தமிழர்சரிதத்தின் ஆராய்ச்சிவரலாற்றில் எனது நண்பர் இராவ்ஸாஹெப் மு. இராகவையங்காரவர்களது 'சேரன்-செங்குட்டுவன்' தலைமையான ஓர் இடம் பெற்றிருக்கிறது. இந்நூலால் ஆராய்ச்சியுலகில் ஒரு கிளர்ச்சி எழலாயிற்று. சேரரது பண்டைத் தலைநகர் யாது? அவர்களது தாயக்கிரமம் யாது? அவர்கள் ஒரே குடும்பத்தினரா? பல பிரிவினரா? அவர்களது வெற்றி வரலாறு யாது? கடைச்சங்க காலம் யாது? சிலப்பதிகார காலம் யாது? என்பன முதலியன அறிஞர்கள் தெளிதற்குரிய விஷயங்களா யமைந்தன. இந்நூல் 1915-ல் வெளிவந்தது. எனவே, இப்போது முப்பத்தைந்து ஆண்டுகட்கு மேல் ஆகிவிட்டன. பல அறிஞர்களும் மேற்கூறியவற்றுள் ஒவ்வொன்றனை யெடுத்து ஆராய்ந்துள்ளனர். ஆனால், ஒரு சில தவிர ஏனைய இன்னும் புதிர்களாகவே உள்ளன. இப்புதிர்களுள் ஒன்று 'மௌரியர் தென்-இந்தியப் படையெடுப்பு'. மீண்டும் இதனைக்குறித்து ஆராயவேண்டும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
முறைப்பட ஆராயுமுன், ஒரு கண்டனவுரையை இங்கே குறிப்பிடாமலிருக்கமுடியாது. காலஞ்சென்ற தஞ்சை ஸ்ரீநிவாஸபிள்ளை யவ்ர்கள் 'சேரன்செங்குட்டுவன்' வெளிவந்த சில மாதங்களுக்குள் விரிந்த ஆராய்ச்சியுரை யொன்று செந்தமிழில் (1915) வெளியிட்டனர். இவ்வுரை நடுநிலைகுன்றாது சரித்திரவுணர்ச்சியோடு எழுதப்பட்டுள்ளது. மௌரியர் படையெடுப்பைக்குறித்து இதிற் காணும் கண்டனத்திற்கு விடைகூறல் எளிதன்று. எனினும், சிற்சில ஐயப்பாடுகள் தோன்ற இடமுண்டு.
'சேரன் - செங்குட்டுவன்' என்ற நூலை மிகவும் பயன்படுத்தியவர்கள் சரித்திர அறிஞர்களே. இவர்களுள் டாக்டர் கிருஷ்ணஸ்வாமியையங்காரவர்கள், இந்நூலிற் காட்டிய சான்றுகளையே ஆதாரமாகக் கொண்டு, தெற்கே படையெடுத்துவந்தவன் சந்திரகுப்தமௌரியன் அல்லது பிந்துஸாரனாதல்வேண்டுமென்றும் அப் படையெடுப்பு பொதியமலைவரை எட்டியதென்றும் தென்னிந்திய சரித்திரம் எழுதத்துணிந்தனர் (Beginnings of South Indian
History, p. 88-103). இந்நிகழ்ச்சிகளின் சமகாலத்தன சங்க இலக்கியங்கள் என்று கொள்ளுதல் பொருத்தமன்று என்பதும், காண்வ வம்சத்தினர் வீழ்ச்சிக்கும் ஆந்த்ர ப்ருத்தியர் எழுச்சிக்கும் இடைப்பட்டகாலத்தில் (அதாவது சுமார் கி.மு.30 க்கும் கி.பி.200 க்கும் இடையில்) அவை தோன்றியனவாதல்வேண்டும் என்பதும் டாக்டர் ஐயங்காரவர்கள் கருத்தாகும். ஸ்ரீ சத்யநாதையர் இப்படையெடுப்பு பிந்துஸாரன்காலத்ததாம் என்பர் (A College Text Book of Indian
History vol. I.p.86).
இனி, மௌரியரைக் குறித்துள்ள சங்கநூற் சான்றுகளைக் கவனிப்போம். புறநானூற்றிலே ஒருசெய்யுளும் அகநானூற்றிலே மூன்றுசெய்யுட்களும் மோரியரைக் குறிப்பிடுகின்றன. பிற்கூறிய மூன்றனுள், மாமூலனார் இயற்றியன இரண்டாம். இங்குக் காட்டிய நான்கு செய்யுட்களுள்ளும் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றற்கே பழைய வுரையுள்ளது. அதனை முற்பட உணர்ந்துகொள்வது பெரும் பயன் தருவதாகும். அச்செய்யுள் வருமாறு.
1. புறம்-175. கள்ளில் ஆத்திரையனார். அகம் - 251. மாமூலனார் அகம் - 69. உமட்டூர்கிழார்மகனார் அகம் - 281. மாமூலனார் பரங்கொற்றனார்.
... ... ...
வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக விடைகழி அறைவாய் நிலைஇய மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
பலர்புர வெதிர்ந்த அறத்துறை நின்னே
"வென்றிவேலையுடைய விசும்பைத்தோயும் நெடிய குடையினையும் கொடியணிந்த தேரினையுமுடைய நிலமுழுதும் ஆண்ட வேந்தரது திண்ணிய ஆர்சூழ்ந்த சக்கர மியங்குதற்குக் குறைக்கப்பட்ட வெள்ளிமலைக்கு அப்பாலாகிய உலகத்திற்குக் கழியும் இடைகழியாகிய அற்றவாயின்கண் தேவர்களால் நிறுத்தப்பட்டு இருபொழுதும் ஒருபெற்றியே நிலைபெற்றுவிளங்கும் பரந்த இடத்தையுடைய ஆதித்தாண்டிலத்தையொப்ப நாள்தோறும் இரவு பகல் என்னாமல் பலரையும் காத்தலை ஏற்றுக் கொண்டு ஒரு பெற்றியே விளங்கிய அறத்துறையாகிய நின்னை" என்பது இதன் பழையவுரை.
இங்கே ஆதித்தமண்டலத்திற்கு ஒப்பாக அறத்துறையாகிய ஆதனுங்கன் கூறப்படுகிறான். ஆதித்த மண்டலம் இருபொழுதும் ஒருபெற்றியே நிலைபெற்று விளங்குகிறது. ஆதனுங்கனும் நாள்தோறும் இரவு பகல் என்னாமல் பலரையும் காத்தலை ஏற்றுக்கொண்டு ஒருபெற்றியே விளங்குகிறான். புலவர் கூறக்கருதிய உவமம் இதுவே. ஆதித்தமண்டலம் வெள்ளிமலைக்கப்பாலுள்ள உலகத்திற்கு இடைகழியாகிய் அற்றவாயின்கண் தேவர்களால் நிறுத்தப்பட்டதாம். அற்றவாயில்தானும் நிலமுழுதும் ஆண்ட வேந்தரது சக்கரம் இயங்குதற்குக் குறைக்கப்பட்டதாம். நிலமுழுதும் ஆண்ட இவ்வேந்தர் வென்றிவேலையுடையார்; குடையினையும் தேரினையும் உடையார். 'இவ்வேந்தராவார் சக்கரவாளச் சக்கரவர்த்திகள்' என்று உரைகாரர் விளக்குகிறார்.
இவ்வுரையை நோக்கிய அளவில் இது உண்மை நிகழ்ச்சியான சரித்திரவரலாறன்று என்பது தெளிவாகும். இது ஒரு பௌராணிக வரலாறு (Mythology). இங்கே குறிப்பிட்ட சக்கரம் ஆஞ்ஞா சக்கரமாதல்வேண்டும்; ஏனெனின், தேரின் சக்கரமெனக் கொள்ளுதற்குரிய குறிப்பு யாதும் காணப்படுமா றில்லை. தேர், சக்கரம் என்ற இரு சொற்களும் பிரிந்து கிடக்கும் முறையும் ஆஞ்ஞாசக்கர மென்பதனையே வலியுறுத்துகிறது.
உரையில் 'நிலமுழுதும் ஆண்ட வேந்தர்' எனப் பொருள் தருந் தொடர்க்குரிய மூலம் 'மோரியர்' என்பதாகும். இப்பொருள் இச்சொற்கு எவ்வாறுவந்தது? மூலத்தில் இல்லாததனை வருவித்துக் கூறவேண்டும் அவசியமும் யாதும் காணப்படவில்லை. மோரியர் என்பது சேரர், சோழர் என்றாற்போலக் குடிப்பெயராயின் உரைகாரர் மோரியர் என்பதற்கு இச்சொற்பொருள் அமையுமாறும் இல்லை. இனி, புறநானூற்றின் முதற்பதிப்பில் 'ஓரியர்' என்று மூலத்திற் காணப்படுகின்றது. இதற்கேற்பவே உரையிலும் விளக்கப்பட்டுள்ளது. இச்சொல்லிற்கு நிலமுழுதும் ஆண்டவேந்தர் எனச் சொற்பொருள்கொள்ள இடமுண்டா?
வடமொழியில் 'உர்வீ' என்ற சொல்லுக்கு 'அகலிடம்' 'இருபேருலகம்' (விண்ணுலகு, மண்ணுலகு) என்ற பொருள்கள் உள்ளன. இதனோடு 'ஈശ'*என்பதும் சேர்ந்து 'உர்வீശ'* என்று தொடர்மொழியாகி 'இருநிலவேந்தன்' என்று பொருள்படும். 'உர்வீശ'*என்பது ஓரிய என்று திரிந்தது என்று கொள்ளல் தகும். அல்லது 'உர்வீ' எனபதன் தத்திதமாக 'ஔர்விய' 'ஓரிய' எனத் திரிந்தது என்று துணிதலுமாம். இங்ஙனமாங்கால், 'நிலமுழுதும் ஆண்ட வேந்தர்' என்ற பொருள் எளிதிற் பெறப்படுகின்றது. பிறவாறு சொற்பொருள் கூறுதல் ஏலாது. எனவே,'ஓரியர்' என முதற்பதிப்பிற்கொண்ட பாடமே உண்மையானதெனத் தோன்றுகிறது.
'இனி, ஓரியராவார் சக்கரவாள சக்கரவர்த்திகள் விச்சாதரரும் நாகரும் என்ப' என்பது விளக்கவுரைப்பகுதி. இப்பெயர்களை நோக்குமிடத்து இவைகள் ஜைனபுராண வரலாறுகளுட் காணப்படல் வேண்டுமென எளிதில் ஊகிக்கத்தகும். சூளாமணி முதலிய காவியங்களைக் கற்றோர் இதிற் சிறிதும் ஐயுறவு கொள்ளார். ஜைனபுராணங்களுள் புறநானூற்றில் காணப்படுவது போன்ற வரலாறு எங்கேனும் உளதா?
பின்வரும் ஸ்ரீபுராணப்பகுதி இங்கே நோக்கத்தக்கது.
"இப்பால் பரதராஜன் விஜயத்திலே ஒருப்பட்டு ....அஜிதஞ்ஜயம் என்னும் திவ்ய ரதம் ஏறி, தவளச்சத்திரம் கவிப்ப... சக்ர ரத்நம் முன்செல்ல, தண்ட ரத்நங் கைக்கொணடு ஸேநாபதி மேடுபள்ளம் நிரவி மஹாபத மாகஸம தலஞ்செய்து முன்செல்ல (பக்-114-5) ...விஜயார்த்தத்திற்குத் தெற்காக ஸ்தபதி ரத்நத்தால் நிர்மிக்கப்பட்டுப் பன்னிரண்டுயோஜநை நீளமுள்ள நகரியுள் இருந்தனன். இருந்தவனை....க்ருதமாலன் என்னும் தேவன் வந்து நமஸ்கரித்து விஜயார்த்த குஹாத்வாரம் திறத்தற்கும் கடத்தற்கும் உபாயத்தை ஸேநாபதிக்குச்சொல்லி சக்ரலர்த்தியை விடைகொண்டுபோயினன். அவன் போயினபின், ஸேநாபதி . ..ண்தட ரத்நங் கைக்கொண்டு ..வெள்ளியம்பெருமலையது ஜகதீதலத்தையேறி தமிஸ்ர குஹாமுகத்தையடைந்து வடதிசை நோக்கி நின்று தண்ட ரத்நத்தாலே குஹாத்வார கவாடத்தை திறந்தான். (பக் 117-8)
அதற்குபின், சக்ரவர்த்தி மஹா ஸேநையோடுங்கூட ......தமிஸ்ர குஹையை யடைந்து காகிணீ ரத்நத்தால் ஒருயோஜநை இடைவிட்டு இருமருங்கும் ஸூர்ய மண்டல மும் சந்த்ர மண்டலமும் எழுதி அவற்றின் ஒளிகளால் அங்குள்ள பேரிருளகற்றி...........குஹையினுடைய வட திசைக் கவாடமடைந்து அதனைத் திறந்து.........ம்லேச்ச கண்டம் ஜயித்ததற்கு வடதிசை நோக்கிப் போயினன்" (பக். 119)
இப் பகுதியில் நெடுங்குடை, தேர், திகிரி (சக்ரம்) அத் திகிரி திரிதரக் குறைத்த அறைவாய், அங்கே நிறுவிய ஆதித்தமண்டிலம் முதலியனவெல்லாம் இருத்தல் நோக்கத்தக்கது. வித்யா தரசக்ரவர்த்திகள் என்பதற்குப் பதில் பரதசக்ரவர்த்தி குறிப்பிடப்படுகிறார். எனவே, புறநானூற்றில் வந்துள்ளது போன்ற ஒரு வரலாறு ஜைன புராணங்களிற் காணப்படுதல்வேண்டும் எனபதற்கு ஓர் அறிகுறியாக இப்பகுதி உதவுகிறது. புறநானூற்றுக்கதைக்குரிய மூலம் இன்னதென வடமொழியிலும் பிராகிருதத்திலுமுள்ள ஜைனநூல்களை ஆராய்ந்தோரே துணியவியலும்.
மேற்கூறியது பொருத்தமாயின், புறநானூற்றில் இச்செய்யுளைப்பாடிய கள்ளில் ஆத்திரையனார் ஒரு ஜைனப்புலவர் என்பது பெறப்படும். வைதிக சமயத்திற்குரிய புராண வரலாற்றை உட்கொண்டு பக்ஷாந்தரமாக உரைகாரர் ஓர் விளக்கம் எழுதியிருத்தலையும் அவ்விளக்கம் செய்யுளின் சொற்கிடைக்கையோடு பொருந்தா தொழிதலையும் நோக்குமிடத்து, இச்செய்யுளின் ஆசிரியர் ஜைனர் என்பதில் ஐயுறவுகொள்ள இடமில்லை.
இனி, மோரியரைக் குறிக்கும் அகச்செய்யுட்களில் 69-ம் அகப்பாட்டை எடுத்துக்கொள்வோம்.
விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த
அறையிறந் தகன்றன ராயினும் எனையதூ உம் நீடலர் வாழி தோழி.
என்பது இச்செய்யுட்பகுதி.ஸ்ரீ ராஜகோபாலையங்கார் பதிப்பில் இச்செய்யுளின் முதலடி இரண்டாஞ்சீர் 'நெடுவரை' என்றுள்ளது பிழை. நெடுங்குடை என்று ஏட்டுப் பிரதிகளிற் காணுவதே உண்மைப்பாடம். மோரியர் என்ற பாடந்தான் என்னிடமுள்ள ஏட்டுப்பிரதியிலும் காணப்படுகிறது. ஆனால், இவ்வடியும் புறநானூற்றடியும் ஒத்திருத்தலை நோக்குமிடத்து 'ஓரியர்' என்பதுதான் பொருத்தமெனத் தோன்றுகிறது. மோரியர் என்பது சரித்திரப் பிரசித்திபெற்ற பெயராதலின் ஓரியர் என்ற பாடபேதம் எழுதுவோரால் நேர்ந்த பிழையென்று கருதிப் பதிப்பாசிரியர் அதனைக் காட்டாமல் நீக்கினர் போலும். எங்ஙனமாயினும், இச்செய்யுட்பகுதிக்கும் புறநானூற்றுரைகாரர்கொண்ட பொருளே ஏற்புடையதாகும். உண்மைச்சரித்திர நிகழ்ச்சியைக் கூறுவதாகக் கொள்வதற்கு இச்செய்யுளில் ஆதாரம் யாதும் இல்லை.
இனி, மோரியரை மாமூலனார் குறித்தனரென்று கொள்ளும் இரண்டுசெய்யுட்களுள் முதற்செய்யுளை (அகம்- 251) எடுத்துக்கொள்வோம். ஆராயவேண்டும் பகுதியைக் கீழே தருகின்றேன்.
நந்தன் வெறுக்கை யெய்தினும் மற்றவண்
தங்கலர் வாழி தோழி வெல்கொடித்
துனைகா லன்ன புனைதேர்க் கோசர்
தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில்
இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி யுருளிய குறைத்த
இலங்குவெள் ளருவிய அறைவா யும்பர்
... ... ...
நிரம்பா நீளிடைப் போகி
அரம்போ ழவ்வளை நிலைநெகிழ்ந் தோரே.
இதனை நோகியவளவில் ஒரு சரித்திரச்செய்தியை உணர்த்துவதாகத் தோன்றுகிறது என்பதனை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், சில ஐயப்பாடுகள் தோன்றுகின்றன.
முதலாவது: கள்ளில் ஆத்திரையனாரும் பரங்கொற்றனாரும் பாடிய செய்யுட்களில் ஜைன நூல்கள் சக்ர ரத்நம் என்று கூறும் ஆஞ்ஞாசக்ரம் குறிக்கப்பட்டுள்ளது. மாமூலனார் செய்யுளில் தேர்ச் சக்கரம் (புனைதேர்நேமி) குறிக்கப்பட்டிருக்கிறது. இருவகைச் சக்கரமும் பேரரசின் ஆணைப்பெருமையையே உணர்த்தினும், கதையென்ற அளவில் பிறழ்ச்சிகாணுதல் ஐயுறவை வலியுறுத்துகின்றது.
இரண்டாவது: முற்கூறிய இடங்களில் ஓரியர் அல்லது மோரியர் குறிக்கப்பட்டுள்ளனர்; இங்கே; ‘வம்ப மோரியர்' குறிக்கப்பட்டுள்ளார்கள். வம்பு என்பது 'நிலையின்மை' என்றேனும் 'புதுமை' என்றேனும் பொருள் கொள்ளத்தக்கது. 'வம்பப் பதுக்கை' என்ற புறநானூற்றுத் தொடருக்கு(3) உரைகாரர்'புதிய' என்றே பொருள் எழுதினர். இப்பொருளை இங்குக் கொள்வதாயின், சந்திரகுப்த மெளரியர் முதலானோர் காலத்துக்குப் பிற்பட்டுப் புதிதாகத் தோன்றி,'மெளரியர்'என்று தம்மைக் கூறிக்கொண்ட ஓர் வமிசத்தினர் என்று பொருளாய் விடும். இவ்வகை வமிசத்தினர் முற்காலத்தே தென்னாட்டில் இருந்தனரெனல் சரித்திரச் செய்தி அல்லவா?
மூன்றாவது: நந்தனும் மெளரியரும் ஒருங்கே கூறப்படுகின்றனர். 'மோரியரது தேர்செல்லும்படி வெட்டப்பட்ட கணவாய்க்கு அப்பாலுள்ள பாழான பெருவழியிலே சென்ற தலைவர்க்கு அங்கே நந்தனது பெருநிதி கிடைப்பதானாலும் அதன்பொருட்டுத் தங்கமாட்டார்' என்பது இச்செய்யுட்பகுதியின் பொருள்.நந்தர்களை யழித்துப் பட்டமெய்தியவர்கள் மெளரியர்கள். அந் நந்தர்களுடைய நிதியம் பாடலியிலே கங்கை நீர்க்குக் கீழாகப் புதைத்து வைகப்பட்டுள்ளதென இம் மாமூலரே அகம்265-ல் கூறியுள்ளனர். இந்நிதியம் மெளரியர் தேர் செல்லும்படி யமைந்த மலைக்கு அப்பாபட்ட நீளிடையிலே கிடைக்க இயலுமென்னும்படி மாமூலர் பாடுவாரா? இது ஊன்றி ஆராயத்தக்கது.
நான்காவது: இவ்வடிகளுக்குப் பொதுவாகக் கூறப்படும் பொருள் மற்றைய இடங்களிலுள்ள வரலாறுகளோடு முரண்படுகிறது. மதுரைக்காஞ்சியில்,
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன (508-9)
எனவும்,
பெரும்பெயர் மாறன் தலைவ னாகக்
கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் (772-3)
எனவும் வந்துள்ளனவற்றால் கோசர்கள் பழையன் மோகூருக்கு அமைச்சராயும், சேனாவீரர்களாயும் அமைந்தவர் என்பது அறியப்படும். இங்ஙனமிருப்ப, மெளரியரது முன்படையாய்க் கோசர் சென்று பகைமுனையைச் சிதைத்த காலையில் அவர்க்கு மோகூர் பணிந்து ஒடுங்காததன் காரணமாக மெளரியரே நேரில்வர நேரிட்டது (Beginnings of South Indian History
p.91) என்று மாமூலனார் கூறினாரென்று கொள்ளுதல் மதுரைகாஞ்சியின் கருத்தோடு முரணுவதாகும்.
ஐந்தாவது: குண்டுநீர்க் கூடலுக்குரியனான அகுதை என்பவனுக்குக் (புறம்.347) காப்பாளராகக் கோசர் இருந்தனரென (அகம்.113) நாம் அறிகிறோம். இது பாண்டிநாட்டிற்கோசர் சிலர் வாழ்ந்தனர் என்று உணர்த்தி,அவர் மோகூருக்கு நண்பராவார் என்பதை வற்புறுத்துகிறது. இதனாலும் மோரியருக்குத் துணையாக இவர் அமைந்தவரென்றல் பொருத்தமின்மை காணலாம்.
ஆறாவது:
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி
என்ற குறுந்தொகைச் செய்யுளால் (15) கோசர் வஞ்சினங் கூறி அம்மொழியை உண்மைப்பட நிறைவேற்றினரென்பது புலனாம். எனவே, அவரது வெற்றி அரைகுறை வெற்றியப்று, முழுவெற்றியாகும். இந்நிலையில் மோகூர் அவரது பகைவனென்று கொள்ளினும், அவன் பணியாது நின்றான் என்றல் குறுந்தொகையின் கருத்துக்கு மாறுபட்டதாகும்.
ஏழாவது: மாமூலனாரது செய்யுளின் பொருள் ஒருதலையாகத் துணியும்படி விளக்கமுற அமையவில்லை. வம்பமோரியர்க்கும், கோசர், மோகூர் என்பவர்களுக்கும் எவ்வகையான தொடர்பு என்பது தெளிவாக விளங்கவில்லை.
எட்டாவது: சக்கரங்களைக் குறித்துப் பல வரலாறுகள் பண்டைக்காலத்து வழங்கின. அவற்றுள் கீழ்வருவதும் ஒன்று:
பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாவடி யானை பரிசிலர்க் கருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகட் டோன்றிய
பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ... (புறம். 233)
இங்கே 'திகிரியென்றது திகிரி தைத்ததென்று பிறந்த வார்த்தையை' என்றெழுதினர் உரைகாரர். இது போன்று மோரியர் அல்லது ஓரியர் திகிரியின் வரலாறொன்றும் முற்காலத்து வழங்கியிருக்கலாம்.
மேற்கூரியவற்றை ஊன்றிநோக்குமிடத்து இச்செய்யுளைச் சரித்திரச் சான்றாகக் கொள்ளுதல் சிறிதும் ஏற்புடைத்தன்று என்பது புலனாம்.
இனி, மாமூலனார் மோரியரைக் குறிப்பிடும் பிறிதொரு செய்யுளைக் கவனிப்போம். அதனுள் நமக்கு வேண்டும் முக்கியமான பகுதி கீழ்வரும் அடிகளே:
முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனியிருங் குன்றத்து
ஒண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த
அறையிறந் தவரோ சென்றனர்
பறையறைந் தன்ன அலர்நமக் கொழித்தே (அகம்-281)
டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் முதலிய சரித்திர ஆசிரியர்கள் வடுகரை மோரியரது தூசிப்படையாகக் கொண்டு அவர்கள் முற்படையாகச் செல்ல மோரியர் படையெடுத்துவந்தனர் எனச் சரித்திரம் அமைப்பர். வடுகர் புல்லி என்பவனது வேங்கடமலைக்கு அப்பாலுள்ள மொழிபெயர்தேஎத்து வாழ்ந்தவர் என்பது,
புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து
நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத்
தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்
பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும்
மொழிபெயர் தேஎம் இறந்தன ராயினும்
என மாமூலனார் பாடிய ஓர் அகப்பாட்டினால் (295) விளங்கும். எனவே, இவர்கள் வடகிழக்கில் உள்ளவர்கள். முன்விவகரித்த கோசர்கள் துளுநாட்டில் வாழ்ந்தவர்கள் (அகம். 15). எனவே, இவர்கள் வடமேற்கில் உள்ளவர்கள். மோரியர்களது படையெடுப்பில் அவர்களுக்கு வேங்கடத்துக்கருகிலிருந்த வடுகரும் துளுநாட்டிலிருந்த கோசரும் துணைபுரிந்தனர் என்று கூறல்வேண்டும். இது போன்றதொரு செய்தி தென்-இந்திய சரித்திரத்தில் முற்காலத்தே நிகழ்ந்ததெனல் பொருத்தமாகுமா?
அகம் 281-ல் வரும் 'வடுகர் முன்னுற' என்பதன் பொருள் ஐயமின்றி வரையறுக்கக்கூடியதாகுமா என்று நோக்குவோம். முன்னுற என்பதற்கு (1) எதிர்ப்பட (2) அணுக (3) பொருந்த (4) பின்பற்ற (5) பட்ர்ந்துசெல்ல என்பன முதலிய பலபொருள் கொள்ளுதல்கூடும். தூசிப் படையாக முன்செல்ல என்ற பொருள் வெளிப் படையான சொற்களால் கூறப்படாவிடின், அப்பொருள் கொள்ளத் தக்கதன்று. மேற்காட்டிய பொருள்களுள் எப்பொருள் இம் மாமூலனாரால் கருதப்பட்டதென ஒருவராலும் துணிய முடியாது. மோரியர் வரவை வடுகர் தடுத்து எதிர்பட்டனர் என்றும் பொருள் கொள்ளலாம். வடுகருக்கும் மோரியருக்கும் யாதொரு தொடர்புமின்றியே பொருள் கொள்ளுதலும் கூடும். வடுகரை எதிர்ப்படச் சென்றனன் என வினைவயிற்சென்ற தலைவனைக் குறித்ததாகக்கூறல் பிற பொருள்களோடு ஒத்த தகுதிவாய்ந்ததே. எனவே, இதுவும் உண்மைச் சரித்திர நிகழ்ச்சியைக் குறிக்கும் சான்றாக ஏற்றுக் கொள்ளுதற்குரிய தன்று.
முடிவாக, மோரியரைப்பற்றி வந்துள்ள செய்யுட்கள் நான்கனுள் ஒன்று பழையவுரையுள்ள புறப்பாட்டு; இதன்கண் பண்டைக் காலத்தோர் நம்பிவந்ததோர் கதை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பரங்கொன்றனார் செய்யுளும் மாமூலனார் செய்யுளுள் ஒன்றும் (அகம்-281) சரித்திர நிகழ்ச்சியைக் குறிப்பனவாகக் கொள்ளத்தக்கனவல்ல; புறநானூற்றுச் செய்யுட்பொருளையே உட்கொண்டதெனக் கொள்ளுதல்வேண்டும். இவற்றுள் வந்துள்ள சரித்திர வகுப்பினராகிய வடுகர் கோசர் என்பவர்களுக்கும் மோரியரது வரவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இம்மூன்று செய்யுட்களிலும் குறிப்பிட்டுள்ள சக்கரத்திற்கும் தேருக்கும் யாதோர் இயைபும் இல்லை. அவை ஆஞ்ஞா சக்கரமென்றே கொள்ளத்தக்கன. இங்ஙனமன்றி, அகம் 251-ம் செய்யுளீல் தேரின்சக்கரம் தெளிவாகக் கூறப்பட்டிருத்தலோடு கோசர், மோகூர், மோரியர் இவர் தம்முள் சரித்திரத் தொடர்பும் உளதுபோலத் தோன்றுகிறது. ஆனால், பொருள் விளக்கமில்லாதபடி பலவாறான ஐயுறவுக்கேதுவாக இச்செய்யுள் அமைந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு உண்மைச் சரித்திரம் அமைத்தல் பொருந்தாது.
மௌரியர் மைசூருக்குத் தெற்கே படையெடுத்தனர் என்பது ஆராய்ச்சியாளரிற் பெரும்பாலோர் ஒப்புக்கொண்ட விஷயமன்று. சந்திரகுப்த மௌரியன் ஜைனத்துறவியாகித் தென்னாடுவந்து மைசூரிலுள்ள சிரவண பெள்குளத்தில் பட்டினிநோன்பினால் உயிர்துறந்தான் என்று ஜைனவரலாறு கூறும். இவ்வரவைப் படையெடுப்பு எனக் கூறுதல் சிறிதும் தகாது. மைசூர்வரை வெற்றியால் மௌரிய அரசாட்சி பரவியிருந்தது என்பதற்கு இது சான்றாகலாம். சந்திரகுப்தனின் மகனாகிய பிந்துஸாரன் படையெடுத்துவந்து தென்னாட்டை வென்று கொண்டான் என்று தாராநாத் கூறுவர். இவர் சுமார் முன்நூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஓராசிரியர்; இவர் கூறுவது தக்க சான்றாகாது. காரவேலன் சிலாசாஸனத்தால் பிந்துஸாரனது படையெடுப்பு அறியப்படுகிறது என்பர் ஜெயஸவால். இச்சாஸனத்தின் பொருள் நன்கு விளங்கவில்லையென்பது பெரும்பாலோர் கருத்து. அசோக சக்ரவர்த்தி கலிங்கநாடொன்றனையே படையெடுத்துக் கைப்பற்றியவர் என்பது சரித்திரப்பிரசித்தம். இவரது சிலைத் திருவாணைகளும் மைசூர்க்குத் தெற்கில் காணப்பெறாதது அந்நாட்டுவரைதான் இவரது ஆட்சி நடை பெற்றிருந்தது என்பதற்கு அறிகுறியாகும். அன்றியும், இவர் சேர சோழ பாண்டியர்களைத் தம்மொடு நட்புரிமை பூண்ட தனிமுடியரசுகள் எனக் குறிப்பிடுகின்றனர். இங்ஙனமிருப்ப, பாண்டியர் சேனாபதியான மோகூர் கோசருக்குப் பணியாமையினாலே அவருக்குத் துணையாக மோரியர் வந்தனர் என்பது சிறிதும் ஒப்புக்கொள்ளத் தகாததாம்.
மாமூலனார் தம்காலத்துச் சரிதநிகழ்ச்சியைக் குறித்த வரும் அல்லர். டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் முதலினோரும் சமகால நிகழ்ச்சியன்றெனவே கூறினர் (Beginnings of S.I.History p.100). பழங்கதையொன்று மேற்காட்டிய செய்யுட்களின் அடிகளாற் குறிக்கப்பட்டதெனலே பொருத்தமாகும்.
நன்றி - மதுரைத்திட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக