28/03/2012

கவியின்பம் காண்போம்! - இரா.இளமுருகன்

பாமர மக்களும் பாடிப் பரவசம் அடையும் வகையில் அமைந்த காவடிச்சிந்து என்னும் இசைப்பாட்டு வகைக்குச் செவ்வியல் இலக்கிய வடிவத்தைக் கொடுத்தவர் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார். அந்த இலக்கியச் சுவைஞரால் புரந்தருளப் பெற்றவர்தான் "கற்பனைக் களஞ்சியம்' சிவப்பிரகாச சுவாமிகள்.

அவர் ஒருமுறை நண்பர் ஒருவரின் மகள் திருமண நிகழ்வொன்றுக்குச் சென்றார். மங்கல நாண் பூட்டியவுடன் மணமகள் எழுந்து வந்து சிவப்பிரகாச சுவாமியின் காலில் விழுந்து வணங்கி, தன்னை வாழ்த்தியருள வேண்டினார். ஆசு கவியைப்போல அப்போதே வாழ்த்துப்பா ஒன்று பாடினார் சிவப்பிரகாசர்.

 ""அய்யநின் சென்னிமிசை உறைகின்ற மடமங்கை
 யாரென்ன உமைவினவவும்
 அன்னதொரு மடமங்கை யன்றுவெண் டிரைகொழித்
 தழகொழுகு தண்புனலெனத்
 துய்யவொளி யானனம் கரியவிழி காதுவாய்
 தோயத்தில் உண்டோவெனச்
 சொல்லருங் கமலமலர் காவிமலர் கொடிவள்ளை
 தூயசெங் குமுதமென்னப்
 பொய்யென நினைத்துநற் கொங்கையும் கூந்தலும்
 புனலிடை யுண்டோவெனப்
 பொற்புதஞ் சைவலம் அதுஎனவே மறுத்துப்
 புகன்றிடுதீ ..... நங்காய்எனத்
 தையலவள் ஏன்என்ன நாணொடு வணங்கியென்
 றன்பிழைபொ றுத்திடென்றே
 சங்கரன்உ ரைத்திடத் திருவுளம்ம கீழ்ந்தருளு
 சங்கரியு மைகாக்கவே!

கயிலையில், முழு நிலவொளியில் சிவபெருமானும் உமாதேவியும் அருகருகில் அமர்ந்து முருகனின் சுட்டிச் செயல்களைச் சுவைத்த வண்ணம் நினைவலையில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். நொடிப்பொழுது இன்பத்தில் கண்மூடி இருந்த வேளையில், என்ன இது? உரையாடலுக்கிடையில் ஓய்வா? திடுக்கிட்டாள் கங்கை!

சிவனின் தலையையே உறைவிடமாகக் கொண்டிருந்த கங்கை, சகக்கிழத்திகளுக்கிடையே தோன்றும் உரிமைகோரித் தொடரும் பனிப்போர் காரணமாக எழும் ஐயம், பொறாமை இவையெல்லாம் பிடித்து உந்த, மெல்ல எட்டிப் பார்க்கிறாள். நல்ல முழுநிலவுக் காலமானதால் கங்கை எட்டிப் பார்த்த நிழல், எதிரே தெரிந்துவிட்டது. தலைமேல் இருந்து ஓருருவம் எட்டிப் பார்க்கிறது என்பதையும், அவள் கங்கைதான் என்பதையும் அறிந்து கொண்டாள் பார்வதிதேவி.

மெல்லத் தன் கணவனிடம், ""ஐயனே! உங்களின் ஜடாமுடி மேல் அமர்ந்திருக்கும் கங்கை யாரோ?'' என்று வினவினாள்.

அதற்கு ஈசன், ""உமையே! அப்படி யாரும் என் தலைமீது வீற்றிருக்கவில்லை. நொங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் கங்கையின் வெள்ளப் பெருக்கினால் தோன்றும் நிழலுருவத்தைப் பார்த்து நீ தவறாக எண்ணிவிட்டாய் போலும்!'' என்றார்.

""அப்படியானால், அதற்கு ஒளி பொருந்திய முகமும், அம்முகத்தில் அல்லிநிற இதழ்களில் அழகிய கருநாவற் பழங்களை உருட்டி ஓடவிடப்பட்டாற் போன்ற கண்களும், காது, வாய் இவையெல்லாம் இருக்குமோ? உலகத்தில் வேறெங்கும் (நிழலுக்கு) இதுபோல் உருவம் கொண்ட நீரை யான் கண்டதில்லையே'' என உமையவள் மறுக்கிறாள்.

""கங்கையில் உள்ள கமலமலர் முகம் போலவும், காவிமலர் கண்கள் போலவும், குமுதமலர் பவளச்செவ்வாய் போலவும் உன் கண்களுக்கு அவ்வாறு தோற்றமளிக்கின்றன. உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை'' என்கிறார் சிவபெருமான்.

உமையம்மை விடுவதாயில்லை. ""நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியானால் தண்ணீருக்கு, ஈர்க்கு இடைபுகா எடுப்பான இரு கொங்கைகளும் இருக்குமோ? கரிய நிற நீள் கூந்தலெல்லாம் கூட இருக்குமோ?'' என வினவுகிறாள்.

""அது வேறொன்றும் இல்லை உமையே! கங்கையிலுள்ள பெரிய பெரிய கூழாங்கற்களெல்லாம் கொங்கைகளாகவும், படர்ந்திருக்கும் நீண்ட பாசிகள், கருநீள் கூந்தல் போலவும் தெரிகின்றன. இவ்வளவு தூரம் நான் விளக்கிச் சொல்கின்றேன், நீ ஏற்க மறுக்கின்றாயே'' எனச் சினந்து ""அடியேய்ய்!'' என நாக்கைக் கடித்தபடி ஆத்திரத்தில் விளிக்கிறார் சிவபெருமான்.

தலையில் மறைந்து வாழும் கங்கை (அடியேய்ய்... என) தம்மைத்தான் கணவர் அழைக்கிறார் என்றெண்ணி, ""இதோ வருகிறேன்'' என்று பதிலுரைத்து விட்டாள்.

ஈசனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. பார்வதியிடம் வகையாக மாட்டிக்கொண்டார். நாணத்தால் தலைகுனிந்தபடி ""சங்கரி! என்னை மன்னிக்க வேண்டும்'' என நெடுஞ்சாண் கிடையாகப் பார்வதியின் காலில் வீழ்ந்து வணங்குகிறார்.

பார்வதிக்குப் பரமன் தன் காலில் வீழ்ந்து வணங்கிய செயல் ஒன்றும் பெரிதாகப் படவில்லை. ஊடல் உவகையில் இவை அனைத்தும் நிகழ்வது இயல்புதானே! கணவன் தடாலென விழும்பொழுது தலையிலுள்ள கங்கையும் (தன் சகக்கிழத்தியும்-சக்களத்தி) தன் காலில் வீழ்ந்தாளே என எண்ணி எண்ணி இன்புற்றிருந்தாளாம் பார்வதி தேவி!

"அவ்வாறு சங்கரனையே தன்காலில் விழவைத்து, ஏற்றருளிய சங்கரி, உனக்கும் நலன்கள் அனைத்தும் வலம்வர உன்னைக் காத்து அருள்வாளாக!' என வாழ்த்தி முடிக்கின்றார் சிவப்பிரகாசர். பன்னிரு சீர் சந்த விருத்தத்தில் ஒரு படக் காட்சியையே நம் கண்முன் கொண்டு வருகிறார். சிவப்பிரகாச சுவாமிகளின் கவியின்பத்தைக் காணக்காண உள்ளம் மது உண்ட வண்டாய் மயங்குவது இயல்புதானே!

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக