11/06/2012

இறந்தவன் - ஆதவன்

 லஞ்ச் டயத்துக்குச் சரியாகப் பதினைந்து நிமிடங்கள் இருக்கும்போது அவன் அவளுடைய அறைக்கு வந்தான். சுரீரென்று அவளுள் பரவிய சிலிர்ப்பு...ஆம், சந்தேக மில்லை.

This is it.........Love.

அவன் பார்வை அவள் முகத்தின் மேல் விழுந்து, ஆனால் அங்கு தங்காமல் வழுக்கிச் சென்று மிஸஸ். பிள்ளையின் மேல் போய் நிலைத்தது. அவன் அவளருகே சென்றான். அவளைத்தான் பார்க்க வந்தது போல.

"ஹலோ!"

"ஹலோ!" என்றாள் மிஸஸ். பிள்ளை."உட்காருங்கள்".

அவன் உட்கார்ந்தான். பார்வை எழும்பத் தயங்கியவாறு மேஜை மேல் புரண்டது. "என்ன நடந்து கொண்டிருக்கிறது?" என்றான்.
அவள் உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தாள்.

அவன் மேஜை மேல் கிடந்த ப்ரூப்கள், புகைப்படங்கள் குவியலிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். சிரிக்கும் ஜாக்குலீன்.

"இவளைப் பற்றி என்ன வெளியிடப் போகிறீர்கள்?" என்றான்.

"ஆராய்ச்சிக் கட்டுரை - அடுத்ததாக அவள் யாரை மணக்கக்கூடும் என்பது பற்றி".

"மை காட்!"

"ஏன்?"

"அசிங்கமாக இல்லை?"

"எது? அவள் மறுமணம் செய்து கொள்வதா?"

இல்லை; அது பற்றி இவ்விதமாக...."

"வியாபாரம்" என்று மிஸஸ். பிள்ளை தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.

"ஜாக்குலீன் உயிருள்ள உண்மை. அதே சமயத்தில் கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றின் அபூர்வத் தன்மையும் சுவையும் நிரம்பியவள் - அதாவது ஒரு சராசரி மிடில் கிளாஸ் வாசகனுக்கு..."

" ஸீ!"

"இவர்களில் பலர் வெறும் கற்பனைக் கதைகள் படிக்கும் மட்டத்துக்கு மேல் உயர்ந்து விட்டதாக நம்ப ஆசைப் படுகிறவர்கள்... அதே சமயத்தில் இவர்கள் விரும்புவ தென்னவோ சுவையாக, ரஞ்சகமாக எதையாவது படிக்க வேண்டுமென்பது..."

"ஸோ?"

"ஸோ நீங்கள் உங்கள் தினசரியில் அரசியல்வாதிகளின் காரசாரமான - ஆனால் உண்மையில் பொருளோ பயனோ அற்ற - பேச்சுக்களைத்தான் அதிகம் வெளியிட விரும்பு கிறீர்கள். போட்டியிடும் அரசியல் சக்திகள் பற்றிய ஊகங்களையும் தீர்ப்புகளையும் பூதாகரமாகவோ, நேரடி யாகவோ மர்ம நாவல் பாணியில் விறுவிறுப்பாக எழுதுகிறீர்ககள் - எக்ஸ் இப்படி, ஒய் அப்படி, இது சரி, இது தப்பு..."

"நீங்கள், ஜாக்குலீன் பற்றி எழுதுகிறீர்கள்".

"ஆமாம்".

அவன் புன்னகை செய்தவாறு, நிஜமாக யார் பக்கம் பார்க்க விரும்பினானோ, யாரைப் பார்க்க அங்கே வந்தானோ அவளைப் பார்த்தான். அவளும் புன்னகைத்தாள். அப்பாடா! இறுக்கம் தளர்ந்தது.

முதல் சுவர் தாண்டியாயிற்று.

"இந்தியர்கள் myth-ல் ஊறியவர்கள் - உண்மையை உள்ளபடியே ஏற்றுக் கொள்ள அவர்களுடைய இந்தப் பின்னணி தடையாயிருக்கிறது....the Indian's subconscious mythifies reality before accepting it.........நல்ல சக்திகள், தீய சக்திகள்; ஸூப்பர்உறீரோஸ், ஸூபர்டெமன்ஸ்; புனிதமானவை. பாபகரமானவை..... நம்முடைய காப்பிடலிஸ்ட் தினசரிகளும் Let's face it-- இந்த myth கள் நீடித்திருக்கவே உதவுகின்றன, அது லாபகரமான கொள்கையென்பதனால். உண்மை உணர்ந்து கொள்ளக் கடினமானது. அசுவாரசியமானதும் கூட......truth doesn't sell........"

"நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா, மிஸஸ் சென்?" என்றான் அவன். இன்னொரு சுவர் தாண்டும் முயற்சி, அத்தனை லாவகமான முயற்சியும் அல்ல. எனினும் எந்த முயற்சியும் வரவேற்கப்பட வேண்டியதே, ஊக்குவிக்கப்பட வேண்டியதே.

மிஸஸ் சென் அவனுடைய முயற்சியின் அங்கீகாரமாக அன்னியோன்னியமானதொரு விஷமத்தைப் பார்வையில் ஏற்றி அவன்மேல் வீசினாள். "எது" என்றால்.

"அதை நீ ஒருபோதும் கண்டு கொள்ள முடியாது" என்று அவளைப் பார்த்துக் கூறிய மிஸஸ். பிள்ளை, "ஷீ இஸ் ஆல்ஸோ ரொமான்டிக்-உங்கள் இலட்சிய வாசகர்களில் ஒருத்தி" என்றாள் அவனிடம். "அவள் வேண்டுவது எஸ்கெப்.... Catharis! ............. அரசியல் அரங்கம் முழுவதும் அவளைப் பொறுத்த வரையில் ஸஸ்பென்ஸ், த்ரில்ஸ் நிறைந்த ஒரு நாடக மேடை".

"இது அவரவர் இயல்பைப் பொறுத்து நிகழும் ஒரு பரஸ்னல் அனுபவம் என்று தானே ஆகிறது? எதன் நிமித்தம் வேண்டுமானலும் இது நிகழக்கூடும்... தினசரியை எப்படி நீங்கள் குறை கூறலாம்?"

"நீங்கள் இந்த இயல்பைப் பயன்படுத்திக் கொள்ளவே முயலுகிறீர்கள், அதைச் சரியான திசையில் செலுத்து வதில்லை. என்பதுதான் என் குறை...... what you give them are mere names and faces...... their speeches............. இவை அவர்களுடைய உள் மனதிலுள்ள myth-ல் கரைந்து வகை வகையான பிம்பங்களாகத் துளிர்க்கின்றன...... தவறான பிம்பங்கள்....."

"என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்?"

"சரியான பிம்பங்களை அவர்கள் மனதில் விதையுங்கள்....... tell them there are no heros...... no supermen. நமக்கு வேண்டியது புனிதமான ஒரு god figure அல்ல, இன்றைய சர்வதேச அரசியலின் உண்மைகளுக்குள் பொருந்தி இயங்கக் கூடிய செயல் வீரர்கள் திடமானவர்கள், தமக்குரியதை மிரட்டிப் பெறக் கூடியவர்கள்... வணிக ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தேசங்கள் ஒன்றையொன்று நுட்பமாக மிஞ்ச முயன்று கொண்டிருப்பதும், தம் பலத்தைப் பெருக்க முயன்று கொண்டிருப்பதும் தான் இன்றைய உண்மை: காந்தீய வார்ப்பில் உருவான அரசியல்வாதிகளை இன்று தேட முயல்வது சரியான அப்ரோச் அல்ல.."

அவன் கை தட்டினான். மிஸஸ். பிள்ளை முகத்தில் சலனமின்றி, "இதுவும் பழமையான பிம்பங்களின் விளைவுதான், இந்தக் கைதட்டல்" என்றாள். "ஒரு பெண்மண்யிடமிருந்து எத்தகைய பயனுள்ள கருத்துக் களையும் நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. வேடிக்கையாகக் கைதட்டி இந்நிகழ்ச்சியைத் தள்ளுபடி செய்கிறீர்கள்."

"மிஸஸ் பிள்ளை, you make me feel nervous."

"Relax. I am going" என்று அவள் தன் மேஜையை அவசரமாக ஒழுங்குபடுத்தி, மேலே கிடந்த சிலவற்றை இழுப்பறைக்குள் தள்ளி, கைப் பையைத் தூக்கிக் கொண்டு எழுந்தாள். ". கே!" என்று இருவரையும் பார்த்துக் கையை ஆட்டிவிட்டுக் கொண்டு கிளம்பினாள்.

இப்போது அவர்களிருவரும் தனியே.

"ஸோ!" என்றான் அவன் அவசரமாக, மௌனத்துக்கு, அதன் சங்கடங்களுக்கு, இடம் கொடுக்க விரும்பாதவன் போல. மௌனம் சிந்தனைகளையும் உணர்வுகளையும் தடை யின்றிப் பாயச் செய்வது, உணர்த்துவது. எனவே அபாயகரமானது. 'எப்போதும் எதனுடனும் ஒன்றாமல் வழுக்கி வழுக்கி ஓடியவாறு..." என்று அவள் அவனைப் பற்றி நினைத்தாள்.

"மிஸஸ் பிள்ளை அரசியலில் இருக்க வேண்டியது" என்றான் அவன்.

அவள் அவனுக்குப் பதில் கூற முடியாமல் மௌனமாக அவனைப் பார்த்தாள். 'இதுவல்லவே நீங்கள் பேச விரும்புவது?' என்று கூறும் பார்வை.
அவன் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். மௌனம்...

அவனுடைய செழிப்பான தலைமயிர், அகன்ற நெற்றி, எடுப்பான நாசி.

அவளுக்கு அவனுடைய மூக்கைத் தொட வேண்டும் போலிருந்தது.

மிகச் சாதாரணமான விஷயம். இருந்தாலும் இது எவ்வளவு கஷ்டமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது, இந்தத் தொடுகிற சங்கதி. எத்தனை சுவர்கள், போர்வைகள்.
எத்தனை வார்த்தைகளும்தான் வேறு!

பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப்...

"ஸோ.." என்று மறுபடி கூறியவாறு நிமிர்ந்தான். அவளுடைய அந்தப் பார்வையைச் சந்தித்தவுடன் மறுபடி சங்கடம் கொண்டு, அந்தச் சங்கடத்தை ஒளித்துக் கொள்ள முயன்று கொண்டு...

"மறுபடியும் நாம் தனியாக இருக்கிறோம்" என்றான் அவன்.

"--------------"

"பேசப் போவதில்லையா எதுவும்?"

"நான்தான் எப்போதும் பேசுகிறேன்.. இன்று நீங்கள் பேசுங்கள்."

அவன் தோள்களைக் குலுக்கியவாறு மேஜை மேல் விரல்களால் தாளம் போட்டான். அவள் அந்த விரல்களைப் பார்த்தாள். நீண்ட விரல்லள், மென்மை தொனிக்கும் விரல்கள். எதற்கோ தவிக்கும், தேடும், விரல்கள். மேஜை மேலிருந்த அவள் கைக்கு வெகு அருகில். Why doesn't he touch my hand, why doesn't he grip my shoulders?

God, why doesn't he do something?

"ஹவ் இஸ் யுவர் வைஃப்?" என்றாள் அவள். (ஆமாம்). வேறு வழியில்லை, இன்றைக்கும் கடைசியில் அவள்தான் பேச வேண்டி வந்தது.

"ஃபைன்."

"லெட்டர் வந்ததா?"

"உம். நேற்று."

அவள் ஏதோ சொல்வதற்குத் தொடங்கி, பிறகு வேண்டாமென்று நினைத்தவள் போலப் பேசாமலிருந்தாள். மறுபடி மௌனம்...

"நான் சாப்பிடுவதற்கு என்ன செய்கிறேனோவென்று ரொம்பக் கவலைப்பட்டுக் கொண்டு எழுதியிருக்கிறாள். சுவாமிக்கு விளக்கு ஏற்றுகிறேனா, குழாயில் ஜலம் நிற்கிறதுக்கு முன்னாலே குளிக்கிறேனா, வேலைக்காரன், தோட்டியெல்லாம் ஒழுங்காக வருகிறார்களா, ஸ்டவ்வை ரிப்பேர் பண்ணியாயிற்றா, என்றெல்லாம் கேட்டிருக்கிறாள். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தன் அன்பைத் தெரிவித்திருக்கிறாள்".

அவள் ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் அவளிடம் சொல்வானேன்? சராசரி* இந்து மனைவியின் கேலிச் சித்திரமா? or just for the sake of making conversation? எப்படியோ, அவன் பேசட்டும். பேசப் பேச இறுக்கம் தளரும். இவன், இந்த இன்டலெக்சுவல், கவசங்கள் உதிர்ந்து மிருதுப்படுவான். உணர்ச்சிகளால் தீண்டப்படக் கூடிய நிலையை அடைவான்.

"இன்று காலை நானே சமைத்தேன். சாதம் பேஸ்ட் மாதிரி இருந்தது. சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டது. கத்தரிக்காய்க் கறி சிலது வேகவில்லை..."
(இன்றிரவு மறுபடி என் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அவனை அழைக்கலாமா? ஆனால் இப்போது, முதலில் அவன் பேசி முடியட்டும்).

அவள் சிரித்து,"சமையலும் சுலபமானதொன்றல்லவென்று தெரிந்ததல்லவா!" என்றாள்.

"நிச்சயமாக இல்லை... மிகக் கடினமான, மிக நுட்பமான...'

(அன்பே! நாம் ஏன்; இப்படி வேஷமாடிக் கொண்டிருக்கிறோம். நீ பேச விரும்புவது இதல்ல. Come on> Open out)

"தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எவ்வளவு எரிச்சலூட்டக் கூடியதாக இருக்குமென்பதை இப்போதுதான் உணர்ந்தேன்.... உயர்ந்த பதவியிலிருந்து திடீரென்று வீழ்ச்சியடைந்தது போன்ற உணர்வு, என் மேலேயே ஒரு இரக்கம்...பிரபுத்வ மனப்பாங்கின் சாயல் தொனிக்கிறதல்லவா? நானோ, Progressive கருத்துக்களைச் சார்ந்தவனாக என்னை நினைத்துக் கொள்ள ஆசைப்படுகிறவன்..."

"யாரும் எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்டாக இருக்க முடியாதல்லவா?"

"உண்மை."

அறையை ஒட்டியிருந்த மாடிப்படிகளில் திடீரென்று திபுதிபுவென்று காலடியோசைகள், பேச்சுக் குரல்கள்.

மணி ஒன்றாகி விட்டது.

"லஞ்சுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? என்றாள் அவள்.

"வெளியில்தான் எங்கேயாவது போக வேண்டும். கையில் எதுவும் இன்று கொண்டு வரவில்லை."

"நானும் கொண்டு வரவில்லை.. ஷால் வீ கோ?"

ஒன்றாக நடந்து செல்லும்போது அவனுடைய தேகத்தின் அண்மை- அதன் நிஜம்-பளிச்சென்று அவளைத் தாக்கியது. மீட்டப்பட்ட தந்தியைப் போல உடலெங்கும் அதிர்வு. அவளுக் கேற்ற உயரம், உடலமைப்பு. கூப்பிட்டவுடன் வந்து விட்டான்...
இரண்டு நாட்களுக்கு முன் அவளுடைய ஃப்ளாட்டுக்குச் சாப்பிட வந்திருந்தபோது, ஓரிரு தடவைகள் அவளுடைய உடலின் மேடுகள், சரிவுகள் மேல் அவன் திருட்டுப் பார்வை வீசும்போது 'பார்வையும் களவுமாக'ப் பிடித்தாள்.

அவள் பிடிக்காத தருணங்களும் இருந்திருக்கலாம்.

அவர்கள் பேசியதென்னவோ, அன்று, மார்லன் பிராண் டோவின் படங்கள் பற்றி.
இன்று அவனுடைய வீட்டு வேலை பற்றிப் பேசியது போல.

கூப்பிட்டால்தான் வருவான்.

தன் ஆசைகளை வெளிப்படுத்த விரும்பவில்லை, அல்லது தெரியவில்லை.

hypocrite, or just clumsy?

ரெஸ்டாரண்டில் போய் உட்கார்ந்தார்கள். இதமான இருட்டு. சன்னமான இசை இன்றும், பழைய இந்திப் படப்பாட்டுகள்.

அன்றொரு நாள் இங்கு உட்கார்ந்திருக்கையில்தான் அவள் தன் வாழ்க்கைக் கதையின் Synopsis அவனுக்குக் கூறினாள். பத்தொன்பது வயதில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது பற்றி, முப்து வயதில் அந்தத் திருமணம் கலைந்தது பற்றி. போர்டிங் ஸ்கூலில் படிக்கும் அவளுடைய பையன் பற்றி...காதலென்பது என்னவென்று அந்தப் பத்தொன்பதாவது வயதில் தனக்குத் தெரிந்திருக்கவில்லை, என்று அவள் அவனுக்கு விளக்கினாள். அவன் அவளுடைய லெக்சரர். Good features, forceful speaker. Swept off her feet.

Only to come down crashing, later.

இந்தப் பேச்சுக்கெல்லாம் பின்னணியாக அன்றும் இந்தப் பழைய படப் பாட்டுகள்தான் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த சினிமா பார்த்திருக்கிறீர்களா, அந்தக் காட்சி நினை விருக்கிறதா, என்று நடு நடுவே அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவன் எல்லாம் பார்த்திருந்தான். அவனுக்கும் எல்லாம் நினைவிருந்தது.
திடீரென்று ஒரு அந்நியோன்னியம் அவர்களிடையே முளைத்தது.

பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பார்த்திருந்த படங்கள் இந்த அந்நியோன்னியத்துக்கு அஸ்தி வாரமாக அமைந்ததை நினைத்தபோது அவளுக்கு ஆச்சரிய மாக இருந்தது.

பத்து, இருபது வருடங்கள் முன்பே இது தீர்மானிக் கப்பட்டிருந்ததா, அப்படியானால்? இப்படி அவர்கள்...

பொதுவான ஒரு சரடு அந்நியோன்னியத்தை உருவாக்கு கிறதா, அல்லது அந்நியோன்னியதுக்கான தேவைதான் பொதுவான சிலவற்றைப் பரபரப்புடன் தேடி நிறுவ முயல்கிறதா?

"அமரிடமிருந்து நேற்று கடிதம் வந்தது" என்றாள் அவள்.

அவன் முகத்தில் கேள்விக்குறி தெரிந்தது.

"என் பிள்ளை" என்று அவள் விளக்கினாள். "அடுத்த மாதம் ஏழாந்தேதி அவன் பரீட்சைகள் தொடங்குகின்றனவாம்.."

"எந்தக் கிளாஸில் இருக்கிறான் இப்போது?"

"ஒன்பதாவது."

ஆம். ஒன்பதாவது. முகத்தில் பூனைமயிர் அரும்பத் தொடங்கியாயிற்று. அமர் அடுத்த மாதம் பரீட்சை முடிந்து லீவுக்காக இங்கு வந்து விடும்போது, அவள் யாரையாவது வீட்டுக்கு அழைத்துச் செல்லும்முன் யோசிக்க வேண்டியிருக்கும்.

வெயிட்டர்.

"இரண்டு சாப்பாடு - வெஜிடேரியன்.

"காய்கறி என்ன வேண்டுமென்று வெயிட்டர் கேட்டான்.

"என்ன இருக்கிறது?"

"கத்தரிக்காய் கொத்சு, உருளைக்கிழங்கும் தக்காளியும், உருளைக் கிழங்கும் கீரையும், காலிஃப்ளவர், வெண்டைக் காய்..."

"என்ன வேண்டும்?" என்ற பாவனையில் அவள் அவனைப் பார்த்தாள்.

"ஆர்டர் எனி திங்க் யூ லைக்" என்றான் அவன்.

இவனுக்கென்று ஒரு விருப்பம் கிடையாதா? இந்த 'எதுவானாலும் பரவாயில்லை' மனப்போக்கு எரிச்சலூட்டு கிறது.

இது அவளைப் பாதுகாப்பாக உணரச் செய்யவில்லை.

வெயிட்டர் போன பிறகு மறுபடி அவளுக்கு அவனுடைய மூக்கைப் பிடித்து ஆட்ட வேண்டும் போலிருக்கிறது. Look, why don't you say you want this, you want that. Say You want me.

ஆனால் அவனைச் சொல்லியும் குற்றமில்லை. அவன் உருவான சூழ்நிலை.

அதனை ஊக்குவிக்கும் ஒன்றல்ல. மரபு என்ற பெயரில் "தானை" ஒடுக்கும் கட்டுப்பாடுகள். பண்பாடு என்ற பெயரில் மூடப் பழக்கங்கள். அவனே சொன்னது போல typical inhibited middle class South Indian Brahmin household.

ஆமாம். அன்று அவள் தன்னைப் பற்றியெல்லாம் கூறிய அன்று - அவனும் தன்னைப் பற்றிக் கூறினான். தன் மனதை அழுத்திக் கொண்டிருந்த சிலவற்றை இறக்கி வைத்தான். முதலில் அவன் டில்லியிலிருந்தே பிறந்து வளர்ந்ததைப் பற்றி brief resume. பிறகு அவள் முன்பு செய்த தவறைத் தானும் சமீபத்தில் செய்ய நேர்ந்தது பற்றி. கல்யாணம்...

"ஒவ்வொரு கல்யாணமும் தவறாக இருக்க வேண்டிய தில்லை".

"ஆமாம். தவறாமலிருக்கத்தான் மிகவும் எச்சரிக்கை எடுத்துக் கொள்ளப்படுகிறதே" என்றான் அவன். அவளும் ஐயர். அவளும் வடமாள். இட்டிலி, தோசை பண்ணத் தெரியும்.

பாடத் தெரியும், பூஜை பண்ணத் தெரியும், இருட்டில் கணவனுக்காகத் தேவடியாளாக இருக்கத் தெரியும்...

சில மனிதர்கள் இத்தகைய மனைவிகளுடன் சந்தோஷ மாக இருக்கிறார்கள்தான்.

"நீங்கள் இல்லையா?" என்று அவள் கேட்டாள். உடனேயே. அடடே, அளவு மீறிய ஆர்வத்துடன் இதைக் கேட்டதாக அவனுக்குப்பட்டிருக்கலாம், என்று உணர்ந்து தன்னையே கடிந்து கொண்டாள்.

"I don't know" என்றான் அவன் ஒரு தேவதாஸ் பெருமூச்சுடன். "I don't know" எல்லாருக்கும் தற்காலிக மாகவாவது- அல்லது தற்காலிகமாக மட்டுமே-தேவதாஸாக இருக்க ஆசை. Tragic hero.

நான் பார்த்திருக்கும் ஹாலிவுட் அல்லது இந்திப் படங்களை அவள் பார்த்ததில்லை, என்றான் அவன். பாடல்களைக் கேட்டதில்லை. புத்தகங்களைப் படித்ததில்லை.
Except சிவகாமியின் சபதம்.

என்ன? என்று இவள் கேட்டாள்.

"ஒரு பிரபல தமிழ் சரித்திர நாவல்" என்று அவன் விளக்கினான். பிறகு தொடர்ந்து:

"பிராண்டோ, சாப்ளின், லாரென், ஷெர்லி, திலீப், குருதத், ஸைகால், பங்கஜ் மல்லிக், ஸுரையா, லதா- என் இளமையின், அதன் கனவுகளின், ஒரு பகுதியாக என்னுள் கரைந்துவிட்ட பெயர்கள் - but these names don't mean anything to her இன்ஃபாக்ட் இந்தியே தெரியாது அவளுக்கு..."

"இங்கிலீஷ்?"

"சென்னை சர்வகலாசாலை பி..- நாங்கள் இருவருமே படித்துள்ள நாவல்கள், Pride and Prejudice, David Copperfield, Good Earth."

"அவற்றைப் பற்றிப் பேசலாமே!"

அவன் சிரித்தான். சோகச் சிரிப்பு, தேவதாஸ் சிரிப்பு. அவன் மனைவிக்கு இந்த தேவதாஸ் ஸ்டைல் புரியாது. What a pity.

"லுக், இங்கேயே டில்லியில் பிறந்து வளர்ந்த ஒருத்தியை மணக்காமல் உன்னைத் தடை செய்வது யார்?"

"ஜோஸ்யாஸ்" என்றான் அவன். "என் ஜாதகம் இந்தப் பெண்ணுடையதுடன்தான் பொருந்தியது".

"ஹவ் ரிடிகுலஸ்!"

இதுதான் எங்கள் வாழ்க்கை, என்பதுபோல அவன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

வெயிட்டர்.

சாப்பாடு - சப்பாத்தி, சப்ஜி, பருப்பு...

"ரைஸ்?" என்றாள் அவள்.

"ஸாரி, தீர்ந்துவிட்டது".

"அடடா!" என்று அவள் அவனைப் பார்த்தாள்.

"Don't look so sad. எனக்கு ரைஸ்தான் பிடிக்கும் என்பது ஒன்றுமில்லையே" என்றான் அவன். "சப்பாத்தி இஸ் .கே".

தன்னை ஒரு டிபிகல் ஸவுத் இந்தியனல்லவென்று காட்டிக் கொள்ள இவன் மிகவும் பிரயாசைப்படுகிறான். ஆனால் உண்மையில்? -

"நேற்று நான் உப்புமா பண்ணினேன்" என்றாள் அவள், அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறு, ரொட்டியின் ஒவ்வொரு விள்ளலையும் கையில் வைத்துக் கொண்டு எதில் தோய்த்துக் கொள்வது என்பதை ஒரு பெரும் பிரச்னை போல யோசித்தவாறு அவன் தயங்குவதை ரசித்தவாறு.

"ரியலி?"

"நன்றாக வந்திருந்தது...நீங்கள் சாப்பிட்டிருக்க வேண்டும்".

"கொண்டு வருவதற்கென்ன?"

"அப்போது மிஸஸ். பிள்ளை அதைக் காலி பண்ணியிருப்பாள்".

அவன் சிரித்தான். (குட், இறுக்கம் தளர்ந்து வருகிறது).

" ஸே, இந்த மிஸஸ் பிள்ளை என்னைப் பயங்கொள்ள வைக்கிறாள்..."

"ஷீ இஸ் நைஸ்" என்றாள் அவள். அவன் தோள்களைக் குலுங்கிக் கொண்டான். கெரி கிராண்ட் போல. பீடர் ஒடுல் போல. அவனுடைய மனைவிக்கு இந்த தோள் குலுக்கல் புரியாது, அநேகமாக. ஸோ என்னோடு இருக்கும்போது இவன் அடிக்கடி தோள் குலுக்கினாலும் நான் மைன்ட் செய்யக் கூடாது...

"பருப்பைத் தொடவேயில்லையே?" என்றாள்.

"உம், உம்",என்றான் அவன். தான் சாப்பிடுவதில் அவளுடைய நுணுக்கமான சிரத்தையினால் சங்கடமடைந்தவனாக.

"மிஸஸ் பிள்ளையிடம் என்ன பயம்?" என்றாள் அவள். "அரசியல் பேசுவதாலா?"

"நோ, நோ" என்று ஒரு கணம் ரொட்டியை மௌனமாகச் சுவைத்தான். விழுங்கினான். தண்ணீர் குடித்தான். "நீ சாப்பிடவில்லையே!" என்றான்.

"நீங்கள் முதலில் சொல்லுங்கள்".

"வந்து... மீன்... நம்மைப் பற்றி அவள் ஏதோ சந்தேகப்படுகிறாளோ என்று...."

"என்ன சந்தேகம்?"

மறுபடி கேரிகிராண்ட்.

"எனக்குப் புரியவில்லை" என்றாள்.

"யூ நோ..நமக்குள்ளே..."

"நமக்குள்ளே?"

அவன் பேசாமலிருந்தான்.

"ஏதாவது இருக்கிறதா, நமக்குள்ளே?"

"............"

அவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள். நன்றாக மாட்டிக் கொண்டான். ஆமாம் சொல்லப் பயம். இல்லை சொல்லவும் பயம்.

"சொல்ல வேண்டாம்" என்று சட்டென்று தன் இடது கையால் அவனுடைய இடது கையைப் பற்றினாள். குப்பென்று மின்சார அதிர்வு போல... அவன் ஆட்சேபிக்க வில்லை. கையை அசையாமல் வைத்திருந்தான். அவள் அவன் புறங்கை மேல் சற்றுநேரம் வருடிக் கொண்டிருந்தாள். தோசையைத் திருப்புவது போல கையைத் திருப்பி, "நைஸ் ஹாண்ட்" என்று உள்ளங்கை மேலும் வருடினாள். "அழகிய விரல்கள் உனக்கு, தெரியுமா?" என்று ஒவ்வொரு விரலாக மீண்டும் மீண்டும் வருடி வருடி....
சட்டென்று அவன் தன் விரல்களை அவள் விரல்களுடன் கோர்த்துக் கொண்டான். அழுத்தினான்.... தன் கையால் மெதுவாக அவள் கை மீது வருடத் தொடங்கினான்.
அவளுடைய சேலைத் தலைப்பு நழுவி விழுந்தது. அவன் பார்வை அவளுடையதை நாடியது. அவள் சிரித்தாள்.

" ஆம் ஹாப்பி" என்றாள். " ஆம் ஹாப்பி வித் யூ"

"நானும்" என்றான் அவன், இலேசான புன்னகையுடன். ஆனால் அதில் பூரண நிச்சயமில்லை. Spontaneity இல்லை.

Isn't he even sure when he's happpy?

ஆனால் அவன் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறான். இது அவனுக்கே தெரிந்தாலும் தெரியாவிட்டாலும். அவன் காது நன்றாகச் சிவந்து விட்டது.

வெயிட்டர்.

அவர்கள் கைகளைத் தொடாமல் வைத்துக் கொண்டார்கள். அவள் சேலைத் தலைப்பைச் சரி செய்து கொண்டாள்.

ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? வெயிட்டர், பிஸ்தா. இரண்டு.

அன்று அவளுடைய வீட்டில், மார்லன் பிராண்டோவின் துல்லியமான பாவங்கள் பற்றி, உதட்டசைக்காமல் பேசும் முறை பற்றி. அவன் நெற்றி பற்றி, பிறகு அவன் உதடுகள் பற்றிப் பேசினார்கள். அவள் சொன்னாள். You also have nice lips.

அப்போதும் அவன் காது சிவந்து போயிற்று. அன்று அவன் குறைந்த பட்சம் அவளை முத்தமிடவாவது செய்வா னென்று அவள் எதிர்பார்த்தாள். அன்று அவர்களிடையே நிலவிய மௌனங்கள் எத்தனை உஷ்ணம் நிரம்பியன வாயிருந்தன. எததனை முறை அவர்கள் தம் கவசங்களை நழுவவிட்டு, ஒருவரோடொருவர் மிக இயல்பாக உணர்ந்து தம் ஆழங்கள் மற்றவரால் தொடப்பட்டுக் கிளர்ச்சி யடைந்து அணைப்பின் விளிம்புவரை சென்று மௌனங்களில் சிக்கிக் கொண்டு -

தயக்கம் - பயம் -

சந்துகளில் திரும்பி அந்தக் கணத்தைக் கலையவிட்டு, மீணடும் உருவாக்கி மீண்டும் கலைத்து -

அன்று அவர்கள் கைகளைக் கூடப் பற்றிக் கொள்ள வில்லை.

இன்றுதான் அது நிகழ்ந்திருக்கிறது.

மிக மெதுவான பயணம். இந்த ரீதியில் - அவளுடைய மகன் வந்துவிடுவான். அவனுடைய மனைவி வந்துவிடுவாள். நேரம் அதிகமில்லை.

உண்மையைச் சந்திக்க இவன் ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்?

உண்மை அழகானது. அன்பே.

நமக்கிடையே நிகழ்ந்து கொண்டிருப்பது ... இதுதான் உண்மை ...

வா, இதை முழுமையாக வெளிக் கொணருவோம்.

ஐஸ்கிரீம்.

என்ன செய்யப் போகிறானென்று அவனைக் கேட்க வேண்டும். அவள்தான் கேட்க வேண்டும். அவன் தான் கேட்க மாட்டானே.

எதுவுமில்லை, என்று அவன் கூறுவான். அவள் கேட்க வேண்டுமென்றுதான் அவன் எதிர்பார்க்கிறான்.

என்னுடன் டின்னர் சாப்பிடலாம், என்று அவள் உடனே கூற, அவனும் சரியென்பான்.
ஆனால் அவனே கேட்டால் நன்றாயிருக்கும்.

அவன் மௌனமாக ஐஸ்கிரீம் தின்று கொண்டிருக்கிறான். நடுவே நிமிர்ந்து அவள் பார்வையைச் சந்தித்து, சட்டென்று வேறிடம் தாவுகிறது அவன் பார்வை.

சும்மாதான் பார்த்தேன், என்பது போல.

சும்மாதான் உன்னுடன் வந்தேன்.

சும்மாதான் உன்னுடன் சாப்பிடுகிறேன்.

சும்மாதான்.

ஆனால் நீ கூப்பிட்டால் வந்துவிடுவேன்.

This fellow is getting on my nerves.

அவள் பேசாமலிருந்தாள். மௌனம் அவனைப் பதட்டம் கொள்ளச் செய்யட்டும். அவன் எதையாவது பேச முயலட்டும்.

ஒரு கணம், இரண்டு கணம்...

ஸ்பூன்கள் கிண்ணத்தில் சுரண்டும் ஓசை மட்டும் பூதாகாரமாகக் கேட்கிறது.

அவன் திடீரென்று, "ஒரு சாவைப் பார்த்தேன் இன்று" என்றான்.

அவள் முகத்தில் கேள்விக் குறியுடன் அவனுடைய முகத்தை - அவன் இப்போது அவள் பக்கம்தான் பார்த்துக் கொண்டிருந்தான் - துழாவினாள்.

"நான் வழக்கமாக ஏறும் பஸ் ஸ்டாண்டில் ஒருவன் ஓடும் பஸ்ஸில் தொத்தி ஏறும்போது சறுக்கி விழுந்தான். பின்னாலேயே வந்து கொண்டிருந்த இன்னொரு பஸ் அவன் மேல் ஏறி - இஸ்! It was horrible"

இப்போது அவள் தன் முகத்தில் அனுதாபத்தைக் காட்ட வேண்டும்.

தன் பார்வையின் சவால் பிளஸ் ஆதங்கம் Combination ஸ்விச் ஆஃப் செய்ய வேண்டும். இது இப்போது பொருத்தமற்றதாயிருக்குமென்பதால்.

I hate him.

நெருக்கமான இந்தக் கணம் அவன் மேல் சுமத்துகிற பொறுப்பைத் தட்டிக் கழிக்க அவன் கையாளும் உபாயம்.

விபத்துகள் தினசரி நிகழ்கின்றன. மனிதர்கள் தினசரி இறக்கிறார்கள்.

But you and I are alive at this moment.

அவள் எதுவும் பேசவில்லை.

"எனக்கு மனசே சரியில்லை. அதைப் பார்த்த பிறகு" என்றான் அவன், மறுபடி.
பின் எதற்காக என்னுடன் வந்தாய்? எதற்காக ஐஸ் கிரீம் சாப்பிட்டாய்?

இறந்தவனுக்கு எத்தனை வயது, என்று ஏதோ கேட்டு வைத்தாள்.

அவன் சொன்னான்.

அவன் சொன்னதெதுவும் மனதில் பதியவில்லை. உதடுகள் அசைவதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். எத்தனை அழகிய உதடுகள் நிஜமாகவே.

வெயிட்டர்.

அவன் பணம் கொடுக்க யத்தனித்தான். ஆனால் அவள் பிடிவாதமாக அதை எதிர்த்து, தான் பணம் கொடுத்தாள்.

அவனைப் பழி வாங்கி விட்டது போல ஒரு திருப்தி.

இருவரும் வெளியே வந்தார்கள். இரண்டே கால். இப்போது மறுபடி அக்கட்டிடத்தின் வெவ்வேறு மாடிகளில், வெவ்வேறு அறைகளில், அவர்கள் சிறைப்பட வேண்டும்.
அவன் நாளைய தினசரியை, அவர்கள் அடுத்த மாதத்து, பெண்கள் உலகத்தை உருவாக்குவதில் முனைய வேண்டும். ஒரே முதலாளியின் இறுவேறு முகங்களை உருவாக்க வேண்டும்.

But what about our own faces?

நீ நீயாக, நான் நானாக, ஒருவர் அண்மையில் ஒருவர் உணரக்கூடிய உண்மைக்காக நீ பரபரக்கவில்லையா?

நான்தானா கூப்பிடவேண்டும்?

நீ என்னைத் தேவடியாளாக உணரச் செய்கிறாய்.

உனக்கு வேண்டியது தேவடியாள்தான் பொலும்.

தோசை வார்க்கும், பூஜை செய்யும் தேவடியாள்.

அவள் புன்னகை செய்தாள். 'என்ன?' என்பது போல அவன் அவளைப் பார்த்தான்.
ஒன்றுமில்லையென்பதுபோல அவள் தலையை அசைத்தாள்.

அவர்கள் அலுவலகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

நன்றி - மதுரைத்திட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக