நூல் வரலாறு
‘‘எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே,
ஏலாதி என்பது ஒரு மருந்தின் பெயர். அந்த மருத்தின் பெயரே இந்த
நூலுக்குப் பெயராயிற்று. திரிகடுகம். சிறுபஞ்சமூலம் என்பவை போன்ற பெயரே ஏலாதி என்னும் பெயரும்.
ஏலம், இலவங்கம், சிறுநாவல்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு இந்த ஆறும்
ஏலாதியாம். இதுவே பண்டை மருத்துவ நூலார் கொள்கை. இந்த ஆறு
சரக்குகளையும் சேர்த்துச் செய்த சூரணம் உடல் நோய்க்கு மருந்தாகும்.
ஏலாதி என்னும் இந்நூலிலே ஒவ்வொரு பாட்டிலும் ஆறு செய்திகள்
கூறப்படுக்கின்றன. இந்த ஆறு செய்திகளையும் அறிந்து பின்பற்றி
வாழ்வோர் மன நோயில்லாமல் வாழ்வார்கள். இந்தக் கருத்தில்தான்
இந்நூலுக்கு ஏலாதி என்று பெயர் வைத்தனர்.
இந்நூலாசிரியர் பெயர் கணிமேதையார் என்பது. கணிமேதாவியார்
என்றும் வழங்குவர். இப்பெயர் காரணப் பெயராகவே காணப்படுகின்றது.
கணியாகிய மேதையார் என்று பொருள்கொண்டால் கணக்கிடுகின்றவராகிய
பேரறிவு படைத்தவர் என்பது பொருள். கணக்கிலே வல்லவர்; தமிழிலும்
பேரறிவு படைத்தவர் இவ்வாசிரியர்.
ஏலாதியில் உள்ள வெண்பாக்கள் எண்பது. சிறப்புப்பாயிரம், கடவுள்
வாழ்த்து வெண்பாக்கள் இரண்டு, ஆக 82 வெண்பாக்கள் இருக்கின்றன.
ஏலாதியின் பாடல்கள் படிப்பதற்குக் கொஞ்சம் கடபுடாவென்றுதான்
இருக்கும். செய்திகளையும், சொற்களையும் எண்ணி எண்ணி எடுத்துக்
கோத்திருப்பது போலவே காணப்படும். சில பாடல்களுக்கு மிகவும்
முயன்றுதான் பொருள்காண வேண்டும். ஒவ்வொரு வெண்பாவிலும் ஆறு
செய்திகளைச் சொல்லவேண்டும் என்னும் எண்ணத்துடன் பாடப்பட்ட
பாடல்கள் இவை. ஆதலால சரளமாகப் பாடமுடியவில்லை. மிகவும்
முயன்றுதான் இந்நூலாசிரியர் இவ்வெண்பாக்களைப் பாடியிருக்கின்றார்.
ஆயினும் சில பாடல்கள் சரளமாக அமைந்திருக்கின்றன. அவை
இந்நூலாசிரியரின் ஆற்றலுக்கு அடையாளமாகும். நாலுவரிகளிலே ஆறு
பொருள்களைக் கூறுவதற்குச் சிறந்த அறிவும் ஆற்றலும் வேண்டும்.
ஏலாதியில் கூறப்படும் சில செய்திகள் இக்காலத்திற்கு ஏலாதன.
வடமொழி நூல் வழக்குகள் பலவற்றை இவ்வாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலே வடசொற்கள் மிகுதியாகக் கலந்திருக்கும் நூல் இது ஒன்றுதான். சொல்லியவையே பல பாடல்களிலே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. அவை நீதியை வலியுறுத்துவதற்காகக் கூறப்படுகின்றன என்று சொல்லப்படலாம். ஆயினும் படிப்போர்க்கு அலுப்பு தட்டாமற் போகாது. போற்றத்தக்க பல உண்மைகளும் இந்நூலிலே காணப்படுகின்றன.
போற்றத்தக்க பாடல்கள்
ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டிலே சென்று
அவ்வரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பவர் அரசாங்கத்தின் தூதர்.
ஒரு நாட்டின் பிரதிநிதியாகச் சென்று மற்றொரு அரசாங்கத்துடன்
பேசுவோரும் தூதராவார். இத்தகைய தூதர்களுக்கு வேண்டிய
தகுதிகளைப்பற்றி ஒரு வெண்பாவிலே கூறப்படுகின்றது.
மாண்டுஅமைந்து ஆராய்ந்தமதி, வனப்பே, வன்கண்மை
ஆண்டுஅமைந்த கல்வியே, சொல்லாற்றல்,-பூண்டுஅமைந்த
காலம்அறிதல், கருதுங்கால் தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ்.
ஒழுக்கத்திலே சிறந்து, நூலறிவு பெற்று, தன் நாட்டு நிலைமையையும்
அந்நிய நாட்டு நிலைமையையும் ஆராயத்தக்க அறிவு
நிறைந்திருக்கவேண்டும். பார்த்தவர்கள் உள்ளத்தைக் கவரத்தக்க - மற்றவர்கள் கண்டவுடனேயே மதிக்கத்தக்க - அழகிய தோற்றம் வேண்டும்.
பகைவர்க்குப் பயந்து நடுங்காமல், உண்மையை எடுத்துக்கூறி
வழக்கிடத்தக்க அஞ்சாமைக் குணம் அமைந்திருக்கவேண்டும்.
சிறந்த கல்வி - அதாவது பல துறைகளைப் பற்றியும் படித்து -
அவைகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கும் கல்வியும்
வேண்டும்.
அன்பர்கள் பகைவர்கள் அனைவர் உள்ளத்தைக் கவரும்படியும், எதிரிகள் பதில் கூறுவதற்கு அஞ்சும்படியும் ஆணித்தரமாகக் காரண காரியங்களை விளக்கிப் பேசும் சொல்வன்மையும் வேண்டும்.
இன்ன காலத்தில் இன்ன காரியத்தைச் செய்தால் வெற்றி பெறலாம்; இன்ன சமயத்தில்தான் இன்ன காரியத்தைச் செய்யவேண்டும்; என்று
துணிந்து காலமறியும் குணம்வேண்டும்.
இத்தகைய ஆறு குணங்களும் அமைந்தவர்களே தூதராவதற்குத்
தக்கவர்கள். தூதுவர்க்கு இத்தகுதி இன்றும் ஏற்றனவாயிருப்பதைக் காணலாம். தமிழர்கள் அந்நிய அரசாங்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கு இச்செய்யுள் ஒரு
உதாரணம்.
மக்கள் அனைவரும் திடமாக வாழவேண்டும்; உடற்பயிற்சி உரம்
அளிக்கும்; உரம் உள்ளவர்கள் நோயின்றி வாழலாம். இக்கருத்தைக்
கொண்ட செய்யுள் ஒன்று உடற்பயிற்சியைப் பற்றி உரைக்கின்றது. எந்தெந்த வகையிலே உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றும் அச்செய்யுள் விளக்கிச் சொல்லுகின்றது.
படுத்தலோடு, ஆடல், பகரின்-அடுத்துஉயிர்
ஆறுதொழில் என்று அறைந்தார் உயர்ந்தவர்
வேறு தொழிலாய் விரித்து.
கையை ஊன்றி உடம்பை மேலே தூக்குவதாகிய தண்டால், கை
கால்களை முடக்கியிருத்தலாகிய ஆசனம், நிமிர்ந்து நிற்றல், தலைகீழாக
நிற்றல், படுத்துச் செய்யும் பயிற்சி, குதித்தல், இவைகள் உடற்பயிற்சிகளாகும். இவைகளின் சிறப்பைக் கூறவேண்டுமானால், பெரியோர்கள் உடம்பில் உயிர் அமைதியோடு வாழ்வதற்கான தொழில்கள் என்று, இவைகளையே வேறு வேறு தொழில்களாகத் தனித்தனியே கூறினார்கள்’’ (பா.69) இச்செய்யுளைக்கொண்டு தமிழர்கள் நெடுங்காலாமாக உடற்பயிற்சி செய்து வந்தனர்; அதைச் சிறந்ததாக எண்ணி வந்தனர் என்று தெரிந்து கொள்ளலாம்.
உதவி பெறுவதற்கு உரியவர்கள்
இந்நூலிலே இன்னின்னார்க்கு உதவி செய்யவேண்டும் என்பதைப்பற்றி
விரிவாகக் கூறப்படுகின்றது. இதைப் பல பாடல்களிலே காணலாம்.
தமிழர்களின் இரக்க சிந்தையை இவைகளின் மூலம் அறியலாம். சிறப்பாக,
35, 36, 52,
53, 54, 55, 56, 57, 71, 78, 80, ஆகிய பதினோரு பாடல்கள் உதவி
பெறுவதற்கு உரியவர்கள் யாவர் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன.
‘‘அநாதைகள்,
வலிமையற்றவர்கள், சிறுவர்கள், வீடற்றவர்கள், கண்
இல்லாதவர்கள், செல்வமற்றவர்கள், உணவுப்பொருள் இல்லாதவர்கள்,
கடன்பட்டுச் செல்வத்தையிழந்தவர்கள், கால் முடம் பட்டவர்கள்,
சம்பாதிக்க முடியாத முதியவர்கள், தம்மைத் தாம் காத்துக் கொள்ளும்
வலிமையற்றவர்கள், பிள்ளைபெறும் பெண்கள், கர்ப்பிணிகள், பித்தர்கள்,
வாதநோய்க்கார்கள், விலங்கிடப்பட்டவர்கள், உணவு பெறாமல்
திண்டாடுகின்றவர்கள், வழி நடப்போர், சுமைதூக்கிச் செல்வோர்,
நோயாளிகள், தாயற்ற பிள்ளைகள், கணவனையிழந்த பெண்கள்,
வியாபாரத்தால் செல்வம் இழந்து வருந்துகிறவர்கள், இவர்களுக்கெல்லாம்
உணவளிக்கவேண்டும்; உதவி செய்ய வேண்டும்; இப்படிச் செய்வதே
செல்வர்களின் கடமை’’ என்று அப்பாடல்களிலே காணப்படுகின்றன.
புத்திரர்கள்
புத்திரர்கள் பன்னிரண்டு வகைப்படுவர் என்று இவ்வாசிரியர
கூறுகின்றார். இது தமிழ் நூல்களில் காணப்படாதவை. வடமொழி
ஸ்மிருதிகளில் உள்ள முறையையே இவ்வாசிரியர் எடுத்துக் கூறுகின்றார்
என்றுதான் முடிவு செய்ய வேண்டும். 30, 31 ஆகிய இரண்டு
வெண்பாக்களில் இந்தப் புத்திரர்கள் பன்னிரண்டு வகையினரின்
பெயர்களும் காணப்படுகின்றன. அப்பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்.
ஒளரதன், கேத்திரசன், கானீனன், கூடன், கிரீதன், பௌநற்பவன்,
தத்தன், சகோடன், கிருத்திரமன், பத்திரிபுத்திரன், அபவித்தன், உபகிருதன்; என்பவைகளே அப்பன்னிரண்டு பெயர்கள்.
கணவனுக்குப் பிறந்தவன் ஒளரதன், கணவன் இருக்கும்போது
மற்றொருவனுக்குப் பிறந்தவன் கேத்திரன். திருமணம் ஆகாத பெண்ணுக்குப்
பிறந்தவன் கானீன். விபசாரத்திலே பிறந்தவன் கூடன். விலைக்கு
வாங்கப்பட்டவன் கிரீதன், கணவன் இறந்தபின் மறுமணம் புரிந்துகொண்ட
இரண்டாம் கணவனுக்குப் பிறந்தவன் பௌநற்பவன், சுவீகாரம்
எடுத்துக்கொள்ளப்பட்டவன் தத்தன். கல்யாணம் செய்துகொள்ளும்போதே
கர்ப்பத்திலிருந்து பிறந்தவன் சகோடன். கண்டெடுத்து வளர்க்கப்பட்டவன்
கிருத்திரமன், மகள் வயிற்றுப் பிள்ளை புத்திரிபுத்தரன். பெற்றவர்களால்
கைவிடப்பட்டு மற்றவரால் வளர்க்கப்பட்டவன் அபவித்தன். காணிக்கையாக
வந்தவன் கிருதன்.
இவர்கள் அனைவரும் புத்திரர்கள் ஆவார்கள் என்று
கூறப்பட்டுள்ளது. இச்செய்தி பண்டைக்கால மக்களின் நாகரிகத்தைக் காண
இடந்தருகின்றது. மக்கள் தொகை குறைந்திருந்த அக்காலத்திலே, எந்த
வகையிலே பிள்ளைகள் பிறந்தாலும், அவைகளைக் குற்றம் என்று
கடியவில்லை. புத்திரர்களாகவே ஏற்றுக் கொண்டனர். மக்கள் எண்ணிக்கை
வளரவேண்டும் என்பதே அவர்கள் கருத்து.
விருந்தோம்பல்
விருந்தோம்பல் தமிழரின் சிறந்த பண்பாடு. விருந்தினர் என்பவர்
முன்பின் அறியாத புதியவர்கள். எந்நாட்டினராயினும் எம்மொழியின
ராயினும் நட்புகொள்ளும் நல்லெண்ணத்துடன் வீடு தேடி வருவார்களாயின்
அவர்களை வரவேற்பார்கள் தமிழர்கள். விருந்தினரை வரவேற்று
உபசரிப்பவர்கள் தாம் மறுமையின்பத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கையும் தமிழரிடம் குடி கொண்டிருந்தது. விருந்தினரை எவ்வாறு வரவேற்று உபசரிக்க வேண்டும் என்பதைப்பற்றி ஏலாதியின் செய்யுள் ஒன்று விளக்கிக் கூறுகின்றது.
‘‘இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண் யாவர்க்கும்
வன்சொல் களைந்து வகுப்பானேல்,-மென்சொல்
முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்! நாளும்
விருந்து ஏற்பர் விண்ணோர் விரைந்து
மென்மையான சொல்லையும், மயிற்பீலியின் அடியை ஒத்த கூர்மையும்
வெண்மையும் அமைந்த பற்களையும் உடைய பெண்ணே! விருந்தினராக
வருகின்றவர்கள் அனைவரிடமும் இனிய சொற்களையே பேசவேண்டும்;
அவர்களுடன் உள்ளம் கலந்து உறவாடவேண்டும்; தங்குவதற்கு வசதியான
இடம் கொடுக்கவேண்டும்; ஆடை அணி முதலியவைகளையும் அளிக்க
வேண்டும்; இனிய உணவும் இடவேண்டும்; கடுஞ்சொல்லற்ற இனிய
மொழிகளையே எந்நாளும் பேசவேண்டும்; இவ்வாறு விருந்தினர்களை
உபசரிப்பவனைத் தேவர்கள் தமது விருந்தினனாக ஏற்றுக்
கொள்வார்கள்’’.
(பா.7)
இச்செய்யுள் விருந்தினர்க்குச் செய்ய வேண்டிய கடமைகள்
இன்னின்னவை என்பதை எடுத்துரைத்தது.
கள்ளருந்துவது ஒழுக்கக்கேடான செயல்; புலால் உண்ணுவதைக்
கைவிடவேண்டும்; கொல்லா விரதத்தை மேற்கொள்ளவேண்டும்; கொலை
செய்வாருடன் கூட்டுறவே கூடாது; இக்கருத்து பல பாடல்களிலே
காணப்படுகின்றன. பெண்டிர் சொல்வதைப் பின்பற்றக் கூடாது. அவர்களிடம்
இரகசியங்களை வெளியிடக்கூடாது. என்று உரைக்கின்றது ஒரு செய்யுள்.
பொதுமகளிர் - வேசையர் - பாடும் பாடலைக்கேட்கக்கூடாது; அவர்கள்
ஆடும் நாடகத்தையும் பார்க்கக் கூடாது; அவர்கள் பாடி ஆடுகின்ற
இடத்தையடைவோர் பகையைப் பெறுவார்கள்; பழிச்சொல்லை அடைவார்கள்; பாவத்திற்கு ஆளாவார்கள்; மற்றவர்கள் அவர்களை
வெறுத்துரைப்பார்கள்; சாக்காட்டுக்கும் ஆளாவார்கள்; என்று கூறுகிறது ஒரு
செய்யுள்.
திருக்குறளின் கருத்துக்களும் இந்நூலில் பல பாடல்களில்
காணப்படுகின்றன. இந்நூலைப் படிப்போர் அவைகளைக் கண்டறியலாம்.
தமிழர் நாகரிகத்தை அறிவதற்கு இந்நூலும் துணை செய்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக