தமிழுக்குத் தொண்டு செய்த பாரதிக்குப் பிடித்த செந்தமிழ்ப் புலவர்கள் வள்ளுவர், கம்பன், இளங்கோவடிகள், ஔவையார் ஆவர். இவர்களில் பெண்பாற்புலவராகிய, இடைக்காலத்தில் வாழ்ந்த ஔவையாரே அவருக்கு மிகவும் பிடித்தவர். "தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா? என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், மற்ற செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஔவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மீட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப்பெருஞ்செல்வம் என்று மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். என்னும் பாரதியார் கூற்று அவர் ஔவைமீது கொண்ட பேரன்பைக் காட்டும். (பாரதியார் கட்டுரைகள் பக்-.161).
பாரதி, ஔவைமீது வைத்திருந்த மதிப்பே அவரை ஔவையின் ஆத்திசூடியைப் பின்பற்றி புதிய ஆத்திசூடியை எழுதத் தூண்டியது. ஔவையின் ஆத்திடிசூடியைத் தழுவிச் செய்தாலும் அதிலிருந்து தன்னுடையது பாடுபொருளில் மாறுபட்டது என்பதற்காகவே அதற்குப் புதிய ஆத்திசூடி எனப் பெயரிட்டார் பாரதி.
ஔவை- பாரதியார் காலம்:
கி.பி.11-ஆம் நூற்றாண்டில் எழுந்த யாப்பருங்கல விருத்தியுரை, "கொன்றை வேந்தன்' எனும் ஔவையின் கடவுள் வாழ்த்தை செந்துறை வெள்ளைப்பா (சூத் 63) என எடுத்துக்காட்டுகிறது. தமிழண்ணல். ஔவையார். (பக்-56, 57)
இதனால் ஔவையின் காலம் கி.பி.10 -ஆம் நூற்றாண்டு (பிற்காலச் சோழர் காலம்) எனலாம்.
பாரதியார் 1908 முதல் 1918 வரை புதுச்சேரியில் வாழ்ந்தார். அப்போது புதிய ஆத்திசூடி எழுதப்பட்டு 1914-ல் அச்சாகி வெளிவந்தாகத் தெரிகிறது. (பன்முகப் பார்வையில் பாரதி. தொகுப்பு மு.சாயபு மரைக்காயர். பக்-367).
அமைப்பு முறை:
செழுமை நிறை நம் மொழி இலக்கண வளமும் இலக்கியப் பெருக்கமும் உடையது. இவ்வளவு இலக்கியக் குவியல்கள் இருந்தும் சோழர் காலத்தில் இருந்த ஔவையார் ஒருவர் தான் தமிழ்க்கல்வியையும், சிறார்க்கு அகர வரிசையில் கற்பித்தலையும் இலக்காகக் கொண்டு ஆத்திசூடி நூலைச் செய்துள்ளார்.
ஔவை, ஆத்திசூடியை உயிர் எழுத்தில் பன்னிரண்டும் ஆய்த எழுத்தில் ஒன்றும் அகரம் ஏறிய மெய்யெழுத்தில் பதினெட்டும் உயிர்மெய்யில் ககர வரிசையில் பன்னிரண்டும் ச, த, ந, ப, ம, வ ஆகிய வரிசையில் ஔகாரம் நீக்கிப் பதினொன்றுமாக 109 வரிகளில் பாடியுள்ளார்.
ங, ஞ, ய ஆகிய மூன்று உயிர்மெய்யும் சில இடங்களில் மட்டுமே மொழிக்கு முதலில் வருவதால் அவற்றை விட்டுவிட்டார்.
ஏனைய உயிர்மெய் மொழிக்கு முதலில் வாரா.
ஔவை பாடிய ஆத்திசூடி பெரும்பாலான பதிப்புகளின் 109 என எண்ணிக்கை இருக்கவும் முனைவர் தமிழண்ணல் 108 எனக்கொள்கிறார். அவர் அங்ஙனம் கொள்வதற்குரிய காரணமும் விளங்கவில்லை. (ஔவையார், பக்- 60)
பாரதியார் செய்த புதிய ஆத்திசூடி எண்ணிக்கையிலும் கருத்துகளிலும் வேறுபடுகிறது.
பாரதி தம் நூலில் உயிர் எழுத்தில் பன்னிரண்டும் உயிர் மெய்யில் க, ச, த வரிசையில் ஒவ்வொன்றிலும் பன்னிரண்டும் "ஞ' கரத்தில் ஐந்தும் நகரத்தில் பதினொன்றும் "ப'கரத்தில் பத்தும் மகரத்தில் பதினொன்றும் "ய'கரத்தில் மூன்றும் "ர'கரத்தில் எட்டும் "ல'கரத்தில் ஆறும் வகரத்தில் எட்டும் என 110 வரிகளை எழுதியுள்ளார்.
உயிர் ஏறிய மெய்யெழுத்திலும் ஆய்த எழுத்திலும் பாரதி எழுதவில்லை. ஆனால் ஔவை ஒதுக்கிய "ர'கரத்திலும் "ல'கரத்திலும் கூடுதலாகவே எழுதியுள்ளார்.
ஔவை அகரம் ஏறிய பதினெட்டு மெய்யெழுத்தில் ஆத்திசூடி செய்தது அவருக்கே எழுதிய பிறகு பிடிக்கவில்லை போலும்! பின்னர் எழுதிய கொன்றை வேந்தனில் அகரம் ஏறிய மெய்யெழுத்தில் அவர் எழுதவில்லை!
ஒற்றுமையும் வேற்றுமையும்
தமிழகத்தில் ஆங்காங்கே இருந்த குறுநில அரசுகள் மங்கி சோழப் பேரரசு தோன்றிய காலத்தில் ஔவை வாழ்ந்தார்.
விடுதலை தவறி, கெட்டு பாரத நாடு பரங்கியரிடம் பாழ்பட்டு நின்றபோது நாட்டு மக்களுக்கு "நாமிருக்கும் நாடு நமதென்று' உணர்த்தி விடுதலை வேட்கையை ஊட்ட வந்தவர் பாரதியார்.
ஆகவே இவர்கள் கருத்துகளில் ஒற்றுமையைவிட வேற்றுமைகளே மிகுந்திருப்பது இயற்கை.
கால இடைவெளி இருப்பினும் இருவர் கருத்துகளிலும் காணப்படும் ஒத்த கருத்துகள் நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
முடியரசு காலத்தில் வாழ்ந்த ஔவை,
கைவினை கரவேல்
பொருள்தனைப் போற்றிவாழ்
பூமி திருத்தி உண்'
என கைத்தொழிலின் மேன்மையையும் பொருள் தேடலின் இன்றியமை யாமையையும் உழுதுண்டு வாழ்பவரின் உயர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அடிமைக் காலத்தில் வாழ்ந்த பாரதியாரும்
கைத்தொழில் போற்று
பணத்தினைப் பெருக்கு
மேழி போற்று
என ஔவை கூறியதையே வேறுசொற்களில் அறிவுறுத்தி யிருப்பதை நோக்கும்போது சான்றோர்கள் இடம் வேறுபட் டாலும் காலம் வேறுபட்டாலும் ஒத்த கருத்தையே கொண்டிருப்பர் எனும் கருத்தே நினைவுக்கு வருகிறது.
இருவரும் முரண்பட்ட இடங்களும் உண்டு.
"தையல்சொல் கேளல்' என அவ்வையே கூறியுள்ளது நியாயம்தானா? அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமூகத்தில் பெண்ணடிமைத் தனம் வேரூன்றி இருந்தது. பெண்ணுக்குக் கல்வியும் உரிமையும் மறுக்கப்பட்ட காலம் அது. "நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும் பெண்ணறிவென்பது பெரும்பே தைமைத்தே.' எனும் கருத்து கோலோச்சிய காலமாதலால் ஔவை இப்படிச் சொல்ல நேர்ந்தது.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வடலூர் வள்ளலார் போன்ற பெருமக்கள் பெண்ணுரி மைக்குக் குரல்கொடுத்த பிறகு அவர்கள் வழியில் வந்தவர் பாரதியார். அதனால் தான் தெளிவோடும் துணிவோடும்"தையலை உயர்வுசெய்' எனப் பாடினார்.
தமிழர்கள் எப்பொழுதும் போரையும் காதலையும் இருகண் எனப் போற்றியவர்கள்.
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து. (குறள்-776)
என்பது தான் சங்ககால மக்கள் கடைப் பிடித்த போர் நெறி.
அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ் வுலகத் தியற்கை (புறம்-76)
எனும் குரலே அன்று வீரர்கள் எழுப்பிய குரல்.
"பழந்தமிழ்ப் புலவர்களில் பெரும்பான்மையா,
அரசனுக்காகப் போரிடும் படி வீரர்கள் நடுவிலும் அரசனுக்கு இணங்கித் திறை செலுத்தும்படியாக எதிரி மன்னர்களிடத்தும் அரசனைத் தெய்வத்துக்கு இணையாகப் புகழ்ந்து மக்கள் நடுவிலும் பிரசாரம் செய்தவர்கள்' என்கிறார் பேராசிரியர் கோ. கேசவன் (மண்ணும் மனித உயிர்களும் பக்-80)
சோழப் பேரரசு காலத்திலும் இரவலர்களின் நிலை இப்படித்தான் இருந்தது. இக்காலத்தில் ஔவையார் நடைமுறையில் இருந்த கருத்துக்கு மாறான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
போர்த்தொழில் புரியேல்
முனைமுகத்து நில்லேல்
என்பன ஔவை போருக்கும் அரசர்க்கும் வீரர்க்கும் எதிராகக் கூறும் கருத்துகள்.
ஏன் இங்ஙனம் கூறினார்? போர் மலிந்திருந்த காலத்தில் நூற்றுக்கணக்கான கைம்பெண்களும் குழந்தைகளும் குடும்பத் தலைவனைப் போரிலே இழந்து, பட்ட பாட்டை நேரிலே கண்டு, கசிந்து கண்ணீர் மல்கி, போரே வேண்டா, எங்கும் அமைதி நிலவவேண்டும் என நினைத்து இப்படி எழுதினாரா?
நாடுபிடிச் சண்டையில் நேரிடும் ஊர் அழிவு, விளை நிலங்கள் பாழ்படல், வீடுகள் எரிப்பு, மக்கள் சொத்தை வீரர்கள் கொள்ளையிடல் போன்ற பேரழிவு களைக் கண்டு நைந்துருகிப் போருக்கு எதிராக இப்படி எழுதியிருப்பாரோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.
"களிறு எறிதல் காளைக்குக் கடனே' -(புறம் 312) என்று பொன்முடியார் பாடிய பாடலுக்கும் "போர்த்தொழில் புரியேல்' எனும் ஔவையின் கருத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ளளவு வேறுபாடு தெரிகிறது.
ஆனால் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலாவாகிய பாரதி தமிழரின் வீரத்தைக் காட்டும் மரபிலே நின்று,
போர்த்தொழில் பழகு
முனையிலே முகத்து நில்
என்றே எழுதினார்.
இப்படி எழுதிய பாரதிக்கு வன்முறை, குண்டு எறிதல், ஆயுதந்தாங்கிப் போரிடல் ஆகியவை உடன்பாடன்று. அவரே எழுதுவதைப் பார்ப்போம்.
"இந்த முறைமை (ருஷ்யாவில் லெனின் தலைமையில் ஏற்பட்ட சோசலிஸ்ட் முறை) போர், கொலை, பலாத் காரங்களின் மூலமாக உலகத்தில் பரவி வருவது எனக் குச் சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக்கூடாதென்பது என்னுடைய கருத்து?' (பாரதியார் கட்டுரைகள். பக்- 383)
28-11-1917-ல் சுதேசமித்திரன் இதழில் இப்படி எழுதிய பாரதி, 1914-ல் வெளியான புதிய ஆத்திசூடியில் "முனைமுகத்து நில்' என எழுதியது முரண்பாடு போலத் தோன்றுகிறது.
பாரதிக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என்பது ஒருபக்கப் பார்வை ஆகும். அவருக்கே இன்னொரு பக்கமும் உண்டு. அதனையும் பார்ப்போம்.
"ஆங்கிலேயரிடம் சமாதான வழியில் விடுதலை கேட்கும் பிச்சைக்காரத்தனத்தை விட்டுவிட்டு சரீரப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் இந்நாட்டிலே விருத்தியடையுமாறு பிரயத்தனப் படுவோமாக'. (இந்தியா- 13-10-1906) மேற்கோள். தொ.மு.சி.ரகுநாதன். பாரதி காலமும் கருத்தும் பக்-329) என்றும் எழுதியவர் பாரதி.
அதனால் புதிய ஆத்திசூடியில் பாரதி கூறியவை அவருக்கு உடன்பாடானவையே என உள்ளங்கை நெல்லிக் கனியெனத் தெரியக்காணலாம்.
ஔவையும் பாரதியும்:
ஔவை தன் நூலில் ஞ, ய எனும் உயிரிமெய் எழுத்துகளை விட்டமை சரியெனப்படவில்லை.
எனினும் வு, வூ, வொ, வோ எனும் மொழி முதலாகா நான்கெழுத்தையும் உயிரைச் சேர்த்து
உத்தமனாய் இரு
ஊருடன் கூடிவாழ்
ஒன்னாரைத் தேறேல்
ஓரம் சொல்லேல்.
எனக் கூறியிருப்பது அவரது மொழிப்புலமையைக் காட்டுகிறது.
ஔவை ஏற்ற ஆய்த எழுத்தை பாரதி ஒதுக்கிவிட்டார். அவர் ஏற்காத "ஞ'கரத்தையும் "ய'கரத்தையும் பாரதி சேர்த்துக்கொண்டார். ஆனால் பாரதி மொழி முதலாகா ரகரத்திலும் "ல'கரத்திலும் புதுவதாகப் பதினான்கு வரிகளை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றுகூட தமிழ்ச்சொல் இல்லை. இவற்றை அவர் எழுதாமலே இருந்திருக்கலாம்.
ஔவையைப் போலவே பாரதியும் மொழிமுதலாகச் சொற்களோடு உயிர் எழுத்தைச் சேர்த்தும் எழுதியுள்ளார்.
(உ) லுத்தரை இகழ்
(உ) லோகநூல் கற்றுணர்
எனும் தொடர்களே சான்று.
பாரதியின் தனிச்சிறப்பு
பாரதி வாழ்ந்த காலம் தொழிற்புரட்சி ஏற்பட்டு பல்தொழில்களும் நவீனக் கல்விமுறையும் வளர்ந்த காலம். அதனால் ஔவை சொல்ல நினைக்காத புதுமைக் கருத்துகளையும் பாரதி கூறியுள்ளார்.
"சரித்திரத் தேர்ச்சிகொள்'
என நாட்டு வரலாறு, மக்கள் வரலாறு போன்றவற்றை ஊன்றிக் கற்கவேண்டியதன் நிலையையும்
"ரேகையில் களிகொள்'
எனப் புவியியல் பாடம் படிக்கவேண்டிய தேவையையும்
"வானநூற் பயிற்சிகொள்'
என வானியலில் உள்ள அனைத்துக் கூறுகளையும் அறியவேண்டிய அவசியத்தையும் கூறியுள்ளமை பாரதியின் தொலைநோக்கைக் காட்டுவன ஆகும்.
ஆத்திசூடி, புதிய ஆத்திசூடி இரண்டையும் தமிழ்க் குழந்தைகளுக்குக் கசடறக் கற்பித்தால் அவர்கள் எதிர்காலத்தில் நாட்டையும் மொழியையும் காக்கும் நல்ல குடிகளாக உருவெடுப்பர் என்பது உறுதி.
நன்றி - இனிய உதயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக