குறள் தமிழின் புகழ். தமிழுக்கு பெருமையும் மகுடமுமாக திகழ்வது குறள். இது வெறும் நீதியின் குரல் மட்டுமல்ல. உருண்டு புரண்டு வாழ்க்கையோடு போராடி வாழ்க்கையை மாற்றி வளப்படுத்துகிற மனிதரின் புறத்து அனுபவங்களையும் அகத்து உணர்வுகளையும் ஒருசேர பதிவு செய்கிற இலக்கியமாகும்.
காதலையும், காமத்தையும், ஊடலையும், கூடலையும் பற்றி வள்ளுவர் படைத்தளிக்கிற குறள்கள் யாவும் உலக இலக்கியத் தரமுள்ள மன அனுபவமாகும்.
அறத்தையும், அன்பையும், ஒழுக்கத்தையும் முன்வைக்கிற குறள், உழ வேண்டிய முறைமை பற்றியும் சொல்கிறது.
“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சாலப்படும்”
ஒருபலம் (அது பழையகாலத்து எடைக்கல்) புழுதி, கால் பலம் ஆகும்படி உழுது காயவிட்டால்... ஒரு பிடி எரு கூட போடாத நிலையிலும் அந்நிலத்தில் பயிரும் விளைச்சலும் செழித்து வளரும் என்கிறது குறள்.
உழுது உழுது புரட்ட மண்ணின் எடை குறையும் என்கிற மிகப்பெரிய அறிவியல் சிந்தனை, இந்தக் குறளில் வருகிறது. அனுபவத்தால் வருகிற அறிவியல்.
“ஏரினும் நன்றால் எரு இடுதல்; கட்டபின்
நீரினும் நன்று அதன் காப்பு”
‘ஏர் உழுதலைவிட எரு இடுதல் நல்லது. இந்த இரண்டும் செய்து களை நீக்கியபிறகு நீர் பாய்ச்சுதலைவிட காவல்காத்தல் நல்லது.’
நீர் விடாதே என்பதல்ல இதன் பொருள். காவல் காத்தல் முக்கியம் என்பதை சற்று அழுத்திச் சொல்கிறார்.
இப்படி உழவனின் வியர்வை ஞானமாக குறள் இருக்கிறது என்றால்.. இன்னொரு பக்கம் தத்துவத்தின் குரலாகவும் இருக்கிறது.
“அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழு கலான்”
அந்தணர் என்போர் அறவோர். எந்தவிதமான அறம்? எல்லா உயிர்களிடத்தும் செம்மையான அருள் செலுத்தி வாழ்கிற பண்புதாம். அறம்.
இந்தியத் தத்துவமரபு என்றாலே வேதங்களிலிருந்துதான் எல்லோரும் துவக்குவார்கள். வேதங்களின் தொடர்ச்சியாக வந்த பகவத் கீதையும், மனுஸ் மிருதி எனும்மனுதர்மமும் அந்தணர் களை அறவோர்களாக்குவதில்லை. அறிவின் அதிகாரிகளாகத் தான் சித்தரிக்கும். அரசனுக்கும் மிஞ்சிய அதிகாரம் கொண்டவர் அந்தணர்.
அந்தணர் எந்தப் பெண்ணையும் தீண்டலாம். தண்டனை யில்லை. எந்த உயிரையும் கொல்லலாம் பாவமில்லை.
இது மனுஸ்மிருதி தருகிற அதிகாரம். லட்சணம், அந்தண ருக்கான இலக்கணம்.
வேத மரபுத் தொடர்ச்சியிலிருந்து விலகிய தமிழரின் சொந்த தத்துவ மரபு ஒன்று உண்டு. அந்தத் தத்துவ மரபுத் தொடர்ச்சி யில் முகிழ்த்தது. திருவள்ளுவரின் திருக்குறள்.
அது அந்தணருக்கு அதிகாரம் தருவதில்லை. உயர் பண்பு தருகிறது. ஒழுக்க நெறி தருகிறது.
எல்லா உயிர்களிடத்தும் செம்மையான அன்பு செலுத்துகிற அறத்தைச் செய்வோரே அந்தணர் என்று புதிய இலக்கணம் படைக்கிறது. தமிழரின் தத்தவக்குரல் இது. மனுஸ் மிருதியின் குரலுக்கு நேர் எதிரான அழகுக்குரல்.
உழுவதெப்படி என்று சொல்லித்தருகிற குறள். தத்துவ தளத் திலும் தனது துல்லியமான தனித்த குரலை வெளிப்படுத்துகிறது.
“துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண்டற்று”
மண்ணில் பிறந்து வாழ்ந்து இறந்தோரை எண்ணிவிட முடியுமா? அதேபோல பற்றற்ற துறவியின் பெருமையை எண்ணிக்கணக்கிட முடியாது.
பற்றற்ற துறவை இத்தனை உயர்த்திப் பேசுகிற குறள், இல்வாழ்க்கை அதிகாரத்தில் வேறொரு குரல் தருகிறது.
“துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை”
பற்றுகளை துறந்த துறவிகளுக்கும், வறியவர்களுக்கும், இருந்து இறந்தோருக்கும் இல்லற வாழ்வில் இருப்போனே துணையாகவும் காவலாகவும் இருப்பான் என்கிறது குரல்.
துறவியின் பெருமை எண்ணிறந்தவைதாம். ஆயினும் அவனுக்கு உணவு தந்து உயிர்காப்பவன் இல்லறத்தானே என்கிறது.
துறவியின் முக்கியத்துவத்தை சொல்கிற போதும் வாழ்வில் காலூன்றியே சொல்கிறார்.
வாழ்வை மறுப்பல்ல, குறள்.
மனித வாழ்க்கையையும் பூவுலக வாழ்க்கையையும் யாவற் றிலும் முக்கியமானதாக வைத்துப் பார்க்கிறது குறள். அதனால் தான் உழவுக்கு தருகிற அதே முக்கியத்துவத்தை உயிருற்பத்திச் செயலான காதலுக்கும் தருகிறது.
இந்த வாழ்க்கையின் உயர் பண்புகளின் வகைகளில் ஒன்று தான் துறவு.
பௌதீக வாழ்வை முன்னிலைப்படுத்தி அக உலக அழகை உன்னதப்படுத்திச் சொல்கிற குறளின் தத்துவமே தமிழரின் தத்துவ மரபு.
வேத மரபுத் தத்துவத்துக்கு நேர்மாறானது.
குறள் 1330. ஆயினும் தமிழறிஞர்களும், தமிழ்ப்பேச்சா ளர்களும் அடிக்கடி கையாளுகிற குறள்கள் சுமார் 200க்குள் அடங்கும். அவற்றைத் தாண்டிச் செல்வதில்லை.
திருக்குறளின் முழுமைக் குறளையும் உள்வாங்குவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் பொறுமை தேவை. ஆர்வம் அவசியம். பொறுமையும் ஆர்வமும் கொண்டு திருக்குறளின் முழுமையை உள்வாங்குகிற தமிழன், குறளால் உழப்பட்டு விடுவான். மனதால் பக்குவப்பட்டுவிடுவான்.
குறளுக்கு அந்த வலிமை உண்டு. ஏனெனில், அது மகா இலக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக