13/03/2012

ஐந்திணை ஐம்பது - சாமி. சிதம்பரனார்

 நூல் வரலாறு

  இது ஐம்பது பாடல்கள் கொண்டது. ஐந்துதிணை யொழுக்கங்களைப்
பற்றிக் கூறுவது. முதலில் முல்லைத் திணை, இரண்டாவது குறிஞ்சித்திணை,
மூன்றாவது மருதத்திணை. நாலாவது பாலைத்திணை, ஐந்தாவது நெய்தல்
திணை என்ற வரிசையில் அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு திணையைப்
பற்றியும் பத்துப் பத்து வெண்பாக்கள் பாடப்பட்டிருக்கின்றன.

ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
 செந்தமிழ் சேராதவர்

என்பது இந்நூலின் சிறப்புப் பாயிரம். ‘‘செந்தமிழின் பயனைப் பெற
வேண்டுவோர் இந்த ஐந்திணையில் உள்ள ஐம்பது பாடல்களையும்
படித்தறிய வேண்டும். அப்பொழுதுதான் செந்தமிழின் சிறந்த
பயனையடையலாம்; இன்பத்தை நுகரலாம்’’, இதுவே இதில் அடங்கிய
பொருள்.


    இந்நூலாசிரியர் பெயர் மாறன் பொறையனார் என்பது. மாறன்-
பாண்டியன்; பொறையன்-சேரன். பாண்டியன் பெயரையும், சேரன்
பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்ட பெயர் இது. பொறை என்பதற்குப்
பொறுமை என்ற பொருளும் உண்டு. பொறையனார் என்றால் பொறுமையை
உடையவர். மாறன் என்னும் பொறையனார் என்றும் பொருள் கூறலாம்.
இவரைப் பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை. இவர் பாடிய
வேறு நூல்களும் இல்லை.

இந்நூலின் செய்யுட்கள் அவ்வளவு கடினமானவையும் அல்ல; மிக
எளிமையானவையும் அல்ல; நடுத்தரமானவை. படிக்கப் படிக்கச் சுவை
பயப்பனவே. இவைகள் கற்பனையிலும், கருத்திலும் சிறந்த செய்யுட்கள்.
இந்நூலின் பாடல்களைக் கொண்டு பண்டைத் தமிழர் பழக்க வழக்கங்கள்
சிலவற்றையும் காணலாம்.

பாட்டுச் சிறப்பு

‘‘மழைநாளில் திரும்பி வந்துவிடுவேன்’’ என்று காதலியிடம் உறுதிமொழி
உரைத்துவிட்டுப் பொருள் தேடப் போயிருந்தான் காதலன். மழைக்காலம்
வந்துவிட்டது. அதைக் கண்டான் அவன். ‘‘நான் சொல்லிய கார்காலம்
வந்துவிட்டது; காதலி என்னைக் காணாமல் நெஞ்சங்கலங்குவாள்; விரைந்து
செல்ல வேண்டும்’’ என்று எண்ணினான். உடனே தேர்ப்பாகனிடம் கீழ்
வருமாறு உரைத்தான்:

‘‘தேர்ப்பாகனே, தேர் விரைவாகப் போகட்டும். அவள் மழையால்
செழித்திருக்கும் காட்டின் அழகைக் காண்பாள். கற்பின் சிறப்பால் தன்
துக்கத்தை அடக்கிக் கொள்ளுவாள். கன்னத்திலே கையை ஊன்றிக் கொண்டு
கவலைபடிந்த முகத்துடன் என்னை எதிர்பார்த்து நிற்பாள். ஆகையால்
தேரை விரைவாய் ஓட்டுக’’ என்றான்.
                
‘‘நூல்நவின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக!
தேன்நவின்ற கானத்து எழில் நோக்கித்,-தான்நவின்ற
கற்புத்தாள் வீழ்த்துக, கவுண்மிசைக் கைஊன்றி,
நிற்பாள்,நிலை உணர்கம் யாம்.                (பா.10)

நூல்களைக் கற்றறிந்த பாகனே! தேரை விரைவாகச் செல்லும்படி செய்க.
மலர்களிலிருந்து தேன் சிந்துகின்ற காட்டின் அழகைக் கண்டு, தான் இளமை
முதல் பழகிய கற்பென்னும் தாளைப் போட்டுக் கொண்டு, கன்னத்தின் மேல்
கையை ஊன்றிக் கொண்டு நிற்பாள். அவள் நிலைமையை நாம் சென்று
காண்போம்’’

தாம் கூறிய உறுதி மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை
அக்கால மக்களுக்கு உண்டு. காதலன் எங்கு சென்றாலும் தன் காதலியை
மறப்பதில்லை. இக்கருத்தை இப்பாடலிலே காண்கின்றோம்.

மற்றொரு சிறந்த கருத்தமைந்த பாடலைக் காண்போம். காதலிக்கு
வயதேறிவிட்டது. அவள் தலைமயிர்கள் நரைத்துவிட்டன; காதலனுக்கு
மட்டும் இளமைப் பருவம் குறையவில்லை. ஆதலால் அவன் தன்
ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேசையர் சேரிக்குச் சென்றான். சில
நாட்கள் அங்கே தங்கியிருந்து திரும்பினான். காதலி தன் மீது
கோபங்கொண்டிருப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால் அவள்
ஊடலைத் தணிப்பதற்காக அவளிடம் தூதனுப்பினான். அந்தத் தூதுவனிடம்
தலைவி கூறுகின்றதாக அமைந்துள்ளது அச்செய்யுள்.

‘‘தலைவனிடம் கோபித்துக் கொள்ளுவதற்கு எனக்கென்ன
தகுதியிருக்கின்றது? ஒரு காலத்திலே எனது கூந்தல் மெல்லிய
கருமணலைப்போல அசைந்து தொங்கிக் கொண்டிருந்தது. கண்ணுக்கு
அழகாகவும் இருந்தது. இன்றோ அக்கூந்தல் வெண்மணலைப் போல நிறம்
மாறிவிட்டது. ஆகவே நான் கிழவியாகிவிட்டேன். இனி எனக்கென்ன
கோபம்; நான் ஏன் தான் கோபிக்கப் போகின்றேன்?

 தண்வய லூரன் புலக்கும் தகையமோ!
நுண் அறல் போல நுணங்கிய ஐம்கூந்தல்,
வெண்மணல் போல நிறந்திரிந்து, வேறுஆய
வண்ணம் உடையேம், மற்று யாம்’’.        (பா.27)

இப்பாடல் பண்டைக்காலப் பெண்ணின் இயல்பை உணர்த்துவது. தன்
கணவன் செய்தது தவறு என்று தெரிந்தும், அவனைத் தவறு செய்யாமல்
தடுக்கும் இயல்பு தன்னிடம் இல்லையே என்று வருந்தினாள் தலைவி.

ஒவ்வொருவரும் தமது இரகசியம் வெளிப்படாமல் காப்பாற்றிக்
கொள்வதிலே கவலையுள்ளவர்கள். தமது இரகசியத்தை மற்றவர்கள் கண்டு
கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு நேர்ந்துவிட்டால் அப்பொழுதுகூட விட்டுக்
கொடுக்கமாட்டார்கள். எதையாவது பொருத்தமாகச் சொல்லித்
தப்பித்துக்கொள்ளுவார்கள். இது மனித இயல்பு. இப்படிச் செய்வதிலே
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகவும் திறமைசாலிகள். இவ்வுண்மையை
இந்நூலின் செய்யுள் ஒன்றால் காணலாம்

ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி ஒன்றைத் தலைவி, தன் தோழியிடம்
உரைப்பதாக அமைந்திருப்பது அச்செய்யுள். அத்தலைவி தன் காதலனோடு
கள்ள நட்பு கொண்டிருப்பவள். இன்னும் அவளுக்குக் கற்பு மணம் நடைபெற
வில்லை.

‘‘கணவன் பிரிந்து சென்ற குளிர்ந்த மலர்ச் சோலையைப் பார்த்து
அழுதுகொண்டிருந்தேன். அதனால் என் கண்கள் சிவந்துவிட்டன.
அப்பொழுது என் தாய் வந்தாள். எனது முகத்தைப் பார்த்தாள். ஒளியுடன்
இருந்த என் முகம் வாடியிருப்பதைக் கண்டாள். உடனே ‘‘உனக்குண்டான
துன்பம் யாது? ஏன் அழுதிருக்கின்றாய்? என்றாள். ‘‘கடல் அலை வந்து
எனது விளையாட்டு மணல் வீட்டைக் கலைத்துவிட்டது’’ என்றேன்.

 கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில் நோக்கி
உண்கண்சிவப்ப அழுதேன்; ஒளிமுகம்
கண்டு அன்னை எவ்வம் யாது என்னக், கடல்வந்து என்
வண்டல் சிதைத்தது என்றேன்’’                                             (பா.44)

இது பெண்களின் திறமையைக் காட்டும் சிறந்த பாடல் இதுபோன்ற இனிய
பாடல்கள்இந்நூலிலே இன்னும் பல உண்டு.

பழக்க வழக்கங்கள்

பண்டைக்காலப் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் இந்நூலிலே
காணலாம்.

கருமேகம் கண்ணனுடைய நிறத்தைக் கொண்டிருந்தது; மின்னல்
முருகனுடையவேற்படையின் ஒளியைப் போலிருந்தது; என்று கூறுகின்றது
ஒரு செய்யுள்.
                
‘‘மல்லர்க் கடந்தான் நிறம்போன்று இருண்டு எழுந்து,
செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி.
  
மல்லர்களை வென்ற கண்ணனுடைய நிறத்தைப் போலக் கருத்து
எழுந்து, சிறந்த கடம்ப மலரை விரும்பிய முருகனுடைய வேலைப்போல
மின்னி’’ என்பதே அச்செய்யுள்,

முருகனுக்கு ஆடு வெட்டி, இரத்தத்தைச் சிந்திப் பூசைபோடுவது
பண்டைக்கால வழக்கம்.
                
‘‘மறியீர்த்து உதிரம்தூய் வேலன் தரீஇ
வெறியோடு அலம் வரும் யாய்                 (பா.20)

வேலைக் கையிலேந்தி ஆடுகின்ற பூசாரியை அழைத்து,
ஆட்டுக்குட்டியை அறுத்து, அதன் இரத்தத்தை நாற்றிசைகளிலும் சிந்தி,
இவ்வாறு முருகனுக்குப் பூசைபோடுவதாகிய தொழிலில் ஈடுபட்டு
வருந்துகின்றாள் எனது தாய்’’.

இறந்த வீரர்களுக்கு அவர்களின் நினைவாகக் கல் நடுவார்கள். இது
பண்டை வழக்கம். இதனை ‘‘நடுகல்-விரிநிழல் கண்படுக்கும்
வெம்கானம்’’ என்பதனால் காணலாம். ‘‘வீரர்களுக்காக நடப்பட்டிருக்கும்
கல்லின் விரிந்த நிழலிலே பேய் படுத்துறங்கும் கொடிய கானகம்’’ (பா.35) என்பதே இதன் பொருள்.

காரமான மருந்தைப் போட்டுப் புண்ணை ஆற்றும் வழக்கம்
அக்காலத்தில் இருந்தது. இதனை இந்நூலின் 24-வது பாட்டிலே பார்க்கலாம்.

புகழுடன் வாழ்வது மக்கள் கடமை. பிறர் துன்பத்தைக் களைந்து உதவி
செய்வதே நல்லறம். அந்த நல்லறமே புகழைத் தரும். இந்நீதியையும்
இந்நூல் உணர்த்துகின்றது.
            
‘‘மிக்க மிகுபுகழ் தாங்குபவோ?தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடி யாதார்.                               (பா.48)

தன்னை அடைந்தவர்களின் தளர்ச்சியைத் தன்னுடையதாகக் கொண்டு
அதைக் களைய முன்வராதவர் மிகுந்த புகழைப் பெற முடியுமா?’’

இதனால் ஒரு சிறந்த நீதியைக் காணலாம். இந்நூல் தமிழர்களின்
தனிப்பட்ட வாழ்க்கைச் சிறப்பை-காதலன் காதலிகளின் அன்பு வாழ்க்கையை
எடுத்துரைக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக