22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 21 : தமிழ்ச் சங்கம்

 "தமிழ்த்தாத்தா' டாக்டர் .வே.சாமிநாதையர்

தமிழென்னும் பெயர்
இப்பாஷையின் பெயராகிய தமிழென்பது திராவிடமென்ற சொல்லின் சிதைவென்று ஒரு சாரார் கூறுவர். அது சிலருக்கு உடன்பாடன்று; ஒரு பாஷைக்கு உரிய பெயர் அது தோன்றும்போதே உடன் தோன்றியிருக்க வேண்டுமென்பது முறையன்றோ? வேறு பாஷைக்குரியார் இதனைத் தாம் வழங்குவதற்கு இட்டபெயராகத் திராவிடமென்பதைக் கொள்ளவேண்டு மென்றே சிலர் எண்ணுகிறார்கள். இம்மொழி தன்பாலுள்ள நால்வகை எழுத்துக்களால் ஆக்கப்பெற்ற "தமிழ்' என்னும் பெயரைத் தனக்கு இயற்பெயராகக் கொண்டிருத்தலும் இதன் உண்மையைப் புலப்படுத்துகின்றது. நால்வகை எழுத்துக்களாவன: உயிர், வல்லினம், மெல்லினம், இடையினமென்பன. தமிழென்பதற்கு "இனிமை'யென்றும் பொருளுண்டு. அதுபற்றியே தமிழென்பதைக் காரணப் பெயராகக் கொள்ளுதலும் பொருந்தும்.


தமிழாசிரியர்
""ஆதியிற் றமிழ்நூ லகத்திய ற் குணர்த்திய
மாதொரு பாகன்'' (பழம் பாடல்)
""தழற்பொலி விழிக்கடவு டந்ததமிழ்'' (கம்ப)
""இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர்''
(காஞ்சிப்புராணம்)
""விடை யுதைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள்
வடமொழிக்குரைத் தாங்கியன் மலயமா முனிக்குத்
திடமுறுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொன் மடமகள்''
(காஞ்.புரா.)
என்பவற்றாலும் மேலுள்ள ஆதாரங்களாலும் இம் மொழிக்குப் பரமாசாரியார் பரமசிவனென்று தெரிகிறது; அதற்கேற்பத் தமிழ் நெடுங்கணக்கின் முதலில் "பஞ்சாட்சரமே' பண்டைக் காலத்தில் சுவடிகளிலெழுதிக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழின் சம்பந்தமான வேறு பாஷைகளிலுள்ள நெடுங்கணக்குகளின் முதலிலும் பஞ்சாட்சரமே இக்காலத்திற் கற்பிக்கப்பட்டு வருகின்ற தென்றுங் கேட்டிருக்கிறேன்.
பரமசிவனுடைய கூறாகிய முருகக்கடவுளை அகத்திய முனிவருக்குச் செந்தமிழறிவுறுத்திய ஆசிரியராகவும் சில பெரியோர் கூறியிருக்கின்றனர்.

தமிழின் தெய்வத்தன்மை
தமிழ் தென்னாட்டிலும் ஸம்ஸ்கிருதம் வடநாட்டிலும் மிகுதியாக வழங்குதல்பற்றி இவ்விரு மொழிகட்கும் முறையே தென்மொழி வடமொழியென்பவை காரணப் பெயர்களாய் வழங்கலாயின (.கா. தேவாரம், திவ்யப் பிரபந்தம், புலவர் புராணம்). இவ்விரண்டையும் தெய்வ வடிவமாகப் பாராட்டுதலுமுண்டு. தமிழ்ப் பாடல்களின் சுவை தெய்வங்களாலும் விரும்பப்பட்டதென்றும் பெரியோர்கள் (குமரகுருபரர், சுந்தரர் தேவாரம் ஆரூர்) பாடியிருக்கிறார்கள். பின்னும் தமிழின் ஆற்றலைப் புலப்படுத்துவனவாக அங்கங்கே வழங்கும் வேறு சரித்திரங்களும் பலவுண்டு.

சங்கம்
சங்க மென்பதற்குப் பொருள் புலவர் கூட்டமென்பது; தமிழ் நாட்டிலுள்ள தலைநகரங்கள் சிலவற்றிலும் அங்கங்கேயுள்ள சிற்றூர்கள் பலவற்றிலும் தமிழ்ப் புலவர்களின் கூட்டங்கள் இப்பெயரோடு பண்டைக்காலத்தில் இருந்தனவென்று தெரிந்தாலும் மதுரையிலிருந்த கூட்டத்திற்கே இஃது இயற்பெயராக இருவகை வழக்குகளிலும் காணப்படுகின்றது. சிவபெருமான், திருமால், முருகக்கடவுள் முதலிய தெய்வங்களாலும் பெரியோர்களாலும் தெய்வத்தன்மை வாய்ந்த பாண்டிய அரசர்களாலும் மிகச் செவ்வையாகப் பரிபாலிக்கப்பட்டு வந்தமையே இதற்குக் காரணமென்று சொல்லலாம்.

 முதலிடைச் சங்கங்கள்
முதல், இடை, கடையெனத் தமிழ்ச் சங்கங்கள் மூன்று இருந்தன வென்பது இறையனாரகப் பொருளுரையாலும், சிலப்பதிகாரவுரை முதலியவற்றாலும் வேறுபல நூல்களாலும் தனிப்பாடல்களாலும் தெரிகின்றது.

அகத்திய முனிவர்
முதலிரண்டு சங்கங்களிலும் அகத்திய முனிவர் இருந்து தமிழாராய்ந்தனரென்று தெரிகின்றது. அவர் வடக்கேயிருந்து தென்னாட்டிற்கு வரும்போது, ""தென்னாடு தமிழ் வழங்கும் தேயமானமையின் அங்கே உள்ளவர்களோடு பழகுமாறு எனக்குத் தமிழிலக்கணத்தைக் கற்பித்தருளல் வேண்டும்'' என்று வேண்டிப் பரமசிவன்பால் அதனைப் பெற்று இந்நாட்டிற்கு வந்து இங்கேயுள்ள வழக்கம் முதலியவற்றையறிந்து இலக்கணம் இயற்றினார் "ஆதரஞ்சேர் குறுமுனியு மெனையொன் றாக்கி. (பழைய திருவிளையாடல்). ""தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி'' (குமர) என்றதனாலும், அகத்தியர் தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன்னமேயே அந்நாட்டில் இருந்த தமிழின் தொன்மை விளங்கும்.

சங்க மண்டபம்
அப்புலவர்கள் இருந்து தமிழாராய்ச்சி செய்வதற்கு மிகவசதியாக ஒரு மண்டபம் அக் காலத்திலிருந்த பாண்டிய அரசனாற் கட்டிக்கொடுக்கப்பட்டது; அம்மண்டபத்திற்கு, "பட்டிமண்டபம்' (தொல்.செய்.சூ.179) என்பது பெயர். தேவாரம், திருவாசகம், மணிமேகலை, கம்பராமாயணம் என்பவற்றால் அப்பெயர் முன் வழங்கி வந்தமை புலனாகிறது.

சிவபெருமானும் சங்கப் புலவர்களில் ஒருவராயிருந்தமை
சங்கப் புலவர்களுடைய மேம்பாட்டை யறிந்து சோமசுந்தரக் கடவுளும் இடையிடையே சென்று தாமும் ஒரு புலவராகவிருந்து தமிழாராய்ந்து வந்தனரென்றும், அக்காலத்தில் அவருக்கிருந்த திருநாமம் மதுரைப் பேராலவாயாரென்ப தென்றுந் தெரிகின்றன.
""தண்டமிழ்நூற் புலவாணர்க்கோ ரம்மானே'' (தேவாரம்)
""சிறைவான் புனற்றில்லைச்சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலினாய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ''
(திருக்கோவையார்)
""சென்னறணைந்து மதுரையினிற் றிருந்தியநூற் சங்கத்துள்
அன்றிருந்து தமிழாராய்ந் தருளியவங்கணர்''
""சங்கப் புலவர் தந் திருமுகந் தந் தலைமேற்கொண்டு''
(பெரியபுராணம்)
""பெருமைதரும் பெயர் மதுரைப் பேரால வாயனென
உரைசெய்தே யவை நெடுநா ளிருந்தவனவ் வயினொளிப்ப''
(பழைய திருவிளையாடல்)
மதுரைப் பேராலவாயாரென்ற இத் திருநாமம் பிற்காலத்தில் சங்கப் புலவரில் ஒருவர்க்கு இடப்பட்ட பெயராகவும் தொகை நூல்களிற் காணப்படுகின்றது.

சங்கப்பலகை
புலவர்கள் ஆராய்ந்தார்களென்றதனால், இடையிடையே ஏற்பட்ட கலகத்தாலும் பிறவற்றாலும் நூல்கள் சிதைந்தனவென்றும், ஆராயும்வண்ணம் அரசர்கள் செய்வித்தார்களென்றும், செய்யுட்களைத் தொகுப்பித்தார்களென்றும் தெரிகின்றன. இவர்கள் பெருமையை உணர்ந்த பிறர், தாமும் அவர்களைப்போல மேம்பட்டு விளங்க வெண்ணித் தாம் தாம் பாடிய பாடல்களைக் கொணர்ந்து, அவற்றைப் பார்க்க வேண்டுமென்றும், அவற்றை அங்கீகரிக்கவேண்டுமென்றும், தம்மைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் முயல்வாராயினர். பிறர் தீமையைச் சொல்லா நலத்தவர்களாதலின், அவர்களுடைய கல்விக்குறையையும் அவர்கள் செய்யுட்களிலுள்ள வழுக்களையும் எடுத்துக்கூற இயலாதவர்களாகி வருந்த, அந்தத் துன்பத்திலிருந்து தம்மை விடுவிக்கவேண்டுமென்று சங்கப் புலவர்கள் சோமசுந்தரக் கடவுளை வேண்டினர். இவர்களுடைய வேண்டுகோளின்படியே தெய்வத்தன்மை வாய்ந்த ஒரு பலகையை இவர்களுக்குத் தந்தருளி எவருக்கு அஃது இடங்கொடுக்குமோ அவரைச் சிறந்த புலவரென்று கண்டு கொள்ளும்படி அவர் கட்டளையிட்டருளினார். அப்பலகையின் பேருதவியால் குறைந்த கல்வியுடையவர்களாலேற்பட்டு வந்த துன்பம் இவர்கட்கு அடியோடே நீங்கியது.
""மொழியறி சங்கப்பலகை'', ""பாவறி ஞானப்பலகை'' என்று பெரியோர் பாராட்டியிருப்பதால் சங்கப்பலகை இருந்ததும் அதனுடைய இயல்பும் விளங்குகின்றன.

சங்கமிருந்ததற்கு ஆதாரங்கள்
மதுரையில் சங்க மண்டபம் இருந்ததற்கு அடையாளமாக ஸ்ரீசோமசுந்தரக் கடவுளுடைய கோயிலின் பெரிய பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் சங்கத்தார் கோயிலென்று ஒன்று உண்டு. அதில் நாற்பத்தொன்பது புலவர்களின் பிம்பமும் ஸரஸ்வதி தேவியின் பிம்பமும் உள்ளன. சிவலிங்கப்பெருமானும் அங்கே எழுந்தருளியிருக்கின்றனர். ஒவ்வொரு தினமும் பூசை நைவேத்தியங்கள் நடைபெற்று வருகின்றன.
சங்கமிருந்ததென்பதற்கு இன்னோரன்ன ஆதாரங்கள் பல இருந்தும், அஃதொன்றிருந்ததாகச் சிலாசாஸனத்திற் கிடைக்கவில்லை யாகையால் சங்கமிருந்ததேயில்லை யென்றும், தொல்காப்பியத்திற் சங்கமென்ற சொல் காணப்படவில்லை யென்றும் சிலர் பேசுகிறார்கள். அது வருந்துவதற்கிடமாக
விருக்கிறது.

பிற சங்கங்கள்
இதுகாறும் கூறப்பட்டுவந்த சங்கம் இயற்றமிழ்ச் சங்கம்; இதையன்றி இசைத்தமிழ்ச் சங்மொன்றும், நாடகத் தமிழ்ச்சங்க மொன்றும் அதேகாலத்தில் மதுரையில் இருந்தனவென்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சங்ககால வரையறையைப் பற்றி இக்காலத்தில் ஆராய்ச்சியாளர் பலர் உழைத்து ஒருவரோடொருவர் தர்க்கம் செய்து நிர்ணயிக்க முயன்று வருவதால் அதிற்றலையிட்டுக்கொள்ள எனக்குச் சிறிதும் விருப்பமில்லை.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக