22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 20 : தமிழ் மொழியின் மாண்பு!

 "தமிழ்த் தென்றல்' திரு.வி.கல்யாணசுந்தரனார்

தமிழுஞ் சுய ஆட்சியும்!

 உலகத்திலேயுள்ள மொழிகள் பலவற்றுள்ளுந் தமிழ் மிகத் தொன்மையது. தமிழ், பிறமொழிகளின் உதவியின்றி இயங்கும் ஆற்றலுடையது. உலக முழுவதும் அநாகரிகத்தில் அமிழ்ந்து கிடந்தபோது, தமிழுலகம் நாகரிகத்திலே செழுமை பெற்றிருந்தது. இன்றைக்குச் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் புலவர்களால் யாக்கப்பட்ட தொல்காப்பியம், புறநானூறு முதலிய நூல்கள் தமிழ் மக்களின் நாகரிகத்தையும் பெருமையையும் எடுத்து விளக்குங் கருவிகளாக இருக்கின்றன. பண்டைக் காலத் தமிழ் மன்னர்களுக்கு ஐம்பெருங் குழு, எண்பேராயம் என்னும் இரு கூட்டம் துணைசெய்து வந்தன. ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாறாக அரசர்கள் நடந்ததில்லை. குடிமக்கள் உள்ளமும் அரசன் உள்ளமும் அன்பால் ஒன்றுபட்டிருந்தன. அரசன் உயிராகவும் குடிகள் உடலாகவும் இருந்தார்கள்.


 தொல்காப்பியத்திலே புறத்திணை இயலில் போந்துள்ள யுத்த முறைகளை உற்றுநோக்கி வாசிப்போருக்குத் தமிழ் நாகரிகம் நன்கு புலனாகும். ஓரரசன் மற்றோரரசன் மேல் படையெடுத்துச் செல்லுங்காலத்து, அவ்வரசன் ஊரிலுள்ள பசுக்களையும், பெண்களையும், குழந்தைகளையும், சந்நியாசிகளையும், நோயாளிகளையும், பிள்ளை பெறாதவர்களையும் பாதுகாக்க வேண்டிய யுத்த தருமம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இதுகாலை மாற்றரசனது ஊரில் பசுக்கள் அகப்படின், அவை யாவும் போர்வீரர்கள் வயிற்றிலே பாதுகாக்கப்படும்.

 தமிழ் மக்கள் அகவொழுக்கத்தை அறியுமாற்றலுடையவரா யிருந்தார்கள். இப்பொழுது அகவொழுக்க நெறி அறவே ஒழிந்தது. அதைப் பற்றி விபரீத உணர்ச்சி ஆங்கிலங் கற்ற தமிழ் மக்களிடையில் விளைந்திருக்கிறது.
 தமிழர்கள் ஒழுக்கத்தை விரித்துக் கூறப் பல நூல்கள் வேண்டுமா? திருக்குறள் ஒன்றே சாலும். பதினாயிரம் ஆங்கில நூல்கள் ஒரு திருக்குறளுக்கு இணையாகுமோ? இரு மொழியிலும் வல்லார் இவ்வுண்மை யுணர்ந்திருக்கின்றனர்.

 பண்டைக்காலத்தில் தமிழ் மக்களிடையில் சாதி வேற்றுமை பரவினதில்லை. ""பிறப்பொக்கும் எல்லா உயிருக்குஞ் சிறப்பொவ்வா-செய்தொழில் வேற்றுமையான்'' என்னும் வள்ளுவர் வாய்மொழியை உற்று நோக்க.
 எம் முன்னோர்கள் கடவுளை அன்பு மயமாகவும் நீதிகள் திரண்ட ஒன்றாகவும் போற்றி வந்தார்கள்; அக்கடவுளைக் கொல்லாமை, பொய்யாமை, அருள், அன்பு, தவம், அறிவு முதலிய பூக்களினால் வழிபட்டு வந்தார்கள். தமிழ்ப் புலவர்கள் தங்கள் அகமும், புறத்தேயுள்ள இயற்கையும் இரண்டறக் கலக்கப் பெற்று, அதனால் உண்டாகும் இன்பத்தை நுகர்ந்து கொண்டிருந்தார்கள்.
 பெண்பாலர் இல்லொளியாய் விளங்கினர்; வீரத்தில் சிறந்தனர்; நாயகனைத் தெய்வமாகப் போற்றினர்; அன்புச் சுதந்திரத்தைப் பெற்றிருந்தனர்; கல்விக்கரசிகளாக இருந்தனர்; செங்கோல் தாங்கி நாட்டையும் ஆண்டனர்; கற்பால் கடவுளாயினர். ஒவ்வொரு வீடும் அவர்தங் குணநலத்தால் மோட்சலோகம் போல் பொலிந்திலங்கினது.

 இத்துணைச் சீருஞ் சிறப்பும் வாய்ந்த தமிழ்நாடு இப்பொழுது எந்நிலை யுற்றிருக்கிறது? எல்லா நாடுகளுக்குங் கல்விப் பொருளையுஞ் செல்வப் பொருளையும் வழங்கிவிட்டுத் தான் பட்டினி கிடந்து வருந்துகிறது. தமிழ் நாட்டார் தமிழை மறந்தார்கள்; சுதந்திரத்தை யிழந்தார்கள்; ஆங்கில மயமாக விளங்குகிறார்கள்.

 தமிழ் நாட்டைத் திருத்தத் தமிழ் நூல்களே சாலும். இப்பொழுது திருவள்ளுவரைப் படிப்பவர் யார்? தொல்காப்பியத்தைத் தொடுபவர் யார்? புறநானூற்றைப் போற்றுவோர் யார்? சிலப்பதிகாரத்தைச் சிந்திப்பவர் யார்? மணிமேகலையை மதிப்போர் யார்? பத்துப்பாட்டைப் படிப்போர் யார்? பலரில்லையே! இந்நூல்களின் பெயர்களைக் கேட்டுள்ளவர் ஆயிரத்தில் ஒருவரோ? இருவரோ? அறிகிலேம். அரும் பெரும் நூற் கருத்துக்கள் அழிகின்றனவே! தமிழர் வழக்க ஒழுக்கங்கள் அருகுகின்றனவே!
 இப்பொழுது தமிழர்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? உத்தியோக சாலைகளிலும், சட்ட நிருவாக சபைகளிலும் தமிழே வழங்கப்பட வேண்டுமென்பது நமது கோரிக்கை. நம் கோரிக்கை ஜன விருப்பப்படி நடைபெறக்கூடிய சுய ஆட்சியால் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. தமிழ் மக்கள் சுய ஆட்சி பெற முயல்வது தமிழ்த் தாய்க்கு உயிர் கொடுப்பதாகும். "சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்' என்னும் உண்மையை உணர்ந்த தமிழ் மக்களுக்குப் பொருளை விரித்துரைக்க வேண்டுவது அநாவசியம். தமிழ்ச் சகோதரர்களே! விரைவில் சுய ஆட்சிபெற முயற்சி செய்வீர்களாக!

 (தேசபக்தன்: 4-1-1918)

 பாஷை வளர்வதெப்படி?
 மனிதர்களுக்கு இருக்க வேண்டிய பொதுக்குணங்கள் பல. அவைகளுள் ஒன்று அபிமானமென்பது. அபிமானம் பல திறப்படும். அதனை அறிஞர் முத்திறமாகப் பிரித்திருக்கின்றனர். அவை தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் என்பன. அனுபவ ஞானங் கைவரப் பெற்றார்க்கு எவ்வபிமானமும் இல்லை என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.
 இம் முத்திற அபிமானங்களுள் ஒவ்வொருவர் ஒவ்வோர் அபிமான முடையவராயிருப்பர். எவனிடத்துப் பாஷாபிமானம் உரம் பெற்று நிற்கிறதோ, அவனிடத்து ஏனைய ஈரபிமானமும் நிலைபெற்று விளங்கும். பாஷை வளர்ச்சியே தேச வளர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக்கும் மூலமாயிருப்பது. ஆங்கில பாஷை இங்கிலாந்துக்கு உரியது. அஃது அந்நாட்டிலன்றி, ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டுள்ள இந்தியா முதலிய தேசங்களிலும் ஜப்பான், அமெரிக்கா முதலிய பிற தேசங்களிலும் பரவியிருக்கிறது. அம்மொழி எங்கெங்கே பரவி நிற்கின்றதோ, அங்கங்கே ஆங்கிலேயர் வழக்க ஒழுக்கங்களும் நிலவி வருகின்றன.

 பொதுவாக இந்தியர்கள் சிறப்பாகத் தமிழ்நாட்டு மேதாவிகள் உபந்நியசிக்கும்போது மேல்நாட்டுக் கவிவாணர் உரைகளை மேற்கோளாக எடுத்துக்காட்டுகின்றார்கள். அவர்கள் உள்ளம் ஆங்கில மயமாக மாறியிருக்கிறது. நடை, உடை, பாவனை அங்ஙனே மாறுகின்றன. ஆங்கிலேயர் முறைப்படி உணவு கொள்ள எத்தனையோ பேர் முயல்கின்றனர். எத்தனை பேர் முயன்று பயன்பெற்று இன்ப நுகர்கின்றனர்! மனைவியையும் ஆங்கில மயமாக அழகு செய்து கண்டு களிப்போர் எத்தனை பேர்! சுதேசியம் பேசிக்கொண்டே ஆங்கில முறையான நடை தரிப்போர் எத்தனை பேர்! இவைகட்குக் காரணம் யாது? ஆங்கில மொழிப் பயிற்சியால் அவர்தம் உட்கரணங்கள் யாவும் அம் மொழியில் தோய்ந்து விடுவதேயாம். இதனால் மனிதன் வழக்க ஒழுக்கங்களை மாற்றும் ஆற்றல் மொழிகளுக்கு உண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்கு விளங்கும்.
 நாம் தமிழகத்தாராகலின், தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றிச் சிறிது யோசித்தல் வேண்டும். தமிழில் உயரிய நூல்கள் பல இருக்கின்றன. அவை யாவும் இன்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாக்கப்பட்டவை. அந் நூல்களில் இயற்கை வனப்பும், பிற சுவைகளும் மலிந்து கிடக்கின்றன. பிற்காலத்தில் அத்தகைய நூல்கள் ஒருவராலும் எழுதப்படவில்லை. வரவரத் தமிழ் வளம் அருகலாயிற்று. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகரிகமுற்ற அறிஞர்களால் பேசப்பெற்றுப் பண்பட்ட ஒரு மொழியின் வளங் குன்றியதற்குக் காரணம் என்ன? அம் மொழியின்மாட்டுப் பலர்க்குப் பற்றின்மையேயாகும்.

 நேற்று தோன்றி இன்னும் பண்படாத கலப்பு மொழியாகிய ஆங்கிலம் செழித்தோங்குவதற்குக் காரணம் யாது? அம் மொழியாளர் அதன்மாட்டார்வங் கொண்டுள்ளமையேயாகும். இந்தியாவிலும் அன்னார் தம் மொழியை நியாயஸ்தலத்திலும், சட்ட சபையிலும், பிறவிடங்களிலும் கட்டாயமாகப் பேசவேண்டு மென்னும் நியதி ஏற்படுத்தியிருக்கின்றனர்; சர்வகலாசாலையில் இவ்விரு பட்டம் பெற்றோரே இவ்விவ் வேலைக்கு அருகர் என்னும் விதியையும் பிறப்பித்திருக்கின்றனர். வயிற்றின் கொடுமைக்காக ஜனங்கள் எம்மொழி பயில விருப்பங் கொள்வார்கள்? அவர்கள் ஆங்கில மொழியைப் பயில வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தேச வழக்க ஒழுக்கங்களும் தேசாபிமானமும் அற்றுப் போகின்றன.
 பண்டைத் தமிழர் வழக்க ஒழுக்கங்கள் நிலவ வேண்டுமாயின், முதலாவது தமிழ்மொழி வளர்ச்சிக்கு உழைத்தல் வேண்டும். ஒருவர் இருவர் சேர்ந்து சங்கங்கள் ஏற்படுத்தி உழைத்து வருதலால் சிறிதும் பயன் விளையாது. அரச காரிய முழுவதுந் தமிழிலேயே நடைபெறல் வேண்டும். அப்பொழுது தமிழ் ஆக்கமுறும்.

 தமிழ்ச் சகோதரர்களே! தமிழ் மொழியிலேயே அரசியல் முறைகள் நடைபெற வேண்டிய வழிகளைத் தேடுங்கள். தமிழ்த்தாயின் நலத்தை நாடோறுங் கோரி இறைவனை வழிபடுங்கள்.

 (தேசபக்தன்: 9-2-1918)

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக