14/03/2012

முதுமொழிக்காஞ்சி - சாமி. சிதம்பரனார்

நூல் வரலாறு

முதுமொழிக்காஞ்சி : அறிவு நிறைந்த மொழியாகிய காஞ்சி. முதுமொழி-
பழமொழி என்றும் கூறுவர்.

என்பது காஞ்சியின் ஒரு பகுதி. அறம் பொருள் இன்பங்களை
அறிவுறுத்துதல் முதுமொழிக் காஞ்சியாகும்.

இந்நூலின் செய்யுட்கள் வெண்செந்துறை என்னும் ஒருவகைச் செய்யுள்
இரண்டடிகள் கொண்டது; ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள்
அமைந்திருப்பது. இதுவே வெண்செந்துறை.

இந்நூலின் ஒவ்வொரு செய்யுளின் முதல் அடி ‘‘ஆர்கலி உலகத்து
மக்கட்கெல்லாம்’’ என்பது. 1. சிறந்த பத்து 2. அறிவுப்பத்து
3.பழியாப்பத்து. 4. துவ்வாப்பத்து 5. அல்லபத்து 6. இல்லைப்பத்து
7.பொய்ப்பத்து 8.எளியபத்து 9. நல்கூர்ந்தபத்து 10. தண்டாப்பத்து, என்னும்
பத்துப் பிரிவுகளை யுடையது. ஒவ்வொரு பகுதியிலும் பத்துப் பத்துப்
பாடல்கள். நீதி நூல்களிலே மிகவும் சிறியதொரு நூல். மற்றைய
நீதி நூல்களை நோக்க இது அவ்வளவு சிறப்புடையதன்று. பண்டைக்
காலத்திலே தமிழர்கள் சிறந்த ஒழுக்கமுள்ளவர் களாயிருந்தனர்; வாழ
வழியறிந்திருந்தனர்; பல உண்மைகளைத் தெரிந்துகொண்டிருந்தனர்;
என்பதை விளக்க இந்நூலும் துணை செய்கின்றது.


இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் கூடலூர் கிழார் என்பது. இவரைப்
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்று அழைப்பர்.

எட்டுத்தொகையுள் ஒன்றாகிய ஐங்குறு நூற்றைத் தொகுத்தவர் இவரேதான்.
மலை நாட்டிலேயுள்ள கூடலூரிலே வாழ்ந்தவர். ஆதலால் இப்பெயர்
பெற்றார். குறுந்தொகையிலே மூன்று பாட்டுக்களும், புறநானூற்றிலே
ஒரு பாட்டும் இவர் பெயரால் காணப்படுகின்றன. இந்தக் கூடலூர் கிழார்
வேறு; முதுமொழிக்காஞ்சியைச் செய்த கூடலூர் கிழார் வேறு என்று
கூறுவோரும் உண்டு.

நீதிகளின் சிறப்பு

இந்நூலிலே கூறப்பட்டிருக்கும் அறங்களிலே புதுமையில்லை. தமிழில்
உள்ள நீதி நூல்களில் காணப்படும் அறங்கள்தாம் இந்நூலில் சுருக்கமாகக்
கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவ்வறங்கள் மக்கள் பின்பற்ற
வேண்டியவை என்பதை வலியுறுத்திக் கூறுகின்றார் இவ்வாசிரியர்.
வலியுறுத்திச் சொல்லுவது ஒன்றுதான் இதில் உள்ள சிறப்பு.

      ‘‘ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
       ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை

ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் எல்லா மக்களுக்கும்
கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்ததாகும்’’ (பா.1) ஒழுக்கத்தின்
உயர்வையும் அவசியத்தையும் வலியுறுத்தியது இச்செய்யுள்.

    ‘‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்
     குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று

உயர்ந்த குடிப் பிறப்பைக் காட்டிலும் கல்வியே சிறந்ததாகும்’’ (பா.7)
கல்விகற்றவர்கள் எக்குடியினராயினும் உயர்ந்தவர்கள். கல்லாதவர்கள்
எக்குடியினராயினும் இழிந்தவர்கள். ஆதலால் எல்லா மக்களும்
கல்விகற்பாராயின் உயர்வு தாழ்வு வேற்றுமைகள் ஒழிந்து போகும். கல்வியினால் உலக மக்கள் ஒன்றுபட்டு வாழ முடியும் என்பதே முன்னோர் கொள்கை.

தேசங்கள் தோறும் ஆசாரங்கள் வேறுபட்டிருக்கும். ஒரு நாட்டினரின்
ஆசாரத்தை மற்றொரு நாட்டினர் பழிப்பது தவறு. பழிப்பதனால் ஒரு
நாட்டினர்க்கும் மற்றொரு நாட்டினர்க்கும் உள்ள உறவு கெட்டுப் போகும்.

        ‘‘ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
         அறியாத் தேசத்து ஆசாரம் பழியார் (3-ஆம் பத்து. பா.8)

உலகத்து மக்களுக்கு வேண்டிய சிறந்த குணம், தாம் அறியாத நாட்டின்
ஆசாரத்தைப பழிக்காமல் இருப்பதாகும்’’

மறு பிறப்பிலே தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். வயது
முதிர்வதன் பலன், மறுபிறப்பு உண்டென்பதை அறிவது. மறுமையில் இன்பம் பெறும் வகையிலே அறத்தையும், ஒழுக்கத்தையும் பின்பற்றி நடப்பதே சிறந்த அறமாகும்.

        ‘‘ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
          மறுபிறப்பு அறியாதது மூப்பு அன்று

இவ்வுலகிலே பிறந்த மக்கள் அனைவருக்கும் மறு பிறப்பு உண்டு
என்பதை அறியாமல் முதிர்ந்த பருவம் அடைவது மூப்பாகாது’’ (5-ஆம்
பத்து பா.10)

எவ்வளவு செல்வம் இருந்தாலும் இன்னும் செல்வம் வேண்டும் என்று ஆசைப்படுவோர் செல்வர்கள் அல்லர்; வறியவர்களே ஆவார்கள்.

           ‘‘ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
             நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை

ஆசையைக் காட்டிலும் பெரியதொரு வறுமை இல்லை’’ (6-ஆம் பத்து
பா.7) என்பதனால் இதைக் காணலாம்!

பொருளிலே அளவுக்கு மீறிய ஆசையுள்ளவன் நீதி முறைகளையும்
பேணமாட்டான். பொருள் கருதி எந்த அக்கிரமத்தையும் துணிந்து
செய்வான். அவன் நீதி முறைப்படி எதையாவது செய்கிறேன்
என்றுசொல்லுவானாயின் அச்சொல் பொய்யாகும்.
                
‘‘பொருள் நசை வேட்கையோன்
முறை செயல் பொய் (7-ஆம் பத்து. பா.9)

  
பொருள் விருப்பத்திலே ஊன்றிய உள்ளமுடையவன் நீதி முறையின்படி
ஒன்றைச் செய்தல் இல்லை’’

இன்பதுன்பங்களைப் பற்றி இவ்வாசிரியர் கூறுவது போற்றத் தக்கது.
‘‘துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது

துன்பத்தைப் பொருட்படுத்தாமல் முயற்சியை விரும்புவோர்க்கு இன்பம் எளிதாகும்’’ (8. பா.5)

‘‘இன்பம் வெய்யோர்க்குத் துன்பம் எளிது.

இன்பத்தையே விரும்பி நிற்பவர்களுக்குத் துன்பம் வருவது எளிதாகும்’’
8-பா.6) இவை இன்ப துன்பந் தோன்றுவதற்கான காரணங்களைக் கூறின.

‘‘இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்.

இன்பத்தை விரும்புகின்றவன் துன்பத்தைப் பொருட்படுத்த மாட்டான்’’
(10. பா.7) இவை இன்பம் எய்தும் வழியைக் கூறின.

‘‘முறையில் அரசன்நாடு நல்கூர்ந்தன்று

மக்கள் எல்லார்க்கும் சம நீதி வழங்காத நாடு வறுமையால்
வாடும்’’ (9-பா.1)

‘‘முறையில் அரசர் நாட்டிருந்து பழியார்
செங்கோல் முறையில்லாத நாட்டிலே இருந்துகொண்டு, அவர்
கொடுங்கோன்மையைப் பழிக்கமாட்டார்கள்’’ (3-பா.9) இவை அரசியலைப்
பற்றிக் கூறியவை. கொடுங்கோலன் நாட்டில் குடியிருப்பதை விட
அந்நாட்டை விட்டு வெளியேறுவதே நலம், என்பது பண்டைத்தமிழர்
கொள்கை. இது அரசன் சர்வாதிகாரியாகப் பலம் பெற்றிருந்த காலத்தில்
எழுந்த நீதி.

மது விலக்கைப் பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றது. இத்தகைய
அறவுரைகளைக் கொண்டதே இந்நூல். இதில் உள்ள பல சொற்கள் வழக்கில்
இல்லாத பழைய சொற்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக