இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற காங்கிரஸ் மகா சபையின் கால்கோள் விழா சென்னையில்தான் நடைபெற்றது. 1883இல் சென்னை அடையாறில் பிரம்ம ஞான சங்கம் என்னும் தியாஸபிகல் சொஸைட்டி நிறுவப்பட்டது. இதற்கு முன்பே 1876இல் கல்கத்தாவிலும் பம்பாயிலும் இந்தியன் அஸோஸியேஷன்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதையொட்டிச் சென்னையில் மகாஜன சபை என்னும் அமைப்பு ஏற்பட்டது. இவையெல்லாம் காங்கிரஸ் மகாசபை தோன்றுவதற்கு முன்பு இருந்த சிறு அரசியல் அமைப்புகள்.
1884இல் சென்னை பிரம்ம ஞான சங்கத்தின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்களில் சுமார் 17 பேர் திவான்பகதூர் ரகுநாதராவ் என்பவரின் வீட்டில் கூடி அனைத்திந்திய அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என முடிவுசெய்தனர்.
கிறிஸ்துமஸ் சமயத்தில் அந்த அமைப்பைக் கூட்ட முடிவெடுத்தனர். ஏற்கெனவே 1878இல் ஜி. சுப்பிரமணிய ஐயர் ஹிந்து என்னும் ஆங்கில வார இதழை நடத்திவந்தார். இதில் இந்தியரது பிரச்சினைகள் குறித்த செய்திகள், கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. நான்கு ஆண்டுகள் கழித்து 1882இல் ஜி. சுப்பிரமணிய ஐயர் சுதேசமித்திரன் என்னும் வார இதழைத் தமிழில் தொடங்கினார். ஹிந்துவும் சுதேசமித்திரனும் இந்தியர்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்தபோதுதான், காங்கிரஸ் மகாசபையைத் தோற்றுவிக்கும் எண்ணம் பிரம்ம ஞான சங்கக் கூட்டத்துக்கு வந்திருந்த கனவான்களுக்கு ஏற்பட்டது.
இதை முன்னின்று நடத்தியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஐ.ஸி.எஸ் அதிகாரி. சிப்பாய்க் கலகம் போன்ற ஒரு பெரும் கலகம் மீண்டும் நாட்டில் ஏற்பட்டு பிரிட்டீஷ் ஆட்சி சீர்குலைந்துவிடக் கூடாது என்னும் எண்ணத்தில், அவர் இந்தியர்களின் குரலை எதிரொலிக்கும் ஒரு மேடை தேவையென்று கருதினார். இந்தியர்களுக்குப் பிரிட்டீஷ் அரசில் சலுகைகள் பெற்றுத்தருவது, வேலைபெறுவது போன்ற நோக்கத்துடன்தான் முதலாவது காங்கிரஸ் மகா சபைக் கூட்டம் 1885 டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் சென்னையிலிருந்து எட்டுப் பேரும் செங்கல்பட்டிலிருந்து இருவரும் தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர், சேலத்திலிருந்து தலா ஒருவரும் கலந்துகொண்டனர். ஹிந்து, சுதேசமித்திரன் பத்திரிகைகளின் அதிபரான ஜி. சுப்பிரமணிய ஐயரும் பம்பாய் மாநாட்டில் கலந்துகொண்டார். சென்னை மாகாணத்திலிருந்து சென்றிருந்த பிரதிநிதிகள் எல்லோரும் சென்னை மகாஜன சபையின் சார்பில்தான் சென்றிருந்தனர்.
பம்பாய்க்குப் பின் கல்கத்தா, சென்னை, அலஹாபாத் என்று ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் காங்கிரஸ் மகாசபையின் கூட்டம் நடந்துவந்தது. அந்தக் காலத்தில், ஏதாவது ஒரு பொதுப் பிரச்சினையைப் பற்றி 'வினா-விடை' என்னும் தலைப்பில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவது வழக்கமாக இருந்தது. இதைப் பின்பற்றி 1883லேயே ஜி. சுப்பிரமணிய ஐயர் சுய அரசாட்சி வினா-விடை என்னும் பிரசுரத்தை எழுதி வெளியிட்டிருந்தார். சுயாட்சி, சுயராஜ்யம், விடுதலை போன்ற கருத்தாக்கங்கள் காங்கிரஸ் மகாசபை தோன்றுவதற்கு முன்பே அந்நாளைய சென்னை மாகாணத்தில் தோன்றிவிட்டன. தமிழ் எழுத்துலகம் அப்போதே சுதந்திர வேள்வியில் இறங்கிவிட்டது. பத்திரிகையாளர்களும் எழுத்துலகவாதிகளே என்றால் அக்காலத்தில் ஜி. சுப்பிரமணிய ஐயர், பிற்கால பாரதி போன்றோர் பத்திரிகையாளர்களே. ஜி. சுப்பிரமணிய ஐயரின் நண்பர் மு. வீரராகவாச்சாரியார். இவருக்குச் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வடக்குப்பட்டு கிராமம். சுப்பிரமணிய ஐயர் ஹிந்து பத்திரிகையைத் தொடங்குவதற்கு இவரும் துணையாக இருந்தார். ஹிந்துவின் நிர்வாக இயக்குநராகவும் இருந்து தனது 50ஆம் வயதில் மரணமடைந்தார்.
காங்கிரஸ் மகாசபையின் மூன்றாம் மாநாடு 1887இல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள மக்கீஸ்கார்டனில் நடைபெற்றது. இம்மாநாட்டுச் செலவுக்கு நிதி திரட்டுவதற்காக மு. வீரராகவாச்சாரியார் காங்சிரஸ் வினா-விடை என்னும் பிரசுரத்தை எழுதி வெளியிட்டார். சென்னை மாநாட்டில் சென்னை மகாஜன சபை, சென்னைப் பட்டதாரிகள் சங்கம், திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கம் போன்ற பட்டதாரிகளின் அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். வீரராகவாச்சாரியார் இந்து நேசன் என்னும் பெயரில் மாதமிருமுறைப் பத்திரிகையையும் நடத்தியிருக்கிறார். இவையெல்லாம் ஆரம்பக் காலத்திய சுதந்திரப் போராட்டத்திற்குத் தமிழ்நாட்டு எழுத்துலகம், பத்திரிகையுலகம் அளித்த பங்கு.
சென்னை மாநாட்டில் கும்பகோணம் சங்கரமடம், தருமபுர ஆதீனத்திலிருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் அந்நாள்களில் பிரிட்டீஷ் அரசருக்கு வாழ்த்துப் பாடிய பின்னரே சபை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. வைஸ்ராய் இம்மாநாடுகளுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதும் அவற்றை மாநாட்டில் வாசிப்பதும் யூனியன் ஜாக் கொடியை ஏற்றுவதும் நடைமுறைகளாக இருந்திருக்கின்றன. இது குறித்து மகாத்மா காந்தி தமது சுயசரிதையிலேயே குறிப்பிட்டிருக்கிறார். அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, கலந்துகொண்ட கூட்டங்களில் ராஜ வாழ்த்து பாடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் 1899இல் லார்டு கர்ஸான் என்பவர் வைஸ்ராய் ஆனார். அப்போது பிரிட்டீஷ் அரசின் இந்தியத் தலைமையகம் கல்கத்தாவில்தான் இருந்தது. வங்காளத்திலுள்ள படித்த இந்தியர்கள் பிரிட்டீஷாருக்குத் தலைவலியாக இருந்தனர். லார்டு கர்ஸான் வங்காளிகளை இந்து- முஸ்லிம் எனப் பிரிப்பதன் மூலம் வங்காளிகளின் அரசியல் எழுச்சியை ஒடுக்கலாம் என நினைத்து முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட சிட்டகாங், டாக்கா ஆகிய பகுதிகளைக் கிழக்கு வங்கம் என்றும் இதர பகுதியை மேற்கு வங்காளம் என்றும் அறிவித்தார். 1905இல் வங்கப் பிரிவினைச் சட்டம் அமலுக்கு வந்தது. இதைக் காங்கிரஸ் மகாசபை எதிர்த்தது. வங்கப் பிரிவினை சுதேசி இயக்கத்துக்கு வழிகோலிற்று.
காங்கிரஸ் கட்சியிலிருந்த மிதவாதிகள், 'சுதேசி இயக்கம் நடத்துவது ஆட்சியாளர்களுடன் மோதலை உருவாக்கும்' என்று எண்ணினர். தீவிரவாதிகள் சுதேசி இயக்கத்தை ஆதரித்தனர். இதன் எதிரொலியாக வ.உ.சி 1906இல் சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். பாரதி, சிவா, வ.உ.சி. போன்றோர் சுதேசி இயக்கத்தை ஆதரித்தனர். மிதவாதிகளைப் பழைய கட்சியார் என்றும் தீவிரவாதிகளைப் புதிய கட்சியார் என்றும் கூறினர். 1906இல் நடந்த கல்கத்தா காங்கிரஸுக்குச் சென்னை வக்கீல் வி. கிருஷ்ணசாமி ஐயர் தலைமையில் மிதவாதிகளும் பாரதியார் தலைமையில் சுதேசியரான தீவிரவாதிகளும் சென்றனர். மகாகவி பாரதி இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இப்படித்தான் அடியெடுத்து வைத்தார்.
தமிழின் முதல் நாவலென்று அறியப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் 1876இல் வெளிவந்தது. இதற்கு முன்பு ஏறத்தாழ இதே காலகட்டத்தில் கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரத்தை எழுதுகிறார். நந்தனார் சரித்திரம் பெரிய புராணத்தில் உள்ளதுதான் என்றாலும் அந்தச் சரித்திரத்தில் அந்தணர் பாத்திரம் கிடையாது. பெரிய புராண நந்தனார் ஏர்பிடித்து உழுபவரும் அல்ல. நந்தனார் சரித்திரம் என்பது பாரதியின் பாஞ்சாலி சபதத்தைப் போல், அந்நாளைய அந்நியர் ஆட்சியை மனத்தில் உருவகித்து எதிர்த்து எழுதப்பட்டது எனக் கருத இடம் உண்டு. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் வெளி வந்த பிறகுதான் காங்கிரஸ் மகாசபை தோன்றுகிறது.
பாரதியைப் போல் பத்திரிகையாளராகச் செயல்பட்டவர் திரு.வி.க. அவர் தொழிற்சங்கவாதியாகவும் தீவிரமாக இயங்கியிருக்கிறார். ஆனால், விடுதலைப் போராட்ட காலத்தில் 39ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த பாரதிபோல் ஒரு வியப்புக்குரிய எழுத்துலக ஆளுமை அவனுக்கு முன்பும் பின்புமில்லை. பத்திரிகை, இலக்கியம் என்ற இரு துறைகளிலும் பாரதி சண்டமாருதம்போல் செயல்பட்டிருக்கிறான். ஆனால், பாரதியைப் போல் கவித்துவ அழகுடன் எழுதாவிட்டாலும் நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளையும் கவி யோகி சுத்தானந்த பாரதியும் அக்காலகட்டத்திய குறிப்பிடத்தக்க கவிஞர்கள். பாரதிக்குப் பின் தோன்றிய மணிக்கொடிக்காரர்களில் பலர் கதரணிந்த காங்கிரஸார்தான். என்றாலும் அவர்களது சிறுகதைகளிலோ நீண்ட உரைநடைப் படைப்புகளிலோ சுதந்திரப் போராட்டம் பற்றிய எதிர்வினைகள் எதுவும் இல்லை.
சி.சு. செல்லப்பா பின்னாள்களில் சுதந்திர தாகத்தை எழுதினாலும் சுதந்திரத்துக்கு முன்பு செல்லப்பாவும் சரி, அவரது சமகாலப் படைப்பாளிகளான கு.ப.ரா, ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி, சிட்டி, பி.எஸ். ராமையா போன்ற மணிக்கொடி எழுத்தாளர்களும் சரி முழுக்க முழுக்க அகவாழ்வு குறித்த சமூகக் கதைகளையே பெரும்பாலும் எழுதியிருக்கின்றனர். கு.ப.ரா. பாரதியைப் பற்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்; பக்கிம் சந்திரரின் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
1972, 73 வாக்கில் இடைச்செவலிலிருந்த கி. ராஜநாராயணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, பிரச்சார எழுத்து பற்றிப் பேச்சு வந்தது. அப்போது வியட்நாம் யுத்த காலம். 'வியட்நாம் யுத்தம் பற்றி எழுதாதவர்கள் படைப்பாளிகள் அல்ல' என்னும் கருத்து அந்நாள்களில் நிலவிவந்தது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வியட்நாம் யுத்தத்தின் கொடுமையைப் பற்றி ஒருவன் எப்படி எழுத முடியும்? மனத்தைப் பாதித்த விஷயங்களைத்தான் ஒரு எழுத்தாளனால் எழுத முடியும் எனக் கி.ராவும் இதர நண்பர்களும் கருதினர். ஆனால், பிரச்சார எழுத்து என்ற ஒருவகை எழுத்து உலக அளவில் இருந்துவருகிறது. இதற்கு ஆதரவும் எதிர்ப்புங்கூட நிலவிவருகிறது.
இது குறையல்ல. மணிக்கொடிப் படைப்பாளிகளின் எழுத்து நோக்கின்படி, அவர்கள் அரசியல் சார்ந்து எழுதுவதைத் தவிர்த்திருக்கலாம். அதை அவர்கள் பிரச்சார எழுத்தாகக் கருதியிருக்கலாம். புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா போன்றவர்கள் செய்திப் பத்திரிகைகளிலேயே பணிபுரிந்திருக்கின்றனர். ஆனால், அவர்களது அக்காலத்திய சிறுகதைகளிலோ இதர உரைநடைப் படைப்புகளிலோ சுதந்திரப் போராட்டம் சார்ந்த விஷயங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
கா.சீ. வேங்கடரமணியின் நாவலையும் எம்.எஸ். கல்யாணசுந்தரத்தின் இருபது வருடங்கள் என்னும் நாவலையும் தமிழ் இலக்கிய உலகம் சுதந்திரப் போராட்ட நாவல்களாக அங்கீகரித்துள்ளது. ஆனால், இவர்கள் அக்கால இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களல்ல.
பாரதிக்குப் பிந்திய நவீனத் தமிழ் இலக்கிய வட்டத்துக்கு அப்பால், ஒரு எழுத்தாளர் சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டார். பல லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருந்தார். சுதந்திரப் போராட்டக் காலத்தையும் அக்காலத்தில் நடைபெற்ற சமூகச் சீர்திருத்தங்களையும் கருவாகக்கொண்டு தியாக பூமி, அலை ஓசை, மகுடபதி போன்ற படைப்புகளை உருவாக்கினார். அவர்தான் கல்கி. அலை ஓசை அவரது மிகச் சிறந்த படைப்பு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்துவந்த மிதவாதம், தீவிரவாதம் ஆகிய இரு போக்குகளையும் கல்கி தனது அலை ஓசையிலும் மகுடபதியிலும் அருமையாகக் கையாண்டுள்ளார். பாரதிக்குப் பின் தோன்றிய மிகப் பெரும் பத்திரிகையாசிரியர், உரைநடைக்காரர் கல்கி. ஆனால், 'கல்கி'யைத் தற்கால நவீன, தீவிர எழுத்துலகம் ஒரு எழுத்தாளராகவே கருதுவதில்லை. பாரதியைப் போலக் கல்கி ஒரு மிகப் பெரும் சக்தி. பாரதியின் கவிதைகளையே வெறும் இசைப் பாடல்கள் எனக் கருதும் நவீன இலக்கிய உலகில் கல்கிக்கு இடம் இல்லாததில் வியப்பில்லை. இதனால் பாரதியின் நாமத்தையோ கல்கியின் நாமத்தையோ தமிழ் எழுத்துலகிலிருந்து அழித்துவிட முடியாது.
இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:
1. ம.பொ.சியின் விடுதலைப் போரில் தமிழகம்
2. இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - பெ.சு. மணி
3. வ.உ.சி கண்ட பாரதி
நன்றி - காலச்சுவடு 2008
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக