைக்கு மாறானவை என்று அறிந்திருந்தும் இக்கருத்துகளைப் பரப்பி வந்துள்ளனர் புலமை உடையோர், ஏன்?
இல்லாத ஒன்றை அடைவதில்- நம்புவதில் மனிதர்க்கு எப்போதும் போதை உண்டு. நன்னீரை விடக் கானல் நீரைப் பருகத் துடிப்பவர்கள் உண்டல்லவா? மேலும் தேவகுலப் பெண்களை மணக்கும் பாக்கியம் வேறு கிடைக்கிறது.
இவ்விரண்டையும் அடைய அவாவிய வீரர்கள் சாரை சாரையாகப் புறப்பட்டால்தானே மன்னனுக்கு வெற்றி கிடைக்கும். அவன் வெற்றிபெற மறவர்க்கு ஏற்றப்பட்ட போதையே மேலுலகமும் தேவமகளிரும் என அறிதல் வேண்டும்.
மேலுலகத்தை ஒத்துக்கொண்ட வள்ளுவர் ஓரிடத்தில் மேலுலகத்தை மறுத்துவிடுதலையும் இவன் நினைக்கலாம். "மேலுலகம் இல் எனினும்' (குறள் 222) என்பது அது.
இப்பாடலுக்கு விளக்கம் எழுதிய உரை வேந்தர் ஔவை. சு.துரைசாமிப் பிள்ளையவர்கள் "போர்க்களத்து உயிர் கொடுக்கும் மறவர் துறக்க உலகை அடைந்து தேவ மகளிரை மணந்து இன்புறுவர் என்பது பண்டையோர் கொள்கை' என்று எழுதினார். (புறநானூறு- கழகப் பதிப்பு. பா. 287)
நடுகல்லில் இறந்துபட்ட வீரனின் சிற்பம் செதுக்கப்பட்டிருக் கும். அச்சிற்பத்திற்கு மேலே வானர மகளிர் மலர் தூவி அவனை வரவேற்பது போலவும் சிற்பம் இருக்கும்.
இந்நடுகல் சிற்பத்தையும் புறப்பாடல் கருத்தோடு ஒப்பிட்டு ஒரே கருத்து இருவேறு முறைகளில் இருப்பதை உணரலாம்.
பண்டைக் காலத்தில் மன்னன் சில வீரர்க்கு மட்டும் தனியே சிறப்புகளைச் செய்யும் வழக்கமும் இருந்திருக்கிறது. அவ்வீரர்கள் உடல், பொருள், ஆவியைத் தரும் விசுவாசிகளாய் இருப்பர் போலும்!
ஓர் அரசன் ஒரு வீரனுக்கு மட்டும் தனியே கள்ளைக் கொடுத்துப் பாராட்டி இருக்கிறான். ஆனால் போரில் அவன் சாகவில்லை.
இதனை நினைத்து அவனைப் பெற்றவள் ஏங்குகிறாள்; அழுகிறாள்.
"என் மகன் போரிலே மடிந்திருந்தால்
அரசன் கண்ணீர் மல்க அவனைப் பாடையிலே கிடத்தி
அவன் மேலே தூய வெள்ளாடை போர்த்தி மரியாதை செய்திருப்பானே.
அப்பேறு அவனுக்குக் கிட்டாமல் போயிற்றே'
என வருந்துகிறாள். இதோ பாடல்.
பலர்மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூயவெள் அறுவை போர்ப்பித் திலதே.
(புறம் 286)
அரசன் செய்யும் இச்செயலுக்குப் பின்னணி யில் வீரர்கள் இப்பேறு பெற போருக்கு விரும்பிச் செல்லும் ஆசை உண்டாக்க வேண்டும் எனும் உந்துதல் மறைந்திருப்பதைக் காணமுடியும்.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எந்தக் கருத்தும் தோன்றுவதற்கு வலுவான பின்னணி இல்லாமல் தோன்றுவதில்லை. இன்று மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் பொருளற்ற மூட நம்பிக்கைகளாகிய சொர்க்கம், நரகம், மறுபிறவி, தலையெழுத்து, வானுலகம் போன்ற அனைத்தும் தோன்றிய பின்னணியும்கூட இப்படித்தான் இருக்கும்.
ஒரு கருத்துப் பரவிய பிறகு, மக்கள் கருத்தை மட்டுமே உடும்புப் பிடியாகப் பற்றி நிற்பர்; பின்னணி கால வெள்ளத்தில் கரைந்து போகும். கருத்துகளின் பின்னணியை ஆராய்வ தால் அக்கருத்துத் தோற்றத்தின் மூலத்தை அறியலாம். சமூகத்திற்குப் பண்டு தோன்றிய கருத்துத் தேவையெனின் பின்பற்றலாம்; தீமை தருமெனின் நிராகரிக்கலாம்.
நன்றி - இனிய உதயம்