ச. சோமசுந்தர பாரதியார்
தமிழ்' இயல், இசை, நாடகம் என மூவகைப்படும். இயற்றமிழும், "செய்யுள்மொழி' அல்லது புலவர் (இலக்கியத்) தமிழ் எனவும், "தேமொழி' அல்லது மக்களின் பேச்சுத் தமிழ் எனவும் இரு திறப்படும். செய்யுள் என்பது பாட்டு மட்டும் அன்று. சிறந்த கருத்துக்களை விளக்க அறிஞர் கையாளும் பாட்டு, உரை, பிசி, மூதுரை போன்ற நடை வகை அனைத்தும் செய்யுளில் அடங்கும். அதை (செய்யுளை) இலக்கியம் என்பது, இக்கால வழக்கு. பேசுந் தமிழும் கற்றார் பேச்சும் கல்லார் பேச்சும் வேறுபடும். புலவர் பேச்சு, பிழையின்றித் தமிழக முழுவதும் மாறாத சொற்றொடர் நடையில் என்றும், எங்கும் நின்று நிலவும் நல்ல தமிழாகும்.
கல்லாப் பொதுமக்கள் பேசும் தமிழ், இடத்தாலும், காலத்தாலும் வேறுபடுவதோடு, உருச்சிதைந்தும், ஒலி குலைந்தும், வழு மலிந்தும், மரபு இறந்தும் வரும் சொற்களால் அவ்வவ் வகுப்பினர் அல்லார்க்கு மயக்கமும், நகையும் பயப்பதாகும். நாகரிக மக்கள் அதைக் கொச்சைப் பேச்செனக் கேட்கவும் கூசுவர். பேசும் நோக்கம், கேட்பவருக்குப் பேசுவோர் கருத்தை எளிதில் தெளிவாக விளக்குவதே. ஆதலின் உருத் திரிந்து பொருள் தெளியா அருமொழிகள் மலிந்து, நாடுதோறும் வேறுபட நடப்பது நல்ல தமிழ் ஆகாது. கற்றவர் பேசுவதும் எழுதுவதும் பிழையற்ற தமிழாதலால், அதுவே நல்ல தமிழாகக் கொள்ளத்தகும். நல்ல தமிழைக் கட்டளைத் தமிழ் என்னலாம். தமிழில் "கட்டளை' என்பது வரம்பு இகவா யாப்புறவுற்ற நடைவகை அனைத்துக்கும் பொதுப்பெயர். கட்டளைக்கலி, கட்டளைவெண்பா, கட்டளைவஞ்சி என அளவுறுத்த அடி, தளைகளால் ஆயவற்றைக் கூறுவது தமிழ் மரபு. அம்முறையில் வழுவற்ற சொற்களால் மொழி இயல் முடிபு பிழையாமல் திரிபற்ற தெளிவுடைய நடையைக் "கட்டளைத் தமிழ்' என்னலாம்.
கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு, எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது. இயல் வழக்கில்லா அருஞ் சொற்களும் பொருள் பல குறித்து மருள வைக்கும் பொதுச் சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார். எளிமையும், தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும், எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு.
""எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு'' (குறள்-424)
என்பது ஆன்ற தமிழ்ச் சான்றோர் கண்ட உண்மை. எனினும், எளிமையும் இனிமையும் உடைய தமிழ், கல்லார் வழக்கில் சொல்லும், பொருளும் எல்லாம் சிதைந்து உருவமும், முடிபும், மரபும், அழிந்து கொச்சை மாந்தரின் எச்சிலாய் இயங்கும் பேச்சு எனக் கொள்வதும் தவறு. எளிமையை இகழ்ந்து அருகிய வழக்கும், கருகிய கருத்தும் அணைந்த முறுகிய கடுஞ் சொல்லை அடுக்கித் தொடுக்கும் இடைக்காலப் பண்டிதர் நடை பயன் அற்றது. ஆனால், வழு மலிந்து முடிவு ஒவ்வாக் கீழ்மக்கள் கொச்சைக் குழறலை மொழிநலம் விரும்புவோர் நல்ல தமிழெனக் கொள்ள இசையார்.
மாரிக்காலத்து நீரில் கத்தும் தவளைகள் போல், சந்தையில் - தெருவில் சனங்கள் பேசும் சழக்குரை எல்லாம் தமிழெனக்கொண்டால் அழகிய எழுத்தும், ஐந்து இலக்கணமும் நிரம்பிப் பழுத்த செந்தமிழ் பாழாய்ப் போய்விடும். பல பத்திரிகை வித்தகர்கள் "செலாவணி' செய்யும் புதிய மொழி நடை, கால் முடமும், உடல் நோயும் காட்டுகிறது. அது போதாமல், இலக்கணத்தை எரித்துவிட்டு, ஊரார் பேசுகிறபடி எழுதுவதே "நல்ல தமிழ்' என்று சிலர் கூசாமல் கூறவும் கேட்கிறோம். இவர்கள் "யார் பேசுகிறபடி எழுத வேண்டும்?' என விளக்குகிறார்கள் இல்லை. ஊர்தோறும் பேச்சு வேறுபடுகிறதே! ஓர் ஊரிலும் வகுப்புவாரி, தொழில்வாரி, இனவாரியாக உரு அழிந்து பல்வகை மொழிகள் உலாவுகின்றனவே. ஒலி உருவும், வரி வடிவம் அற வேறுபட்ட எழுத்துக்களின் இயைபும், பயனும் அறியாமல், எல்லாம் குழம்பக் கதம்ப நடை தொடுப்பதைக் காணுகிறோம். வல்லின "ற'கரத்தையும், சிறப்பு "ழ'கரத்தையும் நாடாமல் நாடு அகற்றி, "ர'கர "ள'கரங்கட்கே ஊராண்மை தருபவர் பலர் ஆவர். அதன்மேல், "ழ'கரத்தைச் சுட்டு, "ய'கரமாய்ச் சமைத்து விற்போர் சென்னையிலும், பிற பல நகரங்களிலும் புதுமொழிப் பண்ட மாற்றுப் புரிந்து வருகின்றனர்.
பழத்தை "பயம்' எனவும், கிழவி என்பதைக் "கியவி' எனவும், பழக்க வழக்கங்களைப் "பயக்க வயக்கம்' எனவும் வழு உணர்ச்சியும், நாணும் சிறிதுமின்றி வாரி வழங்கக் கேட்கின்றோம். "வந்துக்கினு......போயிக்கினு...' எனக் "கினு' எனும் புதிய அனுவினைப் படைத்துக் கூட்டி நவீன அகத்தியக் குலத்தார் தமிழைக் கொடுமைப்படுத்துகின்றனர். இப்பேச்சு அங்காடிகளில் யார் கூறும் சொற் சரக்கைக் கொள்வதெனப் புதுமொழித் தரகர் துணிவரோ? அறியோம். அவற்றின் தராதரத்தை மதித்து அளந்து முடிவு கட்டும் கட்டளை யாதோ? ஒரு வீட்டிலேயே தலைமக்கள், பணியாட்கள், இளம் சிறார், முதியோர்கள் பேச்சுக்கள் வேறுபடும். யார் பேச்சைக் கட்டளை ஆக்குவது? வரம்பின்றி வழுமலியும் பேச்சுக்கு நிலையில்லை; மதிப்பில்லை.
நாகரிக உலகில் எந்த மொழியிலும் வழு மலியப் பேசும் வகுப்பார் உண்டு. ஆனால் அவர் பேச்சு எதுவும் எழுத்தாளர் கொள்ளமாட்டார். "வலைச்சியர் புலைமொழி' (ஆண்ப்ப்ண்ய்ஞ்ள் எஹற்ங்) போன்ற கொச்சை மொழிகளை மேல்நாட்டார் இகழ்ந்து விலக்குவதை யாவரும் அறிவர். அம்மொழி மரபு அறிந்தோ அறியாமலோ, "கேட்பார் கேட்டதைக் கேட்டபடி கொள்வதே தமிழ் வளர்ப்பதாகும்' எனத் துணியும் புதியர் தமிழ்ப் புலமையை வியப்பதா, நகைப்பதா என்பதைத் தமிழ் மக்களே தேர்ந்து தெளியட்டும்.
நடை நலமும், சுவையும் பலதிறப்படினும் நல்ல தமிழுக்கு ஓர் எல்லை உண்டு. மொழி நடை நல்லதெனக் கொள்வதற்கு யாவரும் உடன்படும் சில பொது இயல்பும் வரம்பும் வேண்டும். அவற்றுள் சில எவ்வகைச் செவ்விய நடைக்கும் இன்றியமையாதன. கருதும் பொருளை மருளற விளக்கும் தெளிவு நடை எதற்கும் பொது உடைமையாகும். சொற்களில் உருவமும் முடிவும் பிறழாது அமைதலும் பேணல் வேண்டும்.
தமிழில் பிறமொழிச் சொல் எதுவும் புகல் ஆகாது எனப் புகல்வாரும் உளர். இது மொழி வளர்ச்சிக்குத் தடையாகும். புதிய கருத்துக்களும், பொருள்களும் சுட்ட, தமிழில் பிறமொழிச் சொற்களை எடுத்தாளுவது தவறாகாது. ஆனால், அச்சொற்களைத் தமிழ் இயல்புக்கு இயையச் செப்பனிட்டுச் சேர்த்தல் வேண்டும். ஆன்ற பழந்தமிழ்ச் சான்றோர் இவ்வுண்மை அறிந்தே வடசொல், திசைச் சொற்களை விலக்காமல் தமிழில் கொண்டு வழங்கத்தக்க இயல்முறைகளைத் தம் மொழி நூலில் வகுத்து விளக்கியுள்ளார். இந் நன்முறையை இகழ்ந்து இக்காலப் பெரியார் சிலர் தமிழ் மொழி மரபு - சொல்லாக்க நல்லியல்புகளுக்கு முழுதும் முரணாகப்
பிறமொழிச் சொற்களைத் தமிழுக்கு இயையா அவ்வம் மொழிச் சிறப்பெழுத்து ஒலிமுறைகளுடன் கூட்டித் தமிழைப் பாழ்படுத்துகின்றனர்.
புதுமையைப் புறக்கணிக்காமல் விரும்பும் மேல் நாட்டவரும் தத்தம் மொழியில் பிற சொற்களை ஏற்றபடி மாற்றியே ஆளும் இயல்பை அறிகின்றோம். மெய் முதலாகத் தொடங்குவதும், இணையாகப் பல மெய்கள் தொடருவதும், தமிழில் இல்லா ஒலி இயல்புகளை உடையதுமான பிறமொழிச் சொற்களை அப்படியே கொண்டு வழங்குவதும் தமிழ் இயல்பையே மாற்றிவிடுமாதலால் தவறாகும். அக்கேடு புகுத்தாமல் தமிழைப் பேண வேண்டும்.
(திருச்சி வானொலியில் 1.5.1947 அன்று ஒலிபரப்பப்
பெற்றது. கட்டுரைத் தகவல் உதவி: இரா.அன்பரசன்)
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக