25/03/2012

பழமொழி - சாமி. சிதம்பரனார்

நூல் வரலாறு

பழமொழி, அல்லது பழமொழி நானூறு என்பது இந்நூலின் பெயர்.
நானூறு பாட்டுக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாட்டும் ஒரு பழமொழியை
வைத்துக் கொண்டு பாடப்பட்டது. எல்லாம் வெண்பாக்களே. ஒவ்வொரு
பாட்டின் முடிவும் ஒரு பழமொழியைக் கொண்டு முடிகிறது.

இப்பழமொழிகளிலே பல இக்காலத்தில் விளங்கவில்லை; அவைகள்
வழக்கிழந்து விட்டன. ஆயினும் பல பழமொழிகள் இன்றும் வழக்கத்தில்
உள்ளவை.

இந்நூலாசிரியர் பெயர் முன்றுறையர் என்பது. இவர் வரலாற்றைப்
பற்றி ஒன்றும் தெரியவில்லை.


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே மூன்று நூல்கள் சிறந்தனவென்று
கருதப்படுகின்றன. அவை முப்பால், நாலடி, பழமொழி என்பன. இம்மூன்றும்
மற்ற நூல்களைவிட உருவில் பெரியவை; பாட்டுக்களின் தொகை அதிகம்.
அறம், பொருள், இன்பம், வீட்டு நெறி இவைகளைப் பற்றி விரிவாகக்கூறுகின்றன.  இம்மூன்று நூல்களில் பழமொழியை மூன்றாவதாகக் கூறலாம்.
பழமொழியைப் பற்றி வழங்கும் கதை ஒன்று உண்டு. அது நாலடியாரோடு ஒட்டியகதை.  சமண முனிவர்களின் பாடல்களிலே சிறந்த நானூறு வெண்பாக்களை நாலடியாராகத் தொகுத்தனர். ஏனைய நானூறு வெண்பாக்களைப் பழமொழியாகத் தொகுத்தனர். இவ்வரலாற்றை நாலடியாரைப் பற்றிக் கூறும் இடத்திலே காணலாம். சிறப்பிலே நாலடியாருக்கு அடுத்தபடிதான் பழமொழி என்பதைக் காட்டுவதற்கே இக்கதை வழங்குகின்றது.


பழமொழிப் பாடல்கள் அனைத்தும் ஒருவரால் பாடப்பட்ட பாடல்கள் போலவே காணப்படுகின்றன. இதன் ஆசிரியர் பெயரும் முன்றுறையர் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பழமொழி நூலைப்பற்றி வழங்கும் அக்கதை புனைந்துரையே ஆகும்.

இந்நூலின் வெண்பாக்கள் கொஞ்சம் கடினமானவை; பல
வெண்பாக்களுக்கு எளிதிலே பொருள் தெரிந்துகொள்ள முடியாது.
முயன்றுதான் பொருள் கண்டுபிடிக்கவேண்டும். நாலடியார் வெண்பாக்களைப்
போல நயமுள்ளவை அல்ல. ஆகையால்தான் இந்நூல் நாலடியாரைப்போல
அவ்வளவு பெருமையடையவில்லை.
திருக்குறளில் கூறப்படுவது போலவே சிறந்த பல அறங்கள் இந்நூலிலும்
கூறப்படுகின்றன. திருக்குறளின் கருத்துக்களும் நிரம்பக் காணப்படுகின்றன.
பல பாடல்களிலே கதைகளும் உதாரணமாகக் காட்டப்படுகின்றன.
இராமாயணம், பாரதம் முதலிய கதைக் குறிப்புகளை இந்நூலிலே காணலாம்.
தமிழ் நாட்டு வரலாறுகள் பலவற்றைக் காணலாம்.

கதைகள்

மாபலிச் சக்கரவர்த்தி, அகங்காரத்தால், தன் அரசையிழந்தான்.
‘‘
வாமனனுக்கு மூன்றடி மண் கொடுக்காதே; அது உன்னால் முடியாத
காரியம்’’ என்று அவனுடைய குரு தடுத்தும் கேட்கவில்லை; என்னால்
ஆகும் என்று அகங்காரம் கொண்டதால் அழிந்து போனான்.

கண்ணனைப் பற்றிய குறிப்பும், பலராமனைப் பற்றிய குறிப்பும்
இந்நூலிலே காணப்படுகின்றன.

இந்நூலிலே பாரதக் கதையும் குறிக்கப்பட்டிருக்கின்றது.
‘‘துரியோதனாதியரும், பாண்டவர்களும், சூதாடினார்கள்; தங்கள்
தாயபாகத்தையே பணையப் பொருளாக வைத்துச் சூதாடினார்கள். இதன்
காரணமாகச் சகோதரர்களான, நூற்றுவரும், ஐவரும் பகைவர்களாயினர்;
போர் செய்தனர். ஆதலால் உறவினருடன்சூதாடக் கூடாது’’ என்று கூறுகிறது
ஒரு செய்யுள்.

பெரியோரைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் பயன் பெறுவார்கள்.
இக்கருத்தை விளக்க இராமாயண வரலாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

‘‘பொலந்தார் இராமன் துணையாகப் போதந்து
இலங்கைக் கிழவற்கு இளையான்-இலங்கைக்கே
போந்து இறைஆயதூஉம் பெற்றான்;பெரியாரைச்
சார்ந்து கெழீஇ இலார் இல்

இலங்கைக்குரியவன் இராவணன்; அவன் தம்பி விபீஷணன்; அவன்
இராமனே தனக்குத் துணையாவான் என்று எண்ணி அவனிடம் வந்தான்.
பின்பு இலங்கைக்கே அந்த இளையவன் மன்னவனாகிவிட்டான். ஆகையால்
பெரியாரைச் சார்ந்து பயன் பெறாதவர்கள் யாரும் இல்லை’’
இச்செய்யுள் இராமாயணத்தின் ஒரு பகுதி. இதிலே விபீஷணன்
இராமனைச் சேர்ந்ததன் நோக்கம் இன்னதென்று குறிக்கப்பட்டிருப்பதைக்
காணலாம். இத்தகைய கதைக் குறிப்புக்கள் பல பழமொழிப் பாடல்களிலே
காணப்படுகின்றன.

தமிழ் நாட்டு வரலாறுகள்

குலத்தொழில் போதிக்கப்பட வேண்டாம். தானே வந்துவிடும். இதைக்
குறிக்கும் பழமொழி ‘‘குலவிச்சை கல்லாம் பாகம் படும்’’ என்பது. மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? என்பதும் இக்கருத்துள்ள பழமொழிதான். குலவித்தை கல்லாமலே வந்துவிடும் என்பதற்கு உதாரணமாகக் கரிகாற்சோழனுடைய வரலாறு ஒன்று ஒரு வெண்பாவில் எடுத்துக் காட்டப்பட்டிருகின்றது.

‘‘உரை முடிவு காணான் இளமையோன், என்ற
நரைமுது மக்கள் உவப்ப,-நரை முடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன், குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

இவன் இளமைப் பருவம் உள்ளவன்; நாம் உரைக்கும் வழக்கைக்
கேட்டுச் சரியான முடிவு கூறுவதற்குத் திறமையற்றவன் என்று நினைத்தனர்
நரைத்த முதியவர்கள்; அவர்கள் ‘‘சரியான நீதிதான்’’ என்று உவக்கும்படி,
நரை முடித்துக்கொண்டு வந்து உட்கார்ந்து அவர்கள் வழக்கைக் கேட்டுத்
தீர்ப்பு கூறினான் சோழன். ஆதலால் தம் குலத்துக்குரிய வித்தைகள்,
கற்பதற்கு முன்பே நன்றாக வந்துவிடும்’’.

இச்செய்யுளிலே கரிகாற் சோழனுடைய வரலாறு சுட்டப்படுகின்றது.
கரிகாற்சோழன் இளம் பருவத்திலே பட்டத்திற்கு வந்துவிட்டான்.
அக்காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. வயதேறிய இருவர் தங்களுக்குள
மாறுபட்டனர். கரிகாலனிடம் வழக்குரைக்க வந்தனர். அவன்
இளைஞனாயிருப்பதைக் கண்டனர். இவனால் நமது வழக்கிலே நீதி
காணமுடியுமா என்று ஐயுற்றனர். அவர்கள் ஐயத்தைக் குறிப்பால் அறிந்த
கரிகாலன், அந்தப்புரம் சென்றான், நரைத்த, தாடி, மீசை, தலை மயிருடன்
திரும்பி வந்தான். அவர்கள் வழக்கைக் கேட்டான். சரியான தீர்ப்பளித்தான்.
அவர்களும் மகிழ்ந்தனர். பிறகு அவ்வாறு தீர்ப்பளித்தவன் கரிகாலனே
என்பது கண்டு வியந்தனர். இவ்வரலாற்றையே இந்நூல் குறித்தது.
கரிகாற்சோழனுடைய மற்றொரு வரலாறும் இந்நூலிலே காணப்படுகின்றது. பகைவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் உயிர் தப்பினவர்கள், முயற்சியுடையவர்களாயிருந்தால் தம் காரியத்திலே வெற்றி
பெறுவார்கள். இக்கருத்துடைய பழமொழியை விளக்கும் பாடல் அது.
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்,
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக்-கடைத்தலை
செயிர்அறு செங்கோல் செலீஇனான், இல்லை
உயிர் உடையார் எய்தா வினை.

பகைவரால் தான் இருந்த மாளிகை கொளுத்தப்பட்டது; ஆனால் அதில்
அகப்பட்டு மாளாமல் உயிர் தப்பினான் கரிகால்சோழன். அவன் தன்
முயற்சியினால், தன் மாமனாகிய இரும்பிடர்த் தலையார் என்பவனுடைய
துணையைக் கொண்டு, தன் அரசாட்சியைப் பெற்றான்; குற்றமற்ற நெறியிலே
செங்கோல் செலுத்தினான். ஆதலால் உயிருள்ளவர் வெற்றிபெறாத
வினையில்லை’’

இதுவும் கரிகாற் சோழனுடைய சிறப்பைக் காட்டும் வரலாறு.

சோழ மன்னர்களின் வரலாற்றிலே தூங்கெயில் எறிந்த தொடித்தோள்
செம்பியன் என்பவன் பெயர் காணப்படுகின்றது. இவன் வரலாற்றுக் குறிப்பு
பழமொழியிலும் காணப்படுகின்றது. அசுரர்களுக்கு ஒரு கோட்டையிருந்தது.
அதன் மதில்கள் மிகவும் அழுத்தமானவை. அக்கோட்டை வானத்தில்
உலவுந்தன்மையுள்ளது. அதிலே அசுரர்கள் வாழ்ந்தனர். அவர்கள்
தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் வேண்டுகோளின்படி
தொடித்தோள் செம்பியன் அக்கோட்டையை அழித்தான்; தேவர்களைக்
காப்பாற்றினான். இதனால் அவன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட்
செம்பியன் என்று பெயர் பெற்றான்.

‘‘வீங்கு தோள் செம்பியன் சீற்றம், விறல் விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால்

உயரந்த தோள்களையுடைய சோழனது கோபம் வலிமையுடன்
வானத்தில் அசைந்து கொண்டிருக்கும் மதில் பொருந்திய கோட்டையைத்
தொலைத்தலால்’’ இச்செய்யுட் பகுதி இக்கதையைக் கூறுகின்றது.
மனுநீதி கண்ட சோழன் வரலாறும் இப்பழமொழியில் கூறப்படுகின்றது.
குற்றவாளிக்கு மன்னிப்பில்லை. அவன் மீதுள்ள வழக்கிற்குக் காலக்கெடு
கிடையாது. குற்றவாளியின் மேல் உள்ள குற்றம் எவ்வளவு காலம் கழித்து
வெளிப்பட்டாலும் அவனைத தண்டிக்கலாம். இதற்கு உதாரணமாகவே
மனுநீதி கண்ட சோழன் வரலாறு சொல்லப்படுகிறது. பெரிய புராணத்தில்
கூறப்படும் மனுநீதி கண்ட சோழன் வரலாற்றுக்கும் பழமொழியிலே
சொல்லப்படும் இவ்வரலாற்றுக்கும் மிகுந்த வேறுபாடு காணப்படுகின்றது.

‘‘மனுநீதிகண்ட சோழன் திருவாரூரிலே அரசாட்சி செய்தவன். அவன்
மகன் வீதிவிடங்கன் ஒருநாள் தேரில் ஏறிக்கொண்டு போனான். அப்போது
ஒரு பசுங்கன்று துள்ளி ஓடிவந்து அவனுடைய தேர்ச்சக்கரத்திலே
மாட்டிக்கொண்டு மாண்டது. அதைக் கண்ட தாய்ப்பசு துக்கந் தாங்க

முடியாமல் அரண்மனை வாயிலையடைந்தது; ஆராய்ச்சி மணியைக்
கொம்பினால் ஆட்டியது. அந்த மணியோசை கேட்ட மன்னவன் வெளியில்
வந்தான்; பசுவின் துயரைக் கண்டான்; உடனே மந்திரிகளை அழைத்து
உண்மையைத் தெரிந்துகொண்டான். இப்பசுவைப்போலவே நானும் என்
மகனை இழந்து வருந்துவேன், என்று முடிவு செய்தான். மந்திரிகள்
எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. தன் மகனைக் கிடத்தி அவன் மீது
தேரையேற்றிக் கொன்றான்இதுதான் பெரிய புராண வரலாறு.
‘‘சோழன் மகன் தன் தேர்ச்சக்கரத்தால் ஒரு பசுங்கன்றைக்
கொன்றுவிட்டான். அமைச்சர்களும் மற்றவர்களும் சேர்ந்து இச்செய்தியை
அரசனுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டனர். பல்லாண்டுகள் கடந்தபின்
எப்படியோ மன்னவனுக்குத் தெரிந்துவிட்டது. உடனே அவன் தன் மகன்மீது
தேர்ச்சக்கரத்தை யேற்றிக் கொன்றான். நீதி செய்வதற்குக் காலக்கெடு
இல்லை என்பதை மெய்ப்பிக்கவே இவ்வாறு செய்தான்’’ இதுவே
பழமொழியில் கூறப்படும் வரலாறு.

 ‘‘சால மறைத்துஓம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலை கழிந்ததன் பின்றையும்-மேலைக்
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்புஇளமை இல்.

மிகவும் பாதுகாத்து அறிவுள்ள மந்திரிகள் ஒளித்துவிட்டதனால், அதிக
நாள் கடந்த பிறகும், முன்பு பசுவின் கன்றின்மேல் தேரைச் செலுத்திக்
கொன்ற தன் மகனைத் தந்தையும் தேரை ஓட்டிக் கொன்றான். (ஆகையால்)
நீதிக்கு அதிக நாள் குறைந்த நாள் என்ற எல்லையில்லை’’.

முல்லைக்குத் தேர் கொடுத்தவன் பாரிவள்ளல்; மயிலுக்குப் போர்வை
தந்தவன் பேகன் என்னும் வள்ளல்; இவர்கள் சங்க நூல்களில்
பாராட்டப்பட்டிருக்கின்றனர். கொடுப்பதையே கடமையாகக் கொண்டவர்கள்.
இன்னார்க்கு இன்னது கொடுக்க வேண்டும் என்று எண்ண மாட்டார்கள்.
‘‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’’ என்ற பழமொழியை அவர்கள்
பின்பற்றமாட்டார்கள். யாருக்கு எது வேண்டுமானாலும் கொடுப்பார்கள்.
இவர்கள் செயலைக் ‘‘கொடை மடம்’’ என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.

படர்வதற்கு ஆதரவில்லாமல் தனித்துத் தளர்ந்து கொண்டிருந்த ஒரு
முல்லைக்கொடியைக் கண்டான் பாரி ‘‘சோழன் மகன் தன் தேர்ச்சக்கரத்தால் ஒரு பசுங்கன்றைக் கொன்றுவிட்டான். அமைச்சர்களும் மற்றவர்களும் சேர்ந்து இச்செய்தியை அரசனுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டனர். பல்லாண்டுகள் கடந்தபின் எப்படியோ மன்னவனுக்குத் தெரிந்துவிட்டது. உடனே அவன் தன் மகன்மீது தேர்ச்சக்கரத்தை யேற்றிக் கொன்றான். நீதி செய்வதற்குக் காலக்கெடு இல்லை என்பதை மெய்ப்பிக்கவே இவ்வாறு செய்தான்’’ இதுவே பழமொழியில் கூறப்படும் வரலாறு.

 நெருங்கிய மடல்களையும், பூக்களையும் உடைய தாழைகள் நிறைந்த கடற்கரையின் தலைவனே! முல்லைக்கொடி படர்வதற்காகத் தான் ஏறிவந்த தேரினையும், குளிர்காலத்திலே மயிலுக்குப் போர்வையையும், முன்பு கொடையாகக் கொடுத்தவர்களைப் பற்றி நாம் கேட்டறிந்திருக்கின்றோம். இதைப்பற்றிச் சொல்லப்போனால் அறிவிலே மடமையும் சான்றோர்க்கு அணியாகும்’’.

இச்செய்யுள் பாரியின் பெருமையையும், பேகனுடைய பெருமையையும்
எடுத்துக்காட்டின. அவர்கள் செய்கை அறியாமை நிறைந்தது; ஆயினும் அது
அவர்களுக்குப் பெருமை அளித்தது. அச்செயல் அவர்களுடைய சிறந்த
பண்பின் அடையாளமாகத் திகழ்கின்றது. இவ்வுண்மையை உணர்த்தியது
இச்செய்யுள்.

ஒரு செய்யுளிலே, பாரி வள்ளல் மனைவியின் கொடைத் தன்மையைப்
பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. ‘‘மாரி வறண்டுபோன காலத்தில், பாண் மகன்
ஒருவன் பாரியின் மனைவியிடம் வந்து இரந்தான். அவனுக்குச்
சோறுபோடுவதைப் போலவே, உலைப் பானையுள் பொன்னை நிறைத்து,
அதைச் சோறாகப் போட்டாள்’’ இவ்வரலாறு ஒரு வெண்பாவிலே
காணப்படுகின்றது. இதுபோல் இன்னும் சில வரலாறுகளும் இந்நூலிலே
காணப்படுகின்றன.

பழமொழிகள்

சிறந்த பழமொழிகள் பலவற்றை இந்நூலிலே காணலாம்.
அப்பழமொழிகள் இன்னும் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
அவைகளிற் சிலவற்றை மட்டும் பார்த்தால் போதும்; இந்நூலின் பெருமை
விளங்கும்.

இருதலைக்கொள்ளி என்பது ஒரு பழமொழி இரண்டு பக்கமும்
நெருப்புள்ள கட்டை இருதலைக் கொள்ளி. அது
எப்பக்கம் பட்டாலும் சுடும். ஆதலால் இரண்டு பக்கத்தில் உள்ளவர்களும்
பாதுகாப்புடன் இருக்கவேண்டும். இந்த இருதலைக் கொள்ளியைப் போன்ற
மனிதர்களும் சிலர் இருப்பார்கள். அவர்களிடம் நாம் அளவோடு
பழகவேண்டும். இன்றேல் அவரால் நாம் தீமையடைவோம். இத்தகைய
இருதலைக் கொள்ளிகள் யார் என்பதை எடுத்துரைக்கின்றது ஒரு வெண்பா.
அது கீழ்வருமாறு.

‘‘தம்முடைய நட்பினரிடம் போவது; அவர்கள் மகிழும்படி பேசுவது;
குற்றமில்லாதவர்போல நடிப்பது; இதைப்போலவே பகைவர்களிடமும்
போவார்; அவர்களிடமும் பேசுவார்; குற்றமற்றவர்களைப் போல நடிப்பார்;
இவர்கள் இருவருள் யாருடனும் ஒட்டமாட்டார்; ஒருவரிடமும்
ஒன்றுபட்டிருக்க மாட்டார். இவர்தான் இருதலைக் கொள்ளியாவர்.

பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவுஇன்றித் தீர்ந்தார்போல் சொல்லி, அவருள்
ஒருவரோடு ஒன்றி ஒருப்படாதாரே
இருதலைக்கொள்ளி என்பார்’’
கிணற்றுத் தவளை நாட்டு வளப்பம் அறியாது

என்பது ஒரு பழமொழி. குறுகிய அறிவு கூடாது. பரந்த அறிவு
பெறவேண்டும் என்பதே இப்பழமொழியின் கருத்து, மக்கள் கிணற்றுத்
தவளையாக வாழக்கூடாது என்று கூறுகிறது ஒரு வெண்பா.
‘‘உண்ணுவதற்கினிய தண்ணீர் இதுதான், இதுபோன்ற
தண்ணீர்வேறிடத்தில் இல்லை என்று கிணற்றிலே உள்ள தவளை
சொல்லிக்கொண்டிருக்கும்; மக்களும் அத்தவளையைப் போல்
ஆகிவிடக்கூடாது. ஒரே புத்தகத்தை நாள் முழுவதும்,
வெறுப்பில்லாமல் ஓதிக்கொண்டிருப்பதனால் பயன் இல்லை. அந்நூலை
மட்டுமே ஆராய்ந்து கற்பதனால் மட்டும் பரந்த அறிவு வளர்ந்துவிடாது. இவ்வாறு ஒரு நூலை மட்டும் எப்பொழுதும் படித்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் பல நூல்களையும் கற்றவர்களிடமிருந்து அரும் பொருள்கள் பலவற்றைக் கேட்பதே
சிறந்ததாகும்.

 உணற்குஇனிய இந்நீர் பிறிதுழி இல், என்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார்;-கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்
கற்றலில், கேட்டலே நன்று’’.

பல நூல்களையும் படிக்கவேண்டும்; பல நூல்களைக்
கற்றவர்களிடமிருந்து பல செய்திகளையும் கேட்டறிந்து கொள்ளவேண்டும்;
அப்பொழுதுதான் அறிவு வளரும்; உலக வாழ்க்கையைப்பற்றி நன்றாக
அறியலாம். இப்படியில்லாமல் ஒன்றைமட்டும் திருப்பித் திருப்பி மனப்பாடம்
பண்ணிக்கொண்டும், துருவித் துருவி ஆராய்ந்து கொண்டும் இருப்பவர்
பரந்த அறிவைப் பெற முடியாது. கிணற்றுத் தவளை போல்தான் இருப்பர்.

தமிழிலே உள்ள பல நூல்களை மட்டும் படிப்பது போதாது
வேறுமொழிகளில் உள்ள சிறந்த பல நூல்களையும் படித்தறிய வேண்டும்.
இதுவே சிந்தனா சக்தி சிறப்படைவதற்கு வழி செய்வதாகும். அறிவுச்
செல்வத்தை ஈட்டுவதற்கு அருந்துணை புரிவதாகும். இக்கருத்தும்இப்பழமொழி வெண்பாவில் அமைந்திருக்கின்றது.

சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல் என்றொரு பழமொழி
உண்டு. குற்றமற்றவர்கள் மேல் அற்பர்கள் பழி பேசும்போது
இப்பழமொழியைச் சொல்லுவார்கள். நல்லவர்கள் மேல் எரிந்து வீழ்ந்து
எந்தப் பழியைச்சுமத்தினாலும், அது அவர்களை ஒன்றும் செய்துவிட
முடியாது. நல்லவர்களை நல்லவர்கள் என்று தான் உலகம் கூறும். சந்திரனைப் பார்த்து நாய்கள் குரைத்தால் அதனால் நிலவொளி குறைந்து விடாது. இந்தப் பழமொழியைக் கொண்ட செய்யுள் ஒன்று இந்நூலிலே உண்டு.

‘‘சிறியவர்கள் பெரியவர்களை முறைப்படி தெரிந்து
கொள்ளமாட்டார்கள்; தெரிந்துகொள்ளக்கூடிய தகுதியும் அவர்களிடம்
இருக்காது; பெரியவர்கள் எளியவர்கள் போலத்தான் காணப்படுவார்கள்.
ஆதலால் அவர்களை எளியவர்கள் என்று நினைத்துக்கொண்டு தங்களுக்குச்
சமமாகக் கருதுவர்; தகாத சொற்களை அவர்களிடம் பேசுவர். இப்படிப்
பேசுதல், சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போன்றதாகும்.

  நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்
சிறியார் எளியார்ஆல் என்று பெரியாரைத்
தங்கள் நேர் வைத்துத் தகவுஅல்ல கூறுதல்
திங்களை நாய்குரைத்து அற்று’’.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது ஒரு பழமொழி. இதனை
உயர்ந்தோர்க்கு உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றார் இந்நூலாசிரியர்.
உயர்ந்தவர்கள் வறுமையால் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் தமது
நிலையிலே தவறமாட்டார்கள். இழிந்த செயல்களைச் செய்யமாட்டார்கள். புலி
எவ்வளவு பசியால் வாடினாலும் தனது நிலையிலே தவறாது. வழக்கமாகத்
தான் உண்ணும் புலால் கிடைத்தால் தான் உண்ணும்; புல்லைத் தின்னாது.

நாய்க்கு முழுத்தேங்காய் கிடைத்ததுபோல் என்றொரு பழமொழி
உண்டு. முழுத்தேங்காயை நாயினிடம் போட்டால் அதனை அது என்ன
செய்யும்? தானும் அதைத் தின்னாது; பிறரையும் அதை எடுக்கவிடாது;
சும்மா காத்துக் கொண்டுதான் கிடக்கும். ஒருவன் செல்வத்தை நிரம்பச்
சேர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றான். அவன் அச்செல்வத்தைப் பிறர்க்கும் உதவுவதில்லை;
தானும் அனுபவிப்பதில்லை. ஆதலால் அச்செல்வம் நாய்க்குக்கிடைத்த
முழுத்தேங்காயைப் போன்றதுதான் என்று கூறுகிறது ஒரு செய்யுள்.

நாய்பெற்ற தெங்கம் பழம் என்று பண்டைக் காலத்தில் வழங்கியது
இப்பழமொழி.

நுணலும் தன் வாயால் கெடும் என்பது ஒரு பழமொழி. தவளை தன்
வாயினாலேயே கெட்டுப்போகும் என்பதே இதன் பொருள். மழை பெய்து
தண்ணீர் நிரம்பிவிட்டால் தவளைக்கு ஆனந்தம். அது தானாகவே கத்திக்
கொண்டிருக்கும். தவளையை உணவுக்காகத் தேடித் திரியும் பாம்பு, அது
இருக்கும் இடத்தை எளிதிலே தெரிந்துகொள்ளும்; சென்று அதைப் பிடித்து
விழுங்கிவிடும். இதனால்தான் நுணலும் தன் வாயால் கெடும் என்ற
பழமொழி உண்டாயிற்று.

‘‘பிறர் மேல் பொல்லாங்கு சொல்லிக்கொண்டு ஒளிந்து திரியும்
அறிவிலிகள் சிலர் உண்டு. அவர்களை யாரும் தேடிப்பிடிக்க வேண்டுவதே
இல்லை. அவர்களே அகப்பட்டுக் கொள்ளுவார்கள். அவர்களுடைய
சொற்களே அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடும். நுணலும் தன் வாயால்
கெடும் என்ற பழமொழிக்கு ஏற்றவர்கள் இவர்கள்தாம்’’ என்று கூறுகிறது
அச்செய்யுள்.

இவ்வாறு பல சிறந்த பழமொழிகள் அமைந்த பாடல்களை இந்நூலிலே
படித்தறியலாம்.

நம்பிக்கைகள்

கனவிலே, காணப்படுவது பொய்யன்று. அது பின்னால் நடைபெறுவதை
முன்னே அறிவிக்கும் அறிகுறியேயாகும். என்பது ஒரு பழமொழிப் பாட்டின்
கருத்து. கனவில்லாமல் ஒரு நிகழ்ச்சியும் நடைபெறாது என்றே
இந்நூல்கூறுகிறது.   ‘‘வினா முந்துறாத உரையில்லை; இல்லைக் கனாமுந்துறாதவினை
கேள்வியில்லாமல் விடை பிறக்காது; அதுபோலக் கனாநிகழாமல் எந்தக்
காரியமும் நடைபெறுவதில்லை’’

பெண்கள் தம்முடைய கற்பைத் தாமேதான் காப்பாற்றிக் கொள்ள
வேண்டும். நாயின் வாலை நிமிர்த்தமுடியாது. அதுபோலத் தமது கற்பைக்
காப்பாற்றிக் கொள்ள எண்ணாத பெண்களைக் காவலிலே வைத்து
அவர்களைக் கற்புள்ளவர்களாக்கிவிட முடியாது என்று நம்பி வந்தனர்.

  ‘‘நிறையான் மிகுகில்லா நேரிழையாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா;- அறையோ!
வருந்த வலிதினின் யாப்பினும், நாய்வால்
திருந்துதல் என்றுமே இல்.

கற்பினால் சிறந்து நிற்காத பெண்களைக் காவலிலே பிடித்து வைத்துக்
கற்புள்ளவர்களாக ஆக்கிவிடுதல் என்பது ஆகாத காரியம்; நான் இதை
அறைகூவிச் சொல்லுகின்றேன். வருந்தும்படி உறுதியாக நிமிர்த்திக்

கட்டிவைத்தாலும் நாய் வால் எந்தக் காலத்திலும் நேராகி விடாது’’

பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையை இந்நூல்
வலியுறுத்துகின்றது. கல்வியினால் வரும் சிறப்பைக் காட்டினும்
குடிப்பிறப்பால் உள்ள குணமே உயர்ந்தது என்று கூறுகிறது ஒரு பாட்டு.

‘‘கற்றது ஒன்று இன்றிவிடினும், குடிப்பிறந்தார்
மற்றொன்று அறிவாரின் மாணமிகநல்லர்

நற்குடியிலே பிறந்தவர் கல்வி கற்றிருப்பதாகிய சிறப்பு ஒன்று
இல்லாவிடினும் தாழ்ந்த குடியிலே பிறந்த கற்றாரைக் காட்டினும் மிகவும்
உயர்ந்தவர்கள்’’ 
 ‘‘நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம் பரந்து ஒருவர் நாடுங்கால் பண்புடையார்
தோன்றார்.

‘‘தொன்று தொட்டுக் கீழான பரம்பரையிலே பிறந்து வந்த
நீசர்களுக்குள் எவ்வளவு தேடினாலும் நற்குணம் உடையவர்
காணப்படமாட்டார்’’

பிறப்பில் சிறியார்; பிறப்பினால் சாலவும் மிக்கவர்; என்ற
தொடர்கள் பழமொழி வெண்பாவிலே காணப்படுகின்றன.
இவைகளைக்கொண்டு இந்நூலாசிரியர் காலத்திலேயே பிறப்பிலே உயர்வு
தாழ்வு உண்டு என்ற கொள்கை தமிழகத்திலே நிலைத்து
வேரூன்றி விட்டதென்று தெரிந்துகொள்ளலாம்.

ஊழ்வினையிலும் இந்நூலாசிரியர்க்கு நம்பிக்கையுண்டு. ஊழ்வினையை
வலியுறுத்தும் வெண்பாக்கள் பல உண்டு. ஆனால் முயற்சியினால்
ஊழ்வினையின் கொடுமையைத் தவிர்க்க முடியும் என்ற கொள்கையையும்
பழமொழி நூல் ஒப்புக் கொள்ளுகிறது.

திருக்குறளும் பழமொழியும்

பழமொழியின் பாடல்களிலே பலவற்றில் திருக்குறளின் கருத்துக்கள்
காணப்படுகின்றன. பழமொழிப் பாடல்களின் அமைப்பு சங்கநூல்
பாடல்களைப்போல்காணப்படுகின்றது. இதைக்கொண்டு, பழமொழி
திருக்குறளுக்கு முன் பிறந்த நூலாக இருக்குமோ என்று
ஐயுறவும் இடம் உண்டு. இது நன்றாக ஆராயத்தக்கது.

‘‘நிறையான் மிகுகில்லா நேரிழை யாரைச்
சிறையால் அகப்படுத்தல் ஆகாகற்பிலே சிறந்து நின்று, தம்மைத்தாமே காத்துக்கொள்ளாத
பெண்களைச் சிறையிலே வைத்து அவர்கள் கற்பைக் காப்பற்றிவிட
முடியாது’’.

இது பழமொழிப் பாட்டு, இப்பாட்டின் பொருள் கீழ்வரும்
திருக்குறளோடு ஒத்திருக்கின்றது.

‘‘சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

பெண்களைக் காவல் வைத்துக் காப்பதால் என்ன பயன் உண்டாகும்?
அவர்கள் தங்கள் கற்பால் தம்மைத்தாமே காத்துக் கொள்வதுதான்
சிறந்தது’’.

(கு.57)

மேலே காட்டிய பழமொழிப் பாட்டும், இத்திருக்குறளும் ஒரே
கருத்துடன் அமைந்திருப்பதைக் காணலாம்.

‘‘ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை-அந்நாடு
வேற்று நாடாகா; தமவேயாம்; ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்.

மிகவும் கற்றவர்கள் அறிவுள்ளவர்கள்; அவ்வறிவுள்ளவர்களின் பெருமை
நான்கு திசைகளில் உள்ள நாடுகளிலும் செல்லும்; எந்நாடும் அவர்களை
ஏற்றுக்கொள்ளும்; அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்நாடு
அவர்களுக்கு வேற்று நாடாகக் காணப்படாது; தம்முடைய நாடாகவே
காணப்படும். அப்படியானால் அவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும்
கட்டுச்சோறு கட்டிக்கொண்டு போக வேண்டாம்’’.

இது கல்வியின் பெருமையைக் குறித்தது. கற்றவர்கள் நாடு, மொழி,
இனபேதம் பாராட்ட மாட்டார்கள். இந்த உண்மையை எடுத்துரைத்தது
இப்பழமொழிச் செய்யுள்
 ‘‘யாதானும் நாடாமால், ஊர்ஆமால், என் ஒருவன்
சாந்துணையும் கல்லாத ஆறு

கற்றவனுக்கு எந்நாடும் தன்நாடே; எவ்வூரும் தன்னூரே; இவ்வாறிருக்க
ஒருவன் இறக்கும் வரையிலும் கல்வி கற்காமல் காலம் கடத்துவது ஏன்?

(கு.397)

இத்திருக்குறளும், மேலே காட்டிய பழமொழிப் பாடலும் ஒரே
கருத்தைக் கொண்டிருக்கின்றன. இக்குறளின் விரிவுரைபோல்
அமைந்திருக்கின்றது இப்பழமொழிப் பாட்டு. இப்பழமொழிப் பாட்டின்
கருத்துபோல் காணப்படுகின்றது குறள்.

‘‘கறுத்தாற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழ்ஆல்-ஒறுத்து ஆற்றின்
வான் ஓங்கு மால்வரை வெற்ப! பயன்இன்றே
தான்நோன்றிட வரும் சால்பு

வானை முட்டிய உயர்ந்த மலையையுடைய மன்னவனே! சினந்து நின்று
தமக்குக் கொடுமை செய்தவர்களின் குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு
நேர்மையான நெறியிலே நடப்பதுதான் பெருமையாகும்; புகழாகும்.

அப்படியில்லாமல் தாமும் சினங்கொண்டு அவர்களைத் தண்டிப்பதனால்
பயன் இல்லை. பொறுமையினால்தான் நல்ல பண்புகள் வளரும்’’. இது
பழமொழிச் செய்யுள்.

‘‘ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.

தமக்குத் தீமை செய்தவரை எதிர்த்துத் தண்டித்தவர்க்கு ஒரே நாள்
இன்பந்தான் உண்டு. தீமையைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம்
அழியும் வரையினும் புகழ்உண்டு’’.
இத்திருக்குறளும், மேலே காட்டிய பழமொழிப் பாடலும் ஒரே
கருத்தமைந்தவை.
 ‘‘முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்
பிற்பெரிய செல்வம் பெறலாமோ?

முன் பிறப்பிலே நல்ல வினைகளைத் தாராளமாகச் செய்யாதவர்கள்
பின்வரும் பிறப்பிலே பெரிய செல்வத்தைப் பெற முடியுமா? முன் பிறப்பிலே
நல்லறங்களைச் செய்தவர்கள் தாம், இப்பிறப்பிலே செல்வங்களைப் பெற்றுச்
சிறந்து வாழ முடியும்; என்று கூறியது இப்பழமொழிப் பாட்டு.

 ‘‘இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
(கு. 270)

இவ்வுலகில் தவம் புரிவோர் சிலர்; தவம் புரியாதவர்கள் பலர்;
ஆதலால்தான் செல்வம் உள்ளவர்கள் சிலராகவும், வறுமையுள்ளவர்கள் பலராகவும் இருக்கின்றனர்’’

முன் பிறப்பில் செய்த தவமே இப்பிறப்பில் செல்வம் எய்திச் சிறந்து
வாழ்வதற்குக் காரணம். முன் பிறப்பில்தவம் செய்யாமையே இப்பிறப்பில்
வறுமையுற்று வருந்தி வாழ்வதற்குக் காரணம்; என்று கூறுகிறது இக்குறள்.
இக்குறளும், மேலே காட்டிய பழமொழிப் பாட்டும் ஒத்த கருத்துள்ளவை.

இவ்வாறு திருக்குறள் கருத்துடன் ஒத்துக் காணப்படும் பழமொழிப்
பாடல்கள் பல உண்டு.

பழக்க வழக்கங்கள்

இந்த நூலிலே ஒரு வெண்பாவில் நாய்கொண்டால் பார்ப்பாரும்
தின்பார் உடும்பு என்ற பழமொழி காணப்படுகின்றது. கீழோரிடமிருந்து
நல்ல சொற்கள் பிறந்தால் அதை இகழாமல் ஒப்புக்கொள்ள வேண்டும்
என்று கூறுகிறது அச்செய்யுள். நாய் கௌவிய உடும்பை, நாய் கவ்வியது
என்று இகழாமல் பார்ப்பாரும் தின்பார்கள். ஆதலால் கீழோர் வாயிலிருந்து
பிறந்தது என்பதற்காக நல்ல சொல்லை இகழாமல் ஒப்புக்கொள்ள வேண்டும்
இதனை

‘‘எள்ளல் கயவர்வாய் இன்உரையைத்-தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பார் உடும்பு’’.
என்பதனால் காணலாம்.

‘‘நாய்கொண்ட உடும்பினைப் பார்ப்பாரும் தின்பர் அதுபோல’’ என்றது,
வேட்டைநாய் பற்பதியக் கௌவிப் பிடித்ததாயினும் உடும்பின் தசை
உண்பார்க்கு நன்மை பயத்தலால், அதனை நாய் வாய்ப்பட்டதென்று
இகழாது. பார்ப்பாரும் விரும்பிக் கொள்வர்; அதுபோலக் கயவர் ஒரு செய்தி
சொல்லுமிடத்து நல்லுரை தோன்றின் அதனைக் கயவர் வாய்ப்பட்டது
என்று இகழாது உயர்ந்தோரும் விரும்பிக் கொள்வர் என்றவாறு. பார்ப்பாரும்
என்னும் உயர்வு சிறப்பும்மையால் எல்லோரும் என்பது குறிப்பு’’. இவ்வாறு
வடமொழியிலும் தமிழிலும் வல்லுநரான-மதுரைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியின்
தலைமையாசிரியராயிருந்த திரு. நாராயணய்யங்கார் அவர்கள் கூறுகின்றார்.
பழமொழியின் பழையவுரைக்கு அவர் எழுதியிருக்கும் விளக்க உரையிலே
இவ்வாறு எழுதியுள்ளார்.

இதனால் தமிழர்கள் உடும்புக் கறியைச் சிறந்த கறியாகக் கருதி வந்தனர்
என்று தெரிகின்றது.

எருமையை அடித்து அதைக் கறி சமைத்துச் சாப்பிடும் வழக்கமும்
தமிழ் நாட்டில் இருந்தது. இதை இந்நூலின் வெண்பாவினால் அறியலாம்.

பழங்காலத்திலே குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள்
விதிக்கப்பட்டன. கடன் பெற்றவன், அக்கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் தான் கடன் வாங்கவில்லை என்று மறுத்தால்-அவனை நல்ல பாம்பை அடைத்த குடத்திலே கைவிடச்
சொல்லுவார்கள்; அவன்உண்மையிலே கடன் வாங்காவிட்டால், குடத்தில்
உள்ள பாம்பு அவன் கையைக்கடிக்காது; அவன் கடன் வாங்கியிருந்து,
வாங்கவில்லை என்று பொய் புகல்வானாயின் அப்பாம்பு அவன் கையைக்
கடித்துவிடும். இதுவே அக்கால மக்கள் நம்பிக்கை. இதனைக் ‘‘கடம்
பெற்றான் பெற்றான் குடம்’’ என்ற பழமொழியில் முடியும் பாட்டால்
அறியலாம்.

அக்காலத்திலே மன்னர்கள் தனி அதிகாரம் செலுத்தி வந்தனர்.
அவர்கள் அநீதி செய்யக் கூடாது. மன்னர்களின் மனத்திலே சினம்
மூளும்படி நடந்து கொள்ளுவது, தூங்குகின்ற புலியைத்
தூக்கத்திலிருந்து எழுப்புவது போல் ஆகிவிடுமாம்.

‘‘வெஞ்சின மன்னவன் வேண்டாதவே செயினும்
நெஞ்சத்துள் கொள்வ சிறிதும் செயல் வேண்டா;
என்செய்து அகப்பட்டக் கண்ணும் எழுப்புபவோ
துஞ்சு புலியைத் துயில்

கடுங்கோபத்தையுடைய அரசன், நாம் வெறுக்கத்தக்க செயல்களைச்
செய்தாலும் பொறுத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். அவன் நெஞ்சிலே
கோபம் கொள்ளும்படியான செயல்களைச் சிறிதாவது செய்யக்கூடாது. என்ன
தந்திரங்களைச் செய்து, தம்மிடத்திலே அகப்பட்டபோதும். தூங்குகின்ற
புலியைத் தூக்கத்திலிருந்து எழுப்புவார்களா? எழுப்பமாட்டார்கள்.
எழுப்பினால் அதற்குப் கோபம் வரும்; தீமை செய்யும்’’.

இவ்வாறு அரசர்களைப்பற்றிப் பத்தொன்பது பாடல்கள்
காணப்படுகின்றன. அவை அனைத்தும் அரசர்களுடைய சர்வாதிகாரத்தை-தனி அதிகாரத்தை ஆதரிக்கும் செய்யுட்களாகவே
இருக்கின்றன. இதனால் பழமொழி நூல் தோன்றிய காலத்தில் மன்னர்களின்
ஆட்சியே நிலைத்திருந்தது; அவர்கள் சர்வாதிகாரம் படைத்தவர்களாகவே
விளங்கினார்கள்; என்று எண்ண இடம் இருக்கின்றது.

பழைய பழக்க வழக்கங்கள் பலவற்றைப் பற்றியும் பழமொழியிலே
படித்தறியலாம். இந்நூலிலே காணப்படும் பழமொழிகளிலே பல,
நகைச்சுவையுடையனவாகவும் காணப்படுகின்றன. படித்தறிய வேண்டிய நீதி
நூல்களிலே பழமொழி நானூறும் ஒரு சிறந்த நூல். பழந்தமிழர்
பண்பாட்டைக் காணுவதற்கு இந்நூல் பெருந்துணை செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக